Follow by Email

வியாழன், 19 மார்ச், 2015

ஜன்னலோரப் பயணம் - +2 தேர்வு .
                        பள்ளிக் கூடச் சுவரைச் சுற்றி ப்ளீச்சிங் பவுடர் வெள்ளையாய் கொட்டிக் கிடந்தது. காம்பவுண்ட் வெளி சுவர் சுத்தமாக்கி வைத்து இருந்தார்கள் . பள்ளியின் இரண்டு பெரிய கதவுகளில்,  ஒன்று லேசாய் திறந்து இருக்க மெல்ல தள்ளினேன் ...

ஏய் யாருப்பா அது ?
சந்தேகமே இல்லை அது பள்ளிக் கூடத்தின் வாட்ச் மேன் பன்னீர் அண்ணனின் குரலேதான் .

குரல் வந்த திசையில் கதவை தள்ளிக் கொண்டே உள்ளே பார்த்தேன் .

ஏய் யாருப்பா சொல்ல , சொல்ல கதவை தள்ளறது உள்ள வரக் கூடாது பன்னண்டாம் வகுப்புப் பரிட்சை நடக்குது ஓடு , ஓடு என்று சொல்லிக் கொண்டே கிட்ட வந்து விட்டார் .
பன்னீர் அண்ணா ,நானும் அதுக்குத்தான் வந்து இருக்கேன் என்றேன் .


              இந்தச் சம்பவம் இதே மார்ச் மாதத்தில் 28 வருடத்திர்க்கு முன்னால் அங்கு அப்படித் தேர்வுக்குப் போய்ப் பள்ளியிலிருந்து விரட்டப் பட்டது நான்தான். அதுவும் +2 முதல் தேர்வு எழுத போன முதல் நாள் அன்று.இப்பவும் .இந்தச் சம்பவம் நினைத்தால் எனக்கு இன்றும் சிரிப்பையும் அதோடு ஒரு விநோதமான வலியையும் வரவழைக்கும்..


             பொதுவாக அரசு பள்ளிகளில் படித்த எங்கள் மாணவர்களுக்கு ஒரு மோசமான செண்டிமென்டல் உண்டு . நீங்கள் முதல் பெஞ்சில் உட்காருபவராகவோ,நல்லா ட்ரெஸ் பண்ணுபவராகவோ ,வகுப்பு லீடராய் இருந்தாலோ ,அல்லது பொது அறிவாய் பேசுபவனாகவோ ,எதர்க்கும் முன்னால் பாய்ந்து உரிமைக் குரல் கொடுப்பவனாக , அப்புறம் ஆசிரியர்களோடு சகஜமாகப் பேசுபவனாக , கவிதை கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்பவனாக இப்படி இன்னும் சில தகுதி பட்டியல்களின் கீழ் நீங்கள் வந்தால் நீங்கள் நல்லா படிப்பவர் என்று ( முட்டாள் தனமாய் ) நம்பும் மாணவ கூட்டத்தில் நானும் ஒருவன்தான் இதில் ஒரு வேடிக்கை அப்படி நல்லா படிப்பதாக அவர்கள் துரதிருஷ்டவசமாக நம்பியவர்களில் நானும் ஒருவன் .இதில் ஒன்று மட்டும் மிஸ்ஸிங் - நான் முதல் பெஞ்ச் ஆள் இல்லை நான்காவது பெஞ்ச் பையன் ( அவ்வளவுதான் எங்கள் வகுப்பில் இருந்தது ) சுமாருக்குக் கீழ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிப்பாளி நான் . ஆனால் பாஸ் பண்ணும் குருட்டு !தைரியம் இருந்தது .


                ’ப்யூர் சைன்ஸ்’ அதுவும் அரசு பள்ளியில் எடுத்துப் படிப்பவர்கள் நாங்கள் அல்லது அந்தப் பள்ளியில் 6 ஆம் வகுப்பிலிருந்து படித்தவர்களுக்குக் கிடைத்த தண்டனை என்று கூடச் சொல்லலாம் .எங்கள் பள்ளியில் அப்போது படித்த எல்லோரும் ’c’ (காமர்ஸ் ) குரூப் கேட்டால் பள்ளி நிர்வாகம் என்னதான் செய்யும் ? +1 க்கு c குரூப் எடுத்துக் கல்லூரியில் மனோதத்துவம் படிக்க ஆசைப்பட்ட என் அப்துல் கலாம் கனவில் பல லோடு லோடாய் ,கல்லும் மண்ணும் கொட்டியவர்கள் இந்த ப்யூர் சைன்ஸ் ஆசிர்யர்கள்தான். .அப்போது ஒருத்தர் கூட அந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கவில்லை.அவர்களே தலைமை ஆசிரியர் அறைக்கு வந்து கட்டாயமாக இதில் சேர்த்து விட்டார்கள் .அந்த ( அப் ) பாவிகளில் நானும் ஒருவன் !


                     இப்படிச் சேர்க்கப் பட்ட நான் என்ன பண்ண ? ட்யூசன் சேர்ந்தால் மட்டுமே பாஸ் பண்ண முடியும் என்ற எழுதப்பட்ட விதி ! ( இது பற்றி என்னுடைய மற்றொரு பதிவான ”உயிர் காற்றில்” - http://myowndebate.blogspot.in/2015/03/blog-post.html விரிவாகவே பேசி விட்டேன்.) இப்படி மாற்றி எழுதப்பட்ட விதிக்கு ஒரு முடிவு இருப்பது போல முதலாண்டு உருண்டோடி இரண்டாவது ஆண்டின் இறுதி தேர்வும் வந்து விட்டது .ஏற்கனவே நான் நல்லா படிப்பேன் என்று நம்பியவர்கள் பலர் என்னருகே உட்கார தவித்துக் கொண்டு இருப்பதைத் தவிர்க்க கடைசி நேரத்தில் போக வேண்டும் என்ற திட்டமே அன்று தாமதமாகத் தேர்வுக்கு .9.35 க்கு போனேன் .எல்லோரும் தேர்வு பயத்தில் ஹாலில் உட்கார்ந்து எல்லா மதக் கடவுளையும் வேண்டிக் கொண்டு இருந்த நேரம் !.உள்ளே போனவுடன் ஹால் சூப்பர்வைசர் ஒரு முறை முறைத்து நீயெல்லாம் எங்க ? என்பது போலப் பார்த்தவாறே, அனுமதித்தார் .


         உள்ளே போனவுடன் என் இடத்தை அதுதான் கிருஷ்ணா உன் இடம் என்று காட்டிய இடத்தைப் பார்த்தேன் .இன்னும் சொல்லப்போனால் அந்த அறையில் என் இடம் மட்டுமே காலியாக இருந்து .நான் மட்டும்தானே லேட் .ஆனால் அவர்கள் காட்டிய இடம் இருக்கே அ அங்குதான் என் விதி தலைவிரித்துப் போட்டு ஜங்கு ஜங்கென்று குதித்து ஆடியது .


             ஆமாம் எப்படியாவது பாஸ் பண்ண வேண்டும் என்ற ’பிட்’ அடிக்கும் பேராண்மை மக்கள் விரும்பும் ஒரே இடம் ஜன்னலோர பென்ஞ் அதிலும் கடைசிப் பென்ஞ். நான் யாரயும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை . என் தேர்வு எண்ணை சரி பார்த்து உட்காந்தவுடன் நான் செய்த முதல் வேலை, உட்காரும் பெஞ்சுக்கடியில் மற்றும் எழுதும் டெஸ்க் உள்ளே எதாவது பிட் இருக்கான்னு செக் செய்யத் தொடங்க . இருந்தது .பின்னால் பெஞ்சிலிருந்து ஸ்,ஸ் என்று அழுத்தமான சத்தம் வந்தது அனேகமாக அதை வைத்தவனாக இருக்கலாம் ! நான் நிமிர்ந்தே பார்க்கவில்லை ஜன்னல் வழியாக வீசி எறிந்தேன் .இதை எப்படியோ ஹால் சூப்பர்வைசர் கவனித்து விரைந்து வந்து என்ன ? என்றார் எதோ பேப்பர் என்று சமாளித்தேன் .அதை அவர் நம்பவில்லை என்பது அதர்க்கு அப்புறம் பல தடவை என் மேல் இருந்து கொண்டே இருந்தது மூலம் நிரூபித்தார் .ஜாமெண்ட்ரி பாக்ஸில் பென்சில் எடுத்தாக் கூட நோட்டம் விட்டு அருகில் வரத் தொடங்கினார் .நானும் அதைத்தான் விரும்பினேன் சில சமயம் சந்தேகம் வந்து பார்த்துட்டு போய் விட்டால் அப்புறம் கேஸ் கிடைக்காத மாதக் கடைசி ட்ராஃபிக் போலிஸ் மாதிரி ஆகி விடுவார் நான் என்ன செய்தாலும் சந்தேகம் வராதல்லவா அதைப் பயன் படுத்தி நம் நண்பர்களுக்குப் பேப்பர் பாஸ் செய்து உதவலாம் என்பது என் எண்ணம் .அதுவும் நடந்தது. வந்து பார்த்தார் .நினைத்த மாதிரி எழுதி முடிக்கும் முன்னே பேப்பரை கேட்க தொடங்கி விட்டார்கள் .கொடுத்த பின் யாரிடம் மெயின் சீட் இருக்கு என்பதைக் கண்டு பிடிப்பதே பெரிய விசயம் ஆயிற்று .இது தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடத் தேர்வுக்கு நடந்த கூத்துக்கள்


                        அடுத்தச் சில நாளில் வேறு சில திட்டமிடல் அங்கு நடந்து கொண்டு இருந்தது எனக்குத் தெரியவில்லை .யார் கொடுத்த சிறப்புத் திட்டமோ தெரியவில்லை ஒவ்வொருவரும் கையில் முடிந்த அளவுக்குக் காசு கொண்டு வந்து தினமும் சூப்பர்வைசருக்கு கொடுத்து விலைக்கு (வருபவர்களை) வாங்க நினைத்து இருக்கிறார்கள் .அந்தத் திட்டம் முதல் நாள் நடந்து இருக்கிறது இதர்க்குத் தலைமை, ஒரு தோல் சாப் ஓனர் பையன் .இதர்க்கு யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை .சில ஆசிரியர்கள் மனசாட்சிப் படி வாங்கவில்லை ஆனால் பேப்பர் மாற்றி எழுத அனுமதித்தார்கள் .அவர்கள் திண்டுக்கல்லில் மிகப் பிரபலமான தனியார் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்கு எங்கள் பள்ளி மற்றும் படிப்பின் தரம் பற்றித் தெரியுமாதலால் அப்படி ஒருவேளை அனுமதித்து இருக்கலாம் ! ஆனால் ஆண்டவனையே சோதிக்கும் காலம் என்ற ஆயுதம் ஒரு நாள் வந்ததது.


                   குறுக்கு வழியை நம்பி, யாரும் படிப்பதை குறைத்து விட்டார்கள் போல ! அன்று தாவரவியல் தேர்வு . பலரும் கொண்டு வந்த பிட் வெளியே கிடக்கும் நோட்ஸ் எப்போது எடுக்கலாம என்று திட்டமிட்டுக் கொண்டு விழிகளை உருட்டி கொண்டு இருக்க , வெளியே நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது .ஹால் சூப்பர் வைசரிடம் யாரோ குடைபிடித்துக் கொண்டு வந்து சத்தமில்லாமல் ஏதோ சொல்ல அவர் முகம் மாறிய படி உள்ளே வந்தவர் ,
ஏம்ப்பா பறக்கும் படை வந்துருச்சு எதையும் வைத்து இருக்காதீங்க அப்புறம் நான் பொறுப்பில்லை என்றார் .

               என்னைக் கடந்து ஜன்னல் வழியாகப் பிட் குவியல்கள் சில நிமிடம் வீசப்பட்டுக் கொண்டே இருந்தது .வெளியே மழையில் நனைந்து விட்டால் மீண்டும் எழுத முடியாது ஆனால் வரும் பறக்கும் படை கையில் சிக்கினாலோ ( அப்போது ) மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது.அதனால் அவசர அவசரமாக அங்கு வீசப்பட்ட சுருட்டல்கள் ஜன்னல் கம்பியில் பட்டு விபத்துக் குள்ளாகி எனக் காலடியில் விழ, நானும் ஹால் சூப்பர்வைசரும் எடுத்து வெளியே போட்டோம் .


            ஆனால் வந்த பறக்கும் படையில் ஐந்து பேரில் மூவர் தேர்வு அறைக்குள்ளும் மீதி இருவர் குடையைப் பிடித்துக் கொண்டு ஜன்னல் பக்கம் வந்ததைப் பார்த்தேன் .நனைந்த நிலையில் ,பேப்பர் சுருட்டல்கள் , சில முழு ’நோட்ஸ்கள்’ கூட அவர்கள் உள்ளே வரும்போது இருந்தது .பெரும் பகுதி என் ஜன்னலோர வழியாக வீசப்பட்ட பந்து வீச்சுக்கள் கடைசியாக .வந்த இருவரும் உள்ளே நுழைந்தவுடன் நேரே என்னருகே வந்தார் ஒருவர் என் எழுதிய பேப்பரை எடுத்துச் சோதிக்கத் தொடங்க இன்னொருவர் என் பாக்கெட் பென்சில் ரப்பர் பாக்ஸ் வரை சல்லடை போட்டார் எதுவுமே கிடைக்காத சலிப்பில் ஃபேண்ட்டை அவிழ்க்கச் சொல்லி ஜட்டியின் எல்லாஸ்டிக்கை என் ஸ்கேல் மூலமே சோதித்தார் மொத்த தேர்வு அறையின் கண்களின் பார்வையுமே என் மேல் அவர்கள் நடத்தி கொண்டு இருந்த ஆக்கிரமிப்பு மேல் இருந்தது .பேப்பரை கையில் வைத்து இருந்தவர் இதெல்லாம் யார் வீசியது என்று கேட்டார் .தெரியாது என்றேன் .அப்புறம் எப்படி உனக்கு அருகில் கிடக்குது என்றார் மீண்டும் .பதில் பேசாமல் அவரை வெறுமெனப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.உட்காரச் சொன்னார் .


                 வந்தவர்கள் கடமை செய்தாலும் எனக்குப் படித்த கொஞ்சமும் ஞாபகத்துக்கு வராமல் மறை கழண்ட நட்டு போலச் சுற்றிக் கொண்டே இருந்தது அடுத்து எழுத முடியவில்லை.வேறு சிலரை ஓர் ஒப்பனைக்காகச் சோதித்து விட்டு , இப்ப கூடச் சொல்றோம் யாராவது எதாவது வைத்து இருந்தால் கொடுத்து விடுங்கள் என்று அறை முழுதும் சுற்றிப் பார்த்தார்கள்.அப்போது ஒரு மாபெரும் தவறை ஒருவன் பண்ணினான் .தான் ஒளித்து வைத்து இருந்த முழு நோட்ஸை எடுத்துக் கொண்டு நின்றான் இத்தனைக்கும் அவன் டெஸ்க் பென்ஞ் ஏற்கனவே சோதிக்கப்பட்டு இருந்தது ,அப்போது எதுவும் கைப்பற்றப் படவில்லை .அவனிடமிருந்து அதைக் கைப்பற்றிக் கொண்டு விட்டுவிடுவேன் என்று சொல்லியவர்கள் வெளியே அழைத்துக் சென்று, தலைமையாசிரியர் அறைக்குப் படியேறியதைப் பார்த்தோம் ஒருவேளை முழு நோட்ஸ் வைத்து இருந்தது அவர்கள் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் ! .அடுத்த இரண்டு தேர்வுக்கும் அவன் வரவேயில்லை ( அல்லது அனுமதிக்கப் படவேயில்லை போல) தேர்வு எழுதிய 38 பேரில் எட்டு பேர் மட்டுமே பாஸ் .


                  அந்த தேர்வில் தோற்றுப் போனவர்கள் பலரின் வாழ்க்கைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை .தந்தை தொழில் அல்லது , ஊருக்குள்ளே எதாவது ஒரு தொழில் என்று காணாமல் போயிருப்பார்கள்  .அவர்களில் 90 சதவிகிதம் கிராமத்தை சார்ந்தவர்கள்  என்பது இன்னொரு விசயம் .இந்தப் பள்ளியில் படித்த ரமணர் திருவண்ணாமலை போனது போல ஒருவேளை எல்லோரும் இமயமலைப் பக்கம் போய் விட்டார்களா என்பதுவும் தெரியவில்லை.ஆனால் அங்குப் படித்துச் சுயமாய் முன்னேறியவர்கள் வெகு சிலரே ! ஒரு பள்ளி சரி இல்லையென்றால் பல சிறைச்சாலைகள் திறக்க வேண்டி வரும் என்பதை இப்போது உணர்கிறேன் .வசதி இல்லையென்ற ஒரே குற்றத்திர்க்காகக் கல்வி மறுக்கப் பட்டு தகுதியெனும் முகவரியை ஏற்பபடுத்திக் கொள்ளப் பல ஆண்டுகள் ஆனது
.

           இன்றும் பயணம் பண்ணும் போது பஸ்ஸில் காரில் ஏன் ரெயிலில் கூட எல்லோரும் விரும்பும் ஜன்னலோரப் பயண இருக்கை எனக்கு மட்டும் ஏனோ பிடிப்பதில்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக