திங்கள், 19 செப்டம்பர், 2016

மரணமற்ற ஜீவாத்மாக்கள் - சித்தர்கள் .( துரத்தல் 8 )                            ஜீவன்முக்தர்களான சுய விருப்ப மரணங்களை நாடுபவர்கள் மிக எளிமையாக நம்மைச் சுற்றியுள்ள தவயோகிகளாகக் கூட இருக்கலாம் . ஆனால் சித்தர்கள் அவர்களிடமிருந்து சற்றே வேறுபடுகிறார்கள் .சித் என்ற உயிரை உணந்தவர்களாக இருப்பதால் இவர்களை நாம் இவர்களின் அற்புதங்கள் மூலம் அறிகிறோம்.போகரை எடுத்துக்கொண்டால் அவர் உருவாக்கிய அருள்மிகு பழனி தண்டாயுதபானி சுவாமி நவபாசான சிலையை வெறும் வழிபாட்டுக்காக உருவாக்கவில்லை வேறு சில காலத்தின் தேவையைக் கருதியே உருவாக்கி இருக்கிறார் என்று அறிகிறோம். இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் மகான்கள் , ஞானிகள் , வரிசையில் சித்தர்கள் இயற்கையின் தேவைக்குத் தகுந்தார் போல அவர்களைப் பிரபஞ்சக் குரல் universal consciousness voice வழி நடத்துகிறதோ என்ற தீராத கேள்விகள் நம் முன் நிற்கின்றன.சரி. எப்படியானாலும் சித்தர்கள் இந்த மனிதக் குலத்தின் அல்லது இந்தப் பிரபஞ்சத்தின் பிரதிநிதிகளாகத் தங்களை மேம்படுத்தியவர்கள் என்பதில் நெல்முனையளவும் சந்தேகமில்லை ! அவர்களால் நாம் எப்போதும் நன்மையே அடைந்து இருக்கிறோம். 

          நாம் இந்த மரணங்களுக்கு எதிரான யுத்தத்தில் ஜெயித்த மார்க்கண்டேயர்களான திருமூலர்,கொங்கனர் போன்ற 108 க்கும் மேற்பட்ட சித்தர்கள் ஜீவ சமாதியடைந்த கோவில்களில் இன்னும் உயிர்ப்பாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிகிறோம். சில இடங்களில் தனியார்களால் பராமரிக்கப்பட்டு வரும் சித்தர்கள் சம - ஆதியான இடங்கள் ஏராளம் இருக்கிறது .இன்னும் சிலருக்குச் சித்தர்கள் அப்படியே கருவில் திருவான பிறவிகளா ? துறவு வாழ்க்கை மட்டும் வாழ்ந்த மகான்களா ? என்ற சந்தேகம் வருகிறது . எளிமையாகச் சொன்னால் சித்தர்கள் நம் போன்ற இல்லறத்தவர்களாக இருந்து வேண்டிய பொருள்கள் சம்பாதித்துப் பிறர்க்கும் கொடுத்து உதவிய சாதாரணக் குடிமகன்களாக இருந்தவர்கள் அனேகம்பேர் .பொருள்துறை ,அருள்துறை , அறிவுத்துறை என எல்லாவற்றிலும் இருந்து தங்களைத், தங்கள் தேடல்கள் மற்றும் தீராத முயற்சியால், உள்ளுணர்வால் மேம்பாடு அடைந்தவர்கள் . 

                  உலகத்தின் பெரும்பாலான மதங்கள் அதை உருவாக்கியரையோ அல்லது அவர்கள் காட்டிய இறைவனையோதான் வழிபட்டுக்கொண்டு இருக்கிறது .ஆனால் சித்தர்கள் வகுத்த நெறிப்படி இந்த உலகின் ஒவ்வொரு உயிரின் உருவாக்கத்தையும் இறைவன் வடிவமாகப் பாவித்து வழிபடுகின்றார்கள் .சித் என்றால் உயிர்.கண்களால் காணக்கூடிய இந்த உடலுக்கு மூலமான காணமுடியாத உயிருக்கு உள்ள உறவை நன்கறிந்தவர்களே சித்தர்கள் . உடலுக்குள் உள்ள உயிர் என்பது ’விண்’ என்ற உயிர்சக்தியாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.அந்த உயிர்சக்தியே படர்கை நிலையெய்தி மனமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.மனம் என்பது சீவகாந்த அலை அது எபோதும் வடிவம் எடுப்பது அதுவாகாவே குணமாக மாறுவது ,பதிவு செய்வது பதிவு செய்ததைத் திருப்பித் திருப்பி எண்ணங்களாகப் பிரதிபலிக்கச் செய்வதே மனதின் தன்மைகளாக அறிந்துகொண்டார்கள் .அப்படி அறிந்து கொண்ட ஞானத்தால் அவர்கள் மனிதகுலம் முழுமைக்கும் தந்த முக்கியத் தத்துவங்கள் 1) மகிழ்போகம் 2) ஈதல் 3) இறவாமை என்பதாகும் .இதில் மூன்றாவதான நமக்கான விசயம் இறவாமை. 


               இறவாமை என்பது மனிதன் பேராற்றலோடும் பெரும் நோக்கத்திற்காகப் பிறக்கிறான்.அந்தப் பெருநோக்கம் நிறைவேறத் தடையாய் இருப்பது நீண்ட நாள் உயிர்வாழ்தல் மறுக்கப்படுவதால்தான் .அதனால் மரணத்தைத் தள்ளிப்போடுவதற்கான வழியைத் தேடினார்கள் .காயம் என்ற உடலை கல்பம் என்று உறுதிப்படச் செய்வதற்கு அடிப்படை ஆண்களுக்கு விந்துவும் - பெண்களுக்கு நாதம் என்றுணர்ந்தார்கள் .அதுவே இந்த உடல் உயிர் துவக்கமாகவும் அதை முழுவதுமாக இழப்பதுவே மரணம் என்ற முடிவாகவும் இருப்பதைக் காக்க சித்த வைத்திய முறையில் செய்த முயற்சிக்குப் பெயர் ’முப்பூ’ 


#முப்பூ Philosopher Stone. 

”பொன் நிறமான பூமியில் ஒன்று
கண்ணிறமான கடலினுள் ஒன்று
மின்னெனப் பூக்கும் மின்னலில் ஒன்று .

பொன் நிறமான பூமியில் ஒன்று - பூமியில் சில இடங்களில் குறிப்பிட்ட காலங்களில் மல்லிகைப் பூ பூப்பது போலப் பூநாதம் எனும் பூநீர் பூத்து வரும் அதைத் தண்ணீரில் கரைத்துச் சில பக்குவத்தில் காய்ச்சினால் உப்பாகி விடும்.அடுத்துக் கண்ணிறமான கடலினுள் ஒன்று - கடலில் பூக்கும் கடல் நுரை. இறுதியாக மின்னெனப் பூக்கும் மின்னலில் ஒன்று - மின்னலில் பூப்பது காளான் .இந்த மூன்றையும் சில பக்குவ முறைகளில் புடமிட்டுப் பெற்ற முப்பூவை உண்டால் உடல் விட்டு பிரிய மூலகாரணமான விந்து நாதம் கெட்டிப்பட்டுப் பல ஆண்டுகள் மரணமில்லாப் பெருவாழ்வு கிடைத்தது .ஆனால் இந்த வாழ்வில் அவர்கள் விரும்பி போது மரணம் பெற வழியில்லாமல் வாழ்ந்துச் சலித்துப்போனார்கள் .இதைத் தவிர்க்க அவர்கள் கண்ட அடுத்த வழி யோக மார்க்கத்தில் லம்பிகா யோகம் .


#லம்பிகா யோகம் 

பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் உணவு கிடைக்காத போது நாவை மடக்கி மேல் அண்ணத்தில் வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். 'லம்பிகா' யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். உணவுக் கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாகப் பழைய நிலைக்கு வந்துவிடும்.அந்த உணவால் வாழ்வைத்தொடரும்.ஆனால் உயிர் போகாது. இந்த நிலைக் காலச் சூழலில் நீடிக்கும்போது அதே நிலையில் உயிரை விட்டு விடவும் நேரிடலாம்.. இந்த முறையில் சித்தர்கள் லம்பிகா யோகம் மூலம் உணர்வற்ற நிலையில் வெகு நாள் உயிரை உடலை விட்டுப் பிரியாமல் காத்து வைத்தார்கள் .இதில் சில சமயம் உணர்வற்று மயக்க நிலையில் இருப்பதை மரணம் என்று புரிந்து கொண்டு அடக்கம் செய்யப்பட்டவர்கள் சிலர் உண்டு .நம் மக்கள் சில சமயம் சொல்வார்களே இவர்களிடம் ரொம்பத்தான் உசாரா இருக்கணும் போல, தூங்கும் போது கூடக் காலை ஆட்டிக்கொண்டு தான் தூங்க வேண்டும். என்ற சொல் பழக்கம் சித்தர்களுக்கு ஏற்பட்ட கதியால் வந்த விளைவாகக் கூட இருக்கலாம் ! இதிலும் உள்ளச் சங்கடங்களை நீக்க அவர்கள் கடைசியாகக் கண்டது மார்க்கம் காயகல்பம்

#காயகல்பம் 

”உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார், மேனியும் சிவந்திடும்,
அருள் தரித்த அம்மைபாதம், ஐயன்பாதம் உண்மையே”- சிவவாக்கியா்

இது சித்தவைத்திய முறையில் செய்த மருந்தல்ல .உடலுக்குள் உயிரின் வேர்களாய்ப் பிண்ணிப் பிணைந்து சுழன்றோடும் சுமார் 72000 நாடிகளில் நீண்ட வாழ்வுக்கும் ,என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதையறிந்த சிவவாக்கியச் சித்தர்பாடல் இதைச் சொல்லுகிறது .இதன் முழுப்பொருளைத் தமது 40 வருட ஆராய்ச்சியைச் செலவிட்ட வேதாத்ரி மஹரிசி இந்தப் பாடலுக்குரிய பயிற்சியை இறைநிலையின் துணையில் கிடைத்த முழுமைக்குப்பிறகு யோகப்பயிற்சி வடிவமாகச் சில நிமிடங்களில் செய்வது போல வடிவைத்து இருக்கிறார் .மனவளக்கலையின் முக்கிய அங்கம் காயகல்பம்.

#ஜீவசமாதி 

         நாம் இந்தப்பதிவின் துவக்கத்தில் பேசியபடிச் சித்தர்கள் நம் பிரபஞ்சக் குரலால் பெற்ற , தங்கள் வாழ்நாள் கடமையை முடித்த பிறகு ,ஜீவசமாதி என்றொரு முறைக்கு ஒரு அற்புதமான வழியை வடிவமைத்தார்கள் .அதன்படி ஜீவன் என்ற உயிரை இந்த உடலுக்குள்ளேயே ”சுவரவிடுதல்” என்ற முறையில் விட்டுக்கொண் அறிவை மாத்திரம் அகன்று அகன்று விரித்துப் பேராதார நிலையோடு இணையவிட்டு மீண்டும் அறிவு உடலோடு சுருங்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய நிலையிலிர்ந்து ஒன்றீக்கலந்து விட்டு உடல் இயக்கம் தானாக நின்று உடலில் உயிர் மிக நுண்ணிய இயக்கத்தோடு நிற்கச் செய்கிறார்கள் . 

                 உடல் உயிரோடு சுவரிவிடும்போது அந்த உடல் கெடாது.அழியாது.அந்த உடலில் வெது வெதுப்பான , உடல் உறுப்புகள் எளிதாக வளைந்து கொடுக்குமாறு இருக்கும் . சித்தர்கள் உடலுக்குள் உயிரைப் பலகாலம் வைத்திருக்கும் வித்தையைப் புரிந்திருந்தது.. உடலில் உள்ள ஆதாரச் சக்கரங்களிலும் வேறு சில மையங்களிலும் உயிரை நிலை நிறுத்தி , வாயுக்களை ஒடுக்கி ஓரிடத்தில் நிலைநிறுத்தி அந்த நிலையில் தூல உடலின் இதயத்துடிப்பு, நாடி, மூச்சு முதலியவை நின்றுவிடும். மற்ற இயக்கங்களும் இருக்காது . உயிரோட்டமில்லாத உடல் கெடும். ஆனால்பிராணவாயுவோ தண்ணீரோ உணவோ உட்கொள்ளாத நிலையில் இயக்கமற்ற உடல் உடல் எடைக் குறைந்தே இருக்கும் .

               என்றைக்கும் சித்தர்கள் உயிராற்றல் அவருடைய உடல் விட்டுப் பிரியாதிருப்பதால் அவர்கள் உலக நன்மைக்காக எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவரச் சுற்றி வர ஜீவசமாதியான சித்தரின் எண்ணங்கள் நம்மை வழிநடத்தும்.அதனால்தான் ஜீவசமாதிக்குயுள்ள அகஸ்தியர் - திருவனந்தபுரம் ,கொங்கணர் - திருப்பதி ,சுந்தரனார் - மதுரை ,கரூவூரார் - கரூர் ,திருமூலர் - சிதம்பரம் ,தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் ,கோரக்கர் - பொய்யூர், குதம்பைச் சித்தர் - மாயவரம் ,இடைக்காடர் - திருவண்ணாமலை ,இராமதேவர் - அழகர்மலை ,கமலமுனி - திருவாரூர்,சட்டமுனி - திருவரங்கம்,வான்மீகர் - எட்டிக்குடி ,நந்திதேவர் - காசி,பாம்பாட்டிச் சித்தர் - சங்கரன்கோவில்,போகர் - பழனி ,மச்சமுனி - திருப்பரங்குன்றம்,பதஞ்சலி – இராமேஸ்வரம் போன்ற கோவில்கள் மிகப் பிரசித்தம் பெற்றவையாக இருக்கிறது. 

                தமிழக்கத்தில் சித்தர்கள் சமாதி பற்றிய கான மஞ்சரி சம்பத்குமார்க் கணக்கெடுப்பின் படிச் சென்னை மாவட்டத்தில் மட்டும் 87 சித்தர்கள் சமாதிகள் இருக்கின்றன.அதற்கு அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் 50ம் அப்படியே 27 மாவட்டங்களில் உள்ள சித்தர் சமாதிகள் பற்றி அறிகிறோம் .ஜீவசமாதி சிறப்புகள் 

                            மற்ற கோவில்களில் உங்கள் தவறான எண்ணங்கள் கொண்ட கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனைகள் கூட உங்கள் எண்ணத்தின் வலுவிற்கு ஏற்ப நடந்து விடலாம் .ஆனால் சித்தர்கள் ஜீவசமாதிகளில் இயற்கைக்கு முரணான அல்லது ஏதோ ஒரு உயிருக்குத் துன்பம் தரும் கோரிக்கைகள் நிறைவேறாது.அது மட்டுமில்லை அந்த எண்ணத்தின் தன்மைக்கு ஏற்ப எதிர்விளைவை உங்களுக்குச் செய்யும் .அதனால் மிக நுண்ணிய அலை நீளமுடைய அந்த ஆற்றல் களங்களில் உங்கள் கோரிக்கைகளை வெகு சாதரணமாய் வைத்துவிடாதீர்கள் ! 

                  ஆகமவிதிப்படிக் கட்டிய அனைத்துக் கோவில்களிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய முடமுழுக்கு என்ற கும்பாபிசேகம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மைப் புதுப்பிக்கப்படுத்தவே நடைபெறுகிறது புனித ஆறுகளின் நீரால், மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்படுத்தி, சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுகிறது . சித்தர்கள் ஜீவசமாதியான இந்தக்கோவில்களுக்கு இந்த அவசியமில்லை என்பது முக்கியமான விசயம் .

துரத்தலின் முடிவாக....

                 ”பேய்” நல்லதுத் தெரியுமா ? என்ற பெயரில் ஜூலை மாதம் விளையாட்டாய் ஆரம்பித்த தொடர் இது .இன்று எட்டுப் பதிவுகளாக துரத்தப்பட்டு ஓய்ந்து விட்டது .இதன் மூலம் இங்கு சொன்னதை விட நான் கற்றுக்கொண்டதே அதிகம் .இது எந்த அளவுக்கு எல்லோருக்கும் நன்மை தந்து இருக்கிறது என்பது தெரியவில்லை .யாராவது நேரமிருந்தால் சொல்லுங்கள் .

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

சுய விருப்ப மரணம் - ஜீவன்முக்தி . ( துரத்தல் 7 )                               நாம் எல்லோரும் தவிரக்க முடியாமல் ஏதோ ஒரு ஆன்மாவின் பதிவுகளாகச் சுமந்து கொண்டு இருப்பவர்கள்தான் .ஏனெனில் பிறப்பே பதிவின் விளைவுதான் .இதற்கு ஆறுதலே இல்லையா என்பது போலவும் ஆன்மா என்றால் தொல்லைதானா என்ற கேள்விக்கு அடுத்தப் பதிவில் அவதார புருசர்கள் ,சித்தர்கள் ஜீவன் முக்தியடைந்த புண்ணிய ஆன்மாக்கள் எப்படித் தங்கள் ஆன்மாவை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசி இந்தப் பதிவின் துரத்தல்களை முடித்துக்கொள்வோம் ...நாம் கடைசியாய் இப்படித்தான் #”அகாலமரண” ஆன்மாக்களின் செயல்கள் ! துரத்தல் 6 பேசி வைத்து இருந்தோம் ! 

இறந்தவர் பிறப்பதில்லை . 

                               இந்தப் பதிவைத் தொடங்கிய பிறகு நான் சந்திக்கும் பலரும் மறுபிறப்பைப் பற்றி அக்கறையாய் விசாரிக்கிறார்கள் .இந்தியாவிற்கு வெளியே தொடங்கிய அனேக மதங்கள் மறுபிறப்பை ஆதரிப்பதில்லை . அதனால் இந்தியர்களுக்கு மறுபிறப்பைப் பற்றிய பயம் கலந்த விசாரணை ஐம்பது வயதுக்கு மேல் வரும், கால் முட்டி வலியைப்போல வந்து விடுவது இயல்பாகிவிட்டது.தாய்த் தந்தை வழியே பிறந்த ஒரு உயிர், அது 120 வருடம் வாழ்ந்து முடித்து இருந்தாலும் ,ஏதோ ஒரு காரணத்தால் அகால மரணம் அடைந்து இருந்தாலும் ,சித்தர்களாய் ,ஞானிகளாய் ,மகான்களாய் வாழ்ந்து முடித்து இருந்தால் கூட அவர்களின் ஆன்மா மறுபிறப்பாய் பிறப்பதில்லை என்பது வேதாத்ரியம் முன் வைக்கும் கருத்து .மறு பிறப்பு என்பது நமக்கு பிறக்கும் குழந்தைகள் மட்டுமே .எனவே இறந்து போன உயிர் யாரோ ஒரு தாயின் கருவறையில் புகுந்து மறுபிறப்பாய் பிறப்பதில்லை .இதற்கு என மலர்ந்த சிவவாக்கியரின் பாடல்– 46 பேசுகிறது . 

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா 
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா 
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா 
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே. 

                     மடியிலிருந்து கறந்த பால் திரும்பி மாட்டின் முலைக்குள் செல்ல இயலாது. உறைக்குத்திய தயிரைக் கடைந்து எடுத்த வெண்ணை மறுபடியும் தயிராகாது. அதுபோல் சங்கிலிருந்து வெளிவந்த ஓசை சங்குக்குள் செல்ல முடியாது. உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் உடலுக்குள் புகமுடியாது. மொட்டாக இருந்த மலர் மலர்ந்தபின் திரும்பவும் மொட்டாக முடியாது. மரத்திலிருந்து உதிர்ந்த்த இலை, பூ, காய் ஆகியவை திரும்ப மரத்தைச் சென்று அடையாது. அதுபோல் இறந்தவர் பிறப்பதில்லை. இல்லை! இல்லை! இல்லையே! 

               மரணம் என்பது ஒரு வகையில் உயிரின் விடுதலை என்று சொல்வார்கள் .  இளைமையில் ஒத்துக்கொள்ள மாட்டோம் .அப்போது எல்லாமே இன்பமாகத் தெரிகிறது .கொஞ்சம் மத்திய வயதில் வேலை பொறுப்புமும் கடமைகளும் வந்த பின் நீண்ட நாள் வாழும் ஆசை வந்து இறுகப்படித்துக் கொள்கிறது  .    ஐம்பது வயதுக்கு மேல் லேசாய் உடல் உபாதைகள் தலை தூக்கும் போது ,நீண்ட நாள் வாழ்வதை விடவும் நோயில்லாமல் வாழ வேண்டுமே என்ற அக்கறைப்பிடித்து ஆட்டுக்கிறது . ஒருநாள் எதிர்பாராத போது மரணம் நம் வாசல் கதவைத் தட்டாமல் தள்ளிதிறந்து முன்னே வந்து உற்றுப் பார்க்கும் போது எப்படியாவது எப்படியாவது வாழ வேண்டுமே என்ற கவலை கலவரமாகி விடுகிறது.      ஆனால் அந்தக்கட்டத்தில் எல்லா நினைவுகளும் தோள்மேல் உட்கார்ந்து அது செய்து இருக்கலாம்,இது செய்து இருக்கலாம் என்று பாவமன்னிப்புக் கோர அசைப்படுகிறோம் . இப்படியேதான் பெரும்பாலோர் மரணம் உடலிருந்து பறித்துக்கொண்டது போல எமனுக்கு டென்சனைத் தந்துவிடுகிறார்கள் .


                    இதற்கு ஓஷோ சொன்னக் குட்டிக்கதை ஞாபகம் வருகிறது .உபநிடதத்தில் யயாதி என்ற மன்னன் 100 வயதை அடைந்த போது மரணம் கொண்டு போக வந்ததாம் .இன்னும் தான் வாழ ஆசைப்படுவதாகவும் தன்னுடைய 100 மனைவியர்களின் 100 மகன்களில் யாராவது ஒருவரை தந்து தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போட விரும்பி மகன்களனைவரையும் கேட்டாராம் எல்லோரும் மவுனமாக இருக்க அதில் கடசியாகப் பிறந்து 16 வயது மகன் மட்டும் சம்தித்தானாம் .மரணமே இரக்கப்பட்டு ஏன் இத்தனை பேர் இருக்க நீ மட்டும் சம்மதிக்கிறாய் என்றதாம் .அதற்கு அவன் எனது தந்தை 100 வயது வாழ்ந்தும் திருப்திப்படவில்லை .அப்படி இருக்கும் போது ஏன் காலத்தை நான் வீணாக்க வேண்டும் ? அதுமட்டுமல்ல அப்படித் திருப்தித் தராத வாழ்வை என் தந்தைக்கு மாற்றாகச் செய்யும் உபகாரத்தையாவது செய்கிறேன் என்று மரணத்துடன் போனானாம் .ஆனாலும் யயாதி மன்னன் இதே போல ஒன்பது முறை தந்து 1000 வருடம் வாழ்ந்து தனது மரணத்தைத் தள்ளிப்போட்டுக்கடைசியிலும் திருப்தி இல்லாமல் மரணத்துடன் அரைமனதாய் உடன் சென்றதாய் அந்தக்கதை முடிகிறது  .இப்படித்தான் நம்மில் பலரும் எமனுக்கே வாய்தாக் கொடுத்துக் கொண்டு டென்சன் பண்ணிக்கொண்டு இருக்கிறோம் . 

”மரணந்தான் சீவஇன இன்ப துன்ப 
மா கடலைத்தண்டும் உயர் நிகழ்ச்சி ” 

                       இன்பம் துன்பம் இரண்டு மட்டுமே வாழ்க்கை அதற்கு மேல் அமைதி ஆனந்தம் என்ற இடம் இருக்கிறது என்பதற்கு மனம் செல்ல மறுப்பதால் சலிப்படையும் அறிவுதான் மரணத்தை வெல்ல ஒரு உபாயத்தைத் தேடியது .அதாவது தன் மரணம் தன் அனுமதியில்லாமல் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தார்கள் .அதற்கு அவர்கள் சொன்னக் காரணம் உலகவாழ்கை மூலம் உலகுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை முழுமையாகச் செய்தும் ஒழுக்கம் கடமை ஈகை மேற்கொண்ட அறவழி வாழ்ந்துத் துன்பப் பதிவுகளான உடலில் நோய் , உள்ளத்தில் களங்கம் இரண்டிலும் தூய்மைப்பெற்று மனிதகுலத் தேவையைப் புரிந்து இவ்வுலகில் வாழ்ந்து முடிக்க இந்த உடல் அவசியம் என்பதால் அவர்கள் தங்கள் உடம்பு தன் அனுமதியில்லாமல் நிலத்தில் விழுந்து விடக்கூடாது என்று நினைத்தார்கள் . அப்படி யோசித்தவர்களை இந்த மனிதகுலம் ஜீவன்முக்தர்கள் என்றும் சித்தர்கள் என்றும் பெயர் வைத்தது . 

            ஆனால் நிகழ்கால வாழ்வுப் பரமபதம் விளையாட்டு போல அறிவின் துணையோடு ஆன்மீகம் என்ற ஏணியில் இரண்டு படி ஏறினால் உலகவாழ்க்கை என்ற ஆறு பாம்புகளான - பேராசை ,சினம் ,கடும்பற்று,முறையற்றப் பால்கவர்ச்சி , உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம் போன்றவை ஒரே கொத்தாகக் கொத்தி மொத்தமாக ஆரம்பித்த இடத்துக்கே கொண்டு வந்து இறக்கி விட்டு விடுகிறதே அதற்கெல்லாம் விதி என்ற தலை எழுத்தில் இடம் வேண்டுமே? என்ற ஆதங்கம் எழுகிறது புரிந்து கொள்ள முடிகிறது . அப்படி இல்லை சரியான வழியில் பயணிக்காதவர்கள் மட்டுமே ஆன்மீகத்தில் துன்பப்படுகிறார்கள் .உங்கள் விதியின் வெளி முகம் எனப்படுவதாக வேதத்ரியம் சொல்வது உள்ளத்தில் களங்கம் , உடலில் நோய் ,முடிவெடுப்பதில் மனக்குழப்பம் இப்படி இருப்பவர்கள் கூடத் தன் விதியைக் கையில் எடுத்துக்கொள்ளலாம் .ஜீவன்முக்தி என்பது எல்லோருக்குமான சொத்து என்கிறது வேதத்ரியம் ஆன்மீகம் என்பதே நம் விதியை நம் கையில் எடுத்துக்கொள்ளக் கிடைத்த ஒரு ரகசியம்தான் மனவளக்கலை . 

                 இது எப்படிச் சாத்தியம் ? எல்லோருக்கும் இந்த நிலையை அடைவது முடிகிற காரியமா என்ற சந்தேகம் உங்களைக் கேள்விக் கேட்கலாம்.எப்படிச் சாத்தியம். மரணத்திற்குப் பிறகு என்னதான் நடக்கிறது? போனவர்கள் இதைப்பற்றிச் சொன்னதென்ன ஆதாரம் இருக்கிறதா இதற்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குக் கீழ் வருகிறதா என்ற உங்கள் உரத்தக் கேள்விக்குத் திரு.ஜக்கிவாசுதேவ் மரணத்திற்குப் பிறகு என்னதான் நடக்கிறது? என்ற தலைப்பில் பேசிய ஒரு சிரிப்புவிசயம் ஞாபகம் வருகிறது .அவர் சங்கரன்பிள்ளையின் மரணம் என்ற பெயரில் பேசும்போது, 

“சங்கரன்பிள்ளை ஒருமுறை தன் நண்பரிடம் சொன்னார், செத்துப்போனால், மற்றதெல்லாம் இல்லாமல்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், மேல் உலகத்தில் கிரிக்கெட் இல்லை என்றால், போரடிக்குமே. அங்கே கிரிக்கெட் இருக்குமா?” 

                    நம் உயிருக்கு அடிப்படையானது நமக்கு உள்ளே மட்டும் இல்லை. வெளியேயும் இருக்கிறது நண்பர் சொன்னார், ‘நீ முதலில் போனால், நீ பார்த்துச் சொல். நான் முதலில் போனால், நான் பார்த்துத் தெரிவிக்கிறேன்’. 
அந்த நண்பர்தான் முதலில் இறந்தார். அவர் இறந்த மூன்றாவது நாள் சங்கரன்பிள்ளைக்கு மேலே இருந்து அவர் குரல் மட்டும் கேட்டது. 

             ‘கிரிக்கெட் பற்றிக் கேட்டாயே, ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்டச் செய்தி. எது முதலில் வேண்டும்?’ ‘ஐயோ, நல்ல செய்தியை முதலில் சொல்’. ‘இங்கே கிரிக்கெட் இருக்கிறது’. ‘கெட்ட செய்தி?’ ‘திங்கட்கிழமை நடக்கும் மேட்ச்சில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்!’ 


ஜீவன்முக்தர்கள் 

                     வாழ்வில் தம் கடமைகளை முடித்தவர்கள் இனியும் இந்த உலக வாழ்வை நினையாமல் அருட்பேராற்றலோடு ஒன்றிக்கலப்பதை விரும்பிக் கலப்பதை விரும்புவர்கள் இன்னத் தேதியில் இன்ன இடத்தில் இந்த நேரத்தில் நான் பிரபஞ்சத்தை இயக்கும் இந்தப்பேறறிவுடன் என் சிற்றறிவை கலக்கச்செய்வேன் என்று முன் கூட்டியே மொழிகிறார்கள் .அதற்கு அவர்கள் தெர்ந்தெடுக்கும் வழி எல்லோரும் பின்பற்றிசெல்லும் எளிமையான வழி . 

                      ஜீவன்முக்திப் பெற விரும்புவர்கள் மெய்ஞானம் பெற்ற ஒரு குருவிடம் மாணவனாகி முதலில் ஜீவனின் இருப்பிடத்தை ஆக்கினைத் தீட்சை மற்றும் துரியத் தீட்சை மூலம் உணர்ந்து ,ஜீவனுக்கு உயிருக்கு இருப்பிடமான இறைநிலை என்ற சுத்த வெளியைத் துரியாதீதத் தீட்சை வழியே இந்தப் பேரியக்க மண்டலம் முழுவதும் ஆற்றல் களமாக உள்ள மகா ஆகாசத்தோடு சக்திக் களத்தோடு இணைந்துத் தவம் இயற்றக் குருவால் விளக்கம் Information பெற்று , அதை அகத்தவத்தின் மூலம் உணர்ந்து உறுதி Confirmation செய்து ,அந்தத் தவத்தில் ஆழ்ந்து ,ஆழ்ந்து அந்த நிலையைத் தன்னுடையதாக்கி Transformation  கொள்கிறார்கள் . அப்போது அவர் பயின்று பயிற்சித்த முறையில் மனதால் தனது உடலையும் இந்தப் பேரியக்க மண்டலத்தையும் தாண்டி செல்வர். இறுதியாக இறைநிலையோடு ஒன்றிவிடுவர்.

         இறைநிலையோடு தன்னைக் கலக்க விடுவதன் மூலம் இதனைச் சாதிப்பர்.இதனால் விரிந்த மனம் தனது பழைய பதிவுகளை நினைவு கூறும் வகையில் சுருங்கச் செய்வதோ ,உருவமும் ,வடிவமும் கொள்ளவோ செய்யாது.மனம் விரிந்த நிலையில் உள்ளதால் அங்கே உணர்ச்சிகளோ எண்ணங்களோ இருக்காது.இந்த நிலைப் பழக்கமாகிவிடும்.இந்த நிலையைப் பிரபஞ்சத்தின் நான்கு அடுக்குகளில் உடல் விட்டு விலகும் ஆன்மாக்கள் சென்று இறுதியாகக் கலக்கும் சாரூப்பியம் நிலைப் பேரியக்க மண்டல நிலையாகும் .
           
                இதில் தோய்ந்து ,தோய்ந்துப் பழக்கமாகி விட்டால் அவர்கள் விரும்பும் போது அதே நிலையில் தனது உயிரை ஜீவனை ,முக்தி என்ற வீடு பேற்று நிலைக்குக் கலந்து விடச் செய்யலாம் .இவர்களே ஜீவன்முக்தர்கள் .இதற்குத் தேவை உங்கள் உங்கள் விடாமுயற்சி மட்டுமே போதும் என்று சொல்லி அதைச் சாத்தியப்படுத்துகிறது வேதாத்ரிய ஆன்மீக விஞ்ஞானம். நம் மிக அருகே கூட பல ஜீவன்முக்தர்களின் தன்னை ஐக்கிய்ப்படுத்திக்கொண்டவர்கள் பலரும் இருக்கலாம். இப்போது கூட அவர்கள் உங்கள்  அருகில் இருக்கத்தான் செய்கிறார்கள் ..ஆழ்ந்த தவமியற்றும் எல்லோருக்கும் இது சாத்தியம்.

நாம் இறுதியாகப் பார்க்கவிருப்பது சித்தர்கள் மரணங்கள் எப்படி நிகழ்கின்றன .மரணத்திற்கு பிறகு அவர்களின் நிலை என்ன ? பேசுவோம் .,

புதன், 14 செப்டம்பர், 2016

போதிதர்மர் - இன்னொரு கௌதமபுத்தர் ! ( நூல் மதிப்புரை )ஜென்தத்துவச் சிந்தனை மேதை.
போதிதர்மர்
ஓஷோ
தமிழில் சுவாமி சியாமனந்த்.

உறுத்துகிறது.

                                 வெகு சில ஆண்டுகளாகப் புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவது என்பது குறிப்பிட்ட அந்தப் புத்தக்கத்தைப் படித்து விட்டேன் ,எனக்குப் புரிந்து விட்டது என்ற லேசான அலட்டலின் உதிர் இலைகளாய் மனதின் உள்ளே ஒரு தீராக் கேள்வி நிழலாடிக்கொண்டே இருந்தது . படிப்பதைக் கருத்துச்சொல்ல மீண்டும் வாசிப்பதுவும் ,குறிப்பெடுப்பதும் பல நல்ல கருத்துக்கள் ஆழப்பதிந்து அது பேசும்போது மேலெழுந்துப் பேச்சில் ஒரு கூர்மைப் பலப்படுவதுவும் இதன் பலனாய் புரிந்து கொள்ள முடிந்தது என்னவோ உண்மைதான் .ஆனால் முட்டாள் தனமாய் ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு உழைப்பைக்கூடப் புரிந்து கொள்ள முயலாமல் இது ஒரு வாரம் கூடத் தாங்காது என்று வாட்ஸப்பில் தியேட்டர் ஸ்டாண்டிலிருந்து வண்டியை எடுக்கும் முன் பகிர்ந்து கொள்வது போல இது கேளித்தனமானதல்ல புத்தகம் படித்துக் கருத்துச் சொல்வது . 

                               ஒவ்வொரு புத்தகம் தெரிந்த மொழியில் பேசினாலும் தெரியாத விசயங்களில் அதன் ஜீவனும் எழுதுபவனின் ஆளுமையை ஒளித்து வைத்து இருக்கிறது என்பது மெல்ல புரிந்து கொள்ள வைத்து இருக்கிறது . அதிலும் ஆன்மீகப் புத்தகங்கள் படித்து அதை விட ஒரு படி மேலே நின்று யோசித்து எழுதுவது இன்னும் பழக்கப்பட வேண்டும் .அப்படி ஆன்மீகத்தில் நின்று அனுபவித்து எழுதப்படாத புத்தங்களைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம் அதற்கு விமர்சனம் எழுதுவது அது புரிந்துவிட்டது போல நடிப்பது உறுத்துகிறது . அப்படி ஒரு மன உறுத்தலுடன்தான் இந்தப் புத்தக்கமும் ஆரம்பிக்கிறது... 


இன்னொரு கௌதமபுத்தர் !

                      போதிதர்மர் இந்தப் பெயரைக் கேட்டவுடன் தமிழ் சமூகத்தின் அடையாளமாக இருப்பது இப்போதைக்கு ஏழாம் அறிவு சடைமுடித் தாடி சூர்யா மட்டுமே.ஆனால் கூகுள் காட்டும் போதிதர்மர் மிக முரட்டுத்தனமான முகத்துடன் தெரிகிறார்.ஆனால் ஓஷோ காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசன்.அவர் அழகியவனாக இருக்க வேண்டும் என்கிறார் .அதனால் நாம் நமக்குத்தெரிந்த சூர்யா முகத்தையே போதிதர்மருக்கு விட்டுக்கொடுத்து விட்டு அடுத்தக் கட்டத்துக் நகர்வோம். 

             புத்தர் மறைந்த 600 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் முப்பதாயிரம் புத்தக்கோவில்கள் தோன்றிப் புத்தமதம் செழித்து நின்றது .மொத்த அன்றைய மக்கள் தொகையில் ஐந்து சதவிகித மக்கள் அதாவது இரண்டு லட்சம் புத்த துறவிகள் அங்கு இருந்தனர் .ஆனால் அதில் ஒருவர்கூட மெய்ஞானம் பெற்றவரில்லை .இதுதான் அங்குப் பிரச்சனை.அதைத்தீர்க்கவே போதிதர்மருடைய குருவான பெண் மெய்ஞானிப் பிரயக்தாராஅவரைச் சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவை என்று அனுப்பி வைத்து இருக்கிறார். 


ஓஷோவின் போராட்டம் !

             அங்குப் போன போதிதர்மர் சுமார் முப்பது வருடம் கற்றுக்கொள்ளவேண்டிய சீன மொழியை மூன்று வருடத்திற்குள் கற்றுத்தெளிந்து அந்த மொழியில் புத்தரின் சூத்திரங்கள் வடிவ போதனைகளை விளக்கி மக்களை வழிப்படுத்த முயன்றார் . அவ்வாறு அவர் போதித்த வார்த்தைகளை ,விளக்கங்களை அவரின் சீடர்களில் நாழ்வரில் ஒருவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்கிறார் ஓஷோ.ஆனால் அப்படி எழுதிய அந்தச் சீடர் ஒரு ஞானமடையாதவர் .காரணம் போதிதர்மரால் ஒத்துக்கொள்ளப்பட்ட அவர் சீடர்களில் ஒருவர் ஹூய்கோ மட்டும்தான் மற்ற மூவர்களில் யாரோ ஒருவரால்தான், இந்தியாவுக்குப் போதிதர்மர் திரும்ப நினைத்த கடசி நாள் இரவு தங்கியபோது உணவில் விசம் வைத்துக் கொல்லப்பட்டார்.அப்படிபட்ட மெய்ஞானம் பெறாத ஒரு சீடனின் மூன்று போதனைகள் தொகுப்புகளின் குறிப்புகளில் போதிதர்மர் சொல்லாத வார்தைகள் கலந்து இருப்பதாக ஓஷோ அறுதியிட்டுச் சொல்கிறார். இது ஒரு முதல் கோணல் . 

                        இரண்டாவது புத்தர் தன் காலத்தில் அவர் வேதாந்திகள் , பண்டிதர்கள் ,பிரமாணர்களை,மதபோதகர்களை மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்கள் என்று ஒதுக்கியதன் விளைவால் புத்தரின் மறைவுக்குப் பின் அதுவரை ஒளிந்து இருந்தவர்களால் இந்தச் சூத்திரங்களின் போதனைகள் மாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார்.இது மஹாயானம் பின்பற்றிய சீனாவில் மட்டுமல்ல ஹினயாணம் பின்பற்றிய இலங்கையிலும் இது நடந்து இருக்கிறது என்கிறார் .இது புத்தரின் போதனைக்குக் கிடைத்த இரண்டாவது கோணல் அல்லது சோதனை . 

                    மூன்றாவது முக்கியமான கோணல் மஹாயானம், ஹீனயானம் இரண்டு பெரும்பிரிவில் போதிதர்மர் மஹாயானத்தை மட்டுமே போதித்தார் .ஹீனயான வழிகளையும் அதன் மூலம் மெய்ஞானம் பெறுபவர்களை வெறுத்தார் .என்ன போதிதர்மர் ஒரு மெய்ஞானியாச்சே எப்படிக் கோபப்பட்டார் .கோபம் மெய்ஞானியின் குணமல்லவே என்று சந்தேகப்படலாம் .ஆனால் அப்படிச் சில சறுக்கல்கள்தான் இந்தப்புத்தக்கத்தின் முக்கிய இடங்கள். அதாவது போதிதர்மரின் வார்த்தைகள் தாய்மொழியில் போதிக்கப்பட்டவையல்ல என்பதுவும் ,மெய்ஞானம் பெறாத ஒரு சீடனின் குறிப்புகள் என்பதுவும், புத்தரின் மறைவுக்குப் பின் அந்தந்த புத்தரல் புறக்கணிக்கப்பட்ட மக்களின் இடைச்செருகளாலும் கடைசியாக ஹீனயான மெய்ஞானிகள் மீதானப் போதிதர்மரின் கோபம் இப்படிப் பல விசயங்களுக்குள் புத்தரின் சூத்திரங்களில் போதிதர்மரின் சரியான விளக்கங்களைத் தேடும் ஓஷோவின் முயற்சியே இந்த முழுப்புத்தக்கத்தின் 705 (720) பக்கங்களின் போராட்டம் என்பதே சரியான வார்த்தை. 


ஓஷோவின் பார்வை

                            இதுதான் ஓஷோவின் முப்பதி ஐந்து வருட உரைகளால் எழுதப்பட்டு வரும் நூல்களை வாசிக்கும் போது ஏற்படும் சவால் .அதாவது ஓஷோவின் பார்வை பேசும் விசயத்தின் அஸ்திவாரத்தை ஆழமாக ஊடுறுவும் பார்வை .அங்கு எதுவும் தப்ப முடியாது .அவர் எதையும் கொச்சைப்படுத்துவதும் இல்லை நியாப்படுத்தவும் இல்லை.இத்தனைக்கும் போதிதர்மரை ஓஷோவுக்கு மிகவும் பிடிக்கும் .அவரின் வார்த்தைகளை ஓஷோ ரசிக்கிறார் ,ஆராதிக்கிறார்.அதிலும் புத்தரை விடவும் ஒரு படி மேலே போதிதர்மரை விரும்புகிறார் ஓஷோ .காரணம் புத்தர் அவர் காலத்தில் (நேபாளம் லும்பினியில் உள்ள மாயாதேவி கோவில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சிப் படி அப்போது செங்கற்களால் கட்டப்பட்ட புத்த விஹாரைகளின் காலத்தைக் கணிக்கும் போது) கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதாக அறிகிறோம் .அந்தங்காலத்தில் வேதங்கள் ஆட்சி புரிந்த காலங்கள் அப்போது வேதங்களைக் குப்பை என்று வர்ணித்தவர் புத்தர்.அது மட்டுமல்ல கடவுள் அவதாரங்களை முற்றிலுமாக ஒதுக்கியவர் புத்தர்.எல்லா கோவில்கள் , சிலைகள் ,வேதங்கள் மக்களைச் சுரண்டும் வஞ்சகம் நிறைந்த குருக்களால் உருவாக்கப்பட்டவை என்று புறம் தள்ளியவர் அவர்.ஆனால் அப்படிப்பட்ட புத்தர் பெண்களுக்குத் தீட்சை கொடுக்கத் தயங்கினார் .ஆனால் போதிதர்மரோ பிரயக்தாரா என்ற பெண் மெய்ஞானியால் தீட்சைபெற்றுப் பெண்மையை முன்னிறுத்துவதன் மூலம் ஓஷோ மனதைப் புத்தரை விடப் போதிதர்மர் ஒரு படி மேலே நின்றார். 


                           இந்த நூல் முழுக்க முழுக்கப் போதிதர்மரின் காலமாகப் புரிந்து கொள்ளப்பட்ட கி.பி.475-550க்குள் அவர் புத்தரின் சூத்திரங்களின் விளக்கங்கள் மட்டுமே இந்த நூல் முழுதும் ஓஷோவின் கண்கள் வழியே நாம் பிராயாணிக்கிறோம் .பொதுவாகவே அவரின் நூல்களில் அவரின் சமகாலத்தில் நடந்த வரலாற்றுப் பதிவுகள் ,அரசியல் சூல்நிலைகள் பிரதிபலிக்கும்.அதனூடே அவரின் கதைகள் ,குலுங்க குலுங்க நம்மைச் சிரிப்பில் சிறைவைக்கும் அனுபவங்களுக்கு எப்போது பஞ்சம் இருப்பதில்லை .இது அல்லாமல் அந்த விசய்ங்களுக்கு ஊடே சொல்லும் ஆன்மீக விளக்கங்கள் மிக முக்கியமானவை .குறிப்பாக குரு என்பவர் யார் ? ஆசிரியர்,அத்யாபக்,உபாத்தியார்,ஆச்சாரியார் என்பவர்கள் பணி என்ன ? செயல்கள் எப்படிச் சுவர்க்கத்தையும் நரகத்தயும் உருவாக்குகிறது என்பதைப் பேசுவதோடு ,நீங்களும் புத்தர்தான் என்ற ஆன்மீக நிலைப்பாடு ஒவ்வொருவருக்கும் சாத்தியம் என்பதை மிக அழகாக விவரிக்கிறார் ஓஷோ.இதோடு சமஸ்கிருத மொழியின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் ,தியானத்தின் அவசியம் ,புத்தரின் மூன்று உடல்களான 1.உருமற்ற உடல் 2. வெகுமதி உடல் 3. உண்மை உடல் விளக்கம் ஆன்மீகத்தில் வேதாத்ரியத்தின் 1. Physical Body - பால் உணர்வு சக்தித் திணிவு மையம் 2. Astral Body - உயிர் துகளின் திணிவு மையம் 3. Bio Magnetic Body - ஜீவகாந்த ஆற்றலின் திணிவு மையம் பற்றி வெகு அருகில் நின்று பேசுகிறது .


செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சொந்த நாட்டின் அகதிகளா நாம் ?          கர்நாடகாவில் வயசுப் பார்க்காம அடிக்கிறார்கள் ,போகிற வண்டிகளைக் கொளுத்துவது ,கண்ணாடியை உடைப்பது எல்லாம் எதைக்காட்டுகிறது ? 

தமிழ் பேசுவதாலா ,தமிழென்பதாலா ,தண்ணிக் கேட்டதாலா எது காரணம் ? 

       வன்முறை கையாலாகதாவன் , தன்னை நேசிக்கத் தெரியாதவனின் கடைசி ஆயுதம் .

           முன் எப்பொதும் இல்லாத அளவுக்குச் செய்திச் சேனல்கள் எல்லா வன்முறைகளையும் பதிவு செய்கின்றன.அவர்கள் பதிவு செய்யாது போனாலும் அவை நடக்கத்தான் செய்யும் . 

           சொந்த நாட்டுக்குள் நதியின் பாதையை ஒரே தேசம் என்று பேச முடியாத நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டு இருப்பதில்லை .ஒட்டு மொத்த தமிழகமே ஜாதிவாரியாக அடித்துக்கொண்டாலும் மொழிவாரியாக எப்போதும் பிரித்துப் பார்ப்பதில்லை. 

            தமிழ் மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும் நாடுகளும்கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் . தென்னகம் ஒரே மொழி பலவாறாகப் பேசப்படுகிறது .எனவே இங்கு மொழி பிரச்சனையில்லை .அரசியல் நம்மைப் பிரிக்கிறது .எந்த அரசியல் நம்மை ஆள்கிறதோ அந்த அரசியல் நம்மை நம் ஒற்றுமையைத் தோற்கடித்துக்கொண்டு இருக்கிறது .எங்கிருந்து வந்தாலும் ஆட்சிக்கட்டிலில் வைத்து அழகு பார்க்கும் நாம் நம் கட்டிலில் இடமில்லாமல் தூக்கத்தைத் தொலைத்து விட்டு அனாதையாக ஏன் நிற்கிறோம் .நம்மிடம் தன்னிறைவு இல்லை .

            காசு பணம் சம்பதிக்க மாவட்டம் விட்டு மாவட்டம் போவது போல இனி மாநிலம் விட்டு மாநிலம் போக நமக்கு விதியில் எழுதவில்லை .தமிழகம் கரைதப்பியக் கப்பல்களுக்கே வழிகாட்டியாக இருக்கும் போது வெறும் உரிமைகளுக்காகக் கையேந்தி நிற்கக் காரணம் நம்மிடம் எல்லாம் இருந்தும் நம்பிக்கைப் பொய்த்து வருகிறது .நாம் இந்தியர்கள் என்பது எப்போதும் மாறாத பெருமைக்குறியதுதான் .

             ஆனால் நம் அடையாளம் காக்கப்படவேண்டுமென்றால் .நம் சமூகம் பின்னோக்கியப் பார்வையில் நாம் இழந்த விசயங்களை மீட்டெடுக்க வேண்டும் அது நம் பாண்பாட்டில் புதைந்து கிடக்கிறது .‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம் நமக்கு வேண்டும் .


           தமிழ் தொடர்பு மொழியல்ல பண்பாட்டின் அடையாளம் .இருப்பதைக் குறை சொல்லிச் சமூகத்தைத் திருத்துகிறேன் என்ற பெயரில் கடந்த ஐம்பது வருடமாக நாம் இழந்தது நம் வழிபாடுகளை .பெற்றது நாத்திகம் என்ற அவசர வழிகளைத் தலைவாசலாக்கிக் கொண்டதுதான் .தவறு என்பது வழிபாடுகளில் நடந்த குறைகள்.நம் வழிபாடுகளில் குறை இல்லை .அதனைத் தனது நலனுக்காகத் தூக்கிப்பிடித்த சில சக்திகள் செய்தத் தோற்றப்பிழை .அதை மட்டும் உதறி விட்டுப் போகத்தெரியாமல் மொத்தமும்  வேண்டாம் என்று ஒதுக்கி விட்டோம்.அப்படி ஒரு மக்களை உருவாக்கவே கூடாது .

           நம் வழிபாடுகள் இயற்கையோடு கைகோர்த்துப் போகத்தெரிந்த மாபெரும் தவம். .இனி தமிழ் பண்பாட்டின் கூறுகளை எழுதுவோம் ,படிப்போம்,சிந்திப்போம் ...நாம் நம் சிந்தனைகளில் வளம் பெற உறுதிகொள்வோம் .நம் சந்ததிகளை தமிழ்நாட்டின் முதுகெழும்பாக மாற்றுவோம் .நம் குலதெய்வங்களான நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள் .இந்த அரசியல் ,சட்டம்,பிழைப்பு எல்லாம் ஒரே பொருளாக மாறட்டும் .யாரையும் ஒதுக்க வேண்டாம் .நம் வேலை மீட்டெடுப்பது என்ற சபதம் மட்டுமே .இந்தியாவிற்குள் தமிழகம் என்பது தமிழகத்திற்குள் இந்தியா என்று கௌரவம் பெறட்டும் நம் நாடு .நம்புவோம் .

தோற்றுப்போகாத சரித்திரம் தமிழின் சரித்திரம் .தமிழ் இயற்கையின் கொடை .