புதன், 17 மே, 2017

திரு. ரஜினிகாந்த் சமூகத்தின் மனமா?


அவரின் தீவிர ரசிகர்கள் இந்தப் பதிவை வாசிப்பதைத் தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

  ஒருமுறை எனது நண்பரின் தங்கை கல்யாணமான  முதல் நாள் அப்போது வெளியான சில நாட்களேயான ரஜினி படத்திற்கு மொத்தக் குடும்பமே ரிசர்வ் செய்து போயிருந்தோம்.நண்பரின் குடும்பத்தில் அனைவருமே ரஜினி தீவிர ரசிகர்கள் இது பத்தாதென்று அவர்களின் மாப்பிள்ளையும் ரஜினி ரசிகர் .ஒரு காட்சியில் நாயகி ரஜினியை கை ஓங்கி அடிப்பது போன்ற காட்சி ( நல்ல வேளை அடிக்கவில்லை . ) உடனே எங்களுக்கு பின்னால் இருந்த பல ரசிகர்களிடமிருந்து ஒரே கூச்சல்.ஒருத்தர் இன்னும் கோபவேசமாக காதில் கேட்க முடியாத தடித்த வார்த்தைகளைப் பேச ,  சாதுவான நானே எழுந்து விட்டேன்.நண்பர் தடுத்து இதெல்லாம் சகஜம் ,ரிலீஸ் ஆன சில நாளில் இப்படித்தான் கண்டுக்காதேன்னு அழுத்தி உட்காரவைத்தார்.இப்படிப்பட்ட ரஜினி ரசிகர்கள் மத்தியில்தான் நான் வாழ்கிறேன் .

 ஒரு விசயத்தைப் பிடிக்கவில்லையென்றால் ஆயிரம் காரணம் சொல்லலாம் .ஆனால் ஒரு விசயம் பிடித்துப் போக ஒரே ஒரு காரணம் போதும்.எனக்கு ஏனோ அவரைப் பிடிக்கிறது அவ்வளவுதான் ! அப்படித்தான் ரஜினிகாந்த் என்பவரின் தீவிர ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள் .அப்படிப்பட்ட ரசிகமனம் நோகக் கூடாது என்பதால்தான் இதை வாசிக்க வேண்டாம் என்ற விண்ணப்பம் ! 

நாம் இப்படி ஆரம்பிப்போம் ...ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ? 

                  மார்லின் பிராண்டோ இதற்கு விடை சொன்னதையே இங்குப் பார்ப்போம் .‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’ ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது. 

திரையில் ரஜினி ! 

                அப்படிப்பட்ட அன்றைய சமூகத்தின் தேவையைப் பூர்த்திச் செய்ய வந்த அவதாரம் போலத்தான் ரஜினி என்ற சிவாஜி ராவ் கைக்வாட் இருந்தார்.1976 ல் கே.பி சாருக்கு அவர் எதிர்பார்க்கும் நடிப்பிம் ,இமேஜில் ,இயல்பில் ஒரு கான்ட்ராஸ்டான ஆள் தேவை கே.பிக்கு அவருக்குள் இருக்கும் இன்னொரு ஆளை வெளியே கொண்டுவந்த முயற்சிதான் ’மூன்று முடிச்சின்’ காளி. மக்களின் மன நிலையும் அதோடு மிகவும் பொருந்திப்போனது. மக்களின் மனநிலை எப்போதுமே இப்படித்தான் இருக்கிறது .ஒரு நல்ல விசயத்தை நிரூபிக்க மோசமான உதாரணப் பாத்திரங்கள் தேவைப்படுகிறது .அப்படித்தான் ரஜினி என்ற கலைஞனுக்கு விசிட்டிங் கார்டு அன்று உருவாக்கப்பட்டது .அதாவது காளி போன்ற ஒரு ஆயுதம் தேவைப்பட்டது . அதை 16 வயதினிலே , காயத்ரி வெற்றிகள் இதைத்தான் நிருபித்தது ! 

”ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளை திரையில் அனாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியனாக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, எல்லாத் தவறுகளோடும் ஒருவன் நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்பக் காலப்  பாசங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலு சேர்த்தன -தி இந்து.  


            ரஜினியின் கொடி 1980ல் உச்சத்தில் பறந்த நாட்களில் அவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் ( ஹிந்திக்கு 1983  'அந்தா கானுன்' மூலம் போனார் )   என்று மிகப் பிசியான நடிகராக இருந்தார் .ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குள் 54 படங்கள் நடித்திருந்த சமயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு அவரைப்பற்றிப் பத்திரிக்கைகளுக்குத் தீனியாக இருந்தது அப்போது ரஜினிக்கு தினம் ஒரு பெண் தேவை என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார்.‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’ 

        இதுதான் ரஜினியின் பலம் என்று கூடச் சொன்னார்கள் .எதார்த்தம் .68 வயதிலும் 160 படங்களுக்கு மேல  தமிழ்த்திரையுலகம் ஒரே சூப்பர் என்று கொண்டாடிக்கொண்டு இருப்பதும், நிரந்தரமான சிவப்புக்கம்பளம் விரித்து வைத்திருப்பதுவும் இந்த எதார்த்தம்தான் தேடித்தந்தது. அவருக்கு மட்டுமே .அவரோடு 1975 லிருந்து வளர்ந்தவர்கள் அவரை விட்டு எப்போதும் விலகாதவர்கள்தான் . காரணம் எத்தனை விமர்சனம் வந்தபோதும் அவரை விட்டுக் கொடுக்காதவர்களாகத்தான் இருக்கிறார்கள் அசையாச் சொத்தாக இருக்கிறார்கள் .ஆனால் அந்த ரஜினி பல தேவைகளால் உருவாக்கத் தொடங்கினார்கள் அவரும் அவர்களைப் பயன்படுத்தித் தன்னை உருவாக்கிக் கொண்டார்.நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் கமலோடு போட்டியாகவே இருந்து வருகிறார்.அது அவரின் தொழில் களம் . 
ரைட் போகலாம் ! 

வாழ்க்கையில் ரஜினி ! 

           சொந்த வாழ்க்கையில் திருமதி லதாவை விவாகரத்துப் பண்ணப் போவதாகச் சொன்ன போதும் ,தன்னுடைய சௌந்தர்யா,ஐஸ்வர்யா அவர்கள் திருமண முடிவுகள் ,சின்னப் பெண் திருமண விவாகரத்து , ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஐ.நா. சபையில் ஒரு பரதநாட்டியம் ஆடியதால் ஏற்பட்ட சர்ச்சை வரை இன்னும் எத்தனையோ அவர் பேசாத பக்கங்கள் அது சொந்தப் பகுதி .அதைப் பேசும் உரிமை யாருக்கும் இல்லை.
ரைட் போகலாம் . 

ஆன்மீகத்தில் ரஜினி ! 

             ராகவேந்தர்த் தொடங்கி - இன்றைய பாபாஜியின் சீடரின் சீடரான பரமஹம்ச யோகானந்தரின் “தெய்வீகக் காதல்’ காதல் புத்தகம் வெளியிடுகிறார். ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்து ஒழுக்கத்தைக் கற்றேன். ராகவேந்திரரிடம் இருந்து பக்தியைக் கற்றேன். ரமண மகரிஷியிடம் இருந்து ‘நான் யார்?’, என்பதை எனக்குள்ளேயே தேடக் கற்றுக்கொண்டேன். தயானந்த சரஸ்வதியிடம் இருந்து சமூகப் பிரச்சினைகள், வேத நுணுக்கங்களை அறிந்தேன். சச்சிதானந்த சுவாமிகளும் எனக்குக் குரு.என்றவர் ஒரு கட்டத்தில், நான் சம்பாதித்த பணம், புகழ், பெயர் எல்லாவற்றையும் ஒரு பக்கத்திலும், ஆன்மிகத்தை இன்னொரு பக்கத்திலும் வைத்துக்கொண்டு உனக்கு எது வேண்டும்? என்று கேட்டால், ‘ஆன்மிகம் தான் வேண்டும்’, என்பேன். அந்த அளவுக்கு அதில் ஒரு ‘பவர்’ இருக்கிறது என்கிறார். இதுவும் அவர் தனிப்பட்ட விசயம்.அவர் யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம். 
ரைட் போகலாம் ! 


பொது வாழ்வில் ரஜினி !
 
            ஒரே ஒரு முறைத் தன்னுடைய கார் தடுத்தி நிறுத்தி சோதிக்கப்பட்டு ஸூட்டிக்குக்குத் தடையேற்படுத்திய விவகாரத்தில் அந்த ஆட்சியைக் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று ஒருவரை விமர்சித்து விட்டு அவர் அரசியல் விமர்சகர் ஆனார். அடுத்த அவரின் படங்களில் அதைப் பிரதிபலித்தார் ஆனால் அவர் ஆதரித்தவர்கள் அவரை அறிமுகப்படுத்திய திரைத்துறைக்கே கடுமையான பிரச்சனை கொடுத்த போது எதுவுமே செய்ய இயலாமல் போனார் என்பதுவும் எல்லோரும் அறிந்தது .அப்போதும் அவருக்கு ஒரு அரசியல் வாய்ப்பு இருந்தது .வருவதற்குத் தனக்குத் தடையாக இருப்பதற்கு ஒரு மூத்த அரசியல்வாதியைச் சொன்னார்.பிறகு சில ஆண்டுக்கு முன் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னவர் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது மலர்ச் செண்டுடன் முன் வரிசையில் வாழ்த்தச் சென்றார். 

நாம் இறங்குமிடம் வந்து விட்டது . 
இந்த ரஜினிதான் இன்று யோசிக்க வைக்கிறார் . 

             யாரை வேண்டாம் என்றாரோ அவரிடம் போகும் போது ,என்ன காரணத்தால் அவர் தனக்கு  வேண்டும் காரணம் ரசிகனுக்கு சொல்லவில்லை .அவரையே நம்பி இருக்கும் பாமர ரசிகன் என்ன செய்வான் ? எப்படிப் புரிந்து கொள்வான் ? 
 
              வருவேன் .சரியான நேரத்தில் வருவேன் என்று சொன்னவர் .வேண்டாத நேரத்தில் வருகிறார் .ஆமாம். அரசியல் என்ற பணம்,ஊழல்,ஆதிக்கம் என்ற பிரம்மாக்கள் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் போது அவரின் ரசிகனின் செல்வாக்கை - வாக்காக மாற்ற யாருக்கோ தேவைப்படும் கருவியாக வருகிறார் . ரஜினியின் இயல்புக்கு அரசியல் பொருந்தாது. நாமெல்லாம் காமராஜரையே வீட்டுக்கு அனுப்பியவர்கள்.இனியாவது கவர்ச்சி என்ற ஒரு முகத்தைப்பார்த்து மக்கள் தங்கள் வாக்கை ,உரிமையை அடகு வைக்க வேண்டாம் என்பதே என்னைப்போல பலரின் கருத்து ! இல்லை நல்லவர்கள் வந்து அரசியலை சுத்தப்படுத்த வேண்டும் அதற்கு ரஜினி வேண்டும் என்ற வசனமெல்லாம் படத்தோடு சரி . எந்த அரசியல் கட்சியும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவே சில ஆண்டுகள் பிடிக்கும் .மக்களுக்கு நல்லது செய்ய தன்னை நிருபித்துக்கொள்ளவே இது போதாது .அப்புறம் பழைய குருடி கதவைத் திற ....வெறும் வெண் தாமரைச் சின்னமும் ,கட்சிக்கொடியும் முடிவில் கதம் கதம்தான்.அப்புறம் ஆயிரம் கட்சியுடன் ஆயிரத்தோறாவதாக அவர் கட்சிக் கொடி பறக்கும் .யாருடன் அவர் கட்சி கூட்டனி என்று முதல் பக்கத்தில் கேள்வி கேட்டு விட்டு கடைசிப் பக்கம் வரை யாருக்குமே தெரியாமல் போவார் .

ரஜினி சமூகத்தின் மனமா ? 

"எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தைநாம் ரஜினியிடம் கொடுத்திருக்கிறோம்; ஏனென்றால்,ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை! ‘தி இந்து’ 

ரஜினிக்கு நல்ல மரியாதை இருக்கிறது .வெகு பலரின் மனதில் இடம் இருக்கிறது .இது போதும் என்று அவருக்கு ஆண்டவன் சொல்ல மறுக்கிறாரோ ? 
நாமாவது நமக்குள் இருக்கும் ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்லலாமா ?











1 கருத்து:

  1. Rajani is like Gandhi. So many people fought for freedom and died. Gandhi also died before India become a republic. Before India become a republic this country was like Japan, Saudi of today having USA cantonement with kings and British contonement. It suited congress to make a claim of slavery . Gandhi was made father of nation thirty years later. Black money and success of Rajani films has a close link. Same hero, same music director, good heroines, Rajani films bomb in box office. When the producer is also making money in politics film is a great success. Paying 30 percent tax showing collection is a good way to bleach the money

    பதிலளிநீக்கு