திங்கள், 13 பிப்ரவரி, 2017

”உங்கள் வீட்டின் இன்பம் - வானொலி “ World Radio Day



                           ”உங்கள் வீட்டின் இன்பம்” என்று தன்னுடைய அழகிய கைகளில் ஒரு மர்ஃபி வானொலிப் பெட்டியை ஏந்திக்கொண்டு நடிகை ஷர்மிளா தாகூர் தன்னுடைய 23 வயதில் வந்து நின்றால் எப்படி இருந்திருக்கும் ? அட உங்களுக்கு அவரை ஞாபகம் இல்லையா  ? பின்னாளில் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிக் கான் பட்டோடி (Mansoor Ali Khan Pataudi ) வீட்டில் விளக்கேற்றியவர்தான் அவர் . 1959–1984 ஆண்டுகளில் வாழ்ந்த அன்றைய இளம் வயதுடையவர்களின் ( கறுப்பு வெள்ளை ) சுவப்பனத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு  இருந்த சுந்தர நாயகி இப்படிச் சொல்லி ஏந்தி எதிரே நின்றால் அந்த வானொலிப் பெட்டியை யாராவது வாங்காமல் இருந்திருப்பார்களா அப்போது ? தெரியவில்லை .ஆனால் எங்கள் வீட்டில் அப்பா வாங்கிருந்தார் 1984 வரை எங்கள் உலகத்தின் ஜன்னல் அந்தக் கண்காணாத ஒலி அலைகளை உள்வாங்கிச் சுகமாகத் தந்த மர்ஃபி செல்லக் குழந்தைதான் . 

                இன்றைய டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் எனப் பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்ட தொடர்பு வாழ்க்கையை மறந்து (முடிந்தால்) சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள் .இது ஏதுமற்ற வானொலித் தொடர்பு மூலம் மட்டுமே உங்களுக்கான உலகத்துடனானத் தொடர்பை நிர்ணயித்துகொண்ட காலம் அது .அதற்காகக் கற்காலம் என்று நினைத்து விட வேண்டாம் .அதிகமில்லை 1985 முன்னால் பிறந்தவர்கள் அனைவருக்கும் இந்த வானொலிப் பெட்டியின் மகத்துவம் தெரியும் .செய்திகள் ,பாடல்கள் , ஒலிச்சித்திரம் ,சேவைச் செய்திகள் என்று மட்டுமே கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள் புரிந்து வைத்து இருந்த காலம் .


                 அப்போது இலங்கை வானொலிக்கு இருந்த மவுசு இன்று இத்தனை பண்பலை வானொலிகள் ஒட்டுமொத்தமாய்ச் சேர்ந்தாலும் முன்னால் நிற்க முடியாது .அவ்வளவுதூரம் நிகழ்ச்சிகளை அழகாகச் சுவாரசியமாக்கி வைத்து இருந்தார்கள் .ஒலிச்சித்திரத்தில் பாரதி ராஜாவின் 1979 களில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள் படத்தில் நடிகர் விஜயனின் ” மெட்ராஸ் கேர்ள் ‘ என்ற வார்த்தை இப்போது கூடச் சில சமயம் உள்ளே ஓடிக்கொண்டு இருக்கிறது. 

                அதிலும் விவசாயிகளின் உற்றத்தோழன் என்று வானொலிப் பெட்டியைச் சொன்னால் எந்தச் சங்கடமும் இல்லாமல் ஒத்துக்கொள்வார்கள் .வயல்களும் வரப்புகளும் வானொலி ஓசையை என்றுமே மறக்காது.சில மரங்களில் அடுத்த வேளை உணவு பித்தளைப் போசியில் (தூக்கு வாலியில்) தொங்கிக்கொண்டு இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒரு வானொலிப் பெட்டிக் காற்றிக் கையசைப்போடு பாடிக்கொண்டு .தூக்கனாங் குருவிகளாக அசைந்து கொண்டு இருக்கும். 

                   
            நாங்கள் திண்டுக்கல் நகரப்பகுதிக்குள் குடியேறிய பிறகு எங்கள் வீட்டில் கறுப்பு வெள்ளை டிவி ஆக்கிரமித்தது திருமதி இந்திராகாந்தி அவர்களின் இறப்புக்குப் (1984 ) பிறகுதான். அதுவரை வீட்டில் செல்லக் குழந்தை மர்ஃபி வீட்டின் பரணுக்குள் தஞ்சம் புகுந்தது .ஆனாலும் அப்போது ஒரு தீபாவளியில் அதிக விலையில் வாங்கிய ஃபிலிப்ஸ் பவர் ஹவுசில் ரேடியோவுக்குள் ரேடியோ  இருந்தது .ஆனால் நான் அதிகம் விரும்பியது நண்பர் சுகுமார் வீட்டில் இருக்கும் NATIONAL PANASONIC RADYO TEYP டூ இன் ஒன் மட்டுமே ரொம்பப் பிடிக்கும் .

               அந்த வானொலி வாசனை சில வருடங்களில் வேறு ஒரு அவதாரம் எடுத்தது .அது உலகில் உள்ள அனைத்து வெளிநாட்டுத் தமிழ் வானொலிகளோடும் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஆசைப் பிறந்தது . இங்கிலாந்தின் பிபிசித் தமிலோசை , சீனப் பீஜிஸ் வானொலி , அப்போதைய சோவியத் யூனியனாக இருந்த மாஸ்கோ வானொலி , வத்திக்கான் வானொலி , பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பட்டியல் நீண்டுகொண்டே போனது ..ஒரு கட்டத்தில் வானொலி மன்றங்களுக்கு நல்ல மரியாதை இருந்தது .உடனே “உலகச் சமாதானச் சகோதரர்கள் வானொலி மன்றம் “ என்று தொடங்கிப் பதிவு செய்து கொண்டோம் . சுழற்சி முறையில் தலைவர் பொருளார்ச் செயலாளர்த் தேர்வு செய்தோம் . வெளிநாட்டு வானொலியில் நல்ல மரியாதைக் கொடுத்தார்கள் . இன்னும் கூடச் சீனா வானொலி ஒரு வருடத்தில் அதிகக் கடிதம் எழுதியவர்களைச் சினாவுக்குப் பத்து நாள் இலவசச் சுற்றுப்பயணம் அழைத்துக் கௌரவப் படுத்துகிறது .எங்கள் நோக்கம் தமிழ் உலகெங்கும் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்ததை அவர்கள் ரசித்தார்கள் . 

          முக்கியமாக அப்போது ஒரு அந்தத் தொடர்புகள் மிகப்பெரிய பந்தாவை ஏற்படுத்தியது என்று கூடச் சொல்லாம் .உங்களுக்கு உள்ளூரில் ஒரு சுப்பனோ ,குப்பனோ கூடக் கடிதம் அனுப்ப ஆள் இல்லாத போது, ரஷ்யா,சீனா, ஃபிலிப்பைன்ஸ் என்று வெளிநாடுகளிலிருந்து கடிதம் வந்தால் எப்படி இருக்கும் ? .அந்தக் கடிதங்கள் நண்பர்களின் எல்லோர் வீடுகளுக்கும் எடுத்துச் சென்று பெருமையாக வாசிக்கக் கொடுப்பார்கள் .சில விமர்சனக் கட்டுரைப் போட்டிகளில் ஆறுதல் வெற்றிப் பெற்றதற்குக் கூடப் பெரிய மரியாதைக் கிடைத்தது .நண்பர்களின் தங்கைகள் எங்களை ஆச்சர்யத்துடன் இதைப்பற்றி விசாரிப்பார்கள் . அவர்கள் கட்டுரைப் போட்டிகளுக்கு எங்களின் இலவச ஆலோசனைகள்தான் முன் நிற்கும் .அந்தக் கடிதத்தின் மேலுறைகள் மீது ஒட்டப்பட்டு வரும் ஸ்டாம்ப்கள் மிகச் சாதுர்யமாகப் பிரித்து எடுத்துச் சேகரித்து வைப்போம் . 


         பல மறக்க முடியாத சம்பவங்களை வானொலி கேட்கும் பழக்கம் வரப்பிரதமாக்கியது . மதுரையில் நடந்த பிபிசித் தமிலோசைக் கூட்டத்தில் அதுவரை எங்கள் முகம் கூடப் பார்க்காதவர் செய்தி ஒருங்கிணைப்பாளர் சங்கர் அண்ணா எங்களை வாரி அணைத்துக்கொண்டது இன்னும் நினைவிருக்கிறது .சேலத்தில் நடந்த பீஜிங் வானொலியின் கூட்டத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட் தோள்பைகளும் , மென்மையான கைக்குட்டைகளும் இன்னும் ஞாபகத்திலும் பீரோக்களின் மூலையிலும் ஒளிந்திருக்கிறது .அப்போது இந்தியாடுடே தமிழ் இரண்டாவது புத்தத்தில்  - ’ ஜோல்னா பைகள் ‘  அணிபவர்களுக்கான மனோதத்துவம் தனித்துவம் பற்றி ஒரு கட்டுரை வந்து எங்களை இன்னும் உசுப்பேற்றியது. இன்னும் கூட ஜோல்னா பைகள் கற்றறிந்தவர்கள் அடையாளமாகவும் பேசப்படுகிறது . 

           விமர்சனங்கள் எழுதுவதன் மூலம் எழுத்து , வாசிப்பு , புதிய நட்புக்கள் கிடைத்தது. எழுத்தின் வளமை போதாத போது வாசிப்பு வலுத்தது . வானொலிகள் எங்களுக்கு எங்கள் வீட்டில் ,சுற்று வட்டத்தில் புதிய அழகையும் பெயரையும் கொடுத்தது . தபால் காரருக்கு அப்பா தீபாவளிப் பொங்களுக்கு இனாம் கூட்டினார் .எங்கள் தெருவின் மிக நீண்ட முகவரி எங்களின் சர்வதேசத் தொடர்பினால் சில வரிகளாகச் சுருக்கப்பட்டது .இதில் இன்னும் ஒரு சட்டச் சிக்கலும் ஏற்பட்டது.எங்கள் வெளிநாட்டுக் கடிதக் கவர்கள் ஓட்டையிடப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது . பயமில்லாத வயது என்பதால் நேரில் தலமைத் தபால் நிலையம் சென்று புகார் கடிதம் கொடுத்தோம்.சிலப் பாதுகாப்புக் காரணம் என்று பதில் வந்தது.அதற்குப் பிறகு அதெல்லாம் ராணுவத்தில் வழங்கப்படும் பதக்கங்கள் போலப் பெரிய விசயமாகப்பட்டது . 


                 2001 ல் திருப்பூருக்கு இடம் பெயரும் வரை எல்லாமே நன்றாகத்தான் போனது . எனக்குப் பிறகு என் உள்ளூர் நண்பர்கள் அதைத் தொடரவில்லை அதற்குப் பிறகும் சில வருடங்கள் நிகழ்ச்சிப் பட்டியல் வீட்டுக்கு வந்து கொண்டுதான் இருந்தது திண்டுக்கல் போகும் போதெல்லாம் எடுத்துப் பார்துக்கொள்வேன் .ஒரு பக்கம் வருத்தமாக இருக்கும் .

 நிறைய மறக்காத வரங்களை தந்த  அந்த வானொலி வாழ்கையை யாரிடமாவது சொல்லப் ஆசைப்பட்டு வெகுநாள் பதிவாக மலர ஆசைப்பட்டு இருந்தது இன்று உலக வானொலி நாள் . 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் பெப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டுத் தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அதைக் கண்டு பிடித்து உலகுக்கு அர்பணித்த 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனியை உங்கள் சார்பாகவும் இன்றும் வானொலியை ரசிக்கும் மக்களின் சார்பாகவும் அதன் மூலம் சினிமாவுக்குக்குள் காலெடுத்து வைக்கும் RJ க்கள் அனைவரின் சார்பாகவும் வணங்கிக்கொள்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக