புதன், 13 நவம்பர், 2013

License to Fun ( வேடிக்கை உரிமம் )


                              பொதுவாகவே அரசாங்க சம்பந்தபட்ட எந்த வேலையிலும் சாதரண மக்கள் தொடர்பு எப்போதுமே கசப்பாகவும் ,பல வில்லங்க விவகாரங்களூடன் இருப்பதை எல்லோரும் தெரிந்து இருப்பதால்தானோ நேரிடையாக போக பயப்படுகிறார்கள்.இத்தனைக்கும் என்னை போல பலரும் தான் பணிபுரியும் நிறுவனத்திர்காக என்னதான் அரசு அலுவலக தொடர்பு இருந்தாலும், தனக்கென்று அங்கு போகும்போது தயக்கம் வருவது சகஜமான விசயம்தான்  ஆனாலும் அதில் சில வேடிக்கை கலாட்டாக்களுக்கும் இருந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் திண்டுக்கல் - வட்டார போக்குவரத்து அலுவலத்தில்  நடந்தது . 





                            அதுதான் எனது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன லைசென்ஸ் முயற்சி. இரண்டு சக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறுவதர்க்கு முன்னால் , LLR  பெறுவதர்க்கு பரிட்சை எழுதி (அப்போது நடைமுறையில் இருந்தது . அதர்க்கு பரிட்சையில் பிட் கொடுப்பது போல சில ட்ரைவிங் ஸ்கூல் ஆட்கள் ரகசியமாக உதவிய கொண்டு இருந்ததையும் பார்த்தேன் ) பாஸ் செய்தபின், ஒரு மாதம் காத்து இருந்து, வட்டார போக்குவரத்து அதிகாரி முன்  எட்டு போட்டு திரும்பியவுடன் சில ரோடு சிக்னல்  கேள்விகளுக்கு தயக்கமில்லாமல்பதில் சொல்ல வேண்டும் அதில் ஊத்திகிட்டாலும் இன்று போய் அப்புறம் வா கதைதான்! ( உங்களை அழைத்து செல்லும் ட்ரைவிங் ஸ்கூல் செல்வாக்கை பொருத்து இதில் சில மாற்றங்கள் உண்டு ) .



                          அன்று வெள்ளிகிழமை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.இருந்தாலும் எனது ஓட்டுனர் பயிற்சி பள்ளி உறுதி அளித்தது ! . எட்டு போடும்போது ,எனக்கு பின்னால் ஒரு அம்மணி ,எப்போது வேண்டுமானலும் என்னை தாக்க கூடும் என்ற பேராபத்தில் தப்பிப்பதர்க்குள் ( நல்ல வேளை ) இரண்டாவது சுற்றில் எட்டை ஒன்பதாக்கி ,(பாதியிலேயே) வெளியே வர சொல்லி , நேரே துணை வ.போ.அதிகாரியிடம் வந்தேன். அவர் ஒரு ட்ரைவிங் ஸ்கூலின் பழைய ஜீப்பின் முன் பக்கம் உட்கார்ந்து இருந்தார் . அவர் உட்கார்ந்து இருந்த ஜீப்பின் சீட் ஃபிட்டிங் பகுதியில் ( சீட் பொருந்தும் இடம்) உடைந்து இருந்த்து . அது ஒரு எதேச்சையாய் நடந்த மாதிரி எனக்கு தெரியவில்லை .மேலும்  சிக்னல் பற்றிய அவரின் கேள்விகளும் ஒரு வித ஆவேசமாக இருந்தது.( இன்னைக்கு உன்னை ஃபெயில் பண்ணுவதுதான் என் வேலை என்பதாக.)  எனக்கு முன்னாடி இரண்டு பேரும் சின்ன தயக்கமான பதிலுக்காக ஃபெயில் ஆக்கப்பட்டு ஓரமாக நின்று இருந்த தனது  ட்ரைவிங் ஸ்கூல் ஆளை முறைத்து பார்த்து விட்டு சென்றனர் .



                             நான் சென்ற ட்ரைவிங் ஸ்கூல் நபரிடம், ஏன் இப்படி ஒரு மாதிரியாக துணை வ.போ.அ மூடு அவுட்டாக இருக்கிறார் ? என்று கேட்டேன் .இதர்க்கு முன் இப்போ உட்கார்ந்து இருக்கிறாரே ஜீப் அதில் ஒரு நான்கு சக்கர லைசென்ஸ் வாங்க வந்த  ஆளை, டெஸ்ட் ட்ரைவ் ஓட்ட சொல்லி இந்த அதிகாரி அவனுடன் உட்கார்ந்து போகும்போது ப்ரேக் அப்ளை செய்ய சொல்லி இருக்கிறார் .அவன் இதர்க்கு முன் வரை, கிரமத்தில் விவசாய தேவைக்கு ட்ராக்டர் ஓட்டி கொண்டு இருந்தவன்.பொதுவாக ட்ராக்டர் ஃப்ரேக் சுலபமாக உடனே நினைத்த இடத்தில் நிற்காது (ஏறக்குறைய ப்ரேக் பெடல் மேலே ஏறி நிற்கவேண்டும் ! ) அந்த நினைப்பில் அவர் சொன்ன உடன் அவன் ப்ரேக் அடிக்க (ஏறி நின்றூ விட்டான் போல!) அடித்த வேகத்தில், பக்கத்தில் இருந்த அதிகாரி உட்கார்ந்து இருந்த ,அந்த பழைய ஜீப்பின் சீட், ஃபிட்டிங்கோடு பிடுங்கி, அவரை பின்னால் தள்ளிவிட்டதாம் .(அவனை இன்னிமே இந்த ஏரியா பக்கமே பார்க்க கூடாது என்று அந்த ட்ரைவிங் ஸ்கூலுக்கும் அவர் கட்டாயமாக சொல்லி அனுப்பியதாக கூடுதலாக கேள்வி பட்டேன். ) அந்த அதிர்சியிலிருந்து மீள்வதர்க்குள்ளும் ,அப்படி உடைந்த சீட்டில் உட்கார்ந்தும் , என்னை பாஸ் பண்ணியதர்க்கு வெகு நாளாக சந்தோசபட்டு கொண்டு இருந்தேன் .


                             காரணம் இதே அங்குவிலாஸ் - கரூர் பைபாஸ் சாலையில் எனக்கு என் அண்ணன் ஒரு ஸ்கூட்டர் கற்று கொடுக்க , பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு வரும்போது  , குறுக்கே வந்து கொண்டு இருந்த லாரியை அவர் பார்த்து விட்டார் அதனால்,உடனே பிரேக் பிடிக்க சொல்ல, நான் பதறிபோய் நிறுத்த முடியாமல் (தெரியாமல்) அப்போது சாலை சந்திப்புக்காக அங்கு இருந்த  புல் வளர்க்கும் ரவுண்டானாவில் ஏறி வண்டி தானாகவே ஆஃப் ஆன கதை ஞாபகம் வந்தது.




                                                 பிறகு திருப்பூர் வந்த பிறகு, நான்கு சக்கர வாகன சைசென்ஸ் பெற , என்னுடன் பணிபுரியும் மூன்று நண்பர்களுடன் ஒரு ட்ரைவிங் ஸ்கூல் மூலம் ஒருமாதம் கற்று கொள்ள போனால் ,போன முதல் நாளே ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்து அதுவும் காலை 5.30 க்கு திருப்பூர் RTO ஆஃபீஸிலிருந்து தொடங்கி – அவிநாசி சாலயில் பாப்பீஸ் ஓட்டல் வரை தினமும்  போய் வர வேண்டும் .வீட்டில் ஏற்கனவே எங்கள் வீட்டில் அப்பாவுக்கும் அண்ணன்களையும் சேர்த்து,  மூன்று LMV மற்றும் இரண்டு HMV லைசென்ஸ் (Light Motor Vehicle license, and Heavy Motor Vehicle license) லைசென்ஸ் இருக்கிறார்கள் .அந்த தைரியத்தில் போனேன் .ஆனால் போனால் தான் தெரிந்தது மற்றவகள் சாப்பிட்டால் நம் வயிறு நிறையாது என்பது .



                                          முதன் முறையாக வண்டியை ஸ்டார்ட் பண்ணி தரை நழுவுவது போல ஒரு ஃபீலிங் வந்ததுவும் பயம் பற்றிகொண்டது.மேலும் கற்று கொடுத்த ஆள், முரட்டு சுபாவம் கொண்ட வயதானவர். சில சமயம் தவறாக ஒட்டும் போது கையில் அடிக்கவே ஆரம்பித்து விடுவார்.நல்ல வேளை இரண்டு பிரேக் மற்றும் கிளர்ச் பெடல்கள் இருந்தது இல்லாவிட்டால் காலையும் மிதிக்க ஆரம்பித்து இருப்பார் அந்த மனுசன் ! .கற்று கொள்ளும் ஆர்வம் சுத்தமாகவே பறிபோக , எப்படா பயிற்சி முடியும் என்று இருந்தது.




                                         இங்கும் எட்டுபோட்டு காட்டும் பஞ்சாயத்துக்கு போனோம் ! நாங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பேர்கள் என்று சொன்னேன் இல்லையா ? அதில் ஒருவருக்கு எங்கள் ஆஃபிஸ் மூலமே சில வாரங்களுக்குள் பங்ளாதேஸ் போய் சில அண்டுகள் தங்கி பணிபுரிய வேண்டி இருந்தது.ஆனால் இதை நாங்கள் (எப்படியும் !) பாஸ் பண்ணப்படுவோம் என்ற தைரியத்தில் ட்ரைவிங் ஸ்கூல் (முரட்டு) ஆசாமியிடம் சொல்லவில்லை.



                                      அங்கு இன்னொரு சிக்கல் எங்களுக்கு முன்னே சென்று காத்து இருப்பது போன பின் தான் தெரிந்தது.அதுவரை நேர் சாலையில் மட்டுமே ஒட்டி! பழக்கப்பட்ட!! எங்களால்!!! அங்கு சின்ன வளைவில் கூட வண்டியை திருப்ப திறமை போதவில்லை .சில வளைவுகளில் வண்டியை திருப்ப முடியாமல் ரிவர்ஸ் எடுத்து,என்ஜினை ஆஃப் செய்து ,வெளியே டயரை எட்டிபார்த்து திருப்பி ... ஒரு வழியாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று முடித்து ரிசல்ட்டுக்காக காத்து இருந்தால், இரண்டு பேர் மட்டுமே பாஸ் என்றார்கள் அதிலும் (நல்லவேளையாக) நானும் ஒருவன் . அதில் அந்த பங்ளாதேசத்தில் பணிபுரிய போக இருப்பவர் மட்டும் ஃபெயில்.(காரணம் அடிக்கு பயந்து அவர் பாதி பயிற்சி வகுப்புக்கு வரவே இல்லை. ) 



                                   ட்ரைவிங் ஸ்கூல் ஆசாமியிடம் இந்த விவகாரத்தை சொன்னோம் .அதர்க்கு அவர் சொன்ன பதில் மிக அற்புதமானது .முன்னாலயே சொல்லி இருந்தால் ,(என்னை கை காட்டி ) இவரை ஃபெயில் பண்ணி இருக்கலாம் என்றாரே பார்க்கலாம் ! ( அடப்பாவிகளா? )
அவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லை எனக்கு சரியாக ஓட்ட தெரியாதுதான். அதர்காக உப்புக்கு சப்பாணி விளையாட்டுக்கு என்னை சேர்த்து இருந்தது ரொம்ப மோசம் !   



                                    இதே திருப்பூர் வரும்  முன்னர் திண்டுகல்லில், நான் நைட் சூப்பர்வைசராக வேலை பார்த்த பஸ் கம்பெனியில் எனக்கு தெரிந்த ட்ரைவர் ,பஸ் ஓட்டி பார்க்க கட்டாயப்படுத்தி  அதிகாலை 5 மணிக்கு முதன் முறையாக ஸ்டீயரிங்கை கையில் கொடுத்து காட்டாஸ்பத்திரியிலிருந்து – அரசு மருத்துவமனை நோக்கி வரும்போது , மருத்துவ மனை கடந்து இடது புறம் காவல் நிலையம் ஒட்டி திரும்ப வேண்டும் .ஆனால் என்னால் முழுமையாக ஸ்டீயரிங்கை திருப்ப முடியவில்லை .அண்ணா சிலைக்கு அருகே உள்ள முக்கோண வடிவ புல் அமைப்பு மேலே வண்டி ஏற நான் பிரேக்கை விட்டு விட்டு ,பயத்தில் கிளர்ச்சையும் ,எக்சலரேட்டரையும் ஒரு சேர மிதிக்க ,அதனால் பஸ்ஸின் என்ஜின் சீறல் அதிகரிக்க, இந்த சத்ததை உணர்ந்து  எதிரே டீக்கடையில் இருந்த ஒரு சிலர்   பயந்து சிதறி  ஓட,நல்லவேளை வண்டி ஒருவழியாய் ஆஃப் ஆகி தானே நின்று போனது.இல்லாவிட்டால் அடுத்த நள் பேபரின் தலைப்பு செய்தியாக சுலபமாக நான் ஆகி இருப்பேன். 


                         அடுத்து ஒரு சமயமும் என் மேல் இருந்த அதீத நம்பிக்கையில்! அதே ட்ரைவர் ,அதே போல அதிகாலையில், இரண்டாவது முறையாக இரு பக்கம் வயல் நிறைந்த சாலையில் மீண்டும் ஓட்ட சொல்லி ஓட்டியபோது,ஒரு இடத்தில் நல்ல ஓட்டுகிறேன் என்று அவர் பாராட்டி வார்த்தை ஓயும் முன் ,பஸ் சாலை விட்டு  இறங்க, அப்போது அங்கு சாலை ஓரத்தில் பாதியில் ’கக்கா’ போய் கொண்டு இருந்த ஒருவர்,அதிர்சியில் பயந்து முழங்கால்வரை நழுவிய தனது பட்டாபட்டி டவுசரை பிடித்து கொண்டு பின் புறம் தெரிய .ஓடியதை நினைத்து பார்த்தால் இன்றும் சிரிப்பு வருகிறது  .       
     

திங்கள், 11 நவம்பர், 2013

ஆவி வேட்டை !!


                                                  யாருமே யோசிக்காத அல்லது வித்தியாசமான விசயங்களை தேடுவது , அனேகமாக வீட்டில் கடைசியாக பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டு என்பதாக சொல்வார்கள் .வீட்டில் தன்னை முன்னிறுத்தி காட்டும் ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடும் இதுதான் என்கிறார்கள் .


                                                   அதாவது வீட்டில் எல்லாரும் சீரியல் பார்த்தால் அந்த வீட்டின் கடைசி பிள்ளை புத்தகம் படிப்பான் எல்லோரும் வீட்டில் சுஜாதா ,பாலகுமாரன் ,கல்கி படித்தால் இவன் வெங்கட்ராவ் எழுதிய மனோசக்தி ,இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய சிவஜெயமமும் ,விக்கிரவாண்டி வி.ரவிசந்திரனின் ஆவிகள் உலகமும்  ,சௌதாமினியின் பறக்கும் தட்டு பற்றியும் படிப்பார்கள் அப்படிபட்ட வீட்டில் கடைசி (  ஐந்தாவது ) பிள்ளை தகுதி எனக்கும் இருந்தது .அப்படி பட்ட ஒரு  அமானுஸ்ய தேடல் 16 வயதில் ஏற்பட்ட போது அதில் ஒரு  தேடலின் விளைவே இந்த ஆவிகளுடன் பேசும் முயற்சி ...


                                                      ஏதோ ஒரு பெயர் தெரியாத புத்தகத்தில் ஆவிகளுடன் பேசும் பல முறையில் எளிதான வழியாக வய்சா கட்டம் (Ouija Board) என்பதாக அறிந்து , நண்பர்களுடன்  வீட்டில் கடைசி என் அறையில்  ஆவியுடன் பேச திட்டமிட்டோம் .

                                                 அதன் படி அங்கு இருந்த எல்லா புனித பொருள்களையும் அகற்றினோம் .ஆவிகள் பேசும் இடத்தில் ஒரு சாமி போட்டோ கூட இருக்க கூடாது எனபது பின்பற்ற வேண்டிய விதி !.பிறகு அறையின் நட்ட நடுவே  வய்சா கட்டம் , ஒரு கண்ணாடி டம்ளர் ,மெழுகுவர்த்தி சகிதமாக வேலையை ஆரம்பித்தோம் .இதில் ஒரு விசேசம் என்னவென்றால் அங்கிருந்த யாருக்கும் இது பற்றி முன் அனுபவம் இல்லை என்பதே அது . 


                                                   இப்போது தான் ஒரு பிரச்சனை ஆரம்பித்தது .அது இறந்து போன எந்த ஆவியை கூப்பிடுவது ? நான் படித்த புத்தகத்தின் விதிப்படி நமக்கு நேசமுள்ள ஆவியை  ( Security Ghost  ) கூப்பிட்டு அருகே வைத்து கொண்ட  பிறகே மற்ற ஆவிகளை தொடர்பு கொள்ள வேண்டும் . ஆனால் நாங்கள் நேசமுள்ள ஆவியும் பாதுகாபிற்க்கான ஆவியும் ஒன்றாகவே அழைக்க தீர்மானித்தோம் அது  ஆறு மாத குழந்தையாய் இருந்த போது இறந்த எனது சகோதரி, பேபி. 


                                             மெழுகுவர்த்தியை  வய்சா வரை தளத்தில் பற்ற வைத்து , சிறிது நேரம் எறியவிட்டு, பிரார்தனை செய்து சகோதரியை நினைத்து அழைத்து விட்டு , டம்ளரை மெழுகுவர்த்தியின் மீது கவிழ்த்தேன் . டம்ளர் முழுதும் வெள்ளை புகை மண்டலமாக நிரம்பி,மெழுகுவர்த்தி முழுவதுமாக அணைந்த பின் , ஆள்காட்டி விரலை டம்ளர் மேல் வைத்தேன் .மெல்ல சில அதிர்வுகளை  உணர்ந்தேன் .டம்ளர் இப்போது எழுத்துகளை நோக்கி மெல்ல நகர தொடங்கியது ...

                                            அந்த மூடிய அறையில் வியர்வைக்கு பதிலாக உடல் சில்லிட்டது .வயதும் ஆர்வமும் அசட்டு தைரியத்தை தர, வைத்த கையை எடுக்கவில்லை ஆனால் சில சமயம் தரையில் தளத்தின் எழுத்துக்கள் கட்ட்த்தை  தாண்டி டம்ளர் வெளியேறியது.


                                           நண்பர்கள் சிலரும் தங்கள் கேள்விகளுடன் எனக்கு அடுத்து டம்ளரை தொட்டு தொடர .. சில சமயம் டம்ளர் நகரவே இல்லை . இதில் வேடிக்கை என்னவென்றால்  அப்போது +2 எழுதிய நண்பன் தனது ரிசல்ட்டையும் ,வர போகும் மதிப்பெண்ணையும் கேட்டான் .Pass  என்ற பதிலும் 817 மதிபெண்ணும் எடுப்பான் என்பதாக டம்ளர் காட்டியது. ( சில மாதங்கள் கழித்து வந்த ரிசல்ட்டில் - அவன் தேர்ச்சியும் பெறவில்லை , மார்க்கும் வெறும் 635 தான் என்பது வேறு விசயம் ). பேசிய யாரும் என்ன பேசினோம் என்பதை வெளியே சொல்லவில்லை அப்போதைக்கு .


                                                        அதர்க்கு பிறகு சிலமுறை பேச முயன்றும் சரி வரவில்லை .அதுமட்டுமல்ல இப்படி அழைத்து பேசும்போது வேறு ஏதாவது கெட்டஆவிகள் வந்து விட்டால் பிறகு தொடர்ந்து இங்கேயே தங்கிவிடும் என்று வேறு ஏதோ ஒரு புத்தகம் சொன்னதால் வந்த பயமும் காரணம் .ஆனாலும் இது பற்றி ஒரு முழுஆய்வு பண்ண வேண்டும் என்று புத்தக வேட்டையில் இறங்கினோம்   அத்துடன் கதை முடியவில்லை .
முதன் முறையாக நாங்கள் பேசிய போது உடன் இருந்த நண்பன் அலெசாண்டர் பாபு இந்த விசயத்தை ( அல்லது விபரீத்தை) தனது அம்மாவிடம் சொல்ல அவர்கள் கோவித்து கொண்டதோடு என்னை அவர்கள் வீட்டில் பேசவேண்டும் என்பதாக அன்பு கட்டளை வேறு இட்டார்கள் !


                                                    மறுக்க முடியாமல், ஒருநாள் இரவு 10 மணிக்கு அவர்கள் வீட்டில் கூடினோம் .ஏன் 10 மணிவரை என்றால் ,அவன் தங்கை சின்ன வயது . (சிறு வயதுகாரர்கள் பயந்து விடலாம் என்பதால் )   தெரிந்தவர்கள் வீட்டில் அவன் தங்கையை கொண்டு விட்டு அங்கு உறங்கும்வரை காத்து இருந்ததால்தான்.

                                                     வீட்டில் உள்ள அன்னை மரியாள் உட்பட அனைத்து புனித பொருட்களையும் அகற்றினோம்.முன் அறை சமையல் அறை.அதர்க்கும் நடு வீட்டுக்கும் இடயேயுள்ள கதவை மூடி ஆவி வேட்டை ஆரம்பித்தோம் .


                                            அப்போது எனக்கு மிக பெரிய ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது .அவர்கள் பேச விரும்பிய ஆவி ,அடுத்த தெருவில் இருந்த இவர்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு கறிகடைக்காரர் ஆவியுடன். சில மாதங்களுக்கு முன் ஏதோ சண்டையில் அவர் வெட்டுபட்டு இறந்து விட்டாரம் .அவரை யார் வெட்டினார்கள் என்பதை அறியவே இந்த அழைப்பாம் ...(அட பாவிகளா !)  


               எனக்கு பயம் ஒருபக்கம் .    மெல்ல டம்ளர் அதிர்வதும் ,நகர மறுப்பதுவுமாகவே இரவு சுமார் 11.50 வரை நீடிக்க ... ( நல்ல வேளை) கறிக்கடைகாரர் ஆவி ( கத்தியுடன் )  வரவில்லை .ஆனால் .
அதுவரை பக்கத்து வீட்டில் தூங்கி கொண்டு இருந்த அவன் தங்கை திடீரென எழுந்து வந்து கதவை திறக்க ,iஇங்கு நாங்கள் நடு வீட்டில் ஒரே ஒரு சின்ன விளக்குடன் அத்தனை பேர் கூடி இருப்பதை பார்த்து விட்டு,அம்மா என்று  பயத்தில் அலறி ,கதவோடு சரிந்து விழ ..


            அடுத்த நாள் நண்பனை பார்த்த போது அவன் சொன்னான் ,எல்லாவற்றையும் நாம் எடுத்து விட்டோம் ஆனால் வாசலில் தொங்கவிட்டு இருந்த வேளாங்கன்னி தீர்த்த பாட்டில் மட்டும் எடுக்காமல் விட்டுவிட்டோம்.அதனால்தான் அந்த அண்ணன் (கறிக்கடைகாரர் ) வரவில்லை என்றான் .    நான் தங்கைக்கு எப்படி இருக்கு என்றேன் ? முன்று நாள் குளிர் காய்சல் என்றான். 
  
                     
                             
                                                      அதர்க்கு அடுத்து, நண்பர் சுகுமார்,ஆட்டோ ரைட்டிங் எனும் பேனாவை பிடித்தால் தானாக பேனாவே எழுதும் முறை.அதன் மூலம் மதுரையில் ஒரு டாக்டரின் மகள் வந்து ,தான் ஒரு கார் விபத்தில் இறந்து போனதாகவும் தன்னை அறிமுகபடுத்தி ( எழுதி ) கொண்டதாம் .


                                                   மெல்ல நான் அந்த பேனாவை பிடித்து பேப்பரில் வைத்து பார்த்தேன் .பேனா எழுத தொடங்கியது !...அந்த எழுத்து ?               என் எழுத்து மாதிரியே  இல்லை...!!!