Follow by Email

சனி, 11 மார்ச், 2017

பெண்ணியம் அப்படின்னா ? Feminism ?

 


                          முகநூலில், தோழி .சில்வியா பிளாத் ஏடா கூடமாக ’ஒரு சிறு குறிப்பு வரைக. பெண்ணியம் என்றால் என்ன? என்று ஆரம்பித்து வைத்தார் .. .எல்லோரும் உளறிக்கொட்டுபவராகத்தான் பதில் சொல்லிக்கொண்டு இருந்தோம் . நான் புத்திசாலியாக நினைத்துக்கொண்டு 'பெண்கள் பிடிக்காதுனு சொல்றவங்க ’ஹிப்போகிரிட்’ ஆகத்தான் இருப்பாங்க!’’ - என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் ஆனந்தவிகடன்.காம் கட்டுரையைப் பகிர, அதற்கும் அவர் கேள்விக் கேட்கவே நான் ஒரு நல்ல முடிவெடுத்தேன். காரணம் இது பொதுவெளி .கேள்விக் கேட்பது ஒரு பெண் தோழி. எல்லோரும் எதாவது சொல்லி இருக்கிற மானத்தையும் கப்பலேற்றக் கூடாது என்ற பாதுகாப்புணர்வு மேலோங்க ” ஆண்கள் பார்வையில் பெண்ணியம் எப்போதும் சரியாக வராது .நீங்களே சொல்லுங்கள் - Yes I surrender .” என்று நெடுஞ்சான்கிடையாக அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விட்டேன். ( திருமணமாகி 11 வருசத்தில் இந்த மாதிரித் தோல்விகள் சகஜம்தானே ? ) 

                 ஆனால் உண்மையில் இந்தக் கேள்வியை என்னை நோக்கி நானே கேட்டுக் கொண்டால் மலுப்பலில்லாமல் பதில் வருமா என்றால் சத்தியமாய் இல்லை.இந்திய ஆண்களின் சாபமா இல்லை உலக அளவிலும் மொத்த ஆண்களுக்குக் கிடைத்த சாபாமாத் தெரியவில்லை மொத்த வாழ்க்கையுமே ஆண் பெண் பற்றிய புரிதல் துளியும் இல்லாமலே வாழப் பழகிக்கொண்டு விட்டான். பிறந்தது முதல் பாலூட்டிப் பெண் ஆணின் உடமைப் பொருள் போலவேதான் பார்க்கவும் நடத்தவும் படுகிறாள்.அவன் ஒரு கார் வைத்து இருந்தால் அதற்கு அவன் மட்டுமே முதலாளி.அவன் விரும்பியது போலத்தான் அது நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அசேதனப் பொருளுக்கு உள்ள மதிப்புதான் தன்னோடு இருக்கும் பெண்ணுக்கும்.என் அப்பா என் அம்மாவை நடத்தி விதமே நான் அவன் மனைவியையும் நடத்த வேண்டுமெனெ எதிர்பார்க்கிறான் . 

                  ஒரு ஆணின் பொதுப்பார்வையில் நான்கு வகைப்படுகிறாள் .ஒன்று பெண் சிறந்தவள் என்று சொல்லி எதுவுமே தெரியாமல் வரலாறுகளை உத்திரவாதம் காட்டி உயர்த்திப் பிடிக்க. இரண்டாவதாகப் பயன் படும் பொருளாய், அம்மா , தங்கை , மனைவி , மகள் , தோழி இப்படி உறவுகளின் தொங்கு பாலங்கள் பட்டியல் நீள்கின்றது . மூன்றாவதாகப் பொதுத்தளங்களில் பெண்ணுரிமை , பெண்ணியம் பேசிச் சமூகத்திடம் ஒரு வித்தைக்காரனிடம் மாட்டிய குரங்குக்கு இன்னும் போதைப் பொருள் கொடுத்து ஆட விடச் செய்யும் முயற்சி .அதாவது இந்தச் சமூகம் அதில் இருக்கும் ஆண்களும் சில பெண்களும் கூடப் பெண் சுதந்திரம் என்ற பெயரில் வரம்பற்ற சூழ்ச்சிக்குள் சிக்க வைக்க முயல்கிறது . ஆடு நனைகிறதே என்ற ஓநாயின் அக்கறை. 

                     ஆனால் பெண் எல்லாக் காலங்களிலும் பெண்ணாகவே இருக்கிறாள் .ஏன் பெண்களைப் பார்த்து இந்தச் சமூகம் பயப்படுகிறது என்று யாரும் அறியார்.பயப்படுவதால்தான் பெண்ணுக்கு இத்தனை நிபந்தனைகள் , இலக்கணங்கள் , விதிமுறைகள் , ஒழுக்கச் சட்டங்கள் , வரையரைகள் .இந்தனையிலுமே ஆணை விடவும் பெண் வளர்ந்துவிடுவாள் என்ற பயத்தை விட ஒட்டுமொத்த மனித குலமே சீரழிந்து விடும் என்ற பயமே தலைவிரித்தாடுகிறது .ஏன் பெண்கள் மேல் இத்தனை பயம் ? பெண்மைக்குள் வெளிப்படாத சக்தி ஏதோ ஒன்று இருக்கிறதா ? அப்படி இருப்பதில் இந்தப் பூமி உருண்டைக்கு என்ன பேராபத்துக் காத்து இருக்கிறது ? கடவுள் படைக்கும் போது முதலில் பெண்ணைப் படைக்கவில்லை என்றே பரிணாமத்திற்கு எதிராக மதங்கள் பிடிவாதம் பிடிக்க எதுவோ ஒரு காரணம் இருக்கிறதா ? ஒரு வேளை அவள் இந்தக்கிரகத்தைச் சார்ந்தவள் இல்லையா ? வந்தேறு குடியா ? 

          ஆண் சில உண்மைகள் பேச வேண்டும் .இந்த உடலைப் பெற்றவள் ஒரு பெண் . இந்த உடலின் வடிவம் அதாவது அச்சுக் கூட அவளிடம் பெற்ற இனாம் . ஆண் அவளின் தாய்ப்பாலோ , ஆட்டுப்பாலோ , மாட்டுப்பாலோ ஏன் பாக்கெட் பால் தந்தாவது இன்று இருக்கும் இந்த உடலை வளர்த்திருக்கிறாள்.பிறகு அவள் கொடுத்த உணவிலும் தொடர்ந்து மனைவி என்ற துணையால் செய்து கொடுத்த உணவாலும்தான் இந்த உடல் வளர்ந்திருக்கிறது .அப்படிப் பட்ட உடல் மேல் சத்தியம் செய்து ஒவ்வொரு ஆணும் தான் பெண்ணைப் புரிந்து கொண்டு இருக்கிறோமா ? தன்னைப் போலத்தான் அவளையும் அவள் உணர்வையும் மதிக்கிறோமா என்று சொல்ல வேண்டும் . நிச்சயமாய் இல்லை . சமூகம் இன்றும் ஆணை ஒரு மிகப்பெரிய மதிப்பாகவும் , பெண்ணை வேறு ஒரு இடத்திலும்தான் வைத்தே பார்க்கிறது . இன்றைக்கு இருக்கும் மனோதத்துவப் புத்தகங்கள் கூட ஆணை வேட்டைத் தொழில் புரியும் பொருள் அல்லது உணவு தேடிக் கொண்டு வருபவனாகவும் , பெண் வீடு ,குழந்தைகள் பெற்றுக் காப்பது , ஆணின் நலம் பேணுபவளாக மட்டுமே உரக்கப் பேசுகிறது .ஆண் காலச் சூழலில் வேட்டை என்ற இடம் தவிர்த்துப் பொறுள் சேர்ப்பவனாக மாறிவிட்டதாகச் சொல்லுகிறது .பெண் அன்றிலிருந்தே உணவு ,வீடு , குழந்தை , இப்படித்தான் விதிக்கப்பட்டதாகப் போகிறது .ஆணைப் பெற்ற பெண்ணுக்குள் மரபணு மாற்றமில்லையாம் , ஆண் மட்டும்தான் சூழலியலின் தரம் கொண்டவனாகச் சித்தரிக்கிறார்கள் .ஏன் ? 


          நிறைய ஏன்கள் குவிகிறது. அறிந்து கொள்ள உண்மைத் தெரிவுகளின் தொடக்கப் புள்ளி அவனவன் உள்ளத்தில் குவிந்து கிடக்கிறது .காரணம் நான் என் அப்பா என் அம்மாவை நடத்தியதை மனதில் வைத்துக்கொண்டுதான் என் மனைவியை எதிர்கொண்டு இருக்கிறேன் .பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை வளர்த்த போது சொல்லிக்கொடுத்தைதான் நானும் கிளிப் பிள்ளைப் போல எனப் பெண் குழந்தைகளுக்கும் சமூகச் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருக்கிறேன்.பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் , திரைப்படங்களில் எல்லாவற்றிலும் விளம்பரங்களிலும் கதாநாயகன்கள் தங்கள் மனவியை (கதாநாயகிகளை) சென்சார் போர்டே கதறும் அளவுக்குத் தோல் உறித்து நாட்டு மக்களுக்கு அர்பணிக்கும் போது எதுவும் சொல்லாமல் பார்த்து விட்டு அதை மட்டும் மறைத்து விட்டு விமர்சனம் பண்ணுகிறோம் .அதே பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்திக் காதலிகிறாள் என்று தெரிந்து விட்டால் ஆனவக்கொலை வரை அருவாள் தீட்டுகிறோம் .உடன் வேலை பார்க்கும் பெண் யாரிடாமாவது சிரித்து விட்டால் வேறு பெயர் வைக்கிறோம் .அதே பெண் நம்மிடம் வந்து பேசிப் பழக்கம் வைத்துக்கொண்டால் தப்பே செய்தாலும் காப்பாற்ற முன் நிற்கிறோம் வரிந்து கட்டிக்கொண்டு .சாலையில் கொஞ்சம் வேகமா ஒரு பெண் வண்டி முன் சென்று விட்டால் ஏதோ ஒரு கோபம் கௌரவம் லாரண்ஸ் முனியை விட நாக்கை விட உள்ளே கருவுகிறது .அவளிடம் ஏதோ ஒன்று குறை தேடி முத்திரைக் குத்திக்கிழிக்கிறது . 

                 வளர்ப்பால் , சமூகத்தால் , மத ஒழுக்கம் என்ற போர்வையால் , மீடியாக்கள் ,பத்திரிக்கைகளால்,பெண் எப்போதும் ஒரு சகஜீவியாக ஏன் பார்க்க முடியவில்லை .இது எங்கோ மாற வேண்டிய விசயமல்ல .இனியாவது என் வாழ்க்கைத் துணையை,மகளை,உறவை,நட்பை,தோழியை,உடன் பணி புரிபவரை ,ஏன் எதிர்படும் சகலப் பெண்ணையும் பெண்ணாகப் பார்க்க முயற்சிக்கத் தொடங்கினால் அடுத்தத் தலைமுறையாவது அவளைச் சகஜீவியாகப் பாவிக்கத் தொடங்கும் விடியல் வரலாம்.! 

இப்படிக்கு , 
மேற்படி  பாமரப் புத்தியுள்ள கூட்டத்தி  ஒருவன்தான்  ஆனால் திருந்த நினைக்கும் ஒருவன் !   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக