சனி, 28 ஜனவரி, 2017

வா வர்ஷினி - Ranbir kapoor .

                 

                           ன் நண்பர் ஒருவர் விளையாட்டாய் சொல்லும்போது  திருமணம் எல்லோருக்கும் சுவர்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் பாருங்கள்  சிலர் மட்டும் நரகத்தில் வீடு வாடகைக்குப் பிடித்து குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பார்.

அனேகமாக அப்படிப்பட்ட சிலரை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பார்க்கிறேன் .

                      ஞாயிற்றுக் கிழமை வந்தாலே எனக்கு ஒரு முன்னால் பிரபல டிவியின் சில லட்சத்தைத் தாண்டி திருமணம் நடத்திக் கொண்டு இருக்கும் நிகழ்ச்சியின் மேல் சிரிப்பும் ஒரு வசீகரமும் கலந்து வந்து விடுகிறது . 

             வசீகரத்திற்குக் காரணம் நம் வாழ்க்கை முறைகள் இவ்வளவு மாறியும் சொந்தங்களிடம் நான் இனியும் லோல் பட முடியாது என்று இன்றிருக்கும் குடும்ப மனநிலைகள் புதிய சொந்தங்களுடன் கைகோர்த்துக் கொள்ள விரும்பப் படுகிறது என்பதை அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடிகிறது .ஆனாலும் அங்கு வரும் ஆண்களோ ,பெண்களோ இப்படித்தான் தனக்குத் துணை வேண்டும் என்ற கற்பனை மனோ நிலைகள் மட்டும் இன்னும் துளியும் மாறவே இல்லையெனும் போது நாம் இன்னும் முற்றிலுமாகச் சொந்தங்களை வெறுக்கவில்லை புதிய சொந்தங்கள் இப்படி வேண்டும் என்ற ஆர்வம் தெரிகிறது .அது ஆறுதலாகவும் இருக்கிறது .


ஆனால் சிரிப்புக்குக் காரணம் அதை நடத்துபவர் தன் அழகான சிரிப்புடன் ஏதோ சுயம்வரத்தில் தீர்மானிக்கும் வாய்ப்பைத் தருவது போல எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்று பெண்களிடம் கேட்கும்கேள்விகளுக்கு அவர்கள் வருங்காலக் கணவர் , மிகவும் நல்லவராக , அன்பானவராக, என்னைப் புரிந்துக் கொள்பவராக , நிரந்த வேலையில் இருப்பவராக வேண்டும் என்கிறார்கள்.இதெல்லாம் மொத்தமாக அயோத்தியில் கூட மட்டுமல்ல அகிலமெல்லாம் தேடினாலும் கிடைக்காது என்பது பார்க்கும் எனக்கும் உங்களுக்கும் தெரியும்தான்.ஆனால் அதைக்கேட்டும் கோபப்படாமல் இன்னும் அதே சிரிப்புடன் அவர் , நீங்கள் கேட்பது மாதிரியே அப்படியே ஒரு நல்ல கணவர் கிடைப்பார்  சொல்லும் போது, கலந்து கொண்டவர்களுக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம். ஒருவேளை அவர்கள் கேட்கிற மாதிரியே ஒரு மணமகனை அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் திரைக்குப் பின் நிற்க வைத்திருப்பது போலவே பேசுவது ஆச்சர்யமாகத்தான்  தெரிகிறது .

               உலத்திலேயே கஷ்டமான பதில்களில் ஒன்று எனக்கு என்ன பிடிக்கும் என்பது .மிக எளிமையான பதில் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று நான் தீர்மானிப்பது  என்பார்கள் .அது சரியாகத்தானே இருக்கிறது !



          வாழ்நாள் முழுதுவதும் சேர்ந்து வாழ்ந்தவர்களிடம் இந்தக் கேள்விக் கேட்டால் இது முழுமையாகச் சாத்தியம் இருக்கிறது என்று சொல்வார்களா ? தெரியவில்லை.

இதைவிட நம்மப் பசங்க சொல்லும் கண்டிசன்களைக் கேட்டால் இன்னும் சிரிப்புத் தானாக வந்து விடும். சில சமயம் என் வீட்டம்மா இருப்பது தெரியாமல் சிரித்து மாட்டிக்கொண்டு விடுவது வழக்கம் .( அப்படி எனக்கும் கிடைக்கவில்லை என்றுதான் சிரிக்கிறேன் என்று என் மனைவி புத்திசாலித்தனாமாகப் புரிந்து கொண்டுவிடுவார் ! ) 

                        பசங்கள் கேட்கும் போது தனக்கு வரும் மனைவி , அன்பானவராக ,படித்தவராக ,எங்கள் வீட்டில் ( பப்பி நாயிலிருந்து அவிநாசி மாமாவரை  ) எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு ( இவனுக்கே புரியாத ) தன்னையும்   புரிந்து கொள்பவராக, ( இவன் சம்பாத்தியத்தை எதிர்பார்க்காமல் ) வேலைக்குச்  செல்பவராக இருக்க வேண்டும் என்பார்கள் .

            இப்படிக் கேட்டபடிப்   பொறுத்தமாகத் தயாரிக்க, ஒரு மெசினைக் கூடக் கடவுள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஒருவேளை அவருக்கே இப்படிக் கிடைப்பது மாதிரி இருந்தால், வெண்ணிலாக் கபடிக்குழு  பரோட்டா சூரி மாதிரி, முதல்ல இருந்து ஆரம்பி என்று சத்தமாகக் கத்திக் கூப்பாடுப் போட்டு இருப்பார்.பாவம் அவருக்கே அந்த யோகம் கிடைக்கலையாம் . ( ஆமாம் அதை யோகம் என்பதா தண்டனை என்பதா ? சில யோகங்கள் என்று சொல்லுவார்கள் விவரமாகப் படித்துப்பார்த்தால் அது சாபம் போலவே தெரியும் ! )

மாங்கல்யம் தந்துனானே        – இந்த மங்கல நானை 
கண்டே பத்னாமி                         – உன் கழுத்தைச் சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் ) 
சுபாகே                                            – மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 
த்வம் சஞ்சீவச் சரதச் சதம்”  – நீ நூறாண்டுக் காலம் வாழ வாழ்த்துகிறேன்! 

இப்படிச் சொல்லித்தான் ஒவ்வொரு ஆணும், திருமணித்துக் கொள்கிறான் .தன்னை நம்பியே பெண்கள் வருவதாகவுமான நம்பிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் இந்த மேடையில் சொல்லப்படும் விசயங்களைக் கேட்டால் "உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்" என்ற வள்ளுவத் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை நினைத்துக் கொள்வதா இல்லை வந்து பாருங்கள் புரியும் என்று மானசீகமாக அட்சதைப் போடுவதா தெரியவில்லை .

                     என்று இவர்கள் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு போலக் கிடைத்த வரனை வைத்து நான் சந்தோசமாக வாழ்வேன் என்று பெண் தேடுபவரும் , கிடைக்கும் கணவனுடன் நான் சந்தோசமாக இருப்பேன் என்று ஒரு கியாரண்டியோ வாரண்டியோ எப்போது கொடுப்பார்களோ ? தெரியவில்லை .




ஆனால் இப்போது எனக்கு ஒரு விளம்பரம் பார்க்கும் போது ஆண்களுக்குத் திருமண வரம் Ultima Protek மூலம் கிடைத்து விட்டதாகத் தோணுகிறது . 

          ரெண்டு டின் பெயின்ட் வாங்கிக் கொண்டு ரன்பீர்க் கபூர் போல அமிர்தவர்ஷினி ராகம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை அதே ராகத்தில் அக்னி நட்சத்திரம் படத்தின் -  தூங்காத விழிகள் ரெண்டு உன் துணைத் தேடும் நெஞ்சம் ஒன்று... என்று பாடிக்கொண்டு ஒவ்வொரு கல்யாண மண்டப வாசலில் நின்று விட்டால் போதும்.தற்போதைய தமிழ் பட அப்பாவி அப்பாக்கள் போல இருந்தால் உங்களுக்கான வர்ஷினியை எங்கிருந்தாலும் வாழ்ந்துத் தொலை என்று அனுப்பி வைக்கும் சாத்தியமிருக்கிறது !

இந்த விளம்பரத்தை ஒரு மில்லியன் வ்யூவர்ஸ் பார்த்து இருக்கிறார்களாம் .அதில் ஒரு வேளை ஒரு அழகிய வர்ஷினி வரச் சாத்தியம் இருக்கிறது . அப்படியும் இல்லையெனில் உண்மையான உங்கள் வருங்கால மனைவி வருவதற்காகவாது சொற்ப வாய்ப்பு இருக்கிறது அப்படிப்பட்டவர்கள்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும் ....

என்ற அதிசய ராகத்தில் பாடி மனதை ஆறுதல்படுத்திக் கொள்வோமே ! .

புதன், 18 ஜனவரி, 2017

”அப்புக் காளைகளின்” உணர்வுப் போராட்டம் !The struggle for Jallikattu



எங்களால் நீங்கள் எங்களுக்காக நீங்கள் !



  "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." 

ஒட்டு மொத்தத் தமிழக மக்களின் மனமாக ஜல்லிக்கட்டு நீங்கா இடம் பெற்று விட்டது .முதன் முதலாக ஒரு நல்லுணர்வை பரப்பும் பணியில் மிகப்பெரிய வளைத்தளங்கள் அற்புதம் செய்து இருக்கிறது.எந்தத் தலைமையையும் உள் நுழைக்காமல் ஓடிப்போங்கள் என்று உதறி விட்டு , யாரையும் நிர்பந்திக்காமல் உனக்கு விருப்பம் இருந்தால் வந்து கலந்து கொள் என்ற தன்னெழுச்சி உணர்வுக்குச் சிவப்புக்கம்பளம் விரிக்கும் இளைஞர்கள் குரல் உலகத்தைத் திரும்ப மட்டுமல்ல திரும்ப வைக்க மட்டும் வைக்கவில்லை ’எங்கெல்லாம் அந்த உணர்வு மேழெழுகிறதோ அங்கெல்லாம் நடத்தத் தூண்டு கோலாகிவிட்டது . 

"நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் என்ற இளைஞர்களைப் பற்றிய விவேகானந்தரின் நம்பிக்கை ஆன்மாச் சுடர் விட்டு நிற்கிறது ."என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசைக் கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலைச் செய்யுங்கள். ”

என்பதான விவேகானந்தரின் ஒரு யோகியின் ஆசை நிறைவேறும் அடையாளமாக ஜல்லிக்கட்டுத் துவக்கமாக நிற்கிறது . 

     இனச்சேர்க்கைக்கு விடப்படும் பொலிகாளை என்ற  பூச்சிக்காளையை காப்பது மட்டுமல்ல இந்த போராட்டத்தின் முன்னுரை .அதைப்பற்றிய விசயங்களை வளர்ப்பவர்களை விட அதை விரட்ட நினைக்கும் அறிவாளிகள் நிறையப் பேசி விட்டார்கள் .நமக்கு இங்கு பேச எதுவுமில்லை . 

இன்றைய இளைஞர்கள் எப்படிப்பட்ட சக்திகள் என்று காட்ட ஒரு தருணத்தைத் தனக்குத் தெரியாமல் நெருப்புச் சுடும் என்று தெரியாமல் கட்சிகளும் , நாட்டை நிர்வகிக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்ளும் நாடாளும் அரசியல் தன்னலமே வாழ்வெனப் புளுகும் அரசியல் பொய் மூடைகளுக்கும் இந்த எச்சரிக்கைக் காது மடலைச் சூடாக்கியிருக்கும் .இனி வருங்காலத்தில் எப்படித் தடுக்கலாம் என்று மந்திராலோசனையில் மூழ்கியிருக்கலாம் ! ஆனால் உங்களுக்குப் புரியப் போவதில்லை ஒரு நாளும்.நீங்கள் முந்தியத் தலைமுறையை இலவசங்களிலும் , சினிமாக் கவர்ச்சி வாசத்திலும் ,திராவிடன் என்ற உணர்ச்சி முலாம் தடவி விசங்களை ஊட்டி வளர்ந்தவர்கள் .நீங்கள் திருந்த வாய்ப்பு இல்லை .உங்களுக்குள்ளும் அப்படிச் சொல்லித்தான் வளர்ந்து விட்டீர்கள் .  பாவம் என்ன செய்ய ? 


  2014 வரை மதுரை மண்ணில் நடந்த ஜல்லிக்கட்டில் 'அப்புக் காளை' ஒன்றே ஒன்றுதான் இருந்தது .ஆனால் இன்று உலகமெங்கும் அடங்காத திமிர் படைத்த அல்ல ’திமிழ்’ கொண்ட இளைஞர்கள் பட்டாளம் பொறுமைக் கடந்து சுனாமியாய்க் கரையேறி நிற்கிறது . இங்குத் தன் மண்ணை நேசிக்கும் ,தன் மரபைக் காக்கும் ,தான் உண்டு வளர்ந்த இன்னொரு தாயான பசும்பால் வீர்யம் தன் மரபில் ஊறி நிற்கும் இருக்கும் ,இந்தச் சமூகம் என் சமூகம் என் உரிமை எவனோ நிர்ணயம் செய்யக்கூடாது ,என் கலாச்சாரம் , என் அடையாளம் ,என் முகம் . அதை அழித்து விட்டு உங்கள் சட்டம் முன் மண்டியிட நாங்கள் தேசக் குற்றவாளிகள் இல்லையென்ற உரத்தக் குரலோடு அற வழியில் களம் இறங்கி இளைய சமுதாயம் தெருவில் இறங்கி இரவு பகல் பார்க்காமல் கிடக்கிறது  .முடிந்தால் சட்டத்தின் கட்டுத்தரைக் காம்புக்கயிறுகளை அவிழ்த்து விடுங்கள் .அவர்கள் காத்திருப்பது காளைகள் எதிர்காத்திற்காக மட்டுமல்ல இனி வரும் எதிர்காலத்தின் நம்  உரிமைக்காக  .

அவர்களுக்குத் தோள் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை . எங்கள் இன்றைய காவல் துறைப் போலக் கைக் கட்டி நில்லுங்கள் . ஏனெனில் முதல் முறையாகத் தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞனின் குடும்பமும் அவர்கள் பின்னால் தோள் கொடுத்து நிற்கிறது .என் பையன் ,பெண் வீட்டில் பொறுப்பில்லை என்று நொந்து போயிருகிறேன் ஆனால் எனது இரண்டு தலமுறைகள் செய்யாத என் சமூகத்தின் உரிமையைப் பெற்றுத் தர வீதியில் கிடக்கிறான் .இந்தப் போராட்டம் கடந்த காலத் தலைமுறையின் அடங்காக் கோபத்தின் வலிக்கு மருத்துவத்திற்கான தேவை மட்டுமில்லை. வருங்காலத் தலைமுறையின் முள்பாதைகளைச் செப்பனிடும் பணி என்று புரிந்து வைத்து இருக்கிறார்கள் . 


2017 இளைஞன் இனி எப்போதும் பேசப்படுவான் ! என்று ஒரு வீட்டில் இளைஞன் புரிந்து கொள்ளப்பட்டானோ அன்றே அந்நாட்டின் சுதந்திரம் புதிப்பிக்கப்படும் பணித் துவங்கி விட்டது என்று பொருள் .

  1947 க்கும் முன்னும் இதுதான் நடந்தது ... 

வியாழன், 12 ஜனவரி, 2017

ஞானியின் வீட்டுத்திண்ணை - “கல்லும் கனியாகும் - Hammer on the Rock”.



 ஓஷோ தனது சீடர்களுக்காகத் தனது ஆஸ்ரமத்தில் , 31 நாட்கள் செய்தத் தொடர்ச் சொற்பொழிவில் இளம் சாதகர்கள் முதல் மூத்த சந்நியாசிகள் வரையில் உள்ளவர்களுக்கான 300க்கும் அதிகமான எவ்விதமான தயக்கமில்லாத கேள்விகளும் அதற்கான பதில்களின்  நிகழ்வாகத்தான் இந்தப் புத்தகம் மலர்ந்து இருக்கிறது . ஒரு குருவின் தரிசனத்தைப் புரிந்து கொள்ளக் கேள்விகளுக்கு அவர்தரும் பதிலில் அவரின் பக்குவத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறவர்களுக்கு இந்தப்புத்தகம் பொக்கிசம் . வேறு எந்த ஓஷோவின் உரைத்தொகுப்பின் வாசிப்பிலும் கிடைக்காத அவருடனான நெருக்கத்தை , அன்மையை ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம். ஓஷோவின் இயல்பான வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் ஒரு ஞானி விட்டுச்சென்ற போதனைப் பதிவுகள் ஏற்படுத்தும் வலிமையை விட அவர் பேச்சை நேரடியாகக் கேட்டுணரும்போது அந்தக் கதகதப்பான வார்த்தைகளில் பன்மடங்கு வலிமைப் புதைந்து இருக்கிறது என்பார்.அதைத்தான் இந்த வாசிப்பு எனக்குள் நிகழ்த்தியது .அதுதான் ஞானியின் வீட்டுத்திண்ணை என்ற பெயர் இந்த நூலுக்கு வைக்கத்தூண்டியது ! 


ஓஷோவின் பதில்களில், பன்முகத்தன்மை !

தத்துவத்தைப்பற்றிப் பேசும் போது, 100 வயதானக் கிரேக்க அறிஞர் டயோஜனீசிடம் உங்களால் எப்படி எந்த நேரமும் சந்தோசமாக இருக்க முடிகிறது என்ற ரகசியத்திற்குப் பதிலளிக்கும்போது ,ஒவ்வொரு நாள் காலையிலும் நான் கண் விழிக்கும் போதும் என் முன்னால் இரண்டு கேள்விகள் இருப்பதை நான் அறிகிறேன்.ஒன்று மகிழ்சியாக இருப்பது இன்னொன்று சோகமாக இருப்பது .ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறேன்.அதனால்தான் எல்லா நாளும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றாராம். 

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவர்கள் அதனால்தான் அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .அதனால்தான் அவர்களால் இன்னும் அதிகமாக மாறமுடிகிறது.மகிழ்ச்சி மட்டுமே உண்மையான ரசவாதம். பாய்ந்து கொண்டே இருக்கிறது . மகிழ்ச்சி ஆற்றுவெள்ளத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது.உங்கள் சக்தி ஓட்டம் ஓரிடத்தில் உறைந்து போகாமல் பாய்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார் ஓஷோ ! 

அறிவியலைப்பற்றிப் பேசும் ஓஷோ மனிதனின் மூளைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது .சிலருக்கு இந்தப் பிரிக்கப்பட்டுள்ள இடைவெளிக் ஏதாவது ஒரு விபத்தினால் அதிகரித்து விடுகிறது.இதனால் இரண்டு மூளைக்கிடையேயான பாலம் துண்டிக்கப்பட்டு அவனுக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பார்கள் என்று சொல்லும் ஓஷோ அப்படிப்பட்டவர்கள் வலது கையில் சத்தியம் பண்ணியதை மட்டுமல்ல கொலை செய்ததைக் கூட அடுத்த மூளைக்குத் தெரியாது என்கிறார். 

மனதைப் பற்றிப் பேசும் ஓஷோ ஏனோ மிகவும் கோபமாக மனம் என்பது அழுகிய உறுப்பு என்று வர்ணிக்கிறார்.உங்கள் மனம் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால் உங்கள் வளர்ச்சி நின்றுவிடும் .அதற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை .மனம் என்பது ஒரு கூட்டம்.பல காலமாக ஓர் இடத்தில் சேர்த்து வைக்ப்பட்ட குப்பைக் கூளங்கள் .மனம் உங்கள் அடிமை உங்கள் எஜமானன் இல்லை என்று அழுத்தமாகப் பேசுகிறார் . 

இயற்கையுடனான மனிதத் தொடர்பைப் பற்றிப் பேசும் போது, பெண்கள் கருத்தடைச் செய்துகொள்ளுவதானால் இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பேசும் ஓஷோ,ஒவ்வொரு மாதவிடாய்க் காலத்திலும் ஒரு குழந்தையை உருவாக்கும் சக்தியைப் பெண்களுக்கு இயற்கைக் கொடுக்கிறது அந்தப் பெண் கர்பமாகவில்லை என்றால் அது சேகரிக்கப்படுகிறது.ஆக்கப்பூர்வமாக அது வெளிப்படவில்லையென்றால் அது அழிவு சக்தியாக வெளிப்படுகிறது என்கிறார். 


சந்நியாசி ஒருவர் தனது மிதமிஞ்சிய பாலுணர்வு பற்றிக் கேட்டக் கேள்விக்கு அற்புதமான அதே சமயம் எல்லோருக்குமான ஒரு சுவாச வழிமுறை மூலம் எளிய முறைப் பயிற்சி ஒன்று சொல்லிக்கொடுக்கிறார் .அந்தப்பயிற்சி மூலம் மனதில் ஆல்ஃபா அலை அதாவது நொடிக்குப் பத்து அலைகள் உருவாக்கும் நிலையை மனம் அடைகிறது . அது பூமியின் மின்காந்த அலைவரிசைக்குச் சமம். இந்த நிலை ஏற்பட்டால் நீங்களும் பூமியின் அலைச்சுழல் வேகத்திற்குச் சமமாகப் பயணிக்கத் தொடங்கி விடுவீர்கள் .அப்போது பூமியின் மின்காந்தக் களத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவீர்கள் என்கிறார்.இந்தப் பயற்சிக்குப் பின் நிகழும் அனுபவத்தை இப்படி விளக்கும் ஓஷோ இது உடலுறவுக் கொள்ளும்போதும் , தியானத்தின் போதும் , நடனத்தின் போதும் ,சில சமயம் காரணமேயின்றிக் கூட இந்த நிலை வரலாம் என்று சொல்லும் அவர் அந்த நிலை (ஆல்ஃபா மனநிலை) உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நிலை அதாவது வாழ்வையே வரப்பிரசாதமாக்கும் தருணம் என்கிறார். 

முடிக்கும் தருவாயில்... 

இன்னும் அற்புதமான பல வாழ்வியலில் நாம் அறிந்திராத முடிச்சுகளின் மர்மங்களையெல்லாம் இந்தப்புத்தகம் நெடுகிலும் அவிழ்கிறார்.அதில் இறுதியானதாக ஒன்றுடன் நிறைவாக்கலாம் .பக்கம் 322 ல் ஓர் அடிப்படையான விசயத்தப்பற்றிப் பேசும் ஒஷோ,  எந்தக்காலத்திலும் மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறித்து விட்டு ,வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்விலும் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது .எல்லாம் நம் வாழ்வில் இருக்கிறது என்ற அகந்தையின் போக்கு ஒரு மாயத்தோற்றம் .எல்லாமே தன்னால் நடக்கிறது என்ற நினைவானது தவறானது . நடக்கும் நிகழ்வோடு நீங்கள் ஒத்துழைக்கலாம் இல்லை எதிர்த்துப் போராடலாம்.நீங்கள் போரிட்டாலும் நடப்பது நடந்தே தீரும் .அப்படிப் போரிட்டால் நீங்கள்தான் உங்கள் மகிழ்ச்சியை இழப்பீர்கள் அது நடப்பதற்கு நீங்கள் ஒரு காரணமில்லை.ஒத்துழைத்து அது எங்கே அழைத்துச் செல்கிறதோ அங்கே போக வேண்டும் .அப்படிப் போகும்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் தெளிவாகும் .ஆனால் இந்த மனம் வாழ்கையைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறது மனம் தன் சூழ்ச்சித்திறத்தால் நிர்வகிக்கப் பார்க்கிறது .இது அகந்தையின் தேவை.நமக்கு ஒரு அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.வாழ்க்கையின் சிக்கல் இங்குதான் தொடங்குகிறது என்கிறார் ஓஷோ . 


இந்தப் புத்தகம் பற்றி ...

     கவிதாப் பப்ளிகேசனில் - வரலொட்டி - ரெங்கசாமி அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .இந்தப் புத்தகத்தின் அற்புதமான தமிழ் நடைக்குச் சொந்தக்காரர்த் திரு.ரெங்கசாமி அவர்கள்தான் .அவர் சொல்படியே எடுத்துக்கொண்டோமானால் , ”எழுத்து "டீ' மாதிரி. அதை "ஆங்கிலக் கப்', "தமிழ்க் கப்பில்' நிரப்புகிறேன்.” என்று சொன்ன மாதியே லாவகமாகச் செய்து இருக்கிறார்.ஒருவேளை உங்களுக்கு ஆங்கில இலக்கியப்புலமை இருந்து ஓஷோவின் வார்த்தைகளை நேரடியாகக் கேட்டு இருந்தால் கூட இவ்வளவு ஆழமாக உணர்ந்து இருக்கும் சாத்தியம் குறைவு .மேலும் நம் மொழி வழக்கில் உள்ள - ஈரைப் பேணாக்குவதும் பேனைப் பெருமாளாக்குவதுவும் ,ஜல்லியடித்த, சொதப்புதல் ,பிணாத்திகொள்தல் போனவற்றைப் பயன்படுத்தி இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற வாசிப்புணர்வின் தயக்கத்தைத் தகர்க்கிறார்.