Follow by Email

திங்கள், 6 பிப்ரவரி, 2017

திருப்பூரில் நெல்லை கண்ணன் - இடி,மின்னல்,மழை ! 14th Book fare Tirupur


                     நண்பர் ஆதி ஒரு முறை நெல்லை கண்ணன் அவர்களிடம் முகநூலில் தமிழ் சம்பந்தமாக ஏதோ ஒரு விளக்கம் கேட்டு இருக்கிறார் .உங்கள் பெயர் முகநூலில் ஆங்கிலத்தில் இருக்கிறது மாற்றி விட்டு வாருங்கள் என்று பதிலளித்து இருந்தார் .நண்பர் மாற்றிய பிறகே பதிலும் தந்திருக்கிறார்.அப்படிபட்ட மனிதரை முதல் முறையாக இடம் மாற்றப்பட்ட காங்கயம் சாலை பத்மினிக் கார்டனில் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் , பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும்... 14வது திருப்பூர்ப் புத்தகத் திருவிழாவில் அவர் பேச்சைக் கேட்டேன் . 

முதலில் ’இடி’ இடித்தது ! 

தமிழனுக்குத் திமிழ் பிடிக்கும் என்பதைக் காலை வாடிவாசல் ஜல்லிக்கட்டு நேரலைப் பார்த்தபோது உணர்ந்தேன் அதே மாலைத் திருக் கண்ணன் அவர்களின் அதிரும் பேச்சால் தமிழ்ப் படித்தால் திமிரும் பிடிக்கும் எனதை நேரடியாக உணர்ந்தோம்.அவர் பேசத்தொடங்கிய முதல் நிமிடத்தில் அவரருகே மேடையில் அமர்ந்து இருந்த புத்தகத் திருவிழா அமைப்பின் தலைவர் மேடையிலிருந்த படிக் கீழே வருபவர்களை வணக்கம் சொல்லி வரவேற்கச் சட்டெனெ அவர் பக்கம் திரும்பி, எனக்கு இடயூறாய் இருக்கிறது இனி அப்படிச் செய்யாதீர்கள் என்று கண்டித்தார்.அடுத்த சில வினாடிகளில் தலைவர் ஏதோ பேச வேண்டாம் என்பது போல மெல்லச் சொல்ல, மனிதன் இடியெனெ வெகுண்டெழுந்தார் .நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன் இப்படி ஏதாவது இடையூறு செய்தால் நான் இத்தோடு பேச்சை முடித்துக்கொள்கிறேன் பொங்கிவிட்டார் . வின்னில் ஜெக ஜோதியாய்க் கிளம்பிய ராக்கெட் பாதை நழுவிக் கடலில் விழப் பாய்வது போலச் சில நிமிடம் மொத்த மக்கள் கூட்டமும் திக் திக்கென்று ஸ்தம்பித்து நின்றது  . பிறகு சமாதானப்படுத்திய பிறகே மீண்டும் நெல்லை ராக்கெட் தன் சுற்றுப் பாதையைத் தொட்டது ! 

மின்னலெனெச் சிலிர்த்தார் ! 

கொடுத்த தலைப்புக்குத் தனது வாசிப்பு அறிவையும் , மேடை அனுபவங்களால் அலங்கரித்த அறிஞர்கள் பேச்சை மட்டுமே இதுவரை கேட்டு இருந்த எனக்கு இப்படி ஆயிரம் வாலாவாக அரசியல் கட்சிகள் தொடங்கி ,அதிகாரிகள் ,ஆட்சியாளார்கள் நடிகர்கள் ,வியாபாரிகள் ,கோவில் சர்ச் ,மசூதி ,மக்கள் ,குடும்பம்,குழந்தைகள் என்று அவரவர் கடமைகளில் விட்டு விலகும் ஒருவரையும் விடாமல் தன் பேச்சால் பொருத்திப் வீசினார். பெரியாரைப் பார்த்துதான் எப்படி மோசடியில்லாத பக்தி என்று அறிந்து கொண்டேன் .வழிபாடுகளின் குறைகளை அநீதிகளையும் நானும் எதிர்க்கிறேன் என்றார் . 

தான் வளர்ந்தது காமராசர் அய்யா தொடங்கி ,கக்கன் ஜி, வரை பல நேர்மையானவர்களிடம் .இன்று இருக்கும் அரசியல் களவாணிப்பசங்களுக்கும் இது தெரியும்.எனக்கு இந்திராஜி ,ராஜிவ் காந்தி, ஜெயலலிதா அம்மையார்வரை எனக்குப் பழக்கம் இருந்தது .எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவேன் ,ஏனென்றால் நான் தமிழ்ப் படித்தவன் அறிவு மட்டுமல்ல ஒழுக்கம் இருக்கிறது .ஒழுக்கம் உள்ளவன் எவனுக்கும் பயப்பட மாட்டனுவ என்று தன்னுடைய எல்லாப் பேச்சிலும் எல்லைக் கோட்டிய தாண்டி விழும் பந்து போலச் சளைக்காமல் தூக்கியடித்தார். 


மக்களை மழையெனெக் குளிர்வித்தார். 

நெல்லைத் தமிழில் அவரின் பேச்சை மிகவும் ரசித்தார்கள் .எல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தன்னுடைய வாழ்வின் அனுபவங்களில் எடுத்து முன்வைத்தார்.முக்கியமாகக் காமராஜர் என்ற மாமனிதனின் வாழ்வில் அவரோடு பயணித்த அனுபவங்கள் கேட்க்கும் போது மிகச் சிலிர்த்துப் போக வைத்தார்.இத்தனைப் பெரிய அரசியல் ஒழுக்கசீலர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற ஆச்சர்யத்தை விதைத்தார்.முக்கியமாகச் சாதிய வெறியை விட்டொழிக்கவும் , அன்புதான் எல்லாம் என்ற போது அந்தத் தமிழ் அறிஞன் மனது எந்த மேடைப் பாசாங்கு வார்த்தைக்களற்று உதிர்த்தப் போது , பலரின் மனதில் இதுவரை வளராது நின்ற விதைகள் முளைக்கத் தொடங்கச் செய்தார் .இத்தனை காலம் இந்த மனிதன் குரலைக் கேட்காமல் இருந்து விட்டோமே என்று என்னைப்போலப் பலரையும் வருந்தச் செய்துவிட்டார் அந்த மனிதர் . 

தன் தந்தையைப் பற்றி நினைவு கூறும்போதெல்லாம் அவர் மேல் இந்த மனிதனின் பாசம் அவர் உயரத்தை விடப் பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நின்றது .சில இடங்களின் தந்தை பற்றிப் பேசும்போது கலங்கித்தவித்தார் .இப்படி ஒரு கர்ஜனைப் பேச்சுக்குப் பின்னால் அவரின் இளகிய மனம் யாருமறியாததாக இருந்தது ... 

இனி அவர் எங்குப் பேசினாலும் என்னைப்போல எல்லோரும் ஓடிச்சென்று சென்று அவர் நெல்லைத் தமிழ்க் கேட்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக