வியாழன், 12 செப்டம்பர், 2013

அவர்கள் உதவட்டுமே...

மகனின் ஆசிர்வாதம் ..


                            வீட்டில் கோபித்து கொண்டு , சில நாட்களாய் எல்லாமே வெளியே சாப்பிடும் காரணத்தால் டீ, காஃபி,மற்றும் உணவகங்களின் யோக்கிதைகள் புரிந்து கொள்ளமுடிகிறது .பிரச்சனை புரியாத எனது பையன் அப்பா நல்ல ஒட்டலில் சாப்பிடுங்கள் என ஆசிர்வதித்து அனுப்புகிறான் தினமும் ( ஒருவேளை அவன் அம்மா சமையலில் இருந்து தப்பித்து விட்டதாக நினைக்கலாம் . )

வேலையில் திருப்தி.



                          எது எப்படியோ, இதனால் காலையில் அலுவலகம் வந்தால் பிறகு இரவு மட்டுமே வீட்டுக்கு போவதால் அலுவலக வேலை அத்தனையும் முடித்து விடுகிற திருப்தி கிடைக்கிறது என்பது வேறு விசயம் . அதனால்  போகும் இடமெல்லாம் கிடைக்கும் உணவகங்களில் எல்லாம் சாப்பிடும் நிலை .இன்று அட்வான்ஸ் டாக்ஸ் கட்டவேண்டி வங்கிக்கு போனால் அங்கு உணவு இடைவேளை.

மழையின் ஆசிர்வாதம்.



                       வெளியே மழை தனது ஆசிவாதத்தை பூமிக்கு வழங்கிகொண்டு இருந்த நேரத்தில், கிடைத்த ஓட்டலில் பசியாற ஒதுங்கினேன் .சாப்பிட ஆரம்பித்து ,உணவில் ரசத்திர்க்கு வரும்போது ஓட்டலின் வாசலில் ஒரு முப்பது வயதுக்கு உட்பட்ட கர்பிணி பெண் ,கையில் ஒரு இரண்டு வயது மதிக்கதக்க குழந்தையுடன்  பத்து ரூபா நீட்டி சாப்பாடு கேட்டது (அங்கு உணவின் விலை 40).அதர்க்கு தகுந்த மதிப்பாய் உணவை கடை பணியாளர் கட்டி கொடுக்கும்போது , எனக்கு சட்டனெ அந்த பணத்தை நாமே கொடுத்து விடலாம் என சொல்லும் முன் எனக்கு முந்திய டேபிளில் என்னை போல உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தவர் அதர்க்கும் நான் கொடுத்து விடுகிறேன் என்று கடை முதலாளியிடம் சொல்லி, முந்திக்கொண்டார் .கடை முதலாளி கொடுத்து அனுப்பி விட்டார் .அந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தை  ஆவலுடன் அந்த பெண்ணை முந்திகொண்டு உணவு பொட்டலத்தை வாங்க கை நீட்டியது .ஒரு விதத்தில் அது என்னமோ செய்தது  மனசுக்குள் .

அதோடு முடியவில்லை ...


                          அந்த பெண் சென்ற சில நிமிடத்தில் ,அந்த ஓட்டலில் உணவு கட்டி கொடுத்த பணியாளர் ,அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்க முன் வந்தவரிடம் கேட்டார் ,அந்த பெண் பற்றி உங்களுக்கு தெரியுமா சார் ? அதர்க்கு இல்லை , கையிலும் குழந்தை வயிற்றிலும் குழந்தை பாவம் என்றார். அதர்க்கு பணியாளர் மேலும் விடாமல் ,அது பிச்சை எடுக்குதேன்னு பரிதாப பட்டு இருப்பீர்கள் ஆனால் சாயந்திரம் ஏழு மணிக்கு , இது இந்த மாதிரி குழந்தைதையுடன் பிச்சை எடுக்கும்  காசெல்லாம் அவன் வீட்டுக்காரன் (? ) வந்து வசூல் செய்து விட்டு போய்விடுவான், அது தெரியுமா உங்களுக்கு என்று நக்கலாக கேட்டார் .இதர்க்குள் அங்கு பார்சல் வாங்க வந்த ஒரு பாட்டி ,இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் உதவி செய்யாதீங்க சார் என்று ( இலவசமாக கிடைக்குமே அந்த) அட்வைஸ் தர ,அவர் என்னமோ போல ஆகிவிட்டார் .

விமர்சிக்க உரிமை இல்லை .


                      அவருக்குள் இருந்த மனிதாபிமானம் தூண்டபட்டு ,அவர் உதவியது இத்தனை விமர்சனபடுகிறதே, நாம் அந்த இடத்தில் அதை செய்து இருந்தால் இதே அனுபவத்தை பெறும் வாய்ப்புதான் கிடைத்து இருக்கும் .நல்லவேளை தப்பி விட்டோம் என்பதாக அங்கு என்னை போல இருந்த எல்லோரும் யோசித்தாலும்   ,எங்கு நமது உதவி திரும்பி வராது என்று உணர்கிறோமோ அங்குதான் உதவி செய்வது நல்லது என்பதாக பட்டது . அந்த பெண் அந்த கையிலிருந்த குழந்தையை வாடகைக்கு வாங்கி கூட இந்த பிழைப்பில் ஈடுபட்டு இருக்கலாம் ( இதை பற்றி அறிய படிக்க ஜெயமோகனின் - ஏழாம் உலகம் அல்லது நான் கடவுள் திரைப்படம் பார்க்கவும்  ) ,அவளிடம் வந்து வசூலித்து போகின்றவன் அவள் கணவனாக கூட இல்லாமல் போகலாம் எல்லாமே ’லாம்’ ஆகலாம். ஆனால் ஒவ்வொருக்கு உள்ளே இருக்கும் இந்த உதவும் மனபான்மை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பது மட்டுமே சத்தியம் என்பதாக எனக்கு பட்டது .