ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

சுய விருப்ப மரணம் - ஜீவன்முக்தி . ( துரத்தல் 7 )



                               நாம் எல்லோரும் தவிரக்க முடியாமல் ஏதோ ஒரு ஆன்மாவின் பதிவுகளாகச் சுமந்து கொண்டு இருப்பவர்கள்தான் .ஏனெனில் பிறப்பே பதிவின் விளைவுதான் .இதற்கு ஆறுதலே இல்லையா என்பது போலவும் ஆன்மா என்றால் தொல்லைதானா என்ற கேள்விக்கு அடுத்தப் பதிவில் அவதார புருசர்கள் ,சித்தர்கள் ஜீவன் முக்தியடைந்த புண்ணிய ஆன்மாக்கள் எப்படித் தங்கள் ஆன்மாவை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசி இந்தப் பதிவின் துரத்தல்களை முடித்துக்கொள்வோம் ...நாம் கடைசியாய் இப்படித்தான் #”அகாலமரண” ஆன்மாக்களின் செயல்கள் ! துரத்தல் 6 பேசி வைத்து இருந்தோம் ! 

இறந்தவர் பிறப்பதில்லை . 

                               இந்தப் பதிவைத் தொடங்கிய பிறகு நான் சந்திக்கும் பலரும் மறுபிறப்பைப் பற்றி அக்கறையாய் விசாரிக்கிறார்கள் .இந்தியாவிற்கு வெளியே தொடங்கிய அனேக மதங்கள் மறுபிறப்பை ஆதரிப்பதில்லை . அதனால் இந்தியர்களுக்கு மறுபிறப்பைப் பற்றிய பயம் கலந்த விசாரணை ஐம்பது வயதுக்கு மேல் வரும், கால் முட்டி வலியைப்போல வந்து விடுவது இயல்பாகிவிட்டது.தாய்த் தந்தை வழியே பிறந்த ஒரு உயிர், அது 120 வருடம் வாழ்ந்து முடித்து இருந்தாலும் ,ஏதோ ஒரு காரணத்தால் அகால மரணம் அடைந்து இருந்தாலும் ,சித்தர்களாய் ,ஞானிகளாய் ,மகான்களாய் வாழ்ந்து முடித்து இருந்தால் கூட அவர்களின் ஆன்மா மறுபிறப்பாய் பிறப்பதில்லை என்பது வேதாத்ரியம் முன் வைக்கும் கருத்து .மறு பிறப்பு என்பது நமக்கு பிறக்கும் குழந்தைகள் மட்டுமே .எனவே இறந்து போன உயிர் யாரோ ஒரு தாயின் கருவறையில் புகுந்து மறுபிறப்பாய் பிறப்பதில்லை .இதற்கு என மலர்ந்த சிவவாக்கியரின் பாடல்– 46 பேசுகிறது . 

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா 
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா 
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா 
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே. 

                     மடியிலிருந்து கறந்த பால் திரும்பி மாட்டின் முலைக்குள் செல்ல இயலாது. உறைக்குத்திய தயிரைக் கடைந்து எடுத்த வெண்ணை மறுபடியும் தயிராகாது. அதுபோல் சங்கிலிருந்து வெளிவந்த ஓசை சங்குக்குள் செல்ல முடியாது. உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் உடலுக்குள் புகமுடியாது. மொட்டாக இருந்த மலர் மலர்ந்தபின் திரும்பவும் மொட்டாக முடியாது. மரத்திலிருந்து உதிர்ந்த்த இலை, பூ, காய் ஆகியவை திரும்ப மரத்தைச் சென்று அடையாது. அதுபோல் இறந்தவர் பிறப்பதில்லை. இல்லை! இல்லை! இல்லையே! 

               மரணம் என்பது ஒரு வகையில் உயிரின் விடுதலை என்று சொல்வார்கள் .  இளைமையில் ஒத்துக்கொள்ள மாட்டோம் .அப்போது எல்லாமே இன்பமாகத் தெரிகிறது .கொஞ்சம் மத்திய வயதில் வேலை பொறுப்புமும் கடமைகளும் வந்த பின் நீண்ட நாள் வாழும் ஆசை வந்து இறுகப்படித்துக் கொள்கிறது  .    ஐம்பது வயதுக்கு மேல் லேசாய் உடல் உபாதைகள் தலை தூக்கும் போது ,நீண்ட நாள் வாழ்வதை விடவும் நோயில்லாமல் வாழ வேண்டுமே என்ற அக்கறைப்பிடித்து ஆட்டுக்கிறது . ஒருநாள் எதிர்பாராத போது மரணம் நம் வாசல் கதவைத் தட்டாமல் தள்ளிதிறந்து முன்னே வந்து உற்றுப் பார்க்கும் போது எப்படியாவது எப்படியாவது வாழ வேண்டுமே என்ற கவலை கலவரமாகி விடுகிறது.      ஆனால் அந்தக்கட்டத்தில் எல்லா நினைவுகளும் தோள்மேல் உட்கார்ந்து அது செய்து இருக்கலாம்,இது செய்து இருக்கலாம் என்று பாவமன்னிப்புக் கோர அசைப்படுகிறோம் . இப்படியேதான் பெரும்பாலோர் மரணம் உடலிருந்து பறித்துக்கொண்டது போல எமனுக்கு டென்சனைத் தந்துவிடுகிறார்கள் .


                    இதற்கு ஓஷோ சொன்னக் குட்டிக்கதை ஞாபகம் வருகிறது .உபநிடதத்தில் யயாதி என்ற மன்னன் 100 வயதை அடைந்த போது மரணம் கொண்டு போக வந்ததாம் .இன்னும் தான் வாழ ஆசைப்படுவதாகவும் தன்னுடைய 100 மனைவியர்களின் 100 மகன்களில் யாராவது ஒருவரை தந்து தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போட விரும்பி மகன்களனைவரையும் கேட்டாராம் எல்லோரும் மவுனமாக இருக்க அதில் கடசியாகப் பிறந்து 16 வயது மகன் மட்டும் சம்தித்தானாம் .மரணமே இரக்கப்பட்டு ஏன் இத்தனை பேர் இருக்க நீ மட்டும் சம்மதிக்கிறாய் என்றதாம் .அதற்கு அவன் எனது தந்தை 100 வயது வாழ்ந்தும் திருப்திப்படவில்லை .அப்படி இருக்கும் போது ஏன் காலத்தை நான் வீணாக்க வேண்டும் ? அதுமட்டுமல்ல அப்படித் திருப்தித் தராத வாழ்வை என் தந்தைக்கு மாற்றாகச் செய்யும் உபகாரத்தையாவது செய்கிறேன் என்று மரணத்துடன் போனானாம் .ஆனாலும் யயாதி மன்னன் இதே போல ஒன்பது முறை தந்து 1000 வருடம் வாழ்ந்து தனது மரணத்தைத் தள்ளிப்போட்டுக்கடைசியிலும் திருப்தி இல்லாமல் மரணத்துடன் அரைமனதாய் உடன் சென்றதாய் அந்தக்கதை முடிகிறது  .இப்படித்தான் நம்மில் பலரும் எமனுக்கே வாய்தாக் கொடுத்துக் கொண்டு டென்சன் பண்ணிக்கொண்டு இருக்கிறோம் . 

”மரணந்தான் சீவஇன இன்ப துன்ப 
மா கடலைத்தண்டும் உயர் நிகழ்ச்சி ” 

                       இன்பம் துன்பம் இரண்டு மட்டுமே வாழ்க்கை அதற்கு மேல் அமைதி ஆனந்தம் என்ற இடம் இருக்கிறது என்பதற்கு மனம் செல்ல மறுப்பதால் சலிப்படையும் அறிவுதான் மரணத்தை வெல்ல ஒரு உபாயத்தைத் தேடியது .அதாவது தன் மரணம் தன் அனுமதியில்லாமல் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தார்கள் .அதற்கு அவர்கள் சொன்னக் காரணம் உலகவாழ்கை மூலம் உலகுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை முழுமையாகச் செய்தும் ஒழுக்கம் கடமை ஈகை மேற்கொண்ட அறவழி வாழ்ந்துத் துன்பப் பதிவுகளான உடலில் நோய் , உள்ளத்தில் களங்கம் இரண்டிலும் தூய்மைப்பெற்று மனிதகுலத் தேவையைப் புரிந்து இவ்வுலகில் வாழ்ந்து முடிக்க இந்த உடல் அவசியம் என்பதால் அவர்கள் தங்கள் உடம்பு தன் அனுமதியில்லாமல் நிலத்தில் விழுந்து விடக்கூடாது என்று நினைத்தார்கள் . அப்படி யோசித்தவர்களை இந்த மனிதகுலம் ஜீவன்முக்தர்கள் என்றும் சித்தர்கள் என்றும் பெயர் வைத்தது . 

            ஆனால் நிகழ்கால வாழ்வுப் பரமபதம் விளையாட்டு போல அறிவின் துணையோடு ஆன்மீகம் என்ற ஏணியில் இரண்டு படி ஏறினால் உலகவாழ்க்கை என்ற ஆறு பாம்புகளான - பேராசை ,சினம் ,கடும்பற்று,முறையற்றப் பால்கவர்ச்சி , உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம் போன்றவை ஒரே கொத்தாகக் கொத்தி மொத்தமாக ஆரம்பித்த இடத்துக்கே கொண்டு வந்து இறக்கி விட்டு விடுகிறதே அதற்கெல்லாம் விதி என்ற தலை எழுத்தில் இடம் வேண்டுமே? என்ற ஆதங்கம் எழுகிறது புரிந்து கொள்ள முடிகிறது . அப்படி இல்லை சரியான வழியில் பயணிக்காதவர்கள் மட்டுமே ஆன்மீகத்தில் துன்பப்படுகிறார்கள் .உங்கள் விதியின் வெளி முகம் எனப்படுவதாக வேதத்ரியம் சொல்வது உள்ளத்தில் களங்கம் , உடலில் நோய் ,முடிவெடுப்பதில் மனக்குழப்பம் இப்படி இருப்பவர்கள் கூடத் தன் விதியைக் கையில் எடுத்துக்கொள்ளலாம் .ஜீவன்முக்தி என்பது எல்லோருக்குமான சொத்து என்கிறது வேதத்ரியம் ஆன்மீகம் என்பதே நம் விதியை நம் கையில் எடுத்துக்கொள்ளக் கிடைத்த ஒரு ரகசியம்தான் மனவளக்கலை . 

                 இது எப்படிச் சாத்தியம் ? எல்லோருக்கும் இந்த நிலையை அடைவது முடிகிற காரியமா என்ற சந்தேகம் உங்களைக் கேள்விக் கேட்கலாம்.எப்படிச் சாத்தியம். மரணத்திற்குப் பிறகு என்னதான் நடக்கிறது? போனவர்கள் இதைப்பற்றிச் சொன்னதென்ன ஆதாரம் இருக்கிறதா இதற்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குக் கீழ் வருகிறதா என்ற உங்கள் உரத்தக் கேள்விக்குத் திரு.ஜக்கிவாசுதேவ் மரணத்திற்குப் பிறகு என்னதான் நடக்கிறது? என்ற தலைப்பில் பேசிய ஒரு சிரிப்புவிசயம் ஞாபகம் வருகிறது .அவர் சங்கரன்பிள்ளையின் மரணம் என்ற பெயரில் பேசும்போது, 

“சங்கரன்பிள்ளை ஒருமுறை தன் நண்பரிடம் சொன்னார், செத்துப்போனால், மற்றதெல்லாம் இல்லாமல்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், மேல் உலகத்தில் கிரிக்கெட் இல்லை என்றால், போரடிக்குமே. அங்கே கிரிக்கெட் இருக்குமா?” 

                    நம் உயிருக்கு அடிப்படையானது நமக்கு உள்ளே மட்டும் இல்லை. வெளியேயும் இருக்கிறது நண்பர் சொன்னார், ‘நீ முதலில் போனால், நீ பார்த்துச் சொல். நான் முதலில் போனால், நான் பார்த்துத் தெரிவிக்கிறேன்’. 
அந்த நண்பர்தான் முதலில் இறந்தார். அவர் இறந்த மூன்றாவது நாள் சங்கரன்பிள்ளைக்கு மேலே இருந்து அவர் குரல் மட்டும் கேட்டது. 

             ‘கிரிக்கெட் பற்றிக் கேட்டாயே, ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்டச் செய்தி. எது முதலில் வேண்டும்?’ ‘ஐயோ, நல்ல செய்தியை முதலில் சொல்’. ‘இங்கே கிரிக்கெட் இருக்கிறது’. ‘கெட்ட செய்தி?’ ‘திங்கட்கிழமை நடக்கும் மேட்ச்சில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்!’ 


ஜீவன்முக்தர்கள் 

                     வாழ்வில் தம் கடமைகளை முடித்தவர்கள் இனியும் இந்த உலக வாழ்வை நினையாமல் அருட்பேராற்றலோடு ஒன்றிக்கலப்பதை விரும்பிக் கலப்பதை விரும்புவர்கள் இன்னத் தேதியில் இன்ன இடத்தில் இந்த நேரத்தில் நான் பிரபஞ்சத்தை இயக்கும் இந்தப்பேறறிவுடன் என் சிற்றறிவை கலக்கச்செய்வேன் என்று முன் கூட்டியே மொழிகிறார்கள் .அதற்கு அவர்கள் தெர்ந்தெடுக்கும் வழி எல்லோரும் பின்பற்றிசெல்லும் எளிமையான வழி . 

                      ஜீவன்முக்திப் பெற விரும்புவர்கள் மெய்ஞானம் பெற்ற ஒரு குருவிடம் மாணவனாகி முதலில் ஜீவனின் இருப்பிடத்தை ஆக்கினைத் தீட்சை மற்றும் துரியத் தீட்சை மூலம் உணர்ந்து ,ஜீவனுக்கு உயிருக்கு இருப்பிடமான இறைநிலை என்ற சுத்த வெளியைத் துரியாதீதத் தீட்சை வழியே இந்தப் பேரியக்க மண்டலம் முழுவதும் ஆற்றல் களமாக உள்ள மகா ஆகாசத்தோடு சக்திக் களத்தோடு இணைந்துத் தவம் இயற்றக் குருவால் விளக்கம் Information பெற்று , அதை அகத்தவத்தின் மூலம் உணர்ந்து உறுதி Confirmation செய்து ,அந்தத் தவத்தில் ஆழ்ந்து ,ஆழ்ந்து அந்த நிலையைத் தன்னுடையதாக்கி Transformation  கொள்கிறார்கள் . அப்போது அவர் பயின்று பயிற்சித்த முறையில் மனதால் தனது உடலையும் இந்தப் பேரியக்க மண்டலத்தையும் தாண்டி செல்வர். இறுதியாக இறைநிலையோடு ஒன்றிவிடுவர்.

         இறைநிலையோடு தன்னைக் கலக்க விடுவதன் மூலம் இதனைச் சாதிப்பர்.இதனால் விரிந்த மனம் தனது பழைய பதிவுகளை நினைவு கூறும் வகையில் சுருங்கச் செய்வதோ ,உருவமும் ,வடிவமும் கொள்ளவோ செய்யாது.மனம் விரிந்த நிலையில் உள்ளதால் அங்கே உணர்ச்சிகளோ எண்ணங்களோ இருக்காது.இந்த நிலைப் பழக்கமாகிவிடும்.இந்த நிலையைப் பிரபஞ்சத்தின் நான்கு அடுக்குகளில் உடல் விட்டு விலகும் ஆன்மாக்கள் சென்று இறுதியாகக் கலக்கும் சாரூப்பியம் நிலைப் பேரியக்க மண்டல நிலையாகும் .
           
                இதில் தோய்ந்து ,தோய்ந்துப் பழக்கமாகி விட்டால் அவர்கள் விரும்பும் போது அதே நிலையில் தனது உயிரை ஜீவனை ,முக்தி என்ற வீடு பேற்று நிலைக்குக் கலந்து விடச் செய்யலாம் .இவர்களே ஜீவன்முக்தர்கள் .இதற்குத் தேவை உங்கள் உங்கள் விடாமுயற்சி மட்டுமே போதும் என்று சொல்லி அதைச் சாத்தியப்படுத்துகிறது வேதாத்ரிய ஆன்மீக விஞ்ஞானம். நம் மிக அருகே கூட பல ஜீவன்முக்தர்களின் தன்னை ஐக்கிய்ப்படுத்திக்கொண்டவர்கள் பலரும் இருக்கலாம். இப்போது கூட அவர்கள் உங்கள்  அருகில் இருக்கத்தான் செய்கிறார்கள் ..ஆழ்ந்த தவமியற்றும் எல்லோருக்கும் இது சாத்தியம்.

நாம் இறுதியாகப் பார்க்கவிருப்பது சித்தர்கள் மரணங்கள் எப்படி நிகழ்கின்றன .மரணத்திற்கு பிறகு அவர்களின் நிலை என்ன ? பேசுவோம் .,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக