Follow by Email

சனி, 22 ஜூலை, 2017

திரு.கோபிநாத்துக்கு அன்பு வணக்கங்கள் .
          அரசுக்கு எதிராக மக்களே தெருவில் இறங்கி டாஸ்மாக் கடைகளைத் துரத்தி அதற்காகத் தடியடி வாங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் மனம் விட்டுச் சிரிக்கும் நிகழ்ச்சியில் சிரிப்பு என்ற பெயரில் குடிகாரத்தனத்தையும் , பெண்கள் வேசமிட்ட ஆண்களையும் வைத்து மது,மாது என்ற இரண்டையும் கொண்டாடத் தொடங்கியது ஏன் என்று தெரியவில்லை .என்ன பஞ்சம் வந்தது உங்கள் தொலைக்காட்சி இயக்குனர்களுக்கு ?

          நாடகங்கள் போன்ற  நிகழ்ச்சிகளிலும் போதை என்ற வஸ்தைத் தெரியாமல் கலப்பது தொலைந்து போகட்டும். சிரிப்பு நிகழ்சியைக் குடும்பத்துடன் உட்கார்ந்தால் தவறாமல் இடம் பெறுவது போதையில் காமெடி பண்ணுவது , ஆண்கள் பெண் வேசமிட்டுப் பெண்கள் நடத்தையைக் கேவலத்தின் உச்சத்திற்கு இழுத்துக் கொண்டு போவதே வாடிக்கையாகி வருகிறது. இது எப்படிக் காமெடியில் சேரும் ? இதனை உருவாக்கும் இயக்குனர்களுக்குச் சமூகப் பொறுப்பு இல்லவே இல்லையா ? அவர்கள் வீட்டுக் குழந்தைகள் முதல் எல்லாருமே இதைப் பார்க்கத்தானே செய்வார்கள் ? பார்ப்பதால் இந்தப் போதையில் உளரும் காமெடிக் கன்னி வெடிகள் பிஞ்சு உள்ளங்களில் பதியாதா ? அது இதைப்பார்க்கும் நிரந்தர நடுவர்களாக இருப்பவர்கள் யாவரும் உச்சி முகர்ந்து கொண்டாடி மகிழ்கிறார்கள் .அதிலும் ஒருவர் தனக்கு இருக்கும் குடிக்கும் பழக்கத்தை ஏதோ சர்பட்டம் வாங்கியது போலப் பெருமையாகப் பேசிக்கொள்கிறார். 


 ஆண்கள் பெண் வேசமிடுவது தவறல்ல .ஆனால் அது ஒரு அதீத ஆணாதிக்க அருவெறுப்பை உரித்துக்காட்டிக் கொள்ளச் செய்யும் அவலமாகவேத் தெரிகிறது .ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதை அவளுக்குச் சமூகம் சொல்லித்தரும் பாடம் மிக முக்கியம் .அவள் மேல் இருக்கும் தாய்மையும் அன்புமே இன்று வரை மிக உயரத்தில் வைத்து இருக்கிறது .அதைத் தள்ளிக் கீழே சாய்க்கும் விதமாக ஆடைகளை விலக்கிக் கொண்டு அலைவதும் ,இரட்டை வசனங்களால் ஆண்களே அருவெறுக்கும் வசனங்களை உச்சரிப்பதும் அதற்குக் கை தட்டு வாங்குவதும் எப்படி காமெடிக்கு மரியாதை சேர்க்கும்

       உங்களால் சிரிக்க வைக்க முடியவில்லையானாலும் பரவாயில்லை .சீரழிய வைத்துவிடாதீர்கள் .மிகப்ப்பெரிய செய்தி சேனலுடன் இணைத்துக் கொண்டு தொடங்கிய நீங்கள் செய்திகளே இல்லாமல் இவ்வளவு தூரம் வளர்ந்து  பாராட்டுப் பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் நோக்கி வளர்ந்து கொண்டு இருப்பதன் காரணம் உங்கள் தொலைக்காட்சியின் வித்தியாசமான நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்ட கவனமேயாகும் .

    கல்யாணத்திற்கு முன் வைத்துக்கொண்ட காதலைக் கூட விவாதிக்கும்  நீயா நானா விவாதம் நடத்திக்கொண்டு இருக்கும் தாங்கள்  தயவு செய்து உங்கள் நிகழ்ச்சிகளில் இது சரியா என்று மக்கள் அரங்கில் விவாதித்து மக்கள் உணர்வுகளுக்கு மரியாதைத் தாருங்கள் என்ற விண்ணப்பத்தை உங்கள் தொலைக்காட்சி மீது வைத்திருக்கும் உரிமையும் அன்பும் மீதுள்ள அக்கறையாக பதிவு செய்கிறோம்.நன்றி.

வெள்ளி, 30 ஜூன், 2017

இயேசுவின் இரண்டு வரலாறு ஒரே குரல் !


            ஒரு உறைக்குள் இரண்டு கத்தி வைத்துக்கொள்ள முடியாது .ஆனால் இரண்டு அதி உன்னத உலகை மாற்றிய வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னனியாகக் கொண்ட வேவ்வேறு இடங்களில் உருவான இரு புத்தகங்கள் ஒரே விசயத்தில் இணைவதை எதேச்சையாக வாசிக்க நேர்ந்ததே இந்த மதிப்புரையின் அடிநாதம்.ஆனால் காசிக்குப் போனவர்களின் யாத்திரை ராமேஸ்வரத்தில் முடிய வேண்டும் என்ற ஐதீகம் போல முதல் புத்தகம் வாசித்தவர்கள் இரண்டு புத்தகத்தை நிச்சயம் வாசிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

     ஆர்.சி.சம்பத் அவர்களின் எழுத்தில் உருவான இயேசு கிறிஸ்து மக்களோடு 1000 நாட்கள் என்ற புத்தகத்தை நூலத்திலிருந்து எடுத்துச் சென்று முழுவது வாசிக்க முடியாமல் கால நீடிப்புச் செய்யப் போன இடத்தில் ஸ்வீடன் நாட்டின் பேர் லாகர் குவிஸ்டுவின் "Par Lagerkvist" என்ற படைப்பான பாரபாஸ்என்ற நாவலைத் தமிழில் திரு.க.நா.சுப்பிரமணியம் மொழிபெயர்பு செய்தது கிடைத்தது.

        முன்னது இயேசுத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மூன்று ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறது.அதாவது மக்களோடு 1000 நாட்கள் இயேசுவின் வாழ்கையில் அவர் செய்த அற்புதங்கள் பற்றிப் பேசத்தொடங்கி,அவர் தனது கொள்கையால் மக்களை ஈர்த்து வழி நடத்திச் சென்றதையும் அதைப் பிடிக்காத யூதர்கள் அவர்களின் உட்பிட்ரிவான பரிசேயர் மற்றும் சது சேயர்களின் சூழ்ச்சியால் இயேசு சிலுவையில் ஒரு வெள்ளிக் கிழமையன்று சிலுவையில் அறைந்து மரித்துப் பின் மூன்று நாட்களுக்குப் பிறகு தோன்றியதும் அதற்குப் பிறகு அவருடைய சீடர்களுடன் நாற்பது நாட்கள் தங்கியிருந்த வரை பேசி முடிக்கிறது !

        பின்னது ( பாரபாஸ் ) கொல்கொதா மலையின் சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்க விடப்பட்டு இயேசு உயிர் நீத்ததை உடனிருந்து தன் கண்களால் கண்டவர்களாக அவரோடு தண்டனைக்கு உள்ளான இரண்டு திருடர்கள் மற்றும் அன்னை மேரி , சகோதரி மேரி மாக்டலென்,வெரோனிகா.சைமன் பீட்டர்,ஜோசப் மேலும் ரோமப் பேரரசின் சிப்பாய்கள் என்று மட்டுமே உடனிருந்தனர் என்று எல்லோருமே நினைக்கின்றோம் ஆனால் அங்கு மறைவிலிருந்து ஒரு உருவம் கவனித்துக் கொண்டு இருந்தாகவும் அவன் பெயர் பாரபாஸ் என்பதாகவும் அவன் இயேசுவின் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து வாழ்வின் இறுதியில் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதை வரை அவனுடைய கோணத்தில் பேசுகிறது .

சரி யார் இந்தப் பாரபாஸ் ?

         ஈவு இரக்கமற்ற கொள்ளைக்காரன் .இவன் குற்றம் நிரூபிக்கப்பட்டுச் சிலுவையில் அறைந்து கொள்வதற்காகக் காத்திருப்பில் இருந்த போது அந்தக் கால வழக்கப்படி பாஸ்குத் திருவிழாவின் போது ஒரு குற்றவாளிக் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யும் வழக்கம் இருந்தது.அதே சமயம் இதே தண்டனையை இயேசுவிற்கு வழங்க யூத குருமார்கள் கட்டாயப்படுத்திய போது அப்போது ரோம அரசின் அதிகாரி போன்ஞ் பிலாத்து தன் மனம் இடம் கொடுக்காமல் இயேசுவை விடுவிக்க மக்கள் முன் வைத்த போது அங்கிருந்த மதவெறியர்கள் பாரபாஸை விடுவித்து இயேசுவைக் கொல்லச் சொன்னார்கள்.அப்போது விடுவிக்கப்பட்டவன்தான் பாரபாஸ்.அப்படித் தப்பித்த பாரபாஸ் இயேசுவின் தியாகத்தில் நம்பிக்கை இல்லாமல் தொடரும் வாழ்க்கை மொத்தமும்தான் பாரபாஸ் எனும் நாவல்

        வெவ்வேறு களங்களில் உருவான புத்தகம் என்றாலும் இரண்டு கதையும் சந்திக்கும் புள்ளிகள் சுவாரஸ்யமானது . இயேசு கிறிஸ்து மக்களோடு மக்கள் 1000 நாட்கள் புத்தகத்தின் 112 ம் பக்கத்தில் இந்தப் பாரபாஸ் பற்றிச் சில வரிகள் சொல்லப்படுவதோடு முடிகிறது .ஆனால் பாரபாஸ் கதையாக்கத்தில் அதன் தொடர்ச்சி போல இயேசு கொல்லப்பட்ட இரண்டாவது நாள் பாரபாஸ் இயேசுவின் முக்கியச் சீடர்களுல் ஒருவரான சைமன் என்ற பீட்டரை ( இவர் முதல் போப்பாக இருந்தார் ) எதேச்சையாகச் சந்தித்து இயேசுவின் பேசுகிறான்.அப்போது அங்கு வந்த கிறிஸ்து அபிமானிகள் பாரபாஸை விரட்டி அடிக்கிறார்கள் .

     இரண்டாவதாகப் பெத்தனி என்ற ஊரில் லாசரஸ் என்ற ஒரு இளைஞன் இறந்த பிறகு இயேசு உயிர்ப்பித்தார் . ( இ.ம.ச 1000 நாட்களில் புத்தகம், லாசரஸ் நான்கு நாட்களில் உயிர்பிக்கப்பட்டான் என்கிறது ஆனால் பாரபாஸ் , லாசரஸ் 100 இரவுகளும் பகலையும் கடந்த பிறகு உயிர்ப்பிக்கப்பட்டான் என்கிற முரண் இருக்கிறது ) அந்த இளைஞனைப் பாரபாஸ் சந்தித்து உரையாடி விட்டு வருகிறான்.


        மூன்றவதாக முற்றிலும் முரணான ஒரு செய்தி . இயேசுவின் மூடியக் கல்லறையை மூன்றாவது நாள் அதிகாலை மின்னலைப் போன்ற உருவமும் வென்பனி போன்ற உடையும் கொண்ட ஒருவன் வானத்திலிருந்து இறங்கி வந்தார் என்றும் அவர் கல்லறையை மூடியிருந்த கல்லை அப்பால் உருட்டி விட்டான்.அப்போது அங்குக் காவல் புரிந்து கொண்டு இருந்த ரோமானியப் படை வீரர்கள் கண்டு பயந்து ஓடினர்கள் என்கிறது இ.ம.ச 1000 நாட்கள்.

    ஆனால் பாரபாஸ் , தீப்போர்வைப் போர்த்தியிருந்த ஒரு தேவதை வானத்திலிருந்து வேகமாகப் பறந்து வந்து ஈட்டி போன்ற கையால் கல்லறையை மூடியிருந்த கல்லை அப்பால் உருட்டித் தள்ளியது என்கிறது .அப்போது அங்கு உதடு பிளந்த ஒரு பெண்ணும் இருந்தாள் அவள் இதை நேரில் கண்டதாகப் பாரபாஸிடம் சொல்கிறாள் ஆனால் அங்கிருந்த அவனால் அதைக் காண முடியவில்லை என்றும் சொல்கிறது .நம்பிக்கையற்றவர்கள் உண்மையைக் காண இயலாதவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது .

       இந்த இரு வேறு புத்தகங்களும் ஒரு சில புள்ளிகளில் சந்தித்தாலும் தேவ ஆட்டுக்குட்டி எனப்படும் இயேசு தன் வாழ்நாளை எளிய மக்களுக்காகத் தன் உயிர் தியாகம்  இயேசுவின் இரண்டு வரலாறுகளில்  ஒரே குரலாக ஒலிக்கிறது  .


செவ்வாய், 6 ஜூன், 2017

நோன்புக்கஞ்சி ஞாபகம் !

மங்களத்தில் எனது பையனுக்குச் சீருடைத் தைய்து வாங்கிக்கொண்டு கிளம்பிய போது பண்ணிரண்டு வயதிருக்கும் ஒரு பையன் லிஃப்ட் கேட்டுக் கை நீட்டினான்.அவன் கையில் ஒரு தூக்கு வாலி இருந்தது .எங்க போகணும் என்றேன் .குளத்துப்பாளையம் வரைக்கும் என்றான். அழைத்துக்கொண்டேன் .பொதுவாய் நான் லிஃப்ட் கொடுக்கும் போது யாரிடமும் அவர்கள் போகும் இடம் மட்டும்தான் கேட்பேன். பக்கமாக இருந்தால் நான் போக வேண்டிய இடத்தைத் தாண்டிக்கூட சென்று விட்டு வருவது வழக்கம். கூட்டிக்கொண்டு போவதால் இவனிடம் நாம் ஏன் சொல்லவேண்டும் என்ற தடுப்புணர்வு அவர்களுக்குள் இருக்கலாம்.உதவிச் செய்யும்போது அப்படிக் கேட்பது கொஞ்சம் அசிங்கமாகவே எனக்குப் படும்.ஆனால் அந்தப்பையனிடம் ஏதோ பேச வேண்டும் என்ற உள்ளுணர்வு தூண்டியது .

கையில் என்னப்பா என்றதற்கு ,நான் மங்களம் பள்ளிவாசலிருந்து நோன்புக் கஞ்சி வாங்கிட்டு வந்து கொண்டு இருப்பதாகவும் அடுத்து வாங்கிய இந்தக் கஞ்சிய வீட்டில் வைத்து விட்டு அடுத்துக் கோழிப்பண்ணைப் பள்ளிவாசலில் ஐந்து மணிக்குத் தருவார்கள் போக வேண்டும் என்றான் .சரி வரும்போது எப்படி வந்தாய் என்றதற்கு நடந்துதான் என்றான்.நீ நோன்பு வைத்திருக்கிறாயா என்றேன்.ஆமாம். எங்கள் வீட்டில் எல்லோரும் என்றான். ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து மீண்டும் திரும்பி வரவேண்டும் .என்ன படிக்கிறாய் என்றதற்கு எட்டாவது போகிறேன் என்றான் .உன் பெயர் என்ன என்றதற்கு முகமதுத் தர்வீஸ் என்றான் .அப்படின்னா என்ன அர்த்தம் என்றதற்கு, அல்லாவுடைய பெயர் என்றான்.

நான் இதே வயதில் திண்டுக்கல் கிழக்குக் கோவிந்தாபுரம் குடும்பத்துடன் குடிபெயர்ந்து வந்த போது அங்கிருந்த பள்ளிவாசலில் இரண்டாவது அண்ணன் பள்ளித்தோழர் அப்துல்கௌஸ் வாங்கித்தருவார் .சுடச்சுட அதைக் குடிப்பதில் என்னவோ ஒரு சந்தோசம் .அதிலும் டோக்கன் வாங்கி வைத்து விட்டால் யார் போனாலும் தருவார்கள் என்பதால் நாங்களே கூடப் பள்ளிவாசல் போய் வாங்கி வருவோம்.நான் போகாவிட்டால் கௌஸ் அண்ணன் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டுப் போய் விடுவார்.

அதே போல அந்தத் தெருவில் இரண்டு வீட்டிலிருந்து ரமளான்,பக்ரீத் காலைத் தொழுகை முடிந்தவுடன், பெரிய தட்டில் இலை மூடிக் கொண்டு வந்து தருவார்கள் .அந்தக் குருமாவின் மணமும் கொஞ்சம் உப்புக்கம்மியான பிரியாணி வாசனையும் சாப்பிட்டு முடித்து இரண்டு நாள் ஆனாலும் வீட்டை விட்டுப் போகாது . தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டிலிருந்து வீட்டில் கடைசிப்பையன் என்பதால் புது என்னிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.எனக்கு ஒரு பிடித்தமான வேலை .

காலத்தின் பின்னோக்கிய கதவை முகமதுத் தர்வீஸ் என்ற இறையருள் எனக்கு இன்று சொல்ல விரும்பியிருக்கிறது .புதன், 17 மே, 2017

திரு. ரஜினிகாந்த் சமூகத்தின் மனமா?


அவரின் தீவிர ரசிகர்கள் இந்தப் பதிவை வாசிப்பதைத் தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

  ஒருமுறை எனது நண்பரின் தங்கை கல்யாணமான  முதல் நாள் அப்போது வெளியான சில நாட்களேயான ரஜினி படத்திற்கு மொத்தக் குடும்பமே ரிசர்வ் செய்து போயிருந்தோம்.நண்பரின் குடும்பத்தில் அனைவருமே ரஜினி தீவிர ரசிகர்கள் இது பத்தாதென்று அவர்களின் மாப்பிள்ளையும் ரஜினி ரசிகர் .ஒரு காட்சியில் நாயகி ரஜினியை கை ஓங்கி அடிப்பது போன்ற காட்சி ( நல்ல வேளை அடிக்கவில்லை . ) உடனே எங்களுக்கு பின்னால் இருந்த பல ரசிகர்களிடமிருந்து ஒரே கூச்சல்.ஒருத்தர் இன்னும் கோபவேசமாக காதில் கேட்க முடியாத தடித்த வார்த்தைகளைப் பேச ,  சாதுவான நானே எழுந்து விட்டேன்.நண்பர் தடுத்து இதெல்லாம் சகஜம் ,ரிலீஸ் ஆன சில நாளில் இப்படித்தான் கண்டுக்காதேன்னு அழுத்தி உட்காரவைத்தார்.இப்படிப்பட்ட ரஜினி ரசிகர்கள் மத்தியில்தான் நான் வாழ்கிறேன் .

 ஒரு விசயத்தைப் பிடிக்கவில்லையென்றால் ஆயிரம் காரணம் சொல்லலாம் .ஆனால் ஒரு விசயம் பிடித்துப் போக ஒரே ஒரு காரணம் போதும்.எனக்கு ஏனோ அவரைப் பிடிக்கிறது அவ்வளவுதான் ! அப்படித்தான் ரஜினிகாந்த் என்பவரின் தீவிர ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள் .அப்படிப்பட்ட ரசிகமனம் நோகக் கூடாது என்பதால்தான் இதை வாசிக்க வேண்டாம் என்ற விண்ணப்பம் ! 

நாம் இப்படி ஆரம்பிப்போம் ...ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ? 

                  மார்லின் பிராண்டோ இதற்கு விடை சொன்னதையே இங்குப் பார்ப்போம் .‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’ ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது. 

திரையில் ரஜினி ! 

                அப்படிப்பட்ட அன்றைய சமூகத்தின் தேவையைப் பூர்த்திச் செய்ய வந்த அவதாரம் போலத்தான் ரஜினி என்ற சிவாஜி ராவ் கைக்வாட் இருந்தார்.1976 ல் கே.பி சாருக்கு அவர் எதிர்பார்க்கும் நடிப்பிம் ,இமேஜில் ,இயல்பில் ஒரு கான்ட்ராஸ்டான ஆள் தேவை கே.பிக்கு அவருக்குள் இருக்கும் இன்னொரு ஆளை வெளியே கொண்டுவந்த முயற்சிதான் ’மூன்று முடிச்சின்’ காளி. மக்களின் மன நிலையும் அதோடு மிகவும் பொருந்திப்போனது. மக்களின் மனநிலை எப்போதுமே இப்படித்தான் இருக்கிறது .ஒரு நல்ல விசயத்தை நிரூபிக்க மோசமான உதாரணப் பாத்திரங்கள் தேவைப்படுகிறது .அப்படித்தான் ரஜினி என்ற கலைஞனுக்கு விசிட்டிங் கார்டு அன்று உருவாக்கப்பட்டது .அதாவது காளி போன்ற ஒரு ஆயுதம் தேவைப்பட்டது . அதை 16 வயதினிலே , காயத்ரி வெற்றிகள் இதைத்தான் நிருபித்தது ! 

”ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளை திரையில் அனாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியனாக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, எல்லாத் தவறுகளோடும் ஒருவன் நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்பக் காலப்  பாசங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலு சேர்த்தன -தி இந்து.  


            ரஜினியின் கொடி 1980ல் உச்சத்தில் பறந்த நாட்களில் அவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் ( ஹிந்திக்கு 1983  'அந்தா கானுன்' மூலம் போனார் )   என்று மிகப் பிசியான நடிகராக இருந்தார் .ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குள் 54 படங்கள் நடித்திருந்த சமயம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு அவரைப்பற்றிப் பத்திரிக்கைகளுக்குத் தீனியாக இருந்தது அப்போது ரஜினிக்கு தினம் ஒரு பெண் தேவை என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார்.‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’ 

        இதுதான் ரஜினியின் பலம் என்று கூடச் சொன்னார்கள் .எதார்த்தம் .68 வயதிலும் 160 படங்களுக்கு மேல  தமிழ்த்திரையுலகம் ஒரே சூப்பர் என்று கொண்டாடிக்கொண்டு இருப்பதும், நிரந்தரமான சிவப்புக்கம்பளம் விரித்து வைத்திருப்பதுவும் இந்த எதார்த்தம்தான் தேடித்தந்தது. அவருக்கு மட்டுமே .அவரோடு 1975 லிருந்து வளர்ந்தவர்கள் அவரை விட்டு எப்போதும் விலகாதவர்கள்தான் . காரணம் எத்தனை விமர்சனம் வந்தபோதும் அவரை விட்டுக் கொடுக்காதவர்களாகத்தான் இருக்கிறார்கள் அசையாச் சொத்தாக இருக்கிறார்கள் .ஆனால் அந்த ரஜினி பல தேவைகளால் உருவாக்கத் தொடங்கினார்கள் அவரும் அவர்களைப் பயன்படுத்தித் தன்னை உருவாக்கிக் கொண்டார்.நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் கமலோடு போட்டியாகவே இருந்து வருகிறார்.அது அவரின் தொழில் களம் . 
ரைட் போகலாம் ! 

வாழ்க்கையில் ரஜினி ! 

           சொந்த வாழ்க்கையில் திருமதி லதாவை விவாகரத்துப் பண்ணப் போவதாகச் சொன்ன போதும் ,தன்னுடைய சௌந்தர்யா,ஐஸ்வர்யா அவர்கள் திருமண முடிவுகள் ,சின்னப் பெண் திருமண விவாகரத்து , ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஐ.நா. சபையில் ஒரு பரதநாட்டியம் ஆடியதால் ஏற்பட்ட சர்ச்சை வரை இன்னும் எத்தனையோ அவர் பேசாத பக்கங்கள் அது சொந்தப் பகுதி .அதைப் பேசும் உரிமை யாருக்கும் இல்லை.
ரைட் போகலாம் . 

ஆன்மீகத்தில் ரஜினி ! 

             ராகவேந்தர்த் தொடங்கி - இன்றைய பாபாஜியின் சீடரின் சீடரான பரமஹம்ச யோகானந்தரின் “தெய்வீகக் காதல்’ காதல் புத்தகம் வெளியிடுகிறார். ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்து ஒழுக்கத்தைக் கற்றேன். ராகவேந்திரரிடம் இருந்து பக்தியைக் கற்றேன். ரமண மகரிஷியிடம் இருந்து ‘நான் யார்?’, என்பதை எனக்குள்ளேயே தேடக் கற்றுக்கொண்டேன். தயானந்த சரஸ்வதியிடம் இருந்து சமூகப் பிரச்சினைகள், வேத நுணுக்கங்களை அறிந்தேன். சச்சிதானந்த சுவாமிகளும் எனக்குக் குரு.என்றவர் ஒரு கட்டத்தில், நான் சம்பாதித்த பணம், புகழ், பெயர் எல்லாவற்றையும் ஒரு பக்கத்திலும், ஆன்மிகத்தை இன்னொரு பக்கத்திலும் வைத்துக்கொண்டு உனக்கு எது வேண்டும்? என்று கேட்டால், ‘ஆன்மிகம் தான் வேண்டும்’, என்பேன். அந்த அளவுக்கு அதில் ஒரு ‘பவர்’ இருக்கிறது என்கிறார். இதுவும் அவர் தனிப்பட்ட விசயம்.அவர் யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாம். 
ரைட் போகலாம் ! 


பொது வாழ்வில் ரஜினி !
 
            ஒரே ஒரு முறைத் தன்னுடைய கார் தடுத்தி நிறுத்தி சோதிக்கப்பட்டு ஸூட்டிக்குக்குத் தடையேற்படுத்திய விவகாரத்தில் அந்த ஆட்சியைக் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று ஒருவரை விமர்சித்து விட்டு அவர் அரசியல் விமர்சகர் ஆனார். அடுத்த அவரின் படங்களில் அதைப் பிரதிபலித்தார் ஆனால் அவர் ஆதரித்தவர்கள் அவரை அறிமுகப்படுத்திய திரைத்துறைக்கே கடுமையான பிரச்சனை கொடுத்த போது எதுவுமே செய்ய இயலாமல் போனார் என்பதுவும் எல்லோரும் அறிந்தது .அப்போதும் அவருக்கு ஒரு அரசியல் வாய்ப்பு இருந்தது .வருவதற்குத் தனக்குத் தடையாக இருப்பதற்கு ஒரு மூத்த அரசியல்வாதியைச் சொன்னார்.பிறகு சில ஆண்டுக்கு முன் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னவர் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது மலர்ச் செண்டுடன் முன் வரிசையில் வாழ்த்தச் சென்றார். 

நாம் இறங்குமிடம் வந்து விட்டது . 
இந்த ரஜினிதான் இன்று யோசிக்க வைக்கிறார் . 

             யாரை வேண்டாம் என்றாரோ அவரிடம் போகும் போது ,என்ன காரணத்தால் அவர் தனக்கு  வேண்டும் காரணம் ரசிகனுக்கு சொல்லவில்லை .அவரையே நம்பி இருக்கும் பாமர ரசிகன் என்ன செய்வான் ? எப்படிப் புரிந்து கொள்வான் ? 
 
              வருவேன் .சரியான நேரத்தில் வருவேன் என்று சொன்னவர் .வேண்டாத நேரத்தில் வருகிறார் .ஆமாம். அரசியல் என்ற பணம்,ஊழல்,ஆதிக்கம் என்ற பிரம்மாக்கள் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் போது அவரின் ரசிகனின் செல்வாக்கை - வாக்காக மாற்ற யாருக்கோ தேவைப்படும் கருவியாக வருகிறார் . ரஜினியின் இயல்புக்கு அரசியல் பொருந்தாது. நாமெல்லாம் காமராஜரையே வீட்டுக்கு அனுப்பியவர்கள்.இனியாவது கவர்ச்சி என்ற ஒரு முகத்தைப்பார்த்து மக்கள் தங்கள் வாக்கை ,உரிமையை அடகு வைக்க வேண்டாம் என்பதே என்னைப்போல பலரின் கருத்து ! இல்லை நல்லவர்கள் வந்து அரசியலை சுத்தப்படுத்த வேண்டும் அதற்கு ரஜினி வேண்டும் என்ற வசனமெல்லாம் படத்தோடு சரி . எந்த அரசியல் கட்சியும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவே சில ஆண்டுகள் பிடிக்கும் .மக்களுக்கு நல்லது செய்ய தன்னை நிருபித்துக்கொள்ளவே இது போதாது .அப்புறம் பழைய குருடி கதவைத் திற ....வெறும் வெண் தாமரைச் சின்னமும் ,கட்சிக்கொடியும் முடிவில் கதம் கதம்தான்.அப்புறம் ஆயிரம் கட்சியுடன் ஆயிரத்தோறாவதாக அவர் கட்சிக் கொடி பறக்கும் .யாருடன் அவர் கட்சி கூட்டனி என்று முதல் பக்கத்தில் கேள்வி கேட்டு விட்டு கடைசிப் பக்கம் வரை யாருக்குமே தெரியாமல் போவார் .

ரஜினி சமூகத்தின் மனமா ? 

"எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தைநாம் ரஜினியிடம் கொடுத்திருக்கிறோம்; ஏனென்றால்,ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை! ‘தி இந்து’ 

ரஜினிக்கு நல்ல மரியாதை இருக்கிறது .வெகு பலரின் மனதில் இடம் இருக்கிறது .இது போதும் என்று அவருக்கு ஆண்டவன் சொல்ல மறுக்கிறாரோ ? 
நாமாவது நமக்குள் இருக்கும் ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்லலாமா ?வெள்ளி, 12 மே, 2017

விபத்து. Accident ! சாலையில் உங்களுக்கு இடதுப்பக்கம் முன்னால் இரண்டடி வித்தியாசத்தில் சம வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் ஒரு வாகனம் சில நொடிக்குள் தன்னுடைய வேகத்தை முற்றிலுமாகக் குறைத்து உங்களுக்கு வலது பக்கம் ”ட” வடிவில் திரும்பினால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் ? பதஷ்டப்படாமல் ,சட்டெனெ வேகத்தைக் குறைத்து இரண்டு பிரேக்கையும் அழுத்தினீர்களானால் நீங்கள் புத்திசாலி . அப்படியில்லாமல் வேகத்தைக் குறைத்துப் பின் பிரேக்கை அழுத்தினீர்களேயானால் ஓரளவுக்குப் புத்திசாலி . ஒரு வேளை உணர்ச்சி வசப்பட்டு முன் பிரேக்கை அழுத்திவிட்டால் முன்னால் சென்ற முட்டாள் விழுவதற்குள் நீங்கள் விழுந்து அவருக்கும் உங்களுக்குமாக இரண்டு பெட் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வரவைக்கும் அபாயம் ஏற்படலாம். இது எதுவுமேயில்லாமல் கிளர்ட்சை இறுகப்பிடித்துக் கொண்டே பின் பிரேக்கை அழுத்தினால் ? 
 நிச்சயமாக அது வேறு யாருமில்லை நான்தான் அப்படிச் செய்துவிட்டேன் .அப்புறம்  நடந்தது என்ன என்று சொல்ல வேண்டுமா என்ன ? விபத்துதான். 

  இரவு எட்டரைக்குக் கிளம்பும் போது டெஸ்பேட்ச் செக்சனிலிருந்து சக ஊழியர் ஒருவர் வந்து ,சார் ஒரு பேக்கேஜ் KPN மூலம் அனுப்ப வேண்டும் .ஆட்டோ உடனே கிடைக்கவில்லை. நம்ம சக உழியரில் ஒருவர் கார் வைத்து இருக்கிறார் அவருக்கு நீங்கள் பெட்ரோல் கொடுத்தால் அவரே கொண்டு போய் அனுப்பிவிடுவார் அது மட்டுமல்ல ஆட்டோவுக்கான செலவில் பாதிதான் ஆகும் மேலும் நம்ம ஆஃபிஸ் ஆளே போவதால் கூட யாரும் போக வேண்டியதில்லை என்று பராசக்தி வசனம்போல, ஒரே மூச்சில் நீட்டிப்பேசி முடித்தார்.கொடுத்தனுப்பி விட்டு ,நான் நம் இந்திய முன்னால் கேப்டன் பரிந்துரை செய்யும் என் பைக்கை எடுக்கும் போது அவர்கள்  காரில் பார்சலை ஏற்றிக்கிளம்பிக் கொண்டு எனக்கு முன்னால் கிளம்பினார்கள் .அதை ஓட்டிய எங்கள் சக ஊழியர் அங்கேயே காரை வீலிங் செய்து,தனக்கு கார் ஓட்டத்தெரியும் காட்டிக்கொள்ள ஏதோ செய்தார் . எனக்கு அதற்கு உள்ளே ஏற்றிவைத்த பேக்கிங் பற்றிய கவலை வந்து விட்டது .KPN லாரி சர்வீஸ் அவினாசி சாலையில் நான் செல்லும் வழி என்பதால் பின்னாடித் தொடந்து போவோம் என்று பின் தொடரும்போதுதான் இந்த விபத்து எனக்கு நடந்தது .பேகேஜ் உறுப்படியா போய்ச் சேரனும்ன்னு கவலைப்பட்ட எனக்கு அந்த விபத்து முந்திக்கொண்டு வந்து ஜங்கென்று குதித்து விட்டதோ? இதைத்தான் Think of the devil and the devil appears என்பார்களோ ?


   பொதுவாகவே இரண்டு சக்கரத்தில் பயணிக்கும் இருவர் விபத்துக்குள்ளாகும் போது அதில் யாராவது ஒருவர் முதல் காரணமாக இருப்பார் .அந்தக் காரணமாக இருக்கும் முதல் நபருக்கு, விபத்து நடக்கப்போகிறது என்ற ஒரு சிறு முன் எச்சரிக்கைக் கொஞ்சமாவது வந்து விடுவதால்,அவர் புத்தியோ அறிவோ அல்லது அவர் வண்டியில் எழுதியிருக்கும் ஏதாவது ஒரு காக்கும் தெய்வத்தின் உதவியால் அவர் பாதுகாப்புக்கு சின்ன உபாயம் தேடிக்கொள்ளும் குறைந்த பட்ச வாய்ப்பாவது  இருக்கும் .ஆனால் இதில் சம்பந்தப்பட்ட இரண்டாவது நபர்த் திடீரெனெ அதில் மாட்டிக்கொள்வதால், தன்மீது எந்தத் தவறுமில்லை என்ற ஆவேசம் வந்து, நான் சரியாத்தான் வந்தேன் என்று சாலைகளில் எங்காவது கத்திக்கொண்டு இருப்பதைப் பார்க்கலாம் !

    எனக்கு முன்னால் சென்ற அந்த ஸ்கூட்டிக்காரர் மேல் என் வண்டி மோதியவுடன் நியுட்டனின் மூன்றாவது விசைக்கு உடனே கட்டுப்பட்டு , அவருக்கு இடது பக்கம் சரிந்து, அவரின் வண்டிக்கு அடியில் போய் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தஞ்சமடைந்துவிட்டார்.நான் அந்தக் குறுக்கே கிடைக்கும் ஸ்கூட்டியின் பக்கவாட்டில் வளவளப்பான பகுதியில் (  ரொம்ப வள வளப்பாக இருந்திருக்குமோ என்னாவோ? ) மோதி, வழுக்கிய நிலையில் மெல்ல மெல்ல எனது இடதுபக்கம் சரிந்து,முதலில் வண்டியின் ஃப்ரண்ட் சேஃப்டி பார் சாலையில் மோதி அது வளைந்து அடுத்து இதோ நானும் வந்து விட்டேன் அடியைத்தாங்கிக் கொள்ள என்று இடது கால் ஃபுட்ரெஸ்ட்டும் அடிவாங்கி, அது பத்தாதுப்பா என்று மேலும் சரிந்து இடது ஹேண்ட் பார் சாலையில் மோதி, மெல்ல மெல்ல நானும் என் வண்டிக்கு பக்கவாட்டிற்கு அடியில் தஞ்சம் புகும்போதுதான் என்ன நடக்கிறது என்ற தெளிவுக்கு வருவதற்குள்ளே நான் முற்றிலுமாக நடு ரோட்டில் கிடந்தேன்.

சட்டெனெ வண்டிக்குக் கீழிருந்து நான் எழுந்து கொள்ள முயற்சி செய்யவில்லை . அவசரப்பட்டு மேலும் காயம் ஆகலாம் என்பதால் மெல்ல என் இருப்பை உள்வாங்கி என் அதிர்ச்சியிலிருந்து மீளும்போது சுற்றிக் கூட்டமாகச் சிலர் ஓடிவரத் துவங்கினார்கள். என்ன நடந்து விட்டது என்று முற்றிலுமாக என் நரம்பு மண்டலம் என் இருப்பைத் தீர்மானித்து உட்கார்ந்த நிலையில், கைகளால் வண்டியை மெல்லத் தூக்கிக் கால்களை விடுவித்து ,எழுந்து நின்ற என் உணர்வுக்கு எங்கும் அடிபடவில்லை என்று தீர்மானித்து, வண்டியைத் தூக்க முயற்சிக்க, அதற்கு எனக்கு ஒருவர் உதவினார்.அவரே என்ன நடந்துச்சு என்று கேட்டார். என்னவென்று தெரியவில்லை அவர் திடீர்ன்னுக் குறுக்கே திரும்பிட்டான்னு சொன்னேன் . 

திருப்பூரில் ஒருவரோடு ஒருவர் பழகுவது, உண்மையாக இருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம் ஆனால் சாலையில்  விழுந்துவிட்டால் அவன் பரம எதிரியேயானாலும் உடனே ,அந்த நிமிசமே பதறிப்போய் ஓடி வந்து உதுவுவதும் ,முதலுதவி செய்வதும், ஆம்புலன்சை அழைப்பதும் உடனே உடனே செய்து உதவி செய்வார்கள் . அந்த விசயத்தில் இந்த ஊரில் வாழ்வதில் எனக்கு  மிகப்பெருமை உண்டு .ஆபத்துக்கு உதவுபவனே முதல் தெய்வம்.


       பொதுவாகவே திருப்பூர் to மங்களம் (வழியாகக் கோவை) சாலை இரவு எட்டுமணிக்கு மேல் வெகு சுறுசுறுப்பாய் அதிர்ந்து கொண்டுதான் இருக்கும் . ஆனால் விபத்துக்கு முதலில் காரணமான மனிதனின் மனைவியின் புண்ணியத்தால் சில நிமிடம் பெரிய வண்டிகளின் போக்குவரத்து மௌனமாக இருந்தது.நிமிர்த்திய என் வண்டியைத் தள்ளினேன் .கியரோடு விழுந்ததால் நகரவில்லை.கிளர்ச்சை பிடித்துக் கியரை நியுட்ரலாக்க முயற்சிக்கும் போதுதான் கவனித்தேன் அடி வாங்கிய .ஃபுட் ரெஸ் மேலேறிக் கியரைக் கவ்விக்கொண்டு நின்றது. (  இந்திய முன்னால் கேப்டன் சிபாரிசு செய்யும் என் வண்டியில் இரண்டு பெரிய குறைபாடு இருப்பது அவருக்கு தெரிந்துதான் இந்த  விளம்பரத்தில் நடித்தாரா என்பது எனக்கு தெரியாது.ஒன்று  காற்று பலமாக வீசினால் முக்கியமாக ஆடி மாதத்தில், வண்டியின் மொத்தம் பேலன்ஸ் நம்மிடம் இருக்காது. காற்று வண்டியை கடந்து அல்லது ஊடுறுவி செல்ல வழி இல்லை - Aerodynamics fault.இரண்டாவது இடது பக்க ஃபுட் ரெஸ்ட் கியர் ராடுக்கு இணையாக இல்லாமல் சில இன்ச் தூக்கலாக இருப்பதால் கொஞ்சம் அசந்தாலும் கால் நழுவி விடும் .சாதாரண செப்பல் அணிந்து ஓட்டினால் அவ்வளவுதான்.அது ஃபுட்ரெஸ்ட் இல்லை ஃபுட்கெஸ்ட் ! )   மீண்டும் கிளட்சைப் பிடித்துக்கொண்டே சாலையின் ஓரத்திற்கு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு எனக்கு முன்னால் விழுந்த அந்த ஸ்கூட்டி ஆளைத் தேடினேன் . யாரோ சிலர் அவரைச் சாலை ஓரம் தூக்கிக்கொண்டு வந்து உட்கார வைக்கத் தலை கவிழ்ந்து, ஹாலோ மேனின் (Hollow man ) மறையும் போது உதிர்ந்து விழும் ஆடையைப் போலப் பொலப் பொலவென்று சாலையில் சரிந்தார். எனக்குச் சட்டெனெப் பயம் பிடித்துக்கொண்டது.அந்த ஆள் என்னைப் போல ஹெல்மெட்டும் அணியவில்லை. ஏதாவது பலமாக அடிபட்டு விட்டதா ?


     என் கை கால்களை உதறினேன். இடதுகை வலித்தது. அதற்குள் கூட்டம் கூடியது .நான் காத்திருந்தேன்.அந்தக் கூட்டத்திற்குள்ளிருந்து இரண்டு சிறு வயது பையன்கள் என்னை நோக்கி வந்தார்கள்.அண்ணா உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா என்று கேட்டார்கள் .இல்லை என்றேன் .சரி நீங்க கிளம்புங்க அந்த ஆள் நல்ல போதையிலிருக்கிறான் என்றான் அந்தப் பையன் . அடப்பாவி ஓட்டிக்கொண்டே இருக்கும் போதே கீழே விழும் அளவுக்கா குடிப்பீங்க ? குடி குடியைக் கெடுக்கும் என்பதை மாற்றி இனி நீ குடித்தால் அடுத்தவன் குடியையும் கெடுக்கும் என்றுதான் எழுதி விளம்பரம் செய்ய வேண்டும் போல ? 

     மெக்கானிக்கை கூப்பிட்டு நடந்ததைச் சொன்னேன் .எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி வீட்டுக்கு ஓட்டிட்டுப் போயிடுங்கக் காலைல வந்தவுடன் ஆஃபிஸ்ல வந்து எடுத்துக்கிறேன் என்றார் . தத்துப் பித்து என்று ஓட்டத்தெரியாதவன் போல ஓட்டினேன்.எப்படியோ கியரின் மேல் ஏறி நின்று போடுமளவுக்குக் கியர் , ஃபுட்ரெஸ்டின் பிடிக்குள் சிக்கித்தவித்தது .நான் ஓட்டிய விதத்தைப் பார்த்தால், நானே டாஸ்மாக்கிலிருந்து வருவது போலச் சூடம் அனைத்துச் சத்தியம் பண்ணி விடுவார்கள் ! மெக்கானிக் சொன்னது போலவே எப்படியோ வீடு போய்ச் சேர்ந்தேன்.வீட்டுக்குள் நுழையும் போது குழந்தைத் தொட்டில் தூங்கிக் கொண்டு இருந்தான் . மனைவி அடுப்பில் வேலையாய் இருந்தார்கள் .எல்லாமும் அமைதியாக இருந்தது. சொல்லலாமா என்று யோசித்தேன் .இத்தனை விழுந்தும் ஒரு சின்னச் சிராய்ப்புக் கூட இல்லை. இதைச்  சொல்லி வீட்டின் அழகிய சூழலைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை .

இடது கை வலி காலை எழும்போது கொஞ்சமாக இருந்தது. உடற்பயிற்சி செய்த பின் அந்த வலியும் இல்லை.

புதன், 3 மே, 2017

சுஜாதா - காய்த்த மரம் !


 சுஜாதாவின் முதல் நாவல் .

                     ஏராளமான ஏகலைவன்களை உருவாக்கினாலும் கடைசிவரைக் கட்டை விரல் ரேகை கூடக் கேடக்காத ஒரேஎழுத்துலகத் துரோணச்சாரியார் வாத்தியார் - சுஜாதா சார் மட்டும்தான் .அவரின் பிறந்த தினத்தில் தானாக அமைந்துபோனது இந்தக் கட்டுரை .

        அஸ்டமாச் சித்திகள் பற்றி ஸ்வாமிகள் எழுதிய கட்டுரைகள் வாசித்துக் கொண்டு இருக்கையில் சில விசயங்கள் மனம் புரிந்து கொள்ளமுடியாத வெகுதூரத்திற்கு செல்ல, அந்த வாசிப்பு ஒரு அயர்வை தந்தது . தமிழ்திரைப் படத்தில் கதைத் தொய்வாகப் போய்க்கொண்டு இருக்கிறதுஎன்று நம்மத் தயாரிப்பாளர்கள் நினைக்கும் இடத்தில் ஒரு துள்ளல் பாடல் வைப்பார்களே அது மாதிரி வேறு ஏதாவதுகொஞ்ச நேரம் வாசிக்கலாம் என்று தேடும் போது கைக்குச் சிக்கியது வாத்தியாரின் முதல் நாவல் “நைலான் கயிறு”.1968ல் குமுததில் 14 வாரங்கள் தொடராக வந்தது .அதை 1971 ல் அவரின் முதல் நாவலாக வெளிவந்திருக்கிறது அதில் நான் வாசித்தது 2013 விசா பப்ளிகேசனின் பத்தாவது பதிப்பு .


நைலான் கயிறு .
நாவலைப் பற்றி சிலாகிக்க போகலாம்.


முதல் விசயம் - இந்தக் கதையைத் தொடராக வெளிவந்து கொண்டு இருந்தபோது ( நான் பிறக்கவேயில்லை அப்போது ) சுஜாதாவிற்குக் கடிதம் எழுதி இருந்தால் சார் இதுக்கு ’சுநந்தாவின் டைரி “ என்று வைத்திருக்கலாமே என்று கேட்டுஇருப்பேன்.அந்தளவுக்குக் கதையின் ட்விஸ்டுக்குச் சொந்தக்காரி சுநந்தாதான்.

இரண்டாவது - இந்தக் கதையின் ஹரிணி, வயது இருபத்தெட்டு Perry Mason series of detective stories - படிப்பவள் .சுநந்தா,பதினெட்டு வயது - Dame Daphne du Maurier romantic novelist வாசிப்பவள். ரோஹினி Albert Schweitzer புரிந்து கொள்பவளாகஇருப்பாள் .உங்கள் பெண் கதாபாத்திரங்கள் எல்லோருமே படித்தவர்களாக மட்டுமே வலம் இடம் வருகிறார்கள் ?
அதோடு இவர்களில் தற்கொலை செய்துகொண்ட சுநந்தா ,சிக்கலில் மாடிக்கொண்ட ஹரிணிக்கும்பெற்றோர்கள் இல்லை என்பதாகச் சொல்லும் சுஜாதா , குடும்பத்தின் முக்கியத்துவத்தை  மெல்லக் கைகாட்டியிருப்பார்.

மூன்றாவது விசயம் - சுஜாதவை வாசித்தவர்களுக்குக் கணேஷ் வசந்த் என்ற டூயல் ரோலில் சுஜாதவின் நிழல் என்றுசொன்னால் அது வசந்த் பாத்திரத்திற்குத்தான் மிகவும் பொருந்திப் போகும் என்று கவனமாகச் சுஜாதா வாசித்தவர்களுக்குத் தெரியும் .ஆனால் அவரின் இந்த முதல் கதையில் வசந்த் இல்லை ஆனால் அவர் வேலையைக்கணேஷ் பார்ப்பார் .
ஹரிணியிடம் கேள்விக் கேட்கும் கணேஷ் ( இறந்து போன ) கிருஷ்ணனுடன் எவ்வளவு நெருக்கம் என்பார் ? அதற்கு ஹரிணித் தன் நகத்தைக் கடித்துக்கொண்டே, நெருக்கம் என்பாள் .
மீண்டும் கணேஷ் ,எவ்வளவு நெருக்கம் ? ஒரு அடி ,ஒர் இன்ச் ,இல்லை சைபரா ?
அவள் மூன்றாவது என்பாள்.
35 ஆம் பக்கத்தில் இந்தக் கேஸ் ஆரம்பிக்கும் போது கேட்டக் கேள்விக்குப் பிறகு அதையே 84 ஆம் பக்கத்த்தில் இந்தக்கேஸ் முடிந்திருக்கும் போது ஹரிணியைப் பார்த்துக் கணேஷ் ,
என் அறைக்கு வந்து என் பென்சில் சித்திரங்களைப் பார்க்கிறாயா என்று கேட்பார் அதற்கு அவள் சரி என்றாள் .அந்தச்சரியில் மூன்று நான்கு சரிகள் கலந்திருந்தன. என்று முடிப்பார் சுஜாதா.
இந்த இடத்தில்தான் வசந்த்தின் கேரக்டர்த் தேவையை வாத்தியார் யோசித்திருப்பார் போல ? நாம் அப்புறம் நாம் வாசித்தகதைகளில் வசந்த்தின் முக்கியத்துவம் எவ்வளவு என்று நமக்கே தெரியும்.


நான்காவது -  கொஞ்ச நேரமே வந்து போகும் காவல்துறையைச் சேர்ந்த ராமனாதன் கேரக்டரில் துப்புத் துலக்குபவர்கள் தங்கள் உள்ளுணர்வின் வழித்தடத்தின் முக்கியத்துவத்தை எவ்வளவு நம்புகிறார்கள் என்பதை, அவர் மகள் ரோகினியிடம்சொல்லும் போது,
எல்லாக் கேசிலும் ஒரு க்ளிக் சப்தம் உண்டு.அது எப்போது எவர் மூலம் கேட்கும் என்பது தெரியாது என்பார்.

எதாவது வாசிக்கலாம் என்று எடுத்த படித்த இந்த நாவலை முடித்து விட்டுத்தான் வைக்க முடிந்தது.அந்த அளவுக்கு ,அரை நூறாண்டைக் கடந்தும் சுஜாதாவின் எழுத்தின் நடையின் ஆளுமை நின்று விளையாடுகிறது . இதுதான் சுஜாதா.அவருடைய எழுத்தின் தேவை இன்றும் ஒவ்வொரு வாசிப்பவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும்கட்டாயம் கடந்து போகும் வாசலாக இருக்கிறது.


சுஜாதா - காய்த்த மரம்

கடந்த ஏப்ரல் 28 ல் திரு. ஜெயமோகன் தன்னுடைய இணையபக்கத்தில்,சுஜாதாவின் குரல் என்ற கட்டுரையின் முடிவில் “ சித்தரிப்பின் திறனால்,மொழிநடையின் கூர்மையால்தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத படைப்பாளி. ஆனால் எப்போதுமே ஒரு படி முன்னரே நின்றுவிடும் கலைஞர்.சுஜாதாவை வணிக எழுத்தாளர் என ஒதுக்குபவர் தமிழ்நடையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை இழக்கிறார்.ஆனால்அவருடைய கலைக்குறைபாட்டை நுண்மையாக உணர்ந்துகொள்பவர் மட்டுமே நவீன இலக்கியத்தின்மையப்பெருக்கில் நுழைகிறார்.” என்று முடித்திருப்பார் .

இந்த நாவலின் எட்டாவது பதிப்பு 2000ல் , தன் முதல் நாவலைப் பற்றி முன்னுரையில் சொல்லும் போது ,

முப்பது வருடம் கழித்து இந்தக் கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் என்றுதோன்றுகிறது.செய்யவில்லை இதை எழுதும்போது இருந்த என் இளமையும் ( அப்போது அவருக்கு வயது 32 ) தமிழில்புதியதாகப் பல முயற்சிகள் வசன நடையில் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது எனக்கு இல்லைஇடைப்பட்ட நாட்களில் எத்தனையோ சுகத் துக்கங்களை நான் பார்த்துவிட்டேன் .உலகத்தைத் திருத்தும் உத்தேசத்தைக்கைவிட்டு விட்டேன் ” 


இதுதான் வாத்தியார் .

          சுஜாதா பற்றி இன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில் யாராவது பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள் .அவரைக் கடந்து வந்தவர்கள்தான் அவரை மறக்க முடியாமல் எதாவது சொல்லி வைக்கிறார்கள் .அதுதான் இருந்த போதும் மறைந்த பிறகும் வாத்தியாருக்குப் பெருமை .

சுஜாதா - காய்த்த மரம்.
(கல்)  சொல்லால் அடிபடுவது இருக்கத்தானே செய்யும் ?

வியாழன், 20 ஏப்ரல், 2017

யாளி – நாவல் மதிப்புரை. #Yali - Mythology animal .                   சில ஆண்டுகளுக்கு முன், உயிரினத் தன்மாற்றம் எனும் #வேதாத்ரிய டிப்ளமோ பாடத்தின் போது ஒரு பேராசிரியர் யாளிஎன்ற உயிரினம் பற்றிச் சொல்லியபோதுதான் எனக்கு இந்த யாளி விலங்கினம் ஒன்று இருப்பதைப் புரிந்து கொண்டேன்.இது இந்தியக் கோவில்கள் தொடங்கி வெளிநாடுகளிலுள்ள கோவில் முழுதும் நீக்கமற நிறைந்து இருப்பதன்முக்கியத்துவத்தைத் தேடத்துவங்கினேன் .எனக்குத்தெரிந்த எல்லோரும் பா.ராகவனின் – ”யாளி முட்டை” என்றகதையில் வருவதைப் போல யாளி என்பது மானுடக் கற்பனையின் எல்லையற்ற வீச்சின் வினோத விளைவு,சிற்பிகளின்கவிதாபூர்வமான கற்பனைகள் Mythological animal என்றே சொல்லி அலைகழித்தார்கள் . 

             அப்போதுதான் மணி தணிகைகுமார் இது பற்றிய ஒரு நாவல் 2010 ஆண்டு (ரூ-150) கற்பகா இண்டஸ்ட்ரீஸ் மூலம்வெளியிட்டு இருப்பதை அறிந்துத் தேடத் தொடங்கினேன்.முதல் பதிப்பு முற்றும் தீர்ந்த நிலையில் எங்கும்கிடைக்கவில்லை மீண்டும் அதன் இரண்டாம் பதிப்பு எல்.கே.எம். பப்ளிகேஷன் மூலம் சிறு மாற்றங்களுடன்வெளியிடப்பட்டது (ரூ- 290) 

அப்படித்தேடித் தேடி வாங்கிப் படிக்கும் அளவுக்கு அப்படியென்ன முக்கியத்துவம் ? 

                      அதை அந்த நாவலாசிரியர் மணி தணிகைகுமார் தனது முன்னுரையில் சொல்கிறார்.. என் கதாநாயகன் யாளிஉலகத்தரம் வாய்ந்த படைப்பு என்று தன்னம்பிக்கையுடன் தொடங்கும் நாவாலாசிரியர் இது மாபெரும் புதினம்மட்டுமல்ல சிற்பிகளின் கற்பனையில் மட்டுமே வாழ்ந்த மிருகமாகச் சித்தரிக்கப்பட்டு வந்த யாளியின் பரிணாமத்தைச்சொல்லுவதே தனது தணியாத தாகம் என்கிறார். 

கதைக்கரு : 

                            ஆங்கிலேய ஆட்சியின் போது வரை யம் அலைஸ் சான்ரோ என்பவர் 1896 – 1908 தமிழகத்தின் பணிபுரிந்தபோது1899 ஆம் ஆண்டில் ஒரு வழக்கு நீதிமன்றம் படியேறியது.வழக்கு, ஒரு கோவிலும் அதன் நிலங்களுக்கும் இரண்டுகுடும்பங்கள் சொந்தம் கொண்டாடியது.அதை ஒரு குடும்பம் கலெக்டர் சான்ரோவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துஇந்தக் கோவில் தங்களுக்கு மட்டுமே எப்படிச் சொந்தம் என்பதாகவும் அதற்கு முக்கியச் சாட்சியாகத் தங்கள்குடும்பம்தான் பரம்பரைப் பரம்பரையாகக் காத்து வரும் ஒரு ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று சத்தியம்வாங்கிக் கொண்டு காட்டுக்கிறது. அது அவர்களால் மட்டுமே பராமரிக்கப்பட்டு வரும் உலகில் எங்கும் காணப்படாதத்தொன்மவியல் உயிரினத்தைக் காட்டுகிறது . அந்த உயிரினம்தான் இந்தக் கதையின் கதாநாயகன் “யாளி” 

                     இதைத் தன் நாட்குறிப்பில் கலெக்டர் சான்ரோவை எழுதி வைத்துவிட்டு மறைந்து விட்ட பிறகு லண்டனின் வசிக்கும்அவரின் கொள்ளுப்பேரன் அலெஸ்சாரோ பெக்மேன் மற்றும் பேத்தி மேரியானோ லிண்டாவாலும் வாசித்துஅறியப்படுகிறது .அந்த உயிரினத்தைத் தாங்கள் நேரில் காண வேண்டும் என்று அவர்கள் எடுத்த முயற்சியின்விளைவில்தான் இந்தக்கதைப் பின்னப்பட்டு வெளிவந்திருக்கிறது .அவர்கள் இந்தியாவில் அந்த உயிரினத்தைக் காணத்தங்கள் உதவிக்கு அங்கு லண்டனில் மென்பொருள் பணியில் இருக்கும் சரவணன் என்ற மென்பொருளாளரைத் தேர்வுசெய்கிறார்கள். இந்தத் தேடல் பணிக்கு ஒத்துழைத்தால் சரவணனுக்கு அம்பது லட்சம் கொடுப்பதாகப்பேசப்படுகிறது.சரவணன் சொந்த ஊர்க் கன்னியாகுமரி. தமிழகத்திற்குப் பெக்மேன் மற்றும் சரவணனும்வருகிறார்கள்.அவர்கள் சென்னையின் பார்த்த சாரதி கோவிலின் கிழக்கு வாசலில் தொடங்கித் திரு அழகர் குடியில்முடிகிறது .( தணிகைகுமாரின் இஷ்ட தெய்வம் திருக் குறுங்குடி திரு அழகிய நம்பிராயர் பெருமாள் ) அவர்கள் தேடல்படலமும் அதிலுள்ள ட்விஸ்டுகளும் , சுவாரசியமும்தான் மொத்தக் கதையுமே . 

கதை சொல்லும் விதம் : 
                    நாவலாசிரியர் மணி தணிகைகுமாருக்கு இது முதல் நாவல்.ஆனால் அப்படி ஒரு இடத்திலும் அவரின் எழுத்தின்கன்னித்தன்மைக் கண்டுபிடிக்க முடியாத அளவில் அற்புதமாக ஒவ்வொரு கதாப்பாத்திரப்படைப்பிலும் அவரின்வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தந்தப் பாத்திரங்களுக்கு உரிய வட்டார, சமூகத்தன்மையில் எண்ணவோட்டங்களில்பேசுவதை வாசிக்கும்போது தணிகைகுமார் இப்போதுதான் நாவலாசிரியராக ஆகியிருக்கிறார் என்பதைத் துளியும் நம்பமுடியவில்லை .நாவல் என்பது அதன் கருப்பொருளின் மூலம்தான் விசுவரூபம் எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டலைச்சொன்ன ஃபிரான்ஸ் காஃப்கா-Franz Kafka இத்தாலியின் ஜேம்ஸ் அகஸ்டின் அலோசியஸ் ஜாய்ஸ் James Augustine AloysiusJoyce போன்றவர்களின் அன்மையை வெளிப்படுத்துகிறது இந்தத் தணிகைகுமாரின் நாவலின் உருவாக்கமும் அதன்தன்மையும் .

நாவலின் வெற்றி.                     ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜூராசிக் பார்க்படத்தைப் பார்த்த போது 63 மில்லியன் டாலர் செலவில் தயாரித்து வெளியாகி 900 மில்லியன் டாலரைத் அள்ளித்தந்தத்திரைப்படம் நினைவிலிருக்கலாம்.அந்த படத்தில் உள்ள டைனோசர் என்ற வாழ்ந்த விலங்கை எடுத்து விட்டு யாளி என்றவிலங்கைப் பொருத்திப் பார்த்தால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ அதே சுவாரசியத்துடன் ’டெம்ப்’ மாறாமல் அப்படியேசொல்லியிருக்கிறார் தணிகைகுமார்.இன்னும் சரியாகச் சொன்னால் அறிவியல் பூர்வமாக டைனோசார்தான் அதன்தோற்றத்திலும் , பரிமாணத் தொடருக்கும் நாம் நம்பிக்கொண்டு இருக்கும் புதைபடிவங்கள் (ஃபாசில்ஸ்) முற்றிலும் யாளிஎன்ற உயிரினத்திற்கு மட்டுமே பொறுந்துகிறது என்ற தன் ஆய்வை முன் வைத்து வரலாற்றுக்குப் பரிணாம அறிவியல் சாட்சியம் அளிக்கிறார்

             இது ஒரு கதை என்ற போக்கில் வாசிக்கத் தொடங்கும் உங்கள் வாசிப்பு மனதைத் தனது 19ஆவது அத்தியாயத்திலிருந்து (மொத்தம் 30 அத்தியாயம் ) மாற்றித் தனது எழுத்து நடையில் வெகுதூரம் ஆழ இழுத்துக் கொண்டு போகிறார்நாவாலாசிரியர் .அவர் சொல்லுவதை முழுவதுமாக அவர் நோக்கில் உணர்வு பூர்வமாக வாசித்து முடிக்கும் போது யாளிஎன்ற உயிரினம் உண்மை என்று நீங்களும் என்னைப்போல எந்தக் கோவிலிலும் சத்தியம் பண்ணவிட்டுத் திரு அழகர்குடிக்குக் கிளம்பப் பஸ் அல்லது ரயில் பிடிக்க வைத்துவிடுவார்.

                        ஒரு பாரம்பரியக் குடும்பத்தின் பராமரிப்பில் அந்தக் அந்தத் தொன்மமான மிருகம் வளர்க்கபடுவதை ரகசியமாக அறிந்து,அப்படி வளர்க்கும் குடும்பத்தினரிடம் அகப்பட்டுப் பல முறைக் கொல்ல முயற்சிக்கப்பட்டுத் தப்பித்து ,ஒரு கட்டத்தில்அந்தக் குடும்பத்தின் மூத்தவரால் இந்தக் கதையின் பெக்மேன் மற்றும் சரவணனுக்கு அந்த அபூர்வ விலங்குகளின்வரலாற்று மற்றும் பராமரிப்பின் அவசியம் பற்றிப் பேசி முடிகிறது கதை . கதையின் கடைசி ட்விஸ்ட் – அந்தக்குடும்பத்தின் மூத்தவர் வைக்கிறார்.அது அவர்கள் பாதுகாத்துவரும் கோவில் கல்வெட்டுப்படி இதைதேடி வந்த பெக்மேன்மற்றும் சரவணன் இருவரில் யாராவது ஒருவர்தான் அந்தக் குடும்பத்தின் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அந்தரகசியத்தை இனி வரும் காலங்களில் காக்கப் போகிறார்கள் என்று ! 

”யாளி வீர்ர்கள்”

                       நாவல் வாசித்து முடித்தவுடன் தணிகைகுமாரிடம் அலைபேசியில் அழைத்து என் பாராட்டைத் தெரிவித்தேன்.மனிதர்மிக இயல்பாகப் பேசியதோடு தனது அடுத்தப் படைப்பான .”யாளி வீர்ர்கள்” நாவலைத் தயார் செய்து விட்டதாகவும்,பிரபலமான பதிப்பகங்களுடன் பேசி முடித்தவுடன் இரண்டு மாதங்களுக்குள் வெளிவரும் என்ற புதிய சூடானதகவலைத் தந்தார். 

இன்னும் சில மாதங்களில் நாம் இன்னொரு சுவாரசியத்தைச் சந்திக்கப்போகிறோம் ..