Follow by Email

வெள்ளி, 31 ஜூலை, 2015

மகாத்மா அப்துல் கலாம் .ஒரு நிறைவான மனிதர் நேர்மையான தனது வாழ்வைப் பூர்த்தி செய்துள்ளார்.ஒரு மனிதன் தன் வாழ்வுக்குப் பிறகு பேசப்படுவதில்தான் அவர் அருமை புரியும் .மக்களுக்குப் புரிந்து இருக்கிறது .அதனால்தான் திரும்பிய பக்கமெல்லாம் அஞ்சலி வரிகள் .அந்த மாமனிதரின் மரணத்தின் வலிகளைப் புரிந்த வாசகங்கள் ஆனால் சோகமாக இல்லை உங்கள் கனவுகளை மெய்பிக்கிறோம் என்ற வாக்குறுதிகள் .ஒரு மனிதன் மரணம் விதைக்கப்பட்டுள்ளது .அதன் பலனை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா 2020 மூலம் அனுபவிக்கும்.
இங்கு , திருப்பூரில் ஏற்றுமதியாளர் சங்கம் (TEA) மற்றும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பல அமைப்புகள் மூலம் மௌன அஞ்சலி ஊர்வலம் மாலை 4.30 மணிக்கு ஜெய்வாபாய் பள்ளியிலிருந்து துவங்கி சிக்கண்ணா கல்லூரியில் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .எங்கள் அலுவலத்திலிருந்து நான்கு பேர் கலந்து கொண்டோம் .அவசர அவசரமாகப் பிற்பகல் 3.15 க்கெல்லாம் பேருந்துக்காகக் கூட காத்து இருக்காமல் போனால் 100 பேர் கூட இல்லை .ஆனால் 4.20 க்கு ஆயிரக்கணக்கோர் கூடி விட்டனர் .ஆட்சித்தலைவர் கமிசனர் , துணைக்கமிசனர் ,அரசு சார்பில் கலந்து கொண்டனர்.அதனாலேயே என்னவோ Mine-Resistant Ambush Protected கூட்டத்தைக் கலைக்க உதவும் காவல் துறையின் மிக விலையுள்ள வாகனம் பயமுறுத்தியது. மூன்று பேர் கொண்ட வரிசையாய் தொடங்கும் முன் நிற்கச் சொன்னார்கள் .ஊர்வலம் முடியும் வரை யாரும் மூன்றுக்குள் வரவில்லை நானும் மற்ற இரண்டு பேரை சேர்க்கப் போனால் வெள்ளையாய் ஓவர் கோட் அணிந்த ,மருத்துவ சங்கத்தை சேர்ந்தவர்கள் .ஒரு வித தயக்கத்தோடு அவர்களோடு சேர்ந்து கொண்டேன் . சிக்கண்ணா கல்லூரிக்குள் மிகப் பெரிய மேடை ஏற்பாடு செய்து இருந்தார்கள் .எல்லோரும் வரிசையாய் நீண்ட மலைப்பாம்பைப் போல உள்ளே போய் நிறைந்தோம் .அங்குள்ள மைதானத்தில் நிற்பதர்க்கு கோடுகள் கூட போட்டு இருந்தார்கள் .மக்கள் மனதில் கலாமை மனதில் வைத்து இருப்பதால் மிக வரிசையாகவும், அமைதியும் காத்தனர் .

மேடை முழுதும் கலாம் அஞ்சலி படங்கள் .இங்கு ஒரு வித்தியாசமான அஞ்சலி நடந்தது.இரண்டு பிரமாணர்கள் சாந்தி பண்ணும் மந்திரம் சொல்லியும் அடுத்து கிறிஸ்துவ மதச் சார்பில் வசனங்களும் ,முடிவில் இஸ்லாமைச் சேர்ந்த ஒருவராலும் அந்த ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் .ஆனால் அவர் இந்த மூன்று மதங்களில் முடிந்து விடவில்லை அதற்கு அப்பால் பல நாடுகளின் மக்களின் மனங்களில் விதைகளாய் வாழ்கிறார் .அமெரிக்காவின் இரும்பு கோட்டையிலே கூட அவர்கள் தேசியக் கொடியை பாதிக்கம்பத்துக்கு இறக்கி வணங்கச் செய்து விட்டாரே !

முதலில் பேசிய ஏற்றுமதியாளர் சங்கத்தின் திரு .சக்திவேல் பேசும்போது நமது தேசப்பிதா காந்தியைப் போல அவரும் ஒரு மஹாத்மா .எனவே இன்றிலிருந்து ,இங்கிருந்து மகாத்மா அப்துல் கலாம் என்று அன்போடு அழைக்கப்படுவார் என்றார்.அடுத்து திருப்பூருக்கு கலாமை அழைத்து வந்த பெருமைக்குரிய அகில் எஸ்.ரத்தினசாமி அவர்கள் பேசும்போது கலாமின் நினைவில் கலங்கி பேச்சைத் தொடர முடியாமல் பேச்சை நிறுத்தினார் .மேலும் சிலர் பேசி முடித்த பின் உறுதி மொழி வாசிப்பட்டது .முடிவில் கலாமின் கனவுகளில் ஒன்றான மரம் வளர்ப்புத் திட்டத்தினை நனவாக்க ராம் ராஜ் காட்டன் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .அங்கிருந்து வீட்டுக்கு பேருந்து ஏறும் மனம் கூட இல்லாமல் நடந்து வந்து கொண்டு இருந்தபோது கூடவே நடந்து வந்து கொண்டு இருந்த ஒரு அறுபது வயதுக்கு மேற்பட்டவர் தானாகவே என்னிடம் மெல்ல கலாமின் நினைவாகப் பேசி ஆரம்பித்தார் .என்ன மனுசன் சார் ? வாழ்ந்தா இப்படிப் பேசும்படியாக வாழனும் சார் .பேச்சோடு பேச்சாக வி.வி.கிரி இதே பதவி முடியும்போது அள்ளிக்கொண்டு போனதையும் இதற்கு முன்னிருந்த பிரதீப பாட்டில் வண்டிக்கு பெட்ரோல் கேட்டுக் கொண்டு இருப்பதையும் நொந்து கொண்டார் இது நம் சினிமா கலாச்சாரத்தின் விளைவா தெரியவில்லை ஒருவரை நல்லவரென்று சொல்ல இன்னொரு கெட்டவரை உதாரணப்படுத்திக் கொள்கிறோமோ ? எங்களோடு இன்னும் ஒருவர் சேந்து கொண்டார் .அவர் இனி இப்படி ஒரு சிறப்பு யாருக்கும் இருக்காது என்று ஆதங்கப்பட்டார் . நாம் எப்போதுமே யாராவது நல்லவராக்கட்டும் என்றூ மட்டும்தான் யோசித்துப் பழகி விட்டோம் நாமும் அதற்குத் தகுதி என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பயம் விடாது துரத்திக் கொண்டேதானே இருக்கிறது என்ன செய்ய ?

அவர்கள் கூட என்னவோ பரவாயில்லை இங்கு .அவர் புதைக்கபடும் முன்னே எத்தனை விமர்சனங்கள் ? பேச்சு உரிமை இருக்கிறது என்ற ஆவேசத்தில் ஒரு பக்கம் மெத்தப் படித்தவர்கள் மரணதிற்கான  அடிப்படை அஞ்சலி கூடத் தெரியாமல் விமர்சிப்பதுவும் பேசுவதுவும் அதை எந்த வித கூச்சமும் இல்லாமல் ரேட்டிங் எகிறலுக்காக சில மீடியாக்கள் ஹைலைட் பண்ணுவதுவும் எப்போது மாறுமோ தெரியவில்லை. பாகிஸ்தான் அணு வி்ஞ்ஞானி அப்துல் காதர் கான் அப்துல் கலாம் ஒன்றும் மாபெரும் விஞ்ஞானி கிடையாது என்றூம் அவர் எல்லா விஞ்ஞானிகளையும் போல சாதாரண விஞ்ஞானிதான் என்று கூறியிருக்கிறார்.இதைச் சொன்ன இவரை வைத்துதான்  பாகிஸ்தான்  அணு ஆயுதச் சோதனையையும் நடத்தியது. இதே கானை தேசதுரோகம் செய்து விட்டார், நாட்டின் அணு ஆயுத ரகசியங்களை விற்று விட்டார் என்று கூறி பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலிலும் வைத்தது.அப்படி எதுவும் அரசாலோ நாட்டு மக்களாலோ எந்த குற்றமும் அற்ற அவரை விமர்சிக்கும் முன் அதுவும் அவர் உடல் அடக்கம் செய்யும் முன் பேசுவது எவ்வளவு மனிதாபினம் உள்ள செயல் ?

 தன் வாழ்வின் திருப்தி என்று கலாம் நினவு கூறும் போது ,பொக்ரானில் அணு குண்டு சோதனையையோ அக்னி ஏவுகணை பற்றியோ சொல்லவில்லை.  அதற்கு பயன்படுத்தப்படும் காம்போசிட் மெட்டீரியல்களை ரீ சைக்கிள் செய்து இந்த கேலிப்பர்களுக்குத் தேவையான மெட்டீரியல்களைத் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் செயற்கை கால் நான்கு கிலோ எடையில் தயாரிப்பதை 400 கிராம் அளவுக்கு எடை குறைக்கும் யுக்தியை கண்டுபிடித்ததும் ,  அதை அணிந்து கொண்ட குழந்தைகள் நடப்பது மட்டும் அல்லாமல் வேகமாக ஓடினர். இதனைப் பார்த்த அவர்களது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடிக்க, அப்போது கலாம் பெரிய திருப்தி என்கிறார் என்பதை நினத்துப் பாருங்கள்

அது மட்டுமா இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் இப்போது இரத்த குழாய்களுக்கு ஒரு ஸ்பிரிங்கை வைத்து குழாயை பெரிதாக்குகிறார்கள். அதை ஸ்டென்ட் என்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் இந்த ஸ்டென்ட் விலை அதிகமாக இருந்தது.  1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இந்த ஸ்டென்டுக்கு அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது.இதே போல கால் மூட்டு அறுவை சிகிட்சையின் போது பயன்படுகிற ஸ்டீல் பிளேட்டுக்களுக்கு மாற்றாக சிரமங்கள் குறைந்த புதிய வகை பிளேட் ஒன்றையும் கலாம் கண்டு பிடித்தார்.அது ஒன்று போதும் .அப்படி ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் அபிப்ராய பேதம் கொண்டால் மக்கள் உங்களை மன ஊனம் கொண்டதாக நினைத்து விடும் அபாயம் உண்டு .சுதாரித்துக் கொள்ளுங்கள் .பிரபலங்களை தாக்கிப் பேசி பெயர் வாங்கிக் கொள்வது அரசியல் சாத்தியமாக இருக்கலாம் .

விவேக் தனது இரங்கல் பேச்சின் போது கலாம் அணிந்து கொள்ள இரண்டே கோட்டுகள்தான் வைத்திருந்தார்.அதில் ஒரு கோட்டில் பின்புறம் லேசாக தையல் விட்டிருக்கும்  என்றார் .நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன் எனது பணியில் எப்போதுமே இறைவனை ஒரு பங்குதாராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன். என அக்னிக் சிறகுகளில் அவர் குறிப்பிடுகிறார்.அதனால்தான் அந்த எளிமையால்தான் அவர் மஹாத்மா கலாம் ஆனார்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கும் படிப்புக்கும் போராடிய அந்த எளிய குடும்பத்திலிருந்து விஞ்ஞானியாகவும் ,முதல் குடிமகனாகவும் உயர்ந்தவர் .அவர் சில்வர் ஸ்பூன் பிறப்பல்ல .அப்படிப் பிறந்து பீரங்கி பேர ஊழல் செய்தவர்களைக் கூட அவர்கள் இறப்பிற்குப் பிறகு இந்தத் தேசம் மறந்து விட்டது.ஆனால் முழுமையான வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த பேராத்மாவைப் பற்றி மாற்றுக் கருத்து வைத்து இருந்தால் உங்களையே உங்களால் மன்னிக்க முடியாத ஒரு பாவத்தை செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

தன் தாயை நினைவு கூறும் வகையில் அவர் எழுதிய கவிதையை படியுங்கள் அவர் எங்குப் போயிருக்கிறார் என்பது புரியலாம் .

''தாய்'' என்ற தலைப்பிலான அந்தக் கவிதை....
 ''அம்மா... எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த நாள். எனக்கு வயது 10 அது ஒரு பௌர்ணமி தினம் என் உலகம் உங்களுக்கு மட்டும் தானே தெரியும், அம்மா நான் உங்கள் மடியில் படுத்திருக்கிறேன்.. திடீரென நள்ளிரவில் என் கால் முட்டியில் விழுந்த கண்ணீர் துளிகள் என்னைத் திடுக்கிட்டு எழ வைத்தன குழந்தையின் வலிகளைத் தாய் மட்டும் தானே உணர முடியும் அம்மா!'' 
ஓடி ஓடி உழைத்துப் படிக்கும் மகனை வருடியபடி கலாமின் தாயார் கண்ணீர் விட அந்தக் கண்ணீரின் வெப்பத்தில் எழுந்து தனது தாயாரைப் பார்த்த நினைவில் கலாம் எழுதிய கவிதை இது... அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார் கலாம்...

 ''உங்கள் அன்பும், உங்கள் பாதுகாப்பும், உங்கள் நம்பிக்கையும் எனக்கு பலம் தந்தன இந்த உலகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்த தாயே, இறுதித் தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் சந்திப்போம், என் அம்மா''! அன்பு நிறைந்த தன் தாயாரைப் பார்க்க கலாம் போய்விட்டார் .


இனி எதுவும் வேண்டாம் என்ற அந்த மாமனிதருக்கு இனியாவது இளைப்பாறட்டும் .அவர் பிறந்த நாளைத் தேசிய மாணவர் தினமாகவோ அல்லது இளைஞர் எழுச்சி நாளாகவோ கொண்டாடுங்கள் .அவருக்குத் தபால் தலை வெளியிடுங்கள் ,மணிமண்டபம் கட்டுங்கள் .அவர் வீட்டை அருங்காட்சியகமாக ஆக்குங்கள்.அவரில் பெயரில் விருது வழங்குங்கள் , இன்னும் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யுங்கள்.அதெல்லாம் காலத்தின் கரங்களால் பழசாகி விடலாம் ஆனால் அவரின் மரணத்திற்காக அவரை நேரில் பார்க்காத பிஞ்சு குழந்தைகள் மற்றும் மெழுகுவத்தி சுடர் முன் பள்ளிக்குழந்தைகள் விட்ட கண்ணீரும் , அவர் மரணத்தைச் சொந்த வீட்டு மரணமாக நினைத்த ஒவ்வொரு மனமும் போதும் அதற்கு எதுவும் இனி சமம் இல்லை .அப்படியே அதற்கும் மேல் எது இருந்தாலும் அவர் அன்பு அம்மா பார்த்துக் கொள்வார்கள் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக