வியாழன், 27 பிப்ரவரி, 2014

சுஜாதா - ஒரு தீராத தேடல்.


  மறைந்த சுஜாதா என்ற ரங்கராஜன் நினைவில் ....

முதலில் மதுமிதா..

                        தமிழ் வாசிக்க  ஆர்வம் பிறந்த போது  முதன் முதலில்   வீட்டில் படிக்க கிடைக்கும் ஒரே வார இதழ் குமுதத்தில் வந்த ’பிரிவோம் சந்திப்போம்’ தொடர்தான்  , ஜெ...வின் படங்களில் மயங்கி ,சுஜாதாவை வாசிக்க துவங்கினேன் ..அதுவும் முதன் முதலில் மதுமிதா - ரகுபதியின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போடும் பகுதி ... என்னவோ செய்தது அந்த எழுத்து ..அதுவரை பாட புத்தகங்கள் கூட அவ்வளவு நட்பாய் என்னை நோக்கி வந்ததில்லை. அந்த மனிதனின் எழுத்து நடையில் எனக்கான ஏதோ ஒன்று இருப்பதாய் பட்டது ...

நினைவு கொள்ள என்னிடம் ..
  
                உடன் பிறந்த சகோதரர் செல்வம் எனக்கான வாசிப்பை கற்று கொடுத்தவர் அவருக்கு மிக பெரிய வாசிக்கும் நட்பு கூட்டம் இருந்ததால், சுஜாதா நாவல்கள் எல்லோரும் படித்த பிறகே என் கைக்கு வரும் .எப்போதுமே எனக்கு அதில் ஒரு கோபம் உண்டு. யாரும் படிக்கும் முன்,வீட்டுக்கு வரும்  எந்த புத்தகம் படிக்க வேண்டும் என்பது .அவரோ குளிக்கும்போது தவிர மீதி நேரமெல்லாம் படிப்பவர் .ஒரு சமயம் படித்து கொண்டே சாப்பிடும் போது ஒரு கரு வண்டை சின்ன வெங்காயம் என்று நினைத்து “நறுக்கெண்டு “ கடித்து கொண்டவர் என்பது சிறு எடுத்து காட்டு .(எந்த உணவையும் குறை சொல்லும் “நல்ல “ பழக்கம் இன்றுவரை இதனால்தான் அவரிடம் வந்தது என்பது வேறு விசயம )அதில் நான் படிக்க முடியவில்லை என்ற விரக்தியின் உச்ச கட்டம் அடைந்தது அதிகம் உண்டு. சரி இதெல்லாம் கிடக்கட்டும் .இன்று சுஜாதாவை நினைவு கொள்ள என்னிடம் இருப்பது என்ன..


சுஜாதாவின் பலம் ..

                    எல்லோரும் சுஜாதாவை நேசிக்க அவர்  எழுத்தில் உள்ள வேகத்தை நேசித்தார்கள்  என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது  .அந்த வேகத்தில் கடக்கும் தூரம் அதிகமிருக்கும் .வாசிப்பவன் அவர் சிறு கதை படித்தால் கூட அதில் ஆழ்ந்து நேரம் போவது தெரியாமல்  ஏதோ டைம் மெசினின் உட்கார்ந்து பயனிப்பது போல காணாமல் போவதுண்டு . சுஜாதா உலக இலக்கிய வாசிப்பு இருந்ததால், எதை பற்றி சொல்ல நினைத்தாலும் அதில் ஒரு தீர்மானம் இருந்தது .அந்த நேர்த்தியும் லாவகமும் மிக பல பிரபலங்களிடமும் இருந்தாலும் அவர்களுக்கு பிடித்த பகுதிகளில் கொஞ்சம் தாமதமாக கடப்பது உணர முடியும்.

              அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதில் யாருக்கும் (அவரை விமர்சித்து பிரபலம் தேடி கொள்ளுபவர்களுக்கு கூட ) மாற்று எண்ணம் இல்லை . அவரின் அந்த  கெட்டியான எழுத்து நடை வாசிப்பவனை ஒரு மந்திரகோல் போல வேலை செய்ய வைத்தது . அவரின் எழுத்தின் சிறப்பு குணத்தில் ஒன்று அவர் எழுத்து , எப்போதும் அறிவுரை என்ற பகுதியை நோக்கி நகர்ந்ததில்லை .


தீராத தேடல்..

                அவரின் சுய சரிதை , இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்ற எழுத்து பயணத்தில் அவரின் நடையே பலம் .அந்த ஒன்றை வைத்தே அத்தனை இடத்தை நம்மை கவனிக்க வைத்தவர் .எழுத்தின் தொலைவை அதன் மூலம் அருகே கொண்டு வந்தவர் .உலக இலக்கியத்தின் வாசல் போல படிப்பதெல்லாம் படைப்புகளாக்கினார் .அவரின் அந்த உயரம் வாசிப்பவனிடத்தில் கிடைத்த உணர்வினால் வந்ததே  என்பதுவும் ,எழுத்தின் உயரத்தை பற்றிய அவருக்குள் இருந்த  தீராத தேடலுமே என்பதாகவும் கொள்ளலாம்  .



தொலைந்து போகவில்லை ... 

               வாசிப்பவனுக்காக எழுத்துக்கள் மாறும் போது அங்கு பக்கங்கள் அத்தனையும் பிழைதான் .எழுத்து காத்து இருக்கிறது தன்னை படைத்து  கொள்ள ஏதோ ஒரு எழுதுகோளுக்காக .அதில் ஒன்று சுஜாதாவின் எண்ணம் என்ற எழுதுகோள் .அவர் வாசிக்கப்பட்டார்.தனக்காக இது படைக்க பட்டதாக வாசிப்பவன் நினைத்து கொண்டான் .அந்த உணர்வு வாசிப்பவனுக்குள் இன்றும் தொலைந்து போகவில்லை ... ஒவ்வொரு புத்தக கண்காட்சிகளும் அவரை முன்னிறுத்திதான் பெருமை சேர்த்து கொள்கின்றன .
                இன்றும் கூட .மனைவிக்கு தெரியாமல் கணவன்மார்களும் கணவனுக்கு தெரியாமல் மனைவிமார்களும்  சுஜாதாவை வாசிக்கும் போது ரகசியமாய் சிரித்து கொள்வதுண்டு .அந்த சூட்சுமமான ரசணை உணர்வை ஒருவேளை இளமையை கடந்தவகள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.


எழுதியதையெல்லாம்  படிக்கலாம்...

                     நல்ல வேளை பெசன்ட் நகர் மின்சார மயானத்தில்,2008 பிப்ரவரி 29ஆம் அவரை எரித்து விட்டார்கள். (அதில் கூட லீஃப் வருடம்) .புதைத்து இருந்தால் அவரை தோண்டி எடுத்து எந்த பேனாவால் இதையெல்லாம் எழுதினார் என்று அவர் எழுதியதையெல்லாம்  படிக்காமல் ,இதை மட்டுமே  சிலர் கேட்க வாய்ப்பு இருந்து  இருக்கலாம் .. (பேனாவில் அவர் இருக்குபோதே எழுதுவதை நிறுத்தி விட்டார் என்பது வேறு விசயம் !) 
   


நினைவின் பகுதியின் முடிவாக...பேக் டு த  ஃபெவிலியன் ..
 சுஜாதாவின் மறைவுக்கு  கமல்ஹாசன் சொல்லியது. 

               தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவது போல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது, சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதை விட, கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்குச் சொல்லும் ...

 

   

1 கருத்து:

  1. ஒரு தீராத தேடல் உம்முள்ளும் இருப்பதை இந்த எழுத்துக்கள் உணர்த்துகின்றன எனக்கு ! வாழ்க ! வளர்க !

    பதிலளிநீக்கு