செவ்வாய், 11 நவம்பர், 2014

விழிகள் ஊமையல்ல ...




                நேற்று மதியம் நூலகத்திர்க்குள் இருக்கும் போது பாஸிடம் இருந்து ஃபோன்.எங்கே இருக்கீங்க என்றார் ?அப்படி கேட்பதில் ஒரு லயம் என்னை பொய் சொல்ல வைத்தது .நேற்று நீங்கள் கொடுத்த கேஸ் கவரை காணோம் ஆபீஸ் வாங்க என்றார் .
                  அவர் அடிக்கடி தவறுதலாக வைத்து விடுவது வழக்கம் இருந்தாலும் உடனே எனக்குள் அவர் அறையில் மாட்டி இருந்த கேமிரா ஞாபகம் வந்தது .ஆனால் அதன் கண்ட்ரோல் இன்னொரு பாஸ் வைத்து இருப்பதால் அவர் வரும்வரை காத்து  இருந்து ,இரவு பதிவுகளை பார்த்தால் அந்த அறையின் ஒளி அமைப்பு உதவவில்லை .சரி காலை செக்யூரிட்டி போன பின்னால் ,வழக்கம் போல கூட்டி சுத்தம் செய்யும் பெண் வரும் நேரத்தில் ,பதிவுகளை அலசினோம் ஆராய தொடங்கினோம் .தேடல் ,இரவு சுமார் 10 மணி நெருங்கும்போது ..

          

              சந்தேகப்பட்டது உறுதியானது .அந்த பெண் கூட்ட செல்வதுவும் ,அப்போது அந்த டேபிளுக்கு கீழ் உள்ள அந்த கேஸ் கவரை பார்த்த உடன் , எடுத்து தனது மடியில் செருகி கொண்டதை பதிவு காண்பித்தது. என்னால் நம்ப முடியவில்லை .மீண்டும் மீண்டும் பல முறை ஜூம் செய்து பார்த்தோம்  வெகு நேரம் என்னால் நம்ப முடியவில்லை .காரணம் அந்த பெண் பல ஆண்டுகள் நம்பிக்கைகுரியவளாக வேலை செய்து வருகிறாள் .இதர்க்கு முன் பல தருணங்களில் தவறுதலாக அதே பாஸ் ரூமில் போனஸ் சமயத்தில் வைத்து சென்ற பண கட்டுகளை ஆபீஸ் பாயிடம் ஒப்படைத்தவள் . அது மட்டுமல்ல அவளை வேலையில் எங்களிடம் நீடித்து வைத்து இருப்பதர்க்கு ..

             அவள் இரண்டும் காதும் கேட்காதவள் மட்டுமல்ல வாய் பேச முடியாதவள் . இதர்க்கெல்லாம் மேலாக மாலை கண் நோய் பாதிப்பில் இருப்பவள் .முப்பத்தி ஐந்து இருக்கும் அவளின் கணவன் பல வருடங்களுக்கு முன் அதிக குடியால் இறந்து போய் விட்டான் .என்னை போல பலரையும் பார்த்து நீ சிகரெட் குடிப்பியா ,தண்ணி அடிப்பியா  செய்யாதே என்று சைகையால் சொல்வாள் .அனேகமாக எங்கள் ஆபிசில் அவளிடம் அதிகம் அவள் பாஷையில் பேசுவது நானாகத்தான் இருக்கும் .  எங்கள் அலுவலகத்தை விட வேறு ஒரு இடத்திலும் இதே வேலை பார்த்து வாழ்வை நகர்த்தி வருபவள் அவள் .ஒரு சமயம் அவள் வேலை சரியாக செய்யவில்லை என்ற மிக புகார் செய்தார்கள் அதனால் பெரிய எதிர்ப்பை அந்த பெண் சந்திக்க வேண்டி இருந்தது ,ஆனால் எங்கள் நிர்வாகம் பொறுத்து கொண்டு அவளுக்கு நாம்தான் சப்போர்ட் பண்ண வேண்டும் என்ற சொல்லி அரவணைத்து கொண்டது .அப்படி நடத்தப்பட்டு வரும் பெண்ணுக்கு இப்போது மட்டும் என்ன ஆனது ?  


                      காலையில் அந்த பெண் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்தது  .எனக்கு ஒரு வித குழப்பத்துடன் யோசித்து கொண்டு இருந்தேன் .அப்படி இருக்க கூடாது என்று மனம் பிறாண்ட ,அப்படின்னா வீடியோ கிலிப்பிங்ஸ் பொய்யா என்று புத்தி கேட்டது போராட்டதுடன் வேலை செய்து கொண்டு தொடந்து கொண்டு இருக்க ...
அந்த பெண் பாஸின் அறைக்கு அழைத்து சென்றார்கள் .அதோடு எனது இண்டர்காம் என்னை அங்கு அழைத்தது .அந்த பெண்ணுக்கு ஜூம் செய்யப்பட்ட பதிவுகளை காண்பித்து கொண்டு இருந்தார்கள் .அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தேன்.ஒரு கண் அவளுக்கு அவ்வளவாக தெரியாததால் ,பல முறை காண்பித்தும் அவளால் பார்க்க முடியவில்லை .பிறகு அவள் அந்த கவரை எடுத்த இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சைகை மூலம் கேட்க ...
என்னால் அவள் அப்பொது காட்டிய அந்த சைகை இப்போது கூட மறக்க முடியவில்லை ...

ஆம். நான்தான் எடுத்தேன் .என் வீட்டின் பீரோவில் பத்திரமாக பூட்டி வைத்து இருக்கிறேன்,யாரையாவது அனுப்புங்கள் என்னோடு எடுத்து வருகிறேன் என்றால் சைகையாக .

அங்கிருந்த பாஸ் ,நான் ,ஆஃபிஸ் பாய் அத்தனை பேரும் உறைந்து போனோம் .இவ்வளவு சுலபமாக ஒத்து கொண்ட பெண் ஏன் எடுத்தாள் ?

           அவள் வீட்டுக்கு நானும் போனேன் .மிக சாதரணமாக பீரோவை திறந்து கவரை எடுத்து (அப்போது எடுத்தது போல) தன் மடியில்  செருகி கொண்டு , எங்கள் வண்டியில் வந்து ஏறிகொண்டாள் .அவள் முகத்தையே பார்த்து கொண்டேன்  இருந்தேன் அங்கு எந்த சலனமும் வெளிப்படயாய் இல்லை ஆனால் ஏதோ ஒரு பய ரேகை அவள் முகம் முழுதும் ஆக்கிரமித்து பரவியிருந்ததை உணர முடிந்தது.
இதர்க்கு முன மிக கைதேர்ந்த (Professional ) குற்றவாளிகளை சந்தித்து இருக்கிறேன்.அவர்களோடு சில நாள் கூடவே இருந்தும்  அப்போதெல்லாம் நிறையவே பார்த்து குற்றவாளிகளை புரிந்தும் வைத்திருந்தேன் .அதை ஒரு பதிவாயும் இட்டு இருக்கிறேன் ( http://myowndebate.blogspot.in/2013/05/blog-post_30.html) ஆனால் இவள் முன் அதெல்லாம் நிற்கவில்லை.


கவரை வாங்கி எண்ணி விட்டு அவரிடம் ஒப்படைத்த பின் , பாஸிடம் அவளை வேலையிருந்து உடனே நீக்குவது பற்றி கேட்க தனியே சந்திதேன் அப்போது அவர் சொன்னார்...

இது நம்முடைய தவறு .அவளை எடுக்க தூண்டியது நமது கவன குறைவுதான் . அவள் வேலை செய்யட்டும் என்றார்.

நீ கற்று கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று என் மனம் சொல்லியது .