Follow by Email

புதன், 3 ஆகஸ்ட், 2016

”அகாலமரண” ஆன்மாக்களின் செயல்கள் ! ( துரத்தல் 6 )

        

       ஏதோ ஒரு காரணத்தால் கொலை செய்யப்பட்டுத் திடீரெனெ உடலிருந்து துண்டிக்கப்பட்ட ஆன்மா மரணத்தினால் அதிர்ச்சியடைந்து அந்த அதிர்ச்சியினால் படபடப்பு நிலையில் இருக்கும் .அந்தத் திடீரெனெ உடலிருந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. உயிரின் திணிவும் ஆதிகமிருப்பதால் இயற்கையான் ஈர்ப்பு சக்தியால் இன்னொரு உடலை அது அடையும் வரை தன் உயிர் இழந்த இடத்தில் காத்து இருக்கும் ...

 உங்கள் சிறு வயதில் படித்தப் பள்ளிக்கூடம் மாறும்போது கல்லூரி வயதில் புதிதாய் ஈவ்டீசிங்கை எதிர்பாத்து நுழையும் முதல் நாள்,வீடு ,அலுவலகம் இப்படி ஏதேனும் ஒரு மாற்றம் சந்தித்தாலே சூழ்நிலையோடு ஒட்டாத மன நிலை ஒரு அதிர்ச்சியில் ,தயக்கத்தில் எதையும் அணுகுவோம் . மனம் ,அறிவு முன்அனுபவம்,பழக்கம் இத்தனை இருக்கும் நமக்கே இப்படியிருந்தால் வாழ்ந்து கொண்டு இருக்கும் நான் என்ற அடையாளத்தைக் கொண்டு இருக்கும் தன் உடலை விட்டு உயிர்சக்தி பிடுங்கியெறிப்பட்டால் அந்த பேரதிர்ச்சியை யாரால் சுலபமாக புரிந்துகொள்ள முடியும் . நாம் சும்மாவே எதாவது ஒரு காரியத்தில் ஜெயித்து விட்டால் உயிரைக்கொடுத்து முயற்சித்தேன் என்பது நாம் பந்தாவாகச்சொல்லிக் கொள்கிறோம் அப்படி இருக்கும்போது அதையே பிடுங்கப்பட்டால் அதிர்ச்சியடையாமல் என்ன செய்யும் அது ?

                            அதிர்ச்சியடைந்து படபடப்புடன் ,நிலைகொள்ள முடியாமல், அந்த மாறுபட்ட உணர்வை ஏற்றுக்கொள்வதற்கும் அடங்காமல், அந்த ஆன்மாவின் வேகத்துடன்  துடிதுடித்து வெளியேறும்.. இதே வேகத்தில், தன்மையில், குணத்தில், எண்ணத்தை வலுவாக தன் உயிர்சக்தியின் - காந்தகளத்தில் பதிவு செய்து இருக்கும் ,அதற்கு பொருத்தமான உடல் அதன் இறந்த இடத்திற்கு, வேடிக்கை பார்க்க வந்த யாரோ ஒருவர்  திடீர் பயத்தால் அவரின் உடலின் உயிர்சக்தி வெளியேறினால் போதும்  சட்டெனெப் பற்றிக்கொள்ளும் .உயிரோடு உள்ள அந்த நபரின் ஆசைகள் ,குணம்,எண்ணம்,செயல்பாடுகள் மீது இருக்கும் தீவிர செயல்பாடுகள் இம்மாதிரி மனிதர்களின் உயிரோடு வாழும் கருமையம் தானே ஈர்த்துக்கொள்ளும் இயற்கையான இயல்பும் விளைவும் ஏற்படும்.இதற்கு முக்கியக்காரணம் அந்த வேடிக்கப்பார்க்க வந்த நபரின் வினைபதிவுகளுக்கேற்பவே இது நிகழும். இதனால்தானோ என்னவோ என்னை மாதிரி பலர் விபத்து ,தற்கொலை,கொலையை பார்ப்பதில் விலக்கு வைத்து இருப்பார்கள் .இருக்கிற ஆசைக்கே நிறைவேற்ற வழியில்லை எதற்கு புது வம்பு என்பதால்தான் .

              சரி ஏற்கனவே அதிர்ச்சியுற்ற ஆன்மா சட்டெனெ இன்னொரு உடலுக்குள் அனுமதியின்றி நுழைய இந்த வேகம் மட்டும் போதுமா ? அது என்ன அவ்வளவு சுலபமா? சுலபமில்லை. ஆனால் எல்லா மரணங்களிலும் வெளியேறும் ஆன்மாவுக்கு அது இன்னொரு உடல் கிடைக்க காத்து இருக்கும் அவகாசத்தில் அந்த ஆன்மாவுக்கு புத்தாக்கம் தரும் ஒரு வெளிப்பூச்சு Outdoor innovative coating இருக்கிறது அதுதான் மிகப்பெரிய ஆன்மாவின் ஆயுதம் .அதன் பெயர் Ectoplasm .


#க்டோப்ளாசம்.

                   உடம்பில் ஓடும் அசுத்த ரத்தத்தை De oxygenated blood (impure blood)  உடம்பின் பல பாகங்களிலிருந்து இதயத்துக்கு திரும்பக் கொண்டு வரும் குழாய்களுக்கு வெய்ன் Vein என்று பெயர் .அந்த அசுத்த ரத்தம் சுத்த ரத்தமாக oxygenated blood (pure blood) மாற்றப்பட்டு வெளியே உடம்பின் சகல பாகங்களுக்கும் ஆர்ட்டரி Artery என்ற குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது .அதுபோல உணவிலிருந்து பெறப்பட்ட ஏழாவது தாதுவான வித்து சக்தியிலிருந்து உருவாகி உடல் முழுதும் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கும் உயிர்துகள் Life Energy particle -விந்து நாத களையத்திற்குள் sexual vital fluid தோய்ந்து வெளியேறும் போது அதற்கு ஒரு ஓஜஸ் எனும் சுத்த சக்தியின் பூச்சு coating கொடுக்கப்படுகிறது .அந்த சுத்த சக்திக்குப் பெயர்தான் எக்டோப்ளாசம் .அப்படி என்ன  வேலைகள் செய்கிறது இது ? .

1. உயிரோடு இருக்கும் உடலின் திணிவு குறைந்த உயிர்துகள் வித்துக்களையத்துக்குள் Sexual vital fluid தோய்ந்து எக்டோப்ளாச பூச்சுடன் வெளிவந்து உடலின் எல்லா செல்களுக்கும் செல்கிறது .ஜீவகாந்தம் Bio magnetism ரசாயன சக்தியை மின்சக்தியாக மாற்றும் செயலின் போது அந்த மின் சக்தியால் செல்கள் பாதிக்காது தன்னைத்தான் காத்துக்கொள்ளும் உறையாக Protective Insulation ஆகப் பயன்படுகிறது .

2.    உடல் முழுதும் பரவும் உயிர்துகள்கள் எக்டோப்ளாசப் பூச்சைப்பெறுவதால் ஒருவர் புலன்களால் செய்யும் செயல்களுக்கான பதிவுகளை Imprints உடல் செல்களில், விரிவு சுருக்கிப் பதிவுகளாகவும் ,மூளைச்செல்களில் நினைவுப்பதிவுகளாகவும் ஏற்பட வகைசெய்கிறது.

3. உடல்விட்டு நீங்கும் உயிர்துகள்கள் இறுதியாகப் பெறும் புதிதான எக்டோப்ளாசத்துடன் வெளியேறுவதால்- வெளியேறிய ஆன்மா இன்னொரு உடலில் புகவோ அல்லது புகும் வரை காத்திருக்கும் போது அந்த ஆன்மாவை புத்தாக்கம் Innovation செய்து கொண்டே இருப்பது இந்த வெளிப்பூச்சின் உதவியால்தான் !  வாழும் உடலில் நுழையும் ஆன்மாவின் ஆயுதமே இது  !

                


              எக்டோப்ளாசத்தின் இந்த பூச்சு Coating ஐ பிரகாசமாக ஒளிருவதாகச் சொல்லி அதை போட்டோ எடுக்கலாம் என்று நிரூபிக்க பலகாலமாக முயற்சி நடந்து கொண்டு இருப்பதும் இதற்கெனெ சிலபேர் உடல் புதைத்த இடங்கள்,மருத்துவமணைகள் ,சர்ச்கள் ,என்று பேய்போல அலைந்து கொண்டு இருக்கிறார்கள் .அதிலும் ஒருவர் இறந்து போன டாஸ்மாக் ரெகுலர் கஸ்டமர் எக்டோப்ளாச பூச்சுடன் வந்து சரக்கை முகர்ந்து பார்ப்பது போல அபாயமான தனது ஆசையை பூர்த்தி செய்து இருக்கிறார் இனிமேல் பாட்டில்களில் குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு பதிலாக ’குடிப்பவனின் கதி’ என்று இந்தப் படத்தை  போடும் நிலை வரலாம் பாருங்கள் ஆனால் இது சாத்தியமா ? என்று அலையும் டாஸ்மாக் ஆன்மாக்கள்தான் சொல்ல வேண்டும்.

பேய் பிடித்தல்.

          சரி. இந்த எக்டோப்ளாச பூச்சுடன் இன்னொரு உடலில் நுழைந்தவுடன் அந்த உடலில் இருக்கும் கருமையம் உடனே சம்மதித்து விடுமா ? அனுமதிக்காது ! புகுந்த ஆன்மா அந்த உடலின் உயிர்செயலில் அடங்கி மேலோங்கி இயங்கத் தொடங்கும் ..இது தாங்க முடியாது அதிர்ச்சியடைந்த மூளை ஒருகணம் தடுமாறி மயக்க Trance state நிலைக்குட்படுத்தும் இந்த தருணத்தில் புகுந்த  ஆன்மா தன் காந்தக்களப் பதிவை உயிரின் மன அலைகளுடன் கலந்து மூளைசெல்கள் வழியே வெளிப்படும் !

            மயக்கம் தெளிந்த அந்த ஆண் அல்லது பெண்ணின்  அந்த நிலை Attached Soul condition பேய் பிடித்து விட்டது என்பார்கள் .அப்போதுதான் டாய் பூய் என்று கத்தி ஆர்பாட்டம் செய்வது ,தலையைவிரித்துப் போட்டு புகுந்த ஆன்மாவின் புத்திப்படி, பிடிப்பதெல்லாம் கேட்பது இதில் சில சமயம் பேயோட்டும் பூசாரி உயிரைக்கேட்கும் பேயெல்லாம் உண்டு ! . அப்படி யார் குரலோ போல பேசும் அந்த ஆன்மா, தான் யார் எங்கு யாருக்குப் பிறந்தேன் ? என்னை எப்படி கொன்றார்கள் என்று பேசும் .சில சமயம் அடி தாங்க முடியாமல் ஓடிவிடும் .

            இது சில சமயம் ஒத்துப்போகவும் வாய்ப்பு இருக்கிறது .ஒரே இணக்கமாக போய் விட்டால் இந்த நிலை Dual Personality உள்ளவர்களாக மாறிவிடுவார்கள் .நேரம் ஒரு குணம்  கொடுத்து  துன்புறுத்துவார்கள். சிலசமயம் அமைதியில்லாதவர்களாகவும் Restless ,சில சமயம் முரட்டுத்தனமானவர்களாகவும் violent ஆக மாறி நடப்பார்கள்   உடலில் இருந்து கொண்டு அவர்களை மனநோய் அல்லது மனவியாதிக்கு இழுத்தும் விடுவார்கள்.
    

           இதற்கு உதாரணமாக நம் தமிழ் திரைப்படக் கதாநாயகர்களை சிலரை எடுத்துக்கொள்ளலாம் ! ஒருபக்கம் அருண் ஐஸ்கிரீமை விடக்  காதலில் உருகி வழிவார்கள். காதலியை தன் அம்மா  என்று உளறிக்கொண்டே மரத்தைச் சுற்றிப் பாட்டுப்பாடி களைத்துப்போவார்கள் .

        மறுபக்கம் எவனாவது கிடைத்தால் கடைவாய்ப் பல்லில் சிக்கிய நள்ளி எழும்பைப் போல மலுக் மலுக்கென்று தலைக்கு மேலே தூக்கி, துளியும் இரக்கமில்லாமல் கொன்று குவிப்பார்கள் . மீண்டும் அடுத்த ரீலில் மீண்டும் பாட்டு,ஐஸ்க்ரீம் …   சரி இவர்களை விடுவோம் .கேட்டால் ரசிகர்கள் விருப்பம் என்று தடாலடியாக குற்றம் சொல்வார்கள் .

 பேய்கள் இறங்குமிடம்  .

     வர்களுக்குள் இருக்கும் (பேயை) ஆன்மாவை ஓட்ட மகான்கள் அடக்கமான ஆற்றல்களம் Energy Field அதிகமான இடத்திற்கு அழைத்துச் சென்றால் இணைந்த அந்நிய ஆன்மாவுக்கு வேகமான எழுச்சியுணர்வு மிக்க இயக்கம் உண்டாகும் ,உடலுக்கு சொந்தமான ஆன்மா இந்த சமயத்தில் மயக்க நிலைக்கு போய்விடும் .புகுந்த ஆன்மா வாழ்ந்தது போதும் என்று வெளியேறியும் விடலாம் .ஆனால் பெரும்பாலும் சாத்தியமில்லை .அதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் அந்த உயிருடனே கலந்து ஒன்றுபட்டு விடும் .இதுநாள் வரை இணக்கமில்லாது பொருந்தாத தொல்லைகள் கொடுப்பதை நிறுத்தி அமைதி பெற்றுவிடும்.நம் ரத்த சம்பந்தமுள்ள ஆன்மாக்களை ஏற்றுக்கொள்வது போல அந்த புகுந்த ஆன்மாவை வணங்கி ஏற்றுக்கொண்டால் நன்மை அளிக்கும் எங்கும் போகாமல் வாழ்நாளெல்லாம் நன்மை அளிக்கலாம் .


     இது மாதிரி இல்லாமல் இணக்கம் ஏற்படாத போது குணம் தன்மை ஒத்துக்கொள்ளாத நில் ஏற்பட்டால் அந்த புகுந்த ஆன்மா அந்த உடலின் உயிரோடு சார்ந்து விடாமல் Carrier என்ற நிலையில் தங்கியிருக்கும் அவரின் உடலில் வேலை செய்ய முடியாது .அதற்கு வினைப்பதிவு ஏற்பு ஆற்றல் Receptivity இல்லை.இம்மாதிரி இருப்பவர்கள் வாழ்வில் பிடிப்பின்றி அலைவது போலத் தெரிவார்கள்.

                  இவர்களில் சில பேரைப் பார்த்தவுடன் கண்டு பிடிக்கலாம் என்கிறார் வேதாத்ரி மகரிசி.இவர்களின் விழிகள் நிலையில்லாமல் சுழன்று சுழன்று இயங்கிகொண்டு இருக்கும் .சம்பந்தமில்லாதை குணத்தை வெளிப்படுத்துவார்கள்.தவம் பயின்றவர்கள்,நல்ல பக்திவழியில் நடப்பவர்கள்,ஞானிகள் ஆகியோரை ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள் .பார்த்தாலும் முகம் திருப்பி நகர்ந்து வேறு இடம் நோக்கி நகர்ந்து விடுவார்கள் ..

          இப்படி இருக்கும் நபர்களைப் பார்த்த நம் வீட்டுச் சொந்தங்கள், கருத்து கந்தசாமிகள், இது கல்யாணஆசை என்று தப்பாக அர்த்தம் பண்ணி ஆயிரம் காலத்து பயிர் நட ஏற்பாடு செய்து விடுவார்கள் .ஒருவேளை இப்படி Carrier நிலையிலுள்ள ஆணோ பெண்ணோ திருமணம் செய்விக்கப்பட்டால் அந்த ஆன்மா அமைதியற்றதாக இருந்தால் பெண்ணின் வயிற்றில் கருஉருவாதை அழிக்கும்.ஆனால் அமைதியான ஆன்மாவெனில் அந்த கருவுடன் வளர்ந்து குழந்தை பிறந்த பிறகு அதோடு தொடர்ந்து உயிராக இருந்து கொண்டு மூன்று வயதில் அந்த குழந்தையின் மூளைச்செல்கள் முழுமையாகக் கட்டப்பட்டவுடன்  தன்னிடம் உள்ள பதிவுகளை வெளியிட ஆரம்பிக்கும் , அதனால்தான்  சில குழந்தைகள் மூன்று வயதில் பேசாத,படிக்காத,தெரியாத விசயங்களை பேசுவது, செயல்களை செய்வது உண்டாகும் .

         வேதாத்ரி மகரிசி பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப்பின்னும் உயிரின் நிலை என்ற நூல் எழுதிக்கொண்டு இருக்கும் போது, ரிசிகேஷில் பகவத்கீதை ஒப்பித்து பொருள் சொல்லும் ஆறு வயது குழந்தையை சந்தித்து இருக்கிறார்.பெற்றோர்களைத் தவிர யார் எந்த பொருள் கொடுத்தாலும் குளித்து விட்டு உண்ணும் பழக்கமுள்ள அந்தக்குழந்தைக்கு பெற்றோர்கள் அனுமதியோடு மஹரிசி ஒரு பழம் அறுத்து கொடுத்து இருக்கிறார் . அவரிடம் மட்டும் வந்து வணங்கி வாங்கி உடனே உண்ணத்தொடங்கி  விட்டதாம் .

     சரி இந்த மாதிரி அற்புத ஆற்றல்களைச் செய்யும் அந்த ஆன்மா அந்தக்குழந்தைகளின் வயதுக்கு வரும் வரை உடன் தங்கியிருந்து .அந்த குழந்தைகளுக்கெனெ வித்து மையம் உருவானவுடன் ஓரளவுக்கு இதுநாளுக்குள் தனது பதிவுகளை விடுத்த ஆன்மாவாக இருந்தால் விலகிவிடும் .ஆனாலோ இதுவும் பெரும்பாலும் நடப்பதில்லை உருவான அந்தக்குழந்தை கருமையத்துடன் முரண்பட்டு குழந்தை இறக்க வழிசெய்து விடும்.


மறுபிறப்பின் இயற்கைச்சட்டம் .

இங்கு ஒரு உண்மை தெளிவாக்கி விடவேண்டும் .எந்த ஒரு இறந்த நபரின் ஆன்மா நேரடியாக எந்த ஒரு தாயின் கருவரைக்குள் புகுந்து மறுபிறப்பாக பிறக்க வழியே இல்லை .அப்படி ஒரு வாய்ப்பும் இல்லை .தம்பதிகள் இருவரில் யாருடைய உடலிலாவது புகுந்து அவர்களுக்கு உருவாகும் கருவில் ஆணின் விந்தின் மூலமோ பெண்ணின் நாதத்தின் மூலமோ மட்டுமே  ஒரு தாயின் கருவில் புகுந்து வளர முடியும் .நேரடியாக இந்த வாய்ப்பை இயற்கைச்சட்டம் வழங்கவில்லை .அப்படி பிறந்ததாக சொல்லப்படும் செய்திகள் காமத்தினால் பிறந்த குழந்தை உலகப்பற்றுடையவர்களாக இருப்பார்கள் அவர்கள் சொல்லும் கருத்தை மக்கள் ஏற்க மறுத்து விடுவார்கள் என்பதான தவறான புரிதல் வந்து விடக்கூடாது என்று பின்னால் வந்தவர்களால் சொல்லி வைக்கப்பட்டுவிட்டது .
           அதே போல ஒரு ஆன்மா ஆடு,மாடு ,நாய் ,பாம்பு போன்ற வேறு ஒரு ஜீவராசியின் உடலில் எந்தக்காலத்திலும் இணையாது .அதன் அறிவாட்சித்தரம் அதை அனுமதிக்காது.             ஓஷோவின் பகவத்கீதை ஒரு தரிசனத்தில் 26 ஸ்லோகத்திற்கு விளக்கம் தரும் போது - ”பழுத்த இலை மரதினின்று விழுந்தால் அழுகுவதில்லை என்பதை கவனத்தில் வையுங்கள் பசுமையான இலைகள்  மரதினின்று விழுந்தால் அழுகுகின்றன “ 

                   இது வேறு ஒரு சந்தர்பத்திற்காகப் பேசப்பட்ட விசயமானமாலும் இங்கு பொறுந்துகிறது . திடீர் மரணத்தில் வாழ்வை இழப்பவர் மற்றவர்களை எப்போதுமே துன்பத்தை தருகிறார்கள் .அதற்கு முழுமுதல் காரணம் அவர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்தும் தத்துவத்தை நாம் சரியாக உணர்வில்லை .நாம் அவசர உலகத்தில் இருப்பதால் வாழ்ந்த பின்னும் சிலரை முறையாக அனுப்பி வைக்கத்தெரியாமல் அவஸ்தைப்படுக்கிறோம் .

            இந்த பதிவைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது பல விசயங்களை நண்பர்கள் மூலம் கேட்டேன் .ஒரு தெருவில் இளம் வயது பையன் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான்.அடுத்த சிலவாரங்களில் அதே பகுதியைச் சேர்ந்த இளம் வயது பையன்கள் பல பேர் தற்கொலை செய்ய ஊரே சேர்ந்து ,முதலில் இறந்த பையனின் ஆன்மாவை சாந்திப்படுத்த பூஜைசெய்துள்ளார்கள்.இப்போதும் கூட  அந்த பயம் முழுவதும் தீராமல் இருக்கீறார்கள் அந்த பகுதி மக்கள்  .

           இன்னொருவர் வீட்டில் இதே போல 17 வயது பையன் இறந்து சில மாதம் ஆன பிறகும் கூட அவனது தங்கை  அவன் தங்கை தன் அம்மாவிடம் அண்ணன் தனியே இருப்பாம்மா நாம் ரெண்டு பேரும் போவோம் , அப்பா நாம் இல்லாட்டா பின்னாடி வந்துவார்ன்னு புலம்புவதாகச் சொன்னார்கள் !

   ஓஷோ சொன்னது போல பசுமையான இலைகள்  மரதினின்று விழுந்தால் அழுகுகின்றன...


               நாம் எல்லோரும் தவிரக்க முடியாமல் ஏதோ ஒரு ஆன்மாவின் பதிவுகளாகச் சுமந்து கொண்டு இருப்பவர்கள்தான் .ஏனெனில் பிறப்பே பதிவின் விளைவுதான் .இதற்கு ஆறுதலே இல்லையா என்பது போலவும் ஆன்மா என்றால் தொல்லைதானா என்ற கேள்விக்கு அடுத்த பதிவில்அவதார புருசர்கள் ,சித்தர்கள்  ஜீவன் முக்தியடைந்த புண்ணிய ஆன்மாக்கள் எப்படி தங்கள் ஆன்மாவை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப்  பற்றிப் பேசி இந்த பதிவின் துரத்தல்களை முடித்துக்கொள்வோம் ...

         1 கருத்து: