சனி, 28 ஜனவரி, 2017

வா வர்ஷினி - Ranbir kapoor .

                 

                           ன் நண்பர் ஒருவர் விளையாட்டாய் சொல்லும்போது  திருமணம் எல்லோருக்கும் சுவர்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் பாருங்கள்  சிலர் மட்டும் நரகத்தில் வீடு வாடகைக்குப் பிடித்து குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பார்.

அனேகமாக அப்படிப்பட்ட சிலரை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பார்க்கிறேன் .

                      ஞாயிற்றுக் கிழமை வந்தாலே எனக்கு ஒரு முன்னால் பிரபல டிவியின் சில லட்சத்தைத் தாண்டி திருமணம் நடத்திக் கொண்டு இருக்கும் நிகழ்ச்சியின் மேல் சிரிப்பும் ஒரு வசீகரமும் கலந்து வந்து விடுகிறது . 

             வசீகரத்திற்குக் காரணம் நம் வாழ்க்கை முறைகள் இவ்வளவு மாறியும் சொந்தங்களிடம் நான் இனியும் லோல் பட முடியாது என்று இன்றிருக்கும் குடும்ப மனநிலைகள் புதிய சொந்தங்களுடன் கைகோர்த்துக் கொள்ள விரும்பப் படுகிறது என்பதை அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடிகிறது .ஆனாலும் அங்கு வரும் ஆண்களோ ,பெண்களோ இப்படித்தான் தனக்குத் துணை வேண்டும் என்ற கற்பனை மனோ நிலைகள் மட்டும் இன்னும் துளியும் மாறவே இல்லையெனும் போது நாம் இன்னும் முற்றிலுமாகச் சொந்தங்களை வெறுக்கவில்லை புதிய சொந்தங்கள் இப்படி வேண்டும் என்ற ஆர்வம் தெரிகிறது .அது ஆறுதலாகவும் இருக்கிறது .


ஆனால் சிரிப்புக்குக் காரணம் அதை நடத்துபவர் தன் அழகான சிரிப்புடன் ஏதோ சுயம்வரத்தில் தீர்மானிக்கும் வாய்ப்பைத் தருவது போல எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்று பெண்களிடம் கேட்கும்கேள்விகளுக்கு அவர்கள் வருங்காலக் கணவர் , மிகவும் நல்லவராக , அன்பானவராக, என்னைப் புரிந்துக் கொள்பவராக , நிரந்த வேலையில் இருப்பவராக வேண்டும் என்கிறார்கள்.இதெல்லாம் மொத்தமாக அயோத்தியில் கூட மட்டுமல்ல அகிலமெல்லாம் தேடினாலும் கிடைக்காது என்பது பார்க்கும் எனக்கும் உங்களுக்கும் தெரியும்தான்.ஆனால் அதைக்கேட்டும் கோபப்படாமல் இன்னும் அதே சிரிப்புடன் அவர் , நீங்கள் கேட்பது மாதிரியே அப்படியே ஒரு நல்ல கணவர் கிடைப்பார்  சொல்லும் போது, கலந்து கொண்டவர்களுக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம். ஒருவேளை அவர்கள் கேட்கிற மாதிரியே ஒரு மணமகனை அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் திரைக்குப் பின் நிற்க வைத்திருப்பது போலவே பேசுவது ஆச்சர்யமாகத்தான்  தெரிகிறது .

               உலத்திலேயே கஷ்டமான பதில்களில் ஒன்று எனக்கு என்ன பிடிக்கும் என்பது .மிக எளிமையான பதில் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று நான் தீர்மானிப்பது  என்பார்கள் .அது சரியாகத்தானே இருக்கிறது !



          வாழ்நாள் முழுதுவதும் சேர்ந்து வாழ்ந்தவர்களிடம் இந்தக் கேள்விக் கேட்டால் இது முழுமையாகச் சாத்தியம் இருக்கிறது என்று சொல்வார்களா ? தெரியவில்லை.

இதைவிட நம்மப் பசங்க சொல்லும் கண்டிசன்களைக் கேட்டால் இன்னும் சிரிப்புத் தானாக வந்து விடும். சில சமயம் என் வீட்டம்மா இருப்பது தெரியாமல் சிரித்து மாட்டிக்கொண்டு விடுவது வழக்கம் .( அப்படி எனக்கும் கிடைக்கவில்லை என்றுதான் சிரிக்கிறேன் என்று என் மனைவி புத்திசாலித்தனாமாகப் புரிந்து கொண்டுவிடுவார் ! ) 

                        பசங்கள் கேட்கும் போது தனக்கு வரும் மனைவி , அன்பானவராக ,படித்தவராக ,எங்கள் வீட்டில் ( பப்பி நாயிலிருந்து அவிநாசி மாமாவரை  ) எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு ( இவனுக்கே புரியாத ) தன்னையும்   புரிந்து கொள்பவராக, ( இவன் சம்பாத்தியத்தை எதிர்பார்க்காமல் ) வேலைக்குச்  செல்பவராக இருக்க வேண்டும் என்பார்கள் .

            இப்படிக் கேட்டபடிப்   பொறுத்தமாகத் தயாரிக்க, ஒரு மெசினைக் கூடக் கடவுள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஒருவேளை அவருக்கே இப்படிக் கிடைப்பது மாதிரி இருந்தால், வெண்ணிலாக் கபடிக்குழு  பரோட்டா சூரி மாதிரி, முதல்ல இருந்து ஆரம்பி என்று சத்தமாகக் கத்திக் கூப்பாடுப் போட்டு இருப்பார்.பாவம் அவருக்கே அந்த யோகம் கிடைக்கலையாம் . ( ஆமாம் அதை யோகம் என்பதா தண்டனை என்பதா ? சில யோகங்கள் என்று சொல்லுவார்கள் விவரமாகப் படித்துப்பார்த்தால் அது சாபம் போலவே தெரியும் ! )

மாங்கல்யம் தந்துனானே        – இந்த மங்கல நானை 
கண்டே பத்னாமி                         – உன் கழுத்தைச் சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் ) 
சுபாகே                                            – மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 
த்வம் சஞ்சீவச் சரதச் சதம்”  – நீ நூறாண்டுக் காலம் வாழ வாழ்த்துகிறேன்! 

இப்படிச் சொல்லித்தான் ஒவ்வொரு ஆணும், திருமணித்துக் கொள்கிறான் .தன்னை நம்பியே பெண்கள் வருவதாகவுமான நம்பிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் இந்த மேடையில் சொல்லப்படும் விசயங்களைக் கேட்டால் "உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்" என்ற வள்ளுவத் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை நினைத்துக் கொள்வதா இல்லை வந்து பாருங்கள் புரியும் என்று மானசீகமாக அட்சதைப் போடுவதா தெரியவில்லை .

                     என்று இவர்கள் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு போலக் கிடைத்த வரனை வைத்து நான் சந்தோசமாக வாழ்வேன் என்று பெண் தேடுபவரும் , கிடைக்கும் கணவனுடன் நான் சந்தோசமாக இருப்பேன் என்று ஒரு கியாரண்டியோ வாரண்டியோ எப்போது கொடுப்பார்களோ ? தெரியவில்லை .




ஆனால் இப்போது எனக்கு ஒரு விளம்பரம் பார்க்கும் போது ஆண்களுக்குத் திருமண வரம் Ultima Protek மூலம் கிடைத்து விட்டதாகத் தோணுகிறது . 

          ரெண்டு டின் பெயின்ட் வாங்கிக் கொண்டு ரன்பீர்க் கபூர் போல அமிர்தவர்ஷினி ராகம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை அதே ராகத்தில் அக்னி நட்சத்திரம் படத்தின் -  தூங்காத விழிகள் ரெண்டு உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று... என்று பாடிக்கொண்டு ஒவ்வொரு கல்யாண மண்டப வாசலில் நின்று விட்டால் போதும்.தற்போதைய தமிழ் பட அப்பாவி அப்பாக்கள் போல இருந்தால் உங்களுக்கான வர்ஷினியை எங்கிருந்தாலும் வாழ்ந்துத் தொலை என்று அனுப்பி வைக்கும் சாத்தியமிருக்கிறது !

இந்த விளம்பரத்தை ஒரு மில்லியன் வ்யூவர்ஸ் பார்த்து இருக்கிறார்களாம் .அதில் ஒரு வேளை ஒரு அழகிய வர்ஷினி வரச் சாத்தியம் இருக்கிறது . அப்படியும் இல்லையெனில் உண்மையான உங்கள் வருங்கால மனைவி வருவதற்காகவாது சொற்ப வாய்ப்பு இருக்கிறது அப்படிப்பட்டவர்கள்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும் ....

என்ற அதிசய ராகத்தில் பாடி மனதை ஆறுதல்படுத்திக் கொள்வோமே ! .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக