சனி, 19 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் (கடிதம் ) - இரண்டாவது பகுதி

 பெண்களின் பார்வைக்கான அர்த்தம் முழுவதுமாக கண்டுபிடித்து விட்டால் மனிதனின்   உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளால் சொல்ல முடியும் சாத்தியம் அப்போதுதான் வரும் என்பதை அன்று அவள் பார்வையில்லிருந்துதான் நான் உணர்ந்துகொண்டேன் ” 

தேவன்
நாள் குறிப்பு  14-02-1989
.

            தேவன் தனது நாட்குறிப்பிலிருந்து   தனக்கு, உமாவுடனான தன் முதல் சந்திப்பை எழுதிருந்ததை இங்கு தந்து இருக்கிறேன் .சில சமயம் ஒன்று சேர்ந்த காதலை விட பிரிந்த காதலிலே அதிக அனுபவமிக்கதாகவும், ஆழமான செய்திகளை விட்டுச் சென்று இருக்கிறது. தேவனின் காதல் சந்திப்பு ....

             
 மார்கழி இதமான இதமான குளிர் நிறைந்த மாதம் . பூமி  சூரியனிடம் பொய்க் கோபம் கொண்டு வடக்குப்பக்கம் முகம் திருப்பிக்கொண்டு ஊடலுடனே  மிக அருகில் சுற்றிக்கொண்டு இருக்கும் காலம் இது .இந்த மாதிரி ஒரு மார்கழி மாதத்தில்தான் அவளை முதன் முறையாக சந்தித்தேன் . என் இளமை தனது நீண்ட நினைவு பயணத்திற்கு முன்னுரை எழுத  தொடங்கிய காலம் அதுதான் .

              அதிகாலை பனிக்குளிரில் வீட்டுக்கு அருகிலிருக்கும் முருகன் கோவிலின் ஜெயராம் அர்ச்சகருக்கு உதவி புரிந்து கொண்டு இருந்த காலம் அது .அந்த கோவிலின் உள்புறத்தின் கர்ப்ப கிரகத்தில் நின்ற நிலை  முருகனுகனுக்கும் எனக்கும் சில அடிதூரம் வரை என் சேவை இருக்கும் .நான் பிராமணன் இல்லாததால் என் எல்லைக்கோடு அவ்வளவுதான்.அந்த முருகனை நான் எப்போது பார்த்தாலும்  என்னைப் பார்த்து மட்டும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதாகவே தோணும்.அங்குதான் உமாவை முதல் முதலில் சந்தித்தேன் அவளுக்கு 11 வயது எனக்கு 14.

                 எத்தனைதான் காதல் விபத்துக்கள்  வாழ்க்கையில் சொல்லி வந்த காதல் அனுபவங்கள்  சொல்லாமல் வந்த காதல் அனுபவங்கள் என்று  இன்று வரை சந்தித்தாலும் முதன் முறையாக என் உடலில் உள்ள  72000 நாடிகளில் எனக்கு காதல் நாடியை அறிமுகப்படுத்தியது அவள்தான் .இத்தனைக்கும் அவளும் நானும் ஒருவரை ஒருவர் அந்த மார்கழி மாதத்திற்கு பிறகு பல முறை அதே கோவில் சந்தித்து கொண்டாலும் சிரித்ததுகூட இல்லை . ஆனால் முதல் முறையாக இருவரும் பேசிக்கொண்டது இப்போதும் நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது .

                 
     மார்கழி மாத கடைசி நாள் பூஜை பெண்கள் அதிகம் மதிப்பு தரும் நாள் .ஆண்டாளுக்கு நாரயணனைப்போல தனக்கும் இஷ்டப்பட்ட முகம் தெரியாத ஒரு காதல் கணவனுக்கு இறைவனிடம் கோரிக்கை வைக்கும் கடைசி நாள்.கோவில் உள் வளாகத்தின் முன் பக்கத்தில்  சுமார் இருபது பெண்கள் மட்டுமே அமர்ந்து பூஜை செய்ய முடியும் .அதனால் மற்ற பெண்கள் கோவிலைச்சுற்றி அமர்ந்தும் வெளியே உள்ள பந்தலில் பூஜை செய்வார்கள் .அதனால் கோவில் முன் பகுதியில் முருகனை தரிசித்துகொண்டே பூஜை செய்யும் அந்த இடத்திற்கு கடைசி நாளில் போட்டி அதிகம்.அன்று கோவிலில் வேலை அதிகம் மண்டகப்படியாளார்கள் அதிகம் வருவார்கள். அன்றைய இலவச பூஜைப்பொருள் இலவசமாக குவிந்து விடும் .மற்றைய நாளில் அவரவர்களே விளக்கு பூஜைக்கான பொருள் கொண்டு வருவார்கள் ஆனால் கடைசி நாளில் .விளக்குக்கு ஊற்றப்படும் எண்ணை முதல் திரி பழம் தாம்பூல பொருள்கள் அனைத்தும் இலவசம் .அன்றைய விளக்கு பூஜைக்கான நல்லலெண்ணை செலவு முழுவதுவும் என் வீட்டில் அம்மா ஏற்றுக்கொள்வார்கள் .

முன்னமே நான் சொன்னது போல அன்று முன் வரிசையில் இடம் பிடிக்க
போட்டா போட்டி இருப்பதால்  பூஜை ஆரம்பிக்கும் அதிகாலை 5 மணிக்கும் முன் கோவிலின் வெளிக்கதவை  பூட்டி வைத்து இருப்போம்.அன்று நான் கோவிலுக்கு 3 மணிக்கே போய்விட்டேன் . நான் மடப்பள்ளியில் பஞ்சாமிர்தம் தயார் செய்ய நாட்டுச்சக்கரையை அண்டாவுக்குள் கொட்டிக்கொண்டு இருந்தேன் . சுமார் 3.30 இருக்கும் யாரோ வெளியேயுள்ள இரும்புக்கதவை கதவை ஆட்டுவது போல சத்தம் கேட்டது கூடவே சாமி ,சாமி என்ற ஒரு பெண்ணுக்குரிய குரலும் கேட்டது.
 அர்ச்சகர் ,கிச்சப்பு ( எனக்கு அவர் வைத்த செல்லப்பெயர் அது ) யார்ன்னு ? பாரு என்றார் .
 அப்போது தெரியாது அப்படி ஒன்று நடக்கப்போகிறது என்று .ஆம் அங்கு அவள் தட்டியது கோவில் வாசல் கதவு இல்லை என் இளமையின் கதவை !
வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு உமா நின்று இருந்தாள் .
சாமி இல்லையா ? கேட்டாள்
உள்ள இருக்கார். 
கதவை திறந்து விடுங்கள் எனக்கு முன் பக்கம் கோளம் போட வேண்டும் என்றாள் .
எனக்கு புரிந்து விட்டது .
முன்னுரிமை பெற திருட்டு வழி .’அட்வான்ஸ் ரிசர்வேசன்’.
இல்லை சாமி இப்போது திறக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார். நாழரைக்கு மேல்தான் திறக்க சொல்லியிருக்கிறார் என்றேன் .
கோவில் வாசல் குழல் விளக்கில் அவள் முகம் ஏமாற்றம் அடைந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
மீண்டும் அவள்
 சாமி எப்போ வருவார் ? .
குரலில் ஏமாற்றம் சுரத்தை குறைத்து இருந்தது
உள்ளேதான் இருந்தார்.
இல்லை வெளியே போயிருக்கிறார்.
அவர் அப்படிதான் ஏற்கனவே சொல்லச் சொல்லியிருந்தார்.

அவள் எதுவும் சொல்லவில்லை.சட்டெனெ திரும்பி பிடியிறங்கி நடக்க தொடங்கினால்..
அது எனக்கு என்னவோ செய்தது !

ஏனோ தெரியவில்லை என்னை அறியாமல் பூட்டியிருந்த கதவு வழியாய்  பார்த்தேன் . நிலவு ஒளியிலும், சாலையோரத்து தெருவிளக்கின் வெளிச்சத்திலும், முழங்கால் வரை குட்டைப் பாவடை இடமும் வலமும் அசைய அவள் மெல்ல நடந்து போய்க்கொண்டு இருந்தது தெரிந்தது .

அது எனக்கு குமுத்தில் சுஜாதாவின் ’பிரிவோம் சந்தித்தோம்’தொடருக்கு ஜெ... வரைந்த , மதுமிதாவின் ஓவியத்தை ஞாபகப்படுத்தியது !
அவள் திரும்பி பார்ப்பாள் என்று மனது சொல்லியது .
தெரு முனை வரை அவள் போய் திரும்புவது வரை  தொடர்ந்து பார்த்தேன் . அவள் திரும்பி பார்க்கவேயில்லை .
  
நான் திரும்பி மடப்பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

நான் திரும்பி வந்த பின்னும், எனக்கு என்னையே ஒரு புது உணர்வுக்குள் இழுத்தது.

வேலையில் என் கை செயல் பட்டுக்கொண்டு இருந்தாலும் மனம் அந்த குட்டைப்பாவாடையில் தொங்கிக்கொண்டு, நடந்து கொண்டே இருந்துகொண்டு இறங்க மறுத்தது.

அப்போது பளிச்சென்று ஒரு யோசனை தோணியது .உடனேயும் அதைச் செய்து விட்டேன்.

அது ...

மணி நாழரைக்கெல்லாம் கோவில் கதவைத்திறந்து விட்டோம் .அப்போதே ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளே வரக்காத்துக் கொண்டு இருந்தார்கள். அத்தனை பேரிலும் அவளை மட்டும் என் கண் தேடியது 
யாரோ என் தோளைத்தொட்டார்கள் .

தம்பி, இந்த இடத்தில்  யாரோ கோளம் போட்டு உமா என்று எழுதியிருக்கிறார்கள் ,அருவார்களா? 
கேட்டவர் தினமும் கோவிலுக்கு வரும் கோவில் ’ட்ரஸ்டியின்’ மருமகள் .
ஆமா அக்கா ,ஒருத்தங்க வந்து கோலம் போட்டு, சொல்லிட்டு போயிருக்கிறார் என்று பொய் சொன்னேன் .  
நாங்கள் வந்த பின்னால்தானே கதவு திறந்தீர்கள் என்று அவர் கேட்கவில்லை .
ஒரு வேளை இன்னொரு பொய் சொல்ல விடமால் எனக்கு அங்கு இருந்த முருகன் காப்பாற்றி விட்டார் போல ! 

ஒருவேளை அப்படிக் கேட்டு நின்று கொண்டு இருந்தால் அதற்குள் கோவிலுக்கு பின் புறம் இருக்கும் இடமும் பறி போய் ,பிறகு வாசலுக்கு வெளியே வந்து பந்தலுக்கு அடியில் பூஜை செய்ய வேண்டி நிலை வரலாம் என அவர் யோசித்து கேட்காமல் போயிருக்கலாம் !  
எதற்கும் பந்தலுக்கு வெளியே பார்ப்போம் என்று வெளியே வந்தேன்.
இரண்டாவது வரிசையில் பளிச்சென மஞ்சள் பட்டுப்பாவாடையில் உட்கார்ந்து இருந்தாள் . 

எப்படிச் சொல்வது ?
நல்ல வேளை ,அவளுக்கு அருகில் உட்கார்ந்து இருக்கும் சின்னப்பெண் என்னை கவனித்தது.
சைகை செய்து பக்கத்திலிருக்கும் உமாவைக் காட்டிக் கூப்பிடச் சொன்னேன். 
நிமிர்ந்து பார்த்தவள் ,உடனே எழுந்து வந்தாள் . 
உள்ளே முதல் வரிசையில் கோவிலுக்குள் கைகாட்டி உங்களுக்காக இடம் போட்டு வைத்தேன் என்றேன் .
முதலில் அவளுக்கு புரியவில்லை . 
நீங்கதான் 4 மணிக்கே உள்ளே இடம் போட வந்தீர்களே என்று சொல்லி முடிப்பதற்குள் புரிந்து கொண்டாள் .
என் அந்த மிகப்பெரிய சேவைக்கு ஒரு நன்றி சொல்வாள் என்று எதிர்பார்த்தேன் .
ஆனால் அவள் உடனே திரும்பி தன்னிடம் போய் குத்து விளக்கை தூக்கி வந்து நான் சொன்ன இடத்தில் விளக்கை வைத்து விட்டு  உட்கார்ந்தாள் .
அந்த இடத்தில் கோவில் கோலப்பொடியில் சின்னதாய் அவள் பெயரை நான் எழுதிவைத்ததை பார்த்து இருப்பாளா ?
பூஜை முடித்த பின் ஏதாவது சொல்லிவிட்டுப் போவாள் என்று என்னை சமாதானப்படுத்திகொண்டு ,மறந்து போனேன் .  
ஆனால் பூஜை முடிந்த பின்னும் அவளைப் பார்க்க முடியவில்லை .


ட்டு வருடம் கழித்தபின்  ஒரு நாள் ..
என் நண்பரின் தங்கை, எனக்கு ஜூனியர்  . தமிழ் இரண்டாமாண்டு படித்துக்கொண்டு இருந்தார். எனது நூலகத்திலிருந்து அவருக்கு ’ரெஃபரென்ஸ்’  புத்தகம் கேட்டு இருந்தார். வாங்கிப்போக வரும்போது கூடவே ஒரு பெண்ணையும் கூட்டி வந்து எங்கள் காம்பவுண்டுகு வெளியே நிற்க வைத்துவிட்டு வந்து இருந்திருக்கிறார்.என்னிடம் சொல்லவில்லை.

(எனக்குத்தெரிந்து ஒரு பெண் ஒரு ஆணுடன் என்னதான் பழகியிருந்தாலும் தன்னை விட அழகான பெண்ணை தான் பழகிய ஆணுக்கு அறிமுகப்படுத்துவதேயில்லை. இது நம்பிக்கையின் வேறு கோணமா ? சுய பாதுக்காப்பா ? என்பது தெரியவில்லை !)

புத்தகம் வாங்கிவிட்டு நண்பரின் தங்கை  திரும்பி போகும் போது எதேச்சையாக உயரம் குறைவான எங்கள் கம்பவுண்டுக்கு வெளியே நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்தேன் .ஆனால் என்னைஅவள் பார்க்கவில்லை.
அந்த முகம் …

அந்த முகம் ....
வெகு நாளாய் என் நினைவின் ஆழத்தில் கிடந்த ஏதோ ஒரு  முகத்துடன் ஒத்துப்போவது போல இருந்தது !


மன்னிக்கவும்,
 மீண்டும் தொடர்கிறது.....

செவ்வாய், 1 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் ( கடிதம் ) !


உலகில் ஆண்களை விடவும் பெண்கள்தான் காதல் கடிதங்கள் எழுதுபவர்களில் மிகப்பெரிய சமர்த்தர்களாக இன்னும் இருக்கிறார்கள் . நேரில் பேசுவதைப்போலத் தன் மன உணர்வுகளை அப்படியே எழுத்தின் மூலம் கொட்டித்தீர்த்து விடுகிறாகள்.இதில் மிகப்படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்றெல்லாம் இல்லை எல்லோரும் தட்டி எறிகிறார்கள் .கல்யாணத்திற்கு முன் பெண்களால் எழுத்தப்படும் காதல் கடித்தங்களில்தான் ”ரொமான்ஸ்” அதிகம் வழிந்து ஓடுகிறது இதில் கி.மு 2200 ல் சுமேரிய நாட்டின் உயர்நிலைப் பாதிரியான இன்னானா முதல் இரவின்போது கணவனுக்காகக் கல்லால் செதுக்கப்பட்ட உலகின் முதல் காதல் (கவிதைக்) கடிதம் மட்டும் சேர்த்தியில்லை. 

நமக்கு வந்த காதல் கடிதங்களை விடவும் அடுத்தவர்களுக்கு வரும் காதல் கடிதங்கள்தான் உலகில் அதிகம் பேசப்படுகிறது.அமெரிக்காவின் அபிகெயில் ஆடம்ஸ் (Abigail Adams ) இங்கிலாந்தின் மேரி வோல்ஸ்டோன்க்ராஃப்ட் (Mary Wollstonecraft ) நெப்போலியன் (Napoleon Bonaparte ) முதல் ஜிம்மி ஹென் (Jimi Hendix ) வரை அனைத்துக் காதல் கடிதம் ரசங்களும் மிதக்கும் உணர்ச்சிகள் மிகுந்த வார்த்தைகள் எல்லோருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது .ஆனால் உங்கள் நண்பருக்கு வந்த காதல் கடிதம் படிக்க மனசு வருமா ? வராது எனக்கும் வரவில்லை.ஆனால் அந்த நண்பர் தேவன் விடவில்லை . 

நண்பர் தேவன் என்னை விடச் சில வயது மூத்தவர்.நிறைய படிப்பவர்.எழுதுபவர். மார்கழி மாத ஆண்டாளைத் தோழிகள் எழுப்புவதை மாற்றி அந்த நாரயணனே எழுப்புவதாகத் தனது காதலிக்காக யோசித்து ”மார்கழிப்பெண்ணே” என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் . நிறைய யோசிப்பவர்.நாங்கள் படித்த புத்தகம் பார்த்த திரைப்படம் எதிலுமே நாங்கள் பார்க்காத கோணத்தில் தன் பார்வையைப் பதிவு செய்பவர் .அவருக்கும் – உமா என்ற பெண்ணுக்குமானக் காதல் காலத்தில்தான் நான் உடன் இருந்திருக்கிறேன் . 

உமா முதல் இவர்கள் காதல் காலம் தொடங்கிய முதல் வருடத்தில் செமஸ்டர் லீவுக்குத் திண்டுக்கல்லு அருகில் இருக்கும் தனது பெரியப்பா ஊருக்குப் போய் 28 நாள் தங்கியிருந்தார் அப்போது தேவனுக்கு அங்கிருந்து எழுதிய கடிதங்கள் 23 (இது முதல் வருட செமஸ்டர் விடுமுறை மட்டும்தான் அடுத்த வருடம் எத்தனை என்பது எனக்கு ஞாபகம் இல்லை).ஒரு முறை அவர் வீடுக்குப் போனபோது மிகவும் கவனமாக ஒரு கோடு போடாத பேப்பரில் மிகக் கவனமாக ஒவ்வொரு வரியாக அடிக்கோடிட்டுப் படித்துக்கொண்டு இருந்தார்.என்ன என்று கேட்டு விட்டேன் .நான் செய்த மிகப்பபெரிய தவறு அதுதான் .மனிதர் படித்துகாட்டத் தொடங்கிவிட்டார்.. 

இது நாகரீகம் இல்லை அடுத்தவங்கக் குளியறைக்குள் எட்டிப்பார்ப்பது பொல என்று மறுத்த போது தேவன் விடவில்லை .இது என் குளியறைதான் என் நண்பன்தான் என்று சொல்லியிருந்தாக் கூடப் பரவாயில்லை . அவர் சொன்னப் பதில் அந்தப் பெண் உமா அவருக்கு எழுதிய கடித வரிகளை விடவும் ஒரு வித ரொமான்ஸாக இருந்தது. இது உனக்குப் படித்துக்காட்டும் போது எனக்கு ஒரு கவிதையைப் படிப்பது போலச் சுகமாக இருப்பதாக உணர்கிறேன்.இந்த உலகத்தில் எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சத்தமாக ஏதோ ஒரு மலை மீது ஏறி கத்துவது போல ஒரு கர்வமாக இருக்கிறது .இதனல் உமா மீது என் காதல் இன்னும் எனக்குள் இறுகுகிறது.என்றார்ப் பதில் சொல்லாமல் அந்தத் தவறை (அடுத்தவர் கடித்தை படிப்பதை ) கேட்டேன் ! 

ஒரு முறை அவருக்குக் கடிதம் தபாலில் வந்தபோது அவருடன் வீட்டிலிருந்தேன் .அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு மாதிரி இருந்தது.வந்து இருந்த அந்தத் தபால் கவரை பிரிக்காமல்உள்ளங்கயில் வைத்து ஒரு முறை அதன் கனத்தைக் கண்மூடி உள்வாங்கினார்.சில நிமிடம்தான் வேறு எதுவும் யோசிக்காமல் அந்தக் கவரை தனது மேஜை ட்ராயரில் வைத்து மூடி வைத்து விட்டு என்னோடு வெளியே கிளம்பிவிட்டார்.எனக்குப் புரியவில்லை .கேட்டு விட்டேன் .ஒரு வேளை நான் இருப்பதால் படிக்கவில்லையா என்றதும் இல்லை வேறூ காரணம் என்று கண் சிமிட்டினார்.

அவள் என்ன எழுதியிருக்கிறாள் என்பதை என் மனம் தறிகெட்டுத் தவிப்பதோடு படித்தாள் அவள் என்ன சொல்லவந்தாள் என்பது புரியாதுப் போகலாம் .என்னுள் அந்த எதிர்பார்ப்புத் தீர்ந்துப் போன பிறகு ஓவ்வொரு வரியாய்ப் படிக்கும் போது மிகப்பெரிய சுகம் வருகிறது .அது மட்டுமல்ல என்ன எழுதியிருப்பாள் என்று அதைப் படிக்காமல் அந்தச் சுகமான வலியோடு சும்மா இருக்கும் பிடிவாதமாக இருப்பதும் ஒரு விதமான சுகம் என்றார். அது சரி இந்த அனுபவம் நமக்கு ஏற்பட்டால்தானே ? 

ஆனால் எனக்கும் ஒரு காதல் கடிதம் வந்தது நான் சில ஆண்டுகள் புதுவையில் இருந்த போது என் அண்ணியின் ஒன்றுவிட்ட சகோதரி ஒரு காதல் (!) கடிதம் எழுதியிருந்தாள் .அனேகமாக உலகத்தில் எழுதப்பட மிக மோசமான தமிழ் கொலைக்கடிதம் அதுவாகத்தான் இருக்க வேண்டும் ! இன்னானா   கணவனுக்காகச் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட காதல் ( கவிதை) கடிதத்தை வாசித்து விளங்கிக்கொள்ளவாவது 58 வருடங்கள் சுமேரிய மொழியில் நிபுணர்களான Muazzez Longso, Hatice ஆகியோருக்கு ஆகியிருக்கு.ஆனால் என்னால் அந்தக் கடித்தத்தைக் கடைசிவரைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. பொதுவாக நமக்குப் பிடித்தவர்கள் எழுதிய கடிதங்களில் பிழைகள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள்.ஆனால் கடிதம் முழுதுமே பிழையாக இருந்தால் என்ன செய்வது ? அப்படியும் முயற்சிப் பண்ணி எழுத்துக்கூட்டிப் படிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் போது வீட்டு சொந்தக்காரர் ( House Owner ) பையன் ஒட்டுக்கேட்டுவிட்டு அவன் அக்காவிடம் சொல்லியிருக்கிறான் (அந்தப் பெண் சுமாராகத்தான் இருக்கும் ) ஒரு முறை நேரில் பார்த்தப் போது அங்கிள் உங்களுக்கு ’தமிள்’ வராதா என்று கேட்டது நக்கலாக .என் தலைவிதியை என்ன சொல்வது? 

சரி நான் அடுத்தவர் காதல் கடிதம் படித்த மோசமான பெருமையைப்பற்றிச் சொல்லவா இந்தப் பதிவுக்குள் வந்தேன் அதுவும் பதிவின் தலைப்புக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கும் விசயத்திற்கும் சம்பந்தமில்லாதது போலப் படுகிறதா ? இல்லை .

நண்பர் தேவனுக்கு உமா எழுதிய அத்தனை கடிதங்களும் ஒரு நாள் திருடு போய் விட்டது .திருடுப் போய் விட்டது என்பதை விடத் தேவனின் நெருங்கிய நண்பரால் திட்டமிட்டுக் களவாடப்பட்டு விட்டது ! 

 அது ஏன் என்பதைச் சொல்ல நேரம் போதவில்லை.அடுத்த பதிவில் தேவனின் அந்த நண்பர் ஏன் களவாடினார் என்பதைச் சொல்ல வருகிறேன் .