வியாழன், 12 ஜனவரி, 2017

ஞானியின் வீட்டுத்திண்ணை - “கல்லும் கனியாகும் - Hammer on the Rock”.



 ஓஷோ தனது சீடர்களுக்காகத் தனது ஆஸ்ரமத்தில் , 31 நாட்கள் செய்தத் தொடர்ச் சொற்பொழிவில் இளம் சாதகர்கள் முதல் மூத்த சந்நியாசிகள் வரையில் உள்ளவர்களுக்கான 300க்கும் அதிகமான எவ்விதமான தயக்கமில்லாத கேள்விகளும் அதற்கான பதில்களின்  நிகழ்வாகத்தான் இந்தப் புத்தகம் மலர்ந்து இருக்கிறது . ஒரு குருவின் தரிசனத்தைப் புரிந்து கொள்ளக் கேள்விகளுக்கு அவர்தரும் பதிலில் அவரின் பக்குவத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறவர்களுக்கு இந்தப்புத்தகம் பொக்கிசம் . வேறு எந்த ஓஷோவின் உரைத்தொகுப்பின் வாசிப்பிலும் கிடைக்காத அவருடனான நெருக்கத்தை , அன்மையை ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம். ஓஷோவின் இயல்பான வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் ஒரு ஞானி விட்டுச்சென்ற போதனைப் பதிவுகள் ஏற்படுத்தும் வலிமையை விட அவர் பேச்சை நேரடியாகக் கேட்டுணரும்போது அந்தக் கதகதப்பான வார்த்தைகளில் பன்மடங்கு வலிமைப் புதைந்து இருக்கிறது என்பார்.அதைத்தான் இந்த வாசிப்பு எனக்குள் நிகழ்த்தியது .அதுதான் ஞானியின் வீட்டுத்திண்ணை என்ற பெயர் இந்த நூலுக்கு வைக்கத்தூண்டியது ! 


ஓஷோவின் பதில்களில், பன்முகத்தன்மை !

தத்துவத்தைப்பற்றிப் பேசும் போது, 100 வயதானக் கிரேக்க அறிஞர் டயோஜனீசிடம் உங்களால் எப்படி எந்த நேரமும் சந்தோசமாக இருக்க முடிகிறது என்ற ரகசியத்திற்குப் பதிலளிக்கும்போது ,ஒவ்வொரு நாள் காலையிலும் நான் கண் விழிக்கும் போதும் என் முன்னால் இரண்டு கேள்விகள் இருப்பதை நான் அறிகிறேன்.ஒன்று மகிழ்சியாக இருப்பது இன்னொன்று சோகமாக இருப்பது .ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறேன்.அதனால்தான் எல்லா நாளும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றாராம். 

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவர்கள் அதனால்தான் அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .அதனால்தான் அவர்களால் இன்னும் அதிகமாக மாறமுடிகிறது.மகிழ்ச்சி மட்டுமே உண்மையான ரசவாதம். பாய்ந்து கொண்டே இருக்கிறது . மகிழ்ச்சி ஆற்றுவெள்ளத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது.உங்கள் சக்தி ஓட்டம் ஓரிடத்தில் உறைந்து போகாமல் பாய்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார் ஓஷோ ! 

அறிவியலைப்பற்றிப் பேசும் ஓஷோ மனிதனின் மூளைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது .சிலருக்கு இந்தப் பிரிக்கப்பட்டுள்ள இடைவெளிக் ஏதாவது ஒரு விபத்தினால் அதிகரித்து விடுகிறது.இதனால் இரண்டு மூளைக்கிடையேயான பாலம் துண்டிக்கப்பட்டு அவனுக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பார்கள் என்று சொல்லும் ஓஷோ அப்படிப்பட்டவர்கள் வலது கையில் சத்தியம் பண்ணியதை மட்டுமல்ல கொலை செய்ததைக் கூட அடுத்த மூளைக்குத் தெரியாது என்கிறார். 

மனதைப் பற்றிப் பேசும் ஓஷோ ஏனோ மிகவும் கோபமாக மனம் என்பது அழுகிய உறுப்பு என்று வர்ணிக்கிறார்.உங்கள் மனம் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால் உங்கள் வளர்ச்சி நின்றுவிடும் .அதற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை .மனம் என்பது ஒரு கூட்டம்.பல காலமாக ஓர் இடத்தில் சேர்த்து வைக்ப்பட்ட குப்பைக் கூளங்கள் .மனம் உங்கள் அடிமை உங்கள் எஜமானன் இல்லை என்று அழுத்தமாகப் பேசுகிறார் . 

இயற்கையுடனான மனிதத் தொடர்பைப் பற்றிப் பேசும் போது, பெண்கள் கருத்தடைச் செய்துகொள்ளுவதானால் இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பேசும் ஓஷோ,ஒவ்வொரு மாதவிடாய்க் காலத்திலும் ஒரு குழந்தையை உருவாக்கும் சக்தியைப் பெண்களுக்கு இயற்கைக் கொடுக்கிறது அந்தப் பெண் கர்பமாகவில்லை என்றால் அது சேகரிக்கப்படுகிறது.ஆக்கப்பூர்வமாக அது வெளிப்படவில்லையென்றால் அது அழிவு சக்தியாக வெளிப்படுகிறது என்கிறார். 


சந்நியாசி ஒருவர் தனது மிதமிஞ்சிய பாலுணர்வு பற்றிக் கேட்டக் கேள்விக்கு அற்புதமான அதே சமயம் எல்லோருக்குமான ஒரு சுவாச வழிமுறை மூலம் எளிய முறைப் பயிற்சி ஒன்று சொல்லிக்கொடுக்கிறார் .அந்தப்பயிற்சி மூலம் மனதில் ஆல்ஃபா அலை அதாவது நொடிக்குப் பத்து அலைகள் உருவாக்கும் நிலையை மனம் அடைகிறது . அது பூமியின் மின்காந்த அலைவரிசைக்குச் சமம். இந்த நிலை ஏற்பட்டால் நீங்களும் பூமியின் அலைச்சுழல் வேகத்திற்குச் சமமாகப் பயணிக்கத் தொடங்கி விடுவீர்கள் .அப்போது பூமியின் மின்காந்தக் களத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுவீர்கள் என்கிறார்.இந்தப் பயற்சிக்குப் பின் நிகழும் அனுபவத்தை இப்படி விளக்கும் ஓஷோ இது உடலுறவுக் கொள்ளும்போதும் , தியானத்தின் போதும் , நடனத்தின் போதும் ,சில சமயம் காரணமேயின்றிக் கூட இந்த நிலை வரலாம் என்று சொல்லும் அவர் அந்த நிலை (ஆல்ஃபா மனநிலை) உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நிலை அதாவது வாழ்வையே வரப்பிரசாதமாக்கும் தருணம் என்கிறார். 

முடிக்கும் தருவாயில்... 

இன்னும் அற்புதமான பல வாழ்வியலில் நாம் அறிந்திராத முடிச்சுகளின் மர்மங்களையெல்லாம் இந்தப்புத்தகம் நெடுகிலும் அவிழ்கிறார்.அதில் இறுதியானதாக ஒன்றுடன் நிறைவாக்கலாம் .பக்கம் 322 ல் ஓர் அடிப்படையான விசயத்தப்பற்றிப் பேசும் ஒஷோ,  எந்தக்காலத்திலும் மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறித்து விட்டு ,வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்விலும் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது .எல்லாம் நம் வாழ்வில் இருக்கிறது என்ற அகந்தையின் போக்கு ஒரு மாயத்தோற்றம் .எல்லாமே தன்னால் நடக்கிறது என்ற நினைவானது தவறானது . நடக்கும் நிகழ்வோடு நீங்கள் ஒத்துழைக்கலாம் இல்லை எதிர்த்துப் போராடலாம்.நீங்கள் போரிட்டாலும் நடப்பது நடந்தே தீரும் .அப்படிப் போரிட்டால் நீங்கள்தான் உங்கள் மகிழ்ச்சியை இழப்பீர்கள் அது நடப்பதற்கு நீங்கள் ஒரு காரணமில்லை.ஒத்துழைத்து அது எங்கே அழைத்துச் செல்கிறதோ அங்கே போக வேண்டும் .அப்படிப் போகும்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் தெளிவாகும் .ஆனால் இந்த மனம் வாழ்கையைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறது மனம் தன் சூழ்ச்சித்திறத்தால் நிர்வகிக்கப் பார்க்கிறது .இது அகந்தையின் தேவை.நமக்கு ஒரு அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.வாழ்க்கையின் சிக்கல் இங்குதான் தொடங்குகிறது என்கிறார் ஓஷோ . 


இந்தப் புத்தகம் பற்றி ...

     கவிதாப் பப்ளிகேசனில் - வரலொட்டி - ரெங்கசாமி அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .இந்தப் புத்தகத்தின் அற்புதமான தமிழ் நடைக்குச் சொந்தக்காரர்த் திரு.ரெங்கசாமி அவர்கள்தான் .அவர் சொல்படியே எடுத்துக்கொண்டோமானால் , ”எழுத்து "டீ' மாதிரி. அதை "ஆங்கிலக் கப்', "தமிழ்க் கப்பில்' நிரப்புகிறேன்.” என்று சொன்ன மாதியே லாவகமாகச் செய்து இருக்கிறார்.ஒருவேளை உங்களுக்கு ஆங்கில இலக்கியப்புலமை இருந்து ஓஷோவின் வார்த்தைகளை நேரடியாகக் கேட்டு இருந்தால் கூட இவ்வளவு ஆழமாக உணர்ந்து இருக்கும் சாத்தியம் குறைவு .மேலும் நம் மொழி வழக்கில் உள்ள - ஈரைப் பேணாக்குவதும் பேனைப் பெருமாளாக்குவதுவும் ,ஜல்லியடித்த, சொதப்புதல் ,பிணாத்திகொள்தல் போனவற்றைப் பயன்படுத்தி இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற வாசிப்புணர்வின் தயக்கத்தைத் தகர்க்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக