சனி, 21 பிப்ரவரி, 2015

ஜகி வாசுதேவ் சந்தித்த அயல் கிரகவாசிகள் !செவ்வாய்க் கிரகத்தின் ஏவாள் !செவ்வாய்க் கிரகத்தில் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்டுவதாகப் பிரிட்டனைச் சேர்ந்த பெண் Maggie Lieu விருப்பம் தெரிவித்துள்ளார் அவர் செவ்வாய்க் கிரகத்தின் முதல் ஏவாளாக ஆசைப்படுவது ஒன்றும் தப்பில்லை .ஆனால் அதர்க்கு ஆகும் செலவு ? .அந்தக் கவலையும் வேண்டாம் .அத்தனை செலவையும் - செவ்வாய்ப் கிரகத்தில் மக்களை 2025 ல் குடியேற்றும் திட்டத்தை என்ற பெயரில் 36 ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் ”முதல் செவ்வாய் (Mars One)” என்ற டச்சு நிறுவனம் அறிவித்துள்ளது அதன் மூலம் செவ்வாய்க்குப் போகும் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள 5 மாதத்தில் மட்டும் உலகத்தின் 140 நாடுகளைச் சேர்ந்த 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர் தேர்வு செய்யப்பட்ட முதல் நூறு நபர்களில் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசப்படும் Maggie Lieu யும் ஒருவர் . ஆயுள் முடிந்தவுடன் ?

                   அந்த 100ல் இந்தியர்கள் மூவரும் அடங்குவர் (கேரளத்தைச் சேர்ந்தவர். 19 வயது, சாரதா ப்ரசாத். இன்னோருவர் தரண்ஜித் சிங். வயது 29. அமெரிக்காவில் இருக்கிறார். மூன்றாமவர் கீர்த்திகா சிங். வயது 29. துபாயில் இருக்கிறார்.) இவ்வறு இறுதியாக இந்த நூறு நபர்களில் வடிகட்டி 24 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர்.இந்த 24 பேருக்கும் ஏழு ஆண்டுக்காலப் பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் 2025 ஆம் ஆண்டில் தொடங்கி 26 மாதங்களுக்கு ஒரு முறை நான்கு பேர் வீதம் அனுப்பப்படுவர்.ஒவ்வொரு 4 பேரும் செவ்வாய்க்குச் சென்று இறங்கப் பயணக் காலம் சுமார் 7 மாதங்களிலிருந்து 9 மாதங்கள் வரை ஆகும்.இதுவரை இங்குப் போவதர்க்கு இனிமேல்தான் கோள்களுக்கிடையிலான ஊடக் குழுமம் (Interplanetary Media Group) பிரமாண்டமான திட்டத்தைக் தயார் செய்யப் போகிறார்கள் என்பதை விட இங்குப் போனவர்கள் திரும்பி அழைத்து இதுவரை வர எந்தத் திட்டமும் இல்லை அங்கேயே ஆராய்ச்சி,அங்கேயே ஆயுள் முடிந்தவுடன் குழிபறித்துச் ’சுவாகா’ செய்யலாம் ! 

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் !
 
ஆனால் செவ்வாய்க் கிரகத்தைச் (Mars Orbiter Mission) நமது மங்கள்யான் 2014 செப்டம்பர் 24 முதல் அந்தக் கிரகத்தைச் சுற்றிச்,சுற்றிச் படமெடுத்து அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கிறது . இதர்க்கு ஒரு படி மேலே போய் அமெரிக்காவின் மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி, என்ற களம் அங்கு இறங்கியே வேலைச் செய்து கொண்டு இருக்கிறது அங்குள்ள மவுன்ட் ஷார்ப்பில் இருக்கும் பாறைகளின் தன்மையை 2.6 அங்குல அளவு ஆழத்திற்கு ஒரு துளையிட்டு அதிலிருந்து சில துகள்களை ஆய்வுக்காக எடுப்பதுவும், பல மிக முன்னேறியத் தொழில் நுட்பப் கேமிராக்களின் மூலம் படம் பிடித்து ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது.இவை அனுப்பும் படங்கள் தினமும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி வருகின்றது அதில் குறிப்பிடும்படியாய்ச் செவ்வாய்க் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரலை ஒத்தப் பல்வேறு சப்தங்கள் பதிவாகியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். 
            செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.அதோடும் விடவில்லை அங்கிருந்து வந்த பல படங்கள் மிக சாதரணமாகப் பிற கிரக மனிதர்களின் நடமாட்டத்தைச் சொல்கிறது .
இங்கு இதுதான் விசயமே, வேற்று உலகில் மனிதத் தொடர்பை விரும்பி அமெரிக்கா உட்பட ஐரோப்பா ,ஆசியா முன்னனி நாடுகளும் தனது நாட்டின் பாதுகாப்புக்கு அடுத்துப் பட்ஜெட்டில் இதர்க்குத்தான் கொட்டி, கொட்டிச் செலவிடுகிறார்கள்.இவர்கள் Search for Extra Terrestrial Inteligence என்ற அமைப்பில் கீழ் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மூலம் Observatory வைத்துப் பிரபஞ்சத்தைச் சல்லடைப் போட்டுச் சலித்து வருகிறார்கள் அதர்க்காகப் பில்லியன் கணக்கில் யூரோக்களையும் ,டாலர்களைக் கொட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் .

வார்ம் ஹோல் ?


                அவர்கள் விரும்புவது ஒரே ஒரு செய்தி வேற்றுலக வாசிகளுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு .அயல் கிரகவாசிகள் அவர்கள் எங்கு இருந்து வருகிறார்கள்,அவர்கள் தெரிந்து இருக்கும் பயணிக்கும் பறக்கும் இயந்திரங்கள் வார்ம் ஹோல் போன்ற அறிவியல் நுட்பம் வாய்ந்ததா ,அவர்களால் நன்மையாத் தீமையா? பூமிக்கு வருவதன் நோக்கம் என்ன அது நல்லதாக் கெட்டதா இப்படிப் பல கேள்விகளைத் தனக்குத்தானே நிர்ணயித்துக் கொண்டு தேடுகிறார்கள் .ஆனால் சில இது வரை கிடைத்த ஆதாரங்கள் இன்னும் பல கேள்விகளைத்தான் விதைக்கிறதே தவிர எதையும் தீர்மானிக்க முடியவில்லை.


மீண்டும் எட்வர்டு ஸ்னோடென் ?
     
       இதை விடப் பெரிய விசயம் 1955 ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 11 ஆம் நாள் நியு மெக்ஸிக்கோவில் உள்ள AFB Holloman விமானப் படைத்தளத்தில் சந்தித்துள்ளார் எனவும் அப்போது அவர் வேற்றுலுக வாசிகளுடன் டெலிபதி மூலம் பேசி அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஐசன்ஹோவர் சந்தித்துள்ளார் என்பதைச் சொல்கிறார்கள் அதுவும் மூன்று முறை .இத்தனை ஆண்டுகள் கழித்தும் வாயே திறக்காத அமெரிக்கா அதிலும் தனது ரகசியங்களை மறைத்து வருகிறது! இப்போது அங்கு அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் மாதிரி ஆட்கள் இல்லாமலேயாப் போவார்கள் ? விசயம் வெளிவரும்.


சத்குரு ஜகி வாசுதேவ் .

             ஆனால் இப்படி உலகே துரத்தி ஓடிக் கொண்டு இருக்கும் விசயத்தை கையிலாத்தில் உள்ள மானோ சரோவருக்குச் சென்ற ஈஷா அறக்கட்டளை ( ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பொருளாதாரம் மற்றும் சமூகப்பிரிவு (ECOSOC) அமைப்பும் ஈஷாவிற்குச் சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பது உலக அரங்கில் முக்கியத்துவம் மிக்கது .) நிறுவியுள்ள சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் காட்டுப்பாதயில் ஒரு மான் கூட்டத்தைப் பார்த்தேன் என்பது போல மிகச் சாதரணமாக வேற்றுலக வாசிகளைப் பார்த்ததாகவும் அவற்றின் சக்தியை உணர்ந்ததாகவும் - முதன் முறையாக இந்திய யோகிகளில் யாருமே சொல்லாத வேற்றுலக வாசிகள் பற்றிய மவுனத்தைக் கலைத்து இருக்கிறார்.

அத்தனைக்கும் ஆசைப்படு.


இந்தப் பேட்டியை (https://www.youtube.com/watch?v=Gxw13dxS4-s ) 
விஜய் டி.வியின் அத்தனைக்கும் ஆசைப்படுவில் சில வாரங்களுக்கு முன் பார்த்தேன்.அவருடைய அநுபவங்களை அவருடையை வார்த்தையில் இங்குச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறேன். 


அதிகாலை அல்லது பின்னிரவு 2 மணி முதல் 3 3/4 மணிவரை நேரங்களில் அவர்களைத் தான் கண்டதாகவும் ,அவர்களை நம்மைப் போலத் தனித்தனி ஜீவன்களா அல்லது தனித்தனியாகத் தெரியும் ஒன்றான ஜீவன்களா என்பது அறியாத முடியாத வகையில் கொத்துக் கொத்தாக வருகிறார்கள் அப்படியே போகிறார்கள் இம்மாதிரி ஜீவன்கள் சுலபமாக நெருங்கமாட்டார்கள் ஆனால் இவர்கள் சும்மாவே வருகிறார்கள் என அவர்களை வகைப்படுத்திப் பேசுகிறார்.


உயிர் என்ற அமைப்பு !
              
                     தோற்றத்தில் அவர்கள் வேறுபட்டவராகத் தெரிகிறார்கள் அவர்களை நம் காரண அறிவைக் கொண்டு அவர்களை முழுமையான வடிவம் கொடுக்கப் பார்த்தால் அவை முடியாது என்பவர் அப்படி அவர்களுக்கு ஒரு முழுவடிவம் கொடுத்தால் அவைகள் அப்படி இருக்காது என்கிறார் சத்குரு அப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் உயிரினத்திர்க்குப் பொதுவான உயிர் என்ற அமைப்பு ஒன்றானலும் அவர்கள் நம்மிலும் முற்றிலும் வேறுபட்ட உடலியக்கம் கொண்டவர்கள் என்பதைச் சொல்கிறார். 


வெப்பம் மிகுந்த வேற்றுலக வாசிகள் ?

அவர்களுடனானத் தான் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பை அவர் சொல்லும்போது முழுமையாகச் சொல்லாமல் சங்கேதமாகச் சொல்கிறார் அவர்களை வரவேற்க ஒருவரை வைத்து அதன் தலைமாட்டில் மானோசரோவரின் குளிர்ந்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்து அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அப்படித் தொடர்பு கொண்ட போது அந்தக் குளிர் நீர்க் கொதித்ததாகவும் மீடியேட்டராக உள்ள அவரின் கையைத் தொட்டப் போது நாலடித் தள்ளி உட்கார்ந்து இருந்த தனக்கு மிகப் பெரிய வெப்பம் உணர்ந்ததாகவும் சொல்கிறார்.அதர்க்கு மேல் தனக்கு இரண்டு மாதம் தங்கும் வாய்புக் கிடைத்தால் அத்தனை ரகசியங்களும் உணர வாய்ப்பு இருப்பதாக முடிக்கிறார்.அதோடு இது மட்டுமல்ல இந்த அமைப்பின் மூலம் அழைதுச் சென்ற 160 பேர்க் குழுவினர் இந்த ஒரு புதுவிதமான சக்தியை மேலே கீழே ஓடுவதைத் தன்னுள் உணரச் செய்து ஒரு புது விதமான அநுபவத்தை அவர்களுக்குள் தந்துள்ளார் என்பது மிகச் சிறந்த விசயம் .


                     எல்லையில்லா பெருவெளியில் விஞ்ஞானம் தேடிக் கொண்டு இருக்கும் மர்ம முடிச்சுகளை -அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்ற நம் ஞானிகள் ,  அறிவியலின் பார்வையில் படுவதர்க்கு வெகு காலம் இல்லை .

வியாழன், 19 பிப்ரவரி, 2015

எதிர் காற்றில் கரைந்துப் போனவர்


    இயக்குனர் வசந்தப் பாலனைப் பற்றிய ஓர் ஆதங்கம் எப்போதும் எனக்குள் உண்டு .ஏன் இந்த மனிதன் வாழ்வின் எதிர் காற்றில் கரைந்துப் போனவர்களைப் பற்றி மட்டுமே தேடித் தேடித் பதிவுச் செய்கிறார் ? ஒரு வேளை எழுத்தாளர்ச் சுஜாதா அவர்கள் சிறுகதைப் பற்றிப் பாலாகுமாரனுக்கு ’ ஒரு முண்டம் அல்லது தலையில்லாத மனிதன் தெருவில் நடந்து செல்லுகிறான்’ என்று முதல் வரி எழுதுங்கள் அப்போதுதான் அடுத்த வரியைச் சுவாரஸ்யத்துடன் படிப்பார்கள் என்பதைச் சொன்னார் என்பார்கள் . பொதுவாகப் படைப்புகள் வாழ்வின் அசந்தர்ப்பங்களை மட்டும்தான் பதிவுச் செய்யுமா என்பதெல்லாம் எனக்குள் தீராத கேள்வி நதிகள் !.ஆனால் நான் பார்த்தச் சிலர் சிலருடைய வாழ்க்கைக் கேள்விகளில் தொடங்கிக் கடைசி வரை கேள்வியாகவே முடிவடைந்து விட்டது .இதற்கான காரணத்தை வெகு தூரம் சென்றாலும் தேட முடியவில்லை. ஜாதகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் காலசர்பத் தோசம் என்பது கூட வாழ்கையில் 30 வருடம் மட்டுமே இருக்கும் என்பார்கள்.நான் இங்கு  பேசப் போவது - வசந்த பாலன் கதாபாத்திரம் பசுபதி போல கடைசிவரை வாழ்ந்து ,  தொலைந்த புள்ளியாய்ப் போய் விட்ட அண்ணன் நண்பராக இருந்த நாகராஜ அண்ணன் பற்றி ..இன்று அவர் எங்களுடன் இல்லை . . ஆனால் அவர் எங்களுடன் பயணித்த சுமார் 20 ஆண்டுகள் அது பல ஆச்சர்யங்கள் நிறைந்தது... 


   எனது இரண்டாவது அண்ணன் செல்வத்தின் பள்ளித்தோழர் நாகரஜ அண்ணன். இப்போது இருக்கும் திண்டுக்கல் ஆர்.எம் காலனிதான் 33 வருடத்திர்க்கு முன்னர் நகர எல்லைக்குச் சுமார் இரண்டு கி.மீத் தள்ளி இருந்த மிக அழகான கிராமம்.முழுக்க முழுக்க வயல் வெளிகள் நடுவில் சுமார் 40 வீடுகளில் ஒன்றுதான் எங்களுடையது .அங்கு நான் பள்ளிக்குப் போவதர்க்கு முன்னால் மிகச் சிறுவனாக இருந்தபோதே நாகரஜ அண்ணன் வரத் தொடங்கி விட்டார் .அவரும் அண்ணனும் செஸ் விளையாடத் தொடங்கி விட்டால் ஒரே ஆட்டம் மட்டுமே சில சமயம் பல நாட்கள் கூட நீடிக்கும்.கற்றுத் தரச் சொல்லிக் கேட்டால், விளையாடுவதைக் கவனித்தால் தானே வரும் என்பார்கள் இருவரும் ஒரே மாதிரிப் பதில் சொல்வார்கள் பேசவே மாட்டார்கள் .மிக வேகமாகப் புத்தகம் படிப்பதிலும் கணக்குப் போடுவதிலும் நாகராஜ அண்ணன் மிகவும் திறமையானவர். அவர் பல விசயத்தில் சுவரஸ்யமானவரும் கூட. அவருக்குக் கையில் ஆறு விரல்கள் உண்டு .அவர் திறமைக்கு அதுதான் காரணம் என்பதாக நினைத்து நான் எனக்கு அது மாதிரி எப்போது வரும் என்று கேட்டேன் .உன் கையில் மாட்டுச் சாணத்தை எடுத்துப் பெரு விரல்லுக்கும் பக்கத்தில் தினமும் வைத்துக் கொள் உனக்கும் ஆறாவது விரல் வருமென்பார் .அதை உண்மை என்று கூட நம்பிய வயது எனக்கு அப்போது . எனக்கும் என இரண்டு சகோதரகளுக்கும் பேய்ப் பயம் அதிகம் என்பதால் பல சமயம் வளர்ந்தக் சோளக்காட்டுக்குள் ஒளிந்து கொண்டு பல குரலில் பயமுறுத்தி ஓட ஓட விரட்டுவார் . 


  சிறு வயதில் தந்தை இழந்ததால் அவர் படிப்போடு பக்கத்துக் கிராமங்களுக்குக் சென்று பால் கறந்து வந்து அவர் அண்ணனுடன் சேர்ந்து நகரத்துக்குள் வியாபாரம் பண்ணும் தொழிலும் செய்து வந்தார் .இவர்கள் இருவரும் சேர்ந்துதான் தனது இரண்டு தம்பிகளைப் படிக்க வைத்து வந்தார்கள்.பள்ளிக்கூட நேரம் பால் கறத்தல் போக மீதி நேரங்களில் அவர் எங்கள் வீடுதான் தஞ்சமென்று இருப்பார். அதிகாலை 4 மணிக்கெல்லாம் பால் கறக்க ஒரு கிரமத்துக்குப் போன சமயத்தில் எப்போதும் பசு மாடு கட்டும் ( கட்டாந்தரையில் ) இடத்தில் காளை மாட்டைக் கட்டி விட்டார்கள் .இவர் லேசானத் தூக்கக் கலக்கத்தில் சென்று, வழக்கம் போல மடியைப் பிடித்து இழுக்கக் காளை மாடு கொடுத்த உதையில் பயந்துப் போய் ஓடி வந்த கதையைப் பல நாள் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம் . 


  அவரிடம் உள்ள ஓர் அசாதாரணத் திறமையில் ஒன்று கிணற்று நீரில் வெகு நேரம் மிதப்பது !! .எல்லோரும் ஆச்சர்யப்படுவோம் .எங்குக் கற்றுக் கொண்டார் என்று அவர் சொல்லவும் இல்லை மற்ற யாருக்கும் ஏன் எங்கள் செல்வ அண்ணனுக்குக் கூடச் சொல்லித் தந்தவில்லை.நாங்கள் குழித்து மேலே வந்த பின் அலை எழுப்பாதக் கிணற்றின் தண்ணீர்ப் பரப்பில் வெகு நேரம் தரையில் செய்யும் சவாசனம் போலக் கிடப்பார்.நாங்கள் எல்லோரும் திரும்பி வந்த பல மணி நேரம் கழித்தே கிணற்றை விட்டுத் திரும்பி வருவார்.ஓர்சமயம் கூடக் கிணற்று மீனோ ,தண்ணீர்ப் பாம்புகளோ அவரைத் தொந்தரவும் செய்ததில்லை !


   அவருக்குச் சுமார் 35 வயதுக்குள் மேல் இரண்டு அதிருஷ்டம் நடந்தது ஒன்று அரசுப் போக்கு வரத்தில் நடத்துனர் வேலை இன்னொன்று திருமணம்.ஆனால் அதே அதிருஷ்டம்தான் அவருக்கான துரதிருஷ்ட வாசலை அகலத் திறந்தது என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது .அவருக்கும் அவர் அண்ணனுக்கும் சில குடும்பப் பிரிவினை அவரைத் திண்டுக்கல்லை விட்டு விலக்கி ஒட்டன்சத்திரத்திர்க்கு நகர்த்தியது அதர்க்கு இன்னும் ஒரு காரணம் அவர் மனைவி ஒட்டன் சத்திரம் கிறிஸ்த்துவ மருத்துவ மனையிலன் மருந்தகத்தில் பணிப் புரிந்து வந்தார் . 


சிறு வயது முதலே வாழ்வில் துரதிருஷ்டச் சந்தர்ப்பங்களை மட்டுமே சந்தித்த அவரை வீடு மெல்ல விலக்கி வைத்தது தனது சொந்தச் சகோதரர்த் திருமணத்திர்க்குப் கலந்து கொள்ள மறுக்கப்பட்டதாலும் , அப்போது அவர் மனைவி நிறை மாதக் கர்பமாக இருந்ததால் இவர் மட்டும் தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் தனியே மதுரைக்குச் சென்று விட்டு ஒட்டன்சத்திரம் அவர் பணிபுரியும் போக்குவரத்துக் கலகப் பேருந்தில் திரும்பிக் கொண்டு இருந்தார் .


   செம்பட்டியில் இருந்து இவர் பயணம் செய்தப் பேருந்தைக் கடந்து போகப் போட்டிப் போட்டுக் கொண்டு வந்த ஒரு தனியார் பேருந்து, நாகராஜ அண்ணன் அவர்கள் பயணம் செய்தப் பேருந்து ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்னால் இருக்கும் கிறிஸ்த்துவ மருத்துவ மனை அருகே (அவர் வீடும் இருந்ததால்) நிற்கவே, அப்போது முந்திவிடலாம் என்ற கணக்கில் முந்திப் பாயும் போது அதே சமயம் எதிரே வந்த இன்னொரு லாரியைப் பார்த்துத் தனியார் பேருந்து ஒட்டுனர், நாகராஜ அண்ணன் வந்த பேருந்துக்கு இடது புறம் திருப்ப அப்போதுதான் அந்தப் பேருந்தை விட்டு இடது தோளில் தனது குழந்தையையும் வலதுக் கையில் கொண்டு சென்ற பையைப் பற்றிக் கொண்டு இறங்க அங்கிருந்த மின்சாரப் போஸ்டர் மேல் மோதி அப்படியே எவ்வித வாய்ப்பும் நேரமும் தப்பிக்கக் கொடுக்காமல் இறங்கிய பேருந்தோடு அந்தத் தனியார் பேருந்து உரசி அடித்துக் குழந்தையோடு அவரையும் தோளில் இருந்த குழந்தையையும் இரண்டு பேருந்துக்கும் இடையே நசுக்கி நின்றது.நிலைமையை உணர்ந்துப் பேருந்தைக் பின்னால் எடுக்கும் போது குழந்தையை இறுக்கிப் பிடித்த நிலையில் நாகராஜ அண்ணன் தரையில் உயிர் பிரியத் தரையில் சரிந்தார்... 

 அவர் விட்டுக்குச் சில நூறு அடிதூரத்தில் அவர் வசிக்கும் வீடு இருந்ததால் .அவர் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளோரெல்லாம் இந்த விபத்தைப் பார்க்க ஓடி வரும்போது அவர் மனைவி அங்கிருந்து யாரோ விபத்துக்கு உள்ளானதாக நினைத்துக் கூட்டம் ஓடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்... 


   சில நிமிடங்களில் அவருக்கு யாரோ சொல்ல அப்படியே மயக்க முற்றுக் கீழே விழுந்தார்.அவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள் .அவர் மயக்கம் தெளிந்து எழுந்த போது தனது கணவரையும் குழந்தையையும் இழந்து இருந்தார்.நாகராஜ அண்ணன் உயிர் போன பின்னும் அடிபட்டக் குழந்தையைக் காப்பாற்ற அவர் கையிலிருந்து குழந்தையைப் பிரிக்க முடியவில்லை என்பதைச் சொல்லக் கேட்டுக் கதறி அழுததைப் பார்த்த மருத்துவமனையில் அனைவரும் துயரத்தில் மூழ்கினர்.பின்னாளில் நாகராஜ அண்ணன் பணிப் புரிந்த அரசுப் போக்கு வரத்துக் கழகம் அவர் மனைவிக்கு அரசு வேலைத் கொடுத்த போதும் எனக்கு இந்த மருத்துவ மனையும் அதில் பணிபுரிபவர்கள் மட்டுமே போதும் என்று திரும்பினார்.


    அதே போல அவரை முழுமையாக ஏற்றுக் கொண்ட மருத்துவ மனை அங்கேயே தங்கும் வசதியளித்து , அவருக்குப் பிறந்த பெண் குழந்தை இப்போது அதே மருத்துவமனை ஆதரவோடு டாக்டருக்குப் படித்துக் கொண்டு இருக்கிறாள்.என்றாவது ஒரு நாள் அவளை நேரில் பார்க்கும் போதோ அல்லது இந்தப் பதிவைப் படிக்கும் போதோ அவள் தந்தை பற்றி அவரின் எதிர் காற்றின் பயணம் பற்றியும் தெரிந்துக் கொள்வாள் ..

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

”வன்முறைக்கு அப்பால் ...2003 பாகிஸ்தான் மேட்ச்”நேற்று முன் தினம் உலகக் கோப்பை வரலாற்றில் தொடர் 1992 (96 ,99,2003,11,15) முதல் -2015 ஆம் ஆண்டு வரை நடந்த  இந்திய - பாகிஸ்தான் அணிகளின் போட்டிகள் அனைத்திலும் (ஆறாவது முறையாக) இந்தியாவே வென்றுள்ளது . தீர்க்க முடியாத எல்லை பிரச்சனையைக் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றி ஆறுதலடைந்து கொள்கிறோம் ! இத்தனைக்கும் இந்த முறை சச்சின் போல மிகப் பல சீனியர்களை வீட்டில் இருக்க வைத்து விட்டு வெற்றியை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறோம் . இதெல்லாம் சரிதான் அத்தனையும் ஏதாவது இன்றைய நாளேடு ஒன்றில் விலா வாரியாகப் படித்து விட வாய்பு இருக்கிறது . ஆனால் இதே போல 2003 ல் தென் ஆஃப்ரிக்காவின் சென்சூரியன் ( Centurion Park) நம் அணி இதே பாகிஸ்தானை 26 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு மிகவும் த்ரில்லாக வெற்றியை இந்தியாவே அனுபவித்துக் கொண்டாடிக் கொண்டு இருந்த போது யாருக்கும் தெரியாமல் ஒருவரை ஒளித்து வைக்கவும் அவரோடு நாங்கள் இருவர் ஒளிந்து கொள்ள இடம் தேடி அலைந்து கொண்டு இருந்தோம் என்பது எந்த ஒரு பழைய பத்திரிக்கையிலும் வந்து இருக்க வாய்ப்பு இல்லை.அப்படி வராத விசயம்தான் இங்குப் பேசப் போகிறோம்.நான் பணிப் புரிந்து கொண்டு இருந்த கம்பெனி மாலை வேளையில் கிடைக்கும் டீ டைம் 5.30 - 6.00 மணி இடைவெளியிக்குள் மேனேஜர் உட்பட அத்தனை பேரும் கிரிக்கெட் விளையாடுவோம்.ஏன் அந்த நேரம் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதென்றால் காலையில் கம்பெனிக்குள் வந்தால் எத்தனை மணிக்கு வெளியே போவோம் என்றே தெரியாத சராசரித் திருப்பூர் கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அது .ஞாயிறு விடுமுறை என்பது பொங்கள் ,தீபாவளி மாதிரி எப்போதாவது வரும்.அப்படி வந்தாலும் அன்று கிரிக்கெட் காலை மாலையிலும் விளையாடுவோம். கிரிகெட் பொழுதுப் போக்கு மட்டுமல்ல ஒரு வடிகால் மாதிரி .இது போன்ற வடிகால் இல்லாததால் என்னமோ திருப்பூரின் தற்கொலைப் பட்டியலில் முதலாவதாக நீடிக்க வைக்கிறது . 


2003 மார்ச் சனிக்கிழமை இந்தியப் பாகிஸ்தான் மேட்ச். முதல் பேட்டிங் பாகிஸ்தான் வேலைகளுக்கு இடையே எல்லோர் முகத்திலும் ஒருவிதமான பரபரப்புத் தொற்றிக் கொண்டு இருந்தது .என்ன நடக்குமோ என்ற பதஷ்டம் துரத்திக் கொண்டு இருந்தது .சனிக்கிழமை மட்டும் சனிப் பகவானை குச்சனூரிலோ ,திருநள்ளாரிலோ இருக்கமாட்டார் நேராய் ஃப்ளைட் பிடித்தாவது திருப்பூர் வந்து விடுவார் .அப்படி அவஸ்த்தை அன்று திருப்பூருக்குப் புதிதாய் வந்தவர்கள் உணரலாம் .சம்பள நாள் ,ஷிப்மெண்ட் அவசரம் ,சனி ,ஞாயிறு இரவு பகல் வைத்து எப்படியாவது முடித்து விடவேண்டும் பரபரக்கும் நாள் .இத்தனைக்கும் நான் வேலைப் பார்த்தக் கம்பெனியில் முதலாளித் தனது சொந்தத் தகப்பன் இறந்த போதுகூட அதில் கலந்து கொள்ள வர வேண்டாம் என வேலைப் பாதிக்கக் கூடும் என முக்கியத்துவம் கொடுத்த கம்பெனியது . ஆனால் முதலாளியும் கிரிக்கெட் பிரியர் என்பது ஆறுதலான விசயம் .


முதலில் விளையாடி முடித்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ரன் .சயீது அன்வர் ( Saeed Anwar ) 101 ரன் .இதே அவஸ்தையுடன் மதியம் சாப்பாட்டுக்குப் பின் கம்பெனிக்கு நுழையும் போது செக்யூரிட்டியில், யாருக்கெல்லாம் மேட்ச் பார்க்க விருப்பம் இருக்கோ அவர்கள் போகலாம் என்ற அறிவிப்பின் வயிற்றில் பாலை வார்த்தார்கள். 


நானும் எனது கட்டிங் இன்சார்ஜ் இரண்டு பேரும் விழுந்தடித்துக் கொண்டு அருள்புரத்தில் எங்களுடன் வேலைப் பார்க்கும் நண்பர் வீட்டில் பார்க்கப் போனோம் .சச்சின் - சேவாக் ஜோடிப் பந்துகளைச் சிதறடித்துக் கொண்டு இருந்தது.ஆட்டம் தொடங்கி அரை மணி நேரம் முடியவில்லை வக்கார் யூனஸ் பந்தில் 21 ரன்னில் சேவக் அவுட்.அருள்புரத்தில் இ.பி லைன் மேனும் மேட்ச் பார்து கொண்டு இருந்தாரோ என்னவோ அடப் போங்கடா நீங்களூம் உங்க கிரிக்கெட்டுன்னு லைன் கட்.ஆர்வம் வெறியானது .எங்குப் பார்க்கப் போகலாம் எனும் திட்டமிட்டபோது திருப்பூர் MBS பின்புறத்திலுள்ள பாரில் இது மாதிரி டி.வியுடன் அந்தச் சேவை உண்டு என இன்சார்ஜ் சொல்லப் பறந்து வந்தோம் .அதுவும் மூன்று பேரும் TVS -Suzuki யில்.சொன்ன மாதிரி டி.வி ஒளிபரப்புச் சேவையும் இருந்தது .அப்போது டாஸ்மாக் என்ற அரசுச் சேவை (!) கிடையாது.(2003 நவம்பர் 29 முதல், டாஸ்மாக் மூலம் அரசு மது விற்பனையைத் தொடங்கியிருந்தது.) 100 க்கு மேற்பட்டவர்கள் அங்கு வந்து போகும் அளவுக்கு இடம் இருந்தது ஆனால் நாங்கள் போன போது ,விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே இருந்தார்கள் (மாலையில் சம்பளம் வாங்கினால்தானே பாரில் ஆட்கள் நிரம்புவதர்க்கு ?).


நாங்கள் அங்குப் போவதர்க்குள் இன்னொரு விக்கெட்டும் விழுந்து இருந்தது .ஒருவேளை சச்சினோ இருக்குமோ கலக்கத்தில் பார்க்க அப்புறம் (அன்றைய ) நம் கேப்டன் திருவாளர்க் கங்குலிதான் அவுட். இரண்டு பாலை சந்தித்து ஒரு ரன்னும் எடுக்காமல் அவுட் ஆகி இருந்தார் .முகமதுக் கைஃப் சச்சினோடு மெல்ல விளையாடிக் கொண்டு இருந்தார்.மறுமுனையில் சச்சின், புதிய பந்தைப் பழசாக்க முயன்று கொண்டு இருக்கும் அந்த இடைவெளியில்தான் எங்கோயோ போக வேண்டிய சனிப் பகவான் பார்வை எங்கள் மேல் படரத் தொடங்கியது .அதன் விளைவு என் கட்டிங் இன்சார்ஜ் முதல் பீரை ஆர்டர் செய்து கொண்டு வரச் சொன்னார் ...அவரிடம் உள்ள ஒரே குறை விடிய விடிய ஒரு முழுப் பாட்டில் ஹாட்ரிங்ஸ் சாப்பிட்டு விடுவார் ஆனால் ஒரு பீர் அடித்தாலே போதும் நாங்கள் தங்கி இருக்கும் ஸ்டாஃப் குவார்டர்சை ஒரு வழிப் பண்ணி விடுவார் .இப்போது தொடங்கி விட்டார் .சார் வேண்டாம் சார் என்றேன் .சும்மா ஒண்ணும் பண்ணாது .நாம்தான் ஜெயிக்கிறோம் .மேட்சை அனுபவிச்சுக்கிடே அடிக்கணும் பாஸ் என்றார் உங்களுக்கும் சொல்லட்டா என்றார் .வேண்டாம் சார் நான் சும்மாவே உளறுவேன் என்றதும் சிரிச்சுக்கிட்டே எங்களுக்குப் பின் வரிசையில் உட்கார்ந்து ஆம்லேட் சொல்லி விட்டுப் கச்சேரி ஆரம்பித்து விட்டார்.இந்தச் சமயத்தில் 60 பந்தைச் சந்தித்து விட்டு 35 ரன்னில் கைஃப் , அஃப்ரிடிப் பந்தில் அவுட்.ஸ்கோர் 155.கைஃப்க்குப் பதில் இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ட்ராவிட் .அடுத்த 6 ஓவரில் அணியின் ரன் 177 இருக்கும்போது சச்சினுன் அவுட்.நம்பிக்கை நிறைவேறாத இடத்தில் பயம் வருமே அது வர தொடங்கியவுடன் நாங்கள் இன்னும் மேட்சில் பரபரப்பைத் தாண்டி என்ன ஆகுமோ எனும் பயத்தில் மூழ்கத் தொடங்கி விட்டோம்.சச்சினுக்குப் பதில் யுவராஜ் வந்தார் .’மேட்ச்’ சூடு பிடிக்கத் தொடங்கியது ...நம்பிக்கைப் பிறக்கத் தொடங்கியது.


அப்போதுதான் என் இன்சார்ஜைத் தேடினேன் .குறைந்தது 100 பேருக்கு மேல் கூட்டம் கூடி இருந்தது .பின் வரிசையில் இருந்தவர் காணோம்.ஆட்டம் மிகச் சுவாரஸ்யத்தைத் தாண்டி இருந்தது.இந்திய அணியின் கைக்குள் மேட்ச் வரத் தொடங்யிருந்த போது ஸ்கோர் 250 இருக்கும்! அப்போது என் தோளை யாரோ தட்டியதும், திரும்பினேன் .உங்களை அதோ அந்த அண்ணன் வரச் சொன்னார் என்றார் ஒருவர் .அனேகமாக அவர்அந்தப் பாரின் சர்வராக இருக்கலாம்.எங்களைத் தள்ளி அவர் சொன்ன இடத்திலிருந்து ஒருவர் கையை ஆட்டினார் .நண்பரிடம் சொல்லி விட்டு எழுந்து அவரிடம் போனேன் .அவன் கூடயா நீ வந்து இருக்க என்று கையைக் பாரின் பின் பக்கம் காட்டினார் .அங்குப் பாரின் குட்டிச் சுவத்து மேல் ஒரு பீர்ப் பாட்டிலோடு இன்சார்ஜ்.


ஆமாம் என்றேன் எத்தனை பேர் வந்து இருக்கீங்க என்றார் .சொன்னேன் .இன்னும் ஐந்து நிமிசத்துக்குள்ள அவனைக் கூட்டிடு ஓடிப் போயிடுஙக இல்லாட்டி உயிரோட ஒருத்தனும் போக மாட்டீங்க என்று சொல்லி மிரட்டலோடு பார்த்தார் .அவருடன் இருந்த ஒருவர் அவசரமாக எழுந்து என்னை மெல்லத் தள்ளிக் கொண்டு ,இழுத்துக் கொண்டு வராத குறையாக என்னை அந்தக் குட்டிச்சுவருக்குக் கூட்டிக் கொண்டு போனார் .இங்க பாரு அவன் கோபக்காரன் உங்க ஆள் அவனை வெறுப்பேத்தற மாதிரி மதத்ததைப் பற்றியே பேசிக்கிட்டே இருக்கான் கூட்டிட்டு ஓடிட்டா நல்லது,அவன் இந்த ஏரியாயாக்காரன் சும்மா விடமாட்டன் சொல்லிட்டென் என்றார் .அப்போதுதான் என் இன்சார்ஜைக் கவனித்தேன் .நிறையக் குடித்து விட்டு அந்தக் குறிப்பிட்ட மதத்தைப் பற்றித் தொடர்ந்து கெட்ட வார்த்தைக் கலந்து உங்கள ஜெயிப்போம்டா, விடுவமா என்று குரல் உயர்த்திக் கத்திக் கொண்டு இருந்தார்.எனக்கு ’மேட்ச்’ சுத்தமாகப் புத்தியை விட்டுப் போய்விட்டது .கால் லேசாய் நடுங்கியது .ஏதோ எக்கச் சக்கமாக் மாட்டிக்கொண்டோம் என்று உணர்ந்தேன் .ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்க இருந்தால் மட்டுமே அப்படி எனக்குத் தோனும் .எனவே உடனே அவரை வாரிக் கொண்டு இடத்தை விட்டுப் போக வேண்டும் என்று மனம் பரபரத்தது.


என்னுடன் வந்து இருக்கும் நண்பர் என்னை விடவும் பயந்தவர் .எனவே முகத்தில் பரபரப்பைக் காட்டிக் கொள்ளாமல் மெல்லச் சொன்னேன் .அதர்க்கே பயந்து விட்டார்.என்ன ’சார்’ சொல்றீங்க?வந்த இடத்துல ’மேட்ச்’ பாக்காம .என்று பயப்பட ஆரம்பிக்க அவரை அழுத்திக் கொண்டு இன்சார்ஜை இருக்க இடத்துக்குத் கூட்டத்தில் நீந்திப் போய்க் கூப்பிட்டோம். வாங்க ’சார்’ போயிடலாம் .வண்டி வெளிய எடுக்க முடியாது இப்பவே கிளம்பிடலாம் என்றோம் .அவர் இப்பத்தான் அஞ்சாவது பீரைச் சொல்லி இருக்கேன் வரட்டும் என்றார் .என்னுடைய இன்சார்ஜ் என்பதால் நான் அவரை அதிகம் கட்டாயப்படுத்த முடியாது.ஆனால் நிலைமை அப்படி இல்லையே ? வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு நான் முன்னாடி வெளியே நிக்கிறேன் எப்படியாவது கூட்டிட்டு வந்துறுங்க என்றேன் .இதைக் கேட்ட நண்பர் பயத்தில் உளறவே அரம்பித்து விட்டார்.நான் வண்டியை நோக்கிப் போக, இதையெல்லாம் தெரியாத கூட்டத்தின் கூச்சல் வேற்றியை நோக்கி உற்சாகம் பொங்க உரக்கக் கத்திக் கொண்டு இருந்தது. 


வண்டியை எப்படியோ வெளியே நிறுத்தவும் வெற்றி வெற்றி என்று உள்ளே பட்டாசுச் சத்தம் வரவே நான் உள்ளே ஓடினேன்.நண்பரும் - இன்சார்ஜும் இருக்கும் இடத்திர்க்குப் சுமார் 20 அடி வித்தியாசத்தில் நான் ஓடிக் கொண்டு இருக்கும் போது என்னைத் தள்ளிக் கொண்டு போய்ப் பேசியவர், ஓடி வந்து இன்சார்ஜ் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார்.இன்சார்ஜ் உறைந்து விட்டார்.ஒசூரில் வசதியான குடும்பம் அவர் இப்படி ஓர் அவமானம் ஏற்பட இதர்க்கு முன் வாய்ப்பே இல்லை.அவர அம்மா ஒரு நகர் மன்ற உறுப்பினர்.சந்திரபாபு நாயுடுக்கு ஒருவகையில் சொந்தம் அடுத்த அடி விழுவதர்க்குள் நான் அவரைப் பின்னால் இருந்து பிடித்தேன்.கோபத்தோடு என்னைப் திரும்பிப் பார்த்து ,என்னடாச் சொன்னேன் .அவன் கொல்லாம விடமாட்டான் அங்க பாரு என்றார் .அவர் நணபர் என்று சொல்லிக் கொண்டு இருக்க ,அதர்க்குள் நண்பர் ’இன்சார்ஜை’ கையைப் பிடித்துத் தரத் தரவென இழுத்துக் கொண்டு போக முயற்சிக்கும் போது அவர் முதுகில் ஒரு ப்ளாஸ்டிக் ’சேர்’ பறந்து வந்து தாக்கியது .நான் பிடித்து இருந்தவர் என்னை உதறி விட்டு அவர் நண்பரை நோக்கி ஓடக் கூட்டம் விலகிச் சிதறியது .நான் இன்சார்ஜை இழுக்க அவர் பக்கம் போக ஒரு பாட்டில் என் முதுகைத் தாக்கியது .நல்ல வேளை அது தண்ணீர்ப் பாட்டில்.எப்படியாவது காப்பாற்ற வேண்டும் அவரை . 


இரண்டுப் பேரும் காம்பவுண்ட் சுவரைச் சுற்றி இழுத்துக் கொண்டு ஓடும் போது போகும்போது ,என்னை முதலில் கூப்பிட்டுப் பேசியவரை ஏறக்குறைய மூன்று பேர் அமுக்கிப் பிடிக்க அவர்களை உதறித் திமிறிக் கொண்டு இருந்த போது அவர் கையில் உடைந்த பீர்ப் பாட்டில் இருந்ததுபார்த்தேன் ,மூன்று பேர் ஓடித் தப்பிக்க வழி இல்லை .வண்டியிலும் எடுத்துத் தப்பிக்க வாய்ப்பு இல்லை .நண்பரிடம் சொல்லி இவரை எப்படியாவது பின்னால் இருக்கும் தியேட்டர்ப் பக்கம் கூட்டிக் கொண்டு போயிடுங்க .ஈஸ்வரன் கோவில் பக்கமாய்ப் போய்த் தப்பிச்சுரலாம் அதர்க்குள் நான் வண்டியுடன் வந்தர்றேன் என்று வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது என் இன்சார்ஜை அடிக்க வந்தவர் குரல் எனக்குத் கேட்டது .. 


எப்ப இருந்து சொல்றேன் அந்த நாய்த் திரும்பத் திரும்பத் திட்றான் ,நான் மட்டும் இந்தியனில்லையா ? நான் இதே மண்ணுலதான் பிறந்தேன் எனக்கும் இந்தியா ஜெயிக்கிறது சந்தோசமில்லயா ? விளையாட்டுன்னு வந்துட்டாத் திறமை இருக்கிறவன் ஜெயிப்பான் இவன் எதுக்கு அவன் என் மதத்த பற்றிப் பேசறான் ... 


இதைக் கேட்ட எனக்கு ஒரு நிமிடம் உள்ளே போய் அவரிடம் என் இன்சார்ஜ் பேசியதர்க்காகக் மன்னிப்புக் கேட்டு விட்டு வரலாம் என்பதாகத் தோன்றியது.

அதற்குள் என்னை நோக்கி நண்பர் ஓடி வந்து
“உங்க இன்சார்ஜ் சொல்லறதைக் கேட்காமப் பார் நோக்கி வந்துட்டு இருக்காரு வாங்கச் சீக்கிரமா என்று பரபரத்தார்!”

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

காதலில் - சில கட்டாயங்கள் !


           திண்டுக்கல்லில் எனக்கு ஆறு நண்பர்கள் .அதில் மூன்று பேர் என்னை விட ஏறக்குறைய இரண்டு வயதுக்குள் மூத்தவர்கள் .இதில் சுகுமாரை மட்டும்தான் கூடப் படித்த வகுப்புத் தோழர்.என்னை விட மூத்த நண்பர் ஒருவரின் காதல் திருமணத்தை நடத்தச் செய்தச் சுவாரஸ்யங்கள்தான் இந்தப் பதிவு .             நண்பர்கள் நாங்கள் அனைவரும் சச்சின் டெண்டுல்கர் போல!. ஒரு விளம்பரத்தில், நான் 100 செஞ்சூரி அடிப்பேன் என்று கனவு காணவில்லை ஆனால் காணாத கனவு நிறைவேறியது.அதனால் வாருங்கள் கனவுகளைத் துரத்துவோம் என்பாரே அது போல என் நண்பர்கள் எல்லோரும் பல பட்டப் படிப்பு முடிக்க வேண்டும் ஒரு டாக்டராக,ஒரு வக்கீலாக , எஞ்ஜீனியராக,ஒரு மென் பொறியிலராக,இன்னும் பல ____ ஆக ஆசைப்படவில்லை .ஆனால் அப்படி தொடர்பு உடைய வேலைகளில் இருக்கிறார்கள் இன்னும் சொல்லப் போனால் அவர்களை வைத்துப் பாடம் நடத்துபவர்களாகவும் அவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாகவும் கூட இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் சுய முன்னேற்றப் போராளிகள் என்று கூட சொல்லலாம் என்பது வேறு விசயம் ...

சரி நாம் தொடங்கிய காதலுக்கு போவோம் .என் அப்பா சுமார் 60 வருடங்களுக்கு முன் சொந்தமாக ‘லேன்ட் மாஸ்டர்’ கார் வாங்கி (அதனால் இப்போதும் அவருக்கு லேன்ட் மாஸ்டர் சுந்தரம் என்ற பட்டப் பெயரும் உண்டு ) வாடகைக்கு ஓட்ட தொடங்கிய சமயத்தில் அவருக்கு ஒரு வாடகை திண்டுக்கல் சிறுமலைக்கு போவதர்க்கு வந்தது.மூவர் மட்டுமே காரில் வந்து இருக்கிறார்கள் .வந்தவர்கள் பேசிக் கொண்டதைக் கவனித்த போது அவர்கள் காதல் விசயத்தில் ஏதோ ஒரு பெண்ணை தூக்கி வரப் போவது புரிந்து கொண்டார் .வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இந்த மாதிரி வாடகைக்கு வர மாட்டேன் என்று மறுத்து இருக்கிறார்.அதர்க்கு அவர்கள் இல்லை எந்த பிரச்ச்னையும் வராது.கூட வந்த ஒருவரைக் காட்டி இவனும் அந்த பெண்ணும் காதலிக்கிறார்கள் என்றும் போன உடன் கூட கிளம்பி அவள் வந்து விடுவாள் என்று கெஞ்சி இருக்கிறார்கள் .சரி என உடன் பட்டுப் போய் இருக்கிறார் .அவர் சொன்ன இடத்தில் காரை நிறுத்தி விட்டுக் காத்து இருந்து இருக்கிறார் .அவர்கள் போன சில நிமிடத்தில் அய்யோ என்னை விடுங்க நான் என் அப்பா அம்மா விட்டு வர மாட்டேன் என்று சத்தமிடுவது கேட்டு இருக்கிறது .எற்கனவே திருப்பி நிறுத்தித் தயார் நிலையில் கார் இருந்ததால் வாங்க வேண்டிய வாடகை பணத்தை கூட வாங்க முடியாமல் ,விட்டால் போது கிளப்பிக் கொண்டு கார் ஸ்டாண்டுக்குத் திரும்பிப் பறந்து வந்து விட்டார்.அடுத்த சில நாள் கழித்து அந்த மனிதர்களில் ஒருவரை வாங்கிய தரும அடையை மறைக்க் காதைச் சுற்றித் தலை முழுதும் முண்டாசு சுற்றி கொண்டு இவரை முறைத்து கொண்டு போனதைப் பார்த்து இருக்கிறார் .அப்படி பட்ட காதலர்களை சேர்த்து வைக்கும் வீரப் பரம்பரை நான் !
           ஆனால் என் நண்பர் விசயம் வேறு .அவர் விரும்பிய பெண்ணும் குடும்பமும் நண்பர் வீட்டுக்கு வெகு பல ஆண்டுகளாக நெருங்கிய பழக்கம்.அந்தப் பெண் அவர்கள் வகுப்பைச் சேர்ந்தவள்தான் பொருளாதார வசதியிலும் நண்பரின் வீட்டை விடக் குறைவு ஆனால் அவர்கள் திருமணத்தை மறுக்க அது காரணம் அல்ல அந்தப் பெண் அவள் வீட்டுக்கு மூத்தவள், அவளுக்கு நான்கு தங்கைகள் என்பது மட்டுமே..அதனால் அவர் அந்த வீட்டிற்கு செலவு செய்தே வீணாகப் போவார் என்று சொல்லி மறுத்தார்கள் .அவர்கள் மன மாற்றத்திர்க்கும் சம்மதத்திர்க்கும் பல ஆண்டுகளாகப் பொறுமையாக இருந்து பார்த்தார் நண்பர்.இதர்க்கு இடையே அவரில் சில ஆண்டுகள் கோவையில் மெசினஸ்ட்டாக வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.பெண் வீட்டில் சம்மதம் என்பதால் அவர்கள் வேறு வரன் வந்தும் தட்டிக் கழித்து விட்டார்கள் .இதர்க்கு இடையில் காலம் வேறு ஒரு வாய்ப்பைக் கொடுத்துச் சோதித்தது. அவருக்கு மலேசியாவின் நண்பர் ஒருவர் மூலம் வேலை வாய்ப்பு.போக எல்லா முயற்சியும் நடந்து விட்டது .அந்தப் பெண் வீட்டில் பயம் வரவே வேறு வழியில்லாமல் அவர் தாயாரிடம் இறுதியாகப் பேச கூட என்னை அழைத்தார் . 
போனேன் .எனது மறக்க முடியாத வாழ்வியல் சம்பவங்களில் அதுவும் ஒன்று .ஒரு தாயும் மகனும் வேறு வேறு கோணத்தில் காதல்  பற்றிப் பேசினார்கள் .தாய் மறுப்பதுவும் ,நண்பர் தனது தாயிடம் தனது உரிமையையும் கோரிக்கையையும் உரத்தும் ஒரு இடத்தில் கெஞ்சியும் விவாதம் தொடர்ந்தது.நண்பர் பல சமயம் பேசப் ,பேச அழுதும் விட்டார் .( எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவருக்கு இரும்பு மனிதர் என்ற செல்ல பெயர் இருந்தது ) ஒரு கட்டத்தில் அவர் அம்மா முடிவாக, உனது அண்ணன்களிடம் எல்லாரும் பேசிவிட்டேன் நீ அப்படி ஒரு முடிவு எடுத்தால் இந்த வீட்டுக்குள் வராதே என்று தனது பேச்சை முடித்து விட்டார்கள் .நண்பர் வெகு நேரம் உட்காந்து இருந்தார் .அங்கு ஒரு அழுத்தமான மவுனம் என்னைக் காத்து இருக்க வைத்தது.  ஏதோ முடிவெடுதார் போல என்னைப் பார்த்தார்.அது ஒரு விதத்தில் தோல்வி கலந்து முடிவெடுத்த பார்வை அது என்பதாக உணர்ந்தேன் நான் !  எனக்கு விபூதி பூசி விடுங்கள் என்றார் நண்பர் அம்மாவிடம் .பூசி விட்டார்கள். எப்போதும் இங்கு ஊருக்கு வந்து விட்டுத் திரும்பிப் போகும்போது எங்கள் நண்பர்கள் அனைவரின் வீட்டிலும் இது வழக்கம்தான் ஆனால் எனக்கு இன்று அது வேறு ஒரு மாதிரி இருந்தது  . நண்பர் போயிட்டு வரேன் என்றார்.வாசல் கதவைத் தாண்டும் போது என்னை அம்மா கூப்பிட்டர்கள்.நண்பரைப் பார்த்தேன் அவரின் கண்ணால் போ என்றார்.அம்மா மெல்லக் குரல் தாழ்த்தி எனக்கு மட்டுமே கேட்கும் படி ,அவளை எந்த அளவுக்கு நாங்கள் நம்பிப் பழக விட்டோம் ? இப்படி என் மகனை என்னிடமிருந்து பிரித்து விட்டளே .இன்னைக்கும் சொல்றேன் கிருஷ்ணா கேட்டுக்க எனக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு அவள் வீட்டில் அவள் தங்கச்சி ஒருத்திக்குக் கூட நல்ல படியாக் கல்யாணம் நடக்காது எல்லாரும் இவளை மாதிரி எவனையாவது இழுத்துகிட்டுதான் போவாளுக பார் .நீயும் பார்ப்பே ! நான் அவர்கள் கோபம் புரிந்து கொள்ள முயற்சித்தாலும் பெண்ணுக்கு பெண் சாபம் இடுவது இங்கு எப்போது முடியும் என்பதை நினைத்தபோது ஒரு வித அயற்சியாக இருந்தது.           நண்பரின் அண்ணன்களில் ஒருவரிடம் எனக்கு கொஞ்சம் நெருக்கமிருந்தது அவரிடம் பேச நான் நண்பருடனே போனேன் .சுமார் 3 மணி நேரம் பேசினோம் .பேசினோம் என்பதைவிட போராடினோம்.அவர் எங்களை பார்த்து கடைசியாக சொன்ன வார்த்தைக் கிருஷ்ணா நீ அவனெல்லாம் அதிகம் புத்தகம் படிக்கிறதால உலகம் இவ்வளவுதான்னு ஒரு கனவுல அலையிறீங்க ப்ராக்ட்டிக்கல் என்பது வேற.உங்களுக்கு இப்போ சொன்னாப் புரியாது. எனக்கு இதுல எதிர்ப்பும் இல்லை சம்மதமும் இல்லை.போயிட்டு வாங்க என்று முடித்து கொண்டார்.அவரை மதித்து நாங்கள் போனதுக்கு பரிசீலிக்க படாத எதிர்கட்சித் தொண்டன் மனு போல மீண்டும் நிராகரிக்கப் பட்டோம்.சோர்வாக இருந்தது .          ஆனால் நண்பர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உறுதியாக இருந்தார்.அதனால் பெண் வீட்டில் அனைவரிடமும் கூடிப் பேசினோம் .உங்கள் வீட்டில் முதல் கல்யாணம் என்பதால் நிச்சயம் பத்திரிக்கை அடித்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம்.அதைத் தடுக்கவில்லை.கல்யாணத்திர்க்கு இரண்டு நாளைக்கு முன்னால் இருந்து கொடுக்க ஆரம்பியுங்கள் .அதிலும் இருவருக்கும் பொதுவான சொந்தம் யாருக்கும் பத்திரிக்கை வைக்க வேண்டாம்.ஜவுளி,வேறு சமாச்சாரங்கள் வெளியூரில் எடுங்கள் .கல்யாணம் திண்டுக்கல்லில் வேண்டாம் .ஸ்ரீரங்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.கல்யாணத்திர்க்கு முன்னால் சொந்தங்களை நேரம் சொல்லித் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வரச் சொல்லி விடுங்கள் அங்கிருந்து ஒரு அரசு பஸ் மொத்தமாக பேசிக் கிளம்பி விடலாம் .அதுவரை நண்பர் என் வீட்டில் இருக்கட்டும் .இது போல பல முன்னேற்பாடுகளை  சொன்னோம் .மெல்லத் தயங்கினாலும் எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள்.சொன்ன படியும் செய்தார்கள் .          அதில் மற்றொரு திட்டமும் இருந்தது .அதாவது கல்யாணத்தில் எங்கள் மூன்று நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வதும் மற்ற மூவர் இங்குள்ள சூழ்நிலையை கண்காணிக்கவும் திட்டமிட்டோம் . இதில் கடைசியாக எனது தோழி ஒருத்தியைத் திருமணத்திர்க்கு முதல் நாள் மாலை நண்பரின் வீட்டுக்கு அனுப்பி விசயம் கசிந்து இருக்கிறதா என உறுதி செய்து கொண்டோம். எல்லாம் திட்டமிட்டாலும் பயம் நிழலாய்த் தொடர்ந்தது.காரணம் நண்பர் வீடு கொஞ்சம் ஆள் பலம் மிக்கது.எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

   ஆனால் திருமணத்தில் நண்பர்களின் பெற்றோர்கள் இல்லை என்ற வருத்தம் தவிர , மற்றபடி அவர்களின் மானசீக ஆசிர்வாததால் அற்புதமாக நடந்து முடிந்தது.  இன்றைய டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலைப் பாரதிய ஜனதா நினைத்தது போல நண்பர் வீட்டில் நினைத்து விட்டார்கள் .          ஆனால் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் விசயம் அண்ணன் ஒருவருக்கு தெரிந்து விட்டது .முதலில் என் வீட்டுக்குப் போய் இருக்கிறார் .எனக்கும் நான்கு சகோதரர்கள் என்பதாலும் , தெரியாது என்று சொன்னதாலும் வேறு எதுவும் கேட்கவில்லை .ஆனால் நாங்கள் விட்டு வந்த நண்பர்களில் (மூவரில்) ஒருவரைப் பிடித்து விசாரிக்க அவர் கொஞ்சமும் யோசிக்காமல் எனக்கு தெரியாது ஆனால் பழநியில் நடக்கலாம் என பேசிக் கொண்டதாக அவர்களை திசைத் திருப்பச் சொல்ல ,சொன்ன நண்பரையும் கூட்டிக் கொண்டு அலைந்து இருக்கிறார்கள்.அந்த நண்பர் நல்லதிர்க்காக கூட  பொய் சொல்லத் தெரியாதவர் .அதனால் போகும் வழியெல்லாம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் வயிறுக் கலக்கியதில் ,பல முறை டூப் பாத் ரூம் ஓடியிருக்கிறார்   .இதில் என்ன விசயம் என்றால் நண்பர் குடும்பத்தில் சில ஆண்டுகள் கழித்து எங்களை கூட மன்னித்து விட்டார்கள்.ஆனால் அவர் (வயிற்று ) போக்குக் காட்டி அலைய வைத்ததால் பல ஆண்டுகள் அவரிடம் பேசவில்லை என்பது வேறு விசயம்.             விசயம் வீட்டுக்குத் தெரிந்ததால் திருமண ஜோடிகளை பதிவு அலுவலகம் செல்லும் வரை பதுக்கி வைக்க மணப்பாறையில் உள்ள நெருங்கிய சொந்தகாரர் வீட்டிற்க்கு மாற்றி விட்டோம் .காரணம் நண்பர் கொடுத்த வாக்கை நிறவேற்றத் திருமணத்தில் உறுதிதான் ஆனால் பாசத்தில் வாழைப் பழத் தோல் போல எப்படியும் எங்காவது வழுக்கி விடுவார் என்பதும் எங்களுக்குள் உதறல் இருந்தது.அப்புறம் சின்ன பிள்ளைகள் வெல்லாமை வீடு வந்து சேராது என்ற பழ மொழி நூறு மார்க் எடுத்து விடுமே ? அதனால் அவர் வீட்டுக்கு தெரியும் என்பதை சொல்லாமல் வைத்து இருக்க பெரும் பாடு பட்டோம்.         இன்று அவர் சென்னையில் வசிக்கிறார் .மில்லிங் மெசின் வைத்து தொழில் புரிகிறார்.அவர் மனைவி அறிவியல் டீச்சராக இருக்கிறார்கள் .பையன் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறான். வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது ...          இந்த பதிவைச் சுபம் போட்டு முடிக்கும் முன்னால் இரண்டு விசயம் சொல்லியே ஆகவேண்டும் .ஒன்று நண்பரின் திருமணத்திர்க்குச் சுமார் ஆறு ஆண்டுக்குப் பின்னர் அவர் தந்தை மரணத்தில் நண்பர் கடைசி பையன் என்பதால் அவர் தந்தைக்கு கொள்ளி வைக்கும் உரிமை அவரின் பெரிய அண்ணனால் மறுக்கப்பட்டது என்பது வெகு நாள் ஒரு வலியை ...            இன்னொன்று அவர் அம்மாவின் என்னிடம் சொன்ன கடைசி வார்தை ( இன்னைக்கும் சொல்றேன் கிருஷ்ணா கேட்டுக்க எனக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு அவள் வீட்டில் அவள் தங்கச்சி ஒருத்திக்குக் கூட நல்ல படியா கல்யாணம் நடக்காது ) அந்த வார்த்தை ஒரே ஒரு முறை நண்பரின் மனைவியின் ஒரு தங்கை விசயத்தில் நடந்தது .அப்போது நண்பர் கோவையில் இருந்தார் அவரின் திருமணம் நடந்து ஒரு ஆண்டு முடிந்த பிறகு ... ஒரு ஞாயிறு வீட்டுக்கு நண்பரின் மனைவியின் தங்கை வந்தாள் .அவர்கள் வீட்டில் அதிகம் யாரிடமும் பேசாதவள் அவள் .அற்புதமாக படிப்பவள் .வந்ததர்க்கான காரணம் விசாரித்த போது ,  உடனே அழுதாள் .சில நிமிடம் அழுபடியே அவள் சொன்னாள், நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன் .அவர் வேறு மதம் .அதனால் எங்க வீட்டில் நீங்கதான் வந்து பேசனும் இல்லாட்டி நான் தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்றால் .. 
                     நான் என்ன செய்தேன் என்பதை உங்கள் யூகத்திர்க்கு விட்டு விடுகிறேன்...