Follow by Email

செவ்வாய், 17 மே, 2016

+2 மாணவர்களின் அன்புப் பெற்றோர்களுக்கு ....


ஒரு சின்னக் கதையோடு தொடங்குவோம் .. 


வீட்டில் படிப் படி என்று ஒருவனைப் பிழியவில்லை .ஆனால் அவன் படிக்க ஆசைப்பட்டான் ஆர்வமாக இருந்தான் .சின்ன வயதிலிருந்தே மனோதத்துவத்தில் மிக ஆர்வமாக இருந்தான்.பத்தாவது மதிப்பெண் பட்டியலில் அவன் எடுத்த குறைந்த மதிப்பெண்ணில் அறிவியல்தான் முதலிடம்.வெறும் 43 தான். ஆனால் அவன் படித்த அரசுப் பள்ளியில் யாரும் Pure Science பிரிவில் சேர மறுத்ததால் அவன் பள்ளி அவனை வம்பாக அந்தப் பாடப் பிரிவில் உடக்கார வைத்தது.மண்ணும் சரியில்லை ,விதையும் சரியில்லை அப்படியானால் வெள்ளாமை எப்படிப் பலன் தரும் ? +2 வில் தோல்வி.அப்போது அவனுக்கு அவன் வீடு தோள் கொடுத்தது .ஐ.டி.ஐ படிக்க வைத்தது .சில அரசியவாதிகள் செய்தச் சூழ்ச்சி அதிலும் வேலை கிடைக்க விடாமல் துரத்தியது.அவனாய் வேலை ஒரு பிரசித்திப் பெற்ற விவசாய மோட்டார்க் கம்பெனி ஷோரூமில் பில் போடுவது,தினசரிக் கணக்குப் பராமரிப்பது .வங்கிக்கு போவது என உயர்ந்தான்.இந்த வேலைப் பார்த்துக்கொண்டே தொலைதூரக் கல்வியில் எம்.ஏ நிர்வாகவியல் படித்தான் ,அதிலும் முழுமையாக்கத் தொழில் விடாமல் துரத்தியது .ஜோதிடம் ,கம்யூட்டர்,மெர்சண்டைசிங் இன்னும் எத்தனையோ படித்தான் எதிலும் முழுமை அடைய முடியடவில்லை...

ஆனால் அவன் கனவை ஒரு குரு நிறைவேறினார் அதுவும் ஒரு வனத்துறை அமைச்சர்க் கையிலும் மிகப்பெரிய பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர்க் கையில் தன்னுடைய டிப்ளமோ பட்டம் வாங்கினான்.அந்த டிப்ளோமாவை இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து போன தன் தாயிற்கு அர்பணித்தான் .அடுத்து அதே கல்வியில் இரண்டாடுப் படிக்க வேண்டிய முதுநிலை முடித்தான் .அதை அடுத்தச் சில மாதங்களில் மறைந்த தன் தந்தைக்கு அர்பணித்தான்.இப்போது அவன் அதே கல்வியில் ஏறக்குறைய எட்டு வருடம் படிக்க வேண்டிய ஆசிரியருக்கான கல்வியில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து அடுத்தவருக்குப் போதிக்கும் ஆசிரியனாய் ஆகப் போகிறான் ...அதைத் தன் மனைவிக்கும் தனது மகனுக்கும் அர்பணிக்கப் போகிறான் ... 

எல்லோரின் கனவும் விதை போல. விதைத்தவன் உறங்கினாலும் அந்த விதைகள் உறங்குவதில்லை..


அன்பு முகநூல் நண்பர்களே ... 

மாணவ வாழ்வின் மிக முக்கியமான கட்டம் +2 முடிவு .இது வரை அவன் எப்படிப் படித்தான் என்பதை விட இனி அவன் சொந்தக் காலில் நின்று சாதிக்க இந்த மதிப்பெண் ஒரு புதிய வாசல் என்பது உண்மைதான் .ஆனால் இதுவே இறுதியில்லை . முகநூலில் ஆசிரியர்கள் அதிகம் இல்லை .மாணவர்களும் குறைவு அப்படியே ஒருவேளை இருந்தாலும் அவரவர்கள் ஒன்று சேர்ந்துக் கலாய்த்துகொள்வார்கள். பொதுத்தலத்தில் அவர்கள் பார்வைக் குறைவு . ஆனால் முகநூலில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் ,படித்தவர்களும் ,அன்புச் சகோதர்களும் நிறைய இருக்கிறீர்கள் .உங்கள் அருகில் உள்ள தேர்வில் தோற்றுப்போன மாணவர்களுக்கும்,குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் அடுத்து என்ன செய்யப் போகிறோன் என்று தெரியாது கைபிசைந்து நொறுங்கிய மன நிலையில் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஆறுதலாய் இருங்கள் .முகநூலில் செலவழிக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு பகுதியை அந்த அருகில் உள்ள மாணவனின் எதிர்காலத்திற்கு ஒதுக்குங்கள்.எதாவது ஒரு வழிகாட்டலாக .குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் இருந்தால் அடுத்து என்ன படிக்கலாம் அல்லது அடுத்து தோற்றுப்போனவனுக்கு அடுத்து எப்போது தேர்வு எழுதலாம் ,எந்த டுட்டேரியல் நல்ல கோச்சிங் இருக்கிறது தெரிந்து வைத்துச் சொல்லுங்கள் .ரொம்பவும் மெனெக்கெட வேண்டாம் போகிற போக்கில் இணையத்தில் ,பத்திரிக்கைகளை ,சுவர் விளம்பரங்களைக் கவனித்தாலே போதும். 

இது விதைக்கிற காலம் இல்லை ... 

முக்கியமாக நிறைய வீடுகள் குழந்தைகளை அவர்களை அவர்கள் மனதைச் சிதைக்கும் நேரமிது . பல வீடுகளில் தந்தையோ தாயோ வீட்டில் ஏதோ ஒரு கனவுடன் ஒரு பிடிவாதமாக முடிவெடுத்துக்கொண்டு என்னை மாதிரி இவன் கஷ்டப்படக்கூடாது ,அல்லது நம் சொந்தத்தில் நல்லா படித்தவன் என் மகன்தான் என்று சொல்லிக்கொள்ளவோ ,தன் மகனை மருத்துவனாகவோ ,வக்கிலாகவோ ,கனவு கண்டுகொண்டு அந்த வறட்டு வைராக்கியத்தில் அந்தப் பையனை +1 ல் பிடிக்காத பாடத்தைத் தேர்வு செய்யச் செய்து விடுகிறார்கள்.முதல் வருடம் அவன் யோக்கிதை அவனுக்கும் தெரிந்து விடும் .ஆனால் வழியில்லாமல் கொஞ்சம் காசு இருக்கிற வீட்டில் டூயூசன் வைத்து விடுகிறார்கள் .சில வீட்டில் அதுவுமில்லை எப்படியாவது படித்து விடு என்று கட்டாயப்படுத்திக் கரைசேரச் சொல்கிறார்கள் .எப்படி அது முடியும் ? ஒன்பதாவது படிக்கும் வரை அவன் படிப்பைப் பற்றியோ அவனுக்கு எது வரும் என்பது பற்றித் துளியும் கவலைப்படாதப் பல வீடுகள் பத்தாவது வகுப்பில் மதிப்பெண் புதைச்சேற்றில் அவனை அழுத்த தொடங்குகிறார்கள்,அது கடைசியில் +2 தேர்வு முடிவில் பிரதிபலிகிறது. 


நான் எந்தப் படிக்காத பையனுக்கும் மதிப்பெண் எடுக்காத பையனுக்கும் இங்குச் சப்போர்ட் பண்ணவில்லை.விதைக்கிற காலத்தில் விட்டு விட்டு அறுவடையின் போது அவன் முன் அருவாளோடு அவன் முன் நிற்கிறீர்களே என்று ஆதங்கம்தான் இந்தப் பதிவு. சிலர் முகம் சுளிக்கலாம் அவனைப் பள்ளிக்கூடம் அனுப்புகிறதே படிக்கத்தான் அதற்காக இரவு பகலாகக் கஷ்டப்பட்டுப் பொருள் சேர்த்துப் படிக்கவைக்கிறோம் நீ சொல்வதைப் பார்த்தால் அவனோடு பள்ளிக்கூடம் போய் உடகார்ந்து கொள்ளச் சொல்வது போல இருக்கிறதே என்று கோபப்படலாம்.நியாயமான கோபம்தான் . இந்த உலகத்தில் நம்முடன் இருப்பதை விட அதிகம் பள்ளியில்தான் இருக்கிறான்.அவனோடு சேர்ந்துப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்.வேலை விட்டு வந்து அவனோடு வாரம் ஒரு முறையாவது பேசுங்கள் அவனுக்குப் பொருள் சேர்ப்பதைப் போல அதுவும் முக்கியம் .ஒன்பதாவது ,பத்தாவது வகுப்பு அவன் படிக்கும் போது அவன் பள்ளிக்கு மாதம் ஒருமுறையாவது போய் விசாரியுங்கள் .அவனுக்கு எது பலம் எது பலவீனம் தெரிந்து கொள்ள முயலுங்கள் .அதுவும் உங்கள் கடைமைதான். தனக்கே சரியாக முடிவெடுக்கத் தெரியாத பல குடும்பங்கள் அவனுக்கு என்ன படிக்க வரும் என்று தெரியாமல் வைக்கோல் பொம்மையைத் தயார் செய்வது போல எதோ ஒரு உருவமாய் அமுக்குவது போல அமுக்கி ஏதாவது ஒரு பாடத்தை இவர்களே தேர்வு செய்து உட்காரவைத்து விடுகிறார்கள்.உங்கள் கனவை அவன் எப்படி நிறைவேற்ற முடியும் அவனவன் கனவைக் கரைசேர்க்கவே பல பிறப்புத் தேவைப்படுகிறதுநல்ல பெற்றோர் நீங்கள் ... 

எனவே இது வரை என்ன செய்தீர்களோ பெற்றோர்களே விட்டு விடுங்கள் அவன் உங்கள் மகன் அல்லது உங்கள் மகள் .உங்களின் அதிகப் பட்ச அறிவும் அக்கறையுமே அவனை வளர்த்து இருக்கிறது .அவன் எதிர்காலம் உண்மையிலேயே உங்கள் கையில் இருக்கிறது இப்போதுதான் .உங்களுக்கு இருக்கும் ஆதங்கங்களை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் .இப்போது உங்கள் குழந்தைகளுக்கு ஆதராவாய் இருங்கள் .அவன் ஒரு சிக்சர் அடித்த போது கூட அவனைச் சுற்றி ஆயிராமாயிரம் கைதட்டல்கள் அவனை நோக்கிப் பறந்து வந்து இருக்கலாம்.பாராட்டுதான் உலகம் என்று தெரிந்து வைத்து இருக்கும் நம் குழந்தைகள் இந்த மாதிரித் தேர்வு முடிவுகளில் நொந்து போய்விடுவார்கள் .நீங்கள் படிப் படி என்று காட்டுக் கத்துக் கத்திய போது அவன் எதிர்த்துப் பேசியிருக்கலாம் அவன் தன் குறைந்த பட்ச அறிவால் உங்களை முட்டாள் போலக் கேலி செய்து இருக்கலாம்.அதெல்லாம் இப்போது மனதில் கொள்ளாமல் வேண்டாத பாலிபேக் போலத் தூக்கி வெளியே எறியுங்கள் .அவனுக்கு இப்போது நீங்கள் காட்டும் அக்கறை இனி எப்போதும் அவனால் மறக்க முடியாது அது வேறு எதனாலும் உங்கள் மேல் அன்பை வரவைத்து விடாது .இதுவே அவன் மேல் நீங்கள் வைத்து இருக்கும் உண்மையான அன்பின் அடையாளத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் .தோற்ற போது அவன் கூட இருக்கு ஒரே ஆறுதல் நீங்கள் மட்டுமே .இங்குத் தோற்றதற்கு அல்லது குறைந்த மதிப்பெண் பெற அவன் கவனக்குறைவு ,எதிர்காலம் பற்றிய அவன் அக்கறையின்மை எதுவாகவேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும்.அவனோடு நேற்றுவரைக் கூடச் சுத்தியவர்கள் , படித்தவர்கள் நிறைய மதிப்பெண் அடுத்தக் கல்லூரிக்கோ அல்லது வேறு படிப்பிற்கோ போவதைப் பார்த்தாலே அவன் தன் வாழ்வின் பாடமாக எடுத்துக்கொள்வான் .அதுவே யாராலும் தர முடியாத பாடம் . 


குழந்தைகள் விருட்சங்கள் ... 

இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் பிறப்பின் நோக்கம் இருக்கிறது .அதை நோக்கி நாம் நகர்ந்துக் கொண்டுதான் இருக்கிறோம் .சிலருக்கு ஆரம்பமே வெற்றியாக இருக்கிறது.சிலருக்கு அப்படியில்லை.இங்கு உங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள் .எத்தனை பேர்ப் படித்த படிப்புக்கு வேலைப் பார்க்கிறோம் .அப்படியே பிடிவாதமாக இந்த வேலைக்குத்தான் போவேன் என்று பிடிவாதம் பிடித்தவர்கள் வாழ்க்கை எங்கு நிற்கிறது .நம்மால் நம் பெற்றோரை , நம் இளமைக் காதலை வாழ்வின் சந்தோசத்தை , வேலையை , இப்படி நிர்ணயம் செய்ய முடியவில்லை .அப்படி இருந்தும் நாமும் இந்தச் சமூகத்தில் ஒரு கணவனாய், மனைவியாய் ,ஒரு குழந்தையைப் பெற்ற பெற்றோராய் நிற்கவில்லையா அது போல அவனும் நிற்பான் .இந்த +2 அவனைத் தீர்மானித்து விடாது.அவன் எதிர்காலம் அவனேதான் அவன் ஒரு விருட்சம். இப்போது வெய்யில் அடிக்கிறது .நீரூற்றிப் பாதுகாப்புக் கொடுங்கள் அவனாய் உங்களைப் போலப் பலரையும் வாழவைப்பான் . இந்த உலகத்தில் எவனும் முழுதாய் தோற்றவன் இல்லை .ஒவ்வொருவனின் அவனவன் வழியில் வெற்றியும் வேறு வேறு ! 


மேலே தொடங்கிய கதையில் ஒரு வனத்துறை அமைச்சர்க் கையிலும் , பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளார்க் கையில் தன்னுடைய டிப்ளமோ பட்டம் வாங்கினவன் மேலே கொடுக்கப்படுள்ள படத்தில் இருக்கிறான் ...உங்கள் மகனோ , மகளோ +2வில் தோற்றால் எதுவும் நடந்து விடாது .தோள் கொடுங்கள் எத்தனையோ குழந்தைகள் பள்ளிக்கே லாயக்கில்லை என்று துரத்தியபோது பின்னாளில் தங்களின் பெற்றோர்களின் அன்பால் அறிஞர்களாகியிருக்கிறார்கள் .இங்கு நான் பார்க்கவே எதிலும் ஜெயிக்காத என் நண்பர்கள் பலர் தன் தாய்த் தந்தையைத் தளர்ந்த வயதில் உட்காரவைத்து மூன்று நேரமும் தங்கள் வருவாயில் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் பார்த்துப் பார்த்துப் படி படி என்று அவன் எதிர்கால நரகத்தை மட்டுமே வழிகாட்டிய தந்தைகளை அவர்கள்  பிள்ளைகள் யாரோ ஒரு அமெரிக்காப் பெண்ணைக் கட்டிக்கொண்டும் கிரீன் கார்டும் வாங்கிக்கொண்டு தன் பெற்றோர்களை உயர்ந்தப் பட்ச அனாதை விடுதிகளில் சேர்த்து விட்டு பேரப்பிள்ளைகளைக்  கொஞ்சுவதற்கு உயிரற்ற ’ஐபேடில்’ முத்தமிட்டு எச்சில் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். முடிந்தால்... விநாயமுருகனின் ’ராஜிவ்காந்தி சாலை’ நாவலைப் படித்துப் பாருங்கள். அதில் பெற்ற அப்பனைப் பார்த்துக் கொள்ள விரும்பாத ஐ.டி அறிவாளிகள் ஏதோ ஒரு அடுத்த மாநில லாரியில் ஏற்றி  திரும்பி வர முடியாத தூரத்தில் அநாதைகளாய்ப் பிச்சை எடுக்க விட்டதாகப் படித்து இருக்கிறேன் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக