Follow by Email

திங்கள், 23 மார்ச், 2015

உத்தமன் ( கமல் ) வில்லனா ?


கடந்த ஞாயிறு ( 22, ஏப்ரல் ) உத்தம வில்லன் பாடல் வெளீயீடு நிகழ்ச்சி அல்லது எல்லாப் புகழும் கமலுக்கே நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.ஒருவகையில் விழாவில் கமலை புகழ்வது மட்டுமல்ல வேறு யாரயும் புகழ்ந்து விடக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டது போல் இருந்தது .இதர்க்காகத்தான் வேறு பிரபலங்கள் விழாவுக்கு அழைக்கப்படவில்லயா அல்லது வரவில்லயா என்பதுவும் தெரியவில்லை?


இப்படியெல்லாம் தொடங்குவதால் நானும் சாரு நிவேதிதா போல, உலகை சினிமாவை ரசித்து விட்டு, உலகச் சினிமாவும், இலக்கியமும் தெரிந்த கமலால் ஏன் ஒரு நல்ல உலகத்தரமான படத்தைக் கூடத் தர முடியவில்லை என்று கேட்கத் தெரிந்தவனும் இல்லை. கருந்தேள் கண்ணாயிரம் போலக் கமலஹாசன் நிகழ மறுத்த அற்புதமா ? எனக் கேள்வி கேட்கும் உலகச் சினிமா மூளைக்காரனும் இல்லை ஆனால் ஒரு வேளை கமல் நடிப்பு தெரிந்து இருக்காவிட்டால் சொற்பமாக எனக்குத் தெரியும் சில மேல் நாட்டுப் படக் கதா நாயகர்களை , உற்றுப் பார்க்க எனக்குத் தெரியாமல் போயிருக்கலாம். அதனால் இந்த உலகத்தில் எதுவும் மாறி போயிருக்காது நானும் இந்த பதிவை விட்டு இருக்கலாம் ! அது வேறு விசயம்.


கமல் நடிப்பின் அபிமானியாய் மாறக் காரணம் எவ்வளவோ இருந்தாலும் முதல் காரணம் எனது நான்கு அண்ணன்களும் கமல் ரசிகர்கள் அதிலும் முதல் அண்ணன் (1980 களில்) கமலைப் போலவே பெல்பாட்டம் பேண்ட்,ஸ்டெப் கட்டிங்' பாட்டு, டான்ஸ் கலக்குவார் .பீரோ ,புத்தகச் செல்ஃப் எங்கும் கமல் எதிலும் கமலாக இருக்கும் அடுத்தக் காரணம் வீட்டில் அப்பா வாங்கும் ஒரே வாரப் பத்திரிக்கை குமுதம். அதில் சுஜாதா கமலுக்காக எழுதிய விக்ரம் படத்தின் கதை ஆரம்பித்துக் கொண்டு இருந்த போதுதான் நான் வாசிக்கப் பழகிய காலமும் என்பதால் என்னையறியாமல் கமல் பக்கம் ஈர்க்கப்பட்டேன் .அப்போது கமல் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு மசாலா படமாக அள்ளிக் கொண்டு இருந்த காலம் .படத்தைப் பார்க்காமல் ரசிகனாய் மாறிய ஒருவகைக் காதல் கோட்டை பாணி ரசிகன் .இதெல்லாம் சொல்லிக் கொண்டு உத்தம வில்லனை விட்டு விட்டேனே நான் ?

எப்போதும் புதுமை என்று பேசிக் கொண்டு மட்டும் இருக்கும் பலரில் யாருக்கும் பிடிக்காவிட்டாலும் என ஆளுமையைக் காட்டுவேன் என்பதாய் இன்னும் வலம் வருவது உத்தம வில்லன் வரை சினிமாவில் தில் கமலுக்கு மட்டுமே உண்டு இந்த நிகழ்ச்சியில் அவரின் தன்னைக் பாலசந்தரின் சீடன் என்று ( கட்டாயமாகச் ) சொல்லிகொள்ள எடுத்த விழா அல்லது சாட்சியம் என்று கூடச் சொல்லலாம் அதென்ன சாட்சி அவரே மேடையில் ஓர் இடத்தில் , தன்னைப் பற்றிக் கே.பி சார் எழுதிய சில விசயங்கள் பற்றிச் சொல்லும்போது திருமதி கே.பி அவர்களைச் சாட்சிக்கு அழைத்தார் ஒரு வேளை அவரே எழுதி கொண்டதாக நினைக்க இடம் கொடுக்கக் கூடாது என்பதர்க்காக இருக்கலாம் .அதுதானே சினிமா உலகம் !


இங்குக் கே.பி சாரை பற்றிச் சிலவாவது பேச வேண்டும் இந்தப் படத்தில் நடிக்க வந்து முதல் இரண்டு நாள் பற்றி அவர் பேசும்போது இன்றைய சினிமா உலகம் மாறி போயிருப்பதாகவும் எங்கும் எந்தவித சத்தமும் இல்லாமல் மிகச் சிறந்த புரிதலுடன் படப் பிடிப்பு நடப்பதையும்,கடைசி காட்சியை முதல் ஷாட்டாய் எடுப்பதையும் வியந்து பேசினார் அதை விட முக்கியமாக டிஸிப்பிலின் இருக்கிறது என வியந்தார். தனது 84 வயதிலும் தான் மற்றவர்களைக் கவனித்துக் கற்றுக் கொள்ளும் பக்குவத்தை இழக்காமல் இருந்து இருப்பதே அவரால் எப்போதும் புதுமையைப் புதிதாய் வைத்து இருக்கக் காரணம் என்பதைச் சொல்லியது .

விழாவில் தொகுப்புரை கொடுத்த அதுவும் சோலோவாக ஜோடி எதுவும் இல்லாமல் டிப் டாப்பாகக் கோட் சூட்டில் பார்த்தீபன் ஜொலித்தார் .அவரின் கிண்டல் தோரணம் மட்டும் குறையவில்லை .நன்றாகச் செய்தார் . கமல் நிகழ்ச்சி ஜாடிக்கு, மிக ஏற்ற மூடியாக இருந்தார் .ஆனால் பல இடத்தில் கமலே முகம் சுளிக்க , ’லிப் கிஸ்’ பற்றிப் புகழ் சாயம் பூசினார்.ஒரு இடத்தில் கேரள பெண்கள் அழகாக இருக்க எது காரணம் என்று ( மறைந்த எழுத்தாளார் ) சுஜாதாவிடம் கேட்ட போது தேங்காய் என்று சொன்னதாகச் சொல்லி இன்னொரு மெக்ஸிக்கோ சலவைக்காரி புதிருக்கு அழைப்பு விடுத்தார்.அனிருத்தை ஆண்டிரியா மறந்தாலும் மேடையில் பார்த்தீபன் மறக்கவில்லை.அது யார் என்பது போல ஆண்ட்ரியா எல்லோரையும் பார்க்க நிச்சயம் பார்த்தீபன் சட்டை கிழிந்திருக்கும் .அது சரி கிண்டல் பண்ணும் போது உடையாத மண்டை இருக்கவா போகிறது ? ( இதென்ன புதுசா இருக்கு ? )


வழக்கம் போல ரசிகர்களை மகிழ்விக்கக் கலை நிகழ்ச்சிகள் பளீரெனெ இருந்தது.அதிலும் மிகக் கவனமாகச் சிதறாமல் கமல் அங்கும் புகழ் பாடப்படுவது மேடைய விட்டு இறங்கவில்லை .கீழ் இருந்து சோலோவாக ரசித்தார் .ஒரு சமயம் மேடையில் கே.பி சார் படம் இரு கதவாகப் பிரிந்து கமல் மேடைக்கு வந்தார் .அவரில் நான் என்னில் அவர் என்பதைப் பலருக்குச் சூட்சுமமாகச் சொல்ல ஆசைப்பட்டு இருக்கலாம் ! அதர்க்கு ஏற்றார் போலப் பார்த்தீபனும் உங்களில் வாழும் கே.பீ சாருக்குச் செய்ய வேண்டிய மரியாதையைச் செய்கிறேன் என்று காலில் விழுந்தார். .இந்த நிகழ்ச்சிக்குப் பின் கே.பி சாரே நேரில் வந்து கமல் என் சீடனில்லை என்று மறந்து கூடச் சொல்ல முடியாது !


      கமல் அப்போது ,அவர் ( கே.பி ) இன்னும் இருப்பார் என்று இன்னும் பல விசயங்களைச் செய்யாமல் விட்டுவிட்டேன் என்று துக்கத்தில் நா தழு தழுக்கப் பேசினார்.ஒரு வேளை ரஜினி கூடக் கே.பி சாரால் அறிமுகப் படுத்தாமல் விடப்பட்டு இருந்தால் எப்படியும் முன்னேறி இருப்பார் ஆனால் நான் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை கொஞ்ச தூரத்தில் முடிந்து போயிருப்பேன் என்று அரங்கத்தை ஒருவித சோக மௌனத்தில் ஆழ்த்தினார் .அது போன்ற சில சமயங்களில் உணர்ச்சி வசப்படும்போதெல்லாம் கீழே இருந்த இந்தப் படத்தின் உடையலங்காரம் செய்த, கவுதமியும் உணர்ச்சி வசப்பட்டு அழுவதைத் தவிர்க்க முடியாமல் கேமிரா பதிவு செய்தது.


வாகை சூட வாவின் இசையமைப்பாளர் கிப்ரான் இந்தப் படத்தின் இசை நாயகன் அவருக்கும் கமலுக்காமான ஒரு வித இசை சங்கமத்தை கூச்சப்பட்டுத் தனது பேச்சில் இசைத்துக் கசியவிட்டார் ! எந்த ஒரு படத்தின் இசை வெளீயீட்டு நிகழ்ச்சியிலும் அதன் பாடல்கள் பற்றி மட்டும் பேச மாட்டார்கள் ஆனால் ( இசை வெளியீடுதானே ? ) எங்கும் இல்லாதது போல இந்தப் படத்தின் பாடல் வரிகள் பேசப்பட்டது பாராட்டும் படியாக இருந்தது .அதிலும் தமிழகக் கிராமீய இசைக்கலைகளில் “வில்லுப் பாட்டுக் கலை” ஒரு சிறந்த அங்கம் வகிக்கிறது. அத்தகைய கலை நம் தமிழ் நாட்டிற்குக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்து இன்று கவிஞர் சுப்பு ஆறுமுகம் இந்தப் படத்தில் பாடி இருக்கிறார் என்பது சொல்லப்பட்டது அப்போது அவரும் தான் மகாபெரியவரின் ஆசி மற்றும் அனுக்கிரகத்துடன் மீனாட்சி கல்யாணம், சீனிவாச கல்யாணம், வள்ளித்திருமணம், பார்வதி கல்யாணம், ராமாயணம், மகாபாரதம் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தினேன் என்றும் சொல்லவில்லை வேறு எவரும் ஏனோ இந்த வில்லுப் பாட்டுக்காரருக்காக எடுத்தும் கொடுக்கவில்லை. மதன் கார்க்கி ,விவேகா ( அவரும் கமல் முத்தம் பற்றிச் சிலாகித்தார் ) அதிலும் கு. ஞானசம்பந்தம். ( நன்றாகப் பேச்சை கேட்க எல்லோரும் காத்து இருக்க, ஏமாற்றி விட்டார்கள் இந்த மேடை அப்படிப் பட்டது ).இந்தப் படம் தயாரிப்பாளாருமான லிங்குசாமி எல்லோரும் கமழாரம் (கமல் + புகழாரம்) பாடினார்கள் !

இந்த மேடையில் எல்லோரையும் உணர்ச்சிப் பட வைத்தவர் நாசர் மட்டுமே . தனது மகன் விபத்தைச் சந்தித்த போதும் என்னால் அங்கு இருக்க முடியவில்லை அந்தச் சோகத்தை மறக்க இந்தப் படம் உதவியதாகக் கண்களில் நீர் கசிய வைத்தார்.என் நடிப்புப் பயணத்தில் 500 படங்களில் இதுவே என்னால் மறக்க முடியாது என்று சொன்னவர் தனக்காகக் கமல் பல லட்சம் செலவு செய்து செட் போட்டு நடிக்க வைத்தார் ஒரு கலைஞனின் வலி இன்னொரு கலைஞனுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லாமல் சொன்னார் .ஆனால் இந்தப் படத்தில் என் மன மாற்றத்திர்க்காக நடித்தேன் என்று உண்மை சொன்னார்..

திருப்பதி பிரதர்ஸ் படம் தயாரித்ததால் அதை லிங்குசாமி அவரின் சகோதர்களையும் மேடயேற்றி அழகு பார்த்தார்.இன்னும் அவர் சகோதர்கள் ஊரில் மளிகை கடை வைத்து இருப்பதாகச் சொன்னார் .இந்தப் படத் தாயாரிப்புக்காக இத்தனை பணம் போட்டு இருந்தாலும் முதல் ஒரு நாள் கை குழுக்கிய பின் இந்த நிகழ்ச்சியில்தான் லிங்கு சாமியை பார்க்கிறேன் என்று இயக்குனர் ரமேஸ் அரவிந்த் மேடையேறிச் சொல்லும்போது வேறு என்ன செய்யக் கமல் படமாச்சே ? என்று அவரைக் காட்டிய கேமிரா நமக்குச் சொல்லியது !


நம் படங்கள் கதையின் நாயகர்கள் ஏனோ படம் முழுவதும் தன்னைப் பற்றி மட்டுமே பேசப்ப படவேண்டுமாய்ப் பிடிவாதமாய் நினைக்கிறார்கள் .நீர்ச் சுழி போல அவர்களைச் சுற்றியே கதை வட்டமிட்டுப் பின்னப்பட வேண்டும் என்று அயராது உழைக்கிறார்கள்.இதுதான் சாருவின் கவலையாகக் கூட இருக்கலாம் .இது ஒரு நிகழப் படவேண்டிய மிகப் பெரிய மாற்றமாகத் தமிழ் சினிமாவில் இருக்கலாம் !

( விளம்பர நேரத்தை மட்டும் கழித்து விட்டுப் பார்த்தால் ) ஒரு முழுக் கமல் படம் பார்த்த திருப்தி இந்த நிகழ்ச்சி !

1 கருத்து:

  1. இன்றுவரையிலும் கமல் மேல் உள்ள மரியாதை மாறவில்லை. நிகழ்ச்சி தொடங்கும் போது பார்த்தேன். வீட்டில் மூவரும் என்னைப் பார்க்க விடாமல் அவர்கள் மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

    பதிலளிநீக்கு