யாராவது உங்களிடம் (கொஞ்சம் மதிப்பாய்) நீங்கள் இந்த வேலைக்கு வராவிட்டால் என்னவாகி இருப்பீர்கள் எனும்போது (நம்மால் முடியாவிட்டாலும் ) ஒரு பந்தாவுக்காகவாவது பிரபலமான ஒரு துறையில் இருந்து இருப்பேன் என்பதாக சொல்வது வழக்கம்தான் .ஆனால் அப்படி நான் சொல்லாவிட்டாலும் எனக்கு ஒரு ( விபரீத )ஆசை இருந்தது .அது நான் ஒரு ஸ்டில் ஃபோட்டோ கிராபர் ஆக வேண்டும் என்பது !
நல்ல வேளை எனது நண்பர்கள் பலரின் குல தெய்வ வேண்டுதலால் !! அப்படி ஒரு துரதிருஷ்டம் இந்த உலகுக்கு ஏற்படவில்லை என்பது வேறு விசயமே .
நான் புகைப்பட கலை பழக ஆசைப்பட்ட காலம் ஒயிட் அண்ட் பிளாக்கில் எடுப்பதானால் ஃபிலிம் செலவு குறைவு ஆனால் பிரிண்ட் காஸ்ட் அதிகம் .கலர் இதர்க்கு நேர் எதிர் என்பதால் நண்பரிடம் இருந்த ஒரு ஹாட் சாட் கேமிரா இருந்ததை பழக கேட்டேன் .கொடுத்து விட்டார் .அதோடு அவர் சும்மா இருந்திருக்கலாம் .கொடுக்கும்போது இந்த கேமிராவில் ஐந்து அடிக்குள் மட்டும்தான் படம் எடுக்க முடியும் அதனால் நீங்கள் ஃப்ரேம் மட்டும் எப்படி எடுப்பது என்பதை இதில் கற்றுகொள்ளுங்கள் எனறார். உடனே ஒரு கருப்பு வெள்ளை ஃபிலிம் ரோல் மாட்டி எனது கற்பனை குதிரையை ,அமெரிக்காவின் பிரபல Ansel Easton Adams ரேஞ்சுக்கு யோசிக்க தொடங்கி விட்டேன் .ராப் பகலாய் இதே யோசனை !
இது பத்தாது என்பதாக மனசுக்கு தோணவே ,அப்போது படித்து கொண்டு இருந்த தி .ஜானகி ராமனின் ‘மோகமுள் ‘ படத்துக்கு கதைக்கு ஏற்ப படம் எடுக்க ஆசைபட்டு ஆரம்பிக்க ,(இயக்குனர் ஞான ராஜசேகரன் மன்னிக்கவும் ) பக்கத்து வீட்டில் பள்ளி விடுமுறைக்கு வந்த ஒரு பெண்ணை அந்த கதையின் யமுனா கதாபாத்திரத்திர்க்கு ஏற்ப யோசித்து அந்த பெண்ணை நடுவீட்டுக்குள் உட்கார வைத்து கையில் ஒரு பூவை மட்டும் பிடித்து இருக்க, எல்லா கதவையும் சாத்தி விட்டு, (மன்னிக்கவும் ) முகத்தில் மட்டும் ஒளி விழுமாறு எதிரே ஒரு ஜன்னலை மட்டுமே திறந்து வைத்து படம் எடுத்தேன் .
அப்புறம் எனது கிரிக்கெட் அணியை , எனது படிக்கும் அறையை ,சில நண்பர்களை ,வீட்டு வாழை மரத்தை ,பப்பாளி மரத்தையும் படம் எடுத்து ஃபிலிமை (நல்லவேளை )தீர்த்தேன் .
ஸ்டுடியோவில் ப்ரிண்ட் போட்டு கொண்டு இருக்குபோது வெளியே நெர்வசாக ஒரு Robert Capa's வின் Falling Soldier ஃபோட்டோ அளவுக்கு என் ஒவ்வொரு ஃப்ரேம் அள்வுக்கு யோசித்து கொண்டு இருக்க , நண்பர்தான் முதலில் படங்களை பார்த்தார் .எதுவும் சொல்லவில்லை ,கை கொடுத்தார் .நீங்க இப்போ ஒரு ஸ்டில் ஃபோட்டோ கிராபர் என்றார் .அப்புறம் என் நிலை சொல்லவா வேண்டும் ? நானாகவே ஏதோ மலையிலிருந்து உருளுவது போல இருந்தது .
நான் சின்ன வயதிலிருந்தே ஏதாவது புது புது விசயங்களை தேடிபோவதால் கிடைக்கும் அத்தனை நபர்களிடமும் நான் அப்போது செய்து கொண்டு இருக்கும் வேலை மிக ஈடுபாட்டுடன் ஒரு மேதாவித்தனத்துடன் ஒப்பிப்பது சகஜம் .அப்படி ஒரு நண்பர் கேள்விபட்டு ,தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவை புகைபடம் எடுக்க கேட்டு கொள்ள பள்ளபட்டி என்ற கிராமத்துக்கு போனோம் .பொதுவாகவே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் .அதனால் ஒவ்வொருமுறையும் ,விசேசத்திர்க்கு சாப்பிட மட்டுமே வந்த பங்காளி மாதிரி பதுங்கி பதுங்கி போட்டோ எடுக்க, அப்புறம் எனக்கு ஒருவரை துணையாக உதவிக்கு தந்து முன்னுக்கு தள்ளினார்கள் .
அதே நண்பரின் கல்யாணத்திர்க்கு போட்டோ எடுக்கும் அளவுக்கு ஓரளவு திருப்தியாக படங்கள் அமைந்தது .ஆனால் அந்த கல்யாணத்தில் தாலி கட்டும் போது ஃபிலிமை தீத்துவிட்டு மாப்பிளை நண்பர் என்பதால் கையில் தாலியுடன் காத்து இருக்க அய்யரை முறைக்க வைத்து விட்டு ,அவசரமாக ஃபிலிம் லோடு பண்ணி படம் எடுத்தது இதில் சேத்தி இல்லை .
பொதுவாகவே போட்டோ கிராபருக்கு ஒரு மரியாதை உண்டு என்பது கொஞ்சம் போதையான விசயம் .முகம் தெரியாத ஆள்கூட தந்து முகத்தை பதிய வைத்து கொள்ள சினேகமாய் பேசுவது இன்னும் கொஞ்சம் உசத்தியாய் அப்போது யோசிக்க வைக்கும் .எனது ஆர்வம் அல்லது தொல்லை தாங்காத இன்னொரு நண்பர் நான் பாண்டிசேரியில் இருக்கும்போது அப்போது வந்த புதிய மாடலான yashica kyocera MF2 வாங்கி கொடுத்து பல விசேசங்களை வாய்பு தேடித்தர ..கனவுகள் கூடசில சமயம் ஃப்ரேம் ,லைட்டிங்,ஆங்கிள் அடடா போச்சே என வரும் ..
இப்போது எனது பையன் மைக்ரோ மேக்ஸ் A 89 போனில் எடுக்கும் மிக சாதாரண போட்டோக்கள் கூட அசரவைக்கிறது .அவனுக்கு ஃப்ரேம் ,லைட்டிங்,ஆங்கிள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தட்டி எடுக்கிறான் .சில விசயங்களை(மற்றவர்களை) கஷ்டப்படுத்தி நாம் கற்று கொள்வதை விட கவனாமாக செய்தால் போதும் என்பதர்க்கு எனக்கு நானே ஒரு மிக மோசமான உதாரணம் போல !