வெள்ளி, 30 ஜூன், 2017

இயேசுவின் இரண்டு வரலாறு ஒரே குரல் !


            ஒரு உறைக்குள் இரண்டு கத்தி வைத்துக்கொள்ள முடியாது .ஆனால் இரண்டு அதி உன்னத உலகை மாற்றிய வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னனியாகக் கொண்ட வேவ்வேறு இடங்களில் உருவான இரு புத்தகங்கள் ஒரே விசயத்தில் இணைவதை எதேச்சையாக வாசிக்க நேர்ந்ததே இந்த மதிப்புரையின் அடிநாதம்.ஆனால் காசிக்குப் போனவர்களின் யாத்திரை ராமேஸ்வரத்தில் முடிய வேண்டும் என்ற ஐதீகம் போல முதல் புத்தகம் வாசித்தவர்கள் இரண்டு புத்தகத்தை நிச்சயம் வாசிக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

     ஆர்.சி.சம்பத் அவர்களின் எழுத்தில் உருவான இயேசு கிறிஸ்து மக்களோடு 1000 நாட்கள் என்ற புத்தகத்தை நூலத்திலிருந்து எடுத்துச் சென்று முழுவது வாசிக்க முடியாமல் கால நீடிப்புச் செய்யப் போன இடத்தில் ஸ்வீடன் நாட்டின் பேர் லாகர் குவிஸ்டுவின் "Par Lagerkvist" என்ற படைப்பான பாரபாஸ்என்ற நாவலைத் தமிழில் திரு.க.நா.சுப்பிரமணியம் மொழிபெயர்பு செய்தது கிடைத்தது.

        முன்னது இயேசுத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மூன்று ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறது.அதாவது மக்களோடு 1000 நாட்கள் இயேசுவின் வாழ்கையில் அவர் செய்த அற்புதங்கள் பற்றிப் பேசத்தொடங்கி,அவர் தனது கொள்கையால் மக்களை ஈர்த்து வழி நடத்திச் சென்றதையும் அதைப் பிடிக்காத யூதர்கள் அவர்களின் உட்பிட்ரிவான பரிசேயர் மற்றும் சது சேயர்களின் சூழ்ச்சியால் இயேசு சிலுவையில் ஒரு வெள்ளிக் கிழமையன்று சிலுவையில் அறைந்து மரித்துப் பின் மூன்று நாட்களுக்குப் பிறகு தோன்றியதும் அதற்குப் பிறகு அவருடைய சீடர்களுடன் நாற்பது நாட்கள் தங்கியிருந்த வரை பேசி முடிக்கிறது !

        பின்னது ( பாரபாஸ் ) கொல்கொதா மலையின் சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்க விடப்பட்டு இயேசு உயிர் நீத்ததை உடனிருந்து தன் கண்களால் கண்டவர்களாக அவரோடு தண்டனைக்கு உள்ளான இரண்டு திருடர்கள் மற்றும் அன்னை மேரி , சகோதரி மேரி மாக்டலென்,வெரோனிகா.சைமன் பீட்டர்,ஜோசப் மேலும் ரோமப் பேரரசின் சிப்பாய்கள் என்று மட்டுமே உடனிருந்தனர் என்று எல்லோருமே நினைக்கின்றோம் ஆனால் அங்கு மறைவிலிருந்து ஒரு உருவம் கவனித்துக் கொண்டு இருந்தாகவும் அவன் பெயர் பாரபாஸ் என்பதாகவும் அவன் இயேசுவின் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து வாழ்வின் இறுதியில் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதை வரை அவனுடைய கோணத்தில் பேசுகிறது .

சரி யார் இந்தப் பாரபாஸ் ?

         ஈவு இரக்கமற்ற கொள்ளைக்காரன் .இவன் குற்றம் நிரூபிக்கப்பட்டுச் சிலுவையில் அறைந்து கொள்வதற்காகக் காத்திருப்பில் இருந்த போது அந்தக் கால வழக்கப்படி பாஸ்குத் திருவிழாவின் போது ஒரு குற்றவாளிக் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யும் வழக்கம் இருந்தது.அதே சமயம் இதே தண்டனையை இயேசுவிற்கு வழங்க யூத குருமார்கள் கட்டாயப்படுத்திய போது அப்போது ரோம அரசின் அதிகாரி போன்ஞ் பிலாத்து தன் மனம் இடம் கொடுக்காமல் இயேசுவை விடுவிக்க மக்கள் முன் வைத்த போது அங்கிருந்த மதவெறியர்கள் பாரபாஸை விடுவித்து இயேசுவைக் கொல்லச் சொன்னார்கள்.அப்போது விடுவிக்கப்பட்டவன்தான் பாரபாஸ்.அப்படித் தப்பித்த பாரபாஸ் இயேசுவின் தியாகத்தில் நம்பிக்கை இல்லாமல் தொடரும் வாழ்க்கை மொத்தமும்தான் பாரபாஸ் எனும் நாவல்

        வெவ்வேறு களங்களில் உருவான புத்தகம் என்றாலும் இரண்டு கதையும் சந்திக்கும் புள்ளிகள் சுவாரஸ்யமானது . இயேசு கிறிஸ்து மக்களோடு மக்கள் 1000 நாட்கள் புத்தகத்தின் 112 ம் பக்கத்தில் இந்தப் பாரபாஸ் பற்றிச் சில வரிகள் சொல்லப்படுவதோடு முடிகிறது .ஆனால் பாரபாஸ் கதையாக்கத்தில் அதன் தொடர்ச்சி போல இயேசு கொல்லப்பட்ட இரண்டாவது நாள் பாரபாஸ் இயேசுவின் முக்கியச் சீடர்களுல் ஒருவரான சைமன் என்ற பீட்டரை ( இவர் முதல் போப்பாக இருந்தார் ) எதேச்சையாகச் சந்தித்து இயேசுவின் பேசுகிறான்.அப்போது அங்கு வந்த கிறிஸ்து அபிமானிகள் பாரபாஸை விரட்டி அடிக்கிறார்கள் .

     இரண்டாவதாகப் பெத்தனி என்ற ஊரில் லாசரஸ் என்ற ஒரு இளைஞன் இறந்த பிறகு இயேசு உயிர்ப்பித்தார் . ( இ.ம.ச 1000 நாட்களில் புத்தகம், லாசரஸ் நான்கு நாட்களில் உயிர்பிக்கப்பட்டான் என்கிறது ஆனால் பாரபாஸ் , லாசரஸ் 100 இரவுகளும் பகலையும் கடந்த பிறகு உயிர்ப்பிக்கப்பட்டான் என்கிற முரண் இருக்கிறது ) அந்த இளைஞனைப் பாரபாஸ் சந்தித்து உரையாடி விட்டு வருகிறான்.


        மூன்றவதாக முற்றிலும் முரணான ஒரு செய்தி . இயேசுவின் மூடியக் கல்லறையை மூன்றாவது நாள் அதிகாலை மின்னலைப் போன்ற உருவமும் வென்பனி போன்ற உடையும் கொண்ட ஒருவன் வானத்திலிருந்து இறங்கி வந்தார் என்றும் அவர் கல்லறையை மூடியிருந்த கல்லை அப்பால் உருட்டி விட்டான்.அப்போது அங்குக் காவல் புரிந்து கொண்டு இருந்த ரோமானியப் படை வீரர்கள் கண்டு பயந்து ஓடினர்கள் என்கிறது இ.ம.ச 1000 நாட்கள்.

    ஆனால் பாரபாஸ் , தீப்போர்வைப் போர்த்தியிருந்த ஒரு தேவதை வானத்திலிருந்து வேகமாகப் பறந்து வந்து ஈட்டி போன்ற கையால் கல்லறையை மூடியிருந்த கல்லை அப்பால் உருட்டித் தள்ளியது என்கிறது .அப்போது அங்கு உதடு பிளந்த ஒரு பெண்ணும் இருந்தாள் அவள் இதை நேரில் கண்டதாகப் பாரபாஸிடம் சொல்கிறாள் ஆனால் அங்கிருந்த அவனால் அதைக் காண முடியவில்லை என்றும் சொல்கிறது .நம்பிக்கையற்றவர்கள் உண்மையைக் காண இயலாதவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது .

       இந்த இரு வேறு புத்தகங்களும் ஒரு சில புள்ளிகளில் சந்தித்தாலும் தேவ ஆட்டுக்குட்டி எனப்படும் இயேசு தன் வாழ்நாளை எளிய மக்களுக்காகத் தன் உயிர் தியாகம்  இயேசுவின் இரண்டு வரலாறுகளில்  ஒரே குரலாக ஒலிக்கிறது  .


செவ்வாய், 6 ஜூன், 2017

நோன்புக்கஞ்சி ஞாபகம் !

மங்களத்தில் எனது பையனுக்குச் சீருடைத் தைய்து வாங்கிக்கொண்டு கிளம்பிய போது பண்ணிரண்டு வயதிருக்கும் ஒரு பையன் லிஃப்ட் கேட்டுக் கை நீட்டினான்.அவன் கையில் ஒரு தூக்கு வாலி இருந்தது .எங்க போகணும் என்றேன் .குளத்துப்பாளையம் வரைக்கும் என்றான். அழைத்துக்கொண்டேன் .பொதுவாய் நான் லிஃப்ட் கொடுக்கும் போது யாரிடமும் அவர்கள் போகும் இடம் மட்டும்தான் கேட்பேன். பக்கமாக இருந்தால் நான் போக வேண்டிய இடத்தைத் தாண்டிக்கூட சென்று விட்டு வருவது வழக்கம். கூட்டிக்கொண்டு போவதால் இவனிடம் நாம் ஏன் சொல்லவேண்டும் என்ற தடுப்புணர்வு அவர்களுக்குள் இருக்கலாம்.உதவிச் செய்யும்போது அப்படிக் கேட்பது கொஞ்சம் அசிங்கமாகவே எனக்குப் படும்.ஆனால் அந்தப்பையனிடம் ஏதோ பேச வேண்டும் என்ற உள்ளுணர்வு தூண்டியது .

கையில் என்னப்பா என்றதற்கு ,நான் மங்களம் பள்ளிவாசலிருந்து நோன்புக் கஞ்சி வாங்கிட்டு வந்து கொண்டு இருப்பதாகவும் அடுத்து வாங்கிய இந்தக் கஞ்சிய வீட்டில் வைத்து விட்டு அடுத்துக் கோழிப்பண்ணைப் பள்ளிவாசலில் ஐந்து மணிக்குத் தருவார்கள் போக வேண்டும் என்றான் .சரி வரும்போது எப்படி வந்தாய் என்றதற்கு நடந்துதான் என்றான்.நீ நோன்பு வைத்திருக்கிறாயா என்றேன்.ஆமாம். எங்கள் வீட்டில் எல்லோரும் என்றான். ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து மீண்டும் திரும்பி வரவேண்டும் .என்ன படிக்கிறாய் என்றதற்கு எட்டாவது போகிறேன் என்றான் .உன் பெயர் என்ன என்றதற்கு முகமதுத் தர்வீஸ் என்றான் .அப்படின்னா என்ன அர்த்தம் என்றதற்கு, அல்லாவுடைய பெயர் என்றான்.

நான் இதே வயதில் திண்டுக்கல் கிழக்குக் கோவிந்தாபுரம் குடும்பத்துடன் குடிபெயர்ந்து வந்த போது அங்கிருந்த பள்ளிவாசலில் இரண்டாவது அண்ணன் பள்ளித்தோழர் அப்துல்கௌஸ் வாங்கித்தருவார் .சுடச்சுட அதைக் குடிப்பதில் என்னவோ ஒரு சந்தோசம் .அதிலும் டோக்கன் வாங்கி வைத்து விட்டால் யார் போனாலும் தருவார்கள் என்பதால் நாங்களே கூடப் பள்ளிவாசல் போய் வாங்கி வருவோம்.நான் போகாவிட்டால் கௌஸ் அண்ணன் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டுப் போய் விடுவார்.

அதே போல அந்தத் தெருவில் இரண்டு வீட்டிலிருந்து ரமளான்,பக்ரீத் காலைத் தொழுகை முடிந்தவுடன், பெரிய தட்டில் இலை மூடிக் கொண்டு வந்து தருவார்கள் .அந்தக் குருமாவின் மணமும் கொஞ்சம் உப்புக்கம்மியான பிரியாணி வாசனையும் சாப்பிட்டு முடித்து இரண்டு நாள் ஆனாலும் வீட்டை விட்டுப் போகாது . தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டிலிருந்து வீட்டில் கடைசிப்பையன் என்பதால் புது என்னிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.எனக்கு ஒரு பிடித்தமான வேலை .

காலத்தின் பின்னோக்கிய கதவை முகமதுத் தர்வீஸ் என்ற இறையருள் எனக்கு இன்று சொல்ல விரும்பியிருக்கிறது .