இப்போதெல்லாம் பள்ளி வயதில் பாடம் படிக்கும் பிள்ளைகள் தியான வகுப்புக்கு வருகிறார்கள் .பயிற்சி ஆரம்பத்தில் அவர்கள் எதையும் சொல்வதில்லை.பதினைந்து நாள் உடற் பயிற்சித் தியானம் பயின்று செல்லும்போது, தங்கள் அனுபவ உரைகளில் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் பற்றியே பெரும்பாலும் பேசுகிறார்கள் . என்ன ஆச்சு இந்த வயதில் ? ஓடியாடி உலகை மறந்து பட்டாம் பூச்சியாய் பவனி வர வேண்டிய வயதில் இவர்கள் மனத்துக்குள் என்ன தீராத வலி ?
மாலை ஆறு மணிக்கு மேல் வந்தால் போகாத அழையா விருந்தாளிகள் போல, 40 வயதுக்கு மேல் வரும் அலுவலகப் பணியில் சுமை, குழந்தைகளின் பள்ளிப்படிப்பு பற்றிய அக்கறையில் குழப்பம் , கட்ட வேண்டிய எதிர்காலச் சேமிப்போ அல்லது லோன் பணம் கவலை, நெருங்கிய சொந்தங்களுக்குச் செய்முறை செலவு என்ற புதுப் புதுப் பூதங்கள்.எப்போதுமே ஃபேண்ட் பாக்கெட் பர்சில் இருக்கும் தேய்ந்து போன காசில்லாத ஏடிஎம் கார்டுகளும், முன்ன மாதிரி அவர் இல்லை .ஒரு வாளித் தண்ணி கூட அவராலத் தூக்க முடியல,மூச்சு வாங்றார் என்று சைடுப் பார்வையில் சொல்லும் மனைவியின் கிண்டலடிக்கும் விமர்சனம்... அப்போது வர வேண்டிய திட்டமிட முடியாத தனியாளாய் நிற்கும் போது மண்டைக் குடைச்சலில் வருவதுதான் மன அழுத்தம்,மன உளைச்சல் என்ற வேண்டாத வரங்கள் !
செய்தி : கடந்த ஏப்ரல் 28 ஆம் நாள் துரதிருஷ்டமான பிற்பகலில் ராஜஸ்தான் கோட்டாப் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கீர்த்தித் திரிபாதி என்ற 12 வகுப்பு முடித்த மாணவி பொறியியல் படிப்புப் படிக்கப் பிடிக்காததால் 5வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். இத்தனைக்கும் JEE மெயின்ஸ் தேர்வில் அவள் பொதுப் பிரிவினருக்குத் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்கள் 100 க்கு 144 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்.
அவள் தன்னை மாய்த்துக்கொள்ளும் முன் எழுதி அவள் வைத்துச் சென்ற அறையில் இருந்து எடுக்கப்பட்ட ஐந்து பக்கக் கடிதம் பேசுகிறது ..
தான் விரும்பும் சட்டம் அல்லது ஆங்கில இலக்கியப்பாடம் படிக்க முடியாமல் நீங்கள் சூழ்ச்சிகொண்டு என் மீது அறிவியல் பாடத்தைத் திணித்தீர்கள். நான் உங்கள் மகிழ்ச்சிக்காக அறிவியல் பாடத்தை (astrophysics and quantum physics ) தேர்வு செய்தேன்.ஏன் இந்தப்பாடம் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களிடம் கேட்டதற்கு , Arts was for people who weren’t smart enough to get into Science. For lazy aimless people என்று அவர்கள் சொன்னதாகக் குறிப்பிடுகிறாள் கீர்த்தி.
அதோடு அவள் விடவில்லை.அவள் ஒரு கோரிக்கை வைக்கிறாள்... தயவு செய்து இதே மாதிரி சூழ்ச்சிகளைப் பதினொன்றாவது படிக்கும் என் தங்கையிடம் செய்யாதீர்கள்...” என்பதோடு , நான் JEE மெயின்ஸ் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை .
எனக்கு என்னையே பிடிக்காமல் போய்விட்டது. நான் என்னை வெறுக்கத் துவங்கிவிட்டேன். எந்த அளவிற்கு என்றால் என்னையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு. என் தலையில் கேட்கும் சத்தம், என் இதயத்தின் வெறுப்பு, என்னைப் பைத்தியமாக்குகிறது. என்று தற்கொலையின் விளிம்பில் நுனியிலிருந்து வேதனையோடும் தன் மனதின் வலியிலிருந்து நிரந்தரமாக விலகும் முன் எழுதியிருக்கிறாள் .
எனது உறவில் ஒருவருக்குத் தனது மகனிடமிருந்து அலைபேசி அழைப்புத் தனக்குப் பொறியல் கல்வி தொடர விரும்பவில்லை எங்காவது போகப்போகிறேன் என்று அவன் கல்லூரி வாசலிலிருந்து பேசியிருக்கிறான் .பதறிப்போய் அவர் அவனை அலைபேசியிலேயே பேசி ஆறுதல் படுத்தித் தான் பணிபுரியும் ஊருக்கு அழைத்துச் சில நாள் தங்கவைத்து அனுப்பியிருக்கிறார். இதை அவர் சொல்லும் போது நான் கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில்,
எங்கள் உறவில் என்ஜீனியரிங் முடித்தவர்கள் யாரும் இல்லை. .
பெற்றொர்கள் கனவும் உழைப்பும் பிள்ளைகளின் நலனுக்குத்தான் .புரிந்தோ புரியாமலோ இதை மறுப்பதிற்கில்லை.தாங்களை விட அவன் கை நிறையச் சம்பாதித்துப் பெரிய ஆளாக வரவேண்டும் .தன் சமூகத்திலோ ,தன் உறவிலோ யாரும் படிக்காத படிப்புப் படிக்க வேண்டும்.இன்னார்க் குழந்தை புத்திசாலித்தனமாகப் படிக்க வைத்து பெரிய ஆளாக்கி இப்போ அவன் அமெரிக்காவிலோ லண்டனிலோ வசிக்கிறான் என்று யார் வீட்டு விசேசத்திலோ சத்தமாகச் சொல்லிக்கொள்ள ஒரு பெருமை .யாரோ நாழு பேர் தனக்கு வேலை வெட்டி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பதான நினைவுடனே இருப்பதான இந்த நோய்தான் அத்தனைக்கும் காரணம் .அவனவனுக்கு ஆயிரம் வேலை நம்மைப்பார்க்க ஏது நேரம் ? இவர்கள் இப்படி..
அதே சமயம் அடுத்து இதைப் படிக்கலாம் என்ற கூர்மையான அறிவோடு +2 படித்த மாணவர்களுக்கு இல்லை .பத்தாதற்குச் சீ க்குப் பின்னாடி ஈ என்று தப்பாகச் சொல்லித் தர பத்து நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் ஆசையைத் தூண்டுகிறது .அவனுக்குத்தெரிந்தது எல்லாம் முதல் மதிப்பெண் எடுத்துக் கொடுக்க வேண்டிய ஜெராக்ஸ் மிசின் தான் என்பதே.படிப் படி என்று அவன் பெயரையே மறக்கும் அளவுக்குத் திணிப்பு.நிகழ்காலத்தில் அவனுக்குக் கொடுக்கும் வலி எதிர்காலத்துக்கு நல்லது என்ற தத்துவம்.நம் படிப்போ எந்த ஒரு மனிதனின் உள்ளார்ந்த திறமையை வெளிக்கொணராதக் குருடாய் இருக்கிறது .எது ஒழுக்கம் , எது அன்பு ,எது திறமை என்ற அடிப்படையைத் தொலைத்து விட்டுப் பணத்துக்காகப் பிச்சையெடுத்துக்கொண்டு இருக்கிறது !
நாம் தேர்வு செய்த ஆட்சிகள் ஆதாரம் இல்லாத கொள்கைகளைப் பிடித்துத் தொங்குகிறது .கட்சியை வளர்ப்பதா மதத்தை வளர்ப்பதா எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டுப் பணக்காரக் கும்பலுக்கு வால் பிடிப்பதா என்ற கவலையில் இருக்கிறது . எட்டும் தூரத்தில் இருக்கும் நாடோடு பேச திராணி இல்லாமல் எவனோ ஒரு வியாபார உலக அண்ணனிடம் நம்மை அடமானம் வைக்க விமானச் செலவு விரயம் செய்கிறது .இலவசப் போதையில் கையேந்தும் படலம் ஒருபக்கம் ,எப்படி வேண்டுமானாலும் முன்னேறலாம் என்ற குருட்டுத் தைரியத்தோடு மக்கள் பட்டப் பகலில் பூட்டை உடைக்கிறார்கள் .கொலை செய்கிறார்கள் .
இதில் எங்குப் போய்க் கொண்டு இருக்கிறது நம் மனித குலம்… உலகின் மூத்தகுடி என்ற நம் பாரம்பரிய திசை காணாமல் போயிற்றா ? மக்கள் கையில் முன்னெப்போது இல்லாத அளவுக்கு பணம் புழங்குகிறது .ஆனால் ஒவ்வொருவரும் அன்பைத் தொலைத்து விட்டு அனாதையாய் சாவை நோக்கி நமக்குத் தெரியாமல் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறோம்...
17 வயதானக் கீர்த்தித் திரிபாதி தன் ஒருத்தி வாழ்வின் முடிவுக்குக் மட்டும் எழுதவில்லை .இங்குள்ள ஒவ்வொரு இல்லங்களுக்கும், சமூக நடத்தைகளுக்கும் ,நாட்டின் மற்றும் உலகத்தின் போக்கிற்கு எச்சரிக்கை விட்டுச் சென்று இருக்கிறாள் .
அவள் இறந்த இடத்தில், ரத்தம் இன்னும் ஈரமாகத்தான் இருக்கிறது…