Follow by Email

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலில் - சில கட்டாயங்கள் !


           திண்டுக்கல்லில் எனக்கு ஆறு நண்பர்கள் .அதில் மூன்று பேர் என்னை விட ஏறக்குறைய இரண்டு வயதுக்குள் மூத்தவர்கள் .இதில் சுகுமாரை மட்டும்தான் கூடப் படித்த வகுப்புத் தோழர்.என்னை விட மூத்த நண்பர் ஒருவரின் காதல் திருமணத்தை நடத்தச் செய்தச் சுவாரஸ்யங்கள்தான் இந்தப் பதிவு .             நண்பர்கள் நாங்கள் அனைவரும் சச்சின் டெண்டுல்கர் போல!. ஒரு விளம்பரத்தில், நான் 100 செஞ்சூரி அடிப்பேன் என்று கனவு காணவில்லை ஆனால் காணாத கனவு நிறைவேறியது.அதனால் வாருங்கள் கனவுகளைத் துரத்துவோம் என்பாரே அது போல என் நண்பர்கள் எல்லோரும் பல பட்டப் படிப்பு முடிக்க வேண்டும் ஒரு டாக்டராக,ஒரு வக்கீலாக , எஞ்ஜீனியராக,ஒரு மென் பொறியிலராக,இன்னும் பல ____ ஆக ஆசைப்படவில்லை .ஆனால் அப்படி தொடர்பு உடைய வேலைகளில் இருக்கிறார்கள் இன்னும் சொல்லப் போனால் அவர்களை வைத்துப் பாடம் நடத்துபவர்களாகவும் அவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாகவும் கூட இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் சுய முன்னேற்றப் போராளிகள் என்று கூட சொல்லலாம் என்பது வேறு விசயம் ...

சரி நாம் தொடங்கிய காதலுக்கு போவோம் .என் அப்பா சுமார் 60 வருடங்களுக்கு முன் சொந்தமாக ‘லேன்ட் மாஸ்டர்’ கார் வாங்கி (அதனால் இப்போதும் அவருக்கு லேன்ட் மாஸ்டர் சுந்தரம் என்ற பட்டப் பெயரும் உண்டு ) வாடகைக்கு ஓட்ட தொடங்கிய சமயத்தில் அவருக்கு ஒரு வாடகை திண்டுக்கல் சிறுமலைக்கு போவதர்க்கு வந்தது.மூவர் மட்டுமே காரில் வந்து இருக்கிறார்கள் .வந்தவர்கள் பேசிக் கொண்டதைக் கவனித்த போது அவர்கள் காதல் விசயத்தில் ஏதோ ஒரு பெண்ணை தூக்கி வரப் போவது புரிந்து கொண்டார் .வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இந்த மாதிரி வாடகைக்கு வர மாட்டேன் என்று மறுத்து இருக்கிறார்.அதர்க்கு அவர்கள் இல்லை எந்த பிரச்ச்னையும் வராது.கூட வந்த ஒருவரைக் காட்டி இவனும் அந்த பெண்ணும் காதலிக்கிறார்கள் என்றும் போன உடன் கூட கிளம்பி அவள் வந்து விடுவாள் என்று கெஞ்சி இருக்கிறார்கள் .சரி என உடன் பட்டுப் போய் இருக்கிறார் .அவர் சொன்ன இடத்தில் காரை நிறுத்தி விட்டுக் காத்து இருந்து இருக்கிறார் .அவர்கள் போன சில நிமிடத்தில் அய்யோ என்னை விடுங்க நான் என் அப்பா அம்மா விட்டு வர மாட்டேன் என்று சத்தமிடுவது கேட்டு இருக்கிறது .எற்கனவே திருப்பி நிறுத்தித் தயார் நிலையில் கார் இருந்ததால் வாங்க வேண்டிய வாடகை பணத்தை கூட வாங்க முடியாமல் ,விட்டால் போது கிளப்பிக் கொண்டு கார் ஸ்டாண்டுக்குத் திரும்பிப் பறந்து வந்து விட்டார்.அடுத்த சில நாள் கழித்து அந்த மனிதர்களில் ஒருவரை வாங்கிய தரும அடையை மறைக்க் காதைச் சுற்றித் தலை முழுதும் முண்டாசு சுற்றி கொண்டு இவரை முறைத்து கொண்டு போனதைப் பார்த்து இருக்கிறார் .அப்படி பட்ட காதலர்களை சேர்த்து வைக்கும் வீரப் பரம்பரை நான் !
           ஆனால் என் நண்பர் விசயம் வேறு .அவர் விரும்பிய பெண்ணும் குடும்பமும் நண்பர் வீட்டுக்கு வெகு பல ஆண்டுகளாக நெருங்கிய பழக்கம்.அந்தப் பெண் அவர்கள் வகுப்பைச் சேர்ந்தவள்தான் பொருளாதார வசதியிலும் நண்பரின் வீட்டை விடக் குறைவு ஆனால் அவர்கள் திருமணத்தை மறுக்க அது காரணம் அல்ல அந்தப் பெண் அவள் வீட்டுக்கு மூத்தவள், அவளுக்கு நான்கு தங்கைகள் என்பது மட்டுமே..அதனால் அவர் அந்த வீட்டிற்கு செலவு செய்தே வீணாகப் போவார் என்று சொல்லி மறுத்தார்கள் .அவர்கள் மன மாற்றத்திர்க்கும் சம்மதத்திர்க்கும் பல ஆண்டுகளாகப் பொறுமையாக இருந்து பார்த்தார் நண்பர்.இதர்க்கு இடையே அவரில் சில ஆண்டுகள் கோவையில் மெசினஸ்ட்டாக வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.பெண் வீட்டில் சம்மதம் என்பதால் அவர்கள் வேறு வரன் வந்தும் தட்டிக் கழித்து விட்டார்கள் .இதர்க்கு இடையில் காலம் வேறு ஒரு வாய்ப்பைக் கொடுத்துச் சோதித்தது. அவருக்கு மலேசியாவின் நண்பர் ஒருவர் மூலம் வேலை வாய்ப்பு.போக எல்லா முயற்சியும் நடந்து விட்டது .அந்தப் பெண் வீட்டில் பயம் வரவே வேறு வழியில்லாமல் அவர் தாயாரிடம் இறுதியாகப் பேச கூட என்னை அழைத்தார் . 
போனேன் .எனது மறக்க முடியாத வாழ்வியல் சம்பவங்களில் அதுவும் ஒன்று .ஒரு தாயும் மகனும் வேறு வேறு கோணத்தில் காதல்  பற்றிப் பேசினார்கள் .தாய் மறுப்பதுவும் ,நண்பர் தனது தாயிடம் தனது உரிமையையும் கோரிக்கையையும் உரத்தும் ஒரு இடத்தில் கெஞ்சியும் விவாதம் தொடர்ந்தது.நண்பர் பல சமயம் பேசப் ,பேச அழுதும் விட்டார் .( எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவருக்கு இரும்பு மனிதர் என்ற செல்ல பெயர் இருந்தது ) ஒரு கட்டத்தில் அவர் அம்மா முடிவாக, உனது அண்ணன்களிடம் எல்லாரும் பேசிவிட்டேன் நீ அப்படி ஒரு முடிவு எடுத்தால் இந்த வீட்டுக்குள் வராதே என்று தனது பேச்சை முடித்து விட்டார்கள் .நண்பர் வெகு நேரம் உட்காந்து இருந்தார் .அங்கு ஒரு அழுத்தமான மவுனம் என்னைக் காத்து இருக்க வைத்தது.  ஏதோ முடிவெடுதார் போல என்னைப் பார்த்தார்.அது ஒரு விதத்தில் தோல்வி கலந்து முடிவெடுத்த பார்வை அது என்பதாக உணர்ந்தேன் நான் !  எனக்கு விபூதி பூசி விடுங்கள் என்றார் நண்பர் அம்மாவிடம் .பூசி விட்டார்கள். எப்போதும் இங்கு ஊருக்கு வந்து விட்டுத் திரும்பிப் போகும்போது எங்கள் நண்பர்கள் அனைவரின் வீட்டிலும் இது வழக்கம்தான் ஆனால் எனக்கு இன்று அது வேறு ஒரு மாதிரி இருந்தது  . நண்பர் போயிட்டு வரேன் என்றார்.வாசல் கதவைத் தாண்டும் போது என்னை அம்மா கூப்பிட்டர்கள்.நண்பரைப் பார்த்தேன் அவரின் கண்ணால் போ என்றார்.அம்மா மெல்லக் குரல் தாழ்த்தி எனக்கு மட்டுமே கேட்கும் படி ,அவளை எந்த அளவுக்கு நாங்கள் நம்பிப் பழக விட்டோம் ? இப்படி என் மகனை என்னிடமிருந்து பிரித்து விட்டளே .இன்னைக்கும் சொல்றேன் கிருஷ்ணா கேட்டுக்க எனக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு அவள் வீட்டில் அவள் தங்கச்சி ஒருத்திக்குக் கூட நல்ல படியாக் கல்யாணம் நடக்காது எல்லாரும் இவளை மாதிரி எவனையாவது இழுத்துகிட்டுதான் போவாளுக பார் .நீயும் பார்ப்பே ! நான் அவர்கள் கோபம் புரிந்து கொள்ள முயற்சித்தாலும் பெண்ணுக்கு பெண் சாபம் இடுவது இங்கு எப்போது முடியும் என்பதை நினைத்தபோது ஒரு வித அயற்சியாக இருந்தது.           நண்பரின் அண்ணன்களில் ஒருவரிடம் எனக்கு கொஞ்சம் நெருக்கமிருந்தது அவரிடம் பேச நான் நண்பருடனே போனேன் .சுமார் 3 மணி நேரம் பேசினோம் .பேசினோம் என்பதைவிட போராடினோம்.அவர் எங்களை பார்த்து கடைசியாக சொன்ன வார்த்தைக் கிருஷ்ணா நீ அவனெல்லாம் அதிகம் புத்தகம் படிக்கிறதால உலகம் இவ்வளவுதான்னு ஒரு கனவுல அலையிறீங்க ப்ராக்ட்டிக்கல் என்பது வேற.உங்களுக்கு இப்போ சொன்னாப் புரியாது. எனக்கு இதுல எதிர்ப்பும் இல்லை சம்மதமும் இல்லை.போயிட்டு வாங்க என்று முடித்து கொண்டார்.அவரை மதித்து நாங்கள் போனதுக்கு பரிசீலிக்க படாத எதிர்கட்சித் தொண்டன் மனு போல மீண்டும் நிராகரிக்கப் பட்டோம்.சோர்வாக இருந்தது .          ஆனால் நண்பர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உறுதியாக இருந்தார்.அதனால் பெண் வீட்டில் அனைவரிடமும் கூடிப் பேசினோம் .உங்கள் வீட்டில் முதல் கல்யாணம் என்பதால் நிச்சயம் பத்திரிக்கை அடித்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம்.அதைத் தடுக்கவில்லை.கல்யாணத்திர்க்கு இரண்டு நாளைக்கு முன்னால் இருந்து கொடுக்க ஆரம்பியுங்கள் .அதிலும் இருவருக்கும் பொதுவான சொந்தம் யாருக்கும் பத்திரிக்கை வைக்க வேண்டாம்.ஜவுளி,வேறு சமாச்சாரங்கள் வெளியூரில் எடுங்கள் .கல்யாணம் திண்டுக்கல்லில் வேண்டாம் .ஸ்ரீரங்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.கல்யாணத்திர்க்கு முன்னால் சொந்தங்களை நேரம் சொல்லித் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வரச் சொல்லி விடுங்கள் அங்கிருந்து ஒரு அரசு பஸ் மொத்தமாக பேசிக் கிளம்பி விடலாம் .அதுவரை நண்பர் என் வீட்டில் இருக்கட்டும் .இது போல பல முன்னேற்பாடுகளை  சொன்னோம் .மெல்லத் தயங்கினாலும் எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள்.சொன்ன படியும் செய்தார்கள் .          அதில் மற்றொரு திட்டமும் இருந்தது .அதாவது கல்யாணத்தில் எங்கள் மூன்று நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வதும் மற்ற மூவர் இங்குள்ள சூழ்நிலையை கண்காணிக்கவும் திட்டமிட்டோம் . இதில் கடைசியாக எனது தோழி ஒருத்தியைத் திருமணத்திர்க்கு முதல் நாள் மாலை நண்பரின் வீட்டுக்கு அனுப்பி விசயம் கசிந்து இருக்கிறதா என உறுதி செய்து கொண்டோம். எல்லாம் திட்டமிட்டாலும் பயம் நிழலாய்த் தொடர்ந்தது.காரணம் நண்பர் வீடு கொஞ்சம் ஆள் பலம் மிக்கது.எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

   ஆனால் திருமணத்தில் நண்பர்களின் பெற்றோர்கள் இல்லை என்ற வருத்தம் தவிர , மற்றபடி அவர்களின் மானசீக ஆசிர்வாததால் அற்புதமாக நடந்து முடிந்தது.  இன்றைய டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாரதிய ஜனதா நினைத்தது போல நண்பர் வீட்டில் நினைத்து விட்டார்கள் .          ஆனால் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் விசயம் அண்ணன் ஒருவருக்கு தெரிந்து விட்டது .முதலில் என் வீட்டுக்குப் போய் இருக்கிறார் .எனக்கும் நான்கு சகோதரர்கள் என்பதாலும் , தெரியாது என்று சொன்னதாலும் வேறு எதுவும் கேட்கவில்லை .ஆனால் நாங்கள் விட்டு வந்த நண்பர்களில் (மூவரில்) ஒருவரைப் பிடித்து விசாரிக்க அவர் கொஞ்சமும் யோசிக்காமல் எனக்கு தெரியாது ஆனால் பழநியில் நடக்கலாம் என பேசிக் கொண்டதாக அவர்களை திசைத் திருப்பச் சொல்ல ,சொன்ன நண்பரையும் கூட்டிக் கொண்டு அலைந்து இருக்கிறார்கள்.அந்த நண்பர் நல்லதிர்க்காக கூட  பொய் சொல்லத் தெரியாதவர் .அதனால் போகும் வழியெல்லாம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் வயிறுக் கலக்கியதில் ,பல முறை டூப் பாத் ரூம் ஓடியிருக்கிறார்   .இதில் என்ன விசயம் என்றால் நண்பர் குடும்பத்தில் சில ஆண்டுகள் கழித்து எங்களை கூட மன்னித்து விட்டார்கள்.ஆனால் அவர் (வயிற்று ) போக்குக் காட்டி அலைய வைத்ததால் பல ஆண்டுகள் அவரிடம் பேசவில்லை என்பது வேறு விசயம்.             விசயம் வீட்டுக்குத் தெரிந்ததால் திருமண ஜோடிகளை பதிவு அலுவலகம் செல்லும் வரை பதுக்கி வைக்க மணப்பாறையில் உள்ள நெருங்கிய சொந்தகாரர் வீட்டிற்க்கு மாற்றி விட்டோம் .காரணம் நண்பர் கொடுத்த வாக்கை நிறவேற்றத் திருமணத்தில் உறுதிதான் ஆனால் பாசத்தில் வாழைப் பழத் தோல் போல எப்படியும் எங்காவது வழுக்கி விடுவார் என்பதும் எங்களுக்குள் உதறல் இருந்தது.அப்புறம் சின்ன பிள்ளைகள் வெல்லாமை வீடு வந்து சேராது என்ற பழ மொழி நூறு மார்க் எடுத்து விடுமே ? அதனால் அவர் வீட்டுக்கு தெரியும் என்பதை சொல்லாமல் வைத்து இருக்க பெரும் பாடு பட்டோம்.         இன்று அவர் சென்னையில் வசிக்கிறார் .மில்லிங் மெசின் வைத்து தொழில் புரிகிறார்.அவர் மனைவி அறிவியல் டீச்சராக இருக்கிறார்கள் .பையன் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறான். வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது ...          இந்த பதிவைச் சுபம் போட்டு முடிக்கும் முன்னால் இரண்டு விசயம் சொல்லியே ஆகவேண்டும் .ஒன்று நண்பரின் திருமணத்திர்க்குச் சுமார் ஆறு ஆண்டுக்குப் பின்னர் அவர் தந்தை மரணத்தில் நண்பர் கடைசி பையன் என்பதால் அவர் தந்தைக்கு கொள்ளி வைக்கும் உரிமை அவரின் பெரிய அண்ணனால் மறுக்கப்பட்டது என்பது வெகு நாள் ஒரு வலியை ...            இன்னொன்று அவர் அம்மாவின் என்னிடம் சொன்ன கடைசி வார்தை ( இன்னைக்கும் சொல்றேன் கிருஷ்ணா கேட்டுக்க எனக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு அவள் வீட்டில் அவள் தங்கச்சி ஒருத்திக்குக் கூட நல்ல படியா கல்யாணம் நடக்காது ) அந்த வார்த்தை ஒரே ஒரு முறை நண்பரின் மனைவியின் ஒரு தங்கை விசயத்தில் நடந்தது .அப்போது நண்பர் கோவையில் இருந்தார் அவரின் திருமணம் நடந்து ஒரு ஆண்டு முடிந்த பிறகு ... ஒரு ஞாயிறு வீட்டுக்கு நண்பரின் மனைவியின் தங்கை வந்தாள் .அவர்கள் வீட்டில் அதிகம் யாரிடமும் பேசாதவள் அவள் .அற்புதமாக படிப்பவள் .வந்ததர்க்கான காரணம் விசாரித்த போது ,  உடனே அழுதாள் .சில நிமிடம் அழுபடியே அவள் சொன்னாள், நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன் .அவர் வேறு மதம் .அதனால் எங்க வீட்டில் நீங்கதான் வந்து பேசனும் இல்லாட்டி நான் தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்றால் .. 
                     நான் என்ன செய்தேன் என்பதை உங்கள் யூகத்திர்க்கு விட்டு விடுகிறேன்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக