சனி, 25 ஜனவரி, 2014

சினிமா என்ற சாதனம் புத்தகமாகட்டும்.


                    இப்போது திரை அரங்குகளில்  இரண்டு தமிழ் படங்கள் ஓடிகொண்டு இருக்கின்றன .ஒன்று இன்னும் சில காலம் ஓடும் மற்றொன்று ஓடாது .அது ஏன் என்பது எல்லாருக்கும் புரிந்த விசயம்தான் ! ஆனால் விசயம அதுவல்ல .நம் கதாநாயகர்கள் எப்படி எதிரே வரும் கெட்டவர்களை எலும்பு முறிய நொறுக்கி பிழிகிறார்கள் நியூட்டனின்  விதிகளையும் தவிடு பொடியாக்கி தியேட்டரில் படம் பார்க்கும் வரு ரசிகர்களின் உடையெல்லாம் ரத்தம் தெரிக்க சண்டை போட்டு திருப்பி அனுப்புகிறார்கள் .இதெர்க்கெல்லாம் ஏதோ காரணம் சொல்லுகிறார்கள். இருக்கட்டும் . இத்தனையும் பண்ணும் அவர்கள் ஒரு கதாநாயகியை கண்டவுடன் அத்தனை வன்முறை அஸ்திரங்களை தூக்கி எறிந்து விட்டு வெட்கப்படுவது எப்படி ? இதில்,இப்படி  இதை யோசிக்கும் இயக்குனர் மற்றும் நடிகர்கள் சேர்ந்து யாரை திருப்தி படுத்துகிறார்கள் அல்லது யாரை ஏமாற்றி கொள்கிறார்கள் ?


                              பொதுவாகவே வெளிப்படையாக ‘டுயல் ரோல்’(Dual role ) கொண்டவன் சந்தேகமில்லாமல் பைத்தியகாரன்தான் .(ஆனால் உண்மையில் நாம் பல பேர் உள்ளுக்குள் அன்னியனை(Muliple persionality) விட மோசம் என்பது வேறு விசயம் .)ஆனால் நம் கதாநாயகர்கள் ஒருபக்கம் காதலையும் இன்னொறு பக்கம் வன்முறையும் எப்படி ஒரே தோளில் சுமக்கிறார்கள் ? நடைமுறையில் உள்ளதைதான் நாங்கள் காட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தண்ணி அடிக்கும் காட்சிகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக காட்டுவதும் ,வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டு திரிவதும், கட்டாயமாக காதலித்தே தீர வேண்டும் என்ற கதா நாயகிகளும்..


 அதிலும் கதாநாயகன் காதலுக்கு சம்மதித்து விட்டால் எந்த சம்மந்தமும் இல்லாமல் வெட்கத்தை அவிழ்த்து  விட்டு -  தன்னுடைய காதலியை அல்லது மனைவியை எத்தனை  பேர் இப்படி ஆபாசமாக எல்லாரும் பார்க்க ஆடுவதர்க்கு சம்மதிக்கிறார்களாம் ?இருப்பதை காட்டுவதாக சொல்லிகொண்டு அலையும் இவர்கள் இன்னும் எத்தனை சமாதானங்கள் சொல்ல போகிறார்கள்?   
  


                     கதை என்ற கட்டத்திர்க்குள் ஒரு காலத்தில் பொழுது போக்கை மையமாக்கினார்கள் ,அப்புறம் சமூக அக்கறை  ,அரசியல் , உண்மை சம்பவம் ,அறிவியல் ,நவீனம் ,என்று அந்த கட்டதிர்க்குள் காய் நகர்த்தி விட்டு  இப்போது காதல் என்ற விரசத்தையும் ,சண்டை என்று ரத்த சகதியையும் ,எதார்த்த பாதைகளை தூக்கி எறிவதுமே தனது கொள்கை என்று கடை பரப்பி வருகிறார்கள் .ஒரு காலத்தில் இதெல்லாம் திரும்பி பார்க்கும் போது இவர்களே சகித்து கொள்வார்களா என்பது புரியவில்லை .யார் இதை விரும்புகிறார்கள் என்று அவர்கள் சொன்னாலும் தனது குழந்தைகள் ரெஸ்ட்லிங்தான் (wrestling) மட்டுமே பார்க்க ஆசைபட்டால் அது நார்மல் இல்லை என்று அவர்களே ஒத்து கொள்வார்களா மாட்டார்களா ? தெரியவில்லை .   


              எது எப்படியோ வரும் தலைமுறை மேலும் கெட்டு போக அற்புதமான சினிமா என்ற சாதனத்தை குறை பிரசவ குழந்தைகளாய் மாற்றி எதிர்காலத்தை ஊனமாக்காதீர்கள் .அன்று கருப்பு வெள்ளையிலும் ,ஒரே கேமிராவால் ஒரே இடத்தில் தனக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்று ஒத்து கொண்டு திரைப்படம் எடுத்த இயக்குனர்களை மனதில் வைத்து கொண்டு படம் எடுங்கள் .அவர்களும் கதை சொன்னார்கள் .நம்புங்கள் .


காசு கொடுத்து படம் பார்க்க வருபவனை  அதிகபட்சமாக முட்டாளாக்கினால் கூட பரவாயில்லை  பைத்தியக்காரனாக அலையவிடாதீர்கள்.எதார்த்தம், எதார்த்தம் என்று ஆகாயத்தில் ரோடு போட ஆசைப்படாதீர்கள்.சினிமா என்ற சாதனம் தவிர்க்க முடியாத கடமைகளை கொண்டு உள்ளது .ரஷ்யாவில் பள்ளி பாடங்கள் இப்போது திரைப்பட முறையில் வடிவமைக்கபட்டு போதிக்க படுகிறது .நமது ஆவண படங்கள் அத்தனையும் உலக பரிசுகளையும் அள்ளிக்கொண்டு வந்து கொண்டு இருக்கிறது .


          ஆதலால் இந்த சினிமா சாதனம் அலமாரியில் வைக்கப்படும் புத்தகமாக படைக்கபட்டால்  கூட மீண்டும் ஒருகாலத்தில் திருப்பி பார்க்கலாம் .அழுகிய பழங்களாக்கினால் அது எங்கு போகும் என்பது அனைவரும் அறிவோம் .பார்த்து செய்யுங்கள் .ஏனென்றால் சினிமாவை நாங்கள் காதலிக்கிறோம் உங்களை போல அல்ல !

திங்கள், 20 ஜனவரி, 2014

ஓஷோ பூமிக்கு வந்து போன நாள் ஜனவரி 19


                          வெகு நாளாக திருப்பூர்,அவினாசிக்கு அருகே உள்ள ”ஜோர்புத்தா” (புது மனிதனின் புது வாழ்க்கைமுறை ) எனும் ஓஷோ சாஸ்வதம் போக திட்டமிட்டு  போக முடியவில்லை .ஆனால் சமீபத்தில் கிடைத்த ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை என்ற புத்தகம் ஓஷோவின் இளம் வயது முதல் அவர் வாழ்க்கை பற்றி மிக நுட்பமாக பேசியது போக வேண்டும் என்ற ஆர்வத்தை ஆக்கிரமித்தது .அதோடு அவரின் பகவத் கீதை-ஒரு தரிசனம் - புத்தகம் மேலும் அவர் மேல் உள்ள  தேடலை தாண்டி ஏதோ ஒரு விசயத்தை வாழ்க்கையில் தொடாமல் போய் கொண்டு இருக்கிறோம் என்பதாக உறுத்தியது .ஏற்கனவே அவரின் பல புத்தகங்கள் வாசித்து இருந்தாலும் வயதின் பக்குவம் வேறு ஒரு புரிதலின் பாதைக்கு இழுக்கிறது.


                      அவிநாசி,3/184 கந்தம்பாளையம், ஓஷோ சாஸ்வதம் போக (கொஞ்சம்) விசாரித்து போனபோது  ஒஷோவின் காம்பவுண்ட் சுவர் படம் எங்களை முறைத்து பார்த்தது .மரங்கள் அடர்ந்து புதிய வீடுகள் பல முளைத்து கொண்டு இருக்கும் காம்பவுண்டை நெருங்கும்போது ,60 வயதுக்கு மேற்பட்ட வெள்ளை தாடியுடன் ஒருவர் வெட்டிய ஒரு மரக்கிளையயை இழுத்து கொண்டு வெளியே போய் கொண்டு இருந்தார் .மெல்ல வளைந்து சென்ற பாதை முடிவை எட்டியபோது மத்திம வயது பெண் ஒருவர் தமிழ் பத்திரிக்கை வாசித்து கொண்டு இருக்க அவரை விசாரிப்போமா என்று யோசிக்கும்போதே எங்களை பார்த்து விட்டு மீண்டும் அவர் வாசிப்பை தொடங்க...



                 குழப்பமாகிவிட்டது எனக்கு .காரணம் , பல ஆண்டுக்கு முன் நான் திருச்சி - ஓஷோ மெடிடேசன் ரிசார்ட் - ஒஷோ தர்ம தீர்த் சன்யாஸ் ஆஸ்ரமதிர்க்கு  ஒரு நாள் தியான வகுப்புக்கு போன அநுபவம் இருக்கிறது . அதன் தோற்றமே அதன் நோக்கத்தை சொல்லும் .ஆனால் இங்கோ சின்ன சின்னதாய் வெள்ளை அடிக்கப்படாத புதிய குட்டி சிமெண்ட் காளான்கள் போல வீடுகளாய்  முளைத்து இருக்கிறது .எது தவ அரங்கம் என்பதே தெரியவில்லை .சரி அந்த தமிழ் வாசிக்கும் பெண்ணை கேட்போம் என்று கேட்டேன் .இதுதான் என்றார் .சொல்லியதோடு நிற்காமல், அழைத்து சென்று உட்கார சொல்லி இருக்கை தந்தார் . 


                        எப்படி இதை கேள்விபட்டீர்கள் என்றார் .இண்டெர்நெட் மூலம் என்றேன் .மெடிடேசன் ஹால் எங்கு இருக்கிறது என்ற சந்தேகத்தை என்னையும் மீறி ஆவல் வழிய கேட்டேன்.மெல்ல சிரித்து விட்டு அந்த காம்பவுண்டின் உள்ளே தள்ளி இருந்த மெடிடேசன் ஹாலுக்கு அழைத்து சென்றார் .உள்ளே ஒரு மெல்லிய அமைதி ஆட்சி செய்து கொண்டு இருந்தது .ஓஷோவின் பெரிய படங்கள் ஊடுருவி பார்த்தன .ஒரு டிரிபில் காங்கோ (Trible Congo ) இசை கருவி மவுனமாக நின்று கொண்டு இருந்தது .அது எனக்கு பல வருடங்களுக்கு முன் ஒஷோவின் Nataraj-meditation என்ற இசையை உள்வாங்கி எந்த ஒரு மன பாசாங்கு இல்லாமல் ஆடும் அல்லது ஆட்டிவைக்கபடும் இசை தந்திரம் ஞாபகம் வந்தது.  
            


                  அவர் பேசினார் .உங்கள் இருவரில் யார் இதில் ஆர்வம் என்றார் .நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டதை பார்த்து ,இல்லை இப்படித்தான் சிலர் யாரையாவது கூட்டி கொண்டு வருவார்கள் பிறகு நான் வேறு அமைப்பில் இருக்கிறேன் .இவர்தான் வருவார் என்று யாரையாவது காட்டுவார்கள் ,அதை தெளிவு படுத்தி கொள்ள கேட்டேன் என்றார் .சிரித்து கொண்டே வெளியே வந்து பழைய இருக்கைக்கு வந்தோம் .என்ன சாப்பிடுகிறீர்கள் ? டீ ? என்று கேட்டார்  .நான் இல்லை வேண்டாம்  தண்ணீர் கொடுங்கள் என்றதும் .டீ சாப்பிடுவீங்கல்ல  என்று மீண்டும் கேட்டு விட்டு போனார் .வந்து தண்ணீர் கொடுத்தார் .


                        பிறகு மீண்டும் சென்று இரண்டு பவுள்களில் கெட்டியாக ஒன்றை கொடுத்து கொண்டே, இன்று ஓஷோவின் இறந்த நாள் இனிப்பு இது என்றார் .ஆம் .வேதாத்திரி மஹரிசியால் இன்னும் 500 ஆண்டுகளுக்கு பிறகு பிறக்க வேண்டிய மஹான் என்று வருணிக்கப்பட்ட ஓஷோ என்ற  ரஜ்னீஷ் சந்திர மோகன்அப்படித்தானே சொல்லி இருக்கிறார் .இறப்பை கொண்டாடுங்கள் என்று .


                       அங்குள்ள உணவு அறை மற்றும் தங்கும் பகுதி வருபவர்கள் படிக்க (மட்டும்) நூலகம் .நூல் விற்பனை இகு இல்லை .நாங்கள் தேடி கொண்டு இருக்கும் எங்களுக்கு தெரிந்த அளவுக்கு ஒஷோவின் 136 தமிழ் புத்தகங்களும் அங்கு இருந்தன .எனக்கு அந்த இடத்திர்க்கு மீண்டும் போக வேண்டிய கட்டாயத்தை அந்த பத்தக செல்ஃப் சாட்சியமாக இருந்தது .மீண்டும் அதே இருக்கைக்கு திரும்பி ,அவரிடம் எங்கள் சந்தேகத்தை தொடுக்க துவங்கினோம் .இங்கு இருப்பவர்கள் வெளி ஊர்களில் இருந்து வந்தவர்களா எப்படி ஒன்றாக இருக்கிறீர்கள் என்றோம்.


                          அதர்க்கு அவர்  ஓஷோவின் கம்யூன் என்றால் சுதந்திரமான  தனிநபர்கள் கூடி வாழும் இடமே கம்யூன். இங்கு அவரவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியும், மலர்ச்சியுமே முக்கியம். கம்யூன் என்ற அமைப்பு வெறும் பயன்பாட்டு கருவியே, அதன் வளர்ச்சி என்ற மாயைக்கு இங்கு இடமில்லை. நிகழ்கணத்தை விழிப்புணர்வோடு நேர்கொள்ளும் வாழ்வே இது இயங்கும் மையம் என்பதாக சொன்னார் .அதோடு உங்கள் வாழ்வின் நோக்கம் என்று ஒரு ஆழமான கேள்வியை எங்கள் முன் வைத்தார் .நண்பர் ஏதோ சொல்ல மறுத்தார் .பிறகு கேள்வி என்னிடம் திரும்பியது .நான் பரிபூரணம் என்றேன் .புரியவில்லை என்றார் .வாழ்வின் நோக்கத்தை புரிந்து கொள்ளும் ஞானத்தை வளர்த்து கொள்ள என்றேன் .வளர்த்து கொண்டு ? என்றார் நல்ல முடிவுகளை எடுத்து பழக வேண்டும் என்றேன் .உங்கள் முடிவுகள் எப்படி பட்டதாக இருக்கிறது என்றார் .ஒரு சமயம் எடுத்த முடிவு மற்றொரு சமயம் தவறாக இருப்பதாக உணர்கிறேன் என்றேன் .சட்டென அவர் கண்ணில் ஒரு பிரகாசம் ,இதுதான் முக்கியம் என்றார் .எந்த ஒரு செயலையும் ஏன் செய்தோம் என்று ஒரு மணிநேரம் பிரித்து பாருங்கள் அப்போது புரியும் எவ்வளவு தேவை இல்லாத விசயத்தில் நாம் இருக்கிறோம் என்பது புரியும் என்றார் .


          வெவ்வேறு இடத்தில் இருந்து வந்து இங்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி வீடு கட்டிகொண்டு வாழ்கிறார்கள் .ஆனாலும் உணவு இங்கு ஒரே இடத்தில் தயாரிக்க படுகிறது.வெளியே வேலைக்கு சென்று திரும்புவர்களும் இங்கு உண்டு.ஆனால் கம்யூன் இருப்பவர்கள் வெளியே தங்க அனுமதில்லை என்றார் .வெளியில் இருந்து முதல் ஒரு நாள் தியான வகுப்பிற்க்கு வந்து சென்ற பிறகு மீண்டும் மூன்று நாள் வகுப்பு பிறகு  அடிக்கடி தோணும்போதெல்லாம் வருகிறார்கள் .தியானிக்கிறார்கள் என்றார் .எதையும் தெரிந்து கொள்வது முக்கியமல்ல அதை அனுசரிப்பதாலேயே அதன் பலன் இருக்கிறது என்றார் .


                       கிளம்பும் முன் ,”ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் ” என்ற http://www.osho-tamil.com/ பகுதியில் 48 தலையங்கங்களின் தொகுப்பு புத்தகத்தை கொடுத்தார் .இதை எழுதியது யார் என்றபோது அவர் சொன்ன அடையாள நாங்கள் உள்ளே வரும்போது ஒரு 60 வயது மனிதரை பார்த்தோம் என்றோமே அவர்தான் இதை எழுதியது .பெயர் புத்தகத்தில் - ஓஷோ சித் என்று இருந்தது . ஏற்கனவே ஒரு தேடலில் அவரின் அற்புதமான அவரின் http://masterosho.blogspot.in/ வலைப்பூவை படித்து இருக்கிறேன் .அதோடு http://www.osho-tamil.com/ பகுதியிலும் அவரின் எழுத்துக்களை மாதம் மாதம் காப்பி எடுத்து படிப்பது இப்போதும் என் வழக்கம் .

              நாங்கள் உள்ளே வரும்போது அவர் ஒன்றுமே கேட்கவில்லையே என்றோம் ,அதர்க்கு அவர் ’சதாகதா’ நிலையில்  எப்போது இருப்பார் .பேசினால் பேசுவார் என்றார்.சொல்லி கொண்டு இருக்கும்போது அவர் வந்தார் .அங்கிருந்த ஊஞ்சல் போன்ற இருக்கையில் அமர்ந்தார் .எங்களை பார்த்தார் .பிறகு எதுவும் பேசவில்லை நாங்கள்  விடைபெறும்வரை...