புதன், 31 டிசம்பர், 2014

தோனி மாதிரி ஆகணும் !முடிவு எடுப்பதில் யாருக்கெல்லாம் திறமை இருக்கோ , அவரெல்லாம் கொண்டாடப்படுவது காலம் காலமாக எழுதப்படாத விதி போல நிகழ்ந்து கொண்டே இருக்கிறது .அதே சமயம் அவர்கள் எடுத்த தவறான முடிவுகளும் அப்போது எதர்க்காக எந்த சூழலில் எடுத்தார்கள் என்பதை தவிர்த்து , இன்றளவும் விவாதிக்கப்பட்டு கண்ணாடி சில்லு போல சிதறி கூராய் குத்துகிறது .அது மஹாத்மா காந்தி பாகிஸ்தான் பிரிவினைக்கு சொன்னதானாலும் நீங்கள்  யாரையோ ஒரு பெண்ணை பார்த்து  எனக்கு காதலிக்க பிடிக்கிறது என்று தவறான முடிவாக இருந்தாலும் சரி எல்லாமே விடாமல் துரத்த தானே செய்கிறது .   


அந்த சிமெண்ட் கம்பெனி விளம்பரத்தில் ஒரு சின்ன பெண் தன்னுடைய சிரிக்கும் கண்ணை அகழலமாக் திறந்து கொண்டே சொல்லும் இந்த வார்த்தை எத்தனை பேருக்கு பிடிக்க வைக்குமோ தெரியாது ? ஆனால் அந்த பெண் சொல்லும் தோனியை எல்லோருக்கும் ஏன் கிரிக்கெட் பிடிக்காதவர்க்ளுக்கு கூடபிடிக்க வைத்து விட்டது காரணம் முடிவெடுப்பது அதுவும் இக்கட்டான நேரத்தில் ...
       
     டெஸ்ட் போட்டியில் தோனி ஓய்வு பற்றி எடுத்து முடிவு விவாதத்தில் இருப்பதால் தோனியை நாம் தலைப்புக்கு மட்டும் எடுத்து விட்டு நம்ம சொந்த ஆட்டத்து,  முடிவை பற்றி பேசலாமே !  


          நம்ம விசயத்தில் நாம் முடிவெடுக்க தயங்குவதர்க்கு காரணம் விளைவின் மேல் உள்ள ஆசை .தப்பா போய் விடகூடாது எனபதில் உள்ள அக்கறை .நாம் ஓரமா உட்கார்ந்து கொண்டு பலனை மட்டும் அநுபவிக்க விரும்பவது இப்படி கூட காரணமாக இருக்கலாம்  இப்படி  சொல்லிகொண்டே நழுவி கொண்டேயும்  போகலாம்..


  எனக்கு தெரிந்து யாராவது நல்லா இருக்குன்னு சொல்ற சட்டையத்தான் பலர் அதிகம் தடவை போடுவோம் .இதுல வீட்ல பசங்க இன்னும் கொஞ்சம் மேல போயி ஏதாவது வெவரம் தெரிஞ்ச உடனே முதல்ல சொல்றது , எங்க அப்பா அம்மாவுக்கு எதுவுமே தெரியறதே இல்லைன்னு சொல்றதுதான்.அதுல சில சமயம் உண்மை இல்லாம போறதும் இல்லை .அவனுகளுக்கு வயசாகிறபோது அவனோடஎதிர்காலத்துக்காகன்னு சொல்லிட்டு ! நாம் காசை தேடி ஓடிகொண்டு இருப்போம் அவன் வயசை அநுபவிக்க ஓடிக் கொண்டு இருப்பான் நமக்கு அவனுக்கும்  மிஸ் மேட்ச்தான் ஆரம்பிக்கும்.


நம்ம பழைய நடிகை அமலாவை பலருக்கு தெரியும். ( அதான் நாகார்ஜூனாவை கட்டிக்கிட்டாங்களே அவங்கதான் .) அவங்க திருமணம் மணமுறிவு - டைவர்ஸ் ஏற்பட்ட போது இனி என்ன செய்ய போறீங்க என்ற ஒரு பத்திரிக்கையாளர் கேள்விக்கு அவ்ங்க சொன்ன பதில் - எனக்கு வாழ்க்கையில் முடிவு எடுப்பதை பற்றி என அம்மா சொல்லி தந்து இருக்கிறார்க்ள் அதனால் என்னால் வாழ்வை சந்திக்க முடியும் என்றார்கள் .   ( அப்புறம் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விசயம் ! )
  


பொதுவா மற்றவர்க விசயத்தில் முடிவெடுப்பதில் பலரும் இங்கு ஆகாய சூரர்கள்தான் ஆனால் தனக்கு முடிவு எடுப்பதில் முகத்தை திருப்பிகொள்வார்கள் .நம் விசயத்தில் யாரோ எப்போதோ எடுத்த முடிவுகளை உரக்க பேசி சாபத்தை அநுபவிப்பது போல  சிலாகிப்பவர்கள் தன்னுடைய மனைவி குழந்தைகள் விசயத்தில் தயங்கினாலும் பரவாயில்லை அடுத்தவர் முடிவை அலசி ஆராய்வதில் ’டைம்ஸ் ஆஃப் நவ்’ அர்னாப் கோஸ்வாமியை (Arnab Goswami ) விட வல்லவர்கள் !  சிலர் சந்தேகம் கேட்டே கடைசி வரை எந்த முடிவும் எடுப்பதில்லை.இதில் சிலருக்கு எந்த கடவுளை எப்படி கும்பிடுவதில் ஆரம்பிக்கிறது  .கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொடி கம்பத்தின் முன்னால் விழுந்து வணங்குவதா  கடவுள் தரிசனம் முடித்து விட்டு விழுந்து கும்பிடுவதா ? வாங்கிய கோவில் பிரசாதத்தை இடது கை மாற்றி கொண்டால் தப்பாமே என்று கூட சந்தேகம் ! எரிப்பமா புதைப்பமா ? சனி பெயர்ச்சியில் குளத்தில் குளித்து விட்டு எந்த ட்ரெஸ்சை விட்டுட்டு வரது ? யோகாசனம் நல்லதா , ஜிம்முக்கு போலாமா ? இன்னும் நிறைய ...


தவறான முடிவெடுப்பதால் எடுக்கும் முரண்பாடுகளுக்கு   கோழைகளுக்கு மட்டும் சொந்தம் என்பது ஒரு காலத்துல சந்தோசமா சொல்லிட்டு தப்பிச்சுட்டோம் . ஆனா இப்பெல்லாம் அடுத்தவன் தனது  முடிவுகளை எடுக்க விடாமல் தடுத்து , எப்படி நாம் வாழலாம்ன்னு அலையற -  வியாபார உலகத்து முகமூடிக்குள்ள இருக்கோம் . நம்மளோட சுயம்  சிக்கி பிழியப்படுதேன்னு  நமக்கே  நல்லா தெரியுது. மண்ணெண்னை வாங்கறதுல  ஆரம்பித்து பெண் பார்க்கறவரை  கூட விளம்பரம்தான் வழி நடத்துகிறது.இதுவரை சுயம் என்பது பூஜ்யம்தான் .ஆனால் அது 2014 வரைதான்னு ஒரு முடிவு  எடுப்போம் 


         அதுநாள , இந்த புத்தாண்டுக்கு உங்களோடு கை கோர்த்துகொண்டு நானும் செய்ய போவது -  எல்லா விசயத்துல இந்த 2015 ங்கிற  ஜன்மத்துலயாவது சொந்தமா  சரியான முடிவு எடுக்கலாம்ன்னு  யோசிக்கலாம் .   

செவ்வாய், 11 நவம்பர், 2014

விழிகள் ஊமையல்ல ...
                நேற்று மதியம் நூலகத்திர்க்குள் இருக்கும் போது பாஸிடம் இருந்து ஃபோன்.எங்கே இருக்கீங்க என்றார் ?அப்படி கேட்பதில் ஒரு லயம் என்னை பொய் சொல்ல வைத்தது .நேற்று நீங்கள் கொடுத்த கேஸ் கவரை காணோம் ஆபீஸ் வாங்க என்றார் .
                  அவர் அடிக்கடி தவறுதலாக வைத்து விடுவது வழக்கம் இருந்தாலும் உடனே எனக்குள் அவர் அறையில் மாட்டி இருந்த கேமிரா ஞாபகம் வந்தது .ஆனால் அதன் கண்ட்ரோல் இன்னொரு பாஸ் வைத்து இருப்பதால் அவர் வரும்வரை காத்து  இருந்து ,இரவு பதிவுகளை பார்த்தால் அந்த அறையின் ஒளி அமைப்பு உதவவில்லை .சரி காலை செக்யூரிட்டி போன பின்னால் ,வழக்கம் போல கூட்டி சுத்தம் செய்யும் பெண் வரும் நேரத்தில் ,பதிவுகளை அலசினோம் ஆராய தொடங்கினோம் .தேடல் ,இரவு சுமார் 10 மணி நெருங்கும்போது ..

          

              சந்தேகப்பட்டது உறுதியானது .அந்த பெண் கூட்ட செல்வதுவும் ,அப்போது அந்த டேபிளுக்கு கீழ் உள்ள அந்த கேஸ் கவரை பார்த்த உடன் , எடுத்து தனது மடியில் செருகி கொண்டதை பதிவு காண்பித்தது. என்னால் நம்ப முடியவில்லை .மீண்டும் மீண்டும் பல முறை ஜூம் செய்து பார்த்தோம்  வெகு நேரம் என்னால் நம்ப முடியவில்லை .காரணம் அந்த பெண் பல ஆண்டுகள் நம்பிக்கைகுரியவளாக வேலை செய்து வருகிறாள் .இதர்க்கு முன் பல தருணங்களில் தவறுதலாக அதே பாஸ் ரூமில் போனஸ் சமயத்தில் வைத்து சென்ற பண கட்டுகளை ஆபீஸ் பாயிடம் ஒப்படைத்தவள் . அது மட்டுமல்ல அவளை வேலையில் எங்களிடம் நீடித்து வைத்து இருப்பதர்க்கு ..

             அவள் இரண்டும் காதும் கேட்காதவள் மட்டுமல்ல வாய் பேச முடியாதவள் . இதர்க்கெல்லாம் மேலாக மாலை கண் நோய் பாதிப்பில் இருப்பவள் .முப்பத்தி ஐந்து இருக்கும் அவளின் கணவன் பல வருடங்களுக்கு முன் அதிக குடியால் இறந்து போய் விட்டான் .என்னை போல பலரையும் பார்த்து நீ சிகரெட் குடிப்பியா ,தண்ணி அடிப்பியா  செய்யாதே என்று சைகையால் சொல்வாள் .அனேகமாக எங்கள் ஆபிசில் அவளிடம் அதிகம் அவள் பாஷையில் பேசுவது நானாகத்தான் இருக்கும் .  எங்கள் அலுவலகத்தை விட வேறு ஒரு இடத்திலும் இதே வேலை பார்த்து வாழ்வை நகர்த்தி வருபவள் அவள் .ஒரு சமயம் அவள் வேலை சரியாக செய்யவில்லை என்ற மிக புகார் செய்தார்கள் அதனால் பெரிய எதிர்ப்பை அந்த பெண் சந்திக்க வேண்டி இருந்தது ,ஆனால் எங்கள் நிர்வாகம் பொறுத்து கொண்டு அவளுக்கு நாம்தான் சப்போர்ட் பண்ண வேண்டும் என்ற சொல்லி அரவணைத்து கொண்டது .அப்படி நடத்தப்பட்டு வரும் பெண்ணுக்கு இப்போது மட்டும் என்ன ஆனது ?  


                      காலையில் அந்த பெண் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்தது  .எனக்கு ஒரு வித குழப்பத்துடன் யோசித்து கொண்டு இருந்தேன் .அப்படி இருக்க கூடாது என்று மனம் பிறாண்ட ,அப்படின்னா வீடியோ கிலிப்பிங்ஸ் பொய்யா என்று புத்தி கேட்டது போராட்டதுடன் வேலை செய்து கொண்டு தொடந்து கொண்டு இருக்க ...
அந்த பெண் பாஸின் அறைக்கு அழைத்து சென்றார்கள் .அதோடு எனது இண்டர்காம் என்னை அங்கு அழைத்தது .அந்த பெண்ணுக்கு ஜூம் செய்யப்பட்ட பதிவுகளை காண்பித்து கொண்டு இருந்தார்கள் .அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தேன்.ஒரு கண் அவளுக்கு அவ்வளவாக தெரியாததால் ,பல முறை காண்பித்தும் அவளால் பார்க்க முடியவில்லை .பிறகு அவள் அந்த கவரை எடுத்த இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சைகை மூலம் கேட்க ...
என்னால் அவள் அப்பொது காட்டிய அந்த சைகை இப்போது கூட மறக்க முடியவில்லை ...

ஆம். நான்தான் எடுத்தேன் .என் வீட்டின் பீரோவில் பத்திரமாக பூட்டி வைத்து இருக்கிறேன்,யாரையாவது அனுப்புங்கள் என்னோடு எடுத்து வருகிறேன் என்றால் சைகையாக .

அங்கிருந்த பாஸ் ,நான் ,ஆஃபிஸ் பாய் அத்தனை பேரும் உறைந்து போனோம் .இவ்வளவு சுலபமாக ஒத்து கொண்ட பெண் ஏன் எடுத்தாள் ?

           அவள் வீட்டுக்கு நானும் போனேன் .மிக சாதரணமாக பீரோவை திறந்து கவரை எடுத்து (அப்போது எடுத்தது போல) தன் மடியில்  செருகி கொண்டு , எங்கள் வண்டியில் வந்து ஏறிகொண்டாள் .அவள் முகத்தையே பார்த்து கொண்டேன்  இருந்தேன் அங்கு எந்த சலனமும் வெளிப்படயாய் இல்லை ஆனால் ஏதோ ஒரு பய ரேகை அவள் முகம் முழுதும் ஆக்கிரமித்து பரவியிருந்ததை உணர முடிந்தது.
இதர்க்கு முன மிக கைதேர்ந்த (Professional ) குற்றவாளிகளை சந்தித்து இருக்கிறேன்.அவர்களோடு சில நாள் கூடவே இருந்தும்  அப்போதெல்லாம் நிறையவே பார்த்து குற்றவாளிகளை புரிந்தும் வைத்திருந்தேன் .அதை ஒரு பதிவாயும் இட்டு இருக்கிறேன் ( http://myowndebate.blogspot.in/2013/05/blog-post_30.html) ஆனால் இவள் முன் அதெல்லாம் நிற்கவில்லை.


கவரை வாங்கி எண்ணி விட்டு அவரிடம் ஒப்படைத்த பின் , பாஸிடம் அவளை வேலையிருந்து உடனே நீக்குவது பற்றி கேட்க தனியே சந்திதேன் அப்போது அவர் சொன்னார்...

இது நம்முடைய தவறு .அவளை எடுக்க தூண்டியது நமது கவன குறைவுதான் . அவள் வேலை செய்யட்டும் என்றார்.

நீ கற்று கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று என் மனம் சொல்லியது .

திங்கள், 7 ஜூலை, 2014

அன்புடன் பாலா சாருக்கு,


வணக்கம் .

                     வெகுநாளாகிவிட்டது உங்களுக்கு கடிதம் எழுதி .  நேற்றைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை .அதர்க்கு பதிலாக  இந்த பதிவை எனது பரிசாக சமர்ப்பித்து கொள்கிறேன் .

                    இன்று கூட  கோர்வையாய் சில எழுத்துக்களாவது எனக்கு வருகிறது என்றாள் அதர்க்கு காரணம் தங்கள் எழுத்தின் மேல் இருந்த தீவிரமும் ,ஆழ்ந்த கவனிப்பும்தான்  .ஒரு முறை உங்களை படிக்கும் ஆர்வத்தில்  எனக்கும் எழுத வருமா என்று சோதிக்கும் சுய ஆராய்ச்சியில் செய்த முதல் முயற்சி வினோதமானது .!

                  ஆம் .நெருங்கிய நண்பரின் முறைப்பெண் 17 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் .தாய் மாமனாகிய எனது நண்பருக்கு அவள் மணம் பேசப்படாமல் மறுக்கப்பட்டு வேறு ஒருவருக்கு மணம் முடிக்க முயற்சி செய்வது அறிந்தவுடன் ,வைகுண்ட ஏகாதசி அன்று தாய் மாமன் சீராக என் நண்பர் வீட்டில் கொடுத்த சேலையை உடல் முழுதும் சுற்றி, சேஃப்டி பின் போட்டுக்கொண்டு,தனது  வீட்டு மனிதர்கள் சகலரும்  வயலுக்கு போன பின், வெகு நேர்த்தியாய் வீட்டு உத்திரத்தில் கயிறு இட்டு தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனாள் .  

                  நண்பரும் அவர் வீடும் இது தாங்க முடியாமல் மனம் உடைந்து, கதறி அழுததை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை .என் வீட்டுக்கு வந்து, நண்பரை ஆறுதல் படுத்த ஏதாவது செய்ய வேண்டும் நினைத்து வெகு நேரம் உங்களின்  ’இரும்பு குதிரைகள்’ படித்து விட்டு ,( அப்போது எனது வழக்கம் - யாருக்காகவாவது கடிதம் எழுத நினைத்தால் கூட சிறிது நேரம் உங்களின் ஏதாவது ஒரு புத்தகத்தின் சில பக்கங்களையாவது  படித்து  விட்டுத்தான் எழுதுவேன்  ) இறந்து போகும் முன் அந்த தங்கம் என்ற பெயருடைய பெண் , நண்பரின் குடும்பத்திர்க்கு ஒரு கடிதம் எழுதி வைத்து அதில் இருந்தால் அதில் என்ன சொல்லி இருப்பாள் என்பதாக ஒரு இரண்டு பக்க கடிதம் எழுதினேன் .அதை அடுத்த நாள் நண்பரை தேடி கொண்டு போய் வீட்டுக்கு வெளியே வர வைத்து ,தெரு விளக்கில் படிக்க வைத்தேன் .சில பாராக்கள் தாண்டவில்லை என்னை பார்த்தார்.மீண்டும் தொடராமல்  நாளை பார்க்கலாம் என்று  சொல்லிவிட்டு ,வீட்டுக்குள் போய் விட்டார் .

                  அடுத்த நாள் மாலை அவர் என் வீட்டுக்கு வந்து ,உன்னை அம்மா பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் வா என்று அழைத்தார் .வீட்டுக்குள் போனவுடன் அம்மாவும் அவரின் தங்கைகள் இருவரும் என்னை வெகு வினோதமாக பார்த்தார்கள்.பெரிய தங்கை முதலில் கண் கலங்கினாள் என்னை விட அவள் ஒரு வயதே இளையவள் .அம்மாவும்   லேசாக கண்கள் கலங்க ,ஏண்டா தங்கத்தை ( இறந்த பெண்ணை ) நீ பார்த்ததே இல்லையே அப்புறம் எப்படிடா அவள் பேசற மாதிரியே அச்சா எழுதின ? என்றதும் அப்போதுதான் புரிந்தது  என் ஆறுதல் கடித  முயற்சியின் விளைவை.அப்புறம் அவர்கள் வீட்டில் நான் ஒரு மகனாக மாறிபோனது அந்த ஒரு கடிதம் தந்த உணர்வுதான் .

                இன்னும் பல நண்பர்கள் கால சூழலில் பிரிந்து ஊர் மாறி பணி புரிய நேரிட்ட போது எங்கள் கடிதங்களே ஆறுதல் .இன்றும் அடுத்த தலை முறையான நண்பர்களின் குழந்தைகள் ,அப்போது நாங்கள் எழுதி கொண்டதை படித்து நட்பாய்,மரியாதையாய்  பார்க்கும்போது மனதுக்குள் உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம் .

                  சார் உங்கள் ஒவ்வொரு எழுத்து மாற்றத்திலும் உங்களோடு இருந்தோம் .எழுத்து தாண்டி சினிமா பிரவேசம் ,ஆன்மீக தொடர்பு அதில் நீங்கள் சொல்லித்தான் அந்த மகான் ராம் சுரத் குமாரை பார்த்து ஆசீர்வாதம் பெற்றோம் .


             போன வாரம் என் தாயின் மறைவுக்கு பின் ,கலைந்து கிடந்த புத்தக அலமாரியை சரி செய்யும்போது உங்களின் முதல் கடிதம் கடிதம் கிடைத்தது.எழுத்தின் மூலம் மனதின் சூட்சுமத்தை உங்களிடமும் அறிவியலின் பிரமிப்பை சுஜாதாவிடமும் கற்று கொண்டு வளர்ந்த நாங்கள் இந்த உலகத்தின் எந்த மூலையிலும் தோற்று போக மாட்டோம் என்பதை கற்று கொண்டோம் .  


நன்றி .

என்றென்றும் அன்புடன் ,
            சுகி.. 

திங்கள், 9 ஜூன், 2014

சம்மர் கிளாஸ் பூதங்கள் !எனது பையன் முதல் வகுப்பு படிக்கும் போது இருந்தே சம்மர் கிளாஸ் அனுப்ப ஆசை என்னை தொற்றி கொண்டு இருந்தது.விசாரித்து  சேர்ப்பதர்க்குள் ஒன்றுஅவன் விடுமறை காலம் முடிந்து விடும அல்லது அவன் நிழலை பயன்படுத்தி  என் ஆத்துக்காரி தனது தாய் வீட்டு சுற்றுலாவை ஆரம்பித்து  விடுவார் .அவர்கள் சொல்லியும் குறை இல்லை .அவனை அந்த ஆண்டாள் போல பள்ளியெழுச்சியிலிருந்து தொடங்கி ப்ராஜெக்ட் யுத்தம் தினமும்  தனியே நடத்தியே  அனுபவிக்கும் கொடுமையிலிருந்து அப்பாடா என்று ஓட கிடைக்கும் வாய்ப்பு இப்போதுதானே வருகிறது !.

               இயற்கைகும் ,பெண்களுக்கும் ஒரு பொதுவான குணம் உண்டு .இருவருமே  தனது இறுக்கங்களை தானே தளர்த்தி  கொள்ளும் மருத்துவம் செய்து கொள்வார்கள் ( நமக்கு நாமே திட்டம் போல ) அதில் ஒன்றுதான்  அம்மா வீட்டுக்கு தஞ்சம் புகுவது .


இந்த வருடம் மூன்றாம் வகுப்பு போகிறான் நிச்சயம் அவனை  கடத்தி  கொண்டு போவதர்க்குள் ஒரு சம்மர் கிளாஸ் பிள்ளையாரை பிடிக்க ஆசைபட்டு ,பிடித்தேன்  .(ஆனால் அது குரங்கான கதை தான் இங்கு சொல்கிறேன் !) அப்படி போன இடத்தில் அதை நடத்தும்  அவர்களுக்கு பிரதான தொழில்  பியூட்டி பார்லர் .ஆனால்   நடனம் ,செஸ் , கேரம் ,படம் வரைதல் நடத்துவது சம்மர் கிளாஸ் மட்டும் என்று சொன்னார்கள் .


        மனைவியையும் பையனும் ஏதோ பேசி செஸ்,ட்ராயிங் முடிவு பண்ண ,பதினைந்து நாள் நடக்கும் இந்த ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மணி நேரம்  என்றும் வகுப்புக்கு தலா  1500 வீதம் 3000 கட்டினோம் .இதில் சேர்க்கை கட்டணம் 500 .வழக்கம் போல இதிலும் பேரம் பேசி, என் இல்லாள் அதை இல்லாமல் செய்து விட்டார்கள்.(டிஸ்கவுண்ட் !) பதினைந்து நாள் வகுப்பு முடிந்தால் சான்று தருவீர்களா என்றதர்க்கு ஆம் என்றூம் சொன்னார்கள் .(காரணம் அவனை வேறு பள்ளிக்கு மாற்றும் நோக்கம் இருப்பதால் அது அவன் 'எக்ஸ்ட்ரா கரிகுலத்திர்க்கு' பயன்படுமே ?) 

1 ஆம் தேதி முதல் வகுப்பு ஐந்து மணிக்கு போனோம் (மாலை 5-7).ஆனால் அடுத்த நாள் வகுப்பு 3.30க்கு என்றார்கள் .ஆனால் அந்த சிறப்பு வகுப்பு எடுக்கும் பெண் தினமும் ஏறக்குறைய 4 மணிக்கு வந்தார் .அது மட்டுமல்ல 5 மணிக்கு முடித்து அனுப்பி விட்டார்கள் .காரணம் கேட்டபோது எதிபார்த்த அளவு சேர்க்கை இல்லாததால் ஒருவனுக்கே வகுப்பு எடுப்பதால் சப்ஜெக்ட்டை கவர் பண்ணி விடுகிறார்களாம் !. (அவர்கள் அப்போது சொன்னது என் சம்பள கவரை காலி பண்ணியது பற்றி போல !)


பதினைந்து நாள் வகுப்புமே இந்த நொண்டி சமாதனங்களுடன் தத்தி ,தத்தி நகர்ந்தது .வழக்கம் போல என்னுடைய இல்லாள் என் புத்தி சாலித்தனத்துக்கு ஆட்டோமீட்டருக்கு சூடு வைப்பது போல வைக்க ,பதினைந்தாம் நாள் அதை நடத்தும் பெண்ணை ஃபோனில் பிடித்து, நேரில் பர்ர்த்தால் ,அப்படியெல்லாம் வாய்ப்பு இல்லையே .என்று மறுக்க நான் விவாதத்திர்க்கு தயாரானேன் .


   ஒரு மணி நேர வகுப்பு அரை மணியாக குறைக்கப்பட்டது.செஸ் போட்டியிலும் சரி ,படம் வரைதலிலும்  நடத்தும் பாடத்தை பற்றி ’பேட்டர்ன்’ இல்லாதது .கிளாஸ் வருவதர்க்கு முன் அவனுக்கு இருந்த செஸ் நகர்த்தலில் எவ்வித பெரிய மாறுதலும் இல்லாதது பற்றி பட்டியலிட்டேன் அதோடு நீங்க்ள் எதிர்பார்த்த அளவு  சேர்க்கை இல்லாவிட்டால் வகுப்பை ரத்து செய்து இருக்கலாம் கட்டிய பணத்தை  ரீஃப்ண்ட் பண்ணி இருக்கலாமே என்றேன் .எல்லாவற்றுக்கும் கொஞ்ச நேரம் மறுத்த அந்த பெண் சரி விசாரிக்கிறேன் ஒரே வார்த்தையில் முடித்தார் .அவர்  சொன்னதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை .இதை விட பெரிய கூத்து அப்படி எடுத்த பதினைந்து நாள் பயிற்சிக்கு ஒரு சர்டிஃபிகேட் கூட தர முடியாது என சொல்லி விட்டார்கள். 


முடிவாக இனி இதை ஒரு பாடமாக வைத்து கொள்ள வேண்டும் என நினைத்து கொண்டேன்  .வீட்டில் குழந்தைகள் இன்றைய பாட திட்ட குறைபாடுகளால் வகுப்புகளிலும் .வீட்டிலும் மாறி மாறி தொடர்ந்து காயப்பட்டு ,விடுமுறை என்றவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் சேட்டை செய்ய, அதை பார்த்து  பொறுமை இழக்கும் பெற்றோர்களின் திண்டாட்டத்தை பயன் படுத்தி ,அவர்களை சம்மர் கிளாஸ் என்ற நாடகம் போட்டு பணம் பண்ணும் பூதங்களாக கிளம்பி வருகிறார்கள் !
         உஷாராக இல்லாவிட்டால் அடுத்த வருடம் வரும் வரை வீட்டில் செய்த தவறுக்கு அகமுடையவரிடம் (மனைவியிடம்தான் ) தினமும் பாடம் கற்று கொள்ள வேண்டிவரும் .உங்களுக்கு சம்மதமா?   

வியாழன், 29 மே, 2014

வாழ்ந்த தெய்வங்கள் (குல தெய்வம்)


              என்னுடைய குல தெய்வம் எது என்பது இங்கு சொல்வது ஏதோ ஒரு சமூகத்தின் அடையாளத்தை எனக்கு தேடுவது போல ஆகிவிடலாம் என்பதால் அதை தவிர்த்து , பயனிக்க ஆசைப்படுகிறேன்.மேலும் இங்கு நாம் சிந்திக்க ஆசைப்படுவது மரபு சார்ந்த ஒரு பண்பாட்டு முக்கியத்துவத்தின் தேடல் பற்றி ..                     என்னதான் கடவுள்  இருக்கு இல்லை என்று விவாதம் வந்தாலும் அதில் தோற்றுப்போவதும் ஜெயிப்பதும் யாரோ ஒரு மனிதரகத்தான் இருக்க வேண்டும் .இதனால் கடவுளுக்கு முகவரி மாறி விட போவதில்லை ஒருவேளை அவர் இருந்தாலும் இல்லாவிட்டலும் .ஆனால் ஒவ்வொருவருக்கும் ஜீன் மூலம் பரம்பரை தொடர்பு இல்லாமல் போவதில்லை .இதை மறுக்க விஞ்ஞானத்தால்  கூட முடியாது . குல தெய்வ வழிபாடு  ஒரு விசித்திரமான முன்னோர்களின் தொடர்பு எற்படுத்தும் களமாக இருக்கிறது என்பதுதான் அதனுள் புதைந்து இருக்கும் அற்புதமான விசயம் .              பிடித்தோ ,பிடிக்கமாலோ  நமது தந்தை தாயுடன் முதல் முதலாக போகும் இடம் அனேகமாக குல தெய்வம் கோவிலுக்குத்தான் .சில பேருக்கு தெளிவாகவே தனது குல தெய்வமான முன்னோர்கள் யார் எனக்கூட தெரியலாம் .மற்றவர்களுக்கு  தாத்தன், பாட்டன், முப்பாட்டன்.. என காலத்தின் பின்னோக்கிய பயணத்தின் முடிவில் இந்த குல தெய்வங்கள்- இடம் பெயர்ந்த ஒரு கூட்டத்தின் ,முந்தைய  யாரோ ஒரு ஆண் அல்லது பெண்ணாக இருப்பார்கள் .எனவே குல தெய்வம் வழிபடும் இடம் முன்னோரின் தொப்புள் கொடி தொடர்புக்கான மையம் . இறந்து போன முன்னோரின் ஆத்ம லயம் நிரம்பிய பாத்திரம்.                     நான் சம்பாதிக்க துவங்கிய சில காலத்தில் ஏதாவது ஒரு அமாவாஸை அல்லது பௌர்ணமி நாட்களில் குல தெய்வம் கோவில் போக துவங்கினேன் .அங்குள்ள பலிபீடங்கள் ,பெண் தெய்வம் ,காவல் தெய்வம் என ஒவ்வொன்றாய் வலம் வந்து சுற்றி பார்த்து விட்டு ஆள் அரவமில்லாத ஒரு இடத்தில் உட்கார்ந்து கொள்வேன் .               இங்கு ,என்ன தெய்வம் வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இங்கு எனக்கு முன் தோன்றிய தாத்தா,பாட்டி, பாட்டன், மூப்பாட்டன்    என முன்னோக்கி போய் ஒருஇடத்தில் முடியுமே , அத்தனை பேரும் இங்கு வந்து இருப்பார்கள் ,அவர்களின் கால் தடம் ,சிந்தனை,சுவாசம்,அவர்கள் தானமளித்த ஏதாவது ஒரு பொருள் ,செய்து வைத்த பல அடி கம்பீர மண் குதிரைகள் அத்தனையும் காலம் வேடிக்கை பார்க்க சாட்சியாய் அலை ரூபத்தில் இந்த இடத்தில் காந்த களமாக உலவி கொண்டு இருப்பதாக நம்புகிறேன்  .


             கொஞ்சம் நானே முட்டாள் தனமாய் இருப்பதாக எனக்குள் சிரித்து கொண்டலும்  ,அவர்கள் வந்து போனது என்னவோ நிஜம் .வாழ்ந்த தெய்வங்கள் வந்து போன இடம் இது என்பது  உண்மை .உயரமான அந்த உருவங்களும் ,கலப்பை பிடித்த உரமேறிய தோள்களும் ,வானம் பார்த்து இயற்கையோடு பேசும் கண்களும் அலை ரூபத்தில் பதிவுகளாய் பரவி கிடக்கும் அபூர்வமான இடமாக இந்த இடத்தையும் ,இதனை சுற்றியுள்ள இடங்களையும் நினைக்கிறேன் .அங்கு போய் திரும்பும் போதெல்லாம் என்னை உரசி யாரோ எனக்கு துணையாக வெகு தூரம்  வருவதாக உணர்கிறேன். இது வெறும் நம்பிக்கையாய் தோணும் .ஆனல் உயிரை தொடும் சந்தோசமாக இருக்கிறதே ?


    

புதன், 23 ஏப்ரல், 2014

சூரிய வணக்கம் - கவிஞர் .வைரமுத்துவுக்கு,


காலையில்  அவசரமாய் சானல்களை தாண்டும்போது சூரிய வணக்கத்தில் கவிதை நெய்யும்  வைரமுத்து  உரையாற்றி கொண்டு இருந்தார் ...


கண்களில் தொலைந்து...

வைரமுத்துவை பார்த்தவுடன் ,நான் அவரின் கண்களில் தொலைந்து போவேன் .அந்த கண்கள் பேசிகொண்டு இருக்கும் வைரமுத்துவை தாண்டி ஏதோ ஒரு ஏகாந்தத்தில் உலாவி கொண்டு இருக்கும் அந்த கட்டற்ற தேடல் பின்னால் போய் தொலைந்து போய்விடுவேன் .அதனால் பலமுறை அவரின் பேசும் வார்த்தைகள் கூட ஒரு வித இடைஞ்சலாக தோன்றும் .ஆனால் இன்று மிக கவனமாக அவரின் பேச்சை கவனிக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து கொண்டேன் .


தடைகல்லை படிக்கல்லாக்கு!

எனது 17 வயதில், இந்திய சோவியத் கலாச்சார அமைப்பின் மூலம் சென்னை சென்ற போது  திண்டுக்கல் கவுன்சிலர் தோழர் முத்துலக்கையன் ஐயா  கவிஞரின்  இல்லத்திர்க்கு அழைத்து சென்று என்னை அந்த அமைப்பின் இளைஞர் அமைப்பின் செயலாளர் என்று அறிமுகப்படுத்தினார்.(வேடிக்கை என்னவென்றால் எனக்கே அது அப்போதுதான் தெரியும்) .எனது தோளில் தட்டி கொடுத்து விட்டு .அப்போது என் கையில் வைத்து இருந்த ’லெனின் வாழ்க்கை வரலாறில்’ தனது கையெழுத்தை இட்டு -”தடைகல்லை படிக்கல்லாக்கு” என்று பொன்மொழியை கவிஞர் பதிவு செய்தார் .நான் பெற்ற  முதல் ஆட்டோகிராப் அதுதான்..


அதே உற்சாகம் .

25 வருடங்களுக்கு பிறகும் அன்று பார்த்த அதே உற்சாகம் ததும்பும் மனிதராகவே  இருந்தார் கவிஞர்.முதலில் அவரிடம் ரசித்தது -சூரிய வணக்கம் பேட்டி எடுப்பவர்கள் இருவரின் ஒவ்வொரு கேள்விகளையும் ரசித்ததோடு ,அதர்க்கு பாராட்டி விட்டு நன்றி சொல்லியே தனது பதிலை தொடர்ந்தார் என்பதுதான் அது .ஒரு கேள்வி திலீப் கேட்கும் போது  பிடிக்காமல் மனப்பாடம் செய்வது பற்றி  கேட்ட போது ஒரு அழகான பதிலை சொன்னார் .
  

மனப்பாடம் சுமையல்ல!

மனப்பாடம் என்பது மதிபெண்ணுக்காக வேண்டாம் புத்தி கூர்மைக்காக பண்ணுங்கள் .புரியவில்லை என்றாலும் பரவாயில்லை காலம் அதை புரிய வைக்கும் .13 வயது வரை நான் புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்த விசயங்கள் இன்று வரை காப்பாற்றி வருகிறது என்றார் .ஓதுவார்கள் கேள்வி ஞானம் மூலம் மனப்பாடம் செய்து சுமந்து கொண்டு வந்த தமிழ்தான் இன்றுவரை நிற்கிறது என்கிறார் .


கேட்க படாத கேள்வி!

கவிதை எழுதும் மனோநிலையை கேட்கும் போது மெல்ல யோசித்தார் .இதுவரை என்னிடம் கேட்க படாத கேள்வி இது .இதர்க்காக பெரிதாய் மெனக்கெடுவதில்லை .ஆனால் யாரையும் காயப்படுத்துவதுமில்லை ,காயப்பட்டும் கொள்வதிலை என்பதாகவும் ,அப்போது எழுந்த் கோபம,எல்லாவற்றையும் தள்ளிவைத்து விட்டு ,தலைக்கு மேல் செல்லும் மேகம்,  அப்படிப்பட்ட மனோ நிலையை காத்து வருகிறேன்.ஒருவேளை நான் எழுதிகொண்டு இருக்கும் போது அருகே பாம்பு ஊர்ந்து போயிருந்தாலும் நான் பார்க்கவில்லை .கவிதை எழுதும்  மன நிலை எப்போதும் இருந்து வருகிறது.ஒரு இடத்தில் கூட நான் எதுவும் எழுத முடியவில்லை என்கிறார் கவிஞர் .கொடைகானல் கீழேயுள்ள மஞ்சள் ஆற்றில் இருந்துதான் தண்ணீர் தேசம் போன்ற நாவல் பிறந்தது என்கிறார் கவிஞர் .


 எதிர்கால பார்வையாக!

தனது கருவாச்சி காவியம் ,தண்ணீர் தேசம்,மூன்றாம் உலகப்போர் அனைத்தும் வெகு நீண்ட எதிர்கால பார்வையாக தண்ணீரின் அவசியத்தை பற்றி சொல்லப்பட்டது என்றார். அவை வெறும் நாவல் அல்ல . எதிர் கால உலகின் 97 சதவிகித தண்ணீர் கடலின் நீர் என்றும் மீதி மூன்றில் 1% நீர் பனியாக உறைந்து கிடப்பதாகவும் ,அடுத்த 1% நீர் தொட முடியாத ஆழத்தில் கிடப்பதாகவும் 1% நீர் குடி நீராக பயன்படுகிறது.


முதல் காதல் கவிதை

உங்கள் முதல் காதல் கவிதை எந்த பெண்ணால் வந்தது என்பதர்க்கு கவிதைக்கு பொய் அழகு என்பது போல அது ஒரு பெண்ணால் வந்தது இல்லை .முதல் கவிதை ஒரு பெண்ணால் வருவது இல்லை  என்பதாக சொல்லி தப்பினார் . குழந்தைகளுக்கு 5 வயதிர்க்குள் தமிழ் கற்பிக்க வேண்டும் .உடல் மட்டுமல்ல 5ல் வளையாத மனமும் 50ல் வளையாது என்றார் .அதோடு பள்ளியில் கண்டிப்பாகவும் வீட்டில் கனிவாகவும் கல்வி சொல்லி தரப்பட வேண்டும் என்கிறார் கவிஞர்.


விருதுகளை பற்றி

உங்கள் விருதுகளை பற்றி சொல்லுங்கள் என்பதர்க்கு ,தனது 6 தேசிய விருதுகளும் ,6 மாநில விருதுகளும் ,மூன்று பல்கலைகழக டாக்டர் பட்டத்தையும் ,இன்னும் பல விருதுகளும் என் வீட்டின் சுவற்றில் மாட்டி கொள்ளவில்லை .பீரோவில் வைத்து பூட்டியிருக்கிறேன் .விருது அறிவித்த 24 மணி நேரம் அந்த சந்தோசம் நீடிக்கும் .அப்புறம் அதை மறந்து விடுவேன் என்கிறார் இந்த கவிதைக்காரர் .


நிகழ் காலத்தை விட்டு

கடைசியாக ஒரு முக்கியமான கேள்விக்கான  அற்புதமான பதிலை தந்தார் .சமீபத்தில் உங்கள் பாடல்களில் விஞ்ஞானம் அதிகம் மேலோங்குகிறதே என்றதர்க்கு ,விஞ்ஞானம் ஏற்று கொள்ளப்பாடாதவன் நிகழ் காலத்தை விட்டு விலகுகிறான் என்றார் 


இன்று உலக புத்தக தினம்.

வாசிப்பவனுக்கு  எப்போது ம் ஒரு குணம் இருக்க வேண்டும்.அது எழுதியவனை அவன் எழுத்தின் மூலம் தன்னுள் பேச அனுமதிக்க வேண்டும் என்பதே அது .  இன்று காலை ஓசோவின் - பதஞ்சலியோக சூத்திரத்தில் நாம் யாரையும் நம்முள அனுமதிக்காததால் எதுவும் நாம் உணர்வதில்லை .இயேசுவோ ,புத்தரோ, நபிகளோ நம்முள் பேச அனுமதியாது நாம் வேறு அவர் வேறாக இருக்கிறோம்.வாசிப்பின் விளைவு அதை வேலை செய்ய அனுமதிப்பது .அதை தவறுவதன் மூலம் வாசிப்பவன்  தவறு செய்கிறான் என்கிறார் .இன்று உலக புத்தக தினம் . இது யோசிக்க வேண்டிய விசயம்தானே ?      

வியாழன், 27 பிப்ரவரி, 2014

சுஜாதா - ஒரு தீராத தேடல்.


  மறைந்த சுஜாதா என்ற ரங்கராஜன் நினைவில் ....

முதலில் மதுமிதா..

                        தமிழ் வாசிக்க  ஆர்வம் பிறந்த போது  முதன் முதலில்   வீட்டில் படிக்க கிடைக்கும் ஒரே வார இதழ் குமுதத்தில் வந்த ’பிரிவோம் சந்திப்போம்’ தொடர்தான்  , ஜெ...வின் படங்களில் மயங்கி ,சுஜாதாவை வாசிக்க துவங்கினேன் ..அதுவும் முதன் முதலில் மதுமிதா - ரகுபதியின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போடும் பகுதி ... என்னவோ செய்தது அந்த எழுத்து ..அதுவரை பாட புத்தகங்கள் கூட அவ்வளவு நட்பாய் என்னை நோக்கி வந்ததில்லை. அந்த மனிதனின் எழுத்து நடையில் எனக்கான ஏதோ ஒன்று இருப்பதாய் பட்டது ...

நினைவு கொள்ள என்னிடம் ..
  
                உடன் பிறந்த சகோதரர் செல்வம் எனக்கான வாசிப்பை கற்று கொடுத்தவர் அவருக்கு மிக பெரிய வாசிக்கும் நட்பு கூட்டம் இருந்ததால், சுஜாதா நாவல்கள் எல்லோரும் படித்த பிறகே என் கைக்கு வரும் .எப்போதுமே எனக்கு அதில் ஒரு கோபம் உண்டு. யாரும் படிக்கும் முன்,வீட்டுக்கு வரும்  எந்த புத்தகம் படிக்க வேண்டும் என்பது .அவரோ குளிக்கும்போது தவிர மீதி நேரமெல்லாம் படிப்பவர் .ஒரு சமயம் படித்து கொண்டே சாப்பிடும் போது ஒரு கரு வண்டை சின்ன வெங்காயம் என்று நினைத்து “நறுக்கெண்டு “ கடித்து கொண்டவர் என்பது சிறு எடுத்து காட்டு .(எந்த உணவையும் குறை சொல்லும் “நல்ல “ பழக்கம் இன்றுவரை இதனால்தான் அவரிடம் வந்தது என்பது வேறு விசயம )அதில் நான் படிக்க முடியவில்லை என்ற விரக்தியின் உச்ச கட்டம் அடைந்தது அதிகம் உண்டு. சரி இதெல்லாம் கிடக்கட்டும் .இன்று சுஜாதாவை நினைவு கொள்ள என்னிடம் இருப்பது என்ன..


சுஜாதாவின் பலம் ..

                    எல்லோரும் சுஜாதாவை நேசிக்க அவர்  எழுத்தில் உள்ள வேகத்தை நேசித்தார்கள்  என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது  .அந்த வேகத்தில் கடக்கும் தூரம் அதிகமிருக்கும் .வாசிப்பவன் அவர் சிறு கதை படித்தால் கூட அதில் ஆழ்ந்து நேரம் போவது தெரியாமல்  ஏதோ டைம் மெசினின் உட்கார்ந்து பயனிப்பது போல காணாமல் போவதுண்டு . சுஜாதா உலக இலக்கிய வாசிப்பு இருந்ததால், எதை பற்றி சொல்ல நினைத்தாலும் அதில் ஒரு தீர்மானம் இருந்தது .அந்த நேர்த்தியும் லாவகமும் மிக பல பிரபலங்களிடமும் இருந்தாலும் அவர்களுக்கு பிடித்த பகுதிகளில் கொஞ்சம் தாமதமாக கடப்பது உணர முடியும்.

              அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதில் யாருக்கும் (அவரை விமர்சித்து பிரபலம் தேடி கொள்ளுபவர்களுக்கு கூட ) மாற்று எண்ணம் இல்லை . அவரின் அந்த  கெட்டியான எழுத்து நடை வாசிப்பவனை ஒரு மந்திரகோல் போல வேலை செய்ய வைத்தது . அவரின் எழுத்தின் சிறப்பு குணத்தில் ஒன்று அவர் எழுத்து , எப்போதும் அறிவுரை என்ற பகுதியை நோக்கி நகர்ந்ததில்லை .


தீராத தேடல்..

                அவரின் சுய சரிதை , இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்ற எழுத்து பயணத்தில் அவரின் நடையே பலம் .அந்த ஒன்றை வைத்தே அத்தனை இடத்தை நம்மை கவனிக்க வைத்தவர் .எழுத்தின் தொலைவை அதன் மூலம் அருகே கொண்டு வந்தவர் .உலக இலக்கியத்தின் வாசல் போல படிப்பதெல்லாம் படைப்புகளாக்கினார் .அவரின் அந்த உயரம் வாசிப்பவனிடத்தில் கிடைத்த உணர்வினால் வந்ததே  என்பதுவும் ,எழுத்தின் உயரத்தை பற்றிய அவருக்குள் இருந்த  தீராத தேடலுமே என்பதாகவும் கொள்ளலாம்  .தொலைந்து போகவில்லை ... 

               வாசிப்பவனுக்காக எழுத்துக்கள் மாறும் போது அங்கு பக்கங்கள் அத்தனையும் பிழைதான் .எழுத்து காத்து இருக்கிறது தன்னை படைத்து  கொள்ள ஏதோ ஒரு எழுதுகோளுக்காக .அதில் ஒன்று சுஜாதாவின் எண்ணம் என்ற எழுதுகோள் .அவர் வாசிக்கப்பட்டார்.தனக்காக இது படைக்க பட்டதாக வாசிப்பவன் நினைத்து கொண்டான் .அந்த உணர்வு வாசிப்பவனுக்குள் இன்றும் தொலைந்து போகவில்லை ... ஒவ்வொரு புத்தக கண்காட்சிகளும் அவரை முன்னிறுத்திதான் பெருமை சேர்த்து கொள்கின்றன .
                இன்றும் கூட .மனைவிக்கு தெரியாமல் கணவன்மார்களும் கணவனுக்கு தெரியாமல் மனைவிமார்களும்  சுஜாதாவை வாசிக்கும் போது ரகசியமாய் சிரித்து கொள்வதுண்டு .அந்த சூட்சுமமான ரசணை உணர்வை ஒருவேளை இளமையை கடந்தவகள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.


எழுதியதையெல்லாம்  படிக்கலாம்...

                     நல்ல வேளை பெசன்ட் நகர் மின்சார மயானத்தில்,2008 பிப்ரவரி 29ஆம் அவரை எரித்து விட்டார்கள். (அதில் கூட லீஃப் வருடம்) .புதைத்து இருந்தால் அவரை தோண்டி எடுத்து எந்த பேனாவால் இதையெல்லாம் எழுதினார் என்று அவர் எழுதியதையெல்லாம்  படிக்காமல் ,இதை மட்டுமே  சிலர் கேட்க வாய்ப்பு இருந்து  இருக்கலாம் .. (பேனாவில் அவர் இருக்குபோதே எழுதுவதை நிறுத்தி விட்டார் என்பது வேறு விசயம் !) 
   


நினைவின் பகுதியின் முடிவாக...பேக் டு த  ஃபெவிலியன் ..
 சுஜாதாவின் மறைவுக்கு  கமல்ஹாசன் சொல்லியது. 

               தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவது போல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது, சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதை விட, கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்குச் சொல்லும் ...

 

   

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பாலுமஹேந்திரா - ஏகலைவன்களின் பிதா மகன் .


பார்வையால் கட்டி போடபோகின்றான் !

1951 வருடத்தில் மே மாதம் 20 ஆம் தேதியில் தனது 13 வது வயது பிறந்த நாளை  இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழியில் கொண்டாடும்  தனது மகனுக்கு ,Kodak Eastman, Baby Brownie கேமிரா வாங்கி தந்த  பாலநாதன்  என்ற கணித ஆசிரியருக்கு அப்போதே தெரிந்திருக்கிறது தன்னுடைய பையன் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் தென்னிந்திய மாநிலம் நான்கையும் தனது காமிராவின் பார்வையால் கட்டி போடபோகின்றான் என்று.


செல்லுலாயிடு சித்திரக்காரன் .

ஆனால் Sir David Lean என்ற ஆங்கில இயக்குனரின் The Bridge on the River Kwai படபிடிப்புக்கு வேடிக்கை பார்க்க போன  பாலநாதன்  மகேந்திரனனுக்கு  டேவிட் லீனின் அந்த ஆளுமை பிடித்து போனது .ஒரு பக்கம் கேமிரா ஆக்சன் என்கிறார் ,இன்னொரு பக்கமிருந்து ரோல்லிங் என்று பதில் குரல் வருகிறது .அடுத்து லீன் ஒரு கையசைவில் மழை என்கிறார்  மேஜிக் போல மழை கொட்டுகிறது என்பதெல்லாம் பார்த்த பாலு மஹேந்தினுக்கு தான் யார் என்பதையும்  தனது பூமி அவதாரம்  சினிமா என்ற செல்லுலாயிடு சித்திரக்காரன்  என்பதை  உணரவைத்தது .இவ்வளவு அருமையான பதிவுகளை இயற்கை இவர் மூல வருங்காலத்தில் தரப்போகிறது  என்பதை செல்லுலாயிடு (அதை மேம்படுத்தி) கண்டுபிடித்த,  கிறிஸ்டியன் ஷோன்பின் கூட அறியமாட்டார் .


செல்லுலாயிடு கல்லூரி

தனது செல்லுலாயிடு உருவாக்க கனவை 1966 வரை மனதுக்குள் உருவேற்றிய பாலுமகேந்திரா என்ற கலைஞன் தன் அங்கீரத்தை பெற்று கொண்டது Film and Television Institute of India, பூனாவில்தான் .ஆனால் அந்த திரைப்பட கல்லூரி அப்போது அறியவில்லை தான் அனுப்பும் இந்த பாலுமகேந்திரன் என்ற செல்லுலாயிடு சித்திரக்காரனுக்கு ஐந்து தேசிய விருதுகளும் , மூன்று மாநில மற்றும் ஃப்லிம்பேர் விருதுகளும் இரண்டு நந்தி விருதுகளும் காத்து  இருக்கின்றன என்பது. அது மட்டுமல்ல ஒளிப்பதிவுக்கலைக்கு 1971 ல் தங்கபதக்கம் பெற்றது ஒரு மாணவனுக்கு என்பதுதான் தெரியும் அது ஒருசெல்லுலாயிடு கல்லூரிக்கு வழங்கப்பட்டது என்பதை .ஏகலைவன்களின் பிதா மகன்

ஆம். அவரின் அற்புத வார்ப்புகள்தானே பாலா,ராம், வெற்றி மாறன், சீமான் சுகா போன்றவர்கள் தனது உதவி இயகுனர்களை தினமும் சிறு கதைகள் படிக்க வைத்து ,அந்த கதையின் ஆக்கத்தின் பின் புலம் ,அதன் பாத்திர படைப்புகள் அதன் மன ஓட்டங்களின் மனோதத்துவம் ,உரையாடல்கள் ,ஆரம்பம் ,முடிவு என்ற பல அம்சங்களை பிரித்து அதை எழுதி வர சொல்லுவாராம் . அப்படி ஒவ்வொரு சிறுகதையில் கவனித்து உருவான உதவி இயக்குனர்கள்தான் இன்றைய இயக்குனர்கள் பலர் ஆனால் அவரின் படங்களை  பார்த்து உருவான கட்டை விரலை இழக்காத இயக்குனர் ஏகலைவன்கள் ஏராளம்.


ஒரு படைப்பாளியின் பார்வை

 பாலுமகேந்திரா என்ற கலைஞன் தன்னை ஒரு ஒளிபதிவாளராகவும் ,இயக்குனராகவும் ,கதாசிரியராகவும் ,எடிட்டராவும் ,ஒரு நடிகராகவும் பல் அவதாரம் எடுத்து கொண்டாலும்  இந்த எல்லாத்துறைகளிலும் உள்ளே தந்து கலையின் ஒரு உயிரோட்டத்தை பிண்ணி படர்ந்து இழையோட செய்வதை தவிர்க்கவில்லை .ஒரு படைப்பாளியின் பார்வை ஆழமான மன உணர்வை வெளிக்கொண்டுவரும் முயற்சியாகும் .அதுதான் படைப்பாளியை வேறுபடுத்தி காட்டும் திறமை என்பதை சொல்லியதோடு அதை தனது ஒவ்வொரு ஆக்கங்களிலும் செய்து காட்டினார் .

அளவு கோள் 

சினிமாவை அதன் கோணத்தில் பார்க்க கற்று கொள்பவர்களால் மட்டும்தான் அதை புரிந்து கொள்ள முடியும் என்பதை அவர் மிகவும் நம்பினார் .இது ஒரு சூத்திரம் .ஆம் . யார் வேண்டுமானாலும் விமர்சனம் எழுதலாம் என்று சில பேர் கிளம்பியதன் விளைவுதான் அப்படி பார்க்க படாத பல சிறந்த திரை படங்கள் இன்றும் பல ஆச்சர்யங்களை விதைத்து விட்டு போய் இருக்கிறது .நல்ல படங்களுக்கு மோசமான படங்களுக்கும் அளவு கோள் அது பார்க்க படும் விதத்தில்தான் என்பது மிக முக்கியமான நிதர்சனம்.உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்தவர்!

பாலு மகேந்திரா என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்வில் எப்போதுமே சாபம் போல பெண்களுக்கும் அவருக்குமான உறவில் இருந்து வந்து இருக்கிறது  உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது என்று அவர் அழுந்த புதைந்து பேசியும் வருந்தி இருக்கிறார் .தனது மூன்று மனைவிகளான அகிலா,ஷோபா(ஷோபா. தற்கொலை செய்து கொண்டார்) ,மௌனிகா வரை எல்லோரையும் பற்றியும் அவர்களின்  பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை. சொந்த வாழ்க்கையை புத்திபூர்வ மாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்ததால் ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்ததாகிவிட்டது .ஆனால் என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான் என்றும் சொல்லி இருக்கிறார்  அந்த மறைந்த கலைஞர் பாலு மகேந்திரா. கொட்டித் தீர்த்துக்கொண்டேன்...

பொதுவாக கமல் உட்பட நிறைய அற்புதமான கலைஞர்கள் சொல்வது கலைஞனின் வாழ்கையில் எட்டி பார்க்காதீர்கள் .தலையிடாதீர்கள் என்கிறார்.அது உண்மைதான் .அது உரிமைதான் .ஆனால் அதே கலைஞன் தன்னுடய கோபதாபங்களை காட்டாமல் அல்லது வெளிப்படுத்தி கொள்ள தன் கலை எனும் ஆயுததின் வழியாக  வெளிப்பட்டுட்தானே நிற்கிரான் .அதர்க்கு அவரே சொன்ன காட்சி -   மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நாம்  பார்த்த, கமலை விட்டு ஸ்ரீ தேவி ரயில் பயணிக்க தொடங்குபோது அழுது புரள்வாரே! (அதர்க்கு கமல் தேசிய அவார்டு வாங்கி கொண்டார் ) அது ஷோபா  மீது வைத்து இருந்த   நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன் என்கிறார் .

               தான் பெற்றதை மற்றவர்க்கு சொல்லி தர வேண்டும் நினைத்து , அவர் தொடங்கிய ”சினிமா பட்டறை: ஒரு முழுமையான கலைஞனின் நன்றி  உணர்வின்  வெளிப்பாடு .தான் கற்று கொண்ட இடத்திர்க்கு செய்த நன்றி . தான் பெற்றதை விட்டு செல்லும் அடையாளம் .


கடைசி ஆசை .
திரைப்படங்களுக்கான ஒரு ஆவணக் காப்பகம் அமைப்பதன் அவசியத்தை கடந்த மூன்று வருடமாக பேசிவந்தார் பாலு மஹேந்திரா மேலும் அதர்க்கான  பாதிச் செலவை அரசும், மீதிச் செலவை திரையுலகமும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் கூட திட்டம் கூறினார்.ஆனால் யாரும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர் .வருவாயை மட்டுமே பார்க்கும் சினிமாதுறை இதை எப்போது செய்யும் ? வந்து அழுது விட்டு போன கலைஞர்களின் மனதுள் இனி பஞ்ச பௌதீகங்களாய் பிரிந்து நிற்க்கும் அவரின் ”அதுவே” கலந்து செயல் படுத்தட்டும் .


https://www.youtube.com/watch?v=EWO-yNnWdFA

அடையாளாம் காணும் குணம் .

அற்புதமான அந்த படைப்பாளியின் மனதை எனக்கு மிக அருகிலே கொண்டு வந்தது எனது பள்ளி தோழன் சுகுமாரின்   கேரிகேச்சர் ( ஒரு வித ஓவிய முறை... அது ஒரு வித்தியாமான வெளிப்பாடு. மனிதரை, அவரின் குணங்களை, செயல்பாடுகளை தனியாக, மிகைப்படுத்தி காட்டும் ) ஓவியமுறையில், பாலு சாரை வரைந்து பாலு சாரின்  உதவி இயக்குநர் சுகா மூலம் அனுப்பி வைக்க அதை பார்த்து விட்டு அவர் ,சுமார் ஒரு நிமிடம் பேசிய வீடியோ பதிவை முக நூலில் பதிவிட்டு இருந்தார் .ஒரு கலைஞன் எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும் என்ற அந்த மறைந்த கலைஞனின் ,மறக்க முடியாத  அடையாளாம் காணும் குணம் என்னை மீளாத ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது .அன்றிலிருந்து மிக தீவிர ரசிகனாக பாலு சாருக்கு ஆகிவிட்டேன் .


அவரை வழியனுப்ப வந்த  திரைப்பட  உலகம் ,அவரின் நினைவுகளை  பாதுகாக்க விட்டு சென்ற ”தலைமுறைகளின் ’ வளர்ச்சியை கொண்டாடினால்  குறைந்த பட்சம் அந்த கலைஞனை ஆவணக் காப்பகமாக ஆக்கமாலேயே பாதுகாக்கலாம்.