Follow by Email

செவ்வாய், 14 மே, 2013

கவிதை பருவம் ...
சில சிலிர்ப்புகள்..
                       கவிதை என்பது உணர்வா , தாக்கமா, வார்த்தைகளின் நளினமா ,என்பதை  ஆய்வு செய்யும் அளவுக்கு  அறிவு இல்லை .ஆனால் எனக்கு அந்த கவிதை நெய்யும் இயல்பு பூத்த போதெல்லாம் எனக்குள்ளே சில சிலிர்ப்புகள் நிகழும்  .அதை ஆராதிக்க மனசு பர பரக்கும் .ஆனால் அப்போதெல்லாம் கவிதையின் அர்த்தம் தேடி போகவில்லை .
எங்கோ எழுதி இருக்கிறது..
                       ஒருவேளை   ”கவிதை என்பது சொற்களில் இல்லை; சொற்களுக்கு இடையில் இருக்கிறது” எனும் வின்செஸ்டர் வாக்கியங்கள் படித்து விட்டோ ,கவிதை, மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை; மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ, பிரிந்தோ கண்ட கனவு; அது உள்ள நெகிழ்ச்சியிலே உணர்ச்சி வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுவது’என்ற புதுமைப்பித்தனின் கருத்தை பின்பற்றி இருந்தாலோ இரண்டு நல்ல விசயங்கள் நடந்து இருக்கும் .ஒன்று நான் கவிதை எழுதும் வெலையை  செய்யாமல் இருந்து இருப்பேன் .அல்லது இன்னும்  சரியாக செய்து இருப்பேன்.சரி என்ன செய்ய ?பல நண்பர்கள் என்னிடம் அவஸ்தைப்பட வேண்டும் என எங்கோ எழுதி இருந்து இருக்கிறது.      
   இறைப்பணி.             
              எனது 13 வயதில் ,மார்கழி மாத காலை நேர விளக்கு பூஜை நடத்தும் வீட்டுக்கு, பக்கத்தில் உள்ள முருகன் கோவில் போவதும்,அங்குள்ள அர்ச்சகருக்கு உதவுவதும் எனக்கு பிரியமான வேலை அதாவது இறைப்பணி ஆர்வம் .மற்றபடி பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பூஜை என்பதால் ஒருவித கூச்சம் இருக்கும் .
      முதல் வரி.         
            அப்படி ஒரு நாள் பௌர்ணமி நாள் காலை வேளையில் கோவிலுக்கு போகும்போது நிலவு ஒளி என் மேல் பட்டு எனக்கு பின்னால் என்னை தொடரும் என் நிழல் ஒருவித மன பாதிப்பை ஏற்படுத்த அதை ’நிலவு மகள் உலவி வர என் கற்பனை  அவளை தழுவி வர .. என ஆரம்பித்த அந்த முதல் வரிகளை எனது இரண்டாவது சகோதரர் முதல் ரசிகராய் படித்து உற்சாகப்படுத்த அந்த இடத்தில் ஆரம்பித்தது எனது கவிதை பருவம் ..                

   கவிதைகளை தேட ..
              பாலகுமாரன் நாவல் படிக்குபோது நினைவெல்லாம் நித்யாவில் (1982) வரும் ”பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்” பாடலை அவர் கதையின் போக்கோடு மிக சுவாரஸ்யமாக கிறங்கடித்து எழுதியதை படித்தபோது, கவிதையில் இவ்வளவு  விசயம் இருக்கிறதா என வியக்கவைத்தது .(அப்போது பாலகுமாரன் சொன்னால்தான் சில விசயங்களை படிப்பேன் ) அதிலும் இனி வரும் முனிவரும் தடுமாறும் ...என்ற வரியை ஏன் புரியவில்லை அந்த வயதில் தேடி தவித்து இருக்கிறேன் .இரும்பு குதிரையில் வரும் அவரின் ”குதிரைகள் சொல்லும் வேதம்”   கவிதை சுத்தமாக புரியவில்லை .அப்போது தான் கவிதை மேல் ஒரு தேடல் துவங்கியது .பாலா எது சொன்னாலும் புரிகிறது .இந்த கவிதைகள் மட்டுமே ஏன் தள்ளி நிற்கிரது என்ற கேள்வி பல கவிதைகளை தேட சொன்னது ..பார்த்த காட்சி..
               ஒரு முறை நண்பரின் சகோதரி பணியாற்றும் ஆங்கில பள்ளி ஒன்றில் - ஆண்டு விழா நிகழ்சிக்கு முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்த காட்சிகளை!! இரவு ஒரு மணிக்கு திரும்பி அப்படியே கவிதயா எழுதி காலையில் நண்பரிடம் காட்டும் போது என் முகத்தில் கிழித்து போட்டார் .குறைந்த ஆடைகளுடன் அங்கு நடந்த பல காட்சிகளின் விளைவுகளான என் கவிதை அப்படி தண்டனைக்கு உட்பட்டபோதுதான் சரி நாம் இனி அப்படி எழுத கூடாது என்பதையும் அதோடு நம் எழுத்து மற்ற உணர்வுகளை சென்று அடைகிறது என்பதையும் உணர்ந்தேன் .

 ஒரு படி மேலே ..
                எனது நேருஜி நினைவு பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் திரு. அரங்க பெருமாள் பள்ளி முழுவதும் மாணவரை கவிதை போட்டிக்கு தேடும்போது அப்போது சுமார் 2000 பேர் படிக்கும் பள்ளியில் யாரும் சிக்கவிலை .எனது பெயரை யாரோ சொல்லி விட ,சரி பார்ப்போம் என ஒரு பரிசோதனை முயற்சியில் ஒத்துகொண்டேன் .காரணம் என்னை சோன்னவர் யார் என்று அவரே சொன்னார் .நான் 10 ஆவது படிக்குபோது ஒரு மனப்பாட செய்யுளை எழுதும்போது என்னை அறியாமல் சில வரிகளை சொந்தமாக எழுதிவிட்டேன் .அதை திருத்தும்போது கண்டுபிடித்து அடிப்பதர்க்கு கை நீட்ட சொன்ன ராபர்ட் தமிழாசிரியர் அப்புறம் கூப்பிட்டு பாராட்டி சென்றதோடு ,  அதை ஞாபகம் வைத்திருந்து நான் +1 படிக்குபோது அந்த போட்டிக்கு என்னை பரிந்துரை செய்திருக்கிறார் - அங்குள்ள பல ஆசிரியர்கள் அப்படித்தான் ஆசிரியராக மட்டுமில்லாமல் ஒரு படி மேலே உயர்ந்தவர்கள் .அதிலும் ஜோசப் பாபு அய்யா வகுப்பு எடுத்தால் மொத்த வகுப்புமே சிறு ஓசை இல்லாமல் கவனிக்கும் .
               
திருமதி புனிதா ஏகாம்பரம்.
               அதுவரை எந்த கவிதை போட்டியிலும் கலந்து கொண்ட அனுபவம் இல்லை என்பதால் ஒரு வித தயக்கத்துடன் கவிதை போட்டி அறைக்குள் நுழைந்தால் ,குறைந்தது  20 மாணவ மாண்வியர்கள் ஏதோ யோசித்தவண்ணம் உட்கார்ந்து இருக்க, இடம் இருந்த இடத்தில் மெல்ல நான் பதுங்கிகொண்டேன் .போட்டிக்கு தலைப்பு கொடுக்க உள்ளே வந்தவர் என்னை ஆச்சர்யபடுத்தினார் .ஆம் அவர்கள் திரு சாலமன் பாப்பயா பட்டி மன்றத்தில் அதிகம் கலந்து கொள்ளும் திருமதி புனிதா ஏகாம்பரம் அம்மையார் .அவர்கள் பேசினார்கள் ,உங்களுக்கு கொடுத்த தலைப்பு “புதியதோர் உலகம் செய்வோம் “ என்பதாகும் ,ஒருத்தர் எத்தனை புது கவிதை அல்லது மரபு கவிதை வேண்டுமானலும் எழுதலாம் என்று சொல்லிவிட்டு ,இதர்க்கு முன்னர் உங்களுக்கு வழங்க பட இருந்த கடினமான தலைப்பு ” ஆன்மீகமும் அறிவியலும் ”என்பது.நான்தான் மாற்றினேன் என்றார்கள் .யாரும் பேசவில்லை .ஆனால் நான் சொன்னேன், ஆன்மீகத்திலிருந்துதான் அறிவியல் வந்தது அது ஒன்றும் கஷ்டமான தலைப்பு இல்லையே என்றதும் ,என்னை உற்று பார்த்து வீட்டு எந்த பள்ளி என்று கேட்டுவிட்டு போனார்கள்.
             
     வாசலாக
           அந்த போட்டியில் இரண்டாவது பரிசு நான் .அதை மேடையில் அறிவித்த அவர்கள் இந்த கால புதுக்கவிஞர்கள் திறமைசாலிகள் எந்த தலைப்பு கொடுத்தாலும் எழுத தயாராக இருகிறார்கள் என்று பாராட்டி பேசினார்கள் அதுவும் முழுக்க ,முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் "Our Lady "  என்ற பள்ளி அது நடந்தது அதனால் .ஒரே நாளில் எங்கள் பள்ளியில் பிரசித்தம் ஆகிவிட்டேன்.அடுத்த நாள் பள்ளி அசம்பளியில் முன்னிறுத்தி பாராட்டப்பட்டேன்.  அடுத்து நடந்த பல போட்டிக்கு அந்த பரிசும் ,பாராட்டும்  வாசலாக இருந்தது .. 
           பிறகு எனது நண்பர்களின் சகோதரிகள் கல்லூரி விழாக்களுக்கு கவிதை எழுதி தர கேட்டு, வாங்கி சென்று இருக்கிறார்கள் .

         
  செல்ல குட்டு !           
         ஒரு சமயம் கலை இலக்கிய பெரும் மன்றத்தில்  அவசரமாக எழுதிய கவிதையில்...


நண்பர்களே இதுவரை 
எழுதியதும் படித்ததும் போதும்.
 அது இப்போது எதுவும் சாதிக்கவில்லை !.
என்னிடம் அரிவாள் இருக்கிறது
முடிந்தால் நீ சுத்தியலோடு 
விரைந்து வா !!
                என்று எழுதி விட்டேன். அங்கு இருந்தவர்கள் பெரும்பாலோர் கம்யூனிசவாதிகள் என்பதால் ரசித்தார்கள் .ஆனால் அப்போது அதன் செயளாலராக இருந்த திரு முத்துலக்கையன் (  என்ற என் மதிப்புக்குரியவர் அவர், ஒரு கம்யூனிச கட்சியின் கவுன்சிலர் ) சொன்னது என்னவென்றால் அவர்களும்(கம்யூனிசவாதிகள்) படித்தும் ,எழுதியும்தான் சாதித்து இருக்கிறார்கள் எனவே தோழர்( என்னை )  இன்னும் நிறைய வரலாறு படிக்கவேண்டும் என்று செல்ல குட்டு வைத்தார் .


அவர்தான் என்னை திரு.வைரமுத்து அவர்களின் இல்லத்திர்க்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தி  ’தடை கல்லை படிக்கல்லாக்கு ‘ என கையெழுத்து ஆசீர்வாதம்  வாங்கிதந்தார், என்பது முக்கியமான விசயம் . 
மார்கழி பெண்ணே அவதாரம் .!.
               பிறகு ஒரு சமயம் என் தோழி ஒருத்திக்கு ஒரு படைப்பு தர வேண்டும் என்ற ஆர்வத்தில் ”மார்கழி பெண்ணே” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு அப்போது (டைப்பிங்)  தட்டச்சு வெளியிட்டேன் .அதில் ஒரு வித்தியாசம் செய்தேன் .உண்மையான திருப்பாவை நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான் ( கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்) என்பதாக முதல் பாடலின் கடைசி வரிகள் முடியும்  ஆனால் நான் அதை மாற்றி அதே நாராயணன் இந்த ஆண்டாளூக்காக ஏங்கி தவித்து பாடுவது போல படைக்க ( லேசாக ஜொள் மாதிரி யோசிக்க தோனுமே).அதை பிரதி எடுத்த தட்டச்சு பெண்ணே எனக்கு தெரியாமல் சில பிரதிகளை சுட்டு விட்டது .அந்த மார்கழி பெண்ணே  சில கல்லூரி பேராசிரியைகளால் பாராட்ட பட்டாள் ..

போதி மர  நிழல் !
              காலத்தை திரும்பி பார்த்தால் கவிதை எழுதும் எனது பழக்கம் பல  சமயம் எனது உணர்வுகளின் வடிகாலாக இருந்திருக்கிறது .என் கோபத்தை ,சந்தோசத்தை ,துக்கத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கத்தை வளர்த்து  ஒரு போதி மர  நிழல் தோழனாக வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற உண்மை வாழ்க்கையின் கால் தடங்களாக தொடர்கிறது ....அற்புதம்தானே !!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக