திங்கள், 12 ஜனவரி, 2015

ராஜீவ் காந்தி சாலை - வலியின் பயணம்.



                   நேற்றுத்தான் ராஜீவ் காந்தி சாலை வாசிததேன் .வெகு பல விமர்சனங்களால் விவாதிக்கப்பட்டு அதன் மூலமே பரிந்துரை செய்யப்பட்ட வித்தியாசமான ஆனால் வெகு தாமதமாக என்னால் வாசிக்கப் பட்ட ஒரு புத்தகம் .

               சமீப காலமாகப் புதிய எழுத்தாளார்களைப் படிக்காமல் தள்ளி போட்டுக் கொண்டே வந்து இருந்தேன்.அதர்க்குக் காரணம் நான் வெகு நாளாகத் தேடி போன புத்தகங்கள் என்னை நோக்கி வர தொடங்கியதுதான் .அவை பெரும்பாலும் உயிர் மற்றும் பிரபஞ்ச ரகசியங்கள் பற்றியது மற்றொரு பக்கம் இப்போதுதான் டிப்ளோமா YHE (Yoga for Human Excellence) முடித்த கையுடன் M.A (VISION ADVANCE DIPLOMA) வகுப்புகள் ஆக்கிரமித்துக் கொள்ளத் துவங்கிவிட்டது .ஏற்கனவே தனிச் செல்ஃபில் வாங்கி வைத்த வேத்தாத்ரி மஹரிசி புத்தகங்கள் படிக்கப்படாததால் முறைத்துப் பார்ப்பது போல ஒரு பக்கம் தோன்றுகிறது .மறு பக்கம் உள்ள செல்ஃபில் காத்து இருக்கும் பல கனத்த புத்தகங்கள் நான் வாசிப்பதர்க்காக என் மரணத்தைத் தள்ளி போட்டுக் கொண்டு இருப்பது போலப் பய முறுத்துகின்றன இதர்க்கு இடையில் லைப்ரரி புத்தகங்கள் வெகு தொந்தரவு செய்யவே இரண்டு லைப்ரரி டோக்கன்களை உள் பீரோவுக்குள் ஒளித்து வைத்து விட்ட பிறகுதான் நிம்மதியாக இருக்கிறது.ஏதோ பெரிய படிப்பாளி போல என்னைப் பற்றிச் சொல்லி விட்டேனோ ? அப்படியெல்லாம் சொல்லி விட முடியாது.போதிய அளவு வருமானம் போதும் என்ற முடிவுக்குள் வந்த பிறகு இது சாத்தியம் என்றாகி விட்டது .அதிலும் நிறைய எழுத ஆசைப்படுவதால் துரத்தி துரத்தி நிறையப் படிக்கத் தூண்டும் ஆசையைத் தவிர்க்க முடியவில்லை.எவ்வளவு துரத்தினாலும் ஓடி முடிக்க வேண்டிய எல்லை கோடு மட்டும் எவ்வளவு தூரம் என்பது சத்தியமாகக் கண்ணில் பட மாடேன்கிறது ... 



வசிகரக் குரல் !
ராஜீவ் காந்தி சாலை புத்தகம் கிடைத்தவுடன் அப்புறம் படிக்கலாம் என்று மெல்ல ஒதுக்கி வைத்தேன்.அது வேறு ஒருவர் கொடுத்த ஓசி புத்தகம் என்பதால் மட்டுமல்ல பல நாட்களாக ஏற்கனவே வாங்கி வைத்தும் வாசிக்க முடியாத புத்தகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்னைக் காரி துப்பி விடுவதர்க்குள் படித்து விட வேண்டும் என்ற ஒரு உதறலோடுதான் இதன் முன்னுரை படித்தேன்.எந்த புத்தகம் கிடைத்தாலும் அதன் முன்னுரை எப்போதும் கவனமாகப் படித்து விடுவது என் தீராத வழக்கம் .எந்தப் புத்தகம் கிடைத்தாலும் அதன் ஆசிரியரின் எழுத்தோட்டத்தில் கலக்க இது மிக உதவும் எனற என் அசையாத நம்பிக்கை .அப்படிப் படித்தும் சில சமயம் தள்ளி வைத்து விட்டு எனக்கு நானே பல சாபங்களை விட்டு கொள்வதுவும் உண்டு ஆனால் ஏதோ ஒரு ( குதித்து விடு என்று ப்ரணவுக்குக் கேட்ட கடைசிக் குரல் போல !) வசிகரக் குரல் என்னை ராஜீவ் காந்தி சாலையைப் படிக்க ஆட்படுத்தியது . 



அடுத்தச் சாபம் ?
ரயில்வே ஸ்டேச்னில் வெகு தூரம் ஓடி உள்ளே வந்துபுகும் ரயிலுக்கு அருகில் பிளாட் ஃபார்மில் நிற்க்கும் போது ,முகத்தில் ஒரு வெப்பம் அறைந்து தாக்கி உடலெல்லாம் அதன் இரைச்சலும் ஓட்டமும் பிளாட் ஃபாரத்தின் ஒரு அதிர்வு பரவி உடலை உலுக்குமே அப்படிச் சட்டெனெ வேறு ஒரு உலகத்துக்குள் வாரி விழுந்தது போல உணர்ந்தேன் . ஐ.டி உலகம் பற்றி வெகு அரசல் புரசலாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் .நான் அதிகம் படிக்காததால் இந்தது்றை பற்றி எனக்குப் பற்றி வெகு சொற்பமாகவே தெரியும்.நண்பர்களும் இல்லை .ஆனால் சென்னையின் அவசர உலகத்துக்குள் என் முப்பது வருடத்திர்க்கு மேற்பட்ட பழக்கத்தில் இருந்த நண்பர்களைத் தொலைத்து இருக்கிறேன் .இந்தப் புத்தகத்தில் வரும் கார்த்திக் , (அவர்தான் அனேகமாக ஆசிரியர் விநாயக முருகனாக இருக்க வேண்டும்) ப்ரணவ் ,சுஜா,லூர்து பலரும் வெகு பரிச்சயமான என் நண்பர்களின் மன உணர்வோடு ஒத்துப் போவதுதான் என்னை ஒவ்வொரு அத்தியாத்திர்க்குள்ளும் ஓடி ஓடி புதைத்துக் கொள்ளத் தூண்டியது .வெகு அருகே இவ்வளவு அழுத்தமான ஒரு வியாபார உலகம் தனது நீளமான கோரை பல்லுடன் இளித்துக் கொண்டு ஜிகினா பூசி வசீகரப் பொம்மையாய் நிற்பதை தெரிந்து கொள்ளும் போது ,இன்றைய இளைஞர்களுக்கு டாஸ்மாக்குக்கு அடுத்தச் சாபம் இதுதானோ என்று மனசுக்குள் ஒரு அயற்சி கலந்த உதறலை ஏற்படுத்தி விடுகிறது .


விதியின் தீர்ப்பு
 சிறுசேரியில் - ராஜீவ் காந்தி சாலை அமைக்கப்படும் முன் வாழ்ந்த அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையும் அதர்க்குப் பின் மாறிய சிதிலமான வாழ்க்கை முறை பற்றியும் எவ்வித அனுசரனையும் உடன்பாடும் செய்து கொள்ளாத நடந்தது நடந்தபடியே விவரிப்பதாக அதன் பாத்திரங்கள் பேசுவதும் ,காலம் என்ற ஒரு அத்தியாம் அதைச் சில சமயம் விதியின் தீர்ப்பு போல இடையிடையே வந்து பேசிப் போவதும் கட்டுரை நடையை ஞாபகப் படுத்தினாலும் அதன் அவசியம் இல்லாமல் இல்லை . 



எழுத்து நடை 
சில கேரக்டரில் உள்ளும் புறமும் மாறி , மாறிப் பயணிப்பது ஆச்சர்யமாக இருப்பதோடு சந்தோசமாக இருக்கிறது முக்கியமாக எனக்கு மட்டுமேதான் இப்படி அபத்தமாக் தோன்றுகிறதோ என்ற பிரமாணர்களையும் மலையாளிகளைப் பற்றியும் நான் என் அநுபவத்தில் பெற்ற இந்தப் புத்தகம் உரக்க பேசி என் சில ஆறாத காயங்களுக்கு மருந்து இட்டு சென்று விட்டது 



இதைச் சொல்லாமல் விட்டால் ராஜீவ் காந்தி சாலையில் நான் பயணித்த அல்லது வாசித்த அநுபவம் முற்று பெறாது .ஆம். இந்த எழுத்துகளுனூடே பயன்படுத்திய கெட்ட வார்த்தைகள்,பாசாங்கற்ற உணர்வுகளோடு சொல்லப்பட்ட உறுப்புகள் வர்ணனை ...



சென்சார் இல்லாத இவைகளை உணர்வுகள் படிக்கப்படும் போது கொஞ்சம் நஞ்ச அதிர்ச்சி தரவில்லை .எங்கோ ஒதுங்கி போகும் மிருகத்தைக் கையசைத்துக் கவனத்தை நம் பக்கம் திருப்பிக் கொள்ளச் செய்யும் முயற்சி போலக் கொஞ்சம் பயமாக இருந்தது . எது அவரை இவ்வளவு சுதந்திரத்தோடு எழுத தூண்டியது என்பதை வாசித்து முடித்த பிறகும் அதிகப் பயத்தோடு யோசிக்கிறேன் . அது அவரின் எழுத்தின் வெற்றியா அல்லது இப்படியும் தமிழ் எழுதப்பட வேண்டும் என்ற முன் பாதையைத் தனது முதல் முயற்சியிலேயே போட்டு வைக்கிறாரா எனபதொடு நிற்காமல் ஒரு வேளை பய முறுத்துகிறாரோ விநாயக முருகன்? தெரியவில்லை.ஆனால் இந்த நடை மிகப் பெரிய தாக்கம் இடி போல இறங்கி விட்டது. 



புத்தகத்தின் வெற்றி 

அதன் உருவாக்கத்திர்க்கு காரணமான வெளி மாநிலத்தாரின் ரத்த வாடை  ,வெகு அருகே இன்றைய வாழும் இளம் மக்களின் உணர்வுகள் அருகே கொண்டு செல்லும் முயற்சி .மாற்றங்கள் எற்படுத்தும் வலிகள் .அவசர அவசரமாக மாறிக் கொள்ளும் ஒரு கலாச்சாரத்தின் அலங்கோல தரிசனம் .மீண்டும் மீண்டும் இன்றைய ஜெனராசன் கேப்பில் அடி வாங்கிப் பைத்தியகார உலகத்துக்குள் தள்ளப்பட்டுப் பிச்சைகாரர்களாக வாழும் பெற்றோர்கள் .கலாச்சாரம் என்பது வெளிவேசம் மட்டுமல்ல உள்ளே இருக்கும் உலகத்துக்குள் அத்து மீறிய முயற்சி செய்தால் எவ்வித மன அழுத்தம் தரும் தற்கொலை முயற்சி என்று ஒவ்வொருக்கும் மவுன புரட்சியைத் தூண்டு விதமாக ராஜீவ் காந்தி சாலை பயணம் முன்னே கிளைகள் அற்ற சாலையில் பயணிப்பதான அழுத்தமான கேள்விகள் கலந்த யோசனை தந்து விரிந்து செல்கிறது...

1 கருத்து:

  1. இருபது வயதில் நான் என்ன சிந்தனையில் உழன்று கொண்டிருந்தேனோ அது போன்ற எண்ணங்களை இங்கே உங்கள் மூலம் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு