Follow by Email

செவ்வாய், 1 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் ( கடிதம் ) !


உலகில் ஆண்களை விடவும் பெண்கள்தான் காதல் கடிதங்கள் எழுதுபவர்களில் மிகப்பெரிய சமர்த்தர்களாக இன்னும் இருக்கிறார்கள் . நேரில் பேசுவதைப்போலத் தன் மன உணர்வுகளை அப்படியே எழுத்தின் மூலம் கொட்டித்தீர்த்து விடுகிறாகள்.இதில் மிகப்படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்றெல்லாம் இல்லை எல்லோரும் தட்டி எறிகிறார்கள் .கல்யாணத்திற்கு முன் பெண்களால் எழுத்தப்படும் காதல் கடித்தங்களில்தான் ”ரொமான்ஸ்” அதிகம் வழிந்து ஓடுகிறது இதில் கி.மு 2200 ல் சுமேரிய நாட்டின் உயர்நிலைப் பாதிரியான இன்னானா முதல் இரவின்போது கணவனுக்காகக் கல்லால் செதுக்கப்பட்ட உலகின் முதல் காதல் (கவிதைக்) கடிதம் மட்டும் சேர்த்தியில்லை. 

நமக்கு வந்த காதல் கடிதங்களை விடவும் அடுத்தவர்களுக்கு வரும் காதல் கடிதங்கள்தான் உலகில் அதிகம் பேசப்படுகிறது.அமெரிக்காவின் அபிகெயில் ஆடம்ஸ் (Abigail Adams ) இங்கிலாந்தின் மேரி வோல்ஸ்டோன்க்ராஃப்ட் (Mary Wollstonecraft ) நெப்போலியன் (Napoleon Bonaparte ) முதல் ஜிம்மி ஹென் (Jimi Hendix ) வரை அனைத்துக் காதல் கடிதம் ரசங்களும் மிதக்கும் உணர்ச்சிகள் மிகுந்த வார்த்தைகள் எல்லோருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது .ஆனால் உங்கள் நண்பருக்கு வந்த காதல் கடிதம் படிக்க மனசு வருமா ? வராது எனக்கும் வரவில்லை.ஆனால் அந்த நண்பர் தேவன் விடவில்லை . 

நண்பர் தேவன் என்னை விடச் சில வயது மூத்தவர்.நிறைய படிப்பவர்.எழுதுபவர். மார்கழி மாத ஆண்டாளைத் தோழிகள் எழுப்புவதை மாற்றி அந்த நாரயணனே எழுப்புவதாகத் தனது காதலிக்காக யோசித்து ”மார்கழிப்பெண்ணே” என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் . நிறைய யோசிப்பவர்.நாங்கள் படித்த புத்தகம் பார்த்த திரைப்படம் எதிலுமே நாங்கள் பார்க்காத கோணத்தில் தன் பார்வையைப் பதிவு செய்பவர் .அவருக்கும் – உமா என்ற பெண்ணுக்குமானக் காதல் காலத்தில்தான் நான் உடன் இருந்திருக்கிறேன் . 

உமா முதல் இவர்கள் காதல் காலம் தொடங்கிய முதல் வருடத்தில் செமஸ்டர் லீவுக்குத் திண்டுக்கல்லு அருகில் இருக்கும் தனது பெரியப்பா ஊருக்குப் போய் 28 நாள் தங்கியிருந்தார் அப்போது தேவனுக்கு அங்கிருந்து எழுதிய கடிதங்கள் 23 (இது முதல் வருட செமஸ்டர் விடுமுறை மட்டும்தான் அடுத்த வருடம் எத்தனை என்பது எனக்கு ஞாபகம் இல்லை).ஒரு முறை அவர் வீடுக்குப் போனபோது மிகவும் கவனமாக ஒரு கோடு போடாத பேப்பரில் மிகக் கவனமாக ஒவ்வொரு வரியாக அடிக்கோடிட்டுப் படித்துக்கொண்டு இருந்தார்.என்ன என்று கேட்டு விட்டேன் .நான் செய்த மிகப்பபெரிய தவறு அதுதான் .மனிதர் படித்துகாட்டத் தொடங்கிவிட்டார்.. 

இது நாகரீகம் இல்லை அடுத்தவங்கக் குளியறைக்குள் எட்டிப்பார்ப்பது பொல என்று மறுத்த போது தேவன் விடவில்லை .இது என் குளியறைதான் என் நண்பன்தான் என்று சொல்லியிருந்தாக் கூடப் பரவாயில்லை . அவர் சொன்னப் பதில் அந்தப் பெண் உமா அவருக்கு எழுதிய கடித வரிகளை விடவும் ஒரு வித ரொமான்ஸாக இருந்தது. இது உனக்குப் படித்துக்காட்டும் போது எனக்கு ஒரு கவிதையைப் படிப்பது போலச் சுகமாக இருப்பதாக உணர்கிறேன்.இந்த உலகத்தில் எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சத்தமாக ஏதோ ஒரு மலை மீது ஏறி கத்துவது போல ஒரு கர்வமாக இருக்கிறது .இதனல் உமா மீது என் காதல் இன்னும் எனக்குள் இறுகுகிறது.என்றார்ப் பதில் சொல்லாமல் அந்தத் தவறை (அடுத்தவர் கடித்தை படிப்பதை ) கேட்டேன் ! 

ஒரு முறை அவருக்குக் கடிதம் தபாலில் வந்தபோது அவருடன் வீட்டிலிருந்தேன் .அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு மாதிரி இருந்தது.வந்து இருந்த அந்தத் தபால் கவரை பிரிக்காமல்உள்ளங்கயில் வைத்து ஒரு முறை அதன் கனத்தைக் கண்மூடி உள்வாங்கினார்.சில நிமிடம்தான் வேறு எதுவும் யோசிக்காமல் அந்தக் கவரை தனது மேஜை ட்ராயரில் வைத்து மூடி வைத்து விட்டு என்னோடு வெளியே கிளம்பிவிட்டார்.எனக்குப் புரியவில்லை .கேட்டு விட்டேன் .ஒரு வேளை நான் இருப்பதால் படிக்கவில்லையா என்றதும் இல்லை வேறூ காரணம் என்று கண் சிமிட்டினார்.

அவள் என்ன எழுதியிருக்கிறாள் என்பதை என் மனம் தறிகெட்டுத் தவிப்பதோடு படித்தாள் அவள் என்ன சொல்லவந்தாள் என்பது புரியாதுப் போகலாம் .என்னுள் அந்த எதிர்பார்ப்புத் தீர்ந்துப் போன பிறகு ஓவ்வொரு வரியாய்ப் படிக்கும் போது மிகப்பெரிய சுகம் வருகிறது .அது மட்டுமல்ல என்ன எழுதியிருப்பாள் என்று அதைப் படிக்காமல் அந்தச் சுகமான வலியோடு சும்மா இருக்கும் பிடிவாதமாக இருப்பதும் ஒரு விதமான சுகம் என்றார். அது சரி இந்த அனுபவம் நமக்கு ஏற்பட்டால்தானே ? 

ஆனால் எனக்கும் ஒரு காதல் கடிதம் வந்தது நான் சில ஆண்டுகள் புதுவையில் இருந்த போது என் அண்ணியின் ஒன்றுவிட்ட சகோதரி ஒரு காதல் (!) கடிதம் எழுதியிருந்தாள் .அனேகமாக உலகத்தில் எழுதப்பட மிக மோசமான தமிழ் கொலைக்கடிதம் அதுவாகத்தான் இருக்க வேண்டும் ! இன்னானா   கணவனுக்காகச் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட காதல் ( கவிதை) கடிதத்தை வாசித்து விளங்கிக்கொள்ளவாவது 58 வருடங்கள் சுமேரிய மொழியில் நிபுணர்களான Muazzez Longso, Hatice ஆகியோருக்கு ஆகியிருக்கு.ஆனால் என்னால் அந்தக் கடித்தத்தைக் கடைசிவரைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. பொதுவாக நமக்குப் பிடித்தவர்கள் எழுதிய கடிதங்களில் பிழைகள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள்.ஆனால் கடிதம் முழுதுமே பிழையாக இருந்தால் என்ன செய்வது ? அப்படியும் முயற்சிப் பண்ணி எழுத்துக்கூட்டிப் படிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் போது வீட்டு சொந்தக்காரர் ( House Owner ) பையன் ஒட்டுக்கேட்டுவிட்டு அவன் அக்காவிடம் சொல்லியிருக்கிறான் (அந்தப் பெண் சுமாராகத்தான் இருக்கும் ) ஒரு முறை நேரில் பார்த்தப் போது அங்கிள் உங்களுக்கு ’தமிள்’ வராதா என்று கேட்டது நக்கலாக .என் தலைவிதியை என்ன சொல்வது? 

சரி நான் அடுத்தவர் காதல் கடிதம் படித்த மோசமான பெருமையைப்பற்றிச் சொல்லவா இந்தப் பதிவுக்குள் வந்தேன் அதுவும் பதிவின் தலைப்புக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கும் விசயத்திற்கும் சம்பந்தமில்லாதது போலப் படுகிறதா ? இல்லை .

நண்பர் தேவனுக்கு உமா எழுதிய அத்தனை கடிதங்களும் ஒரு நாள் திருடு போய் விட்டது .திருடுப் போய் விட்டது என்பதை விடத் தேவனின் நெருங்கிய நண்பரால் திட்டமிட்டுக் களவாடப்பட்டு விட்டது ! 

 அது ஏன் என்பதைச் சொல்ல நேரம் போதவில்லை.அடுத்த பதிவில் தேவனின் அந்த நண்பர் ஏன் களவாடினார் என்பதைச் சொல்ல வருகிறேன் .     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக