சனி, 28 டிசம்பர், 2013

மூன்றாவதாய் ஒரு உலகம்


 பள்ளி விடுமுறை..

                             மிக சில பெண்கள் மட்டும்தான் பள்ளி விடுமுறை நாட்களை மாமியார் வீட்டில் செலவு செய்கிறார்கள் .அந்த கணவன் மார்களும் அந்த குழந்தையும் வரம் பெற்றவர்கள் .எனக்கு அப்படி பட்ட வரம் கிடைக்க நாளாகலாம் .


எதிர் கட்சி எம்.எல்.ஏ
.
                         எப்போதுமே தன் அம்மாவுடன் போகும் எனது பையன் இந்த முறை தனித்தே எனது மாமியார் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறான் .பள்ளி நாட்களில் தூங்குபவனை எழுப்புவதிலிருந்து ,பிரஸ் பண்ணுவது,குளிப்பது ,சாப்பிட அடம் பிடிப்பது ,எல்லாத்தையும் அள்ளி போட்டுகொண்டு பள்ளிக்கு கிளம்புவதிலிருந்து தொடங்கி  அவனோடு மாலை வந்தவுடன் ட்ரெஸ் அழுக்கு ஆக்கியது ,டைரியில் சரியாக வீட்டு பாடங்களை குறிக்காதவரை மொத்த புகார்களும் எனக்காக அவன் மூலம் வீட்டுக்குள் நுழையும் முன்னும் சாப்பிட உட்கார்ந்த பிறகு அவன் அம்மாவிடமிருந்தும் எதிர் கட்சி எம்.எல்.ஏ புகார் போல சரமாரியாய் குவியும் .அந்த வகையில் அமைதி படுத்தியே வீட்டின் அமைதியை காக்கும் பல அப்பாகக்ளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பது போல எனக்கும் கிடைக்கலாம் !



பாக்கேட்டுக்குள் ...

                      கடந்த நான்கு நாட்கள் இந்த மாதிரி எதுவுமில்லை.மனைவிக்கு ஒரே தவிப்பு .பாருங்கள் ஒரு நாள் இருந்துட்டு வரேன்னு சொல்லிட்டு ,அவன் பாட்டுக்கு அங்கேயே தங்கிட்டான் என்றதர்க்கு அவனாவது நிம்மதியாக இருக்கட்டும் என்ற என் பதிலில் எனக்குரிய நோபல் பரிசு பறிக்கப்பட்டு ,தாலிபான்கள் லிஸ்ட்டில் அப்போதே சேர்த்துவிட்டார்கள்.

                  ஆனால் எனக்கும் ஒரு கேள்வி ஓடிகொண்டே இருந்தது.எங்கிருந்தாலும் யார் போனிலாவது பேசுபவன் என்னிடம் பேச முயற்சி பண்ணவில்லை .எப்போதும் ஊருக்கு ஒரு நாள் அவனோ அல்லது நானோ போனால் கூட அவன் பொம்மைகளில் ஏதாவது ஒன்றை என் பாக்கேட்டுக்குள் திணிப்பவன் எப்படி இப்படி இருக்கிறான் ?



தொலைவுகளே குறையட்டும் .

                            அவன்  பிறக்கும் முன் எத்தனையோ கனவுகளை வைத்து கொண்டு இருந்தாலும் பிறந்த பிறகு வளர்ப்பதில் ,வேலையில் இருந்த சவால்களை சந்திக்கும் வேகத்தில் அவன் மேல்  இருந்த  கவனம் எனக்கு குறைந்த போது என்னை திருத்தி கொண்டேன் .அவனோடு பேசுவதை ,விளையாடுவதை கூட்டிக்கொண்டேன். அவனுக்கு காணாமல் போன பொறுள் கண்டு பிடிக்கும் தந்திரம் ,கதை சொல்வது ,சில பொறுள்களை பார்த்து கவிதை மாதிரி (அனேகமாக அது வசனமாகத்தான் அவன் சொல்லுவான் ) போட்டி போடுவது  இப்படியாக ...

                       அருள்புரத்திலிருந்து - சாமுண்டி புரம் வீடு மாறி வந்ததும் அதுவும் பத்தாது என்று இப்போது ராம் நகர் மாறியதும் அவன் பள்ளி தொலைவுகளை குறைப்பதர்க்கே. மூன்றரை வயதில் தனியார் யோகா பள்ளிக்கு சேர்க்க போனபோது 7 குறைந்தது 5 வயது ஆக வேண்டும் என்று மறுத்தார்கள்.அவன் பள்ளியில் கேட்டபோது பத்து வயதில்தான் சேர்க்க முடியும் என்று மறுத்தார்கள் .நாழு வயதில் இடது வலது இரண்டு கைகளிலும் கிரிக்கெட் விளையாடவும் , ஐந்து வயதில் செஸ் நகர்த்தல் ,கேரம் விளையாட்டு என்றும் ஆறு முடிந்தவுடன் இப்போது வாரம் ஒரு முறை என்னுடனே யோகாவும வருகிறான். 



 காசு செலவில்லாமல் ...

                              நான் ஏற்கனவே 7 ¼ வருடம் பணிபுரிந்த கம்பெனியிலிருந்து திடீரென விலகிய போது சட்டென நிதி பிரச்சனை .ஏற்கனவே எனக்கு பணம் சேர்த்து வைப்பதில் சாமர்த்தியம் பெரிதாய் இல்லாததால் ஸ்னாக்ஸ் வாங்க கூட புதிய  சம்பளம் போதவில்லை அப்போதைக்கு நான் தேவை இல்லாத  11 வருட புகை பிடிக்கு பழக்கம் கை விட்டு அதை ஸ்னாக்ஸ் தேவை பூர்த்தி ஆனது .ஆனாலும் அவ்வப்போது கனவில் காசு செலவில்லாமல் சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்து போனது ..



 ஆஃபீஸ் மருத்துவம் !

                         ஒரு முறை பள்ளியிலிருந்து மனைவிக்கு ஃபோன் .உங்கள் பையனுக்கு அடிபட்டு இருக்கிறது வந்து அழைத்து போங்கள் என்று .அவன் வேதனைப்படும் எந்த விசயமும் என்னால் பார்க்க முடியாது .மனைவியை கூட்டி பள்ளிக்கு போனால், ஆஃபீஸ் வாசலில் சட்டை இல்லாமல் சேரில் அவன் .எங்களை பார்த்தவன் என்னிடம் ஓடி வந்தான் .நல்ல வேளை அவன் முன்னால் நான் அழவில்லை .வலது நெற்றி புருவத்திர்க்கு அருகே  இரண்டு 'இன்ச்' வெட்டு .சட்டை காயப்போட்டு இருந்தது.வெளியேறிய ரத்தத்தை மறைக்க செய்த முயற்சியில் இன்னும் ஈரம் மீதம் இருந்தது.

                         யாரோ ஒரு பையனுக்கு இப்படி முன்னர் நேர்ந்த போது யாரை கேட்டு இந்த மருத்துவமனை அழைத்து சென்றீர்கள் என்று பெற்றோர்கள் கேட்டார்களாம் அதனால் வீட்டார் வரும் வரை முதல் உதவி மட்டுமே அதுவும் பள்ளி நிர்வாக ஆஃபீஸ் மருத்துவம் மட்டுமே.

                        ரேவதி மருத்துவமனையில் பார்த்தவுடன் தையல் போட வேண்டும் என்றார்கள் .பெட்டில் வைத்து பிடித்து கொள்ள கூப்பிட்டார்கள் .அவனே என் தைரியம் தெரிந்து அவன் அம்மாவை அழைத்து கொண்டான் .



பணம்டா எல்லாம் !
                       
                  சென்ற வாரம் பள்ளிக்கு அழைத்துவர போன போது அவன் கேட்ட கேள்வி எனக்கு வேறு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்தியது.அவன் பள்ளி தோழியின் நண்பர்கள் இவனை மதிப்பதில்லையாம் .அது ஏன் என்று அவளிடம் கேட்டதர்க்கு, (மணிரத்தினம் ரசிகை போல அவள் ! ”) பணம்டா எல்லாம் பணம்”என்றாளாம் .



மூன்றாவதாய் ஒரு உலகம் 

                         எனக்கு உடனே புரியவில்லை .பணம இருப்பவர்கள் ஒரு அணியும் இல்லாதவகள் ஒரு அணியாம் .இன்னும் இரண்டாவது படித்து முடிக்காத இவர்கள் ,உலகத்தை புரிந்து கொள்ள முடியாத  ஆச்சரியமும் பயமும் தந்ததுஎனக்கு இந்த சம்பவம் .ஓடி, ஓடி எனக்கு இன்றும் புரியாத விசயத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டானே ! 
                  குழந்தைகள் நம்முடனே அவர்கள் இருப்பதால் ,அவர்களை புரிந்து கொண்டோம் என்ற நம் கணக்கு முற்றிலும் முட்டாள்தனமாகி விடுகிறது .எனக்கு ஒரு உலகம் ,மனைவிக்கு ஒரு உலகம் என்று மட்டுமே புரிந்து கொண்டு இருந்த ஏராளமான அப்பாக்களில் ஒருவனாய் இருந்த எனக்கு என் வீட்டுக்குள் மூன்றாவதாய் ஒரு உலகம் இருப்பது அபோதுதான் தெரிந்தது .எப்போதோ படித்த ஓஷோ வின் புதிய குழந்தை புரிய துவங்கியது

இறைந்து கிடக்கும் ..

                    அவன் வீட்டில் இல்லை . அவன் இருப்பை எப்போதும் வீட்டில் உணர்த்த  முழுதும் இறைந்து கிடக்கும் ”லெகோ- டூப்லோ” (அடுக்கிகள்) கலைக்க ஆள் இல்லாமல் கோபமாக இருந்தது . போகோ சேனலும் ,ஜியோகிராப் சேனலும் ஒளிபரப்பை தொலைத்து விட்டது போல ! .  அவன் தன் செல்லாமாக தம்பி என்று சொல்லி கொள்ளும் மிக்கி மவுஸும், புலியும்  சோகத்துடன் இருந்தது  என்னைப் போல..




கலீல் ஜீப்ரானனின் கவிதை....

"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால 
வாழ்வின் மகன், மகள்கள் 
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்; 
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை 
அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் - 
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று 
அழகான சிந்தனைகள் உண்டு 
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் - ஆன்மாவை அல்ல 
ஏனென்றால் அவர்களின் ஆன்மா 
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது; 
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது 
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்; 
ஆனால் அவர்களை உங்களைபோல ஆக்கிவிடாதீர்கள் 
வாழ்க்கை பின்னோக்கியோ 
நேற்றைக்கோ செல்வதில்லை 
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும் 
வாழும் அம்புகள் அனுப்பபடும் 
வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!"




திங்கள், 23 டிசம்பர், 2013

அது பாலகுமாரன் காலம் ..


                திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நண்பரின் அண்ணனுக்கு கல்யாணம் .பக்கத்து லட்சுமி விலாஸ் ஹோட்டலில் உணவு ஏற்பாடு என்பதால் வழக்கமான நண்பர்களின் வீட்டு பந்தி பரிமாறும் வேலையும் ,அனேகமாக  பரிமாறிய பிறகு மீதம் இருக்கும் கேசரியோ , வெறும் இட்லி சாப்பிடும் நிலையும் இன்று இல்லை அதனால் நண்பர் கூட்டம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான் தெரிந்தது ,அருகில் இருக்கும் பாண்டியன் லாட்ஜுக்கு எதிரில் பாரதி பிரிண்டர்ஸ்திறக்க பாலகுமாரனும் ,வைரமுத்துவும் வருகிறார்கள் என்பதாக .

               உற்சாகமானோம். எங்கள்  கூட்டத்தில் அதிகம் பாலகுமாரனை படிக்கும் சிலரில் நானும் ஒருவன் .பாலாகுமாரனுடன் அப்போது எனக்கு கடித தொடர்பும் இருந்தது. உடனடியாக நண்பர் சங்கர் திட்டமிட்டார் .விழாவை நடத்துபவர் யார் அல்லது இந்த பிரிண்டர்ஸ் ஓனர் யார் அல்லது யாரை பார்த்தால் பாலகுமாரனுடன் பேச முடியும் என்ற முயற்சியில் அரை மணி நேரத்தில்  வெற்றியும் கண்டார் .விழா நடந்துகொண்டு இருக்கும் மேடையின் பின் வழியாக உள்ளே போய் அவருடன் கைகொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாக  சந்திக்க உதவியவர் சொன்னார்.என்னை முன் அனுப்பினார்கள்.


      அப்போது சட்டென உள்ளே ஒரு பொறி தட்டியது .இத்தனை ஆராவாரங்களுக்கிடயே எனக்கு பிடித்த அந்த எழுத்தாளனுடன் பின் பக்கம் வழியாக மேடையேறி என்ன பேச முடியும்? நான் உங்கள் வாசகன் அல்லது உங்கள் எழுத்தில் மேல் தீராத காதலும் வெறியும் உள்ளவன் ,என் இளமை முழுவதுவும் உங்கள் எழுத்துக்கு சமர்ப்பித்து விட்டேன் என்று பேசுவதா ?அப்படியே பேசினால் அவர் கேட்கும் நிலையில் இருப்பாரா ?அவரை தொந்தரவு படுத்தும் விசயம் ஆகிவிடாதா என்ற போராட்டம் மனசுக்குள் ஓட ,பார்க்கும் எண்ணத்தை கைவிட்டேன் .எனக்கும் அவர் எழுத்துக்கும் இடையே உள்ள மவுனமான காதலை இந்த சந்திப்பில் மூலம் காயப்படுத்தி கொள்ளும் நிலை வந்து விட்டால் ? இதை நான் சொன்னதும் உடனே நண்பர் சங்கர் உஷ்ணமாகிவிட்டார் .என்ன இவ்வளவு மெனக்கெட்டு பிறகு நீ சாதரணமாக வேண்டாம் என்கிறாய் ? என்றார் .இதர்க்கு என்னிடம் பதில் இல்லை .வேண்டாம் என்பதை மட்டும் புரிந்து கொள் என்றேன் .அவர் முகத்தை திருப்பி சென்று விட்டு சில நாள் என்னிடம் பேசவே இல்லை .



             இது நடந்த போது எனக்கு இருபது வயதுக்குள் இருக்கும் .என்னை பொறுத்தவரை எழுத்தாளானுக்கும் - வாசிப்பவனுக்கும் ஒரு ஆரோக்கியமான இடைவெளி இருக்கவேண்டும் என்பதை நம்புகிறேன்.அவர் எழுத்தை வாசிப்பதால் மட்டுமே எழுத்தாளான் நமக்கு சொந்த ஆகிவிடமுடியாது .அவரை எனக்கு தெரியும் என்பதால் எதுவும் நிகழ போவதில்லை என்று நினைத்தேன் .

                       சுஜாதா,ஜானகிராமன்,வையவன்,டெல்லாபுரூஸ்,கண்ணதாசன் இன்னும் பலரை படித்தாலும் பாலகுமாரன் எழுத்தின் மேல் இருந்தது, ஈடுபாடு என்பதையும் தாண்டி, ஒருவித கர்வமே வந்து விட்டது அப்போது .எனக்கு மட்டுமே பாலாவின் எழுத்து மிகவும் புரிகிறது என்ற கர்வம் . என் வயதுக்கே உரிய பெண்கள் பற்றிய பிரமிப்பு ,காதல் பற்றிய வித்தை ,அவரின் எழுத்தில் தவம் தியானம் போல, ஆழ்ந்து இழுத்து செல்லும் சூட்சுமம் இருந்தது .வெளியுலகம் ஒருவித வெளிச்சதுடன் புரிந்தது .வாழ்வின் தந்திரம் மெல்ல புரிய அவிழ்வதாக பட்டது .,அவரின் எழுத்தோடு என் இளமை முழுதும் பயணப்பட்டது.பாலா பெண்களை பற்றிய புரிதலை  நிறைய எழுதினார் .ஆனால் நான் படிக்க கொடுத்த  பாலாவின் புத்தகங்கள் அவர்களிடமிருந்து படிக்கபடாமலேயே அவசரமாக திரும்பி வந்தது. எனக்கு ஆச்சர்யாமாகிவிட்டது .சில பேர் தான் படிப்பதையே வெளியே சொல்ல மறுத்தார்கள் .அவர் புரிந்து கொள்ள முடியாத பகவான் ரஜனீஸ் போல அவரை பார்த்தார்கள்.பாலாவை அதிகம் மோசமாக விமர்சிப்பவர்கள் என்னை விட அவரை அதிகம் தேடித் தேடி படிப்பவர்களாக இருந்ததுதான் எனக்கு தீராத ஆச்சர்யமாகவே இருக்கிறது.
      

          யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால் அரை மணி நேரம் பாலாவின் ஏதோ ஒரு புத்தகத்தின் ஒரு பகுதியை படித்து விட்டுத்தான் எழுதி இருக்கிறேன் .சமீபத்தில் நண்பர் சங்கரின் ( திண்டுக்கல்லில் பாலாவை பார்க்க ஏற்பாடு செய்து பின்னால் நொந்து போனவர் ) +2 படிக்கும் பையன் விக்கி, நான் சங்கருக்கு, 22 வருடத்திர்க்கு முந்தி அவர் சென்னையில் இருந்தபோது எழுதிய கடிதத்தை பழையபெட்டியில் பார்த்து என்னப்பா இந்த அங்கிள் கட்டுரை மாதிரி இத்தனை பக்கம் எழுதி தள்ளி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு மானசீகமாக அப்பாவின் நட்பை யோசித்து இருக்கிறான். கவிதை,கட்டுரை ,கடிதம், விமர்சனம்  எது எழுதினாலும் அதில் பாலாவின் வாசனை இருக்கும் அளவுக்கு ஊறிபோய்விட்டேன் .  என் இளமை காலங்களை திரும்பி பார்த்தால் பாலாகுமாரன் என்ற எழுத்தாளானை சுவாசித்த வாசம் மட்டுமே இருக்கிறது . 


     பாலாவை படிக்க எனக்கு 13 வயதில், எனக்கு” பச்சை வயல் மனதை”  அறிமுகப்படுத்திய மூத்த சகோதரர் செல்வம் இந்த என் ஈடுபாட்டை ஒரு சமயம் எச்சரிக்கை செய்தார் .ஒரு எழுத்தாளனே கதி என்று நின்று விடாதே உலகமும் பெரியது, இதில் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் படி .ஒரே ஆளை படிக்கும்போது மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று தோணிவிடும் ஆபத்து இருக்கிறது  என்று சொல்லி சாண்டில்யனையும் , கல்கியையும் கொடுத்தார் .அவர்களின் எழுத்தின் மேல் கவனம் செல்லவில்லை .இன்று கூட அந்த கவலை பற்றி நிற்கிறது .


ஆனால் பாலகுமாரன் வேறு யாரயும் படிக்க வேண்டாம் என்பதாக சொல்லவில்லை .அவர் சொல்லித்தான் மேலும் பலரை படித்தேன் .யோகிசுரத் குமாரிடம் இரண்டு முறை  ஆசீர்வாதம் அவரால்தான் பெற்றேன் .இருந்தாலும் இன்னும்  பல பேரை சகோதரர் செல்வம் சொல்லிய மாதிரி பாலகுமாரன் கிறுக்கு எனக்கு பிடித்து இருந்ததை இல்லை என்று இப்போது  எத்தனையோ எழுத்தாளார்கள் படித்த பிறகும் கூட சொல்ல முடியவில்லை .



         அதே போல திரைப்பட உலகத்திர்க்கு முந்திய அவரின் எழுத்தில் உள்ள சம்பவ விவரிப்புக்கும் ,அதர்க்கு பிறகு எழுதிய எழுத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு.அது போலத்தான் ஆன்மீக முழு ஈடுபாட்டுக்கு பிறகு அவரின் எழுத்தின் ஆழம் இன்னும் மாறு பட்டது.அவரின் எழுத்தோடு பயனம் செய்தவர்களுக்கு இது புரியும் .


       இப்போது கடந்த பத்து ஆண்டுகளாய் அவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு குறுகிவிட்டது .ஆனாலும் அவருக்கு முதல் கடிதம் எழுதி பதில் வராமல் தவித்த உணர்வை இன்று அவரின் ”முக நூலுக்கு” நட்பின் அனுமதிக்கு காத்து இருக்கும்போதும் அனுபவிக்கிறேன் .தமிழ்  மட்டுமே அதிகம் வாசிக்க தெரிந்த எனக்கு இன்னும் வேறு எழுத்துக்களை படிக்கும்போது உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள அவரின் எழுத்து இன்னும் உதவத்தான் செய்கிறது.  


    சமீபத்தில் எங்களை விட அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள என் அப்பா , உடையார் தொகுப்பை வாங்கி தரமாறு சொல்லி இருக்கிறார். அடுத்து கங்கை கொண்ட சோழன் வாங்க சொல்வார்.அவர் படித்த பிறகு நாங்கள் படிப்போம் !         

புதன், 13 நவம்பர், 2013

License to Fun ( வேடிக்கை உரிமம் )


                              பொதுவாகவே அரசாங்க சம்பந்தபட்ட எந்த வேலையிலும் சாதரண மக்கள் தொடர்பு எப்போதுமே கசப்பாகவும் ,பல வில்லங்க விவகாரங்களூடன் இருப்பதை எல்லோரும் தெரிந்து இருப்பதால்தானோ நேரிடையாக போக பயப்படுகிறார்கள்.இத்தனைக்கும் என்னை போல பலரும் தான் பணிபுரியும் நிறுவனத்திர்காக என்னதான் அரசு அலுவலக தொடர்பு இருந்தாலும், தனக்கென்று அங்கு போகும்போது தயக்கம் வருவது சகஜமான விசயம்தான்  ஆனாலும் அதில் சில வேடிக்கை கலாட்டாக்களுக்கும் இருந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் திண்டுக்கல் - வட்டார போக்குவரத்து அலுவலத்தில்  நடந்தது . 





                            அதுதான் எனது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன லைசென்ஸ் முயற்சி. இரண்டு சக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறுவதர்க்கு முன்னால் , LLR  பெறுவதர்க்கு பரிட்சை எழுதி (அப்போது நடைமுறையில் இருந்தது . அதர்க்கு பரிட்சையில் பிட் கொடுப்பது போல சில ட்ரைவிங் ஸ்கூல் ஆட்கள் ரகசியமாக உதவிய கொண்டு இருந்ததையும் பார்த்தேன் ) பாஸ் செய்தபின், ஒரு மாதம் காத்து இருந்து, வட்டார போக்குவரத்து அதிகாரி முன்  எட்டு போட்டு திரும்பியவுடன் சில ரோடு சிக்னல்  கேள்விகளுக்கு தயக்கமில்லாமல்பதில் சொல்ல வேண்டும் அதில் ஊத்திகிட்டாலும் இன்று போய் அப்புறம் வா கதைதான்! ( உங்களை அழைத்து செல்லும் ட்ரைவிங் ஸ்கூல் செல்வாக்கை பொருத்து இதில் சில மாற்றங்கள் உண்டு ) .



                          அன்று வெள்ளிகிழமை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.இருந்தாலும் எனது ஓட்டுனர் பயிற்சி பள்ளி உறுதி அளித்தது ! . எட்டு போடும்போது ,எனக்கு பின்னால் ஒரு அம்மணி ,எப்போது வேண்டுமானலும் என்னை தாக்க கூடும் என்ற பேராபத்தில் தப்பிப்பதர்க்குள் ( நல்ல வேளை ) இரண்டாவது சுற்றில் எட்டை ஒன்பதாக்கி ,(பாதியிலேயே) வெளியே வர சொல்லி , நேரே துணை வ.போ.அதிகாரியிடம் வந்தேன். அவர் ஒரு ட்ரைவிங் ஸ்கூலின் பழைய ஜீப்பின் முன் பக்கம் உட்கார்ந்து இருந்தார் . அவர் உட்கார்ந்து இருந்த ஜீப்பின் சீட் ஃபிட்டிங் பகுதியில் ( சீட் பொருந்தும் இடம்) உடைந்து இருந்த்து . அது ஒரு எதேச்சையாய் நடந்த மாதிரி எனக்கு தெரியவில்லை .மேலும்  சிக்னல் பற்றிய அவரின் கேள்விகளும் ஒரு வித ஆவேசமாக இருந்தது.( இன்னைக்கு உன்னை ஃபெயில் பண்ணுவதுதான் என் வேலை என்பதாக.)  எனக்கு முன்னாடி இரண்டு பேரும் சின்ன தயக்கமான பதிலுக்காக ஃபெயில் ஆக்கப்பட்டு ஓரமாக நின்று இருந்த தனது  ட்ரைவிங் ஸ்கூல் ஆளை முறைத்து பார்த்து விட்டு சென்றனர் .



                             நான் சென்ற ட்ரைவிங் ஸ்கூல் நபரிடம், ஏன் இப்படி ஒரு மாதிரியாக துணை வ.போ.அ மூடு அவுட்டாக இருக்கிறார் ? என்று கேட்டேன் .இதர்க்கு முன் இப்போ உட்கார்ந்து இருக்கிறாரே ஜீப் அதில் ஒரு நான்கு சக்கர லைசென்ஸ் வாங்க வந்த  ஆளை, டெஸ்ட் ட்ரைவ் ஓட்ட சொல்லி இந்த அதிகாரி அவனுடன் உட்கார்ந்து போகும்போது ப்ரேக் அப்ளை செய்ய சொல்லி இருக்கிறார் .அவன் இதர்க்கு முன் வரை, கிரமத்தில் விவசாய தேவைக்கு ட்ராக்டர் ஓட்டி கொண்டு இருந்தவன்.பொதுவாக ட்ராக்டர் ஃப்ரேக் சுலபமாக உடனே நினைத்த இடத்தில் நிற்காது (ஏறக்குறைய ப்ரேக் பெடல் மேலே ஏறி நிற்கவேண்டும் ! ) அந்த நினைப்பில் அவர் சொன்ன உடன் அவன் ப்ரேக் அடிக்க (ஏறி நின்றூ விட்டான் போல!) அடித்த வேகத்தில், பக்கத்தில் இருந்த அதிகாரி உட்கார்ந்து இருந்த ,அந்த பழைய ஜீப்பின் சீட், ஃபிட்டிங்கோடு பிடுங்கி, அவரை பின்னால் தள்ளிவிட்டதாம் .(அவனை இன்னிமே இந்த ஏரியா பக்கமே பார்க்க கூடாது என்று அந்த ட்ரைவிங் ஸ்கூலுக்கும் அவர் கட்டாயமாக சொல்லி அனுப்பியதாக கூடுதலாக கேள்வி பட்டேன். ) அந்த அதிர்சியிலிருந்து மீள்வதர்க்குள்ளும் ,அப்படி உடைந்த சீட்டில் உட்கார்ந்தும் , என்னை பாஸ் பண்ணியதர்க்கு வெகு நாளாக சந்தோசபட்டு கொண்டு இருந்தேன் .


                             காரணம் இதே அங்குவிலாஸ் - கரூர் பைபாஸ் சாலையில் எனக்கு என் அண்ணன் ஒரு ஸ்கூட்டர் கற்று கொடுக்க , பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு வரும்போது  , குறுக்கே வந்து கொண்டு இருந்த லாரியை அவர் பார்த்து விட்டார் அதனால்,உடனே பிரேக் பிடிக்க சொல்ல, நான் பதறிபோய் நிறுத்த முடியாமல் (தெரியாமல்) அப்போது சாலை சந்திப்புக்காக அங்கு இருந்த  புல் வளர்க்கும் ரவுண்டானாவில் ஏறி வண்டி தானாகவே ஆஃப் ஆன கதை ஞாபகம் வந்தது.




                                                 பிறகு திருப்பூர் வந்த பிறகு, நான்கு சக்கர வாகன சைசென்ஸ் பெற , என்னுடன் பணிபுரியும் மூன்று நண்பர்களுடன் ஒரு ட்ரைவிங் ஸ்கூல் மூலம் ஒருமாதம் கற்று கொள்ள போனால் ,போன முதல் நாளே ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்து அதுவும் காலை 5.30 க்கு திருப்பூர் RTO ஆஃபீஸிலிருந்து தொடங்கி – அவிநாசி சாலயில் பாப்பீஸ் ஓட்டல் வரை தினமும்  போய் வர வேண்டும் .வீட்டில் ஏற்கனவே எங்கள் வீட்டில் அப்பாவுக்கும் அண்ணன்களையும் சேர்த்து,  மூன்று LMV மற்றும் இரண்டு HMV லைசென்ஸ் (Light Motor Vehicle license, and Heavy Motor Vehicle license) லைசென்ஸ் இருக்கிறார்கள் .அந்த தைரியத்தில் போனேன் .ஆனால் போனால் தான் தெரிந்தது மற்றவகள் சாப்பிட்டால் நம் வயிறு நிறையாது என்பது .



                                          முதன் முறையாக வண்டியை ஸ்டார்ட் பண்ணி தரை நழுவுவது போல ஒரு ஃபீலிங் வந்ததுவும் பயம் பற்றிகொண்டது.மேலும் கற்று கொடுத்த ஆள், முரட்டு சுபாவம் கொண்ட வயதானவர். சில சமயம் தவறாக ஒட்டும் போது கையில் அடிக்கவே ஆரம்பித்து விடுவார்.நல்ல வேளை இரண்டு பிரேக் மற்றும் கிளர்ச் பெடல்கள் இருந்தது இல்லாவிட்டால் காலையும் மிதிக்க ஆரம்பித்து இருப்பார் அந்த மனுசன் ! .கற்று கொள்ளும் ஆர்வம் சுத்தமாகவே பறிபோக , எப்படா பயிற்சி முடியும் என்று இருந்தது.




                                         இங்கும் எட்டுபோட்டு காட்டும் பஞ்சாயத்துக்கு போனோம் ! நாங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பேர்கள் என்று சொன்னேன் இல்லையா ? அதில் ஒருவருக்கு எங்கள் ஆஃபிஸ் மூலமே சில வாரங்களுக்குள் பங்ளாதேஸ் போய் சில அண்டுகள் தங்கி பணிபுரிய வேண்டி இருந்தது.ஆனால் இதை நாங்கள் (எப்படியும் !) பாஸ் பண்ணப்படுவோம் என்ற தைரியத்தில் ட்ரைவிங் ஸ்கூல் (முரட்டு) ஆசாமியிடம் சொல்லவில்லை.



                                      அங்கு இன்னொரு சிக்கல் எங்களுக்கு முன்னே சென்று காத்து இருப்பது போன பின் தான் தெரிந்தது.அதுவரை நேர் சாலையில் மட்டுமே ஒட்டி! பழக்கப்பட்ட!! எங்களால்!!! அங்கு சின்ன வளைவில் கூட வண்டியை திருப்ப திறமை போதவில்லை .சில வளைவுகளில் வண்டியை திருப்ப முடியாமல் ரிவர்ஸ் எடுத்து,என்ஜினை ஆஃப் செய்து ,வெளியே டயரை எட்டிபார்த்து திருப்பி ... ஒரு வழியாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று முடித்து ரிசல்ட்டுக்காக காத்து இருந்தால், இரண்டு பேர் மட்டுமே பாஸ் என்றார்கள் அதிலும் (நல்லவேளையாக) நானும் ஒருவன் . அதில் அந்த பங்ளாதேசத்தில் பணிபுரிய போக இருப்பவர் மட்டும் ஃபெயில்.(காரணம் அடிக்கு பயந்து அவர் பாதி பயிற்சி வகுப்புக்கு வரவே இல்லை. ) 



                                   ட்ரைவிங் ஸ்கூல் ஆசாமியிடம் இந்த விவகாரத்தை சொன்னோம் .அதர்க்கு அவர் சொன்ன பதில் மிக அற்புதமானது .முன்னாலயே சொல்லி இருந்தால் ,(என்னை கை காட்டி ) இவரை ஃபெயில் பண்ணி இருக்கலாம் என்றாரே பார்க்கலாம் ! ( அடப்பாவிகளா? )
அவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லை எனக்கு சரியாக ஓட்ட தெரியாதுதான். அதர்காக உப்புக்கு சப்பாணி விளையாட்டுக்கு என்னை சேர்த்து இருந்தது ரொம்ப மோசம் !   



                                    இதே திருப்பூர் வரும்  முன்னர் திண்டுகல்லில், நான் நைட் சூப்பர்வைசராக வேலை பார்த்த பஸ் கம்பெனியில் எனக்கு தெரிந்த ட்ரைவர் ,பஸ் ஓட்டி பார்க்க கட்டாயப்படுத்தி  அதிகாலை 5 மணிக்கு முதன் முறையாக ஸ்டீயரிங்கை கையில் கொடுத்து காட்டாஸ்பத்திரியிலிருந்து – அரசு மருத்துவமனை நோக்கி வரும்போது , மருத்துவ மனை கடந்து இடது புறம் காவல் நிலையம் ஒட்டி திரும்ப வேண்டும் .ஆனால் என்னால் முழுமையாக ஸ்டீயரிங்கை திருப்ப முடியவில்லை .அண்ணா சிலைக்கு அருகே உள்ள முக்கோண வடிவ புல் அமைப்பு மேலே வண்டி ஏற நான் பிரேக்கை விட்டு விட்டு ,பயத்தில் கிளர்ச்சையும் ,எக்சலரேட்டரையும் ஒரு சேர மிதிக்க ,அதனால் பஸ்ஸின் என்ஜின் சீறல் அதிகரிக்க, இந்த சத்ததை உணர்ந்து  எதிரே டீக்கடையில் இருந்த ஒரு சிலர்   பயந்து சிதறி  ஓட,நல்லவேளை வண்டி ஒருவழியாய் ஆஃப் ஆகி தானே நின்று போனது.இல்லாவிட்டால் அடுத்த நள் பேபரின் தலைப்பு செய்தியாக சுலபமாக நான் ஆகி இருப்பேன். 


                         அடுத்து ஒரு சமயமும் என் மேல் இருந்த அதீத நம்பிக்கையில்! அதே ட்ரைவர் ,அதே போல அதிகாலையில், இரண்டாவது முறையாக இரு பக்கம் வயல் நிறைந்த சாலையில் மீண்டும் ஓட்ட சொல்லி ஓட்டியபோது,ஒரு இடத்தில் நல்ல ஓட்டுகிறேன் என்று அவர் பாராட்டி வார்த்தை ஓயும் முன் ,பஸ் சாலை விட்டு  இறங்க, அப்போது அங்கு சாலை ஓரத்தில் பாதியில் ’கக்கா’ போய் கொண்டு இருந்த ஒருவர்,அதிர்சியில் பயந்து முழங்கால்வரை நழுவிய தனது பட்டாபட்டி டவுசரை பிடித்து கொண்டு பின் புறம் தெரிய .ஓடியதை நினைத்து பார்த்தால் இன்றும் சிரிப்பு வருகிறது  .       
     

திங்கள், 11 நவம்பர், 2013

ஆவி வேட்டை !!


                                                  யாருமே யோசிக்காத அல்லது வித்தியாசமான விசயங்களை தேடுவது , அனேகமாக வீட்டில் கடைசியாக பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டு என்பதாக சொல்வார்கள் .வீட்டில் தன்னை முன்னிறுத்தி காட்டும் ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடும் இதுதான் என்கிறார்கள் .


                                                   அதாவது வீட்டில் எல்லாரும் சீரியல் பார்த்தால் அந்த வீட்டின் கடைசி பிள்ளை புத்தகம் படிப்பான் எல்லோரும் வீட்டில் சுஜாதா ,பாலகுமாரன் ,கல்கி படித்தால் இவன் வெங்கட்ராவ் எழுதிய மனோசக்தி ,இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய சிவஜெயமமும் ,விக்கிரவாண்டி வி.ரவிசந்திரனின் ஆவிகள் உலகமும்  ,சௌதாமினியின் பறக்கும் தட்டு பற்றியும் படிப்பார்கள் அப்படிபட்ட வீட்டில் கடைசி (  ஐந்தாவது ) பிள்ளை தகுதி எனக்கும் இருந்தது .அப்படி பட்ட ஒரு  அமானுஸ்ய தேடல் 16 வயதில் ஏற்பட்ட போது அதில் ஒரு  தேடலின் விளைவே இந்த ஆவிகளுடன் பேசும் முயற்சி ...


                                                      ஏதோ ஒரு பெயர் தெரியாத புத்தகத்தில் ஆவிகளுடன் பேசும் பல முறையில் எளிதான வழியாக வய்சா கட்டம் (Ouija Board) என்பதாக அறிந்து , நண்பர்களுடன்  வீட்டில் கடைசி என் அறையில்  ஆவியுடன் பேச திட்டமிட்டோம் .

                                                 அதன் படி அங்கு இருந்த எல்லா புனித பொருள்களையும் அகற்றினோம் .ஆவிகள் பேசும் இடத்தில் ஒரு சாமி போட்டோ கூட இருக்க கூடாது எனபது பின்பற்ற வேண்டிய விதி !.பிறகு அறையின் நட்ட நடுவே  வய்சா கட்டம் , ஒரு கண்ணாடி டம்ளர் ,மெழுகுவர்த்தி சகிதமாக வேலையை ஆரம்பித்தோம் .இதில் ஒரு விசேசம் என்னவென்றால் அங்கிருந்த யாருக்கும் இது பற்றி முன் அனுபவம் இல்லை என்பதே அது . 


                                                   இப்போது தான் ஒரு பிரச்சனை ஆரம்பித்தது .அது இறந்து போன எந்த ஆவியை கூப்பிடுவது ? நான் படித்த புத்தகத்தின் விதிப்படி நமக்கு நேசமுள்ள ஆவியை  ( Security Ghost  ) கூப்பிட்டு அருகே வைத்து கொண்ட  பிறகே மற்ற ஆவிகளை தொடர்பு கொள்ள வேண்டும் . ஆனால் நாங்கள் நேசமுள்ள ஆவியும் பாதுகாபிற்க்கான ஆவியும் ஒன்றாகவே அழைக்க தீர்மானித்தோம் அது  ஆறு மாத குழந்தையாய் இருந்த போது இறந்த எனது சகோதரி, பேபி. 


                                             மெழுகுவர்த்தியை  வய்சா வரை தளத்தில் பற்ற வைத்து , சிறிது நேரம் எறியவிட்டு, பிரார்தனை செய்து சகோதரியை நினைத்து அழைத்து விட்டு , டம்ளரை மெழுகுவர்த்தியின் மீது கவிழ்த்தேன் . டம்ளர் முழுதும் வெள்ளை புகை மண்டலமாக நிரம்பி,மெழுகுவர்த்தி முழுவதுமாக அணைந்த பின் , ஆள்காட்டி விரலை டம்ளர் மேல் வைத்தேன் .மெல்ல சில அதிர்வுகளை  உணர்ந்தேன் .டம்ளர் இப்போது எழுத்துகளை நோக்கி மெல்ல நகர தொடங்கியது ...

                                            அந்த மூடிய அறையில் வியர்வைக்கு பதிலாக உடல் சில்லிட்டது .வயதும் ஆர்வமும் அசட்டு தைரியத்தை தர, வைத்த கையை எடுக்கவில்லை ஆனால் சில சமயம் தரையில் தளத்தின் எழுத்துக்கள் கட்ட்த்தை  தாண்டி டம்ளர் வெளியேறியது.


                                           நண்பர்கள் சிலரும் தங்கள் கேள்விகளுடன் எனக்கு அடுத்து டம்ளரை தொட்டு தொடர .. சில சமயம் டம்ளர் நகரவே இல்லை . இதில் வேடிக்கை என்னவென்றால்  அப்போது +2 எழுதிய நண்பன் தனது ரிசல்ட்டையும் ,வர போகும் மதிப்பெண்ணையும் கேட்டான் .Pass  என்ற பதிலும் 817 மதிபெண்ணும் எடுப்பான் என்பதாக டம்ளர் காட்டியது. ( சில மாதங்கள் கழித்து வந்த ரிசல்ட்டில் - அவன் தேர்ச்சியும் பெறவில்லை , மார்க்கும் வெறும் 635 தான் என்பது வேறு விசயம் ). பேசிய யாரும் என்ன பேசினோம் என்பதை வெளியே சொல்லவில்லை அப்போதைக்கு .


                                                        அதர்க்கு பிறகு சிலமுறை பேச முயன்றும் சரி வரவில்லை .அதுமட்டுமல்ல இப்படி அழைத்து பேசும்போது வேறு ஏதாவது கெட்டஆவிகள் வந்து விட்டால் பிறகு தொடர்ந்து இங்கேயே தங்கிவிடும் என்று வேறு ஏதோ ஒரு புத்தகம் சொன்னதால் வந்த பயமும் காரணம் .ஆனாலும் இது பற்றி ஒரு முழுஆய்வு பண்ண வேண்டும் என்று புத்தக வேட்டையில் இறங்கினோம்   அத்துடன் கதை முடியவில்லை .
முதன் முறையாக நாங்கள் பேசிய போது உடன் இருந்த நண்பன் அலெசாண்டர் பாபு இந்த விசயத்தை ( அல்லது விபரீத்தை) தனது அம்மாவிடம் சொல்ல அவர்கள் கோவித்து கொண்டதோடு என்னை அவர்கள் வீட்டில் பேசவேண்டும் என்பதாக அன்பு கட்டளை வேறு இட்டார்கள் !


                                                    மறுக்க முடியாமல், ஒருநாள் இரவு 10 மணிக்கு அவர்கள் வீட்டில் கூடினோம் .ஏன் 10 மணிவரை என்றால் ,அவன் தங்கை சின்ன வயது . (சிறு வயதுகாரர்கள் பயந்து விடலாம் என்பதால் )   தெரிந்தவர்கள் வீட்டில் அவன் தங்கையை கொண்டு விட்டு அங்கு உறங்கும்வரை காத்து இருந்ததால்தான்.

                                                     வீட்டில் உள்ள அன்னை மரியாள் உட்பட அனைத்து புனித பொருட்களையும் அகற்றினோம்.முன் அறை சமையல் அறை.அதர்க்கும் நடு வீட்டுக்கும் இடயேயுள்ள கதவை மூடி ஆவி வேட்டை ஆரம்பித்தோம் .


                                            அப்போது எனக்கு மிக பெரிய ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது .அவர்கள் பேச விரும்பிய ஆவி ,அடுத்த தெருவில் இருந்த இவர்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு கறிகடைக்காரர் ஆவியுடன். சில மாதங்களுக்கு முன் ஏதோ சண்டையில் அவர் வெட்டுபட்டு இறந்து விட்டாரம் .அவரை யார் வெட்டினார்கள் என்பதை அறியவே இந்த அழைப்பாம் ...(அட பாவிகளா !)  


               எனக்கு பயம் ஒருபக்கம் .    மெல்ல டம்ளர் அதிர்வதும் ,நகர மறுப்பதுவுமாகவே இரவு சுமார் 11.50 வரை நீடிக்க ... ( நல்ல வேளை) கறிக்கடைகாரர் ஆவி ( கத்தியுடன் )  வரவில்லை .ஆனால் .
அதுவரை பக்கத்து வீட்டில் தூங்கி கொண்டு இருந்த அவன் தங்கை திடீரென எழுந்து வந்து கதவை திறக்க ,iஇங்கு நாங்கள் நடு வீட்டில் ஒரே ஒரு சின்ன விளக்குடன் அத்தனை பேர் கூடி இருப்பதை பார்த்து விட்டு,அம்மா என்று  பயத்தில் அலறி ,கதவோடு சரிந்து விழ ..


            அடுத்த நாள் நண்பனை பார்த்த போது அவன் சொன்னான் ,எல்லாவற்றையும் நாம் எடுத்து விட்டோம் ஆனால் வாசலில் தொங்கவிட்டு இருந்த வேளாங்கன்னி தீர்த்த பாட்டில் மட்டும் எடுக்காமல் விட்டுவிட்டோம்.அதனால்தான் அந்த அண்ணன் (கறிக்கடைகாரர் ) வரவில்லை என்றான் .    நான் தங்கைக்கு எப்படி இருக்கு என்றேன் ? முன்று நாள் குளிர் காய்சல் என்றான். 
  
                     
                             
                                                      அதர்க்கு அடுத்து, நண்பர் சுகுமார்,ஆட்டோ ரைட்டிங் எனும் பேனாவை பிடித்தால் தானாக பேனாவே எழுதும் முறை.அதன் மூலம் மதுரையில் ஒரு டாக்டரின் மகள் வந்து ,தான் ஒரு கார் விபத்தில் இறந்து போனதாகவும் தன்னை அறிமுகபடுத்தி ( எழுதி ) கொண்டதாம் .


                                                   மெல்ல நான் அந்த பேனாவை பிடித்து பேப்பரில் வைத்து பார்த்தேன் .பேனா எழுத தொடங்கியது !...அந்த எழுத்து ?               என் எழுத்து மாதிரியே  இல்லை...!!!  


புதன், 30 அக்டோபர், 2013

உத்திரவாத காலம் (Guarantee Period) யாருக்கு ?

                             


                              புது மனைவி கோவித்து கொண்டால் சமாதானப்படுத்த ஐம்பது வழிகள் இருக்கலாம் .ஆனால் தொன்னூறு நாளுக்கு (ஆசை 60+ மோகம் 30 இதெல்லாம் அப்போ ! ) மேலான மனைவியின் கோபத்தை சமாதானபடுத்த குறைந்தது ஐந்து வழிகள் கூட இல்லை என்பது போல எனது  புதிய ! டச் ஃபோன் வாங்கிய ஆறு மாதம் முடிந்த சில நாளில் ஒரு நூதனமாக என்னிடம் கோவித்து கொண்டது .

பேட்டரியை உருவி...


                               யாரையாவது நான் ,என் போனிலிருந்து அழைத்தால் அவர்கள் பேசி முடித்தவுடன் அவர்களாகவே தொடர்பை துண்டிக்கவில்லை என்றால் என் போனில் இருந்து துண்டித்து கொள்ளும் தொடு திரை (End button ) வேலை செய்யாது . இன்னும் சொன்னால் தவறுதலாக ஒருவரை கூப்பிட்டு அவரை தொடர்புகொள்ள வேண்டாம் என்று துண்டிக்க நினைத்தால் கூட முடியாது ஒரே வழி பின்புற கவரை கழற்றி பேட்டரியை உருவினால் மட்டுமே சாத்தியம் .

விசிடிங் கார்டு.


                               குழந்தை பிறக்கும் போது கையை மூடி பிறப்பது , அதன் இறப்பு தேதி குறிக்கப் படாத ரிட்டன் டிக்கெட் போன் வாங்கி வருவதாக வேதாத்ரி மஹரிசி சொல்வது போல - புது போன் வாங்குபோது பில்லோடு சர்வீஸ் சென்டர் விசிடிங் கார்டும் இருந்ததன் காரணம் இப்போதுதான் புரிந்தது .

உத்திரவாத காலம் !



                              சரி போனை எடுத்து கொண்டு விசிட்டிங் கார்டு சொல்லிய இடத்திர்க்கு போனேன் .அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர் மட்டுமல்ல கூடுதலாக மொபைல் போன்  பழுது பார்க்கும் பயிற்சி மையமாகவும் செயல்படுகிறது ( நம்ம போனில் பழகத்தானோ ? ).சொன்னால் நம்ப மாட்டீர்கள் , அரசு மருத்துவ மனையின் - குறை பிரசவ குழந்தைகள்  வார்டில்  வரிசையாக நிற்பது போல ஒரே கூட்டம்.உள்ளே கூட்டத்தில் நீந்தி,அங்குள்ள வரவேற்பு அறை பெண்ணிடம்  எனது குறையை  சொன்னேன்.



                               ஃபோனை கையில் வாங்கி கொண்டு,இது ’சென்சார்’ (sensor ) பிரச்சனை ,ஃபோனை கொடுத்துட்டு விட்டு பத்து நாள் கழித்து வாங்க என்று அந்த பெண் மிக சாதரணமாக ஒரு குண்டை வீசியது .ஏன் என்று கேட்டதர்க்கு , உத்திரவாத காலம் (Guarantee Period) முடியாததால் கம்பெனிக்கு இந்த பிரச்சனயை இணயத்தில் அவர்களுக்கு பதிவு செய்வோம் , அவர்கள் வந்து பார்க்குபோது உங்கள் போன் இங்கு இருக்க வேண்டும் என்றார்கள் .அப்படியானால் ’இந்த கம்பனி’ போனை  வாங்குபவர்கள் , வயதானவர்கள் துணைக்கு வைத்து கொள்ளூம் கைத்தடி போல இன்னொரு போனை உதவிக்கு வைத்து கொள்வது அவசியமா ? தெரியவில்லை .

 கை(தடி)

                            ஆனால் எனது பழைய சோனிஎரிக்சன் k750i போன் இப்போது நல்ல வேலையாக இந்த இடத்தில் கை(தடியாக ) கொடுத்தது  . அந்த ஃபோனில் இருந்த மெமரி கார்டையும் , சிம் கார்டையும் பெற்று கொண்டு ,ஆடி மாதத்தில் பிறந்த வீட்டில் புது மனைவியை விட்டு திரும்பும் அன்பு கணவனை போல கனத்த சோகத்துடன் அங்கிருந்து திரும்பினேன் !.



                                ஃபோனை வாங்கி கொண்டு ,அவர்கள் கொடுத்த ஃபோனை பெற்று கொண்டதர்க்கான ஒப்புகை பதிவு கடித்ததின் நாட்களை அடிக்கடி (தவிப்புடன்) பார்த்து  உறுதி செய்து கொண்டே இருந்தேன் .

                              இதர்க்கு இடையில் இதை பற்றி விசாரித்தவர்கள் ,அடடா அப்படியா ரிப்பேர்னு போனா அது சரி வராதே. இப்படித்தான் என் ஃப்ரண்ட் கொடுத்துட்டு திரும்பி வாங்கி அதே பிரச்சனை மீண்டும் வந்துருச்சு வேஸ்ட் என்று இன்னொரு அணு குண்டை நான் எதிபாராமல் போட ,நாம் தான் அடுத்தவன் விசயத்தில் எதுவும் தெரியாத விசயத்தை கூட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் E=MC2  ரேஞ்சுக்கு பயமுறுத்தும் போது எனக்கு அப்போது ஒரு விசயம் உறுத்தியது ! .இந்த போன் வாங்குவதர்க்குள் என் நண்பர்கள் பலரையும் அடிக்கடி யோசனை கேட்டு துன்புறுத்திய பாவமோ என்று எனது உள் மனசு உறுத்த தொடங்கியது ( மன்னித்து கொள் சுகுமார் ! ) .
சரி விடு கஷ்டப்பட்டு சம்பதிச்ச காசு என்று அதே மனசு ஆறுதலும் சொன்னது .வெகு நீண்ட என் போனை பிரிந்த - அந்த பத்து நாட்களும் முடிந்தது !



                                ஒப்புகை சீட்டை அங்கிருந்த (அதே ) பெண்ணிடம் கொடுத்தேன், வாங்கி கொண்டு உட்காருங்கள் என்றது .அந்த உட்காருங்கள் என்ற வார்த்தையின் அழுத்தத்தின் மதிப்பு ’இரண்டரை மணி நேரம்’ என்பது ,அப்படி சொல்லும்போது  தெரியவில்லை !  உட்கார இடமும் பஞ்சம் .பல பேர் என்னை விட ,காத்து இருப்பதில் இங்கு (ஆடி மாத )சீனியகள்போல! பல பேர் அழுந்திய முகத்துடன் இருந்தனர் .சில பேர் அடிக்கடி அங்கிருந்து போய் காஃபி ,டீ,தம் அடித்து திரும்பி வந்து  உட்கார்ந்து இருந்த இடத்தை இழந்தனர்.


                          அதில்  சுமார் ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர் மிகவும் உணர்ச்சி வசபட்டவராக ( ரொம்ப சீனியர் போல ) அடிக்கடி என்ன ஆச்சு ? என்று கேட்டு கலவரப்படுத்தவே ஒருசமயத்தில் அவருக்கு முகத்தை  திருப்பிகொண்டது அந்த பெண் .வேகமாக எழுந்த அவர் சர்வீஸ் செண்டர் ஓனரை பார்க்க ஆவேசமுடன்  உள்ளே  சென்றார் .

                     அங்கு அவரை ஆசுவாச படுத்தி , மரத்தில் இருக்கும் மாங்காய்க்கு வீசபட்ட கல் தலையில் வந்து விழுந்த கோபம் அவர்முகத்தில் தென்பட திரும்பி வந்து, எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தார் .ஏதோ முணுமுணுப்பு மட்டும் அவரிடமிருந்து ஓயவில்லை . 

                  அப்போது என்னிடம் உங்கள் மெமரி கார்டு கொடுங்கள் என்று அந்த (வரவேற்பு அறை)  பெண் கேட்டது .  சென்சார் பிரச்சனைக்கு மெமரி கார்டு எதர்க்கு ?என்ற கேள்வியுடன் வேறு வழி இல்லாமல்  8GB UltimaPro Micro SDHC Card கொடுத்தேன் .அடுத்து சில நிமிசத்தில் சிம் கார்டு கேட்கிறார்கள் என்று ஒரு சின்ன பையன் வாங்கி போனான் .

                                  சுமார் கால் மணி நேரத்தில் , சர்வீஸ் சென்டர் ஓனர் வந்து அந்த உணர்ச்சி வசப்பட்ட மனிதரிடம் இந்தாருங்கள் உங்கள்  மெமரி கார்டு என்று அந்த மனிதரிடம் கொடுத்தார் .அவர் அதை வாங்கி கொண்டு திருப்பி, திருப்பி பார்த்தார். அதுவும்  8GB UltimaPro Micro SDHC Card .சில நிமிடங்களில் அவர் செட் ஒரு வழியாக வர, வாங்கி கொண்டு வெளியேறினார் .

                             அவர் போன சில நிமிடத்தில் , எனது அன்பு ஃபோனை என்னிடம் கொடுத்து செக் பண்ணி கொள்ள சொன்னார்கள் .சிம்மை பொருத்தி என் ஆர்வத்தோடு   பரிசோதித்தேன்.சென்சார் பிரச்சனை (அப்பாடா ) சரியாக இருந்தது . வாங்கி போன மெமரி கார்டை செக் பண்ண ’மியூசிக் ஐகன்’ உள்ளே போனால் ஒன்றுமே இல்லை செட்டிங்ஸ் வந்து ஸ்டோரேஜில் SD Card Total Space பார்தால் அங்கேயும் உள்ளே எதுவும் இல்லை என்றது .அடப்[ பாவிகளா ?



                                 அந்த பெண்ணிடம்  மெமரி கார்டு இல்லை என்பதை சொன்னேன் . வாங்கி வர உள்ளே போனது.யாரோ உரக்க அந்த பெண்ணை சத்தம் போட்டது எனக்கு கேட்டது . கண் கலங்க திரும்பி வந்து , என்னிடம் எதுவுமே சொல்லாமல் தன் சேரில் அமர ,நான் இலக்கு தவறிய அம்பை எய்த வேட்டைக்கரன்  போல நிற்க்க , சர்வீஸ் சென்டர் ஓனர் வேகமாக வெளியே போனார்.அதர்க்குள் போனுக்காக காத்து இருந்த இரண்டரை மணிதாண்டி மூன்று மணி நேரமும் ஆனது .திரும்பி வந்த ச.செ ஓனர்,உள்ளே சென்று ஒரு 8GB கார்டை எனக்கு திருப்பி தந்து விட்டு ,அந்த பெண்ணை பார்த்து ஏதோ சொல்ல, சட்டனெ எழுந்து அந்த பெண் உள்ளே போய் தனது ஹேண்ட் பேக்கை  எடுத்து கொண்டு சர்வீஸ் சென்டரை விட்டு அவசரமாக வெளியேறியது .

                            அப்போது ஓனர் சத்தமாக , செய்த தப்ப  புரிந்து கொள்ளாமல் பாருங்க சார் கோவத்தை ! உங்களிடம் வாங்கியதை அவரிடம் கொடுக்குபோது ஒரு வார்த்தை சொல்லவில்லை ஆனா கோவம் மட்டும் வந்துருச்சு ,வேலையை விட்டு போகுதாமா. இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றார் கோபத்துடன்.

அங்கிருந்தவர்கள் எதுவுமே புரியாமல், பாதியில் ஆங்கில படம் ஓடும் தியேட்டருக்குள் வந்து  வேடிக்கை பார்ப்பவர்களை போல எதுவும் புரியாமல்  பார்க்க ...



                               என்னால் எதுவும் பேச முடியவில்லை .ஆனால் அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது .  அவர் அந்த வேலையை விட்டு போன பெண்ணை சொல்கிறாரா அல்லது  என்  ஃபோனைத்தான் வேலைக்கு ஆகாது என்று சொல்கிறாரா ? 

கிளம்பினேன் ... ( இனி ஆடிமாதம் வரவே வேண்டாம் ! )