Follow by Email

வியாழன், 22 மார்ச், 2018

சிஸ்டம் நல்லாத்தான் இருக்கிறது ! .            நேற்று மாலை அலுவலக மெயின் செர்வரிலிருந்து யாருக்கும் மெயில் வரவில்லை .சிஸ்டம் கேர் ஆட்களிடம் விசாரித்த போது அலுவலகத்திலிருக்கும் ஏதோ ஒரு சிஸ்டம் ஹேக் செய்ப்பட்டுள்ளது தெரியவந்தது.யாரோ ஜான் பிரிட்டோவாம் அந்தப் பிரகஸ்பதிதான் செய்து இருக்கார்(ன்) என்றார்கள் எந்த மெயில் ஐடி என்று கேட்டபோது அலுவலகத்தின் இருபதுக்கும் மேற்பட்ட சிஸ்ட்டத்தில் என்னுடையது ஐடி என்றார்கள் .உடனே போர்க்கால அடிப்படையில் எல்லாச் சிஸ்டத்தின் பாஸ்வேர்டுகளும் சிஸ்டம்கேர் நபர்களால் சில மணி நேரத்தில் மாற்றப்பட்டது

           கம்பெனி பாஸ் இத்தாலி ட்ரிப்பில் இருக்கிறார் .எங்கள் சர்வலிருந்து மெயில் போகவில்லையென்றால் இத்தாலி அரசிடம் கடன் வாங்கியாவது Aster 30:Long range anti-aircraft and anti-missile missile .வாங்கி என் தலைக்குக் குறி வைத்து அனுப்பி விடுவார்.நல்லவேளை தலைக்கு வந்தது , தொப்பியை மட்டும் தூக்கிக்கொண்டு போய்விட்டது .

          இந்தப் பிரச்சனை ஓய்வதற்குள், சென்னை SBI க்ரெடிட் கார்டிலிருந்து பேசுகிறோம் .உங்கள் சென்ற மாதத்திற்கான பயன்பாட்டுத் தொகை நிலுவையிலிருக்கிறது  இருபத்தி நாழு மணி நேரத்திற்குள் குறைந்த பட்ச குறிப்பிட்ட தொகை செலுத்த சொன்னார்கள் . அந்தப் போன் கால் நபரிடம் நான் அப்படி ஆள் இல்லை யோக்கியன் கடந்த 13 அன்றே செலுத்தி விட்டேன் என்ற என் வாதம் எடுபடவில்லை .கட்டி விட்டு மறு வேலை பார் என்றார்.பேசி முடிக்கும்போது உங்களுக்கு வேறு எதாவது உதவ வேண்டுமா என்ற ஆளிடம் நீயே அதைக் கட்டிவிடு என்று நாக்கு வரை வந்த பதிலை அடக்கிக் கொண்டேன்.

            இன்று எனது வங்கியில் சீரியஸாக விசாரித்தால் . அடடா அது உங்கள் செக்கா என்ன காரணமோ தெரியலை நேற்றுக் மாலைதான் ஆதரைஸ் செய்து அனுப்பி இருக்கிறோம் .பார்ப்போம் என்றார் வங்கி அதிகாரி மிகக் கூலாக. நான் ( கடுப்போடு ) நன்றி சொல்லிவிட்டு , குறைந்த பட்சத் தொகைக்குச் செக் போட்டு கொடுத்து விட்டு வந்தேன் .தலை விதியல்ல வங்கி விதிகள் அப்படிச் சாதாரணமாகி விட்டது !


           சில நாட்களாகவே எனக்கு ரேசன் கடைப் பக்கம் போகாமலேயே DZ-TNEPDS நமது நியாய விலைக்கடையிலிருந்து சுகர் , ஆயில் வாங்கியதாகத் தெளிவாக PDS Bill _________ எண்ணோடு வந்துகொண்டே இருந்தது.நேரில் சென்று விசாரித்தேன் .எதுவுமே தெரியாதது போல அந்த நியாய விலைக்கடை அலுவலர் அப்படியா என்றார்.வெளியே வரும்போது நியாய விலைக் கடைக் காம்பவுண்ட் மீது கடையில் பொருள் அளந்து போடுபவர் சாய்ந்துகொண்டு பீடி பிடித்துக்கொண்டு இருந்தார் அவரை மெல்ல விசாரித்தேன்.( எங்கள் கம்பெனி டி சர்ட் ஒன்று கொடுத்து அவரைப் பழகி வைத்து இருக்கிறேன் ) சார் உங்க ஸ்மார்ட் கார்டு இங்க இருக்கும் என்றார்.என்னங்க சொல்றீங்க அது என்னிடம் வீட்ல இருக்குன்னேன் அதிர்ந்து போய் .உங்களுக்கு இங்க வரலைன்னுத் தாலுகா ஆஃபிஸ்ல வாங்கி வந்தீங்களா என்றார் .ஆமாம் என்றேன் .அப்படின்னா இங்க ஒன்னு வந்திருக்கும் அதை வச்சு நீங்க வாங்க வரலைன்னா நாங்களே போட்டுக்குவோம் என்றார் மிகச் சாதாரணமாக .எப்படி ரெண்டு வரும் என்றேன் அதிர்ச்சி நீங்காமல் .உள்ள கேளுங்க என்றார் .

              மீண்டும் உள்ள போனேன் அதே (நியாய) கடை அலுவலர் . எப்படிச் சார் நான் வாங்க வராம பில் போட்டு மெசேஜ் வருதுன்னு எனக்கு வந்த மொபைல் மெசாஜ் காட்டினேன்.அதற்கு அவர் சார் அதுவா நீங்க உங்க கோட்டாவ ( வாங்க வேண்டியதை ) வாங்காம விட்டா அடுத்த மாதம் அதை இருப்புல (லெட்ஜர்) காட்டி எங்களுக்குத் தர வேண்டியதைக் குறைத்து விடுவார்கள் அதனால நாங்களே பில்ல போட்டுக்குவோம் .இப்பவும் நீங்க ஒன்றும் கவலைப்படாதிங்க , உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும் உடனே வந்து வாங்கிக்கங்க என்றார் மகாப் பிரபு போல .


     காவல் துறை திருப்பூரில் சந்து சந்துக்கு ஒளிந்து இருந்து கேஸ் பிடிக்கிறார்கள் .காவல் துறை நண்பரிடம் விசாரித்த போது இத்தனை கேஸ் பிடிக்கவேண்டும் என்ற மேலிடத்து உத்தரவாம். நண்பர் ஒருவர் ஒன் வேயில் சிக்கிக்கொண்டார் .சார் அந்தப் பக்கம் ரோட்டில் தோண்டிய குழி மூடாமல் இருக்கிறது என்று தன் தவறுக்குச் சாலையை நீதிமன்றம் போல நினைத்து தன் தரப்பில் வாதாடியிருக்கிறர்.அதெல்லாம் அப்பீல் கிடையாது என்று சொல்லி ஸ்பாட் ஃபைன் வாங்கி அனுப்பி விட்டார்கள் .

      வண்டிக்குச் சாலை வரி வண்டி வாங்கும் போதே பிடுங்கிக்கொள்கிறார்கள், வருசா வருசம் இன்சூரன்ஸ் ரினுவல் பண்ணு ,ஹெல்மெட்டுப் போடு ,ஒரிஜினல் லைசன்ஸ் வச்சுருக்கணும் இப்படி ஆளாளுக்குச் சட்டம் போட்டு முக்குக்கு முக்கு  தடுத்து நிறுத்திக் கேஸ் போடுகிறார்கள் .ஆனால் ஒரு சாலையும் உறுப்படியா இல்லை . இதை யார் சடையைப் பிடித்துக் கேட்பதுன்னு தெரியலை என்று நொந்துகொண்டார்.
             ஒன்று புரிகிறது . எல்லாப் பக்கமும் சிஸ்டம் இருக்குது . செயல் படுத்தும் மனிதர்களிடம் அக்கறை இல்லை . இப்படி சம்பாதிப்பது தவறு என்ற சுய ஒழுக்கம் பைசாக்குக் கூட இல்லை. அட்லீஸ்ட் கடவுள் பக்திக்காகவாவது ஒருகாலத்தில் மரியாதை இருந்தது ,திராவிடக் கட்சிகளின் கைங்கர்யத்தில் இப்போது அதுவுமில்லை ( தலைவர்கள் , அவரவர் மனவிமார்களை மட்டும் கோவிலுக்கு இடைத்தரகர்களாக அனுப்பிப் புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள் ) . மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்ற மரியாதை அரசு எந்திரப் பணியாளார்களுக்குக் கொஞ்சமும் இல்லை. லஞ்சம் கொடுத்துதானே வேலைக்கு வந்தோம் என்ற மமதை ஒருபக்கம் .எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க அவரவ் வேலைகளை விட்டு விட்டு அவர்களுக்கு எதிராகப் புகார்க் கொடுக்க மெனெக்கெடத் தயாராக யாரும் இல்லை என்பது மறு பக்கம் புரிந்து வைத்து இருக்கிறார்கள் அவர்கள் .

                  ஒரு அரசு இயந்திரம் இப்படித்தான் செயல் பட வேண்டும் என்ற சிஸ்டம் ஏற்கனவே ஒன்றுக்குப் பல முறைத் திருத்தம் செய்து வைத்து இருக்கிறார்கள் .அதை நடைமுறைப்படுத்த ஆள் இல்லை. எப்போது எந்த அரசு அலுவலகத்திலும் சாமான்யனிடம் கூடக் கையூட்டுப் பெறக் கௌரவப் பிச்சை எடுக்கவில்லையோ அதுவே மக்களையும் ஜனநாயகத்தையும் உண்மையில் காக்கும் ஆட்சி .அதை ஆன்மீக அரசியல் தந்தாலும் சரி மக்கள் நீதி மய்யம் தந்தாலும் சரி .யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் தீர்ப்புப் பொய்யாகலாம் மகேசன் தீர்ப்பு என்றும் பொய்யாவதில்லை. ‎Richard Dawkins சொல்வது போல கடவுளை அவர்கள் The Blind Watchmaker என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் .

2 கருத்துகள்:

  1. மிகவும் சுவராசியமாக இருந்தது. எப்போதும் இயல்புத் தன்மை இருக்கும் பட்சத்தில் எழுதும் வார்த்தைகளில் உண்மையும் நேர்மையும் இருக்கும் என்பதற்கு உங்கள் வார்த்தைகளும் வரிகளுமே உதாரணம்.

    பதிலளிநீக்கு