Follow by Email

திங்கள், 25 ஜூலை, 2016

”பேய்” நல்லது தெரியுமா? - துரத்தல் 3.


கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போன்றதுதான் இந்தப் பதிவும் .போகிற போக்கில் நம் தமிழ் சினிமாப் பேய் ,பிசாசு என்று இல்லாத ஒன்றையெல்லாம் காட்டிப் பயமுறுத்துகிறார்கள் என்று விளையாட்டாய்ச் சொல்லப்போய்க் கடைசியில் உடலை விட்ட உயிர்களைப் பற்றிய வாசிப்பு நீண்டபாதைக்குள் செலுத்திவிட்டது. …. 

ஒரு மரணம் எந்த வயதில் நிகழ்ந்தால் , எந்த முறையில் நடந்தால், அந்த உடலிருந்து பிரிந்த அந்த உயிர்ச்சக்தி எந்த நிலையை அடைகிறது என்று இதுநாள் வரையில் புரிந்துக் கொள்ளப்படாத அல்லது மறைக்கப்பட்ட ரகசியங்களைப் பேச வேண்டிய கட்டாயத்திற்குள் என்னையறியாமல் இழுத்துகொண்டு விட்டது! சில உண்மைகளைப் பற்றிப் பேசும்போது மிகக் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும்.அந்தப் பொறுப்புப் பல புதிய ரகசியங்களை உங்களுக்கு இங்குச் சொல்லவைத்து இருக்கிறது …. 

போன பதிவில் பைசாசம் , பேய் ,ஆவி பற்றிய ஒரு தேடல் முற்றுப்பெற , எனக்கு ஒரு ஞானி உதவினார் என்று முடித்து இருந்தேன் . அவர் பெயர் யோகிராஜ்.வேதாத்ரி மஹரிசி…

 இயற்கையின் ஒரு பகுதியே மனிதன்.

      நாம் இதுவரை நீங்கள் கேட்டுப் பயந்த காத்து, கறுப்பு, காட்டேறி, கொள்ளிவாய்ப் பேய்களைப்போலப் பற்றிய கதையையும், சினிமாவில் ஆபாசமாக வரும் கவர்ச்சியாக உலவும் ஆவி, , பேய், பிசாசு , கற்பனைகளையும் ஆங்கிலக் கிராஃபிஸ் பூதம், சைத்தான், சாத்தான் போன்ற மெகா பட்ஜெட் பொய்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முதலில் மரணமுற்றவர்கள் உடலிருந்து ”எது” வெளியேறுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.. 

ஏன் என்றால் இந்தப் புரிதல் இல்லாததால்தான் நாம் காஞ்சனா ராகவா லாரான்ஸ் சொல்லுவதையை நம்ப வேண்டியிருக்கிறது.இன்னும் அழுத்தமான வார்த்தையில் சொல்லப்போனால் உடலிருந்து வெளியேறும் ஆன்மாக்களைப் பேயாகவும் பிசாசாகவும் கொச்சைப்படுத்திக்கொண்டு இருப்பது போலத் தெரிகிறது .நம் வீட்டில் இறந்த நபர் இப்படிப் பிசாசு ரூபத்தில் திரிந்து இருந்தால் நாம் வரவேற்போமா ? யாருக்கோ நடப்பதால் இதை விளையாட்டாய்ப் பார்த்துச் சிரிக்கிறோம்.உண்மையில் இயற்கையின் அத்தனை ரகசியமும் பதிவு செய்யப்பட்ட ஒரு நடமாடும் என்சைக்கிளோப்பீடியாதான் மனிதன் .இன்னும் சுருங்கச்சொன்னால் இயற்கையின் ஒரு பகுதியே மனிதன். இதைத்தான் நமக்கு அருகே நடக்கும் மரணங்களும் பிறப்புகளும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது அதை உணராதவரைப் பிறப்பு சந்தோசமாகவும் இறப்புத் துக்கமாகவும் மட்டுமே பார்க்கப்படும் . 


எது ஆரம்பப் புள்ளி ?
அப்படி என்ன பிறப்பு ,இறப்பு முக்கியமாகப் போய் விட்டது? உங்கள் அப்பாவின் 23 குரோமோசோமும் ,அம்மாவின் 23 குரோமோசோமும் மட்டும்தான் நீங்கள் என்று நம் மரபியல் ஜீன் ஏணிப்படிகளை நினைத்துக்கொள்கிறோம் .இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள் ஏழு ஜென்மத்து மரபுப் பண்புகளைக் கொண்டவன் என்று யாரவது பேசினால் அடப் போங்கப்பா என்று ’ஸ்வாதிக் கொலை வழக்கில் முக்கியத்தடயம்’ என்ற செய்தி வாசிக்கப்போய்விடுவோம். 


ஆனால் மனிதன் நவராத்திரிக் கொலுவில் காட்டப்படும் ஓரறிவு உயிரினம் மரம், செடி, கொடி, இரண்டறிவு உயிரினம் நத்தை, சங்கு, ஆமை மூன்றறிவு உயிரினம் எறும்பு,கரையான் , நான்கறிவு உயிரினம் நண்டு, வண்டு,பறவை ஐந்தறிவு உயிரினம் ஆடு, மாடு,சிங்கம், புலி, நாய் வரை வாழ்ந்த பதிவுகளைக் கொண்டவன்தான் ஆறறிவு உயிரினம் மனிதன் .இதை நீங்கள் நம்ப வேண்டாம் .யாராவது பக்கத்து வீட்டுப்பெண் பரிணாமச் சரித்திரம் பற்றிப் பழைய புத்தகம் வைத்து இருந்தால் வாசித்துப் பயன் பெற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் இந்த (மகாகாசம் ) பிரபஞ்சத்தை மிகப்பெரிய கடல் வைத்துக்கொண்டால் அதன் (பூதாகாசம் ) அலைதான் அணுக்களால் உருவான ஒவ்வொரு பௌதீகப்பொறுளும்.அந்த அலையினால் உருவான (சித்தாகாசம்) காற்று நம் உயிர் . ( கடல்-அலை-காற்று ) எது ஆரம்பப் புள்ளியோ அந்தப் பிரபஞ்சத்தின் பிரதி - ஜெராக்ஸ்தான் ஒவ்வொரு உயிரும், மனிதனும் .என்ன மற்ற உயிர்களுக்குத் தான் எங்கிருந்து வந்தோம் என்ற முகவரியை அறியும் அறிவு வளர்ச்சியில்லை .மனிதனுக்கு அந்தக் கொடுப்பினை இருப்பதால்தான் இந்தப் பதிவுகூடப் பிறக்கிறது . 

சரி நாம் உடலிருந்து வெளியேறும் ‘அது’ எது ? 

நாம் கண்ணாடியில் அழகாய், ஒள்ளியாய், குண்டாய்ப் பார்க்கும் உடல் மட்டும்தான் அறிந்துகொள்ள வைத்து இருக்கிறோம் .இதற்கு உள்ளே இந்த உடலை நடத்தும் இரண்டு உடல்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நாம் உடலை விட்டு அந்த ’அது’ பற்றி அறிய முடியும் அப்படியானால் மனிதனுக்கு மூன்று உடலா?
ஆம்.

1. Physical Body பருவுடல் - செல்களால் உருவான உடல் .
2. Astral Body நுண்ணுடல் - உயிர்சக்தி , உயிர்துகள் , சீவன்,
3. Causal Body Or Bio Magnetic Body -சூக்கும உடல் - காந்த காந்த உடல் அல்லது காரண உடல் .


1. Physical Body - பருவுடல் .

                               செல்களால் உருவான உடல் .நம் விஞ்ஞானம் போதிய அளவுக்கு மேல் இந்த Physical Body பேசியிருக்கிறது .இது 20 வகைத் திசுக்களால் எலும்பு, தசை, ரத்தம், நரம்பு, குடல் ,சுரப்பிகள் உருவானது.இது ஜீரண,ரத்த,தசை,எலும்பு,நோயெதிர்ப்பு, இனப்பெருக்க,நாளமில்லாச் சுரப்பு, நரம்பு,கழிவு ,நிணநீர்,சுவாச மண்டலங்களால் உருவானவை . இதற்கு மேல் இதற்குள் செல்ல வேண்டாம் .ஆனால் இந்த உடம்பில் அம்மாவின் உடலை விட்டு வெளியே வந்து மூன்று வயதில் மூளை முழு வளர்ச்சி அடைகிறது அடுத்து 12 வயது வரை மூளையில் உருவாகும் வித்து சக்தி Sexual vital force உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் சக்தியைக் கொடுத்து உடல் வளர்ச்சியை முழுமையாக்குகிறது .அந்த வித்து சக்தி.உடல் வளார்ச்சியை முழுமைப்படுத்திய பிறகு மெல்லக் கீழிறங்கிப் பாலுணர்வுச் சுரப்பியில் தேக்கமுறுகிறது. 

ஆனால் இது உடல் வளர்ச்சிக்குப் போதாது .வயதுக்கு வந்த ஆண் ,பெண் உடல் வளர்ச்சி மிக அபரிமிதமான எல்லைத் தொடும் அளவுக்கு உயர உணவிலுருந்து பெறப்படுகிறது .அது நேரடியாக இல்லை ஏனெனில் இந்த உடலை நடத்தும் உயிர்சக்தியை உணவிலிருந்து நேரிடையாகப் பெற்றால் விளைவுகள் விபரீதமாகி விடும் அதனால் 1.உணவு ஜீரணமாகிச் சிறுகுடலின் மூலம் சத்துப்பொருட்கள் திரவமாக உறிஞ்சப்படுகிறது ரசமாகிறது Juice –2. ரசித்திலிருந்து ரத்தம் உருவாகிறது. 3.ரத்தத்தின் ஒரு பகுதித் தசையாகிறது 4.தசைகளில் எண்ணெய்ப் பிரிக்கப்பட்டுக் கொழுப்பாகிறது. 5.கொழுப்பிலிருந்து சுண்ணாம்புசத்துப் பிரிக்கப்பட்டு எலும்பாக மாறுகிறது 6.எலும்பு கெட்டிப்பட்டது போக மீதமுள்ள திரவம் எலும்புக்குள் மஜ்ஜையாக மாறி மூளையாக அமைகிறது 7.மஜ்ஜை எனும் தாதுவிலிருந்து சக்தி வாய்ந்த அணுக்கள் பிரிக்கப்பட்டு .ஆணுக்கு விந்தாகவும்,பெண்ணுக்கு நாதமாகவும் sexual vital particle உருவாகிறது .மூளைதான் வித்து சக்தி என்ற sexual force ஐ தனது ரசாயன சக்தியால் உருவாக்குகிறது ஆனால் இது பாலுணர்வு சுரப்பியில்தான் வந்து தங்குகிறது . 


2. Astral Body -நுண்ணுடல்  

                      சூக்கும சக்தி , உயிர்சக்தி , உயிர்துகள் , சீவன் என்ற பல பெயர்க் கொண்ட ஒரே பெயருடைய “உயிர்”வாழும் இடம் இந்த இரண்டாவது உடலில்தான் . பாலுணர்வு சுரப்பியில்தான் வந்து தங்குகிற வித்து சக்தி என்ற sexual vital particle ன் உயிர் துகள்தான் உடம்பில் உயிர் என்று பேசப்படுகிறது .உயிரோட்டம் என்பது உயிர் என்ற சக்தி முழுக்க முழுக்க இந்த sexual vital particle லின் சுழற்சியில்தான் நடைபெறுகிறது .உயிர் இரண்டு முக்கிய வேலையைச் செய்கிறது .1. உடலை இயக்குகிறது .2. அப்படி இயக்கத்தடை ஏற்பட்டால் உயிர் மனமாக விரிந்துத் தடையை நீக்கும் உபாயம் தேடுகிறது . 
கொஞ்சம் இல்லை ரொம்பவே புரியவில்லை இல்லையா ? இருக்கட்டும் .இன்னொரு உடலைப்பற்றியும் சொல்லி விடுகிறேன் .அப்புறம் மொத்தமாகப் பேசி முடித்து விடுவோம். 


3. Causal Body Or Bio Magnetic Body -  காந்த உடல் அல்லது காரண உடல் . 

                             Astral Body க்கு சொந்தமான நுண்ணிய அணுக்களாலான உயிர்துகள் உடல்முழுதும் சுழலும்போது அதிலிருந்து வெளியேறும் காந்த அலையால் உருவான உடல்தான் இந்த மூன்றாவது உடல்.இதுவும் கண்ணுக்குத் தெரியாத காரணஉடல்தான்.இந்த ஜீவகாந்த சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள கோடானுகோடிச் செல்களுக்குள் இணைப்பை உண்டாக்கி அவற்றால் உடலுக்கு வேண்டிய ஆற்றலை மின்சக்தியாகவும் இரசாயன சக்தியாகவும் மாற்றிக் கொடுத்துகொண்டே இருப்பதுதான்.இந்த சக்தியை எளிதாக உணர உங்கள் இரண்டு உள்ளங்கைகளிரண்டையும் ஒரு நிமிடம் சேர்த்துக் காற்றுப் புகாத அளவுக்கு நெருக்கி வையுங்கள்.பிறகு இரண்டு உள்ளங்கைகளையும் அரையடிப் பிரித்துப் பிறகு உடனே மீண்டும் ஒட்டிக் கொண்டு வாருங்கள் இப்படி அரை நிமிடம் மாற்றி மாற்றிச் செய்தால் உள்ளங்கைகளுக்கிடையே ஒரு ஈர்ப்புக் காந்தம் இழுக்கும் உணர்வை அறிவீர்கள் .இந்தக் காந்தம்தான் உடல் முழுதும் செயல்பட்டு உங்கள் தொடு உணர்வு ,சுவை,நுகர்தல்,பார்த்தல்,கேட்டல் போன்ற ஐந்து உணர்ச்சிகளை இந்தக் காந்தச் செலவால் மின்சக்தியாகவும் இரசாயன சக்தியாகவும் மாற்றிக் கொடுத்து மனம் என்ற கருவி மூலம் பிரித்து உணரும் தன்மை, மூளைக்குக் கிடைக்கிறது .நீங்கள் குடிக்கும் ஒரு கப் காஃபி இந்த ஜீவ காந்தச் செலவால்தான் ருசிக்கிறதா,கசக்கிறதா,இல்லை என் அம்மா போடறக் காப்பி மாதிரி வராதுங்கிற உணர்வைச் மனதின் மூலம் சொல்லுவது இந்த மூன்றாவது உடலான Causal Body ஜீவகாந்தச் செலவால்தான்.

இதுதான் நாம் இறந்த பிறகு நம்மை விட்டு வெளியேறும் காந்த உடல் . ராகவா லாரன்ஸ் உட்படச் சமீபத்திய தமிழ்ச் சினிமாவை வாழவைத்துக் கொண்டு இருக்கும் கதைக்கரு - ஆன்மா,பேய்,பைசாசம்,ஆவி,என்ற சகல உடான்ஸ்களுக்கும் பொது விதியை உருவாக்கும் உடல் .அது சரி ஏற்கனவே இரண்டாவது சொன்ன Astral Body மேட்டரே புரியவில்லை இது எங்கிருந்து வந்தது என்ற டன் கணக்கான கேள்வி உங்களுக்கு இருக்கத்தான் செய்யும்.ஆனால் இது மிக முக்கியமான ஆதார விதியை உருவாக்கும் மெய்யியல் தத்துவம்தான் ஆனால் இதற்குள் நம் தலையை விட்டு அறிந்து கொண்ட அறிவை இங்குச் சொல்லத் தொடங்கினால் என் முகநூல் முகவரியை உங்களில் யாராவது கூட முடக்கி விடுவீர்கள் .


ஆன்மீகம் அறிவுச் சுரங்கம்தான் .ஆனால் அதை விஞ்ஞானத்தோடு சொல்லுவது அவ்வளவு சுலபம் இல்லை.இதை ஒரு பிரேமானந்தா சொல்லால் நாம் கைகட்டித் தட்சினைக் கொடுத்து நம் கேள்விகளை வீட்டு பீரோவுக்குள் வைத்து விட்டு அங்கிருக்கும் பணம் நகையெல்லாம் பிரேமானந்தாக் காலில் வைத்துச் சமர்பித்து விட்டுச் சாஸ்டாங்கமாக விழுந்து கேட்போம் ஆனால் இது முகநூல்.அடிப்படை சொல்லவே இத்தனை சொல்ல முயல்கிறோம் .ஒருவேளை இன்னும் இதோடு சொல்லப்போகும் சில விசயங்களைத் தவிர்த்து விட்டு முன்னேறலாம் ஆனால் அது ஒன்னேகால் மணி நேர ஆங்கிலபடத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் சண்டையைப் பார்த்தது போலத்தான் இருக்கும் . 


அதனால், மீண்டும் சுருக்கமாக . 1.(Physical Body) அணுக்களால் உருவான செல்களால் உடல் ஒரு அகல்விளக்கு போல, அதில் 2.அந்தச் செல்களுக்கு மூலமான இறைத்துகளான உயிர் சக்தி (Astral Body) நுண்ணுடல், எண்ணெயும் திரியும் போல ,அந்த விளக்கிலிருந்து வரும் நாம் காணும் வெளிச்சமே 3.இறைத்துகளின் கரசலால் உருவான (Bio Magnetic Body) - காந்த உடல்.
போதும் !

வரும் பதிவில்  மரணங்களை வகைப்படுத்துவோம்.

                   என்ன ? இவன் பாட்டுக்கு ஏதோ பட்டுச்சேலையை தரம் பிரிப்பது போல சாதாரணமாக தொடங்குவதாக மரணத்தின் மதிப்பை குறைப்பதாக நினைத்து விட வேண்டாம்.மரணம் என்பது எல்லோறுக்கும் நிகழப்போவதுதான் .ஆனால் அது நிகழ்ந்த முறையில் பிரிந்த உயிர்,ஆன்மாவா,ஆவியா ,பேயா, பிசாசா என்று அதன் இருப்பை பற்றித் தெரிந்து கொள்ளத்தான் இந்த வகைப்படுத்தும் முயற்சி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக