சனி, 30 ஜூலை, 2016

ஆன்மாவுக்கு மனது இருக்கிறதா ? ( ”பேய்” நல்லது தெரியுமா? துரத்தல் -5 )குழந்தையின் ஆன்மா .

                        போன பதிவில் ,ஒரு குழந்தையின் உடலிருந்து வெளியேறிய ஆன்மா இன்னொரு உடலில் புக காத்து இருக்க வேண்டியதில்லை .அது தாய் அல்லது தந்தை உடலுடன் சேர்ந்துக் கலந்து விடும் என்பதையறிந்தோம் .அப்படியானால் அந்தப் பதிவுகள் அப்படியே மீண்டும் தாய் தந்தைக்கே சொந்தமா ? ஆமாம் .ஆனால் அவனை வளர்த்தக் காலத்தின் அளவுக்குப் பெற்றோரின் வினைப்பதிவுகள் கழிந்து விடும்.அந்த ஆன்மா இவர்களுடன் கலந்து விடுவதால் உடனே அமைதியும் பெறும் .அந்த ஆன்மாவுக்குத் தனிப்பதிவு எதுவும் இல்லை - வேறு ஒரு உடலில் விரிந்த உயிர் மரணத்தால் சுருங்கி விட்டது அவ்வளவுதான் .மீண்டும் குழந்தை நம்மோடு கலந்து விட்டது எங்கும் போகவில்லை. .அந்தக்குழந்தைப் படத்தை வைத்துக் கும்பிடுவது ,நினைவு நாளைக் ஞாபகப்படுத்திக்கொள்வது அவரவர் அன்பின் பிணைப்பே தவிர அதனால் எதுவும் நன்மையில்லை .கண்ணாடி முன் நாமே நின்று கும்பிட்டுக்கொள்வது போலத்தான் அது !


2.இயற்கை மரணம் . 

                              பிறப்பு என்பது ஒவ்வொருவரும்  தான் பெற்ற நன்மைத் தீமைகளைத் தன் வாழ்நாளில் கழிக்க முடியாத போது அதைத் தன்னுடைய சந்ததிகள் மூலம் கழிக்க இயற்கை செய்த வழிதான் ஜனனம் என்ற வரம் .இந்திய ஆண்களின் சராசரி வாழும் ஆண்டு அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலை ,உணவு ,உழைப்பு ,உடல் பராமரிப்பு ,மன ஆரோக்கியம் இவைகளைச் சார்ந்ததாக இருந்தாலும் பொதுவாக 59.5 வருடமும் பெண்களுக்கு 69.9 வருடமும் என்பதாக World Health Organization (2015) ஆய்வு சொல்கிறது .ஆனால் நமது வீட்டு ஜாதகப்பட்டியலில் ஆயுட் காலம் 120 வயதுவரை பலன் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது ஒரு ஆறுதலான விசயம். நாம் ஆண்- பெண் இருவருக்கும் சராசரியாக 65 வயதாக எடுத்துக்கொள்வோம் .இந்த வயதில் மரணமுற நேர்ந்தால் அந்த ஆன்மா எப்படித் தனது பதிவைக் கழித்துக்கொள்ளத் ஆன்மாவாகத் தொடர்கிறது என்று பார்ப்போம் ? அதற்கு முன் இயற்கை மரணம் எப்படி நிகழ்கிறது ?


பிடிக்காதச் சொந்தக்காரன் - முதுமை !

                   நம் உடல் செயல்படப் பர்கர்,பீஸாத் தின்பவர்கள் முதல் பழைய கஞ்சி ,தோசை எந்த உணவு சாப்பிட்டாலும் அவற்றிலிருது ஏழு தாது ( ரசம்,ரத்தம்,தசை,கொழுப்பு,எழும்பு,மஜ்ஜை,வித்து-நாதம்) க்களாகப் பிரித்தும் ,
பிராண வாயுவிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் வீதம் ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர்கள் காற்றை நாம் சுவாசிப்பதன் மூலமும் ,

      வானிலிருந்து உலவும் கோள்களின் அலைக் கதிர்கள் வீசும். சூரியன் ஆரஞ்சு நிறமான காந்த அலைக்கதிர் உடலிலுள்ள எலும்போடும்,புதனுடைய பசுமை நிறமான காந்த அலை நம் உடலோடும் உயிரோடும், சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலை நமது உடலில் உள்ள சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நமது உடலில் உள்ள சுக்கிலத்தோடும்,சந்திரன் வெண்மை நிறமான காந்த அலை உடலிலுள்ள ரத்தத்தோடும்,செவ்வாய் செந்நிறமான காந்த அலை உடலிலுள்ள மஜ்ஜையோடும், குரு பொன்னிறமான காந்த அலை நம் மூளைசெல்களோடும்,சனி சாம்பல் நிறமான காந்த அலை உடலில் உள்ள நரம்புகளோடும், ராகு- கேது கருமை நிறமான காந்த அலைக் கதிர்கள் உடலில் உள்ள ஓஜஸ் என்ற சுத்த சக்தியோடு ம் தொடர்பு கொள்கிறது.

        பூமியின் மத்தியிலிருந்து கனமான அணுக்களின் வெடிப்பின் மூலம் வெளிப்படும் அலைகளிருந்தும் தொடர்ந்து நாம் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம்.

          தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவானச் சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி , சருமத்திற்கு ஒவ்வொரு செல்களும் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் நம் உடலுக்கு உள்ளே செல்லும் தண்ணீர் மட்டும்தான் எவ்வித மாறுதலும் இல்லாமல் வெளியே வருகிறது .


ஜீன்களே மெஞ்ஞானக் கருமையம் .

              நம் உடல் செல்கள் மேற்படி உணவு ,காற்று ,நீர்,கோள்கள் பூமியின் அணு வெடிப்பிலிருந்தும் உடலின் ஒவ்வொரு செல்லும் உடல்,மனச் செயலுக்கான ஆற்றல் துகள்களைச் சேகரித்து நம் உடலுக்குப் பயன்படுத்துகிறது . தாயின் கருவில் முதலில் உருவாகும் ஒற்றைச்செல் அந்தக் கணத்திலிருந்து ஒரு மனிதனின் 30 வயதுக்குள் சுமார் 50 முறைச் செல் பிரிதல் மைட்டாசிஸ் நடைப் பெற்று 100 டிரில்லியன் செல்களாகப் பெருக்கமடைகிறது . இவற்றில் சில செல்கள் விதிவிலக்கு . செல்லின் செயலை ஏன் இவ்வளவு நீளமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது ? ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் .ஆனால் இந்த உடல் இத்தனை வருடம் இருக்கலாம் என்ற ரிட்டன் டிக்கேட்டைச் செல்லின் உட்கருவில் உள்ள hTERT டிலோமெரேஸ் ஜீன் முடிவு செய்வதாகவும் அதற்கு onco மற்றொரு ஜீன் ஒவ்வொரு செல்லும் எத்தனை செல் பிரிதல் செய்து கொள்ளலாம் என்பதையும் தீர்மானிப்பதாக அறிகிறோம் .

      இங்கு ஒரு ரகசியம் உறங்குகிறது .இன விருத்தி செல்களில் மட்டும் டிலோமெரேஸ் செல்களால் உற்பத்தித் தடை பெறாமல் வாழ்கிறது .இது எதற்காக ? மனிதன் தனது பதிவுகளைக் கடத்த ஒரே சாதனமாக இனப்பெறுக்கம் மட்டுமே முழுசாத்தியம். நவீன விஞ்ஞான வார்த்தையில் சொன்னால் ஜீன்களே மெஞ்ஞானக் கருமையம்.இன்னும் சொல்லப்போனால் எப்போது நாம் சந்ததி உற்பத்தி போதும் என்று நினைக்கிறோமோ அன்றே மனித உடலை ஒரு பழைய ஆடையைப்போலக் கழற்றிப்போட செல்லின் கருவில் உள்ள ஜீன்கள் முடிவெடுத்து விடுகின்றன . முதுமை என்ற நமக்குப் பிடிக்காத சொந்தக்காரன் நம் வீட்டுக்கதவைத் திறக்கச் சொல்லித் தட்டத்தொடங்கி விடுகிறான் …

வித்து நாதத்திரவமே உயிர் காப்பீட்டு கழகம் !

   நம் உணவின் ஏழாவது தாதுவான வித்து நாதத்திரவத்தின் அளவைப்பொறுத்துதான்  உயிராற்றல் திணிவு Life force இருக்கிறது .முதல் 40 வயது வரை இருந்த ஆரோக்கியம் மெல்ல நரை,திரை, மூப்பு,நோய் என்ற எதிர் திசைப் பயணத்தைத் தொடங்குகிறது .மெல்ல 60-80 வயதில் வித்து நாத திரவ உற்பத்திக் குறைந்து போகப் போகத்தான் செரிமானம் இல்லாது போவது,உடல் உறுப்புகள் செயலிழப்பது ,உடலுக்கே ஆற்றல் போதாத போது மனதின் மீதும் பலவீனம் என்ற அரக்கன் மெல்ல  ஆதிக்கம் செலுத்துவது தொடங்குகிறது..

             உடலை நடத்த உயிராற்றலுக்கு அடிப்படையான உயிர்த்துகள் முழுவதுமாக உற்பத்தி நிறுத்தம் ஏற்பட்டால் மீதியிருக்கும் உயிர்துகள் பாலுணர்வுச் சுரப்பியில் தேக்கமுறும் சுழன்றோடும் உயிர்துகள் தேக்கத்தாலும் ,மின்குறுக்காலும் பாலுணர்வுச் சுரப்பி வெப்பமுற்று,அதன் நரம்புகள் பாதித்துச் செயலிழந்து ,கட்டுப்பாடை இழந்த வித்துக்களையம் Sexual Gland  உடைந்து உயிராற்றல் விட்டு வெளியேறுகிறது . மரணம் நிகழ்கிறது .மரணமுற்ற உடலைக் குளிப்பாட்டும் பழக்கம் வித்து நாத வெளியேற்றத்தைச் சோதிக்கவே நடத்தப்படுகிறது .ஒருவேளை துளி அளவு கூட வித்து வெளியேற்றம் நடக்கவில்லை என்றால் அந்த மரணத்தில் மர்மம் இருக்கலாம்!


ஆன்மாவுக்கு மனது இருக்கிறதா ? 

      உடலில் இருந்த ஆன்மா மனதோடு இருக்கிறது .தன்னை யாரெல்லாம் வந்து பார்க்கிறார்கள் , அழுகிறார்கள்,தனது கடைசிக் கடமை என்ன ,தனது, மகன், மகள், மனைவி உற்றார் ,உறவினர்கள் ,சொத்து, கடன்,வரவு Tally.ERP 9 Release 5 series அளவுக்கு எல்லாம் யோசிக்கும் அறிவின் படர்கையாற்றலான மனம் முற்றிலுமாகத் தனது செயலை இழக்கிறது .அது எப்படி என்றால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தின் வாயிலாகத்தான் மூளைக்கு உணர்வுகள் அடையாளப்படுத்தப்படுகிறது.

    உடல் உள் உறுப்புகளின் செயலை ஜீரணிப்பது தொடங்கிப் பதினோறு மண்டலங்களின் செயல்பாட்டை அதாவது நமக்குத் தெரியாமல் இயக்கும் ’மைய நரம்புத் தொகுதி’ Autonomous nervous system யின் வேலை.அதே சமயம் நம் விருப்பப்படியெல்லாம் பிடித்தவர்களைப் பார்த்துக் கையாட்டுவது ,திருப்பிக் கடிக்காத தெரு நாயை எட்டி உதைப்பது , பெண்கள் வாகனம் ரோட்டில் போனால் சட்டெனெ உரசுவது போலக் கிட்டப் போய் ’கட்’ அடிக்கும் குரூரச் செயல் எல்லாம் இந்த ’மனவிரும்பி நரம்பு மண்டலம்’ Voluntary nervous system or Central nervous system வேலை இப்படி இரண்டு நரம்பு மண்டலத்தின் மூலம் செயல் செய்து கொள்கிறோம் .அழ்ந்தத் தூக்கம் ,கோமா நிலையில் இது வேலை செய்யாது .நம் பிறக்குப் போது Autonomous nervous system முதலில் வேலை செய்யத்தொடங்குகிறது அதற்குப் பிறகே Voluntary nervous system வேலை செய்கிறது ஆனால் இறக்கும் போது முதலில் மனவிரும்பி நரம்பு மண்டலம் Voluntary nervous system இயக்கத்தை நிறுத்திக்கொண்ட பின்னேதான் மைய நரம்புத் தொகுதித் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது .எதற்கு இவ்வளவு நீளமாக நாட்டாமைப் பொன்னம்பலதிற்குப் பிடிக்காதது போலச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் எந்த ஆன்மாவும் தனது பதிவுகளை கழிக்க  உடல் தேடுகிறதே தவிரப் பழிவாங்கும் காஞ்சனா குணமோ, கட்டிப்பிடித்தால் அடித்துப்பிரட்டும் டார்லிங் மனமோ ,மிஸ்கின் பிசாசு போலப் கூலிங் இல்லாத பீர் பாட்டிலை உடைக்கும் தன்மையோ இருக்கவே இருக்காது .இது அதீதச் சினிமாக் கற்பனை .

          ஆனால் அது எதாவது உடலில் தஞ்சமடைந்து விட்டால் தன்னிடமிருந்த குணம்,மனம்,தன்மை எல்லாம் தஞ்சம் அடைந்த உடலைப்பொறுத்து வெளிப்படுத்தும் ! உடல் விட்ட ஆன்மா அன்னிய உடலில் தஞ்சம் அடைந்த பின் அதன் செயலைப் பற்றி வேறு இடத்தில் பார்ப்போம்.


இயற்கை மரண ஆன்மா,யாரிடம் சேர்கிறது ?

      இங்கு ஒரு மிக முக்கியாமான விசயம் .உடலிருந்து வெளியேறிய ஆன்மா இன்னொரு உடலின் கருமையத்திற்குள் தானே நுழைவது இல்லை. காரணம் அதற்கு மனம் என்ற தன்விருப்பம் இயக்கம் கிடையாது .வேறு உடலில் அதை விரும்பி ஏற்கும் ஒத்தப் பதிவுகள் அடங்கிய ரத்த சம்பந்தமாக இருக்க வேண்டும் அல்லது வேறு ஒரு உடல் உயிர்சக்தித் திணிவுக் குறைவாக இருக்க வேண்டும். ஒரு உடலில் உயிர் சக்தியின் அளவு எப்போதெல்லாம் 49 சதவிகிதத்திற்குக் கீழே குறைகிறதோ அப்போது வெளியேயுள்ள அன்னிய ஆன்மாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது போல ஆகிவிடும் .இது எப்போதெல்லாம் நம் ஒவ்வொரு உடலிலும் நிகழ்கிறது ? 1.அதிக உடல் உழைப்பால் உயிர் சக்தி வெளியேறிச் சோர்ந்து போகும் போது .2.இரவு நேரங்களில் மிகுந்த வாசனையுள்ள பூவை அல்லது வாசனைத் திரவியம் பயன்படுத்துவதால் நம் உயிர்சக்தி அந்த நுகர்வுணர்வில் வெளியேறி விடும், 3.இரவில் அகால நேரத்தில் கண்ணாடி முன் நம் உருவத்தை வெகு நேரம் பார்க்கும் போது,4.அதிகப் பாலுணர்வில் திளைத்து உயிர்சக்தி செலாவானப் பின் 5.அகால நேரமான இரவு பண்ணிரெண்டுக்கு மேல் சுவாதிஷ்டானத்தில் போதியக் காப்பு இல்லாமல் நினைவைச் செலுத்துவது 6. திடீர்ப் பயத்தால் .
       இயற்கையாக மரணம் நிகழ்ந்ததால் வெளியேறிய ஆன்மா உயிர்சக்தித் திணிவு குறைவாக இருப்பதால் அது மேற்படி வாய்ப்பை விடத் தனது ரத்த சம்பந்தமான மகன் ,மகள்,சகோதரன்,சகோதரி,பேரன் பேத்தி இவர்களின் உடம்பில் அவர்களும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்து முன் வந்தால் மட்டுமே அவர்கள் உடல் சேர்ந்து கொள்வது இயல்பு.தன்னுடைய ரத்த சம்பந்தமுள்ள நபர்களுடனான வினைப்பதிவுகள் ஒத்துப்போவதே இதற்கு முதல் காரணம் .அதிலும் இந்த உயிர் அமைதிப் பெறவும் இதன் வினைபதிவுகள் என்னோடு த்டரவும் நான் அடைக்கலம் தருகிறேன் ,என்னோடு சேரட்டும் என்ற எண்ணத்தோடு ஆங்குச் சடங்குச் சாங்கியம் செய்தால் மட்டுமே அவர்களோடு சேர்ந்து கொள்ளும் .இவ்வாறு ஏற்றுக்கொண்டவர்கள் மனதிலும் உடலிலும் அந்த ஆன்மா தன்னை முறைப்படுத்திக் கொள்ளவும் சரிப்படுத்திக்கொள்ளவும் எடுத்துக்கொள்ளும் கால அளவுதான் 16 நாட்கள் .ஏற்றுக்கொண்டவருக்கு உணவு முறை ஓய்வு ஆகியன சடங்கு வழிமுறைகாளாக ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள் .

சொந்தமில்லாத ஆன்மாவின் நிலை ?


        ஒருவேளை எனக்கு இவர் எதுவும் செய்யவில்லை.சொத்து எழுதவில்லை சின்ன வீட்டுக்கு எழுதி விட்டார் என்று இவரை விரும்பாத இவரின் இனிசியல் மட்டும் போதும் என்று நினைக்கும் ப்ரகஸ்பதிகளாலும் , விநாயகமுருகனின் - ராஜிவ்காந்தி சாலைக் கேரக்டர் போல , ரத்த சம்பந்தமுள்ளவர்கள் வெகு அருகில் இல்லாத போது அந்த ஆன்மாவைக் கூட்டு வழிபாட்டுச் சடங்கின் மூலம் ஏற்க விருப்பமுள்ள நண்பர்கள்,ஒத்தத் தன்மை உள்ளவர்கள் அந்த ஆன்மாவின் வினைப்பதிவைப் பங்கீடு செய்து கொள்ளும் வகையில் இணத்துக்கொள்ளலாம்.ஆனால் இது அந்த உடல் எரிப்பதற்கோ ,புதைப்பதற்கோ முன்னர் மட்டுமே செய்தால் சாத்தியம் ..

  வேதாத்ரிய ஆன்ம சாந்தி தவமுறை இதைத்தான் செய்கிறது .ஆனால் அதற்கு அவர்கள் இறந்தவருக்கு நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியம் கூட வேண்டியதில்லை.நன்கு துரியாதீதத் தவமியற்றும் ஆறு அருள்நிதிகள் போதும் .

        உறவு ,நட்பு ,ஒத்ததன்மையுள்ளோர் எவரும் இல்லாத இயற்கை மரணத்தினால் அனாதை ஆன்மா ! அதன் திணிவு நிலை மற்றும் தன்மைக்கேற்ப அது வளிமண்டல அலைகளாலும் ,காற்றினாலும் அதிகச் சத்தத்தினாலும் ,வெளிச்சத்தினாலும் அது விலக்கப்படும் .அது தள்ளப்படும் வேகம் ஒளியின் வேகத்தில் இருக்கும்.அது லேசாக இருப்பதால் காற்று மண்டலத்தின் உயர்ந்த இருண்டப் பகுதிக்குக் கொண்டு சேர்க்கப்படும் .இது சுமார் 150 வருடம் அங்கேயே தேங்கி நின்று சிறுகச் சிறுகப் பிரிந்துக் கரைந்து காலத்தினால் அதன் திணிவு நிலைக் குறைந்து கொண்டே வரச்செய்து முற்றிலும் இல்லாமல் போகுமாறு இயற்கையே அதைப் பராமரிக்கிறது ….யாருமில்லாதவர்கள் யாருமில்லை. இயற்கைதான் நாம் இறந்த பிறகும் நம்மைப் பராமரிக்கும் மிகப்பெரிய சொந்தம் !

திடீர் மரணம்.


        இதுவரை குழந்தை மரணம் .இயற்கையாக வயது மற்றும் நோயால் இறந்த உடலிருந்து வெளியேறிய ஆன்மாவின் நிலைகளைப்பற்றிக் கவனித்தோம் .இனி வாழ வேண்டிய வயதில் விபத்தால் , ஏதோ ஒரு அவசரப்புத்தியில் தற்கொலை செய்துகொண்ட, அல்லது ஏதோ ஒரு காரணத்தால் கொலை செய்யப்பட்டுத் திடீரெனெ உடலிருந்து துண்டிக்கப்பட்ட ஆன்மா மரணத்தினால் அதிர்ச்சியடைந்து அந்த அதிர்ச்சியினால் படபடப்பு நிலையில் இருக்கும் .அந்தத் திடீரெனெ உடலிருந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. உயிரின் திணிவும் ஆதிகமிருப்பதால் இயற்கையான் ஈர்ப்பு சக்தியால் இன்னொரு உடலை அது அடைந்து விடத் தன் உயிர் விட்ட இடத்தில் காத்து இருக்கும் .

இப்படி அதிர்ச்சியினால் படபடப்பு நிலையில் இணையும் ஆன்மாதான் ,வேறு உடலோடு தங்கும் போது,அந்த உடம்பில் வாழும் கருமையத்தை, அதன் வினைப்பதிவுகளைக் கீழே தள்ளி டம்மியாக்கிவிட்டுத் தன்னுடைய ஆக்கிரமிப்பால் டார்லிங் படத்து அழகிய கல்ராணியைக் கூட அகோரக் ’கொல்ராணி’ - பிசாசு நடத்தைக்கு மாற்றி விடும் .

அடுத்தத் துரத்தலில் அதைப்பற்றி விரிவாகப் பயப்படுவோம்….
வியாழன், 28 ஜூலை, 2016

உடலை விட்டுப் பிரியும் ஆன்மா... ( ”பேய்” நல்லது தெரியுமா? துரத்தல் -4 )


                       றந்த உடலிருந்து வெளியேறுவது  ஓருயிரிலிருந்து தொடங்கி ஆறறிவு மனிதன் வரையும் அதிலும் நம் அப்பா – அம்மா தொடங்கி, முதல் மனிதன் வரை என்ன என்ன செய்தார்களோ அவர்களின் எல்லாப் பதிவுகளும் Blue Print போல இந்த ஆன்மா என்ற ஜீவகாந்த களத்தில் - ஒரு மாபெரும்  கூகுள் சர்வரின் ’ஹார்ட்டிஸ்க்’ நினைவு களஞ்சியம்போல பதிந்து இருக்கிறது.  அது மாதிரி பல லட்சம் பதிவுகளை கொள்ளடக்கியதுதான் மனித உடலின் ஜீவகாந்த மையமான ஆன்மா.

       இவ்வளவு பதிவுகள் இருக்கும் ஒரேடியா கதை விடுவது போல தோணுகிறதா ? இத்தனை பதிவுகளும் நம்மிடம்  இருப்பதற்கு இரு ஆதாரம் 1.நம் மூளை.   மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடும் பயன் படுத்தப்படாத 90 சதவிகிதமும் 2. மனித மரபியல் தகவல் பதிவாக ஜினோமில் சும்மா இருக்கும் DNA ஏணிகளும் சாட்சி !

ருமையம்.

காற்று, வெட்ட வெளியில் திடீரென்று ஒரு இடத்தில் மிகுந்த வெப்பம் குறைவதால், அந்த இடத்தில் உள்ள காற்று குளிர்ந்து சுற்றுவதால் தரையில் இருக்கும் இலை, தழைகள் காற்றில் கலந்து சுற்றும். இதைச் 'சுழிக்காற்று' என்று கூறுவோம்.அது போல நம் மூன்று உடல்களுக்கும் தனித்தனியே மையங்கள் இருக்கிறது.

நமது உடலில் உயரத்தில் ஒரு கோடும் அகலத்தில் ஒரு கோடும் போட்டால் ஒரு மையப்புள்ளி கிடைக்குமே அதுதான் அது . இதற்கு ஸ்கேல் எடுத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை உங்கள் தொப்புளுக்கு கீழ் நான்கு விரல்கள் வைத்தால் போதும் அந்த இடம்தான். விஞ்ஞானம் உடலுக்கு தலைமை செயலகமாக மூளையைச் சொல்லும் ஆனால் இந்த மூன்று உடலுக்கும் மையமாக செயல்படும்  கருமையமே ’நிரந்தரத்திற்கு’- இறந்த பிறகும் கூட  தலமையகமாகச் செயல்படுகிறது.உயிரினத்தின் ஒவ்வொரு செயலும் அனுபவமும் மூன்றாவதான இந்த Bio Magnetic Body யில் காந்த அலையாக சுருக்கப்பட்டு சீவகாந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது இதுதான் காரண உடலான Bio Magnetic Body .இதன் இன்னொரு சிறப்பு பெயர் ”ஆன்மா


  ன்மா என்பது பெற்றோர்கள் இருவரின் விந்து-Sperm  நாதம் - Overy  இணைப்பில் உருவான அலைத்தொகுப்புகள் ஆன்மாவாகிறது . கருமையத்தின் மறுபெயரே ஆன்மா என்கிறது வேதாத்ரியம் .சரி உடலை விட்ட எல்லா ஆன்மாவும் ஏன் கரைந்து போகாமல் விடாப்பிடியாக சோதிக்க வேண்டும் ? ஆன்மாவில் காந்த அலைத்திணிவு நிகழ்ச்சியான கருமையத்தில் ஏராளமான பதிவுகள் என்ற களங்கம் இருப்பதால் அது கரைந்து போவதில்லை.  

1. Physical Body           -  பால் உணர்வு சக்தி திணிவு மையம்
2. Astral Body               - உயிர் துகளின் திணிவு மையம்
3. Bio Magnetic Body   -ஜீவகாந்த ஆற்றலின் திணிவு மையம்.


  மேலே நாம் பேசிய மூன்று உடல்களும் அதன் மையங்களும்  தனித்தனியே செயல்பட்டால் இயற்கையின் பேராற்றல் நமக்கு புரியாமல் போயிருக்கும் ஆனால் இந்த மூன்றையுமே இணைத்து அதற்கு தலைமை செயலகமாகவும் வழிநடத்துவதாகவும்  தெய்வீக திருநிலையமாக இருப்பது “  கருமையம்” . இந்த மூன்று உடல்களின் மையத்தை நிர்வகிப்பதால்  இந்த ஒன்றை புரிந்து கொள்ள முயன்றால் போதும் உடல்-உயிர்-மனம் என்ற  வேதாத்ரிய - காந்தம்  தத்துவம் எளிதில் உங்கள் மனதில் வந்து உட்கார்ந்து விடும்.

இப்போதைக்கு சுருக்கமாக மனிதனுக்கு 1.மேல் மனப்பதிவு 2. ஆழ் மனப்பதிவு என இரண்டு பதிவுகள் இருக்கிறது .உணர்ச்சி பூர்வமாக பதியப்படும் பதிவுகள் மேல் மனப்பதிவுகள் .கபாலிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை .வெறுத்துப் போய் வீடு திரும்பி விட்டோம் இது உணர்ச்சி பூர்வப்பதிவு .இது அந்தப் படத்தை பார்த்து விட்டால் அழிந்து போய்விடும் . ஆனால் உணர்வு பூர்வமாக ஒரு முடிவு எடுத்து , அடுத்த முறை இயந்திரன் 2 க்கு ஆன்லைனில் ரிசர்வ் செய்துவிட வேண்டும் என்ற அறிவுபூர்வமான முன் முடிவுடன் தீர்மானித்தால் அது நிரந்தரப்பதிவு - ஆழ்மனப்பதிவு . இந்த இரண்டாவது பதிவு  வாழ்நாளெல்லாம் நம் எல்.ஐ.சி விளம்பரம் போல - வாழும்போதும் வாழ்க்கைக்குப் பின்னும் அழியாத பதிவாக கூடவே வருகிறது.  இதற்கு மேல் இதில் நுட்பமாக போக வேண்டாம் . இந்த மேல்,ஆழ் மனப்பதிவுகள் - கருமையம் என்ற சிடியில் (Nero Burning Softwear உதவியுடன்)  பதிவது போல  ஜீவகாந்தக்களத்தில் நம்முடைய பாரம்பரியப் பதிவு , நாம் பிறந்த பிறகு பெற்ற  தொடு உணர்வு,சுவையுணர்வு,சுவாச உணர்வு,பார்வை உணர்வு ,கேட்ட ஐந்து புலன் உணர்வுகளை -  உணர்வு பூர்வமாக பதிந்துகொள்கிறது  .

இங்கு ஏன் உணர்வு பூர்வமாக என்ற வார்த்தை சொல்ல வேண்டியிருக்கிறது ! இறப்பிற்குப் பின் செல்களான பருஉடல் மண்ணோடு நின்றுவிடுகிறது .உயிர்மையமும் காந்த மையமுமே உடலை விட்டு வெளியேறுகிறது  . ஆன்மா என்ற ஜீவகாந்த உடல் இருக்கும் வரை நரம்புகள் மூலம் மூளைக்கு மனம் என்ற கருவியால் நம் அனுபவ பதிவு உணர்வுகளை - உணர்ச்சிகளாக  மாற்றித்தருகிறது.அதுதான் இன்பம் துன்பம் என்ற உணர்ச்சி .  உடலை விட்டுப்பிரிந்த  ஆன்மாவுக்கு உணர்ச்சிகள் கிடையாது . மனம் என்ற கருவி அங்கு இல்லை .அதாவது ஆறாவது அறிவும் இல்லை.பிரித்துப்பார்க்கும் குணமும் அங்கு இல்லை .தேடித் தேடி காத்து இருந்து கொல்லும் குணம் அங்கு எதுவும் இல்லை.  உடல் விட்ட ஆன்மாவின்  நிலை என்னவென்றால் தனது பதிவுகளை இன்னொரு மனித உடலில் ( CD Playerல்) புகுந்து வெளிப்படுத்திக் கொள்ள காத்து இருக்கிறது .உடல் விட்ட ஆன்மாவிற்குத் தேவை ஒரு மனித உடல் .வேறு வகை உடலில் அதனால் புகுந்து கொள்ள முடியாது. அதுவரை அது தனது உடல் மேல் ஒரு அடிக்குள் மிதந்து கொண்டு இருக்கிறது ....

  ஆன்மா ஒரு காந்த உடல் என்று பேசிவிட்டோம் . காந்தமும், நிரந்தர காந்தம் , தற்காலிக காந்தம் என்று இரண்டு இருக்கிறது  தானாகவே காந்தப்புலத்தை உண்டாக்கவல்ல காந்தம் நிரந்தர காந்தம்.தற்காலிகமாய்க் காந்தப்புலத்தை உண்டாக்கும் காந்தம் தாற்காலிக காந்தம் . எல்லா காந்தமும் திணிவாய் இருக்குமா ? ஒரு சைக்கிளின் மில்லர் டையனமோ காந்தத்தைவிட ,ஒரு ஸ்பீக்கரின் பின்புறம் இருக்கும் காந்தம் வலுவாக    அதிகமான தூரத்தில் இருக்கும் இரும்பைக்கூட இழுக்கும் சக்தி இருக்கும் . அது போல உடல் விட்ட ஆன்மா வலுவான , மிதமான , லேசான காந்த உடலாக இருப்பதற்கு அந்த உடலின் மரணம் ஏற்பட்ட விதம் பொறுத்து அந்த உடலின் காந்தத்திணிவு இருக்கும்.


மரணங்களை வகைப்படுத்துவோம்.

என்ன இவன் பாட்டுக்கு ஏதோ பட்டுச்சேலையை தரம் பிரிப்பது போல சாதாரணமாக தொடங்குவதாக மரணத்தின் மதிப்பை குறைப்பதாக நினைத்து விட வேண்டாம்.மரணம் என்பது எல்லோறுக்கும் நிகழப்போவதுதான் .ஆனால் அது நிகழ்ந்த முறையில் பிரிந்த ஆன்மா அதன் காந்தமும் திணிவு தீர்மானிக்கப்படுகிறது.

1.குழந்தை மரணம்.
2.இயற்கை மரணம்.
3.தற்கொலை ,விபத்தினால் மரணம்.
4.ஞானம் அல்லது முக்தி பெற்றவர்களின் மரணம்.

1.குழந்தை மரணம்.

தாயின் வயிற்றில் இறந்து பிறந்த குழந்தை ,பிறந்த பிறகு மூன்று வயது அல்லது வயதுக்கு வரும் முன்  வரை அதாவது 12 வயது வரை உள்ள  இறந்த உயிர் அவனுடைய தாய் அல்லது தந்தை இவர்களில் யார் மிகவும் ஒத்த பதிவுகளின் கூறுகள் அதிகம் இருக்கிறதோ அவர்களிடம் மீண்டும் இணைந்து கொள்கிறது . காரணம் அந்த குழந்தைக்கு தனிப்பதிவு எதுவும் இருக்காது . ஏனெனில் எப்போது ஒரு உடல் இன்னொரு உடலை உருவாக்கும் வயதுக்கு வரும் வரை  விந்துவோ - நாதமோ உருவாகும் வரை அவனுக்கு தனிப்பதிவுகள் இருக்காது . வயதுக்கு வரும் வரை அவன் செயல்களுக்கு காரணம் அவன் தாய் தந்தைப்பதிவுகள்தான் .அவன் ஜாதகமே முழுமையாக வேலை செய்ய துவங்காது .இது நிரந்தர காந்தமல்ல !

                             பருவ வயதிற்கு முன் இறக்கும் குழந்தை இறப்பின் போது மூக்கில் கண்களில் நீர்வரும் அதுதான் வயதுக்கு வந்த பின் , விந்து-நாதத்தை உருவாக்கும் நீர் .

திங்கள், 25 ஜூலை, 2016

”பேய்” நல்லது தெரியுமா? - துரத்தல் 3.


கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போன்றதுதான் இந்தப் பதிவும் .போகிற போக்கில் நம் தமிழ் சினிமாப் பேய் ,பிசாசு என்று இல்லாத ஒன்றையெல்லாம் காட்டிப் பயமுறுத்துகிறார்கள் என்று விளையாட்டாய்ச் சொல்லப்போய்க் கடைசியில் உடலை விட்ட உயிர்களைப் பற்றிய வாசிப்பு நீண்டபாதைக்குள் செலுத்திவிட்டது. …. 

ஒரு மரணம் எந்த வயதில் நிகழ்ந்தால் , எந்த முறையில் நடந்தால், அந்த உடலிருந்து பிரிந்த அந்த உயிர்ச்சக்தி எந்த நிலையை அடைகிறது என்று இதுநாள் வரையில் புரிந்துக் கொள்ளப்படாத அல்லது மறைக்கப்பட்ட ரகசியங்களைப் பேச வேண்டிய கட்டாயத்திற்குள் என்னையறியாமல் இழுத்துகொண்டு விட்டது! சில உண்மைகளைப் பற்றிப் பேசும்போது மிகக் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும்.அந்தப் பொறுப்புப் பல புதிய ரகசியங்களை உங்களுக்கு இங்குச் சொல்லவைத்து இருக்கிறது …. 

போன பதிவில் பைசாசம் , பேய் ,ஆவி பற்றிய ஒரு தேடல் முற்றுப்பெற , எனக்கு ஒரு ஞானி உதவினார் என்று முடித்து இருந்தேன் . அவர் பெயர் யோகிராஜ்.வேதாத்ரி மஹரிசி…

 இயற்கையின் ஒரு பகுதியே மனிதன்.

      நாம் இதுவரை நீங்கள் கேட்டுப் பயந்த காத்து, கறுப்பு, காட்டேறி, கொள்ளிவாய்ப் பேய்களைப்போலப் பற்றிய கதையையும், சினிமாவில் ஆபாசமாக வரும் கவர்ச்சியாக உலவும் ஆவி, , பேய், பிசாசு , கற்பனைகளையும் ஆங்கிலக் கிராஃபிஸ் பூதம், சைத்தான், சாத்தான் போன்ற மெகா பட்ஜெட் பொய்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முதலில் மரணமுற்றவர்கள் உடலிருந்து ”எது” வெளியேறுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.. 

ஏன் என்றால் இந்தப் புரிதல் இல்லாததால்தான் நாம் காஞ்சனா ராகவா லாரான்ஸ் சொல்லுவதையை நம்ப வேண்டியிருக்கிறது.இன்னும் அழுத்தமான வார்த்தையில் சொல்லப்போனால் உடலிருந்து வெளியேறும் ஆன்மாக்களைப் பேயாகவும் பிசாசாகவும் கொச்சைப்படுத்திக்கொண்டு இருப்பது போலத் தெரிகிறது .நம் வீட்டில் இறந்த நபர் இப்படிப் பிசாசு ரூபத்தில் திரிந்து இருந்தால் நாம் வரவேற்போமா ? யாருக்கோ நடப்பதால் இதை விளையாட்டாய்ப் பார்த்துச் சிரிக்கிறோம்.உண்மையில் இயற்கையின் அத்தனை ரகசியமும் பதிவு செய்யப்பட்ட ஒரு நடமாடும் என்சைக்கிளோப்பீடியாதான் மனிதன் .இன்னும் சுருங்கச்சொன்னால் இயற்கையின் ஒரு பகுதியே மனிதன். இதைத்தான் நமக்கு அருகே நடக்கும் மரணங்களும் பிறப்புகளும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது அதை உணராதவரைப் பிறப்பு சந்தோசமாகவும் இறப்புத் துக்கமாகவும் மட்டுமே பார்க்கப்படும் . 


எது ஆரம்பப் புள்ளி ?
அப்படி என்ன பிறப்பு ,இறப்பு முக்கியமாகப் போய் விட்டது? உங்கள் அப்பாவின் 23 குரோமோசோமும் ,அம்மாவின் 23 குரோமோசோமும் மட்டும்தான் நீங்கள் என்று நம் மரபியல் ஜீன் ஏணிப்படிகளை நினைத்துக்கொள்கிறோம் .இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள் ஏழு ஜென்மத்து மரபுப் பண்புகளைக் கொண்டவன் என்று யாரவது பேசினால் அடப் போங்கப்பா என்று ’ஸ்வாதிக் கொலை வழக்கில் முக்கியத்தடயம்’ என்ற செய்தி வாசிக்கப்போய்விடுவோம். 


ஆனால் மனிதன் நவராத்திரிக் கொலுவில் காட்டப்படும் ஓரறிவு உயிரினம் மரம், செடி, கொடி, இரண்டறிவு உயிரினம் நத்தை, சங்கு, ஆமை மூன்றறிவு உயிரினம் எறும்பு,கரையான் , நான்கறிவு உயிரினம் நண்டு, வண்டு,பறவை ஐந்தறிவு உயிரினம் ஆடு, மாடு,சிங்கம், புலி, நாய் வரை வாழ்ந்த பதிவுகளைக் கொண்டவன்தான் ஆறறிவு உயிரினம் மனிதன் .இதை நீங்கள் நம்ப வேண்டாம் .யாராவது பக்கத்து வீட்டுப்பெண் பரிணாமச் சரித்திரம் பற்றிப் பழைய புத்தகம் வைத்து இருந்தால் வாசித்துப் பயன் பெற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் இந்த (மகாகாசம் ) பிரபஞ்சத்தை மிகப்பெரிய கடல் வைத்துக்கொண்டால் அதன் (பூதாகாசம் ) அலைதான் அணுக்களால் உருவான ஒவ்வொரு பௌதீகப்பொறுளும்.அந்த அலையினால் உருவான (சித்தாகாசம்) காற்று நம் உயிர் . ( கடல்-அலை-காற்று ) எது ஆரம்பப் புள்ளியோ அந்தப் பிரபஞ்சத்தின் பிரதி - ஜெராக்ஸ்தான் ஒவ்வொரு உயிரும், மனிதனும் .என்ன மற்ற உயிர்களுக்குத் தான் எங்கிருந்து வந்தோம் என்ற முகவரியை அறியும் அறிவு வளர்ச்சியில்லை .மனிதனுக்கு அந்தக் கொடுப்பினை இருப்பதால்தான் இந்தப் பதிவுகூடப் பிறக்கிறது . 

சரி நாம் உடலிருந்து வெளியேறும் ‘அது’ எது ? 

நாம் கண்ணாடியில் அழகாய், ஒள்ளியாய், குண்டாய்ப் பார்க்கும் உடல் மட்டும்தான் அறிந்துகொள்ள வைத்து இருக்கிறோம் .இதற்கு உள்ளே இந்த உடலை நடத்தும் இரண்டு உடல்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நாம் உடலை விட்டு அந்த ’அது’ பற்றி அறிய முடியும் அப்படியானால் மனிதனுக்கு மூன்று உடலா?
ஆம்.

1. Physical Body பருவுடல் - செல்களால் உருவான உடல் .
2. Astral Body நுண்ணுடல் - உயிர்சக்தி , உயிர்துகள் , சீவன்,
3. Causal Body Or Bio Magnetic Body -சூக்கும உடல் - காந்த காந்த உடல் அல்லது காரண உடல் .


1. Physical Body - பருவுடல் .

                               செல்களால் உருவான உடல் .நம் விஞ்ஞானம் போதிய அளவுக்கு மேல் இந்த Physical Body பேசியிருக்கிறது .இது 20 வகைத் திசுக்களால் எலும்பு, தசை, ரத்தம், நரம்பு, குடல் ,சுரப்பிகள் உருவானது.இது ஜீரண,ரத்த,தசை,எலும்பு,நோயெதிர்ப்பு, இனப்பெருக்க,நாளமில்லாச் சுரப்பு, நரம்பு,கழிவு ,நிணநீர்,சுவாச மண்டலங்களால் உருவானவை . இதற்கு மேல் இதற்குள் செல்ல வேண்டாம் .ஆனால் இந்த உடம்பில் அம்மாவின் உடலை விட்டு வெளியே வந்து மூன்று வயதில் மூளை முழு வளர்ச்சி அடைகிறது அடுத்து 12 வயது வரை மூளையில் உருவாகும் வித்து சக்தி Sexual vital force உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் சக்தியைக் கொடுத்து உடல் வளர்ச்சியை முழுமையாக்குகிறது .அந்த வித்து சக்தி.உடல் வளார்ச்சியை முழுமைப்படுத்திய பிறகு மெல்லக் கீழிறங்கிப் பாலுணர்வுச் சுரப்பியில் தேக்கமுறுகிறது. 

ஆனால் இது உடல் வளர்ச்சிக்குப் போதாது .வயதுக்கு வந்த ஆண் ,பெண் உடல் வளர்ச்சி மிக அபரிமிதமான எல்லைத் தொடும் அளவுக்கு உயர உணவிலுருந்து பெறப்படுகிறது .அது நேரடியாக இல்லை ஏனெனில் இந்த உடலை நடத்தும் உயிர்சக்தியை உணவிலிருந்து நேரிடையாகப் பெற்றால் விளைவுகள் விபரீதமாகி விடும் அதனால் 1.உணவு ஜீரணமாகிச் சிறுகுடலின் மூலம் சத்துப்பொருட்கள் திரவமாக உறிஞ்சப்படுகிறது ரசமாகிறது Juice –2. ரசித்திலிருந்து ரத்தம் உருவாகிறது. 3.ரத்தத்தின் ஒரு பகுதித் தசையாகிறது 4.தசைகளில் எண்ணெய்ப் பிரிக்கப்பட்டுக் கொழுப்பாகிறது. 5.கொழுப்பிலிருந்து சுண்ணாம்புசத்துப் பிரிக்கப்பட்டு எலும்பாக மாறுகிறது 6.எலும்பு கெட்டிப்பட்டது போக மீதமுள்ள திரவம் எலும்புக்குள் மஜ்ஜையாக மாறி மூளையாக அமைகிறது 7.மஜ்ஜை எனும் தாதுவிலிருந்து சக்தி வாய்ந்த அணுக்கள் பிரிக்கப்பட்டு .ஆணுக்கு விந்தாகவும்,பெண்ணுக்கு நாதமாகவும் sexual vital particle உருவாகிறது .மூளைதான் வித்து சக்தி என்ற sexual force ஐ தனது ரசாயன சக்தியால் உருவாக்குகிறது ஆனால் இது பாலுணர்வு சுரப்பியில்தான் வந்து தங்குகிறது . 


2. Astral Body -நுண்ணுடல்  

                      சூக்கும சக்தி , உயிர்சக்தி , உயிர்துகள் , சீவன் என்ற பல பெயர்க் கொண்ட ஒரே பெயருடைய “உயிர்”வாழும் இடம் இந்த இரண்டாவது உடலில்தான் . பாலுணர்வு சுரப்பியில்தான் வந்து தங்குகிற வித்து சக்தி என்ற sexual vital particle ன் உயிர் துகள்தான் உடம்பில் உயிர் என்று பேசப்படுகிறது .உயிரோட்டம் என்பது உயிர் என்ற சக்தி முழுக்க முழுக்க இந்த sexual vital particle லின் சுழற்சியில்தான் நடைபெறுகிறது .உயிர் இரண்டு முக்கிய வேலையைச் செய்கிறது .1. உடலை இயக்குகிறது .2. அப்படி இயக்கத்தடை ஏற்பட்டால் உயிர் மனமாக விரிந்துத் தடையை நீக்கும் உபாயம் தேடுகிறது . 
கொஞ்சம் இல்லை ரொம்பவே புரியவில்லை இல்லையா ? இருக்கட்டும் .இன்னொரு உடலைப்பற்றியும் சொல்லி விடுகிறேன் .அப்புறம் மொத்தமாகப் பேசி முடித்து விடுவோம். 


3. Causal Body Or Bio Magnetic Body -  காந்த உடல் அல்லது காரண உடல் . 

                             Astral Body க்கு சொந்தமான நுண்ணிய அணுக்களாலான உயிர்துகள் உடல்முழுதும் சுழலும்போது அதிலிருந்து வெளியேறும் காந்த அலையால் உருவான உடல்தான் இந்த மூன்றாவது உடல்.இதுவும் கண்ணுக்குத் தெரியாத காரணஉடல்தான்.இந்த ஜீவகாந்த சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள கோடானுகோடிச் செல்களுக்குள் இணைப்பை உண்டாக்கி அவற்றால் உடலுக்கு வேண்டிய ஆற்றலை மின்சக்தியாகவும் இரசாயன சக்தியாகவும் மாற்றிக் கொடுத்துகொண்டே இருப்பதுதான்.இந்த சக்தியை எளிதாக உணர உங்கள் இரண்டு உள்ளங்கைகளிரண்டையும் ஒரு நிமிடம் சேர்த்துக் காற்றுப் புகாத அளவுக்கு நெருக்கி வையுங்கள்.பிறகு இரண்டு உள்ளங்கைகளையும் அரையடிப் பிரித்துப் பிறகு உடனே மீண்டும் ஒட்டிக் கொண்டு வாருங்கள் இப்படி அரை நிமிடம் மாற்றி மாற்றிச் செய்தால் உள்ளங்கைகளுக்கிடையே ஒரு ஈர்ப்புக் காந்தம் இழுக்கும் உணர்வை அறிவீர்கள் .இந்தக் காந்தம்தான் உடல் முழுதும் செயல்பட்டு உங்கள் தொடு உணர்வு ,சுவை,நுகர்தல்,பார்த்தல்,கேட்டல் போன்ற ஐந்து உணர்ச்சிகளை இந்தக் காந்தச் செலவால் மின்சக்தியாகவும் இரசாயன சக்தியாகவும் மாற்றிக் கொடுத்து மனம் என்ற கருவி மூலம் பிரித்து உணரும் தன்மை, மூளைக்குக் கிடைக்கிறது .நீங்கள் குடிக்கும் ஒரு கப் காஃபி இந்த ஜீவ காந்தச் செலவால்தான் ருசிக்கிறதா,கசக்கிறதா,இல்லை என் அம்மா போடறக் காப்பி மாதிரி வராதுங்கிற உணர்வைச் மனதின் மூலம் சொல்லுவது இந்த மூன்றாவது உடலான Causal Body ஜீவகாந்தச் செலவால்தான்.

இதுதான் நாம் இறந்த பிறகு நம்மை விட்டு வெளியேறும் காந்த உடல் . ராகவா லாரன்ஸ் உட்படச் சமீபத்திய தமிழ்ச் சினிமாவை வாழவைத்துக் கொண்டு இருக்கும் கதைக்கரு - ஆன்மா,பேய்,பைசாசம்,ஆவி,என்ற சகல உடான்ஸ்களுக்கும் பொது விதியை உருவாக்கும் உடல் .அது சரி ஏற்கனவே இரண்டாவது சொன்ன Astral Body மேட்டரே புரியவில்லை இது எங்கிருந்து வந்தது என்ற டன் கணக்கான கேள்வி உங்களுக்கு இருக்கத்தான் செய்யும்.ஆனால் இது மிக முக்கியமான ஆதார விதியை உருவாக்கும் மெய்யியல் தத்துவம்தான் ஆனால் இதற்குள் நம் தலையை விட்டு அறிந்து கொண்ட அறிவை இங்குச் சொல்லத் தொடங்கினால் என் முகநூல் முகவரியை உங்களில் யாராவது கூட முடக்கி விடுவீர்கள் .


ஆன்மீகம் அறிவுச் சுரங்கம்தான் .ஆனால் அதை விஞ்ஞானத்தோடு சொல்லுவது அவ்வளவு சுலபம் இல்லை.இதை ஒரு பிரேமானந்தா சொல்லால் நாம் கைகட்டித் தட்சினைக் கொடுத்து நம் கேள்விகளை வீட்டு பீரோவுக்குள் வைத்து விட்டு அங்கிருக்கும் பணம் நகையெல்லாம் பிரேமானந்தாக் காலில் வைத்துச் சமர்பித்து விட்டுச் சாஸ்டாங்கமாக விழுந்து கேட்போம் ஆனால் இது முகநூல்.அடிப்படை சொல்லவே இத்தனை சொல்ல முயல்கிறோம் .ஒருவேளை இன்னும் இதோடு சொல்லப்போகும் சில விசயங்களைத் தவிர்த்து விட்டு முன்னேறலாம் ஆனால் அது ஒன்னேகால் மணி நேர ஆங்கிலபடத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் சண்டையைப் பார்த்தது போலத்தான் இருக்கும் . 


அதனால், மீண்டும் சுருக்கமாக . 1.(Physical Body) அணுக்களால் உருவான செல்களால் உடல் ஒரு அகல்விளக்கு போல, அதில் 2.அந்தச் செல்களுக்கு மூலமான இறைத்துகளான உயிர் சக்தி (Astral Body) நுண்ணுடல், எண்ணெயும் திரியும் போல ,அந்த விளக்கிலிருந்து வரும் நாம் காணும் வெளிச்சமே 3.இறைத்துகளின் கரசலால் உருவான (Bio Magnetic Body) - காந்த உடல்.
போதும் !

வரும் பதிவில்  மரணங்களை வகைப்படுத்துவோம்.

                   என்ன ? இவன் பாட்டுக்கு ஏதோ பட்டுச்சேலையை தரம் பிரிப்பது போல சாதாரணமாக தொடங்குவதாக மரணத்தின் மதிப்பை குறைப்பதாக நினைத்து விட வேண்டாம்.மரணம் என்பது எல்லோறுக்கும் நிகழப்போவதுதான் .ஆனால் அது நிகழ்ந்த முறையில் பிரிந்த உயிர்,ஆன்மாவா,ஆவியா ,பேயா, பிசாசா என்று அதன் இருப்பை பற்றித் தெரிந்து கொள்ளத்தான் இந்த வகைப்படுத்தும் முயற்சி...

திங்கள், 11 ஜூலை, 2016

”பேய்” நல்லது தெரியுமா? - துரத்தல் 2 .

       ஐந்தாவது படிக்கும்போது எனக்குச் சுத்தமா வராத கணக்குப்பாடத்தில் என் வகுப்புத்தோழன் முகுந்தன் புலி . வகுப்பிலும் முதல் இரண்டு இடத்திற்குள் வந்து விடுவான். எனக்குச் சின்ன வயதிலிருந்தே முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களோடு நட்பாசை உண்டு .அவன் வீட்டுக்கு ஒரு முறை போயிருக்கிறேன். அவன் வீட்டில் சின்னதாய் ஒரு தங்கை உண்டு. ஒரு சமயம் மோகன் நிறையப் பணம் பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வந்தான் .கேட்டதற்கு வீட்டில் தருவதாகச் சொல்வான் .அது பொய்யா மெய்யாலும் பொய்யா என்பது பற்றி அக்கறை படாததிற்குக் காரணம், எங்கள் வீட்டில் கையில் காசு கொடுத்து அனுப்பி வைக்கும் பழக்கமில்லை .அவன் என்னை மட்டுமில்லை என் அண்ணனையும் சேர்த்து ஒரு சில முறைக் கடைக்குக் கூட்டிட்டுப்போயிச் செலவு செய்து இருக்கிறான் அவ்வளவுதான் ..

இரண்டரைக் கொலை நீதிபதி !

      பல மாதம் திருடன் முகுந்தன் தன் வீட்டில் ஒரு நாள் திருடனாக மாட்டிக்கொண்டான் திருடிய குற்றதிற்கு  அம்மா,அப்பா என அடி எல்லாத் திசைகளிலும் வந்ததை வாங்க முடியாமல் திருடிய பணத்தை எனக்கு மொத்தமும் கொடுத்து விட்டதாகச் சொல்லித் தாற்காலிகமாக அடியிலிருந்து பெயில் வாங்கிக்கொண்டான். என் மேல் பொல்லாப்புக் கேஸ் பதியப்பட்டது. அப்போது அந்தக் கிராமத்தின் கட்டப்பஞ்சாயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.அந்த கட்டப்பஞ்சாயத்து நீதிபதி ஏற்கனவே இரண்டரைக் கொலை செய்தவர் ஒருவன் சில நாள் கழித்து இறந்து போனான் என்பதால் அந்தக்கொலையில் அவர் பாதிக்கொலையாளி மீதி அந்த மருத்துவமனைப் பொறுப்பு. அவர் முன் வைத்து என்னையும் அவனையும்  மிரட்டி கேட்டனர். அதில் மோகன் உளறவே , அவன் அம்மா என் பையன் பொய் சொல்லமாட்டான் என்று சாதிக்க , விசயம் அடுத்தக் கட்டமாகக் கொலைகார நீதிபதியிடமிருந்து திண்டுக்கல் அருகேயுள்ள உண்டாரபட்டி- காசு வெட்டிப் போடும் சுப்ரீம் கோர்ட் காளியம்மனிடம் சமர்பிக்கப்பட்டது.

காளியம்மன் கோர்ட்டின் தீர்ப்பு !

      அங்கும் வந்தும் முகுந்தன் அம்மா அழுது புலம்பவே அந்தக் கோவில் பூசாரி எங்கள் அம்மாவிடம், அம்மா இங்க பாருங்க இது துடியான தெய்வம் பொய் சொல்லிறாதீக நாற்பத்தியெட்டு நாள்ல காட்டிக் கொடுத்துக் காவு வாங்கிடுவான்னு எச்சரித்தார்.எங்கள் அம்மா எங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சாகவும் துணிந்து காசு வெட்டிபோட துணிந்து சம்மதித்தார்கள் ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் பூசாரி என்ன நினைத்தாரோ தெரியவில்லை ,இங்க பாருங்க உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா இங்க ஆத்தா முன்னாடி சூடம் பொருத்தறேன் வாங்கலைன்னுச் சொன்ன இந்த அம்மா கையில அடிச்சுச் சத்தியம் பண்ணிட்டுத் திரும்பிப் பார்க்காமப் போகட்டும் நாற்பத்தியெட்டு நாள் கழிச்சுப் பிறகு பார்ப்போம்ன்னுத் தீர்ப்பை ஒத்திவைக்க , அதுவே முடிவானது . அம்மா சத்தியம் செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் என் கையை இறுகப்பிடித்துகொண்டு ,செய்யாத தப்புக்கு இப்படிச் சத்தியம் பண்ண வேண்டி வந்து விட்டதேன்னு விதியை நினைத்துக்கொண்டு அழுதுகொண்டே வேகமாக வந்தார்கள் .இனி முதல் மார்க்கே எடுத்தாலும் முகுந்தன் நட்பே வேண்டாம் என்று நான் முடிவெடுத்துக்கொண்டேன் அப்போது !

      நாங்கள் குடியிருந்த வீட்டை வீட்டு வசதி வாரியத்திடம் எடுத்துக்கொள்ள நேர்ந்ததால் நாங்கள் கிழக்குக் கோவிந்தாபுரத்தில் வீடு கட்டி வந்துவிட்டோம் .இதில் என்ன விசேசம் என்றால் அது முகுந்தன் வீட்டுக்கு எதிர் தெரு.வீட்டை விட்டுத் தெருவில் கால் வைத்தால் அவர்கள் வாசல் தெளிவாகத் தெரியும் .வாழ்க்கையில் எது வேண்டாம் என்று மனம் ஒதுக்கும் போது அதனோடு நம்மை மிக நெருக்கமாக்கி விடும் அபாயம் இருப்பதை அப்போது இருந்த என் அறிவுக்குப் புரிய ஆரம்பித்தது .

பெண் பிணம் !

      எங்கள் வீட்டுக்கு மிக அருகில்தான் இப்போது இருக்கும் ஹவுசிங்போர்டு சுடுகாடு மற்றும் இடுகாடு.அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டம் வெகுவாக இருக்காததால் நான் அங்குச் சென்று முக்கால் பெடல் போட்டு சைக்கிள் பழகிக்கொண்டு இருந்தேன் .
அந்தச் சுடுகாட்டுக்குச் சொந்தமான மிக ஆழமான கிணறு இருக்கிறது .எப்போதும் அதில் நீர் நிரம்ப இருக்கும் என்பதால் அதைத் துணி வெளுப்பவர்கள் பயன்படுத்துவார்கள்.மாலை நேரத்தில் அதிகம் புழக்கமிருக்காது .அப்போது அந்தக்கிணறு நோக்கி எல்லோரும் திடீரெனெ ஓடத்தொடங்கினார்கள் .என்னவென்று தெரியாமல் நானும் ஒரு ஆர்வத்தில் ஈர்க்கப்பட்டு ஓடிப்போய்க் கிணற்றுக்குள் எட்டிப்பார்க்க, அங்கு இடுப்பில் கயிறு கட்டி மேலே இழுத்து நிலையில் ஒரு பெண் பிணம் , குப்புறத் தண்ணீரில் மிதந்த நிலையில் ஆடிக்கொண்டே இருந்தது. என்ன பார்க்கிறோம் என்று கூடத் தெரியாத திகிலுடன் நான் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ….
எங்க அம்மாவை நானே கொன்னுட்டேனே யாரோ எனக்குப் பழக்கப்பட்ட குரல் சத்தமாகக் கேட்க, குரல் வந்த கிணற்றின் எதிர்பக்கம் பார்த்தேன்.அங்கு முகுந்தன் கதறிகொண்டு இருந்தான். எனக்குச் சட்டெனே ஏதோ நழுவது போலக் கைகால் எல்லாம் உதறியது .சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வீட்டுக்கு எப்படி ஓடினேன் என்று எனக்குத்தெரியவில்லை.

      அன்று மாலைப் பயத்தில் படுத்தவன்தான், மூன்று நாள் குளிர் காய்ச்சல் விடாமல் படுத்தியெடுத்தது. அம்மா நான் பயந்து விட்டதாக வேப்பிலை மந்திரிக்கவும் அழைத்துச் சென்றார்கள் .எனக்குக் கண் மூடினால் யாரோ முகம் தெரியாத உடல் ஒன்று கிணற்றில்,ஆற்றில் மிதப்பது போலவும் மரத்தில் தொங்குவது போலவும் கனவு பாதி அரைகுறை நினைவு பாதியாக விடாது மிரட்டியது. ஒரே நாளில் அம்மாவுக்கு மோகன் அம்மா இறந்த விசயம் தெரிந்து விட்டது.அது அந்தக் கோவிலில் சத்தியம் பண்ணி விட்டு வந்த நாற்பத்தியேழாவது நாள் .
          தற்கொலைக்கு காரணம் தாங்க முடியாத வயிற்று வலியால் சில மாதங்கள் அவதிபட்டதால் இந்த முடிவுக்கு வந்து விட்டதாக தெருவில் ஒருவர் சொன்னார்.

   இறந்து போன முகுந்தன் அம்மா ஞாபகம் வந்து வந்து போய்க் கொண்டு இருந்தது.அப்புறம் சில நாளில் இறந்தவர்கள் எல்லோரையும் துன்புறுத்துவதில்லை.அதற்கு வேறு ஏதேதோ காரணங்கள் இருக்குன்னு புரிந்துகொள்ளத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் எதற்குப் பயந்தேனோ அதன் மேலே ஆர்வம் மேலிட விக்கிரவாண்டி ரவிச்சந்தரின் புத்தக்கத்தைப் படித்து, நண்பர் சுகுமாரோடு சேர்ந்து ஆவிகளோடு ஒய்சா போர்டில் பேச முயற்சி செய்ய அதில் என்னுடைய +2 மார்க் எவ்வளவு எனக்கேட்டதற்கு எண்ணூறுக்கு மேல் என்று ஒய்சா ஆவி ,பொய் சொன்னதால் பேசாமல் அதைத் தொடர்வதிலிருந்து விலகி விட்டோம். அடுத்து ஆவியுடன் பேச - பேனா நகர்வில் பேப்பரில் எழுத வைப்பது எனத் தத்துப்பித்து என் தொடங்கினோம்.அதில் யாரோ மதுரையில் ஒரு டாக்டருடைய பெண் விபத்தில் இறந்து போனது வந்து எழுத .. சத்தமில்லாமல் அந்தப் பேனாவைத் தொலைத்து விட்டோம் . அது யார் கையில் கிடைத்து மை இல்லாமல் எழுதிக்கொண்டு இருக்கிறதோ ?

      பொதுவாக நாம் விஞ்ஞானத்தை நாம் நம்புவதற்குக் காரணம் அதில் நிருபணங்கள் இருப்பதால் நம்மை ஏமாற்றாது என்ற நம் நினைப்பைக் குழித் தோண்டி எரிந்துக்கொண்டி இருக்கிறது நவீன விஞ்ஞானம் .வயாகாரா போல இன்னொரு மருந்து கண்டுபிடிக்கும் வரை பேய் மேல் உள்ள தேடல் ஒயாது என்பது போலக் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள் பலர்.உங்கள் வீட்டில் எதாவது அமானுஸ்ய நிகழ்வுகள் இருப்பது போல உணர்ந்தால் போதும் அதை உறுதிப்படுத்த Ghost-Hunters Team பெருகிவிட்டது .அவர்கள் பாட்டுக்கு உங்கள் வீட்டுக்கு நவீனக் கருவிகளோடு வந்து உங்களுக்குக் கை கொடுத்து விட்டு இரவு முழுதும் பேயைவிடத் தங்களுக்குள் மெல்லப்பேசி, தங்கியிருந்து பேயைப் படம் எடுத்துக் காட்டிக்கொடுத்து விட்டுக்  கம்பி நீட்டுகிறார்களாம்.அந்த படங்களில் எதாவது ஒன்றில் மேக்கப் இல்லாமல், மனைவியோ கணவனோ ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக்கொண்டு, அசந்து தூங்கும்போது உங்கள் முகத்தையே எடுத்தப் படமாக இருக்கலாம் கவனம் !

ஆவி பிடிக்கும் ஆப்ஸ் !

      இப்படிப் பட்ட டீம் மட்டும் போதாது என்று பேய் பற்றிய தேடலில் மென்பொருளாலர்கள் கவனம் திசைதிரும்பியது . 2012 ல் பேய்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க ஐபோனில் பயன்படுத்தப்படும் மொபைல் அப்ளிகேஷன் மூலம். , ரோஜெர் பின்ஜெல்டன் மற்றும் ஜில் பெய்ட்ஸ் என்பவர்கள் உருவாக்கி உலவ விட்டனர்.அதன் மூலம் சந்தேகப்படும் எல்லா இடத்திலும் அதெற்கெனெக் கருவிகளைப் பயன்படுத்தி மொபைலுக்குப் பேய்கள் மற்றும் ஆவிகளின் சக்திகளை உணர்ந்து அதைக் குறுஞ்செய்தியாக மாற்றிப் பிங்கர்ஸ், சீக்ரெட்ஸ், ஸ்ட்ரைசினைன், எலிபேன்டியாசிஸ் என்றும் ஒரு சிலருக்குக் கஷின் ஷேவ், கிராண்ட் பாதர், டைனிங் ரூம், ரயில் ரோட் என மெசேஜ்கள் வந்துள்ளதாம். இது உண்மையா என்பது அப்போது பயன்படுத்தியவர்களுக்கே வெளிச்சம்.இப்போது சாதாரண மொபைல்களில் பயன்படுத்தும் Ghost Hunting Tools ,Detector,Radar ,போன்ற ஆப்ஸ்கள் வந்து அதிகம் பேய் ஓட்டிக்கொண்டு இருக்கிறது !

         நான் கூட ஆசைப்பட்டு ஒரு பிரபலமான ஆப்சைச் சோதிக்க இரவு பதினோரு மணிக்குக்கு மேல் யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்குப் போய்ச் சோதிக்கப்போனேன் .ஆப்சை அன் செய்தேன் .ஒரு பத்து நிமிடம் எதுவுமே sensors to scan different frequencies and detect presence of any ghosts near by. It then tries to display those entities on the radar என்ற நாழு வளையம் கொண்ட ரிங் ஸ்கேன் செய்தது .மெல்லப் பயத்துடன் காத்து இருந்தேன் .பின்ன சும்மாவா ? எதாவது இருக்குன்னு காமிச்சுட்டா அது பாட்டுக்கு ஜங்குன்னு முன்னாடி வந்து குதிச்சு முனிப்படம் ராகவா லாரன்ஸ் கணக்கா ஒரு மாதிரியா முழிச்சுக்குட்டு நெருப்பு இருக்காத் தீப்பெட்டி இருக்கான்னுக் கேட்டா எந்தப்பக்கம் ஓடுறது .இருக்கிற மெத்தைப்படியும் குறுகலா இருக்கு. ஒரு நிமிசம் தேவையான்னு யோசிக்கிறதுக்குள்ள ஒரு இடத்தில் ஒரே ஒரு புள்ளி அந்த ஆப்சிலிருந்த நாழு வட்டத்திலிருந்து ஒவ்வொரு வட்டமா நகரத்தொடங்கியது அதோடு அந்த ராடார் போன்ற சுத்தலுடன் ஜிங்,ஜிங்ன்னுச் சத்தம் மொபைலிருந்து வரத்தொடங்கியது...அது டிடெக்ட் பண்ணும் திசையில் எதேச்சையாய்த் திரும்பிப் பார்த்த்தேன்.அது பக்கத்து வீட்டு மொட்டைமாடி. அங்கு லேசாய் ஏதோ ஒருசலனம் ... அப்போது ஏற்பட்ட என் இதயத்துடிப்பின் சத்தம் என் குடும்ப டாக்டர் பெட் ரூம் வரை இன்னேரம் எட்டி இருக்கும்.அந்த அளவுக்கு லப்.. டப்.. உயர்ந்தது. இருந்தாலும் கண்ணில் ரத்தம் கட்ட. தைரியத்தை வரவழைத்து அந்த இருட்டை உத்துப்பார்த்தேன் .நிச்சயமாய் ஏதோ அசைகிறது.கால்கள் ஓடு ஓடு என்று பரபரக்க , அதற்குள் அது தொடர்ச்சியாய் அசைந்து அசைந்து நகன்று நழுவி, அந்த மாடியின் ஓரம் வரை வேகமாய்ப் போய்ச் சட்டேனெ எதுவும் இல்லை ..           எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது .வீட்டுக்குள் வந்து ,அந்த ஆப்சை அழித்து விடலாம் என்று ஓப்பன் பண்ணினால் இப்போது அந்த ரேடாரில் மூன்று சிக்னல் தெரிந்தது .மூன்று ஆவியா ? எதுக்கும் மனைவியை எழுப்பி நடந்ததைச் சொல்லி வைத்துவிடலாமா ? வேண்டாம் என்று எதுக்கும் உறுப்படாத என் ஈகோ தடுத்தது .அதை விட முக்கியமான விசயம் என் மனைவி எனக்கே பயப்பட மாட்டாள் அப்புறம் ஆவிக்கெல்லாம் எப்படிப் பயப்படுவாள் என்ற கேள்வி வர, செல்லை அப்படியே ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டுப் போர்த்திப் படுத்தேன் . என்னை நோக்கி ஏதோ ஒரு பொருள் நகர்வதாக ஒரு பிரம்மை வர லேசாய்ப் போர்வையை விலக்கிப்பார்த்தால், வலது பக்கம் படுத்து இருந்த பையனின் கை, தூக்கத்தில் என்னை நோக்கி நகன்று கொண்டு இருந்தது...

      காலையில் எழுவதற்கு முன் காய்ச்சல் வருவதற்கான அறிகுறி இருந்தது .யாரோ என்னமோ கனாக் கண்ட மாதிரி என்பார்களே அது மாதிரி மெல்ல எழுந்து ..பாத்ரூம் போகும் போது, பக்கத்து வீட்டிலிருந்து குரல் கேட்டது .சொன்னாக் கேட்கிறீங்களா அத்தை ஜாமத்துல மெத்தைக்குப் போய் அந்தத் துணி எடுக்கலைன்னு யார் கேட்டா ? அப்புறம் அது அலையுது இது அலையுதுன்னு பார்த்துட்டு வந்து பெனாத்திக்கிட்டுக் கெடக்கறீங்க ?


      மருமகள், கணவனை இழந்த தனது மாமியாரிடம் பேசிக்கொண்டு இருந்தது கேட்டது.அடப்பாவமே ஆவின்னு யோசிச்சாலே பிரச்சனை வருதே ?  


     இருந்தாலும் விடுவாதாக இல்லை .மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற விக்கிரமாதித்தன் மனம் தளராமல் தோளில் தூக்கிக்கொண்டு போவது போல, பைசாசம் , பேய் ,ஆவி பற்றிய ஒரு தேடல் முற்றுப்பெற , எனக்கு ஒரு ஞானி உதவினார்.  அது பற்றிய வரும் கடைசி பதிவின் துரத்தலில் இறந்தவர்கள் உயிர் என்ன ஆகிறது என்று புரிந்துகொள்வோம்... அதோடு போதும் !

சனி, 9 ஜூலை, 2016

”பேய்” நல்லதுத் தெரியுமா ?
                           தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் என்பதைப்போல இங்கு எவரை வேண்டுமானாலும் பேய்ப் பிடிக்கலாம் என்ற ரீதியில் தமிழ் படப் பேய்கள் கலந்துகட்டி நிற்கிறதுகள் ! கோலிவுட்டின் கதைப்பஞ்சத்துக்குச் சாத்தான் கொடுத்த வரம் போலப் பேய் என்ற கான்செப்ட்டை வைத்துப் படப் பண்ணும் ’பேய்க்கதைக்கரு’ நல்லா வேலை செய்கிறது .பொதுவா மேக்கப் இல்லாமல் சும்மா நடிச்சாலே பேய் மாதிரி இருக்கும் நடிககைகள் இதற்கெனெப் பிரத்தியோகமாகக் கயிற்றில் தொங்கி வேறு பயமுறுத்துகிறார்கள் . இதெல்லாம் விட எங்கும் கொலை,கொள்ளை நடக்கவில்லையென்றால் கேமிராவைத் தூக்கிக்கொண்டு சேனல்கள் அந்தக் கேரக்டர் பேய்களிடம் போய்ப் பேட்டிக் காணத்தொடங்கி விடுகிறார்கள் .

          கேள்வி : இந்தப் படத்தில் நடித்த உங்க அனுபவம் எப்படி எங்கள் நேயர்களுக்காக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இந்த பதில் தெரியாவிட்டால் தமிழகத்துக்கு அடுத்த நாள் சூரியனே வரமாட்டர் என்பது போல கேட்க,

         பதில் : நல்லாத் தமிழ் பேசத்தெரிந்தாலும் அந்த நடிகை,” யா, யா திஸ் இஸ் மை கிரேட் எக்ஸ்பிரியன்ஸ் யு நோ “என்பார்களே அப்போது அவர்களைப் பார்ப்பதற்குப் பதிலாக  நம்ம ஊர் முனியே சமத்துன்னு தோணுது . அது பாட்டுக்கு இரவு பண்ணிரெண்டு மணிக்கு மட்டும்தான் டாண்ணு வந்துட்டு, போய் விடுமாம்

                 ஒருபக்கம் நல்ல பேய்கள் ’டாய், பூய் ‘ன்னுக் கத்திக்கொண்டு கெட்ட வேலைகள் செய்கிறது. கெட்டப் பேய்கள் பழிவாங்கித் தீருவேன் என்ற கட்டிப்புரண்டு அழுகிறது .பேய்கள் மேல் உள்ள வீண் பயம்  தொலைந்துப் போவது நல்லதுதான் என்றாலும் இன்னொரு பக்கம் பேய்கள் பற்றி ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அபாய முயற்சியில் தமிழ்ப் படங்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறது .


                            இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் தூக்குப் போட்டுச் செத்துப்போன , மருந்துக் குடிச்சு மாய்த்துக்கொண்ட, பெண் பேய்களை பசங்க தேடி போகும் பெருத்த அபாயம் தமிழ் சமூகத்திற்கு வாய்க்கலாம் .இனி என்ன பண்ணி என் மகனை மயக்கினாலோ என்று மருமகளைக் குறை கூறும் மாமியார்கள் கூப்பாடுப் போய், என்ன செய்து அந்தப் பேயை மயக்கினானோ என் பையன் என்று அழுது சாதிக்கலாம்.காரணம் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சமூகத்துக்குச் செய்யும் மிக்கபெரிய நன்மை பேய்கள் கிளாமராக இருந்தே ஆக வேண்டும் என்ற தரையில் விழுந்துப் புரள்கிறார்கள்.தல கூட நடிச்சாலும் தளபதி கூட நடிச்சாலும் கிளாமர்தான் தலைவிதின்னு ஆணாதிக்க ஓவர்டோஸ் தாங்க முடியாத நம் தமிழ் நாயகிகள் பேய்களாக மாறிக் கிளாமரில் அள்ளிக்குமிக்கிறார்கள்! அவர்களின் தாராளத்துக்கு இங்குப் பச்சைக்கொடித் தெரியுதோ இல்லையோ தெலுங்குப்பட வாய்ப்புய்கள் பெரியத் தட்டில் லட்டுக் கொடுக்கக் காத்திருக்கிறது !. 

                     நம்மத் தமிழ்ப் படத்தில் செத்துக் கொடுத்தான் சீதக்காதி என்பது கீழக்கரையைச் சேர்ந்த வள்ளலுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பேய்களைத் துரத்தி துரத்திக் காட்டுகிற இயக்குனர்களுக்குப் பொருந்தும் ! உண்மையிலேயே பேய் பற்றிய அனுபவம் உள்ளவங்ககிட்டக் கேள்வி ஏதும்  இல்லாம அவங்க சொல்றதைக் கேட்டா சவுண்ட் எஃபக்ட்டோட கதை விடுவார்கள் .ஆனால் அப்போ நீங்க என்ன செஞ்சுகிட்டு இருந்தீங்கன்னு கடைசியிலக் கேட்டா முதல்ல இருந்து அதே கதையைச் சொல்ல ஆம்பித்து விடுகிறார்கள்..
 .. 


இந்தப் பேய் சமாச்சாரங்களால் நடந்த நல்ல விசயங்கள் சிலவும் உண்டு தெரியுமா உங்களுக்கு ? 

1. குழந்தைகள் இப்போதெல்லாம் சோறு சாப்பிடும்போது அம்மா சொல்லும் பூச்சாண்டிக்குப் பயப்படுவதேயில்லை .அது மட்டுமல்ல குழந்தை அப்பாவையும் பூச்சாண்டியையும் மாறி மாறிப் பார்த்து சிரிக்கிறது.  

2.  ஸ்கூல் பசங்க இப்போல்லாம் அதைப்படி இதைப்படின்னுப் பயமுறுத்தினா ஏதாவது நிராசையிலச் செத்துப்போன பேய்ப் படப் பேர் சொல்லிப் பெற்றொர்களைப் பதிலுக்குப் பயமுறுத்துகிறார்கள். 

3. காதலில் தோற்றுப்போய்  யாரயோ திருமணம் செய்தவர்கள் இப்போதெல்லாம் நீண்ட நாள்  ஞாபத்தில் வைத்து அவஸ்தப்படுவதேயில்லை .காரணம் தெரியாத பிசாசை விடத் தெரிந்த பேயே பெட்டர்ன்னு மனதைத் தேற்றிகொள்கிறார்கள் . 

4. வீட்டுப் பெருசுகளோட காலத்தில், ஜெயமாலினி போல வயதான நடிகைகள் பேயாக அடுப்புக்குள் கால்வைத்து எறித்துக்கொண்டு சிரித்த காலம் பின்னுக்குத்தள்ளப்பட்டு ,செம ஹாட்டான பேயாக த்ரிஷா. ஆண்ட்ரியா ,லட்சுமிராய் போன்ற கலைச்சேவகப் பேய்களால் கிறங்கடிக்கப்படும் பாக்கியம் பெற்று இருகிறார்கள் . 

5. மிக முக்கியம் எல்லோருக்குமான நன்மையான இன்னொரு விசயம் ! தமிழே தெரியாத பல சுமாரான நடிகைகள் கூடப் பேய் மேக்கப்பில் மிக அழகாகத் தெரிகிறார்கள் என்பது கூடுதல் சந்தோசம் .அதிலும் விண்ணைத்தாண்டி வந்த ”வாத்வாக்”நடிகை ஆர்யாவுக்கா விசாலுக்கா என்று யாருக்குன்னே தெரியாத அளவுக்கு அந்த நாயகி - மோகினி என்று என்  கண்ணே பட்டும் அளவுக்குப் பேய் மேக்கப்பில் நடிக்கிறார்கள் இல்லை மனதைக் கரைக்கிறார்கள் ! . பெரிய பட்ஜெட் படமாம் லண்டனிலில் தயார் ஆவதால் இதற்கு நாம் அடிமைப்பட வாய்ப்புகள் எக்கசக்கம் ! 

சரி அவர்கள் கலைச்சேவை ஒருபக்கம் கிடக்கட்டும் .

உண்மையிலே பேய் இருக்க்க்க்க்க்கா ……?  

                        எனக்கும் இது தேவையான்னு தோணிச்சு. ஆனால் ஏதாவது ஒரு மெசேஜ் இந்த சமூகத்திற்கு வழங்கச்சொல்லி உள்ளுணர்வு சொல்லியதால் தட்டாமல் அடுத்த பதிவில் சொல்லி முடிக்கிறேன். 

”பேய்” நல்லது.. இரண்டாம் பாகம், திங்கள் கிழமை உங்களைப் பிடிக்க ! ... வரும் !!