Follow by Email

செவ்வாய், 31 மே, 2016

ஆலயங்கள் இல்லாத ஊரும் , குழந்தைகள் இல்லாத வீடும் ஒரு வகை மயானம்தான் !
            சுமார் இரண்டு மாதங்கள் பள்ளிக் கல்வி விடுமுறையில் சாலைகள் அத்தனையும் ஓய்விலிருந்து இன்று  முதல் அதிரப்போகின்றன.......
அங்கும் இங்கும் அனாயசமாகக் குழந்தைகளை அள்ளிக் கொண்டு கடக்கும் ஆட்டோக்களும் , ’பெயில்’ கிடைக்காத கைதிகள் போல வேனுக்குள் பள்ளிக்குப் பயணிக்கும் குழந்தைகளின் பாவமான முகங்களும் , அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கூட்டத்தால் தன்னுடைய கலெக்சன் பாதிக்கும் என்ற கடுப்பில் வேண்டுமென்றே பேருந்து நிறுத்ததில் நிற்காமல் தள்ளி நிறுத்தும் பேருந்தும் அதை  நோக்கி, விட்டேனே பார் என்று ஓடும் இலவசப் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களின் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களும் காணக்கிடைக்கும் இனி வழியெங்கும் .ஒரு பேருந்து போனாலே வால் பிடித்துத் தொடர வேண்டிய திருப்பூர் மங்களம் செல்லும் அலுவலகச் சாலையில், ஒரு யுகேஜியோ, எல்கேஜியோ படிக்கும் விரல் சூப்பும் மேட்டுக் குடிப் பையன்களை அழைத்துச் செல்லும் பல பெரிய கார்களால் சாலை மறியல் தினமும்  நடக்கும்.. 


       இதுநாள் வரை ஜிம்மிலும் ,யோகாசன் வகுப்புகளிலும் அரட்டை அடித்து விட்டு வந்து ஏதோ ஒரு  மியுசிக் சானலின்  கடைசிப் பாட்டையும், கைகாட்டிக் கேவலமான வணக்கம் சொல்லி விட்டுச் செல்லும் சுமார் ’காம்பயரிங்’ அழகியைப் பார்த்து விட்டுச் சென்று கொண்டு இருந்த அப்பாமார்களுக்கு, இனி தினப்பலன் ’அவஸ்தை’ .

   சாவகாசமாகச் சமைத்து விட்டு சர்வ லட்சணங்கள் பொருந்தியத் தொலைக்காட்சித் தொடரைப் பக்கத்து வீட்டு மாமியிடம் சிலாகிக்கும் அம்மா மார்களுக்கு இனி ’கரண்ட்கட்’ .

    வீட்டில் செய்தித் தாளின் கடைசிப் பக்க விளம்பரங்களைக் கூட விட்டு வைக்காமல் வாசித்த தாத்தாக்கள் இனி பாலத்தின் மேல் பயணிக்கும் ரயில் பெட்டி போல விட்டு விட்டு விட்ட இடத்திலிருந்துதான் வாசிக்க வேண்டும் .
   இந்தச் சமயத்தில் கார்ப்பரேசன் பைப்பில் தண்ணி வந்தால் எல்லாம் கோவிந்தாக் கோவிந்தாதான். பார்த்துப் பார்த்துப் பண்ணிய உணவுகள் யாரும் விசாரிக்காத தவற விட்டக் கடிதம் போல ரசிக்கப்படாமல் கிடக்கும்.


 முதல் முறையாகப் பள்ளிக்குச் செல்லும் LKG (Lower Kindergarten) UKG (Upper Kindergarten) குழந்தைகளைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சோகமாகவும் இன்னொரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கும் .விட்டு வாசலில் தொடங்கிய அழுகை பள்ளிவரைத் தேம்பித் தேம்பிப் பள்ளிக்கு வந்தும் அம்மாவின் இடுப்பை விட்டு இறங்காமல் ஓவெனெ அழுகும் குழந்தைகளும், அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டு போக மாட்டேன் என்று கதறும் பிள்ளைகளும் பார்க்க இரண்டு மனம் இருந்தால் தேவலாம் . எப்படியோ சமாதானப்படுத்தி ஆயாவிடம் கால் மனதாய் அனுப்பி வைக்க ,அழுது கொண்டே முதல் முறையாக தன்னை விட்டு பிரிந்து செல்லும்பிள்ளையைப் பள்ளிக்கதவின் ஊடே பார்க்கும் அம்மாவுக்கு எவண்டா கண்டுபிடிச்சான் இந்தப் பள்ளிக்கூடங்களை என்று நினைத்து அழுகையும்ஆத்திரமும் கூட வரலாம்  !

  எப்படியோ குழந்தையை விட்டு விட்டு வந்த அம்மாவுக்கு இடுப்பிலிருந்து இறங்கிய குழந்தை மனதிலிருந்து இன்னும்  இறங்காமல் இருக்கும் தவிக்கும் .வீட்டுக்குள் நுழைந்தால் அப்போதுவரை குழந்தைக் கலைத்துப் போட்ட பொருள்களும் அவசரத்தில் கழற்றிப் போட்டுச் சென்ற ஆடைகளும் மீண்டும்மீண்டும் ஞாபகப்படுத்த ஒரு சமயம் போய்க் கூட்டிட்டு வந்தரலாம் என்று கூட அந்த அம்மாவுக்குத் தோணும் .இன்று அந்தக் குழந்தையில்லாமல் அவள் ஒரு மூன்று மணி நேரத்தைக் கடந்து விட எத்தனை முறைக் கடிகாரத்தைப் பார்த்து இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது .கோவில் இல்லாத ஊரும் ,குழந்தைகள் இல்லாத வீடும் ஒரு வகை மயானம்தான் . 


          நேற்று வரை பகல் பத்து மணிக்கு மேல் பல்லைக் கட்டாயத்தில் அரைகுறையாக விளக்கிய பசங்கள் வீட்டை ரெண்டு பண்ணுங்கள் இல்லாத இடத்தில் தேடக்கூடாதைத் தேடி இல்லையென்று பெற்ற அம்மாவின் சாபங்களையும் ஒரு ஜோசியருக்கு ஒரு காசு இல்லாமல் கழுதை ,எருமை, பிசாசு என்ற புதிய பெயர்கள் தேடி வரும் . ஒன்பதாயும் கிளம்பாமல் குறிப்பிட்ட வயது பசங்கள் அங்கு இங்குக் கெஞ்சிக் கதறிப் பெற்ற அலை பேசி எண்ணில் தன் கேர்ள் ஃபிரண்டுக்கோ பாய் ஃபிரண்டுக்கோ அலைபேசியில் யூனிஃபார்மில் எப்படி இருக்கிறேன் என்று (அவனுக்கோ அவளுக்கோ) செஃபி எடுத்து அனுப்பிக்கொண்டு இருப்பார்கள் .. 


             விடுமுறையில் உறவினர்களின்  ஊர்களுக்குச் சென்று புதிதாய் முளைவிட்ட காதல் நாற்றுக் கதைகளைச் சுமந்து சென்று, தன் கூட்டாளியுடன் பாபிலோனியாவின் நேபுகாத் நேசர் ரேஞ்சில் அளப்பதுவும்,ஐபிஎல் விராத்தின் அடிக்காத சிக்சருக்கெல்லாம் வசவுகளால் அலங்கரிப்பதுவும் , தோணி பாவம் என்று அங்கலாய்ப்பதுவும் , கிறிஸ் கெய்ல் பெண் நிருபர் மெக்மெக்லின் பேட்டி எடுக்கும் போது என்ன கேட்டார் ? என்ற சுவாரசியங்கள் வேறு கோணத்தில் ரசிக்கப்படுவதுவும் இனி நாளும் சாதரணமாகும். ..

           என்னுடைய பையனுக்கு மூன்று வருடம் போராடி இந்த முறை மாற்றிய பள்ளிக்கு ஐந்தாம் வகுப்புக்கு முதல் நாள் அழைத்துச் சென்றேன் .அவன் தன் அம்மாவை  கூட வர வேண்டாம் என்றான் .நேற்றே நான் அவன் பள்ளிக்கு போய் தொடங்கும் நேரம் விசாரித்து விட்டேன் ..இன்று அரை நாள் மட்டும் .போகும் போது ஒரே ’நெர்வசாக’ இருக்குப்பா என்றான்.உங்களுக்கு இருந்துச்சா இதே மாதிரி என்று கேட்டான் .ஆமாம் என்றேன் .முத நாள் யார் கூட போனீர்கள் என்றான் என் அண்ணனுடன் என்று சொல்லிவிட்டு   .எதாவது தோணினால் மகரிசியை நினைத்துக்கொள் என்றேன்.

அப்புறம் ஒன்று சொன்னான்  ,முதல்ல போனவுடன் யாராவது என்னை மாதிரி ஒரு புதுப்பையனைத் தேடி பழகிக்கொள்வேன் அப்புறம் அவனும் நானும் சேர்ந்து மற்றவகளை பழகிக்கொள்வோம் என்றான்  புத்திசாலி . அறிவில் அவன் அம்மா மாதிரி !


            வகுப்பை விசாரித்து உள்ளே போனோம் .மாடி ஏறிக்கொண்டு இருக்கும் போது மீண்டும் அப்பா உங்களுக்கு நெர்வசாக இருக்கா ? என்றான் இல்லை இது எனக்கு பழகிப் போனதால் ஒன்றுமில்லை என்றேன்.வகுப்பில் கடைசி பென்ஞ் மட்டும்தான் காலியாக இருந்தது  அதில் ஒரு சைனா தேசத்து பையன் போல புருவமில்லாமல் உருண்டையாக இருந்தான் .என் பையன் என்னைப் பார்த்து  நீங்க கிளம்புங்க என்று சைகை செய்தான் .

   மாடிப்படி இறங்கும்போதுதான் எனக்கு பையன் கேட்ட நெர்வசஸ்னஸ் தொற்றிக்கொண்டது .சரி, யாருக்கும் தெரியாமல் அழுவது நமக்கு ஒன்றும் புதிதல்லவே ?       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக