Follow by Email

செவ்வாய், 16 ஜூன், 2015

பக்கத்து வீட்டுக்காரன் ஜெயிச்சிட்டான் ஸ்டுப்பிட் ?


சமீபத்தில் ஒரு மொபைல் கம்பெனி இந்த விளம்பரம் சக்கை போடு போடுகிறதே அது போல இல்லை இந்த பதிவு .இது கொஞ்சம் விவகாரமானது .நான் வசிக்கும் காம்பவுண்டில் எங்களோடு சேர்த்து மூன்று குடும்பங்கள் .இதில் ஒருவர் சமீபத்தில் கல்யாணம் ஆனவர் .இன்னொருவர் ஒரு சிட் பண்டில் வேலை பார்க்கிறார்.அவர் வீட்டை கடந்துதான் என் வெளி வாசலுக்கு நான் வர வேண்டும் .அந்த பக்கத்து வீட்டுக்காரர் மனைவியும் என் மனைவியைப் போல வேலைக்கு செல்வதால் ஆள் நடமாட்டம் எப்போதும் குறைவுதான் அந்த காம்பவுண்டில் . நேரமற்ற நேரத்துக்கு சொந்தக்காரன் நான் மட்டும்தான் அங்கு என்பதால் மதியம் எப்போது என் அலுவலக வங்கி மற்றும் பிற வேலைகள் முடிகிறதோ அப்போதுதான் வீட்டுக்குப் போவேன் .அப்படி ஒரு நாள் பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகி விட்டது .காம்பவுண்ட் வாசலில் என வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே பக்கத்து வீட்டை கடந்து போகும் போது ,பக்கத்து வீட்டு டிவி சத்தம் வெகு அதிகமாக கேட்டது .அந்த சிட் ஃபண்டில் வேலை பார்ப்பவர் மனைவி , தனது வெளியூரில் தாய்  வீட்டில் வளரும் தனது குழந்தைகளை பார்க்க நேற்றுத்தான் சொல்லி விட்டுச் சென்றார்.


                  வீட்டுக்குள் போய் உடை மாற்றும் முன்னர் ‘ சார் போஸ்ட் ‘ சத்தம் அழைக்க துண்டை தோளில் போட்டுக் கொண்டு மெல்ல வெளியே வந்தேன்.அதற்குள் வாசலில் புதிய தலைமுறையை வாசலில் போட்டு விட்டு தனது கடமையை செவ்வனே செய்து விட்டு  சென்று விட்டார் !. குனிந்து எடுக்கும் போதுதான் பக்கத்து வீட்டு வாசலில் கிடந்த இரண்டு ஜோடி செருப்புகளைப் பார்த்தேன் .ஒரு ஜோடி வழக்கமான சிட் ஃபண்டுக்காரருக்கு சொந்தம்  .இன்னொரு ஜோடி பெண் செருப்பு யாருடையது ? ஒரு வேளை ஊருக்குப் போன பக்கத்து வீட்டுக்கார பெண் திரும்பி விட்டாரா ? இல்லையே அவர் ஊர் சென்று திரும்பி இந்த வாரக் கடைசியில்தான் வருவேன் வாரம் ஒருமுறை வரும் கார்ப்பரேசன் தண்ணிர் வந்தால் தன்னுடைய வீட்டுக்குகாரரிடம் ஃபோன் பண்ணி சொல்லச் சொன்னாரே .அப்படியானால் ? யாராவது சொந்தமாக இருக்கலாம் என மனம் சமாதானம் சொன்னாலும் அந்த வழக்கத்துக்கு மாறான டி.வி சத்தம்  ஏன் என்று இன்னொரு கேள்வியும் உறுத்தியது !


            உணவு உண்டு கொண்டே டி.விப் பார்த்தால் அவசரமாக உணவு வாயில் அரைப் படுவதால் உமிழ் நீர்ச் சுரப்பு உணவோடு சேராமல் செரிமான சக்திக் குறைபாடு வரும் எனும்யோகா வகுப்பின் அறிவுரைகளை மீறுவது எப்போதாவது உண்டு .அன்று அப்படி டி.வி ரிமோட்டைத் தட்டவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கோபித்துக் கொண்டுஇணப்பைத் துண்டிப்பதும் ஒரு சேர நடந்தது. சரி மனசாட்சியை மீறினால் இதுதான் தண்டனை எனச் சமாதானப் படுத்திக் கொண்டு டிவியை நிறுத்தினேன் .வெளிவாசலுக்கு வந்து கைத் துடைக்கும் துண்டை எடுக்கும் போது தெளிவாகப் பக்கத்து வீட்டுக்குள் ஒரு பெண் சத்தமாகச் சிரிப்பதுவும் கூடவே சிட்ஃபண்ட்காரர்க் கிசுகிசுப்பதுவும் கேட்டது திடீரெனெ மின்சாரம் நின்றுப் போனதில் அவர்கள் டிவி நின்று போனது தெரியாமல் சத்தமாகப் பேசிக் கொண்டார்கள் .

     
    இருக்கும் யுபிஎஸ் மின்சாரத்தில் ஃபேன் ,டிவி ,டுயூப் என எரிந்துத் தீர்ந்து போனால் என்னைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் பையனுக்குப் படிக்க மின்சாரப் பற்றாக்குறை வந்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே விரைவாகச் சாப்பிட்டு விட்டு மதிப்புரைக்காக எழுத வேண்டிய யுவன் சந்திரசேகரின் “குள்ளச்சித்தன் சரித்திரம்’ வாசிக்கத் தொடங்கினேன்.வழக்கம் போலக் குறிப்பெடுத்துக் கொண்டே வாசித்துக் கொண்டு இருக்கும் போது , அந்தக் கதையின் ஒரு பகுதியில் யாராலோ கர்பமாகிச் சோரம் போகும் ஒரு பெண்ணின்தாய்த் தனது ஊரை விட்டு அடுத்த ஊர் எல்லைக்குப் பரிதவிப்பில் போகும் போது குள்ள சித்தனைத் தரிசிக்கும் பகுதி வந்ததை வாசிக்கும் போது, எனக்குப் பக்கத்து வீட்டு வாசலில்கிடந்த அந்த ஒரு ஜோடிச் செருப்புச் சிந்தனையை இடறியது.என்னதான் மனம் யோகா , ஆன்மீக வாசிப்பு என்று உயரே பறந்தாலும் ஊர்க் குருவியின் லட்சணம் போல,இதற்கு முன் இருக்கும் எண்ணங்கள், கீழே தானே இழுக்கிறது !
பக்குவப்படாதப் பாலியல் சிந்தனைப் பலவீனமானவனுக்குத்தான் வரும் என்ற ஓஷோவின் சிந்தனை இடறிய என்னைக் காப்பாற்ற, மனதின் சிறு குறுக் குறுப்பை மீறி மீண்டும் வாசிப்பதிலும் குறிப்பெடுப்பதிலும் நேரம் கரைந்து போனது .


            நேரம் போனது தெரியாமல் வாசிப்பில் என்னைத் தொலைத்து மீட்டுக் கொண்டு அவசரமாக அலுவலம் ஓடினேன் .போகும் போது கண் எதேச்சையாகப் பக்கத்து வீட்டுவாசலில் என் மனக் குளத்திற்குள் கல்லெறிந்த (அல்லது செறுப்பெறிந்த) அந்த ஒரு ஜோடிச் செருப்பைத் தேடியது .அங்கு அது இல்லை . சிட்ஃபண்ட்காரர்ச் செருப்பு மட்டும்அப்படியே இருந்தது .இல்லாத செருப்புக்குப் பின் என எண்ணத்தைப் போக விடவும் அது இருந்த வரை சாத்திய கதவுக்குள் இது நடந்து இருக்கலாம் என்ற கோடிட்டஇடத்தை மனம் நிரப்பிக் கொள்ள முயன்றது.

இரவு காம்பண்டுக்குள் திரும்பும் போது மீண்டும் ஒரு ஜோடி செருப்பு ஞாபக அடுக்கில் படியேறுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குள் வந்து பையன் பார்த்துக் கொண்டு இருந்த ஆம்னி ட்ரிக்கைப் பார்க்கக் கம்பெனிக் கொடுக்கத் துவங்கினேன் . அதோடு சப்பாத்தித் தட்டில் வைத்துச் சுடச் சுட வர ,டிவியை அணைக்கச் சொன்ன மனைவிக்கும் பையனுக்கும் இடையில் ’இருபத்தி மூன்றாம் புலிக்கேசி’ வடிவேல் மாதிரி இடையில் புகுந்துச் சமாதானபடுத்தி ஒரு வழியாய் டிவியை ஆஃப்னி ட்ரிக்கைப் பயன்படுத்தி அணைத்து விட்டுச் சாப்பிடத் துவங்கினோம். மெல்ல மனைவியிடம் சொல்லலாமா என யோசித்தேன் .உடனே வீடு மாற்றும் மஹாபாரத்தின் இரண்டாவது எபிசோடு துவங்கி விடும் அபாயம் ஏற்படலாம் எனக் கண் முன்னே பீரோ , டிவி, தட்டு முட்டெல்லாம் பேக் பண்ணுவது மாதிரிக் காட்சி மனத்திரையில் ஓடவே செருப்பு விசயம் டிவியோடு அணைந்து போனது .

இரவு லைட்டெல்லாம் அணைத்து விட்டுப் பையனின் அன்றைய பள்ளியில் நடந்த கதைகளைக் கேட்கத் துவங்கியபோது இடப்பக்கம் படுத்து இருந்த மனைவி மெல்லக் கேட்டால் எத்தனை மணிக்கு மதியம் சாப்பிட வந்தீங்க ? என்று

எனக்குள் சட்டெனெப் பாதுகாப்பு வளையத்துக்குள் பதுங்கிக் கொண்டு, ஏன்? என்றேன் .

இல்லை நான் சாப்பிட்டுப் போகும் போது யாரோ ஒரு பெண் பக்கத்து வீட்டில் சாவிப் போட்டுத் திறந்து கொண்டு இருந்தாள் .கூட அந்த அண்ணனும் வரவில்லை .கேட்டதற்குச் சொந்தக்காரப் பெண்ணாம் அதான் எத்தனை மணிக்கு அந்த அண்ணன் வந்தார்ன்னுக் கேட்டேன் ? பாவம் அதுவரை அந்தப் பெண் சாப்பிட்டாளான்னுத் தெரியலே அதான் கேட்டேன் என்றாள் கூடவே

.நான் தெரியலே என்றேன் ஒற்றை வார்த்தையில் பார்த்த ரகசியத்தின் குறுக் குறுப்பை அடக்கிக் கொண்டு.

அவள் கவலை அவளுக்கு !

1 கருத்து:

  1. எழுத்தில் முன்னேற்றம் வந்து கொண்டே இருக்கின்றது. இது ஒரு சிறுகதையின் மையப்புள்ளி. ஆனால் எழுத்துக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களால் மட்டுமே இந்த மையப்புள்ளியில் அலங்காரம் வர்ண ஜாலங்கள் நிகழ்த்தி சரியாக கொண்டு வந்து நிறுத்த முடியும். நீங்க அப்படியே எழுதியிருக்கிங்க. முடிக்கும் போது சரியாக முடித்து இருக்கீங்க. எழுதிய பின்பு ஏதோவொரு குறையுள்ளது என்ற நோக்கத்தில் அதனை செப்பனிட முடியுமா? என்று கருத்தில் கொண்டு செயல்பட்டால் இன்னும் முன்னேற்றம் உருவாகலாம்.

    பதிலளிநீக்கு