வெகு காலம் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஒரு எதிர்பார்ப்பைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்களின் சங்கம் நிறைவேற்றியது .உலகச் சினிமாவைப் பார்ப்பது சினிமாவை ரசிப்பவர்களுக்கு மட்டுமல்ல கலாச்சார ஆர்வலர்களுக்கும் ஒரு நல்ல விருந்து .ஒரே கூரையின் கீழ் உலகத்தரத்தின் பலவகையான செல்லுலாயிடுச் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்படுவது அற்புதமான விசயம்.
உலகச் சினிமாவை ஏன் பார்க்கவேண்டும் ?
சில சமயம் நம்ம ஊர்ப் படங்களைப் பார்க்கவே நேரம் இல்லாத போது உலகத்தரம் என்று யாரோ முடிவு செய்யும் சினிமா என்ன சொல்லி விடப்போகிறது என்ற முரண்பாடு பலருக்கும் வருவதற்குக் காரணம் சினிமா அடைந்து இருக்கும் அல்லது எட்டியிருக்கும் எல்லைகளின் விரிவு பற்றிய அறிதல்தான்.முக்கியமாக மனிதம் எப்படிச் சினிமா என்ற சாரளத்தின் வழியே புரிந்து கொள்ளப்படுகிறது என்ற அடையாளங்கள் இங்குப் பதிவு செய்யப்படுகிறது வேடிக்கைப் பார்க்கும் தளம் இது என்பதாக எடுத்துக்கொள்ளலாம். அப்படியானால் உலகச் சினிமாப் பார்ப்பவர்களுக்குத் தலையில் ஏழியனைப்போல ஆண்டெனா முளைத்து விடுமா ? என்ற அப்பாவித்தனமான கேள்விகளும் இங்கு உண்டு .இதெல்லாம் நானும் கேட்டு இருக்கிறேன்.ஒருவேளை எடிட்டிங் இல்லாமல் அப்படியே காட்டுவதால் தேடித் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் பண்ணிக்கொண்டதும் உண்டு.
மொத்தம் ஐந்து நாட்களில் நவ 18-22 வரை, 14 நாட்டுப் படங்கள் டைமண்ட் திரையங்கில் காட்சிப்படுத்தப்பட்டன.அதில் இந்தியாவின் ஹிந்தி ,மராத்தி உட்பட 23 படங்கள் அடங்கிப்போயின.ஒவ்வொரு நாளும் முதல் நாள் படம் பற்றிய விமர்சனம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க அன்பர்களால் அலசப்பட்டது .அதே போல ஒவ்வொரு திரையிடப்படவிருக்கும் திரைப்படம் அறிமுகம் சொல்லப்பட்டது.அது மிகத்துல்லியமாக உலகத்திரைப்படங்கள் பற்றிய அவர்கள் பார்வை அழகாக இருந்தது.சிறப்பான விசயம் இது .
முதல் படம் : October
அமெரிக்காவின் ஜான் ரீட் எழுதிய 1928 – உலகைக் குலுக்கியப் பத்து நாட்கள் என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை 1927-ல் செர்ஜி ஐசன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட கருப்பு வெள்ளை மவுனப் படம் இது.
ரஷ்யாவில் நடந்த, முதல் புரட்சிக்குப் பின் ஜார் மன்னனை விரட்டி முதலாளிகள் மென்ஷ்விக்குகள் ஆட்சியில் அமர்த்தியதால் போல்ஷ்விக்குகள் தாக்கப்படுகிறார்கள்.லெனின் தலைமறைவாகிப் போல்ஷ்விக்குகள் புரட்சியை நோக்கிய தங்கள் நகர்வைத் திட்டமிட்டு நடத்தி அக்டோபர் 26ல் புதிய அரசு நிறுவப்படுவதைப் பற்றிச் சித்தரிக்கும் நிகழ்ச்சித்தான் படம் .ரஷ்யப் புரட்சி பற்றிய சற்றே ஆர்வம் இருப்பவர்கள் இந்தப் படத்தை ரசித்திருக்க வாய்ப்பு இருக்கிறது .
இது ஒரு ”புரட்சியின் தடங்கள் ” ..
இரண்டாவது படம் : Waleza ,Man of Hope
போலந்தின் ஆண்ட்ரெஜ் வாஜ்டா இயக்கத்தில் 2013 ல் வெளியான இந்தப்படம் சென்ற படத்தின் நீட்சியாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.நாடுகள் மாறியிருந்தாலும் களம் என்னவோ புரட்சி ஆட்சிக் கலைப்புக்கு எதிரான மனித யுத்தங்கள்தான்.ஆனால் ஒரு சாதரண ஹார்பரில் எலெக்டிரிசியனாகப் பணிபுரிந்த உண்மை நாயகன் Lech Wałęsa வின் கதையை Robert Więckiewicz என்ற திரைநாயகன் மூலம் அற்புதமாகப் பேசப்பட்ட படம்.
நம் இந்திய நாயகிகளைத் தூக்கிச் சாப்பிடும் அற்புதமான வேலையைக்
கதாநாயகனின் மனைவியாக நடித்த Agnieszka Grochowska அள்ளிக்கொள்கிறார் .கதையில் ஓரிடத்தில் Wałęsa க்கு நோபல் பரிசு பெறுவதற்குத் தனக்குப் பதிலாகத் தனது மனைவியை வாங்கி வர அனுப்புகிறார்.அதைப் பெற்றுத் தன் நாட்டுக்குத் திரும்பும் கதாநாயகியை அப்போதிருந்த அரசு அவர்களை அவமானப்படுத்தும் விதமாக ,விமான நிலையப் பெண் அதிகாரிகள் முழு ஆடைகளையும் களைந்து சோதிக்கிறார்கள் .அவளது கடைசி உள்ளாடை panties ஐ கழற்றச் சொல்லும் போது அவளருகே திறந்த நிலையில் இருந்த நோபல் பரிசுப் பெட்டியை மூடிவிட்டு அதைக் கழற்றி அந்தப் பெட்டிமேல் போடும் காட்சி வெவ்வேறு உணர்வுகளை எழுப்புகிறது .ஆனால் அதில் எனக்குப் பிடித்த காட்சி அந்தச் சோதனைக்குப் பின் வெளியே வந்து கணவன் முன் தனக்குள் பொங்கிவந்த அழுகையைச் சமாளிக்கும் விதத்தில் Agnieszka Grochowska ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னும் பெண் எங்கே இருக்கிறாள் என்று நெற்றிப்பொட்டுச் சுடுமளவுக்குக் காட்சியமைக்கப்பட்டு இருக்கும்.
இது ஒரு ”கலகத்தின் விளைவு” .
மூன்றாவது படம் : Where to invade next
2015 ல் அமெரிகாவின் Michael Francis Moore இயக்கி, நடித்த டாக்குமெண்டரிப் படம் .ஆனால் ஆவணப்படம் என்று மட்டும் சொல்லி விடமுடியாது .ஒரு பயணப் புத்தகம் வாசிக்கும் கிளுகிளுப்பை அமெரிக்க பாணியில் சொல்லியிருக்கிறார்.ஆனால் ஒரு திரைப்படத்தின் வாயிலாகத் தன் நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே அற்புதமான செய்தியை எட்டு நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் உரிமைப் பெண்கள் உரிமை ,பாலியல்கல்வியின் பயன்,கருக்கலைப்பு,போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கை, இலவசக் குழந்தைகள் கல்வித் தொடங்கி உயர்கல்வி வரையும் படம் பேசுகிறது .
ஒரே வரியில் கதை சொல்ல வேண்டும் என்றால் நம் பாரதி அன்று சொன்ன ”எட்டுத்திசை எங்கும் சென்று கொண்டு வந்து சேர்ப்பீர் ”என்பதை எட்டு நாடுகள் சென்று Moore புரிந்து கொண்டு இருக்கிறார் அவ்வளவே !
இது ஒரு ”இனிப்புத் தடவியக் கசப்பு மருந்து “
நான்காவது படம் : Trumbo
ஜே ரோச் இயக்கிய அமெரிக்கப் படம். இதுவும் என்ற அமெரிக்கக் கதாசிரியரும் ,திரைக்கதைக் கர்த்தாவுமான James Dalton Trumbo அமெரிக்கக் கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர் என்ற காரணத்திற்காகத் திரைத்துறை வாழ்வியலில் அவர் சந்திக்கும் வலிகளும் ,உயர்வுகளும் மையைமாகப் பின்னப்பட்ட உண்மைக்கதை.Trumbo ஆவாக Bryan Lee Cranston நடித்து இருக்கிறார்.இவர் எனக்குச் சில இடங்களில் அன்பே சிவம் கமலை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்.
இது ஒரு படம் என்று பேச முடியாது .அந்த அளவுக்கு ஒரு அடுத்த வீட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்த அனுபவம் தருவது போல அற்புதமான திரைக்கதை .
இது ஒரு “ பொறுமையின் பரிசு ”
ஐந்தாவது படம் : Masan ( Hindi )
என்ன இருந்தாலும் ஒரு இந்தியப்படம் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம் சொந்த வீட்டுக்குள் ஹாயாகக் கால் நீட்டித் தூங்கும்போது கிடைக்கும் போல அந்தச் சந்தோசமே தனிதான்.
இயக்குனர் Neeraj Ghaywan ஒரு இந்தியர் .மெல்ல மெல்லத்தான் இந்தத் திரைத்துறைக்குள் பிரவேசித்து இருக்கிறார்.காட்சிப் படுத்துதலில் பல பெரிய இயக்குனர்களின் டச் இவரிடம் பிரிக்க முடியாத அளவுக்குப் பரவிப் புதைந்து வெளிப்படுகிறது .
நாயகி Richa Chadda தந்தையாக நடித்த Sanjay Mishra எனக்கு நம் ராதாரவியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார். இன்னொரு ஜோடியான Vicky Kaushal - Shweta Tripathi அற்புதமான நடிப்பில் கதைக்குள் நம்மை நனைத்து விடுகிறார்கள்
எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல முதல் பத்து நிமிடத்திற்குள் கதை சொல்லப்பட்டு விடுகிறது . நிகழ்காலத்தின் கல்லூரி மாணவர்களின் காதலின் அழகை .காமத்தை , வலிகளைச் சொல்லும் படம் .ஆனால் சோகம் மட்டும் வாழ்க்கையில்லை காதலில் தங்கள் துணையை வழியிலேயே இழந்தவர்கள் அடுத்து என்ன செய்கிறார்கள் என்ற நம்பிக்கையைப் பேசும் படம் .
நாயகி Richa Chadda தன்னைக் காதலித்த ஒரே குற்றத்திற்காக இறந்து போன காதலன் வீடு சென்று தனக்கு ஒரு பிரயசித்தம் தேடிக்கொள்ள முயலும் காட்சியில் ,காதலன் வீட்டுக்குள் சென்று தன்னை யாரெனெ அறிமுக்கப்படுத்திக் கொள்வதுவும் அதனால் காதலனின் அம்மா தன் கோப்பத்தை வெளிப்படுத்துவதை வெறும் குரல் பதிவாக மட்டுமே பதிவு செய்து காமிரா வீட்டுக்கு வெளியே விலகி நிற்பது அற்புதமான மறக்க முடியாத காட்சி.
இது ஒரு “ இளமை - காதல் - இழப்பு - வாழ்க்கை “
என் ஜன்னலுக்கு வெளியே ...
நான் 23 படங்களும் பார்க்க முடியாவிட்டாலும் இந்த ஒரு நாள் அனுபவத்தின் மூலம் சினிமாவை நாம் பொழுதுப் போக்கு என்ற ஒரே அஞ்சரைப் பெட்டிக்குள் அடக்கி விட்டோமோ என்ற ஒரு உறுத்தல் உலகச் சினிமாப் பார்ப்பவர்கள் உணருவார்கள் .காரணம் இங்கு நான் அவர் விசிறி நீ இவர் ரெக்கை என்று கட் அவுட்டுகளுக்குப் பாலாபிசேகம் பண்ணிக்கொண்டும் ,அதிலிருந்து கீழே விழுந்து ,அவசர வார்டில் இடம் தேடிக்கொண்டும் ,படம்வெளியாகும் முன் அந்த மதத்தைப்பற்றி இழிக்கிறது என்று பேசிக்கொண்டு பணம் என்ற பரமபத விளையாட்டில் நகர்ந்து கொண்டு இருக்கிறோம் .ஆனால் உலகப்படங்கள் ஒரு அரசில்,சமூகத்தில் ,மக்களின் வாழ்வியலில் எத்தனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அழுந்தச் சொல்கிறது உலக சினிமா என்ற ஒற்றைச் சாரளம் .
வெளியே உலக சினிமா என்ற மழை பெய்தது. முழுவதுமாக நனைய முடியாவிட்டாலும் என் சன்னலுக்கு வெளியே கை நீட்டி நனைத்துக் கொண்டேன் …
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்களின் சங்கத்திற்கு என் விண்ணப்பம்...
1.அற்புதமான இம்மாதிரி உலகத் திரைப்பட விழாவை ஐந்து நாள் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்புத் திருப்பூரில் எல்லோருக்கும் அமையுமா ? என்ற பெரும் கேள்வி என் முன்னால் நிற்கிறது .தினமும் மாலை இரண்டு காட்சிகளைத் திரையரங்கோடு ஒப்பந்தம் போட்டுக் காண்பிக்கப்படும் போது இன்னும் பலருக்கும் சென்று சேரும் என்ற என் அபிப்ராயம் .
2.அடுத்த முறை என் போன்ற சாதரண மொழியறிவு உள்ளவர்களுக்காகப் படங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை - சப் டைட்டிலைச் சாத்தியப்படுத்துங்கள் .அது இன்னும் வெகுதூரம் பார்ப்பவனின் அலை நீளத்திற்குள் பயணிக்கும் என்பது எண்ணம்.
3.திரைப்படங்கள் பற்றிய ஒரு கைடு (ரூ-20) வழங்கியிருக்கிறீர்கள் .அதில் படத்தின் கதை ,இயக்குனர் மட்டும் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதன் நடிகர்களையும் பற்றிப் பேசியிருக்கலாமே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.