சனி, 14 மார்ச், 2015

எழுத்தாளன் – ஆழ்ந்த நீரோடை


ஒருமுறை, திரு.என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் திரு.கல்கியிடம், “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை. எப்படி எழுதுவது?” எனக் கேட்டார்.
“அதற்கு, நான்கு மை வேண்டும்.” என்றார் கல்கி.

“ஒ அப்படியா…? சரி எந்தெந்த நிறத்தில் மை வாங்க வேண்டும்”என்றார் என்.எஸ்.கே.

“திறமை, தனிமை, பொறுமை, இவற்றுடன் பேனா மை” என்றார் கல்கி.
இதைகேட்ட என்.எஸ்.கே., “அருமை அருமை” என்றார்.

     சமீபத்தில் ,எனக்குள் எழுத்தாளன் பற்றி ஒரு வித கரிசனம் அல்லது
அக்கறை பூத்தது .எப்போதும் பாய்ந்து கொண்டு இருக்கும் நதி போல் இல்லாமல் இன்றைய பல எழுத்தாளார்கள் ஏதோ ஒரு பணியில் இருந்து கொண்டு மிகச் சாதரண நிகழ்வுகளுடன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொண்டு ஆனாலும் தனக்குள் நிகழும் விசாரணகளை அனுமதித்துக் கொண்டும் புற விசயங்களுடன் தன் தொடர்புகளை நிச்சயபடுத்திக் கொண்டும் பூமி பந்தின் மேல் புற பகுதிக்குள் பல் வேறு திசைகளில் பிரிந்து பரவும் நீரோடையெனெ ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் …
         
    எனக்கு இங்கு எப்படி ஓர் எழுத்தாளன் ஆகத் தகுதி வேண்டும் அல்லது எழுத்து எத்தனை யுக்தியாக எழுதப்படுகிறது பற்றிக் கட்டாயமாக இங்குப் பேச வரவில்லை அதெல்லாம் எனக்கும் தெரியாது .ஆனால் எழுத்தாளான் சக மனிதனாக நடந்து போகும்போது, பஸ்ஸில் பிராயணம் பண்ணும் போது,நீங்கள் வழக்கமாகப் பொருள் வாங்கும் கடையில் உங்கள் எதிரில் வந்து போகும் மிகச்சாதரண மனிதனா மட்டுமே தெரிகிறான் ஆனால் அங்கு அவனுக்குள் உணரும் ஒரு விசயத்தின் பரிணாமம் வேறு !   நம்மில் சில பேர் காட்டாறு போலச் சந்திக்கும் விசயங்களை அப்படியே எடுத்து ஆவேசமாய் நம் சக்திக்கு தகுந்தவாறு ஏதோ ஒரு தொலைவில் வீசி எறிந்து விடுகிறோம் .மறக்க நினைக்கிறோம்

                 ஆனால் எழுத்தாளன் எங்கோ நுகர்ந்த சந்தன மணத்தையும்
,சாக்கடை வீச்சத்தையும் ,சரிந்த கூந்தலையும் ,சந்திக்கும் பெண் பார்வையையும் ,சிரிக்கும் குழந்தையின் கன்னக் குழியையும் ,தவறி போய் மாட்டிகொண்டதையும் தானே தேடி கொண்ட சிக்கலையும் நல்ல மனிதர்களின் கெட்ட செய்கையையும் கெட்ட மனிதர்களின் நல்ல குணத்தையும் இனம் பிரித்து மனதின் மூன்றடுக்குகளுக்குள் அடுக்கி வைத்து தனது உணர்வில் தோய்த்து இடம் பார்த்து பொருத்துகிறான்.எங்கோ ஒரு முகத்தின் அழகை இன்னொரு குணத்துக்குப் பொருத்தி தன் உணர்வு மொழியை அங்கு அந்தப் பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் பேச
நினைக்கிறான் .ஆனால் அதெல்லாம்  இவனுக்குள் திட்டமிட்டு நடப்பதில்லை .ஒரு பூவின் மொட்டு விரிவது போலத் தானே சில இயற்கை அதீத உணர்வுகளுடன் எற்படும் கண உரசலில் நிகழ்கிறது இன்னும்
சொல்லப்போனால் இந்த உரசலின் விளைவு எல்லோருக்குள்ளும் தீராத காற்றின் சுவாசம் போல உணரப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.அதை ஓர் எழுத்தாளன் தனது மூன்றடுக்குள் விதைத்து வைக்கிறார்கள். நாம் நமது மூன்றடுக்குள் புதைத்து வைக்கிறோம் எடுத்து பார்ப்பதர்க்குள் சில சமயம் நம் வாழ்க்கை சக்கரம் இந்தப் பக்கம் ஓட பெட்ரோல் இருந்தும் ஓடாத வண்டி போல இயங்க மறுக்கிறது ஆனால் இப்படிப் புதைத்து வைத்த வெளியில் கண்ணுக்கு தெரியாத பெரிய பல கோடி பிரகாசமான நட்சத்திரங்களைப் போலப் பல எழுத்தாளார்கள் இங்கு இன்னும் எழுத்து மேடைக்கு வந்து அரங்கேறாமல் பின்னுக்கு நடமாடிக்கொண்டு இருப்பது என்பது வேறு விசயம் .சரி நாம் இங்கு எழுத்தை ஆள்பவனைப் பற்றித்தானே இங்குப் பேசிக்கொண்டு இருக்கிறோம் .
           
  ஒரு முறை திண்டுக்கல் பாரதி பிரிண்டர்ஸ் திறந்து வைக்கக் கவிஞர் வைர முத்துவும் ,என் ஆதர்ச எழுத்து ஆசான் பால குமாரனும் வந்து இருந்தார்கள் நான் அந்த எழுத்தாளரின் தீவிர வாசிப்பாளி என்பதால் அவரைப் பார்த்துக் கைக் குழுக்க மிகப் பிரயர்த்தனப்பட்டு நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள் இதோ இன்னும் சில நிமிடங்களில் மேடையின் பின் புறம் வழியாக யாரோ என்னைப் பால குமாரனிடம் அழைத்துச் சென்று என்னை இவர்தான் உங்கள் தீவிர ரசிகர் எனச் சொல்ல போகிறார்கள்.ஆனால் அது நிகழ வேண்டாம் என்று நான் முடிவெடுத்தான் .அதைச் சொன்ன போது நண்பர்கள் கிறுக்கனாய் என்னைப் பார்த்தார்கள் .எனக்கும் பால குமாரனுக்கும் இடயில் ஓடிக்கொண்டு இருக்கும் அற்புத எழுத்துணர்வு புரிதலின் நீண்ட உறவு இந்தக் கைக் குலுக்கலில் எதுவும் செய்யப் போவதில்லை என இதன் மூலம் ஒரு அலங்கோலம் மட்டுமே அரங்கேறும் எனபதான என் உள்ளுணர்வின் அவசர மறுதலிப்பை ஏற்றுக்கொண்டேன் அப்படிச் சந்திக்காததாலோ என்னவோ இன்னும் என்றென்றும் பாலாகுமாரன் என்று அவர் எனக்கு எழுதிய கடிதம் போல அவர் மேலுள்ள மதிப்பும் பத்திரமாய் அச்சு அசலாக இருக்கிறார் என்று தோன்றுகிறது !

                 அதனால் ஓர் எழுத்தாளனிடம் வெளியில் தெரியும் யோக்கிதை
என்பது எதுவுமில்லை என்பதாக எனக்குப் படுகிறது .உள்ளே நிகழும்
இடியையும் ,மழையையும் ,புயலையும் தென்றலையும் தேவைப்பட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் ஓர் தோட்டாத்தரணி வேலை எழுத்தாளனுடையது .நாம் பார்க்கும் குடும்ப டாக்டர் போல எப்போதும் அவன் ஸ்டெத்தாஸ் கோப்போடு திரிய வேண்டும் என்பது அவனுக்குக் கிடைத்த சாபமும் அல்ல கிடைக்காத வரமும் அல்ல .

              எனது நண்பர்களில் ஒருவரான அனந்த கிருஷ்ணன் அப்போதுதான்
பாலகுமாரனை படிக்க ஆரம்பித்து இருந்தார் .பாண்டிச்சேரிக்கு ஒரு நண்பரை பார்க்க போன போது எதேச்சையாக அங்குச் சண்டே பஜார் பழைய புத்தகம் விற்கும் பகுதியில் பாலகுமாரன் புத்தகம் இருக்கிறதா என்று அதை அங்கு விற்பனையாளாரிடம் கேட்டுக் இருக்கிறார்.அவர் சில புத்தகம் எடுத்து கொடுத்து விட்டு இப்போதான் இங்கு வந்திட்டு அங்க பாருங்க அந்தக் கடையில் நிற்கிறார் என்று சில கடைத் தள்ளி நின்று கொண்டு இருந்த பால குமாரனைக் காட்ட, என் நண்பர் தெறித்து ஓடி வந்து திண்டுக்கல்லில்தான் நின்றார் . அதர்க்கு நண்பர் சொன்ன அவர் சொன்ன காரணம் இன்னும் தெறிக்க வைத்தது .

   ஏம்ப்பா அவரை நான் பார்க்க அவர் என்னுடைய எந்தப் புத்தகம் படித்து இருக்கீங்கன்னு கேட்டா எதைச் சொல்வது என்று அவசரமாகச் சொன்னார் .ஓர் எழுத்தாளன் சந்திக்கபட வேண்டியவனா என்பதில் எனக்குக் கருத்து இருந்தாலும் ஓடி வருவதை விட அங்கு நின்று , நண்பர் பாலகுமாரனை எப்படி இருக்கிறார் என்று ரசித்து இருக்கலாம் .ஆனால் நண்பர் அதோடு விடவில்லை.சில புத்தகங்கள் படித்த பிறகு சென்னைக்குப் போகும்போது பாலகுமாரனை நேரில் வீட்டுக்குப் போய்ப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கியதாகச் சொன்னார் .ஒருவேளை நண்பர் அனந்த கிருஷ்ணனனுக்கு எழுத்தாளர் ஆகும் ஆசை இருந்ததா என்னவோ ?

         “ தனக்கும் சமூகத்துக்குமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவன் எழுத்தாளன். அதே சமயம் அவனது நோக்கம் அனுபவங்களைப் பகிர்ந்து

கொள்வதான புரிதலுடன் மட்டுமே இருக்க வேண்டும். பகிர்தல் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இல்லேன்னா எதையும் எழுத வேண்டிய அவசியமே இல்லை. சமூக ப்ரதிபலிப்புகளையும் அனுபவங்களையும் நன்றாகப் பகிர்ந்து கொள்பவன் நல்ல எழுத்தாளன். நன்றாகப் பகிர்ந்துகொள்ள இயலாதவன் நல்ல எழுத்தாளன் அல்ல ”.
-- அசோகமித்திரன். (அப்பணசாமிக்கு அளித்த நேர்காணல், காலம் பத்ரிக்கை. )
ஆனால் இன்றைய மிகப் பலர் இந்த எண்ணங்களுடன்தான் எழுத வருகிறார்கள் .அப்புறம் மெல்ல ஏதோ ஒரு கட்சி , ஓர் இயக்கம் என்ற ஏதோ ஒன்றை தொற்றிக்கொண்டு வாழ்வில் பிழைக்கு வரவேற்பு கொடுக்கப் போகின்றனர் . அவர்களின் அற்புதமான எழுத்தை ஆளும் திறம் மங்கி ஏதாவது ஒரு சில மேடைகளை நிரப்பிக்கொண்டு பிற்பாடு வருந்துகிறார்கள். கட்சிக்கு கொடி பிடிக்கப் போன பல எழுத்தாளர்கள் வர வர மாமியா கழுதை போன கதைதான் இங்கு மிஞ்சி இருக்கிறது .
         


சில பேர் சமூகமாவது ஒன்றாவது எனக்குள் சில ரகசியங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அதை மொழி பெயர்கிறேன் .அதனால் நான் எனக்குள் ஒருவகை சமாதானத்தைப் பெறுகிறேன்.என்று சொல்கிறார்கள் இதனால் பல இலக்கியங்கள் பிறந்துள்ளன.




”உங்களுக்காக அல்ல. எனக்காகவும் அல்ல. எழுதுகிறேன் -- அவ்வளவே ! இங்கே 'நான்' என்பது நான் அல்ல. அது எழுதப்படுவதைப் பொறுத்தது. 'நான்' நீங்களாகக் கூட இருக்கலாம். அல்லது அவளாக அல்லது அவனாக.. இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் கற்பனை சார்ந்தவை. எவருடனும் எதனுடனும் ஒப்பிடும்படியாக இருப்பின் அது தற்செயலான நிகழ்வே. என் எழுத்துக்களைக் கொண்டு என்னை மதிப்பிட முயலாதீர்கள். அவை பெரும்பாலும் உங்களைத் தவறான கண்ணோட்டத்தில் நிறுத்த கூடும்”. இங்கு எழுத்தாளர் Paul Arockiam அப்படித்தான் சொல்கிறார்


             என் நண்பர் ஓரு எழுத்தாளர் ,ஒரு சமயம் நண்பர் ஒருவர் தன்னுடைய

தவறான பெண் உறவு சம்பந்தமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தது முதல் அங்கு நடந்தது வரை விலாவாரியாக அவர்கள் வீட்டு நாய் வரை சாதனையாகச் சொல்லிக் கொண்டு இருந்தார் .நாங்கள் மிகச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டும் இருந்தோம். ,ஆனால் அவர் சொல்லிக் கொண்டு இருந்த போது இடைமறித்து யாராவது வந்தால் எப்படித் தப்பி ஒடி வருவீர்கள் என்று கேட்டார் ? சொல்லிக்கொண்டு இருந்தவருக்கு இவர் எழுதுபவர் என்பது தெரியும் இருந்தாலும் கோபித்துக் கொண்டார் ஒருவேளை அந்தக் கேள்வி பயமுறுத்தி இருக்கலாம் அல்லது ஒருவேளை அவர் சொன்னது பொய்யாகவும் இருந்து இருக்கலாம் .எப்படியோ அன்று எங்களுக்குக் கிடைக்க இருந்த ஒரு கற்பனை சந்தோசம் போச்சு .அவர் பாதியிலேயே நிறுத்தி விட்டார் . சுஜாதா கடைசி வரை மறைத்த மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக்கை தவற விட்ட அதே ஆர்வத்தில் மீண்டும் ஒரு முறை சந்தித்த போது கேட்டேன்.அவர் தவறு செய்யப் போன சரியான வீட்டுக்குப் பின் கதவு இல்லையென்றார் .நான் கேட்க வந்தது அதல்ல என்பதை எப்படிச் சொல்வது? விட்டு விட்டேன் .

             என்னதான் உங்களோடு சுற்றிக் கொண்டு இருந்தாலும் எழுதுபவன் ஒரு தனி வலியோடு அதுவும் (எழுதும் வலியோடு) அலைகிறான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் அவனுக்கு அங்கீகாரம் கொடுப்பதே அந்த எழுத்துக்கு தரும் மரியாதை. உங்களில் ஒருவன்

யாராவது இருந்தால் அவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் இணைய
வாய்ப்புகளை சொல்லுங்கள் ..
                   
சமீபத்தில் கூட எனக்கு உயிர்மை நடத்தும் வலைப்பூக்கான ’சுஜாதா அவார்டு’ போட்டிக்கு தயக்கத்துடன் அனுப்பிவைத்தேன் . நானும் இந்த போட்டிக்கு பத்து பதிவுகள் அனுப்பி இருக்கிறேன். அதற்காகவாவது ஒரு அழைப்பிதல் அனுப்பி வையுங்கள்  கடைசி வரிசையில்  நிற்க ஒரு இடம் கொடுங்கள் என்ற  விண்ணப்ப ஆசைதான் !.
என்னவோ தெரியவில்லை இந்த பதிவை முடியாத பயணம் போல நிறுத்துகிறேன் .எழுத்து என்றுதான் ஓய்ந்து இருக்கிறது  ?

2 கருத்துகள்:

  1. இன்று தான் பார்த்தேன் படித்தேன். நெகிழ்ச்சியாக உணர்கின்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணி புரிந்து கொண்டே ஏதாவது இங்கு செய்ய வேண்டும் என நினைக்கும் உங்களைப் போல பலரின் ‘வலி ‘ களை வாங்கி கொள்ள முடியாத போது இந்த சமர்பணங்களே உங்களை போன்றவர்களை சந்தோசப்படுத்தாவிட்டாலும் தளரமல் பார்த்துக் கொள்ளும் என் சிறு முயற்சி .

      நீக்கு