செவ்வாய், 31 மே, 2016

ஆலயங்கள் இல்லாத ஊரும் , குழந்தைகள் இல்லாத வீடும் ஒரு வகை மயானம்தான் !




            சுமார் இரண்டு மாதங்கள் பள்ளிக் கல்வி விடுமுறையில் சாலைகள் அத்தனையும் ஓய்விலிருந்து இன்று  முதல் அதிரப்போகின்றன.......
அங்கும் இங்கும் அனாயசமாகக் குழந்தைகளை அள்ளிக் கொண்டு கடக்கும் ஆட்டோக்களும் , ’பெயில்’ கிடைக்காத கைதிகள் போல வேனுக்குள் பள்ளிக்குப் பயணிக்கும் குழந்தைகளின் பாவமான முகங்களும் , அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கூட்டத்தால் தன்னுடைய கலெக்சன் பாதிக்கும் என்ற கடுப்பில் வேண்டுமென்றே பேருந்து நிறுத்ததில் நிற்காமல் தள்ளி நிறுத்தும் பேருந்தும் அதை  நோக்கி, விட்டேனே பார் என்று ஓடும் இலவசப் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களின் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களும் காணக்கிடைக்கும் இனி வழியெங்கும் .ஒரு பேருந்து போனாலே வால் பிடித்துத் தொடர வேண்டிய திருப்பூர் மங்களம் செல்லும் அலுவலகச் சாலையில், ஒரு யுகேஜியோ, எல்கேஜியோ படிக்கும் விரல் சூப்பும் மேட்டுக் குடிப் பையன்களை அழைத்துச் செல்லும் பல பெரிய கார்களால் சாலை மறியல் தினமும்  நடக்கும்.. 


       இதுநாள் வரை ஜிம்மிலும் ,யோகாசன் வகுப்புகளிலும் அரட்டை அடித்து விட்டு வந்து ஏதோ ஒரு  மியுசிக் சானலின்  கடைசிப் பாட்டையும், கைகாட்டிக் கேவலமான வணக்கம் சொல்லி விட்டுச் செல்லும் சுமார் ’காம்பயரிங்’ அழகியைப் பார்த்து விட்டுச் சென்று கொண்டு இருந்த அப்பாமார்களுக்கு, இனி தினப்பலன் ’அவஸ்தை’ .

   சாவகாசமாகச் சமைத்து விட்டு சர்வ லட்சணங்கள் பொருந்தியத் தொலைக்காட்சித் தொடரைப் பக்கத்து வீட்டு மாமியிடம் சிலாகிக்கும் அம்மா மார்களுக்கு இனி ’கரண்ட்கட்’ .

    வீட்டில் செய்தித் தாளின் கடைசிப் பக்க விளம்பரங்களைக் கூட விட்டு வைக்காமல் வாசித்த தாத்தாக்கள் இனி பாலத்தின் மேல் பயணிக்கும் ரயில் பெட்டி போல விட்டு விட்டு விட்ட இடத்திலிருந்துதான் வாசிக்க வேண்டும் .
   இந்தச் சமயத்தில் கார்ப்பரேசன் பைப்பில் தண்ணி வந்தால் எல்லாம் கோவிந்தாக் கோவிந்தாதான். பார்த்துப் பார்த்துப் பண்ணிய உணவுகள் யாரும் விசாரிக்காத தவற விட்டக் கடிதம் போல ரசிக்கப்படாமல் கிடக்கும்.


 முதல் முறையாகப் பள்ளிக்குச் செல்லும் LKG (Lower Kindergarten) UKG (Upper Kindergarten) குழந்தைகளைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சோகமாகவும் இன்னொரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கும் .விட்டு வாசலில் தொடங்கிய அழுகை பள்ளிவரைத் தேம்பித் தேம்பிப் பள்ளிக்கு வந்தும் அம்மாவின் இடுப்பை விட்டு இறங்காமல் ஓவெனெ அழுகும் குழந்தைகளும், அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டு போக மாட்டேன் என்று கதறும் பிள்ளைகளும் பார்க்க இரண்டு மனம் இருந்தால் தேவலாம் . எப்படியோ சமாதானப்படுத்தி ஆயாவிடம் கால் மனதாய் அனுப்பி வைக்க ,அழுது கொண்டே முதல் முறையாக தன்னை விட்டு பிரிந்து செல்லும்பிள்ளையைப் பள்ளிக்கதவின் ஊடே பார்க்கும் அம்மாவுக்கு எவண்டா கண்டுபிடிச்சான் இந்தப் பள்ளிக்கூடங்களை என்று நினைத்து அழுகையும்ஆத்திரமும் கூட வரலாம்  !

  எப்படியோ குழந்தையை விட்டு விட்டு வந்த அம்மாவுக்கு இடுப்பிலிருந்து இறங்கிய குழந்தை மனதிலிருந்து இன்னும்  இறங்காமல் இருக்கும் தவிக்கும் .வீட்டுக்குள் நுழைந்தால் அப்போதுவரை குழந்தைக் கலைத்துப் போட்ட பொருள்களும் அவசரத்தில் கழற்றிப் போட்டுச் சென்ற ஆடைகளும் மீண்டும்மீண்டும் ஞாபகப்படுத்த ஒரு சமயம் போய்க் கூட்டிட்டு வந்தரலாம் என்று கூட அந்த அம்மாவுக்குத் தோணும் .இன்று அந்தக் குழந்தையில்லாமல் அவள் ஒரு மூன்று மணி நேரத்தைக் கடந்து விட எத்தனை முறைக் கடிகாரத்தைப் பார்த்து இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது .கோவில் இல்லாத ஊரும் ,குழந்தைகள் இல்லாத வீடும் ஒரு வகை மயானம்தான் . 


          நேற்று வரை பகல் பத்து மணிக்கு மேல் பல்லைக் கட்டாயத்தில் அரைகுறையாக விளக்கிய பசங்கள் வீட்டை ரெண்டு பண்ணுங்கள் இல்லாத இடத்தில் தேடக்கூடாதைத் தேடி இல்லையென்று பெற்ற அம்மாவின் சாபங்களையும் ஒரு ஜோசியருக்கு ஒரு காசு இல்லாமல் கழுதை ,எருமை, பிசாசு என்ற புதிய பெயர்கள் தேடி வரும் . ஒன்பதாயும் கிளம்பாமல் குறிப்பிட்ட வயது பசங்கள் அங்கு இங்குக் கெஞ்சிக் கதறிப் பெற்ற அலை பேசி எண்ணில் தன் கேர்ள் ஃபிரண்டுக்கோ பாய் ஃபிரண்டுக்கோ அலைபேசியில் யூனிஃபார்மில் எப்படி இருக்கிறேன் என்று (அவனுக்கோ அவளுக்கோ) செஃபி எடுத்து அனுப்பிக்கொண்டு இருப்பார்கள் .. 


             விடுமுறையில் உறவினர்களின்  ஊர்களுக்குச் சென்று புதிதாய் முளைவிட்ட காதல் நாற்றுக் கதைகளைச் சுமந்து சென்று, தன் கூட்டாளியுடன் பாபிலோனியாவின் நேபுகாத் நேசர் ரேஞ்சில் அளப்பதுவும்,ஐபிஎல் விராத்தின் அடிக்காத சிக்சருக்கெல்லாம் வசவுகளால் அலங்கரிப்பதுவும் , தோணி பாவம் என்று அங்கலாய்ப்பதுவும் , கிறிஸ் கெய்ல் பெண் நிருபர் மெக்மெக்லின் பேட்டி எடுக்கும் போது என்ன கேட்டார் ? என்ற சுவாரசியங்கள் வேறு கோணத்தில் ரசிக்கப்படுவதுவும் இனி நாளும் சாதரணமாகும். ..

           என்னுடைய பையனுக்கு மூன்று வருடம் போராடி இந்த முறை மாற்றிய பள்ளிக்கு ஐந்தாம் வகுப்புக்கு முதல் நாள் அழைத்துச் சென்றேன் .அவன் தன் அம்மாவை  கூட வர வேண்டாம் என்றான் .நேற்றே நான் அவன் பள்ளிக்கு போய் தொடங்கும் நேரம் விசாரித்து விட்டேன் ..இன்று அரை நாள் மட்டும் .போகும் போது ஒரே ’நெர்வசாக’ இருக்குப்பா என்றான்.உங்களுக்கு இருந்துச்சா இதே மாதிரி என்று கேட்டான் .ஆமாம் என்றேன் .முத நாள் யார் கூட போனீர்கள் என்றான் என் அண்ணனுடன் என்று சொல்லிவிட்டு   .எதாவது தோணினால் மகரிசியை நினைத்துக்கொள் என்றேன்.

அப்புறம் ஒன்று சொன்னான்  ,முதல்ல போனவுடன் யாராவது என்னை மாதிரி ஒரு புதுப்பையனைத் தேடி பழகிக்கொள்வேன் அப்புறம் அவனும் நானும் சேர்ந்து மற்றவகளை பழகிக்கொள்வோம் என்றான்  புத்திசாலி . அறிவில் அவன் அம்மா மாதிரி !


            வகுப்பை விசாரித்து உள்ளே போனோம் .மாடி ஏறிக்கொண்டு இருக்கும் போது மீண்டும் அப்பா உங்களுக்கு நெர்வசாக இருக்கா ? என்றான் இல்லை இது எனக்கு பழகிப் போனதால் ஒன்றுமில்லை என்றேன்.வகுப்பில் கடைசி பென்ஞ் மட்டும்தான் காலியாக இருந்தது  அதில் ஒரு சைனா தேசத்து பையன் போல புருவமில்லாமல் உருண்டையாக இருந்தான் .என் பையன் என்னைப் பார்த்து  நீங்க கிளம்புங்க என்று சைகை செய்தான் .

   மாடிப்படி இறங்கும்போதுதான் எனக்கு பையன் கேட்ட நெர்வசஸ்னஸ் தொற்றிக்கொண்டது .சரி, யாருக்கும் தெரியாமல் அழுவது நமக்கு ஒன்றும் புதிதல்லவே ?



       

வியாழன், 19 மே, 2016

அழகை ரசிக்க மூடு ( Mood ) அவசியமா?


         
Selena Gomez' - ‘World’s Most Beautiful Women of 2016’ 

காதல் செய்யும் போது இந்த உலகமே அழகாகத் தெரிந்தது. அந்தப் பருவத்தில் பன்னியும் அழகாய்த் தெரியும் என்று என் பாட்டி சொல்லக் கேட்டதும் ஞாபகம் வருகிறது , அதனால் அதை அப்படியே விட்டு விடுகிறேன் .உலகிலேயே அவரவர் மனதின் அளவுகோல்தான் அழகைத் தீர்மானிக்கின்றன. என்கிறார்கள் மனோதத்துவியலாளர்கள். ஆனந்தமான நிலையில் இருக்கும்போது இந்த உலகத்தில் அத்தனையுமே அழகுதான் என்கிறது ஆன்மீகம் .படைப்பின் ரகசியங்கள் அத்தனையுமே அழகியலைச் சார்ந்ததுதான் என்கிறார்கள் கடவுளைக்கூட ஒத்துக்கொள்ளாதவர்கள் .எல்லாம் சரிதான் என்று போல நமக்குத் தோணினாலும் ,அழகு என்பதைச் சிந்திக்கும் போது எல்லோரும் ஏக மனதாய் ஒத்துக்கொள்ளும் விசயம் புற விசயங்களைக் கடந்த அகவியலோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறார்கள். 

             இயற்கை அழகு என்ற ஒரு உணர்வைக் கொடுத்ததே ஏதோ ஓர் உள்நோக்கம் கொண்ட விளையாட்டின் உச்சமாயும் , தந்திரமான வலைப்பின்னலுமாய்த் தெரிகிறது . அதற்காகக் கவர்ச்சியையும் அழகையும் எங்கும் ஒன்றாகப் பார்த்து விடவும் கூடாது. நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அதுவே அழகு என்று அர்த்தம்.
           
Miss universe 2015

             இங்கே நாம் அழகின் ஆதாரத்தைத் தேடி ரொம்ப வேகமாய்ப் போகிறோம் என்பதாய் எனக்குத் தோணுகிறது ... அதனால் மெல்ல ஒரு சின்ன விசயத்தில் ஆரம்பிப்போம் .கடந்த ஆண்டு Paulina Vega (Paulina Vega Dieppa ) என்ற பெண் மிஸ் யுனிவர்சாகத் தேர்வு செய்யப்பட்டார் .( நமக்குதெரியும் அந்த அழகிப் போட்டிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு எதெல்லாம் மிக முக்கியமாக வைத்துள்ளார்கள் என்பதை அதைப் பார்த்தவர்களுக்கும், படித்தவர்களுக்கும் விட்டுவிடுவோம் ! ) ஆனால் அந்தப் இந்தப்பெண் நமக்கு அப்படி ஒன்றும் அழகாகத் தோணவில்லை. காரணம் அவள் அவள் கொலம்பிய பெண் என்பதாலா ?
              இல்லை வெளியில் பார்க்கும் அழகுக்கும் நம் மனதின் வாசனை என்று சொல்லப்படும் ஏற்கனவே உள்ள பதிவுகளுக்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருக்கிறது . நாம் பார்க்கும் விசயங்கள் சகலமும் மனதின் ஏற்கனவே இருக்கும் சில ஆதாரங்களுடன் இடத்துக்குத் தகுந்தாற் போலவும், பார்க்கும் பொருளுக்குத் தகுந்தார் போலவும், அப்போது தோன்றும் மனதின் எண்ண இயல்புக்குத் தகுந்தார்போலவும் தோன்றியதெல்லாம் பதிந்துகொள்கிறது . நல்ல மன நிலையில் ( மூடில் ) அது வெளியே செயல்படுகிறது .

 அப்படி அவள் ஒன்றும் அழகில்லை   !     

               அழகை பெண்களோடு மட்டுமே பொருத்திப் பார்த்த நமக்கு முந்தைய தலைமுறை நேரில் பார்க்காத ஏழாம் கிளியோபாட்ரா அழகி என்று நம்பிக்கொண்டு இருந்தது. கிரேக்கத்தைச் சேர்ந்த  புளூட்டாக் ( Plutarch ) என்ற வரலாற்று மற்றும் வாழ்வியல் ஆய்வியல் ஆசிரியனுக்கு அதுவும் பிடிக்கவில்லை ! கிளியோபட்ரா நீங்கள் நினைக்கும் அளவுக்கு அப்படி ஒன்றும் அழகில்லை   (Cleopatra was melodic, intelligent, charming and charismatic. But not a jaw-dropping beauty, like Elizabeth Taylor up above.And she was slender and not too tall.  என்று அந்த கனவையும்  கலைத்தான் என்பது வேறு விசயம் . 

         அடுத்து அந்த அளவுக்கு யாரும் பேசப்படாவிட்டாலும் மர்லின் மன்றோ (Marilyn Monroe )  என்ற அழகி அந்த இடத்தை நிரப்பிவிட்டதாக நம்பிக்கொண்டார்கள்.  ஆனால் நம் முந்தைய பெரிசுகளை அவ்வளவு கிறங்கடித்த, அத்தனை பேரழகியாகப் பார்க்கப்பட்ட  மர்லின் மன்றோ  “I'm pretty, but I'm not beautiful. I sin but I'm not the devil. I'm good, but I'm not an angel” என்று பொதுவில் தன் அழகையே  போட்டு உடைத்தாள்.




       நன்றாக யோசித்தால் , கைகளில் அள்ளிய மழை நீர் போல, இதுதான்  அழகு தீர்மானிக்கும் முன் அது மனதின் வழியே வழிந்து ஓடிப்போய் விடுகிறது…ஒருவேளை அழகு இலக்கணத்தோடு பிறந்து இருந்தால் அதை இலக்கியம் கட்டிப்போட்டு இருக்கும்.  

  மின்னல் அரசி’யாம் சீதை  !     



  எப்படியாவது அழகின் நதி மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற ஆசையில் கொஞ்சம் பின்னோக்கி கம்ப ராமாயண காலம் நோக்கி நகரலாம்...அங்கு வடமொழியில் வால்மீகி கூட பேசாத இடம் ராமனும் - சீதையும் கண் கலந்து இதயம் நுழைந்த இடமான கன்னி மாடப்பகுதி .இந்த இடத்தில் ராமனின் பார்வையில் நுழைந்த கம்பன் சற்றே ஆர்வ மிகுதியில் ..

பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்

     ”தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.”
           என்று வருணித்து சீதா தேவியின் அழகைப் பற்றி பேசுகிறார் ஆனால் அதை முடிக்கும் முன் கம்பனுக்கு ஒரு விசயம் குறுக்கிடுகிறது.தான் ராமனின் பார்வையால் பார்த்தாலும் இவள் ராமனுக்கு மனைவியாகப் போகிறவள். அடுத்தவன் மனைவி என்ற எண்ணம் சட்டெனெ தோன்றியதோ என்னவோ அங்கு சட்டெனெ, 
‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ 



       நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவி என்று ‘மின்னல் அரசி’யாம் சீதை! கம்பர் சுதாரித்து பேசுகிறார் கம்பர்.சரி அதை விடுவோம் .ராமனின் சீதைக்கே இத்தனை வருணனை தேவைப்படுகிறதென்றால் அழகை ரசிக்க எவ்வளவு மூடு தேவைப்படுகிறது ? 

அர்த்தயாம பூஜை.

      சிவன் கோவில்களில் இரவு சுமார் 8.30க்கு மேல் ( கோவில்களுக்கு தகுந்தாற் போல)  சிவ ஆகமம் – பூஜா முறைகளில் இரவு அர்த்தயாம பூஜையும் ஒன்று   ( மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து சிவிகையில் ஏற்றி, சகல உபசாரங்களுடன் பள்ளி அறையில் சேர்த்தல் என்பதாக நடத்தப்படுகிறது . ) அப்போது இறைவன் மிகவும் மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும் கேட்கும் வரம் தருவார் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது .அது போல வாஸ்து பகவானுக்கு உகந்த நேரமாக அவர்  எழுந்து ,குளித்து ,உண்டு ,நல்ல திருப்தியான மன நிலையாக தாம்பூலம் தரித்த நேரம் என்பது வாஸ்து பூஜைக்குறிய நேரமாகவே கருதப்படுகிறது  .இப்படி இறைவனுக்கே வரம் தர நேரம் ( மூடு )  சொல்லப்படும் போது நாம் என்ன விதி விலக்கா ?


      ஆனால் இதில் விதி விலக்கு இருக்கிறது ! இயற்கைப் படைப்புகளில் எங்காவது லயித்து மனம் நிற்கும் போது மட்டும் தன்னையறியாமல் பகுத்து பார்க்கும் குணம் சற்று பின்னோக்கி நகர்ந்து விடுகிறது ! கடல், மலை,நதி குளம் ,வானம் , மரங்கள் , பூக்கள் , பறவைகள்,மழைக்காட்சி,வானவில் எல்லாமே அழகாய்த் தெரிகிறது .இங்கு சற்று மின்னல் கீற்றாய் ஒரு விடை அழகைப்பற்றி கிடைக்கிறது . ஆம்.மனம் இயற்கையின் தாளவிதிக்குள் கட்டுப்படும்போது அது எண்ணங்களை கிளறாமல் நேரடியாய் மனதின் அடித்தளத்துக்குள் நீயே அதுவாகிறாய் "தத் துவம் அசி “ என்று கலந்து கரைந்து போகிறது .

               மனிதன் எங்கிருந்து தோன்றினானோ அங்கே போய் கலந்து நிற்கவே உயிரும் மனமும் ஒன்றாய் போட்டியிடுகிறது .தேவையைப் பொறுத்தும், அடைந்து அனுபவிக்கக் கூடிய அழகெல்லாம் சலித்து மனம் ஒதுக்கிறது .எது நிரந்தரமோ அங்கே மனம் நிபந்தனைகளை கை கழுவிக்கொண்டு லயித்துப்போக தாவி நிற்கிறது ... !

செவ்வாய், 17 மே, 2016

+2 மாணவர்களின் அன்புப் பெற்றோர்களுக்கு ....


ஒரு சின்னக் கதையோடு தொடங்குவோம் .. 


வீட்டில் படிப் படி என்று ஒருவனைப் பிழியவில்லை .ஆனால் அவன் படிக்க ஆசைப்பட்டான் ஆர்வமாக இருந்தான் .சின்ன வயதிலிருந்தே மனோதத்துவத்தில் மிக ஆர்வமாக இருந்தான்.பத்தாவது மதிப்பெண் பட்டியலில் அவன் எடுத்த குறைந்த மதிப்பெண்ணில் அறிவியல்தான் முதலிடம்.வெறும் 43 தான். ஆனால் அவன் படித்த அரசுப் பள்ளியில் யாரும் Pure Science பிரிவில் சேர மறுத்ததால் அவன் பள்ளி அவனை வம்பாக அந்தப் பாடப் பிரிவில் உடக்கார வைத்தது.மண்ணும் சரியில்லை ,விதையும் சரியில்லை அப்படியானால் வெள்ளாமை எப்படிப் பலன் தரும் ? +2 வில் தோல்வி.அப்போது அவனுக்கு அவன் வீடு தோள் கொடுத்தது .ஐ.டி.ஐ படிக்க வைத்தது .சில அரசியவாதிகள் செய்தச் சூழ்ச்சி அதிலும் வேலை கிடைக்க விடாமல் துரத்தியது.அவனாய் வேலை ஒரு பிரசித்திப் பெற்ற விவசாய மோட்டார்க் கம்பெனி ஷோரூமில் பில் போடுவது,தினசரிக் கணக்குப் பராமரிப்பது .வங்கிக்கு போவது என உயர்ந்தான்.இந்த வேலைப் பார்த்துக்கொண்டே தொலைதூரக் கல்வியில் எம்.ஏ நிர்வாகவியல் படித்தான் ,அதிலும் முழுமையாக்கத் தொழில் விடாமல் துரத்தியது .ஜோதிடம் ,கம்யூட்டர்,மெர்சண்டைசிங் இன்னும் எத்தனையோ படித்தான் எதிலும் முழுமை அடைய முடியடவில்லை...

ஆனால் அவன் கனவை ஒரு குரு நிறைவேறினார் அதுவும் ஒரு வனத்துறை அமைச்சர்க் கையிலும் மிகப்பெரிய பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர்க் கையில் தன்னுடைய டிப்ளமோ பட்டம் வாங்கினான்.அந்த டிப்ளோமாவை இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து போன தன் தாயிற்கு அர்பணித்தான் .அடுத்து அதே கல்வியில் இரண்டாடுப் படிக்க வேண்டிய முதுநிலை முடித்தான் .அதை அடுத்தச் சில மாதங்களில் மறைந்த தன் தந்தைக்கு அர்பணித்தான்.இப்போது அவன் அதே கல்வியில் ஏறக்குறைய எட்டு வருடம் படிக்க வேண்டிய ஆசிரியருக்கான கல்வியில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து அடுத்தவருக்குப் போதிக்கும் ஆசிரியனாய் ஆகப் போகிறான் ...அதைத் தன் மனைவிக்கும் தனது மகனுக்கும் அர்பணிக்கப் போகிறான் ... 

எல்லோரின் கனவும் விதை போல. விதைத்தவன் உறங்கினாலும் அந்த விதைகள் உறங்குவதில்லை..


அன்பு முகநூல் நண்பர்களே ... 

மாணவ வாழ்வின் மிக முக்கியமான கட்டம் +2 முடிவு .இது வரை அவன் எப்படிப் படித்தான் என்பதை விட இனி அவன் சொந்தக் காலில் நின்று சாதிக்க இந்த மதிப்பெண் ஒரு புதிய வாசல் என்பது உண்மைதான் .ஆனால் இதுவே இறுதியில்லை . முகநூலில் ஆசிரியர்கள் அதிகம் இல்லை .மாணவர்களும் குறைவு அப்படியே ஒருவேளை இருந்தாலும் அவரவர்கள் ஒன்று சேர்ந்துக் கலாய்த்துகொள்வார்கள். பொதுத்தலத்தில் அவர்கள் பார்வைக் குறைவு . ஆனால் முகநூலில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் ,படித்தவர்களும் ,அன்புச் சகோதர்களும் நிறைய இருக்கிறீர்கள் .உங்கள் அருகில் உள்ள தேர்வில் தோற்றுப்போன மாணவர்களுக்கும்,குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் அடுத்து என்ன செய்யப் போகிறோன் என்று தெரியாது கைபிசைந்து நொறுங்கிய மன நிலையில் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஆறுதலாய் இருங்கள் .முகநூலில் செலவழிக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு பகுதியை அந்த அருகில் உள்ள மாணவனின் எதிர்காலத்திற்கு ஒதுக்குங்கள்.எதாவது ஒரு வழிகாட்டலாக .குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் இருந்தால் அடுத்து என்ன படிக்கலாம் அல்லது அடுத்து தோற்றுப்போனவனுக்கு அடுத்து எப்போது தேர்வு எழுதலாம் ,எந்த டுட்டேரியல் நல்ல கோச்சிங் இருக்கிறது தெரிந்து வைத்துச் சொல்லுங்கள் .ரொம்பவும் மெனெக்கெட வேண்டாம் போகிற போக்கில் இணையத்தில் ,பத்திரிக்கைகளை ,சுவர் விளம்பரங்களைக் கவனித்தாலே போதும். 

இது விதைக்கிற காலம் இல்லை ... 

முக்கியமாக நிறைய வீடுகள் குழந்தைகளை அவர்களை அவர்கள் மனதைச் சிதைக்கும் நேரமிது . பல வீடுகளில் தந்தையோ தாயோ வீட்டில் ஏதோ ஒரு கனவுடன் ஒரு பிடிவாதமாக முடிவெடுத்துக்கொண்டு என்னை மாதிரி இவன் கஷ்டப்படக்கூடாது ,அல்லது நம் சொந்தத்தில் நல்லா படித்தவன் என் மகன்தான் என்று சொல்லிக்கொள்ளவோ ,தன் மகனை மருத்துவனாகவோ ,வக்கிலாகவோ ,கனவு கண்டுகொண்டு அந்த வறட்டு வைராக்கியத்தில் அந்தப் பையனை +1 ல் பிடிக்காத பாடத்தைத் தேர்வு செய்யச் செய்து விடுகிறார்கள்.முதல் வருடம் அவன் யோக்கிதை அவனுக்கும் தெரிந்து விடும் .ஆனால் வழியில்லாமல் கொஞ்சம் காசு இருக்கிற வீட்டில் டூயூசன் வைத்து விடுகிறார்கள் .சில வீட்டில் அதுவுமில்லை எப்படியாவது படித்து விடு என்று கட்டாயப்படுத்திக் கரைசேரச் சொல்கிறார்கள் .எப்படி அது முடியும் ? ஒன்பதாவது படிக்கும் வரை அவன் படிப்பைப் பற்றியோ அவனுக்கு எது வரும் என்பது பற்றித் துளியும் கவலைப்படாதப் பல வீடுகள் பத்தாவது வகுப்பில் மதிப்பெண் புதைச்சேற்றில் அவனை அழுத்த தொடங்குகிறார்கள்,அது கடைசியில் +2 தேர்வு முடிவில் பிரதிபலிகிறது. 


நான் எந்தப் படிக்காத பையனுக்கும் மதிப்பெண் எடுக்காத பையனுக்கும் இங்குச் சப்போர்ட் பண்ணவில்லை.விதைக்கிற காலத்தில் விட்டு விட்டு அறுவடையின் போது அவன் முன் அருவாளோடு அவன் முன் நிற்கிறீர்களே என்று ஆதங்கம்தான் இந்தப் பதிவு. சிலர் முகம் சுளிக்கலாம் அவனைப் பள்ளிக்கூடம் அனுப்புகிறதே படிக்கத்தான் அதற்காக இரவு பகலாகக் கஷ்டப்பட்டுப் பொருள் சேர்த்துப் படிக்கவைக்கிறோம் நீ சொல்வதைப் பார்த்தால் அவனோடு பள்ளிக்கூடம் போய் உடகார்ந்து கொள்ளச் சொல்வது போல இருக்கிறதே என்று கோபப்படலாம்.நியாயமான கோபம்தான் . இந்த உலகத்தில் நம்முடன் இருப்பதை விட அதிகம் பள்ளியில்தான் இருக்கிறான்.அவனோடு சேர்ந்துப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்.வேலை விட்டு வந்து அவனோடு வாரம் ஒரு முறையாவது பேசுங்கள் அவனுக்குப் பொருள் சேர்ப்பதைப் போல அதுவும் முக்கியம் .ஒன்பதாவது ,பத்தாவது வகுப்பு அவன் படிக்கும் போது அவன் பள்ளிக்கு மாதம் ஒருமுறையாவது போய் விசாரியுங்கள் .அவனுக்கு எது பலம் எது பலவீனம் தெரிந்து கொள்ள முயலுங்கள் .அதுவும் உங்கள் கடைமைதான். தனக்கே சரியாக முடிவெடுக்கத் தெரியாத பல குடும்பங்கள் அவனுக்கு என்ன படிக்க வரும் என்று தெரியாமல் வைக்கோல் பொம்மையைத் தயார் செய்வது போல எதோ ஒரு உருவமாய் அமுக்குவது போல அமுக்கி ஏதாவது ஒரு பாடத்தை இவர்களே தேர்வு செய்து உட்காரவைத்து விடுகிறார்கள்.உங்கள் கனவை அவன் எப்படி நிறைவேற்ற முடியும் அவனவன் கனவைக் கரைசேர்க்கவே பல பிறப்புத் தேவைப்படுகிறது



நல்ல பெற்றோர் நீங்கள் ... 

எனவே இது வரை என்ன செய்தீர்களோ பெற்றோர்களே விட்டு விடுங்கள் அவன் உங்கள் மகன் அல்லது உங்கள் மகள் .உங்களின் அதிகப் பட்ச அறிவும் அக்கறையுமே அவனை வளர்த்து இருக்கிறது .அவன் எதிர்காலம் உண்மையிலேயே உங்கள் கையில் இருக்கிறது இப்போதுதான் .உங்களுக்கு இருக்கும் ஆதங்கங்களை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் .இப்போது உங்கள் குழந்தைகளுக்கு ஆதராவாய் இருங்கள் .அவன் ஒரு சிக்சர் அடித்த போது கூட அவனைச் சுற்றி ஆயிராமாயிரம் கைதட்டல்கள் அவனை நோக்கிப் பறந்து வந்து இருக்கலாம்.பாராட்டுதான் உலகம் என்று தெரிந்து வைத்து இருக்கும் நம் குழந்தைகள் இந்த மாதிரித் தேர்வு முடிவுகளில் நொந்து போய்விடுவார்கள் .நீங்கள் படிப் படி என்று காட்டுக் கத்துக் கத்திய போது அவன் எதிர்த்துப் பேசியிருக்கலாம் அவன் தன் குறைந்த பட்ச அறிவால் உங்களை முட்டாள் போலக் கேலி செய்து இருக்கலாம்.அதெல்லாம் இப்போது மனதில் கொள்ளாமல் வேண்டாத பாலிபேக் போலத் தூக்கி வெளியே எறியுங்கள் .அவனுக்கு இப்போது நீங்கள் காட்டும் அக்கறை இனி எப்போதும் அவனால் மறக்க முடியாது அது வேறு எதனாலும் உங்கள் மேல் அன்பை வரவைத்து விடாது .இதுவே அவன் மேல் நீங்கள் வைத்து இருக்கும் உண்மையான அன்பின் அடையாளத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் .தோற்ற போது அவன் கூட இருக்கு ஒரே ஆறுதல் நீங்கள் மட்டுமே .இங்குத் தோற்றதற்கு அல்லது குறைந்த மதிப்பெண் பெற அவன் கவனக்குறைவு ,எதிர்காலம் பற்றிய அவன் அக்கறையின்மை எதுவாகவேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும்.அவனோடு நேற்றுவரைக் கூடச் சுத்தியவர்கள் , படித்தவர்கள் நிறைய மதிப்பெண் அடுத்தக் கல்லூரிக்கோ அல்லது வேறு படிப்பிற்கோ போவதைப் பார்த்தாலே அவன் தன் வாழ்வின் பாடமாக எடுத்துக்கொள்வான் .அதுவே யாராலும் தர முடியாத பாடம் . 


குழந்தைகள் விருட்சங்கள் ... 

இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் பிறப்பின் நோக்கம் இருக்கிறது .அதை நோக்கி நாம் நகர்ந்துக் கொண்டுதான் இருக்கிறோம் .சிலருக்கு ஆரம்பமே வெற்றியாக இருக்கிறது.சிலருக்கு அப்படியில்லை.இங்கு உங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள் .எத்தனை பேர்ப் படித்த படிப்புக்கு வேலைப் பார்க்கிறோம் .அப்படியே பிடிவாதமாக இந்த வேலைக்குத்தான் போவேன் என்று பிடிவாதம் பிடித்தவர்கள் வாழ்க்கை எங்கு நிற்கிறது .நம்மால் நம் பெற்றோரை , நம் இளமைக் காதலை வாழ்வின் சந்தோசத்தை , வேலையை , இப்படி நிர்ணயம் செய்ய முடியவில்லை .அப்படி இருந்தும் நாமும் இந்தச் சமூகத்தில் ஒரு கணவனாய், மனைவியாய் ,ஒரு குழந்தையைப் பெற்ற பெற்றோராய் நிற்கவில்லையா அது போல அவனும் நிற்பான் .இந்த +2 அவனைத் தீர்மானித்து விடாது.அவன் எதிர்காலம் அவனேதான் அவன் ஒரு விருட்சம். இப்போது வெய்யில் அடிக்கிறது .நீரூற்றிப் பாதுகாப்புக் கொடுங்கள் அவனாய் உங்களைப் போலப் பலரையும் வாழவைப்பான் . இந்த உலகத்தில் எவனும் முழுதாய் தோற்றவன் இல்லை .ஒவ்வொருவனின் அவனவன் வழியில் வெற்றியும் வேறு வேறு ! 


மேலே தொடங்கிய கதையில் ஒரு வனத்துறை அமைச்சர்க் கையிலும் , பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளார்க் கையில் தன்னுடைய டிப்ளமோ பட்டம் வாங்கினவன் மேலே கொடுக்கப்படுள்ள படத்தில் இருக்கிறான் ...உங்கள் மகனோ , மகளோ +2வில் தோற்றால் எதுவும் நடந்து விடாது .தோள் கொடுங்கள் எத்தனையோ குழந்தைகள் பள்ளிக்கே லாயக்கில்லை என்று துரத்தியபோது பின்னாளில் தங்களின் பெற்றோர்களின் அன்பால் அறிஞர்களாகியிருக்கிறார்கள் .இங்கு நான் பார்க்கவே எதிலும் ஜெயிக்காத என் நண்பர்கள் பலர் தன் தாய்த் தந்தையைத் தளர்ந்த வயதில் உட்காரவைத்து மூன்று நேரமும் தங்கள் வருவாயில் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் பார்த்துப் பார்த்துப் படி படி என்று அவன் எதிர்கால நரகத்தை மட்டுமே வழிகாட்டிய தந்தைகளை அவர்கள்  பிள்ளைகள் யாரோ ஒரு அமெரிக்காப் பெண்ணைக் கட்டிக்கொண்டும் கிரீன் கார்டும் வாங்கிக்கொண்டு தன் பெற்றோர்களை உயர்ந்தப் பட்ச அனாதை விடுதிகளில் சேர்த்து விட்டு பேரப்பிள்ளைகளைக்  கொஞ்சுவதற்கு உயிரற்ற ’ஐபேடில்’ முத்தமிட்டு எச்சில் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். முடிந்தால்... விநாயமுருகனின் ’ராஜிவ்காந்தி சாலை’ நாவலைப் படித்துப் பாருங்கள். அதில் பெற்ற அப்பனைப் பார்த்துக் கொள்ள விரும்பாத ஐ.டி அறிவாளிகள் ஏதோ ஒரு அடுத்த மாநில லாரியில் ஏற்றி  திரும்பி வர முடியாத தூரத்தில் அநாதைகளாய்ப் பிச்சை எடுக்க விட்டதாகப் படித்து இருக்கிறேன் ...

சனி, 14 மே, 2016

சலூன் கடைப் போஸ்டரும் - தேர்தல் வாக்குறுதிகளும் !


பழைய படம் இல்லை . புதுசு ! அப்போது செல் ஃபோன் வசதி இல்லையே ?

எங்களின் குடும்பத்தில் ஆறு பேருக்கும் வெகு நாளாய் ஆஸ்தானமுடித் திருத்தம் செய்பவர் திரு.ராமு (அப்பா அப்படித்தான் கூப்பிடுவார் ) அவர் சலூன் கடைத் திண்டுக்கல் டாக்ஸி ஸ்டாண்ட் ஒட்டியுள்ள மார்க்கெட் பகுதிக்குள் இருக்கும் .அப்பா கடைக்குக் கொண்டு போய் விடும் போது ஒட்ட வெட்டச் சொல்லி விட்டுப் போய்விடுவார். இருந்தாலும் அவர் எனக்கு வெட்ட ஆரம்பிக்கும் போது , உனக்கு எப்படி வெட்ட வேண்டும் என்று பரிவாய்ப் பணிவாய் விசாரிப்பார். தாத்தா , பாட்டி ,அப்பா, அம்மா,அண்ணன்கள் நான்குபேர் ஆக மொத்தம் எட்டுப்பேருக்கு இளையவனான (கடைசி அடிமையான) எனக்கு அது மிகப்பெரிய கௌவுரவமாகத் தெரியும்.எனக்கு அதுனாலேயே அவரை ரொம்பப் பிடிக்கும்.ஆனால் அப்போது ஸ்டைல்ன்னா என்னான்னுத் தெரியாது . எதைச்சொல்வது ? அதனாலப் பதிலுக்கு அழகா வெட்டுங்க என்பேன் . 

விவரம் தெரிய ஆரம்பிக்கும் முன்னிருந்து ராமுதான் வெட்டிக்கொண்டு இருக்கிறார் .அனேகமாக ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதுதான் அந்தக் கடையிலுள்ள காலண்டர்களும் போஸ்டரும் என்னை மிகவும் பயமுறுத்த தொடங்கின .அவர் பார்க்க கிராமத்து ஆசாமியாய் இருப்பார் ஆனால் அவர் கொஞ்ச சின்ன வயதில் சினிமாக் கம்பெனிக்குப் போய்க் காஞ்சித் தலைவனில் ( 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ) எம்.ஜி ஆருக்குச் சிகை அலங்காரம் செய்யும் போது உதவியாளராக இருந்ததாக அப்பச் சொல்லியிருக்கிறார். அங்கே இருந்த அவரை  அப்படி இப்படியெனெக் கட்டவிழ்த்தக் காளையாய்க் கெட்டுப்போவார் என்று நினைத்த அவர் குடும்பம் இங்குக் கட்டாயமாக அழைத்து வந்து கால் கட்டுப் போட்டுவிட்டதாம் ! 

   அப்படிச் சினிமாப் பழக்கத்தினாலோ என்னவோ அவர் கடைப் போஸ்டர்களில் அதிகப் பட்சம் ஹிந்தி கதா நாயகிகளுக்கு நிறைய இடம் கொடுப்பார் அந்த நாயகிகள் கண்ணாடியில் சுவரில் படு மாடனாய் இருப்பார்கள்.நேரில் நின்று சிரிப்பது போலவே இருக்கும் ! எங்குதான் அதெல்லாம் அவருக்குக் கிடைக்கும் என்பது அப்போது தீராத ஆச்சர்யம் எனக்கு . அது மட்டுமல்ல அந்தக் கதாநாயகிகள் யாரும் இத்துனூண்டு உடை அணிந்து கொண்டு இருக்கமே என்று எப்படிக் கூச்சப்படாமல் இருக்கிறார்கள் ? பார்க்கிற நமக்கே இப்படி இருக்கேன்னு யோசிப்பேன்..நான் விடைத் தேடுவதற்குள், ஒன்று ராமு முடி வெட்டி முடுத்து விடுவார் அல்லது வெட்ட வெட்ட அவர் தலையில் தெளித்த தண்ணீர் ஈரத்தின் சுகத்தில் என்னையறியாமல்  தூங்கிப்போவேன்…. 

Pinky Lalwani சிரிப்பைப் பார்த்தால் இவர் இப்படி செய்வார் என முன்னமே தெரியும் போல ?

சில வருடம் கழித்து ராமு எங்கள் வீட்டுக்கே வந்து முடித் திருத்தம் செய்ய வீட்டுக்கே வந்து விட்டதால் கடைசிவரை அந்தப் போஸ்டர்கள் எதற்கு வைக்கிறீர்கள் , எங்குக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் போனது .அதற்குப் பிறகு அந்த மாதிரிப் போஸ்டர்களை விஜய்மல்லையாவின் கிங்ஃபிசர்க் காலண்டர்களில் பார்த்தேன் அவரைக் கேட்பதற்குள் இந்தப் பேங்க் மேனேஜர்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியோ நாட்டைவிட்டே அனுப்பி வைத்து அவரைக் காப்பாற்றி விட்டார்கள். எனக்கு விஜய் மல்லையாவுக்கும் ஒரே பொருத்தம் இருவருக்கும் ஃபார்முலா1 ரேஸ் பிடிக்கும்.ஆனால் நான் பேங்கில் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டிவிடுவேன் என்பதால் எனக்கு யாரும் கடன் தரவில்லை.ஒருவேளை தந்து இருந்தால் நானும் இந்தியப்படை (Indian force ) என்ற ஒரு ஃபார்முலா1 ரேஸ் ஒரு அணி ஆரம்பித்து நம்மூர் நரேன் கார்த்திகேயனையும் ,கருண் சந்தோக்கையும் ரேஸ் ட்ராக்கில் வைத்து ஒரு கலக்குக் கலக்கியிருப்பேன் .! ஆனால் Pinky Lalwani யோடெல்லாம் சுத்தியிருக்க மாட்டேன் என்றூ சத்தியம் செய்கிறேன் .


இப்போது தெருவெங்கும் அரசியல் பிரச்சாரங்களில் சத்தமும் ,வாகன உறுமல்களும் ,துண்டு பிரசுரங்களும் கலைகட்டுகிறது . சில வாக்குறுதிகளைக் காப்பாற்றாவிட்டாலும் வீட்டு வாசலில் விசிறி எறியப்பட்ட வயதில் மூத்த அரசியல் வாதிகளின் படம் போட்ட நோட்டிஸ்கள் காலில் படும்போது வருத்தமாக இருக்கும் ! ஆனால் அவர்கள் பிரசாரங்களில் தரும் வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கைகளும் ( Manifesto ) தொலைக்காட்சி விவாதங்களில் நாங்கள் வந்தால் இதைச் செய்வோம் அதைச்செய்வோம் என்று சொல்கிறாகள்  .

ஆளும் கட்சி படிப்படியாக டாஸ்மாக் எனும் மாநில அரசு நிறுவனம் மூடப்படும் என்கிறார்கள் .மக்கள் மன்றம் என்ற பெயரில் 110 விதி ஆள்கிறது தமிழகத்தை .இலவசங்கள் தொடரும் என்கிறார்கள்

இன்னொரு கட்சி வந்தவுடனே முதல் கையெழுத்தே அதுதான் என்கிறது . 2014–15 ஆண்டில் 26,188 கோடி வருவாயையும் இழக்கவும் 29,297 பணியாளார்களுக்கும் ஆப்பு வைப்பேன் என்கிறது அதை விட அந்தப் பழக்கத்தால் வரி போக நிகர வருமானம் 7 ஆயிரம் கோடி வருவாய்த் தந்த தமிழனை குடித்தால் கைது செய்வேன் என்கிறது . அருமை . ஊற்றிக் கொடுத்தவர்கள் இப்படித்தானே சொல்வீர்கள் .

உங்கள் வலக்குகளில் தப்பிக்க மக்களைக் கொல்லும் போது கை கட்டி நிற்கிறீர்கள் , நீதிபதியின் கால் குலேட்டரை எடுத்து ஒளித்து வைத்து கொள்கிறீர்கள் .

இன்னொன்று கட்சி தேடிப்போனாலும் தீர்ந்துப் போச்சுன்னு கைவிரிக்கும் ரேசன் கடையை வீட்டுக்கே வந்து தருவேன் என்கிறது .அந்த கட்சி கடைசி வரை பேரம் பேசிப் பேசி பாவம் ஏற்கனவே இருந்த கூட்டணியை குழப்புகிறது !

முதுகெழும்பை வளைக்கச் சொல்லித் தந்த மெக்காலே கல்வித் திட்டத்தை ஒருத்தர்  முழுதாய் இலவசம் என்கிறார்.அவர்கள் அனுமதித் தந்த மருத்துவக் கல்லூரி வலக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது .

கடைசிவரை மீன் பிடிக்க சொல்லி தரமாட்டார்கள் கையேந்த மட்டுமே கற்றுத்தருவீர்கள் 

உங்களுக்கெல்லாம் தெரியுமா ? 2016-17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை மட்டும் ரூ.2,47,031 கோடி எனப் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உயர்த்தியுள்ள ரூ.2,47,031 கோடிக் கடன் தொகையைக் கணக்கிட்டால், 7 கோடியே 50 லட்சம் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.32,937 கடனை ஏற்றி வைத்துள்ளது.
இதை யார் அடைப்பார்கள் ?

வந்தவுடன் வரவினங்களுக்கு முக்கியத்துவம் தருவோம் என்பதைப் பற்றிப் பேசத் தயங்குகிறீர்கள்.சென்னைவாசிகள் வெள்ளத்தின் போது உணவுக்காகவும் உயிர் பிழைப்பதற்காகவும் மக்கள் கையேந்தியதைப் போல இந்தத் தமிழகம் முழுதும் கையேந்த வேண்டும் ஆசைப்படுகிறார்கள் போல ! எவனையாவது குறை சொல்லியே வெட்கம் இல்லாமல் வாக்குக் கேட்கிறீகளே வாக்கு என்பது பெறப்படுவதில் இல்லை கொடுக்கப்படுவதிலும் அதைப் பிசிறில்லாமல் காப்பதிலும்தான் தில் இருக்கிறது.

சரி இன்னொன்றுத் தெரியுமா நீங்கள் எல்லாம் இன்னும் சில வருடங்களில் திருந்தினாலும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த உங்களிடம் பணம் கொடுத்துப் பதவிக்கும் பொறுப்புக்கும் வந்த அரசு ஊழியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் அரசு இயந்திரத்தில் .அவர்கள் போட்டக் காசை எடுக்க வீட்டுக்குக் கூடப் போவதில்லையாம் அவர்களை வைத்தா நல்லாட்சி செய்யப் போகிறீர்கள் ? அவர்கள் படித்த தந்திரசாலிகள் உங்களை விடவும் திறமைசாலிகள் .கொடுத்த காசை வசூலிக்க அவர்கள் உங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டார்கள் .

ஏனோ எனக்கு அப்போது பார்த்த ராமு அவர்களின் சலூன் கடைதான் ஞாபகம் வந்தது .ராமுவாது முடி வெட்டுவதற்காக மட்டுமே அன்று காசு வாங்கினார் . அந்தச் சிரிக்கும் ஹிந்தி நாயகிகளைப் பார்க்கக் காசு வாங்கவில்லை . அங்கு வேண்டாதைக் கழிக்கக் காசு கொடுத்தோம் .ஆனால் நீங்கள் அரசியல் வியாபாரிகள் உங்கள் கட்சி ,உங்கள் அதிகாரம் , உங்கள் ஊழல் ,வழக்கு, மீண்டும் ஆட்சிக்கு வர இத்தனைக்கும் சேர்த்து எங்களை வெட்டவும் , வெட்டியதை ஐந்து வருடத்தில் மறந்து போகச் செய்யவும் வேண்டியதை இழக்க வாக்குக் கேட்கிறீகள் .



       நீங்கள் யார் வந்தாலும் தர வேண்டியது வாக்குகள் அல்ல மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது . அதில் கவனம் செலுத்துங்கள் .நீங்கள் கடவுளை மறந்து வேண்டுமானால் போங்கள் அல்லது உங்கள் வீட்டு பெண்களை ரகசியமாக அனுப்பி பூஜை செய்து கொள்ளுங்கள். ஆனால் முதலில் கோவில்களை பொதுவாக்குங்கள் எல்லோரும் தரிசிக்க அனுமதியுங்கள் .தரிசனத்திற்கான கட்டணத்தை முற்றிலும் இல்லாதாக்குங்கள் .என்று இறைவன் என்ற பயம் போனதோ அன்றே தமிழனின் சரித்திரம் தரித்திரமாகி விட்டது . எல்லா கல்வி நிலையங்களையும் அரசு அதிகாரிகளற்ற பொது மக்கள் குழு மேற்பார்வைக்கு கீழ் கொண்டு வாருங்கள் . எங்கள் முதல் கையெழுத்து குளம் , கம்மாய் ,ஏரி இவற்றை தூய்மை படுத்துவதாய் இருக்கட்டும் என்று சொல்லுங்கள் .வேலை வாய்ப்பை உருவாக்கவும் கைவினை பொருட்களை செய்யவும் ஊக்கமளியுங்கள்.சமுதாய மாற்றத்திற்கு அறிஞர்கள் மாநாடுகளை 6 மாதம் ஒரு முறை நடத்துங்கள் .லஞ்சம் பெறப்பட்டால் அவரை எதுவும் செய்யாதீர்கள் தனியாய் லஞ்சம் பெறும் அதிகாரி என்று ஒரு அட்டை மாட்டி அதற்கு கீழ் பண்புரியச் சொல்லுங்கள் .விவசாய பொருட்கள் நிர்ணயத்தை பங்கு மார்க்கெட்டுக்கு துளியும் விடாதீர்கள் .குழந்தைகள் - பெரியவர்களை அரசே கவனித்துக்கொள்ள  ஏற்பாடு செய்யுங்கள் . இப்படி மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது .அரசு அதிகாரிகள் தாங்களே முன் வந்து ஓய்வு பெற்று வழி விடுங்கள் .உலகம் முழுதும் உள்ள தமிழன் அனைவரிடமும் முன்னேறும் திட்டம் நிறைய இருக்கிறது கேட்டுப் பெறுங்கள் .நம்மால் முடியாவிட்டால் யாராலும் முடியாது என்று நம்புங்கள்.இந்த உலகத்திற்கு தமிழன்தான் மூத்த குடி, வழிகாட்டி எல்லாம் அவனை உங்கள் இலவசங்களால் ஊனமாக்காதீர்கள் .

   எங்கள் எண்ணம்தான் நீங்கள் . அதனால் நாங்கள் மாற வேண்டும் .அதற்கு காலம்தான் எங்களுக்கு மே 16 ஆம் தேதிக்குள் பக்குவம் தர வேண்டும் ...