சனி, 3 டிசம்பர், 2016

மாவீரன் கிட்டு - திரைச்சிந்தனை


              இயக்குனர் சுசீந்தரன் தன்னுடைய திரைக்கதையின் மேலுள்ள அசாத்திய நம்பிக்கையை, மாவீரன் கிட்டு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.இந்தப்படத்தின் மூலம் வெகுநாள் தான் சுமந்து வந்த தன்னுடைய சொந்த ஊரின் வலியை இங்கு நம் முன் செல்லுலாயிடு வடிவில் இறக்கி வைத்து இருக்கிறார் .இயல்பான ஒரு கற்பனைக் கதையையைச் சொல்வதற்கும் 29 வருடம் பின்னோக்கிச் சென்று ஒரு பீரியட் ஃபிலிம் மூலம் அந்தத் தளத்தின் கதாப்பாத்திரங்களின் தோற்றத்தில் , உடைகள் ,பொருட்கள் மூலம் கொண்டு வருவது மிகச் சவாலான வேலை .அதில் சுசீந்தரன் மெனெக்கெட்டு இருக்கிறார்.சாதிய வலியை அந்தத் திண்டுக்கல் மாவட்டத்தில் முப்பது வருடம் பிறந்து வாழ்ந்திருந்த எனக்குத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார் இயக்குனர். 

   
        காலத்தின் களத்தில் உள்ள பாத்திரங்களின் உணர்வைச் சொல்லுவதில்தான் மூலம் நம்மைப் பின்னோக்கி இழுத்துச்சென்று சுசீந்தரன் பாத்திரங்களுக்கு உயிர்கொடுக்கும் வேலையைப் பாடலாசிரியர் தோழர் யுகபாரதி அற்புதமாகச் செய்திருக்கிறார் .'உயிரெல்லாம் ஒண்ணு.' பாடல் வரிகள் அரங்கைச் சிலிர்க்க வைத்தன ! அதே போல வசனங்களில் பாத்திரங்களின் வயதுக்குத் தகுந்த வட்டாரப் பேச்சு வழக்கு மொழியையும் உயர்த்திப் பிடித்து இருக்கிறார்.இன்னும் கூட இங்கிட்டு அங்கிட்டு போன்ற என்ற அந்த வட்டார வார்த்தைச் சுருதிகள் சேர்ந்திருக்கலாம் ! 

         இவர்கள் இருவரின் உணர்வுகளும் இணைக்கும் வேலையைத் தனது
பின்னனி இசை மூலம் இசையமைப்பாளார் இமான் ஒரு யுத்தமே நடத்தியிருக்கிறார் . நடாப் புயல் மழைத் திரையரங்குக்கு வெளியே என்றால் இமான் இசை முழக்கம் திரையரங்கு முழுதும் பேக்கிரவுண்ட் ஸ்கோரில் முதல் காட்சியில் தொடங்கிப் படம் முழுதும் நிரம்பி வழிகிறது. பாடல்களுக்கான இசையமைப்பில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு தனிக் கச்சேரியே செய்துவிட்டார் இந்தப்படத்தில் இமான். அற்புதமான பாடல்களைக் கதையமைப்பின் போக்கில் இல்லாமல் சில இடங்களில் நெருடினாலும் ,காட்சியமைப்பில் பாடல்கள் இன்னும் வெகுகாலம் பேசப்படும் . 

         
ஒளிப்பதிவாளார் ஏஆர் சூர்யா, ஒரு வரலாற்று நிகழ்வைப் படமாக்கும் ஒளிப்பதிவின் கோணத்தில் நவீனத்தின் சாயலைத் தவிர்க்க மிகக் கவனமாக நிதானமாக நின்று இருக்கிறார்.சில இடத்தேர்வில் இந்த இடத்தில் என்ன நடக்கப் போகிறது ஏன் இந்தக் கோணம் என்று நம்முள் கேள்விகள் குறுகுறுக்கச் செய்கிறார்.மிக இயல்பாகக் காட்சி அமைய நிச்சயம் இயக்குனரோடு போராடியிருப்பார் என்பதைக் காட்சிகள் சொல்கிறது . பல இடங்களில் கதையைப் பேச விட்டுக் கேமிராவைக் கைகட்டி நிற்கும் கலையை ஒளிப்பதிவாளர் செய்திருக்கிறார்.உதாரணம் ஸ்ரீதிவ்யாவின் தந்தை கொல்லப்படும் பொழுது ! 

                 சுசீந்தரன் இந்தக்கதையைக் கமர்சியலாகச் சொல்ல 200 சதவிகிதம்
முயன்று இருப்பதாகத் தன்னுடைய பேட்டியில் ஒருமுறை சொல்லியிருந்தார் .அது அவரின் பாத்திரங்களின் தேர்வில் வெகு நேர்த்தியாகச் செய்து இருக்கிறார்.ஆனால் திரைக்கதையில் அவருக்கே உரிய வேகத்தின் பொருந்தா இணைப்புகள் சில முன் நிற்கின்றன .உதாரணம் 1987 ம் ஆண்டு 24 டிசம்பர் மாதம் அதிகாலை 3.30க்கு இறந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறந்த செய்தியை அப்போது 17 வயதான எனக்குக் காலை ஏழுமணிக்குள் தெரிந்து விட்டது .அது கல்லூரித் தொடங்கிய பின்னர்த் தெரிந்து அறிவிப்பது போல இருப்பது கொஞ்சம் முரண் .அப்புறம் விஷ்ணுவிஷாலைத் தேடி வரும் திரண்டு வருல் காவல்துறை மிகச்சுலபமாக அதுவும் ஸ்ரீதிவ்யாவோடு தப்பிச்சென்று கண்ணில் மண் தூவுவது , கதையின் போக்குக் கருதி சூரியின் காட்சிகள் நீக்கப்பட்ட உணர்வுப் பல இடங்களில் எழுகிறது. ஒருவேளை படத்தில் நகைச்சுவை இருக்கிறது என்ற அடையாளம் காட்டவே சூரி வந்து ,வந்து செல்வதாகத் தெரிகிறது . 

                  ஆனால் இவையெல்லாம் புறம் தள்ளித் தன்னுடைய கதையின், ஆதிக்கச் சாதித்தன்மைக் கருவை அதன் வீர்யமும் குறையாமல் அதன் போக்கில் சொல்ல வெகு பிரயர்த்தனப்பட்டு இருக்கிறார் இயக்குனர் .படத்தின் வில்லனாகச் சாதிய ரத்தத்தின் வேட்கைதான் என்பதை மிக நுட்பமாகவும் சொல்லியிருக்கிறார் .சாதிதான் தன் வாழ்க்கை என்று தந்தையே தன் மகளைக் கொல்லும் காட்சிகள் நம்மை அதன் கோர முகத்தின் முன் நிறுத்துகிறது . வெகு காலத்திற்குப் பிறகு கதாநாயகன் தியாகத்தில் ஒரு கதைத் துணிவாகப் பேசப்பட்டு இருக்கிறது . 


              சுசீந்தரன் தன்னுடைய அப்பாவின் நண்பரான இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர் சந்திரசாமி அவர்களை மட்டுமல்ல, திரைப்படத்தைப் பார்க்க வந்த யாரையும் ஏமாற்றாமல் ஒரு அற்புதமான படைப்பைத் தந்து இருக்கிறார் .அதே சமயம் 2016 ஆம் ஆண்டின் சிறந்த விருதுகளைப் பெறும் வரிசையில் முன் நிற்கும் படமாக மாவீரன் கிட்டுப் பலம் பொருந்தியவர் என்பதையும் நம்பலாம். புதன், 23 நவம்பர், 2016

திருப்பூர் - உலகத் திரைப்பட விழா Waiff


                  வெகு காலம் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஒரு எதிர்பார்ப்பைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்களின் சங்கம் நிறைவேற்றியது .உலகச் சினிமாவைப் பார்ப்பது சினிமாவை ரசிப்பவர்களுக்கு மட்டுமல்ல கலாச்சார ஆர்வலர்களுக்கும் ஒரு நல்ல விருந்து .ஒரே கூரையின் கீழ் உலகத்தரத்தின் பலவகையான செல்லுலாயிடுச் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்படுவது அற்புதமான விசயம்.

உலகச் சினிமாவை ஏன் பார்க்கவேண்டும் ? 

               சில சமயம் நம்ம ஊர்ப் படங்களைப் பார்க்கவே நேரம் இல்லாத போது உலகத்தரம் என்று யாரோ முடிவு செய்யும் சினிமா என்ன சொல்லி விடப்போகிறது என்ற முரண்பாடு பலருக்கும் வருவதற்குக் காரணம் சினிமா அடைந்து இருக்கும் அல்லது எட்டியிருக்கும் எல்லைகளின் விரிவு பற்றிய அறிதல்தான்.முக்கியமாக மனிதம் எப்படிச் சினிமா என்ற சாரளத்தின் வழியே புரிந்து கொள்ளப்படுகிறது என்ற அடையாளங்கள் இங்குப் பதிவு செய்யப்படுகிறது வேடிக்கைப் பார்க்கும் தளம் இது என்பதாக எடுத்துக்கொள்ளலாம். அப்படியானால் உலகச் சினிமாப் பார்ப்பவர்களுக்குத் தலையில் ஏழியனைப்போல ஆண்டெனா முளைத்து விடுமா ? என்ற அப்பாவித்தனமான கேள்விகளும் இங்கு உண்டு .இதெல்லாம் நானும் கேட்டு இருக்கிறேன்.ஒருவேளை எடிட்டிங் இல்லாமல் அப்படியே காட்டுவதால் தேடித் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் பண்ணிக்கொண்டதும் உண்டு. 

           மொத்தம் ஐந்து நாட்களில் நவ 18-22 வரை, 14 நாட்டுப் படங்கள் டைமண்ட் திரையங்கில் காட்சிப்படுத்தப்பட்டன.அதில் இந்தியாவின் ஹிந்தி ,மராத்தி உட்பட 23 படங்கள் அடங்கிப்போயின.ஒவ்வொரு நாளும் முதல் நாள் படம் பற்றிய விமர்சனம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க அன்பர்களால் அலசப்பட்டது .அதே போல ஒவ்வொரு திரையிடப்படவிருக்கும் திரைப்படம் அறிமுகம் சொல்லப்பட்டது.அது மிகத்துல்லியமாக உலகத்திரைப்படங்கள் பற்றிய அவர்கள் பார்வை அழகாக இருந்தது.சிறப்பான விசயம் இது . 


முதல் படம் : October 
அமெரிக்காவின் ஜான் ரீட் எழுதிய 1928 – உலகைக் குலுக்கியப் பத்து நாட்கள் என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை 1927-ல் செர்ஜி ஐசன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட கருப்பு வெள்ளை மவுனப் படம் இது. 

ரஷ்யாவில் நடந்த, முதல் புரட்சிக்குப் பின் ஜார் மன்னனை விரட்டி முதலாளிகள் மென்ஷ்விக்குகள் ஆட்சியில் அமர்த்தியதால் போல்ஷ்விக்குகள் தாக்கப்படுகிறார்கள்.லெனின் தலைமறைவாகிப் போல்ஷ்விக்குகள் புரட்சியை நோக்கிய தங்கள் நகர்வைத் திட்டமிட்டு நடத்தி அக்டோபர் 26ல் புதிய அரசு நிறுவப்படுவதைப் பற்றிச் சித்தரிக்கும் நிகழ்ச்சித்தான் படம் .ரஷ்யப் புரட்சி பற்றிய சற்றே ஆர்வம் இருப்பவர்கள் இந்தப் படத்தை ரசித்திருக்க வாய்ப்பு இருக்கிறது . 

இது ஒரு ”புரட்சியின் தடங்கள் ” .. 


இரண்டாவது படம் : Waleza ,Man of Hope 

              போலந்தின் ஆண்ட்ரெஜ் வாஜ்டா இயக்கத்தில் 2013 ல் வெளியான இந்தப்படம் சென்ற படத்தின் நீட்சியாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.நாடுகள் மாறியிருந்தாலும் களம் என்னவோ புரட்சி ஆட்சிக் கலைப்புக்கு எதிரான மனித யுத்தங்கள்தான்.ஆனால் ஒரு சாதரண ஹார்பரில் எலெக்டிரிசியனாகப் பணிபுரிந்த உண்மை நாயகன் Lech Wałęsa வின் கதையை Robert Więckiewicz என்ற திரைநாயகன் மூலம் அற்புதமாகப் பேசப்பட்ட படம். 

        நம் இந்திய நாயகிகளைத் தூக்கிச் சாப்பிடும் அற்புதமான வேலையைக்
கதாநாயகனின் மனைவியாக நடித்த Agnieszka Grochowska அள்ளிக்கொள்கிறார் .கதையில் ஓரிடத்தில் Wałęsa க்கு நோபல் பரிசு பெறுவதற்குத் தனக்குப் பதிலாகத் தனது மனைவியை வாங்கி வர அனுப்புகிறார்.அதைப் பெற்றுத் தன் நாட்டுக்குத் திரும்பும் கதாநாயகியை அப்போதிருந்த அரசு அவர்களை அவமானப்படுத்தும் விதமாக ,
விமான நிலையப் பெண் அதிகாரிகள் முழு ஆடைகளையும் களைந்து சோதிக்கிறார்கள் .அவளது கடைசி உள்ளாடை panties ஐ கழற்றச் சொல்லும் போது அவளருகே திறந்த நிலையில் இருந்த நோபல் பரிசுப் பெட்டியை மூடிவிட்டு அதைக் கழற்றி அந்தப் பெட்டிமேல் போடும் காட்சி வெவ்வேறு உணர்வுகளை எழுப்புகிறது .ஆனால் அதில் எனக்குப் பிடித்த காட்சி அந்தச் சோதனைக்குப் பின் வெளியே வந்து கணவன் முன் தனக்குள் பொங்கிவந்த அழுகையைச் சமாளிக்கும் விதத்தில் Agnieszka Grochowska ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னும் பெண் எங்கே இருக்கிறாள் என்று நெற்றிப்பொட்டுச் சுடுமளவுக்குக் காட்சியமைக்கப்பட்டு இருக்கும்.

இது ஒரு ”கலகத்தின் விளைவு” . 


மூன்றாவது படம் : Where to invade next 

              2015 ல் அமெரிகாவின் Michael Francis Moore இயக்கி, நடித்த டாக்குமெண்டரிப் படம் .ஆனால் ஆவணப்படம் என்று மட்டும் சொல்லி விடமுடியாது .ஒரு பயணப் புத்தகம் வாசிக்கும் கிளுகிளுப்பை அமெரிக்க பாணியில் சொல்லியிருக்கிறார்.ஆனால் ஒரு திரைப்படத்தின் வாயிலாகத் தன் நாட்டுக்கு மட்டுமல்ல உலகுக்கே அற்புதமான செய்தியை எட்டு நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் உரிமைப் பெண்கள் உரிமை ,பாலியல்கல்வியின் பயன்,கருக்கலைப்பு,போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கை, இலவசக் குழந்தைகள் கல்வித் தொடங்கி உயர்கல்வி வரையும் படம் பேசுகிறது . 

ஒரே வரியில் கதை சொல்ல வேண்டும் என்றால் நம் பாரதி அன்று சொன்ன ”எட்டுத்திசை எங்கும் சென்று கொண்டு வந்து சேர்ப்பீர் ”என்பதை எட்டு நாடுகள் சென்று Moore புரிந்து கொண்டு இருக்கிறார் அவ்வளவே ! 

இது ஒரு ”இனிப்புத் தடவியக் கசப்பு மருந்து “ 


நான்காவது படம் : Trumbo 
         ஜே ரோச் இயக்கிய அமெரிக்கப் படம். இதுவும் என்ற அமெரிக்கக் கதாசிரியரும் ,திரைக்கதைக் கர்த்தாவுமான James Dalton Trumbo அமெரிக்கக் கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர் என்ற காரணத்திற்காகத் திரைத்துறை வாழ்வியலில் அவர் சந்திக்கும் வலிகளும் ,உயர்வுகளும் மையைமாகப் பின்னப்பட்ட உண்மைக்கதை.Trumbo ஆவாக Bryan Lee Cranston நடித்து இருக்கிறார்.இவர் எனக்குச் சில இடங்களில் அன்பே சிவம் கமலை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார். 

        இது ஒரு படம் என்று பேச முடியாது .அந்த அளவுக்கு ஒரு அடுத்த வீட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்த அனுபவம் தருவது போல அற்புதமான திரைக்கதை . 

இது ஒரு “ பொறுமையின் பரிசு ” 


ஐந்தாவது படம் : Masan ( Hindi ) 

          என்ன இருந்தாலும் ஒரு இந்தியப்படம் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம் சொந்த வீட்டுக்குள் ஹாயாகக் கால் நீட்டித் தூங்கும்போது கிடைக்கும் போல அந்தச் சந்தோசமே தனிதான். 

          இயக்குனர் Neeraj Ghaywan ஒரு இந்தியர் .மெல்ல மெல்லத்தான் இந்தத் திரைத்துறைக்குள் பிரவேசித்து இருக்கிறார்.காட்சிப் படுத்துதலில் பல பெரிய இயக்குனர்களின் டச் இவரிடம் பிரிக்க முடியாத அளவுக்குப் பரவிப் புதைந்து வெளிப்படுகிறது . 

               நாயகி Richa Chadda தந்தையாக நடித்த Sanjay Mishra எனக்கு நம் ராதாரவியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார். இன்னொரு ஜோடியான Vicky Kaushal - Shweta Tripathi அற்புதமான நடிப்பில் கதைக்குள் நம்மை நனைத்து விடுகிறார்கள் 
                    எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல முதல் பத்து நிமிடத்திற்குள் கதை சொல்லப்பட்டு விடுகிறது . நிகழ்காலத்தின் கல்லூரி மாணவர்களின் காதலின் அழகை .காமத்தை , வலிகளைச் சொல்லும் படம் .ஆனால் சோகம் மட்டும் வாழ்க்கையில்லை காதலில் தங்கள் துணையை வழியிலேயே இழந்தவர்கள் அடுத்து என்ன செய்கிறார்கள் என்ற நம்பிக்கையைப் பேசும் படம் . 
                 நாயகி Richa Chadda தன்னைக் காதலித்த ஒரே குற்றத்திற்காக இறந்து போன காதலன் வீடு சென்று தனக்கு ஒரு பிரயசித்தம் தேடிக்கொள்ள முயலும் காட்சியில் ,காதலன் வீட்டுக்குள் சென்று தன்னை யாரெனெ அறிமுக்கப்படுத்திக் கொள்வதுவும் அதனால் காதலனின் அம்மா தன் கோப்பத்தை வெளிப்படுத்துவதை வெறும் குரல் பதிவாக மட்டுமே பதிவு செய்து காமிரா வீட்டுக்கு வெளியே விலகி நிற்பது அற்புதமான மறக்க முடியாத காட்சி. 

இது ஒரு “ இளமை - காதல் - இழப்பு - வாழ்க்கை “ 


என் ஜன்னலுக்கு வெளியே ...

               நான் 23 படங்களும் பார்க்க முடியாவிட்டாலும் இந்த ஒரு நாள் அனுபவத்தின் மூலம் சினிமாவை நாம் பொழுதுப் போக்கு என்ற ஒரே அஞ்சரைப் பெட்டிக்குள் அடக்கி விட்டோமோ என்ற ஒரு உறுத்தல் உலகச் சினிமாப் பார்ப்பவர்கள் உணருவார்கள் .காரணம் இங்கு நான் அவர் விசிறி நீ இவர் ரெக்கை என்று கட் அவுட்டுகளுக்குப் பாலாபிசேகம் பண்ணிக்கொண்டும் ,அதிலிருந்து கீழே விழுந்து ,அவசர வார்டில் இடம் தேடிக்கொண்டும் ,படம்வெளியாகும் முன் அந்த மதத்தைப்பற்றி இழிக்கிறது என்று பேசிக்கொண்டு பணம் என்ற பரமபத விளையாட்டில் நகர்ந்து கொண்டு இருக்கிறோம் .ஆனால் உலகப்படங்கள் ஒரு அரசில்,சமூகத்தில் ,மக்களின் வாழ்வியலில் எத்தனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அழுந்தச் சொல்கிறது உலக சினிமா என்ற ஒற்றைச் சாரளம் . 

            வெளியே உலக சினிமா என்ற மழை பெய்தது. முழுவதுமாக  நனைய முடியாவிட்டாலும் என் சன்னலுக்கு வெளியே கை நீட்டி நனைத்துக் கொண்டேன் …
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்களின் சங்கத்திற்கு என் விண்ணப்பம்... 

1.அற்புதமான இம்மாதிரி உலகத் திரைப்பட விழாவை ஐந்து நாள் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்புத் திருப்பூரில் எல்லோருக்கும் அமையுமா ? என்ற பெரும் கேள்வி என் முன்னால் நிற்கிறது .தினமும் மாலை இரண்டு காட்சிகளைத் திரையரங்கோடு ஒப்பந்தம் போட்டுக் காண்பிக்கப்படும் போது இன்னும் பலருக்கும் சென்று சேரும் என்ற என் அபிப்ராயம் . 

2.அடுத்த முறை என் போன்ற சாதரண மொழியறிவு உள்ளவர்களுக்காகப் படங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை - சப் டைட்டிலைச் சாத்தியப்படுத்துங்கள் .அது இன்னும் வெகுதூரம் பார்ப்பவனின் அலை நீளத்திற்குள் பயணிக்கும் என்பது எண்ணம். 

3.திரைப்படங்கள் பற்றிய ஒரு கைடு (ரூ-20) வழங்கியிருக்கிறீர்கள் .அதில் படத்தின் கதை ,இயக்குனர் மட்டும் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதன் நடிகர்களையும் பற்றிப் பேசியிருக்கலாமே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது. 

வெள்ளி, 18 நவம்பர், 2016

தப்பா எழுதினதிற்கு மார்க் வாங்கக் கூடாதுப்பா !

                   


  முருகனின் அறுபடை வீடுகளில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமி மலை காவிரியும், அரசலாறும் பாய்ந்து  குளுமையும் வளமும் உள்ள  நான்காவது வீடு என்பது எல்லோருக்கும் தெரியும் . கோவில் அறுபது அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோவிலின் அறுபது படிகளும் - தமிழ் ஆண்டுகள் அறுபதைப் குறிப்பிடுகிறது என்பதை  அங்கு போய் கவனித்து வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.அதில் 28 படிக்கு ஒரு சிறப்பு அம்சம் இருப்பதை ஞாபகம் வைத்து இருக்கிறீர்களா ? இல்லையென்றால் நீங்கள் இந்தக் கதை படிக்கவேண்டும் !

                            அது வேறு ஒன்றுமில்லை. கைலாசத்தின் வாசல் முன் விளையாடிக் கொண்டிருந்த நம் முருகப்பெருமானை  அங்கு சிவபெருமானை தரிசிக்கவந்த பிரம்மன் கண்டு கொள்ளாமல் சென்று, கோபத்தை சம்பாதித்தால் முருகன் பிரம்மனை அழைத்து வேதங்களை ஒப்பிக்கச் சொல்லி இம்போசிசன் கொடுக்க  , பிரம்மன் ஓம் என ஆரம்பிக்கவும் முருகன் நிறுத்தி ஓம் என்பதன் பொருளைக் கேட்க, பிரம்மனுக்குத்  தெரியாமல் போக இது கூட தெரியாமல்  எப்படி படைப்புத் தொழில் எவ்வாறு செய்ய முடியும் என கேட்டு பிரம்மனை சிறையில் அடைத்து படைப்புத் தொழிலைதானே செய்தாராம்  .( சிவ பெருமான் முருகன் என்று இங்கு நான் சொல்வது எதாவது ஓரு அரசியல் கட்சியின் சொந்த விசயத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்தினால் மன்னிக்கவும் .அதுவல்ல ! )

                              உடனே ஓடி வந்த சிவபெருமான் பிரம்மாவை விடுவிக்குமாறு முருகனை சொன்னாராம்.சரி  பிரம்மன் பிரணவம் சொல்லவில்லை ஃபெயிலாகி விட்டார் எங்கே நீ பிரணவத்தின் பொருளை சொல்லு பார்க்கலாம் என்று  சிவன் கேட்கவும், முருகன் தந்தைக்கே ஆசானாகி பிரணவத்தின் பொருளை இந்த சுவாமி மலையின் 28 ஆவது வதுபடியில் நடுச்சுற்றில் சிவ பெருமானுக்கு முருகன் உபதேசித்தாராம்.அதாவது  தகப்பனுக்கே முருகன் உபதேசித்ததால் அவர் தகப்பன் சுவாமி ஆனார்  என்கிறது புராணம் .அங்கு மட்டுமா நடந்தது தினமும் நம் வீடுகளிலும் நடக்கத்தான் செய்கிறது அவசரமான இந்த உலகத்தில் சம்பாதிப்பு மட்டும்தான் வாழ்க்கை என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டு இருக்கும் நம்மைப் போன்ற பெற்றோர்களுக்கு வீட்டுகுழந்தைகள் தினமும் எதாவது ஒரு பாடம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் .குழந்தைகள்  தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் வேண்டுமானால் நூற்றுக்கு குறைவாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கையில் அவர்களிடமிருந்து நாம் தவறவிடும் பாடத்தால் வாழ்க்கையையே தொலைத்து விட்டு கடந்து போய்கொண்டு இருக்கிறோம் பல சமயங்களில். அது மாதிரி ஒரு சம்பவத்தில் உங்களோடு நானும் ...  


           மூன்று மாதம் முன்பு ஒரு நாள் ,அலுவலகம் விட்டுக்குள் நுழைந்தவுடன் , அப்பா ஸ்கூல்ல உங்கள வரச்சொன்னாங்க என்றான் பையன் . கடந்த இரண்டு வருடம் போராடி இப்போதுதான் ஐந்தாவது வகுப்புக்கு இடம் கிடைத்து அப்பாடா என்று மூச்சு விடுவதற்குள்  நான்காவது முறையாகக் கூப்பிட்டு விட்டார்கள் .

            முதல் முறையாகப் போன போது உங்கள் பையனின் நான்காவது படித்த ஸ்கூல்ல இறுதியாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் வாங்கி வர வேண்டும் என்றார்கள் .பழைய பள்ளிக்குப் போனேன் .பொதுவாகவே இந்தப்பள்ளி வேண்டாம் என்று வெளியேறிய பிறகு திரும்பிப் போனால் என்ன மரியாதை இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் .ஆனால் பரவாயில்லை .ஒரே ஒரு முறை அலையவிட்டு மதிப்பெண் பட்டியலுக்குப் பதிலாக இப்போதெல்லாம் க்ரேடு சிஸ்டம்தான் என்று குறித்துக் கொடுத்தனுப்பினார்கள் .அதைப் புதிய பள்ளி ஒத்துக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியது .எங்களுக்குப் பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று அடம் பிடித்தது .

                 மீண்டும் பழைய பள்ளிக்குப் போன போது ,அலுவலகத்தில் பணிபுரியும் பெண் சாவகாசமாகத் தின்று கொண்டிருந்த பருப்பு வடையைக் கீழே வைத்து விட்டு அதெல்லாம் தேடி எடுத்துத்தான் தரவேண்டும் என்று சலித்துக்கொண்டு, இரண்டு நாள் கழித்து வரச்சொன்னது.அதையும் வாங்கிக் கொடுத்த வார இறுதியில் , மூன்றாவது முறை EMIS - Educational Management Information System எண் வேண்டும் என்பதைக் கேட்டு அனுப்பினார்கள் .அது நாம் பள்ளியில் சேர்க்கும் போதே மாற்றுச் சான்றிதழ் மேல் குறிப்பிட்டு இருக்கும் 16 எண்கள் கொண்டது .தாங்கள் வாங்கி வைத்துக் கொண்டதை மீண்டும் எடுத்துப் பார்க்கக் கை வலிக்கும் போல ! என்ன செய்வது ? அதையும் கொடுத்துத் தொலைத்து விட்டு வந்தேன் .இப்போது நான்காவது முறையாக ... 

                 எதற்காக இருக்கும் ? எனக்குச் சற்று லேசாய் உதறல் .ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் எதுக்குடா என்றதற்குப் பையன் மீண்டும் அதே வார்த்தை சொன்னான்.அடுத்த நாள் மாலை பள்ளியிலிருந்து அழைத்துப் வரப் போன போது ,உங்க பையனுக்கு அபாக்கஸ் , ஹேண்ட் ரைட்டிங்,ஹிந்தி எக்ஸாம் வைத்துப் பார்த்தோம் .எங்களுக்கு ஒரு ஸ்டாண்டர் இருக்கு நாங்க எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. அபாக்கஸ் மட்டும் பள்ளியிலேயே டூயூசன் எடுக்கிறோம் .பணம் ஆஃபிசில் கட்டி விடுங்கள் என்றார்கள் . ஹேண்ட் ரைட்டிங் சனிக்கிழமை மட்டும் .அதாவது அது கட்டாயம் என்று சொல்லாமல் சொன்னார்கள் .ஹிந்தி எங்காவது வெளியே சேர்த்து விட்டுக்கொள்ளுங்கள் என்றார்கள் .எனக்கு ஒன்றுமே புரியவில்லை . மூன்றாவது வகுப்பு வரை அழகாக எழுதிக்கொண்டு பிறகு இப்போதெல்லாம எழுத்து சுமாராய்த்தான் எழுதுகிறான்.ஹிந்திச் சுமாராய்த்தான் வரும் . ஆனால் கடைசி வரை பழைய பள்ளியில் அபாக்கஸ் எக்ஸாமில் நூற்றுக்கு நூறு வாங்கிவிடுவான் .இது இல்லாமல் பழைய பள்ளி நடந்த பல போட்டியில் நிறையச் சான்றிதழ் வாங்கியிருக்கிறான் .அப்புறம் எப்படி இங்கு இது போதாது என்று புறக்கணிக்கிறார்கள் ? காசு பண்ணும் வேலையா ? நமக்குத்தான் இப்படிப் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டது என்ற சாமான்யப் பெற்றோர்கள் போலத் தகுதிக்கு மீறிய ஆசையில் அதிக டொனேசன் கொடுத்துச் சேர்த்து விட்டு ,ஏமாந்து விட்டோமா ? 

                     பையன் படித்த பழைய பள்ளியின் மிஸ் ஒருவர் வீடு போனேன் .அவர்கள் சொன்ன விசயம் அதிர்ச்சியாக இருந்தது .ஆறாவது வகுப்பு வரை எல்லாத் தனியார் பள்ளிகளிலும் கேட்கிற தொகைக் கொடுக்கவும் , பக்கத்து வீடு எதிர் வீட்டில் என் பையன் ஒன்பது பாடத்திலும் முதல் க்ரேடு என்று ஜம்பம் பேசும் பெற்றோர்களின் அபிமானத்தை அள்ளிக்கொள்ளவும் , தேர்வுக்கு வரப்போகும் வினாக்களைக் குறித்து அனுப்புவது ,தேர்வு நடக்கும் ஹாலில் விடையைச் எழுதச் சொல்லித்தருவது ,எதாவது ஒரு போட்டி நடத்திச் சான்றிதழ் ,மெடல்கள் கொடுத்து நம்ம பிள்ளையும் பக்கா என்று மார்த் தட்டிக்கொள்ளத் தூண்டுகிறார்கள் .இதை நாம் மற்றவர்களிடம் சொல்லி நமக்குத் தெரியாமல் அந்தப் பள்ளிக்குக் குழந்தைகளைச் சேர்க்கையை அதிகரிக்கவும் நம்மை ஏஜெண்டுகளாக்கி விடுகிறார்கள் என்ற தந்திரம் அப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்தது .இது தெரியாமல் விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் என்று அள்ளிக் கொடுக்கும் அளவுக்கு நம் பிள்ளை நல்லாப் படிக்கிறான் என்ற பெற்றொர்களின் மனப்பான்மையைக் காசாக்கிக் கொள்கிறார்கள் .பிள்ளைகளின் திறமை அடுத்தப் பள்ளிக்கு மாற்றும் போது கைப் பிள்ளை வடிவேல் சட்டை போல எல்லாப் பக்கமும் கிழிந்து தொங்குகிறது !


                     இந்தப் புதிய பள்ளியில் முதல் காலாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியலை வகுப்பில் பெற்றொர்களை அழைத்துவரச்சொல்லிக் கொடுக்கிறார்கள் .எந்தப் பாடத்தில் ஏன் குறைவாக இருக்கிறான் என்று நம் முன்னே அவனிடம் விசாரணை நடக்கிறது .அதற்குப் போதிய ஆலோசனை வழங்குகிறார்கள் .பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு தொடர்பை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள் . இதுவரை பழைய பள்ளிக்கு ஒருமுறை கூட வாய்ப்புத் தந்தது இல்லை .அங்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெற்றொர்களுக்குக் கூட்டம் போடுவார்கள் .யாராவது புகழ்ந்து பேசினால் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற ஏ.ஆர். ரகுமான் அளவுக்கு உயர்ந்து நிற்பார்கள் .கொஞ்சம் அது இப்படி இது அப்படி என்று ஆரம்பிப்பவர்களைத் தனியே வந்து அலுவலகத்தில் சந்திக்கச் சொல்லி ஆஸ்கருக்குப் போன தமிழ் படத்தைப்போலத் திருப்பி அனுப்பி விடுவார்கள் .

                  போன வாரம் புதிய பள்ளியில் அம்மாமார்களுக்குச் சமையல் போட்டியும் , கோளப்போட்டியும் வைத்து இருந்தார்கள் .அப்பாமார்களுக்குக் கட்டுரைப் போட்டி வைத்து மூன்றுவிதமான தலைப்புக் கொடுத்தார்கள் .நான் மிகச் சிரத்தையாக நிறையக் குறிப்புகளைத் தேற்றிக்கொண்டு ஒரு மணி நேரத்தில் ஏழுபக்கம் எழுதி, வழக்கம் போலக் கையில் இருக்கும் பேப்பரைப் புடுங்கும்வரை எழுதித் தள்ளித்தான் வந்து இருக்கிறேன் .அடுத்த வரம் முடிவு சொல்வார்களாம். எப்படி எழுதினீங்கன்னு பையன் விலா வரியாகக் கேட்டான் .சொன்னேன் .பராவாயில்லை இரண்டாவது இடமாவது கிடைக்கும் என்று பெஸ்ட் ஆஃப் லக் சொன்னான் .எனக்கு மார்க் போட அவனுக்கும் காலம் ஒரு வாய்ப்பைக் கொடுக்கத்தான் செய்து இருக்கிறது .நல்ல வேளை இரண்டாவது இடமாவது சொன்னானே?

                நேற்று இரண்டாவது இடைத்தேர்வு மதிப்பெண் போட்டுப் பேப்பர்கள் கொடுத்து அனுப்பியிருந்தார்கள் .ஒன்பது பேப்பரில் ஏழுப்பாடத்தில் தொன்னூறுக்கு மேலேயும் ,வழக்கம் போல ஹிந்தியில் 72ம் சமூக அறிவியலில் மட்டும் 100 என்று போட்டு அதன் மேல் சிவப்பு மையில் திருத்தப்பட்டு 98 என்று போட்டு இருந்தது . என்ன ஆச்சுடா என்றதற்கு , ஒரு மிஸ்டேக் இருந்தது போய்க் காட்டி என் மார்க்கைக் குறைத்துக்கொண்டேன் என்றான் .ஏண்டா 100 போட்டதற்கு அப்புறம் சந்தோசப்படாம 98 ஆக்கிட்டே என்றேன் நான்  விடாபிடியாக ...

தப்பா எழுதினதிற்கு மார்க் வாங்கக் கூடாதுப்பா என்றான்  ப்ரணவ்   . 

வெள்ளி, 11 நவம்பர், 2016

கடவுளின் கையெழுத்து - மாயங்களின் சங்கமம் The Walled Garden of Truth
                  நம் புத்தகச் செஃல்பில் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இரண்டு புத்தகங்களைப் பற்றிப் பேசும் ஒஷோ முதலில் ஜப்பானிய ஜென் மாஸ்டரின் Kamahi Sosa வுடைய Mind Inscription’ :Hsin-hsin Ming விழிப்புணர்வுப் பாதை’ என்னும் புத்தகமும் ,


                  இரண்டாவதாக ஆஃப்கன் சூஃபி ஞானி Hakim Sanai யின் The Walled Garden of Truth: The Hadiqa ஹடிகாத் தோட்டம்’ என்னும் தத்துவக் கவிதைப் புத்தகமும் இடம் பெறுகிறது . ஓஷோவின் சொற்பொழிவுகள் Unio Mystica என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்தது அதை மாயங்களின் சங்கமம் - தொகுதி -1 ஐ தமிழாக்கம் செய்து தந்து இருக்கிறார் சுவாமி சியாமானந்த். அதைப்பற்றிய நம் பார்வைதான் இந்தப்பதிவு . 

கவி மூலம்... 

யார் இந்த ஹக்கிம்சனாய் ? 

                     தெற்கு ஆஃப்கானித்தின் கசானாவின் Ghazni சுல்தானாகிய Bahram Shah வின் அரசவைக் கவிஞர். ஹக்கிம்சனாய் சுல்தானோடு இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்து கொண்டு இருந்தபோது வழியில், சுற்றிலும் சுவர் சூழ்ந்த ஹடிகாத் தோட்டத்தைக் கடக்கும் போது ஒரு அற்புதமான இசையும் ஒலியும் கலந்து வருகிறது .போர்புரியும் உணர்வில் விரைந்து கொண்டிருந்த சுல்தான் பஹ்ரம் ஷாவின் மனநிலையை இது கவர்ந்து இழுத்தது.ஏற்கனவே சுல்தான் இசைப்பிரியர் ஆனால் அந்த ஒலியும் இசையும் இதுவரை அவர் கேட்டு உணராத , அறியாத ஒன்றிலிருந்து அறியாத ஒன்றுக்கு தொடர்பு கொள்ள முயற்சிப்பது போன்றதாக அந்த இசை வடிவம் இருப்பதாக உணர்ந்தார் .ஒரு கணம் தன்னையயும் அறியாமல் ஸ்தம்பிக்கச் செய்த அந்த இசைக்கும் பாட்டுக்கும் சொந்தக்காரர் யாரெனெ அறிய அந்த ஹடிகாத் தோட்டத்திற்குள் நுழைந்தார் சுல்தான்.அவரோடு நுழைந்தவர்களுல் இந்தப் புத்தகத்துக்குச் சொந்தமான ஹக்கிம்சனாயும் ஒருவர். 


                     உள்ளே லை-குர் என்ற சூஃபி ஞானி வரவேற்றார் .அவர்தான் அந்த ஹடிகாத் தோட்டதின் இசை,நடனம்,பாடல் அனைத்துக்கும் சொந்தக்காரர்.ஆனால் அவர் மக்களால் குடிகாரர் என்று அழைக்கப்பட்டார் . இஸ்லாத்தில் மதுரசம் குடிப்பது பாவம் குர்‍ஆன் 114 சூராக்களில் 5:90 ஆவது வசனம் பேசுகிறது .அப்படி இருந்தும் லை-குர் அதை மீறினாரா ? இல்லை என்கிறார் ஓஷோ.இது உலகத்தின் மொத்த ஞானிகள் அனைவரின் நடத்தைச் சார்ந்த விசயம் என்கிறார்.உண்மையாகவே ஆன்மீகம் தேடுபவர்களைத் தவிர மற்றவர்கள் கண்ணில் தன்னை அணுகவிடாமல் செய்யவே தன்னைப் பைத்தியமாகவோ ,அசிங்கமாகவோ , குடிகாரர்களாகவோ காட்டிக்கொள்கிறார்கள் .ஆனால் உண்மையில் லை-குர் போன்ற ஞானிகள் 24 மணி நேரமும் தெய்வீகத்தைக் குடித்துக்கொண்டு உலகை மறந்து வாழ்கிறார்கள் .அவர்கள் பேச்சு மற்றவர்களுக்கு வேண்டுமானால் உளறல்களாக இருக்கும் ஆனால் அவர்களைப்போலப் பரவசநிலையை அடைந்தவர்கள் இனம் கண்டுகொள்வார்கள் என்கிறார் ஓஷோ. 
 ஹடிகாத் தோட்டம் என்ற புத்தகம் பிறந்தது . 

                  லை-குர் சுல்தானையும் , ஹக்கிம்சனாயும் இந்தியா மீது படையெடுத்துச் செல்லும் செயலை, உங்கள் குருட்டுத்தனத்திற்கு வாழ்த்து என்று வார்த்தைப் பிரயோகம் செய்கிறார்.இது நாட்டையாளும் சுல்தானைக் கோபமூட்டுகிறது .ஆனால் சுல்தானின் அரசவைக் கவிஞர் ஹக்கிம்சனாயிற்குள் இதைக் கேட்டவுடன் அவருக்குள் ஏதோ ஒன்று மரணமடைந்து ஏதோ ஒன்று பிறந்தது போன்ற பேரின்ப அனுபவத்தைப் பொழிந்தது .லை-குர் என்ற ஞானியின் அகப்பார்வையால் ஆட்கொண்ட சனாய் சிரம் தாழ்த்திப் பாதம் தொட்டு வணங்கி மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் விட்டார் .ஹக்கிம்சனாய் அப்போதே மெக்காவிற்குப் புனிதப்பயணம் செய்யச் சுல்தானிடம் அனுமதிக் கேட்டார்.ஆனால் சுல்தான் அவரைத் தடுத்ததோடு நிற்காமல் தனது ராஜ்ஜியத்தில் பாதியை அளித்துத் தன் சகோதரியையும் திருமணம் செய்விக்கிறேன் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறார் .அதை மறுத்து சனாய் மெக்காவிற்குப் புனிதப்பயணம் செய்து விட்டு வரும்போது இந்த ஹடிகாத் தோட்டம் என்ற புத்தகம் பிறந்தது .மேலும் இந்தப்புத்தகம் எழுதப்படவில்லை. பிரபஞ்சத்திலிருந்து வந்த ஒரு பரிசுப்பொருள். ஹக்கின்சனாய் மூலம் லை-குர் என்ற பைத்தியக்கார மனிதருக்குத் தந்த நன்றி கடன்தான் இந்தThe Walled Garden of Truth: The Hadiqa ஹடிகாத் தோட்டம்’ என்கிறார் ஓஷோ . சூஃபிக்கள் இஸ்லாமியர்கள்தானே ?                  பொதுவாக ஞானிகள் எல்லா மதங்களில் இருந்தாலும் அவர்கள் தங்கள் மதங்களின் தன்மையை வலியுறுத்துவதில்லை .இன்னும் சொல்லப்போனால் எல்லா மதத்தின் ஞானிகளும் இறைக்கொள்கையில் ஒரு பொதுப்புள்ளியில் இணைந்தவர்களாகவே உணர முடிகிறது .தங்கள் மதங்களின் கொள்கைகளை விட்டுச் சற்றே விலகி நடக்கும் தோற்றம் கூட இருப்பதை அந்தந்த மதக்கொள்கையாளர்கள்  சொல்கிறார்கள் .சூஃபி ஞானிகளை இஸ்லாமியர்களா என்பது கேள்வியாக்குவதன் காரணம் இஸ்லாத்தில் இருப்பவர்கள் ஒன்று குர்ஆனைப் பின்பற்றவேண்டும் அல்லது முகமது நபி காட்டித்தந்த வழியில் நடக்க வேண்டும். ஆனால் சூஃபிக்கள் துறவு மேற்கொள்வது ,இறைவனை நெருங்குவதற்குக் கூட்டமாக அமர்ந்து கொண்டு இறைவனின் புகழைப் பாடுதல், இசையாலேயே இறைவனை நெருங்குகிறோம் என்று குர்ஆனுக்கு முகமது நபி கொடுக்காத பல பொறுள் விளக்கம் கொடுப்பது, இறந்த பெரியார்களைத் தர்ஹா கட்டி அங்கு இஸ்லாம் சொல்லாத சில செயல்கள் செய்வது ,மேலும் சாதாரண நிலையிலிருந்து தங்களை மேம்பட்டப் பக்குவப்பட்ட மக்களாக அவர்களைப் பாவித்துக் கொண்டு புதிதாகச் சில வணக்கங்களையும் கடைப் பிடிக்கின்றனர் என்ற இஸ்லாத்தின் மதக்கொள்கைகளுடன் கருத்து முரண்களும் இருக்கிறது ! 

ஞானிகளின் பாதைகள் எல்லோருக்கும் புரிய வேண்டும் அவசியம் இருப்பதை நிச்சயப்படுத்த முடியவில்லை . 


உன்னை நீயே கரைத்து விடு ! 

                 ஹக்கிம் சனாயின் ஆன்மீகக்கவிதைகளுக்கான விளக்கம் கொடுக்கும் வழியில் தனது லாவகமான ஆன்மீகப் பாதையை இயல்பான ஒன்றாக விளக்க முயல்கிறார் ஓஷோ.நாம் பொதுவாக நமக்கு வெளியே நடக்கும் செயல்களுக்கான முரண்பாடுகளை ,கஷ்டங்களை ,தொந்திரவுகளைத்தான் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதாகப் புரிந்து வைத்து இருக்கிறோம் .அதாவது வெளியே உள்ள நிகழ்வை மட்டுமே ஏற்றுக்கொள்வதைச் சாதாரணமாகப் பேசிவிடுகிறோம் .ஆனால் நீங்கள் யாராவது ஒரு நபரினால் நிராகரிக்கப்படும் போது ,அவர்கள் அன்பு கிடைக்காத போது ,அழகான பெண் திரும்பியே பார்க்காத போது வெளியில் உள்ள வலிகளை விட உள்ளே ஏற்படும் வலிகள்தான் அதிகம் .அதைப்பற்றிச் சனாயின் கவிதைகள் பேசுகின்றன.          உங்களுக்கு ஏற்படும் கோபம் ,சோகம், காமம் எதையும் வெறுத்து ஒதுக்காதீர்கள் அப்படிச் செய்தால் உங்களது சக்தியிலிருந்து வெளியேறி ,நீங்கள் உங்களுக்குள்ளேயே இரு பிரிவாகிப் பலவீனப்பட்டு விடுவீர்கள் என்கிறார் சனாய்.அந்தச் சோகம் ,கோபம், கவலை,எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொள்ளுங்கள் அதனால் அவையெல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள் .அது உங்களது சக்தி .உங்களுக்கு உங்களைக் காட்டும் பிரபஞ்சத்தின் சக்தி . அதனால் எதிலிருந்தும் வெளியேறாதீர்கள் .நல்லது ,கெட்டது ,கண்டனம்,மதிப்பீடுகள் ,தீர்ப்புகள் இல்லாமல் அப்படியே வெறுமெனெ ஏற்றுக்கொள்ளும்போது உங்களுக்குள் ’அறிதல்’நிகழ்கிறது அந்த அறிதலே கடவுள் என்கிறார் தீர்க்கமாகச் சனாய்.சுருக்கமாக உன்னோடு எதற்கும் சண்டையிடாதே சூஃபிக்கள் மொழியில் ஃபானா "to die before one dies" என்ற நிலைக்கு உன்னைக் கரைத்து விடு.எப்போது நிபந்தனையின்றி உன்னை ஏற்றுக்கொள்கிறாயோ அப்போது நீ கடவுளுக்கு நெருக்கமாகி விடுவாய் என்று ஆசீர்வதிக்கிறார்..இதே ஃபானா நிலையில்தான் முகமது நஃபி அவர்களுக்குக் குர்ஆன் இறங்கி வந்ததாகக் கூறப்படுகிறது . மௌனத்தின் ஓசை . 


        ஹக்கிம் சனாய் மிக அதிக மௌனத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.மௌனம் ஒரு விதைப் போன்றது .அப்படிப்பட்ட விதையிலிருந்து வரும் வார்த்தைகள் மலர்கள் போன்றவை.அதன் அமைதி அழகானவை .அந்தப்பாடல்கள் நறுமணத்தைச் சுமந்து வருகிறது என்கிறார்.புத்தர் பாகாவுதீன்,கபீர்,கிறிஸ்து,மகாவீரர்,சோசன் மற்றும் சனாய் இவர்களின் தாங்களாகப் பேசுவது கிடையாது .அவர்கள் வெற்று மூங்கில்கள் ,புல்லாங்குழல்கள் அவர்கள் மூலமாக வருகிற ஒரு பாடலைப் பாடுகிறார்கள்.ஆனால் அது அவர்களுக்குச் சொந்தமானது அல்ல.அந்தப்பாடலின் கீழே உள்ளக் கையெழுத்தானது கடவுளைடையதாக இருக்கிறது என்கிறார் இந்தக் கவிதைகளின் தெய்வீகத்தன்மை பற்றி ஓஷோ. 
ஓஷோவின் தனித்தன்மை

                 பொதுவாகவே ஓஷோ தன்னுடையை எல்லச் சொற்பொழிகளிலும் ஆன்மீகத்தன்மைக்குக் கொடுக்கும் முக்கியத்தோடு அன்றைய உலகின் நாட்டின் நிகழ்வுகளையும் ,அவருக்கே உரிய நகைச்சுவைக் கதைகளையும் ,சம்பவங்களையும் விட்டுக்கொடுக்கமாட்டார்.அதைவிட ஆன்மீகம் சார்ந்த விஞ்ஞான வளர்ச்சியினைக் குறிப்பிடத் தவறமாட்டார்.உதாரணமாக அவரின் கம்யூனின் சந்நியாசிக்குக் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது மனிதனின் மனதின் ஐந்து நிலைகளை அற்புதமாக எடுத்து விளக்குகிறார்.               இந்த உலகில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளப்பயன்படும் முதலாவது மனம் ,அறிதல்,நினைத்தல்,விளக்கம் கொடுத்தல் ,பகுத்தறிவு ,கொஞ்சம் விழிப்புணர்வு போன்ற நிர்வாகம் செய்வது உணர்வு மனம் - Conscious Mind.இதன் மூலம்தான் நாம் நம் உலகத்தைப் பார்க்கிறோம்.             அடுத்து அதற்குப் பின்னால் உணர்வு மனதை விட ஒன்பது மடங்கும பெரியதான மற்றும் ஒன்பது மடங்கு அதிகச் சக்தியுள்ளதுமான இரண்டாவது மனம், உணர்விழந்த மனம் Unconcious Mind நமது எல்லா உள்ளுணர்வுகள் ,அகச்செயல்கள் ,உடல் இயந்திரநுட்பங்கள் ,உணர்வுகள் ,உணர்ச்சிகள் முக்கியமாகப் பிறவிக்குணத்தைக் கொண்டுள்ளது .இந்த மனதின் Hypnosis ஆராய்ச்சியில்தான் சிக்மண்ட் ஃப்ராய்டு Sigmund Freud தன் வாழ்வையே அற்பணித்தார். 
           இதற்கும் பின்னால் உள்ள மிக முக்கியமான நவீன மனவியல் ஆராய்ச்சி நிபுணர்க் கார்ல் குஸ்டவ் ஜூங் karl kustav joonk அவர்களின் கண்டுபிடிப்பால் மூன்றாவது மனமான - திரண்ட உணர்விழந்த மனம் Collective unconscious mind மறைந்து இருப்பதாகவும் நம்முடைய ஒட்டுமொத்தக் கடந்த காலத்தையும் பதிவு செய்து வைத்துள்ளது என்கிறார்.கடந்த காலம் என்றால் நீங்கள் பிறந்ததிலிருந்து இன்று இந்தப் பதிவை வாசிக்கும் வரையுள்ள காலப்பதிவு அல்ல .உயிர்களின் ஆரம்பமாகக் சொல்லப்படும் ஓருயிர் தாவரம் முதல் தொடங்கிப் பரிணாம வளர்ச்சிப்பாதையில் இன்றுள்ள மனிதப்பிறவி வரை நாம் எண்பத்து நான்கு மில்லியன் பிறவிகளைக் கடந்து வந்த வரலாறுதான் நம் உண்மையான கடந்த காலம். அதன் ஒட்டுமொத்தப் பிறவிகளின் அனுபவங்களும் இந்த மனதில் அடங்கியுள்ளதாக அதன் பெருமையை எடுத்துச்சொல்கிறார் ஓஷோ.          இதுவரை மனதின் கீழேயுள்ள மூன்று அடுக்குகள் பற்றி மேலைநாட்டு விஞ்ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறது.ஆனால் உணர்வு மனதிற்கு இதற்கு மேலே உள்ள நான்காவது மனமான - மேன்மையான உணர்வு மனம் Super conscious Mind பற்றி நமது ஞானிகள் மட்டுமே பேசியிருப்பதாகவும் ,இது உணர்வு மனதை விடவும் ஒன்பது மடங்குப் பெரிதெனெப் பேசுகிறார் ஓஷோ.      இதற்கும் மேலேயுள்ள ஐந்தாவது மனமான - பிரபஞ்ச மனம் Universal conscious Mind இது தெய்வீக மனம் அல்லது கடவுள் மனம் அல்லது தாவோ என்று அழைக்கப்படுகிறது.இதுதான் தண்ணுணர்வின் இறுதி நிலை . விடைபெறும் போது ..                    ஓஷோ எந்த ஒரு நூலின் வாசிப்பிலும் இதுபோன்ற  அரிதான , அற்புதமான கருத்துக்களை நிறைந்து கிடப்பது தவிர்க்கவே முடியாது .இந்த நூலில் எழுத்துப்பிழை  இருப்பதைத் கவனித்து இருக்கலாம் . இன்னொன்று சொல்லியே ஆகவேண்டும் - மொழிபெயர்ப்பாளர் சுவாமி சியாமானந்த் பற்றி.. அவர் ஓஷோவின் நகைச்சுவைக் கதைகளை மொழிபெயர்க்கும்போது ஆபாசம் என்று சில வார்த்தைகளைத் தணிக்கைச் செய்துள்ளார் . அது அவர்ஓஷோ தணிக்கைக்கு அப்பாற்பட்டவர் என்பதை எப்படி மறந்து போனார் ?.  ஹக்கிம்சனாயின் கவிதை தரிசனம் . 


ஞானிக்கு நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் மிக உயர்ந்த நன்மையாகும் 
எந்த ஒரு தீமையும் கடவுளிடமிருந்து வருவதில்லை. 
அவரிடமிருந்து தீமை வருகிறது என்று நீ நினைத்தால், 
நீ அதை நன்மையாகப் பார்ப்பது நல்லது,

செவ்வாய், 8 நவம்பர், 2016

அம்மா சொந்தத்தில் பெண் !               வெகு நாளுக்குப் பிறகு உறவினர் ஒருவருடன் அலைபேசியில் உறவாடிக்கொண்டு இருக்கும் போது, சட்டெனெக் கால் தடுக்கி விழுந்த மாதிரி ஒரு தகவலைச் சொன்னார் .உனக்கு, உங்க அம்மா சொந்தத்தில் முத்தூரில் ஒரு பெண் பார்த்தோம் ஞாபகம் இருக்கா ? அந்தப் பெண்ணோட ... என்று அவர் தொடர்ந்து சொன்ன விசயங்கள் எல்லாமே கசப்பாக இருந்தது . ஏன் இவருடன் தொடர்பு கொண்டோம் என்று எங்கோ வலித்தது .


கை விட்ட குல தெய்வங்கள் ! 

        பஞ்சபாண்டவர்கள் போல நாங்கள் ஐந்து சகோதரர்கள் . முதல் அண்ணனுக்குப் பெண் பார்க்கும் முன் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றானத் தந்தை வழிச் சொந்தத்தில் பெண் பார்ப்பதாத் தாய் வழியில் பெண் பார்ப்பதா என்ற கேள்வி எங்கள் வீட்டில் எழவில்லை .காரணம் அப்பா வழியில் நெருங்கிய சொந்தம் என்று சொல்லிக்கொள்ளக் குலதெய்வமும், காவல் தெய்வமும் தவிர யாருமில்லை.எனவே இந்தப் பஞ்சாயத்தை எங்கள் காவல் தெய்வம் முன் ஒரு அமாவஸ்ய நாளில், பூக்கட்டிப் போட்டுக் குழந்தயை விட்டு எடுக்கச் செய்தார்கள் .கடவுள் மிக நல்லவர் .அந்த வாய்ப்பும் மறுத்து விட்டார்.அம்மாவுக்கு மிகவும் வருத்தம் .அம்மாவுக்கு அப்பா மேல் இருக்கும் வருத்ததையும் விட அவர் குலதெய்வம் மேல் இருந்த வருத்தம்  நான்கு அண்ணன்கள் திருமணம் நடக்கும் வரை இருந்தது.ஒவ்வொரு அண்ணன்கள் திருமணம் முடிந்தவுடனும் வந்து அழுவார்கள் . என் பக்கம் சொந்தமெல்லாம் தொடைச்சிடும் போல என்ற வார்தையும் கூடவே வரும் . 

பிள்ளையாருக்கு பெண் பார்த்த கதை !

                இதை மாற்றிக் காட்ட வேண்டும் .அம்மா சொந்தம் துடைத்துப் போய் விடக்கூடாது என்ற வைராக்கியத்தில் எனக்கு கட்டினால் அம்மா சொந்தம் என்று சொல்லி விட்டேன் .தீர்மானம் என்னவோ எடுத்தாகி விட்டது.ஆனால் அது நடைமுறைக்கு வந்து போது பிள்ளையார் பெண் பார்த்தக் கதையாய் ஏகப்பட்ட பிரச்சனைக் காது மூக்கு வைத்துத் தலை விரித்தாடியது .அம்மாவின் சொந்தங்கள் அதிகம் விவசாயத் தொழில் நம்பியவர்கள்.அவர்களுக்கு மாப்பிளைப் பெயரில் ஒரு குழி நிலமாகவாவது இருக்க வேண்டும் என்றார்கள் .நாங்கள் இருக்கும் வீடு இரண்டே கால் செண்ட் அளவு கூடக் கிடையாது  அதில் ஐந்தாவதான  என் பங்கு ஆகாயத்தில்தான் பிரிக்க வேண்டும் .நிலத்தில் பிரித்தால் பக்கத்து வீட்டுக்காரன் பங்கில்தான் முடியும் .அவர்கள் எருமை மாடுகள் வைத்துப் பால் வியாபாரம் செய்பவர்கள் .இது தெரிந்தால் எனக்கு ரெண்டு மாடு கொடுத்து மேய்க்க அனுப்பி விடுவார்கள் ! 

             அடுத்து அரசு வேலையாவது இருக்க வேண்டும் என்றார்கள் .அப்போது நான் ஐடிஐ முடித்து இருந்தேன் .மேலும் அப்ரண்டீஸ் அரசுப் போக்குவரத்தில் முடித்து இருந்ததால் காத்து இருப்போர்ப் பட்டியலில் இருந்தேன் .அதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் .இப்படிச் சில பெண் வீடுகள் பெண் தர மறுத்தது.இந்த நிலையில் ஒரு ஆறுதலுக்கென்று ஒன்று விட்டச் சகோதரர் மூலமாக ஒரு பச்சைக்கொடிக் காட்டப்பட்டது . 


நல்ல சகுனம் !


                      பெண் வீடு  குக்கிராமம்.ஒரு நல்ல திங்கள் கிழமை நல்ல நாள் பார்த்து முதல் நாளே இன்னொரு சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்து காலை 6 - 7 க்குள் ராகு பகவான் பார்ப்பதற்கு ( 7.30 - 9.0 ) முன் போய்ப் பார்க்க இரண்டு இரு சக்கர வாகனங்களில் போய் இறங்கினோம்.நாங்கள் பார்க்க வரும் தகவல் இடைத் தகவலரால் சரியாக அறிவுறுத்தப்படவில்லை .வீடு மொத்தமும் தூங்கிக்கொண்டு இருந்தது .கதவைத் தட்டிய போது . பால்காரர் வந்ததாக நினைத்துக்கொண்டு , பாத்திரத்தோடு ஒரு மத்திய வயது பெண் மணிக் கதவைத் திறந்தார்.விசயம் கேட்டுச் சிரித்த சத்தம் எங்களுக்குக் கேட்டது .தட்டியவர் திரும்பி வந்து சாலை வீட்டில் காத்து இருக்கச் சொன்னார்கள் என்றார் . அண்ணன் , அந்த அம்மாள் பால் சட்டியோடு வந்தது நல்ல சகுனம் என்று ஆருடம் சொன்னார் .சில சமயம் யார் சொன்னாலும் நல்லதாகவே தோணும் ! 

                          அந்தச் சாலை வீடு, இளைத்துப்போன எருமை மாட்டின் முதுகு போலத் தென்னைக் கீற்றுக்களால் வேயப்பட்டு இருந்தது .காத்து இருந்தோம் . அண்ணன் மணி 6.50 என்று சொன்னார்.வந்து விட்டார்கள் என்றார் . மூன்று பேர்ப் போகக் கூடாது என்று ஒரு உள்ளூர்க்காரர் ஒருவரைக் கூட்டிக்கொண்டார்கள் .வந்ததிலிருந்தே அந்த ஆள் பார்வை நடமாடும் எடை இயந்திரம் போல என்னை இறுக்கமாகப் அளந்து கொண்டே இருந்தது. ஒருவேளை ராகுவுக்கு முன்னாடி எதுவும் கிரகம் வட்டமடித்து வலம் வருகிறதோ ? அண்ணனிடம் கண் ஜாடைச் செய்தேன் .அவருக்கும் தெரியவில்லை.லூசுல விடு என்பது போலச் சைகை செய்தார்.நாழாவதாகச் சேர்த்த ஆள் கட்டுச்சோறுக்குள் எதையோ வைத்துக் கட்டியதாகத் தோணியது .சே ! என்ன இது காலை நேரத்துலக் கட்டுச் சோறு ஞாபகமெல்லாம் வருது ? 

                           எங்காவது ஒரு பஸ்ல,கோவில்ல, கூட்டத்துல உட்கார்ந்து இந்தப் பெண் அழகா அந்தப் பெண் அழகான்னு மதிப்பெண் போடலாம் .உங்களுக்குன்னு ஒரு பொண்ணைக்காட்டி இது எப்படி இருக்குன்னு கேட்டா எந்த ஆணும் அவ்வளவு தூரம் எதுவும் சொல்லும் நிலையில் இருக்க மாட்டான்.அப்படித்தான் இருந்தேன் நானும் அப்போது ! 

                         பெண்ணின் அப்பா அவசர வேலையா எங்கோ வெளியூர்ப் போய் விட்டாராம் .அதனால் பெண்ணுடைய அம்மாவும் , அந்தப் பெண்ணும் மட்டுமே வந்தார்கள் .வந்தவர்கள் அந்தச் சாலை வீட்டில் உள்ள விறகு அடுப்பைப் பற்றவைத்து .பால் இல்லாமல் ( இன்னும் உண்மையான பால்காரர் வரவில்லை ) டீப் போட்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டார்கள் .என்னைத்தவிர அங்கு வந்த அனைவருக்கும் அந்தப் பெண் தெரிந்தவர் என்பதால் பேசிக்கொண்டார்கள் .நான் மட்டும் எங்குப் பார்ப்பது என்று தவித்துக்கொண்டு இருந்தேன் .இதற்கு முன்னால் இதே போல என் அண்ணன்கள் மற்றும் நண்பர்கள் உட்பட யாரையெல்லாம் பெண் பார்க்கப் போன போது கிண்டலும் கேளியும் செய்து பறக்க விட்டேனோ அந்தப் பாவமெல்லாம் மொத்தமாக என் முன் வந்து தவணைக் கொடுக்காமல் பழி வாங்கியது போல இருந்தது .டீ எடுத்தக்கங்க என்று தட்டு முகத்திற்கு முன் வந்தது . எல்லா பலமும் திரட்டி  நிமிர்ந்து அந்தப்பெண் முகம் பார்த்து டம்ளரை எடுத்துகொண்டேன் .இந்தப்பக்கம் அஸ்கா என்ற ஜீனிக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரையில் டீப் போட்டு இருந்தார்கள் .அந்த இனிப்பு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டு போக மறுத்தது . 

                        மெல்ல டீக் குடித்தவர்கள் , தவிர்க்க முடியாத பீடிப் பற்ற வைக்கும் பழக்கத்திற்கு இரைப் போட வெளியே நகர , நானும் அண்ணனும் அந்தப்பெண்ணின் அம்மாவும் மட்டுமே எஞ்சினோம். டீக் குடித்து முடித்த டம்ளர்களைச் சேகரித்த அந்தப் பெண், என்னிடம் கையில் வாங்கிகொண்டு சில அடித் தூரத்தில் உள்ள வரப்பில் அடுப்புச் சாம்பல் கொண்டு தேங்காய் நாரில் கழுவத் தொடங்கியது .என்னால் இப்போதுதான்  இப்போது சரியாகப் பார்க்க முடிந்தது.என்னைப் போன்ற நிறம் . மெல்லிய உடம்பு ,தாவணியா சேலையா என்று தெரியாத அவசர உடை உடுத்தியிருந்தாள்  . 
இவளா என் மனைவி ? 


        எனக்குள் எதாவது பட்டாம் பூச்சிப் பறக்கிறதா என்று சோதித்துக்கொண்டேன் .ம்…..தூரத்தில் சில தும்பைசெடிகளில் மட்டும்தான் பட்டாம் பூச்சிகள் தேன் சோதித்துக் கொண்டு இருந்தது .இப்படித்தான் இருக்குமா எல்லாருக்கும் ? ஒன்னுமே தோணாதா ? ஒரு பயலும் இதைப் பற்றி நம்மிடம் சொல்லவே இல்லையே என்று நொந்து கொண்டேன். 

                 அந்தப் பெண் அங்கிருந்து என்னை முகம் திருப்பிப் பார்த்தாள் .அந்தப் பார்வையில் மெல்லிய சிரிப்புப் படர்ந்து இருந்தது.ஒரு வேளை எனக்கு அப்படித்தோணியதா ? 

                 அண்ணனிடம் அந்தப் பெண்ணின் அம்மா பேசினார்கள் .பேசினார்கள் என்பதைவிட எனக்குச் சொன்னார்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் .இரண்டு பிள்ளைக எங்களுக்கு .இவப் பத்தாவது படிச்சிறுக்கா .முடிச்சு நாழு வருசமாச்சு .சின்னது ஏழாவது படிக்குது .எங்களால முடிஞ்சதைச் செய்யுறோம் .வருசம் பூராவும் நம்மக் கலனியில் நெல்லுதான் .கொடுத்து அனுப்பி விடுவோம் .அப்புறம் உனக்குத்தான் தெரியுமே சண்முகம் ( அண்ணன் பெயர் ) என்றார் . 

                   நாங்கள் இவ்வளவுதான் என்று இதை விடவும் மரியாதையாகச் சொல்ல முடியுமா ? தெரியவில்லை.அதற்கு அண்ணன் ,அதுனால என்ன அக்கா நம்மப் பிள்ளைக்கு நீங்க செய்யுறீங்க என்று இழுத்துக்கொண்டே ... ஏற்றுக்கொண்டது போல என்னைப் பார்த்துக்கொண்டே தலையாட்டிப் பேசினார். ( அதென்ன நம்மப் பிள்ளைக்கு நீங்க செய்றீங்க ? என்ன அர்த்தம் ? ஒரு மண்ணும் புரியல ) நான் சும்மா அதை ஆமோதிப்பது போலப் பூம் பூம் மாடுகணக்காத் ஒப்புக்குத் தலையாட்டி வைத்தேன் .

கலைந்து போன கனவுகள் !


                   அடுத்தச் சிலவாரங்கள் அவர்களிடமிருந்து இது சம்பந்தமாக எந்தச் செய்தியும் வரவில்லை என்பதால் அண்ணன் நேரில் போய் விசாரித்த போது , அவர்களுக்கு நெருங்கிய சொந்தம் ஒன்று வந்து நிர்பந்தித்து, நிச்சயத்தட்டு மாற்றி விட்டார்களாம் .நம்மல அந்தப்பிள்ளைக்கும் அவங்க அம்மாவுக்கும் ரொம்பப் பிடிச்சு இருந்திருக்கு .அவங்க அப்பா வழியில் அழுத்திக்கேட்டதாலே வேறு வழியில்லாம ஒத்துக்கிட்டார்களாம் என்றவர் ,பாரு ஒரு மனுசங்கப் போய்க் கேட்டதற்கு அப்புறம் இதைச் சொல்றாங்க .ஒரு வார்த்தைச் சொல்லியிருக்கலாமில்ல ? என்று அங்கலாய்த்தார். 

           எனக்கு அதைக் கேட்டதும்,மிக பதுகாப்பாக யோசித்து  கடல் கரையை வீட்டு வெகுதூரம் நான் கட்டி வைத்த மணல் கோட்டையைக் திடீரென்று வந்தக் காற்று  கலைத்துக் குவித்தது போலவும், மனசுக்குள் கல்யாணக் கனவென்ற மெல்லிய நீரோடைத் துவங்கிய இடத்திலேயே தொலைந்தது போனது போலவும் இருந்தது . 

            அடுத்தப் பல வாரங்கள் கம்பெனிக்குள் எதிர்பட்டப் பெண் முகமெல்லாம் அவள் முகமாய்த் தெரிந்தது .எப்படியோ அந்தப் பெண்ணுக்கு என்னைப் பிடித்து இருந்தது என்ற செய்தி மட்டும் பல சமயம் சந்தோசமாக வந்து போனது .செத்துப்போனாலும் சுவர்க்கம் போய் விட்டோம் என்ற ஆறுதல் தவிர வேறு என்ன சொல்வது இதை ? Accept As it is ! 


சேராத நதிகளா ?


              அடுத்தச் சில வருடங்களிலும் அம்மாவும் எனக்குத் தன் சொந்தத்தில் பெண் தேடிக் களைத்துப் போனார்கள் .ஒரு கட்டத்தில் குலதெய்வ முடிவுக்கு ஒத்துப்போய்விடலாம் என்ற இடத்துக்கும் விட்டார்கள் .எனக்குப் பெரிய ஏமாற்றம் .அம்மா சொந்தங்கள் அதிகபட்சம் விவசாயத்தில் இருப்பதே எனக்கு அவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் .பதிமூன்று வயது வரை கண்ணுக்கெட்டிய தூரம் விவசாயப் பூமியில் வளர்ந்த என்னை , நகரத்துக் கோரைப் பாயில் சுருண்டுப் படுத்துக் கொள்ளுமாறான இப்போதைய வாழ்க்கை எப்போதுமே தொடர்ந்து இருக்கப் பிடிக்கவில்லை .என் எதிர்காலத் வாழ்விற்கான திட்டம் கிராமத்தில்தான் இருந்தது. 

           இப்படியே ஐந்து வருடம் ஓடிப்போனது . குலதெய்வ உத்தரவுப்படி , அம்மா சொந்தமில்லாத பெண் எனக்குக் கிடைத்துத் திருமணம் நடந்தது.எனக்கென்று ஒரு பெண் ,சகத் தர்மினி ஏமாறக் காத்து இருக்கும் போது நான் வேறெங்கோ தேடுவது எப்படிச் சரியாக இருக்கும் ? 

எப்படியும் இது நடந்து பதினான்கு வருடம் ஓடி மறைந்து போன ஒரு நாளுக்குப்பிறகுதான் இன்று அந்த அலைபேசிச் செய்தி அப்படி ஒரு அதிர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியது .சென்ற வாரம் அந்தப் பெண்ணின் கணவன் புற்று நோயால் இறந்து போய் விட்டாராம்.பதிமூன்று வயதில் ஒரு பெண் இருக்கிறதாம் . மேலும் அவர் சொல்லச் சொல்ல அந்தப் பெண் முகத்தை நினைவுகளில் புதைந்து மனம் தேடியது . எனக்குச் சில நிமிடம் பேச முடியவில்லை .

          எதிர்முனையில் ஹலோ ,ஹலோ என்று குரல் கெட்டது .தொடர்பு அறுந்து விட்டது என்று நினைத்து அவரே தொடர்பைத் துண்டித்து இருக்கக் கூடும் ! 

                 இங்குப் பலருக்கு வாழ்க்கை பொம்மைக் கலயாணம் போல  விரும்பியதைத் தராவிட்டாலும் பரவாயில்லை , கிடைத்ததும் தொலைந்து போவது  எதனால் என்று தெரியவில்லை . விதியும், மதியும் எப்போதுமே சேராத நதிகளா ? 


            

புதன், 26 அக்டோபர், 2016

90 வயது ஆனந்த விகடனும் & அதில் எங்கள் பரிசல்காரரும் !                                  வெகு நாளைக்குப் பிறகு காதலித்த பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது ஆனந்த விகடனை நான் மீண்டும் வாசிக்க நேர்ந்தது .என்னப்பா ஊர்ல ஆயிரம் விசயம் இருக்கறப்ப இது ஒரு விசயமா ? இல்லைதான் .ஆனால் 90 வருடங்களாக வெளிவந்து கொண்டு இருக்கும் ஒரு மூத்த பத்ரிக்கையில் உங்களுக்கு வெகு நாளாகப் பழகித் தெரிந்தவர் வேலைக்கு அங்குப் பணி புரிய நேர்ந்தால் நீங்கள் காதலித்த பத்ரிக்கை மேல் ஒரு மறு ஈர்ப்பு நிகழத்தானே செய்யும் அதுதான் நடந்தது இங்கு ! 

                                 திருப்பூருக்குள் முதன் முதலாகப் பணிக்குச் சேர நுழைந்த போது ஆயத்த ஆடைப் பற்றிய எந்த முன் அபிப்ராயமும் எனக்கு இல்லை .எனது ஒன்று விட்ட சகோதரர் இங்கு இருந்தார் .அவருக்கு எனக்குப் பெண் பார்த்து எனக்குத் திருமணம் செய்து, ஆயிரம் காலத்துப் பயிரை என் மூலம் நட்டு வைத்து வளர்க்க மிகுந்த அக்கறை காட்டினார். அதனால் சொந்த ஊரில் டெக்ஸ்மோ ஷோரூமில் பார்த்துக்கொண்டு இருந்த கணக்காளர்ப் பணியை உதறி விட்டு அவர் ஆசையை நிறைவேற்ற வந்திருந்தேன்.சகோரரின் நண்பர் மூலம் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைக் கிடைத்து அதன் கிளைப் பிரிவில் பணிபுரிய ஒரு காலை அருள்புரத்தில் உள்ள அந்தக் கம்பெனிக்குள் நுழைந்தபோது எதிர்பட்ட ஒருவரைப் பார்த்து, நான் ரசீது பாயைப் பார்க்க வேண்டும் என்றேன்.அவர் ஏற இறங்கப் என்னைப் பார்த்தவிதமே சரியில்லை ! ஆனால் பதில் உடனே வந்தது .ஒன்பது மணிக்கு வந்திடுவார் . 

               அப்புறம் பணிக்குச் சேர்ந்த சில நாளுக்குப்பிறகுதான் தெரிந்தது நான் ரசீதுபாய் என்ற குற்ப்பிட்ட நபர் அந்த யூனிட்டில் எல்லோரும் பயப்படும் மேலாளரின் பெயரை .சரி அவரை விடுங்கள். நான் கேட்ட போது பார்த்தவிதமே சரியில்லாத அவர்தான் இப்போது இங்குப் பதிவிற்குக் காரணம் .அவர்தான் K.B.கிருஷ்ணகுமார்.இப்போது ஆனந்த விகடனில் பரிசல்(காரன்) கிருஷ்ணா(குமார்) என்ற பெயரில்- சப் எடிட்டர் அவதாரம் எடுத்து இருக்கிறார் .இதில் என்ன பெருமை இருக்கிறது ? இருக்கிறது . 

                                 கால நேரமில்லாமல் சக்கரமாய்ச் சுழலும் இந்த ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்த ஒருவர் சுவாரசியமான ஒரு பத்ரிக்கைக்குப் போவது அவ்வளவு சுலபமில்லை .எழுத்து என்பது ஒரு சூட்சுமமாய் ஓயாது உள்ளே ஓடிக்கொண்டு இருக்கும் நதி போல! .தன்னில் ஓடும் நதியை விட்டுவிட்டு அடுத்த நாள் கப்பலேறவிருக்கும் ’ஷிப்மெண்ட்’ என்று சதா மண்டையைப் போட்டுப் பிறாண்டிக்கொண்டு இருக்கும் வேலை பார்ப்பவர் தன்னுள் அந்த நதியைக் கவனிக்க முடியாது. அப்படியே பாயும் நதியெல்லாம் பாலைவனத்தின் அடியில் மறைந்து போன சரஸ்வதி நதி போலாகி விட்டது. 
ஆனால் அதற்கும் தீனி போட்டுக்கொண்டு தன்னையும் அதே யூனிட்டில் மேலாளராக வளர்த்துக்கொண்டு உயர்ந்தவர்தான் இந்தப் பரிசல்காரர்.அது மட்டுமல்ல அந்த நிறுவனத்தில் அவர் வகிக்காத பதவிகளே இல்லை என்ற அளவுக்கு முக்கியமான A to Z பதவிகளிலும் முத்திரைப் பதித்தவர் என்பது வேறு விசயம். 

           அவருடைய மேற்பார்வையில்தான் என் பணித் துவங்கியது .சில வாரத்திற்குப் பிறகு ஒரு காண்டிராக்டர்தான் அவர் ஆனந்த விகடனுக்கெல்லாம் எழுதுபவர் என்று சொன்னார்.அன்றிலிருந்துதான் ,அவரோடு நெருக்கமாகப் பின்பற்றி நடந்தேன்.எழுதுபவர்களோடு பயணிக்கும் சுகமே தனிதான்.அது நம்மை இயற்கையோடு கைகோர்த்துக்கொள்வதற்குச் சமம். 


                      அவரோடு சுமார் ஐந்து வருடம் இருந்து இருக்கிறேன் .அவர் கம்பெனியின் எல்லாத் தளங்களில் உள்ள பணியாளார்களோடும் நெருங்கிப் பழகுவார்.சாதாரண லைன் பீஸ் கணக்கு எழுத பணியில் அமர்த்தப்பட்ட என்னை, ஆயத்த ஆடைத் தயாரிப்பின் பல்முகங்களிலும் நனைத்து எடுத்தவர்.அவர் எப்போதும் எனக்குச் சொல்லித்தரும் ஒரு வாக்கியம் - இங்குத் திருப்பூரில் நிர்வாகத்திற்குக் கடினமான வேலைகளை விடக் கவனம் மிகுந்த முக்கியமான வேலைகளைச் செய்தால்தான் நமக்கான சம்பள உயர்வு பொறுப்பும் பதவியும் தேடி வரும் என்பதுதான் அது .அப்படித்தான் கடைசிவரை என்னை வழி நடத்தினார்.எதிலும் ஒரு தெளிவானப் பார்வை வைத்து இருப்பார். அதைவிடவும் பணிபுரிந்த நிர்வாகத்தின் எந்தப் புதிய திட்டமிடலில் இவர் கைதான் ஓங்கியிருக்கும் .இதனால் பல பேரின் பகையையும் பெறுவதில் தப்பவில்லை . 

                         வேலை நேரம் போக வெளியில் அவர் முகம் வேறு .மிக எளிமையாகப் பழகுவார் .அற்புதமாகப் பைக் ரைடிங் பண்ணுவார்.சாலையில் யாராவது இண்டிக்கேட்டர்ப் போடாமல் திரும்பி விட்டால் போச்சு . அவனைத் துரத்திப் போய் அந்நியன் பட அம்பியாக மாறி வம்பு செய்வார் . செஸ் விளையாட்டில் பட்டையைக் கிளப்புவார் .கிரிக்கெட் அதைவிட அபாரம் .அவர் ஒரு ஆல்ரவுண்டர். 
                                           இது வேறு யாருக்காவது நடந்து இருக்கா என்று எனக்குத் தெரியாது.ஒருக் கம்பெனியில் நீங்கள் பணியில் சேரச் சிபாரிசுத் தேடுவீர்கள் .ஆனால் ஏழு வருடம் வேலைப் பார்த்த இடத்தை விட்டு வெளியேறச் சிபாரிசுத் தேடியிருக்கிறீகளா ? நான் தேடியிருக்கிறேன் .அதையும் செய்து தந்தவர்களில் இருவரில் பரிசல்காரரும் மிக முக்கியமானவர். 

                             பணி புரிந்த இடத்தில் சில இடமாற்றம் நடந்தது.கிருஷ்ணகுமார் சார் அப்போது முதலாளிக்குப் பி.ஏ அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டுத் தலமை அலுவலகம் போய் விட்டார்.நான் பணிபுரிந்த யூனிட்டின் ஆரசியல் மூச்சுத்திணறலில் முங்கித்தவித்தேன் .இதிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்க அவரிடம் உதவி தேடிக் கம்பெனிக் குடியிருப்பில் இருந்த அவர் இல்லத்தில் சந்தித்து, நிலைமையைச் சொன்னேன் .புரிந்துகொண்டு ஒரு நல்ல சமயத்தில் வெளியேற உதவினார் .அவர் அப்போது எங்கள் சென்று எப்படி என் முதல் பணியில் சேர்ந்த போது அவரிடம்தான் முதல் வார்த்தைப் பேசினேன் .அதே போல என்னை அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறும் போதும் அவரோடு பேசி நன்றி சொல்லிவிட்டுத்தான் வந்தேன். சில வருடங்களில் அவரும் வேறு நிறுவனம் போய் விட்டார். 

                  பிறகு அவரோடு தொடர்பு குறைந்து போனது .அடுத்து அவர் எழுதிய ’டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்’ கதைத்தொகுப்புக் கூட இப்போதுதான் அறிந்துகொண்டேன் . மீண்டும் சில முகநூலில் அவரைச் சந்தித்தேன் .அவர் வாழ்வில் மாறாத தழும்பாய் ஒரு அசம்பாவிதம் நடந்தபோது அவர் வீடு எங்கு இருக்கிறது என்று கூடத்தெரியாது .மிகத்தாமதமாகத் தெரிந்துத் தேடிப்போனபோது பெருமாநல்லூர்ப் போய் அங்கிருந்து வீட்டு முகவரிக்காக அலைபேசியில் அவரைத் தொடர்புக் கொண்டபோது , வீட்டில் இருக்க வேதனையாக இருக்கிறது ,அதனால் கோவை வரை போகிறோம் என்ற மனம் உடைந்து போன பதில் வந்தது.ஆனாலும் வீடு போனேன் அவர் சகோதரர் அம்மாவைச் சந்தித்து விட்டு வந்தோம் .... 

                            அதற்குப் பிறகு ஒரு நாள் அவர் விகடனில் சப் எடிட்டராக இணைந்து விட்டதாக அறிந்தவுடன் மிகவும் சந்தோசப்பட்டேன்.நதிகளின் தேடல் கடல்தானே ? இப்போது விகடனின் 90 ஆவது இதழில் அவரின் பங்கு இருப்பதால் அவரோடு நான் பணிபுரிந்தப் போது உடன் இருந்தவர்களைத் தொடர்புகொண்டு படிக்கச்சொன்னேன்.சந்தோசப்பட்டார்கள். உடனே அலைபேசி எண் கேட்டார்கள் கொடுத்தேன். இன்னும் நிறையப் பேர்க் கேட்பார்கள் ....அன்புத் தொல்லைகள் தொடரும் ! 

இனி தலைப்புக்கு வரலாம் .. 

விகடனுக்கு வயது 90.                                      வெகு நாள் கழித்துக் காதலித்த பெண்ணைச் சந்தித்தால்,முதலில் பரவச மேலிட பேசிக்கொள்வோம் அது சில மணி நேரத்தில் ஊடலாய் மாறுவது வியப்பேதுமில்லை .காரணம் முடிந்த இடத்தில் மீண்டும் தொடங்குவது போல இருவரின் பிரிவுக்கு யார் காரணம் என்று விவாத பந்தயம் வைப்போம் .அது போல .ஆ.வித் தன்னுடைய அழகான இமேஜைத் தொலைத்ததோடு அதன் என்னைப்போல வாசகர்களைத் தொலைத்தற்கு முக்கியக் காரணம் சில இருந்தது .அதன் வடிவம் மாறி அதன் விலையேற்றம் கட்டாயமான போது என்னைப்போலப் பல வாசகர்கள் சுனாமியின் சிக்கியக் கரையோரத்துக் குடிசை வீடுகள் போலக் காணாமல் போனோம் .இரண்டாவது இவ்வளவு விலைக் கொடுத்து வாங்கும் ஒரு இதழில் இளமை ,புதுமை,நடப்பு , ஆன்மீகம் என எல்லாமும் இருப்பதையே விரும்புவோம் .ஆனால் ஆ.வி அதைத் தனக்குள் பிரித்துக்கொண்டது .இன்னும் பிரித்துக்கொண்டேயும் போகிறது .

  இது வாசிப்பு உலகின் வியாபார வெற்றியா ,தந்திரமா ? இல்லை ஆழமாக ஒரு விசயத்தைச் சொல்ல எடுத்துக்கொள்ளும் முயற்சியா ? தெரியாது. ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதழ் வாங்குமளவிற்கு இன்னும் என்னைப்போல வாசகன் முன்னேறவில்லை . சரி. இது ஒரு வாசிப்பவனின் ஆதங்கமாக இருக்கட்டும் . 
                     

பொக்கிஷத்தில் விடுபட்ட முத்துக்கள்  !

                          விகடன் 90 வயதுக்காரர் .மூத்தவர்கள் தன் வாழ்வின் இளமை எப்படி இருந்து இருந்தாலும் அதை மறைத்துச் சொல்ல மாட்டார்கள். 

                           # பொக்கிஷம் ஆனந்த விகடனின் (பக்.197-212) பகுதியில் 50 நிகழ்வுகள் அழியாத சுவடுகளாக , மாறாத அழகோடு பதிவுச் செய்யப்பட்டு .ஆனால் அதில் ஒரு முக்கியமான வரலாற்று விசயம் இருந்து இருந்தால் நன்றியாக இருந்து இருக்கும் .1926-ல் பூதூர் வைத்தியநாத ஐயர் என்பவர் நடத்திவந்த ‘ஆனந்த விகடன்’ இதழைத்தான் எஸ்.எஸ்.வாசன் ரூ. 200 விலைக் கொடுத்து வாங்கி அந்த இதழைத் தானே நடத்த ஆரம்பித்தார். அப்படியே பெயரைக்கூட மாற்றாமல் அதை நடத்திக்கொண்டு இருக்கும் போது அதைச் சொல்லியிருக்கலாம்! அந்த இதழ்களும் 1835-ல் தொடங்கி ஞானாலயா’ பி.கிருஷ்ண மூர்த்தி (வயது 75). அரிய புத்தகங்களைச் சேகரிப்பில் பத்திரமாக இருக்கிறது.வரலாறு கவனிக்கப்படும்போது நதிமூலமும் ரிசிமூலமும் பேசியினால் தவறேதும் இல்லை .(ஆனால் விகடன் விக்கிப் பக்கம் https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_விகடன் - ஆனந்த விகடன் என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழ். எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது என்ற பதிவு செய்கிறது.) 

இரண்டாவது விட்டுப்போன ஒரு முக்கிய நிகழ்வு


                 எனக்கு அப்போது பதினேழு வயது நன்றாக ஞாபகம் இருக்கிறது .அந்த நிகழ்விற்குப் பிறகுதான் தமிழ் வாசகர்களிடம் மிகவும் முக்கியமாகக் கவனிப்பட்டப் புத்தகமாக ஆனந்த விகடன் மாறியது என்றால் தவறில்லை.அது எதுவும் ஆனந்த விகடன் பொக்கிஷத்தில் குறிப்பிடப்படவில்லை . 

                1987ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர் அரசு எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களைக் கைதுசெய்துச் சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்குத் தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார். வழக்கில் வென்ற இவருக்கு ரூ.1000 நஷ்டஈடு வழங்கப்பட்டது.சிறையில் இருந்து இவர் கம்பீரமாக நடைபோட்டு வருவதுபோல ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கார்ட்டூன் வரைந்தார் ஆர்.கே.லஷ்மண். அது இவருக்கு மிகவும் பிடித்துவிடவே ஒரிஜினல் கார்ட்டூன் ஓவியத்தைக் கேட்டு வாங்கினார். ஆர்.கே.லஷ்மண் கையெழுத்துடன் கூடிய அந்தக் கார்ட்டூனையும், நஷ்டஈடாகக் கிடைத்த 1000 ரூபாயையும் ப்ரேம் போட்டு தன் அலுவலகத்தில் மாட்டினார்.( https://ta.wikipedia.org/wiki/எஸ்._பாலசுப்பிரமணியன் .) 

        இதைப்பற்றி எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் தனது கடைசிப் பேட்டியில் பதில் சொல்லியிருக்கிறார் . 
விகடன் அட்டைப் பட ஜோக்குக்காக அதிமுக அரசுச் சிறைத் தண்டனை விதித்தபோது, எம்ஜிஆரிடம் நீங்கள் பேசுவீர்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எது உங்களை எதிர்த்துப் போராட வைத்தது? 

                   விகடன் ஒரு புரட்சிப் பத்திரிகைக் கிடையாது. எல்லோரும் வாசிக்கக் கூடிய, ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகைதான் அது. ஆனா, அன்னைக்கு எம்ஜிஆர் அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை என் மீதானத் தாக்குதலாகவோ, விகடன் மீதானத் தாக்குதலாகவோ பார்க்கலை. ஒட்டுமொத்தப் பத்திரிகைச் சுதந்திரத்து மேலேயும் நடத்தப்பட்ட தாக்குதல். அதைத் தனிப்பட்ட வகையில, குறுக்குவழியில அணுகினா, இந்தப் பத்திரிகைத் தொழிலுக்கே நான் வந்திருக்க வேண்டியதில்லை. 

முடிவாக....

                 எல்லாம் சரிதான் .இதற்குப்பிறகும் நீ விகடன் வாசிப்பாயா மாட்டாயா ? என்ற கேள்வி உங்களிடமிருந்து வருகிறது .சரிதானே ? பழைய காதல் அப்படி விட்டு விட முடியுமா ? அதுவும் பரிசல் கிருஷ்ணா சார் அங்கு இருக்கும் போது  !....

செவ்வாய், 11 அக்டோபர், 2016

நதியின் தரிசனம் - ”பாதை சரியாக இருந்தால்” .

நூல் விமர்சனம்.

lao tzu

பாதை சரியாக இருந்தால் - ஒஷோ .
தமிழில் - வரலொட்டி ரெங்கசாமி .
கவிதா பப்ளிகேசன்ஸ். 

                      சீனாவின் பிரபலமான ஞானிகளில் ஒருவர் லாவோ ட்சுவின் புகழ் பெற்ற சீடர் ஷீவாங் ட்சு .அவரின் போதனைகளை, ஓஷோவின் நீண்ட ஆழமான பார்வையில் சொற்பொழிவாற்றிய பதிவின் நூலாக்கம்தான் இந்த ’பாதை சரியாக இருந்தால்’ தொகுப்பு . ..

               ஓஷோ ஷீவாங் ட்சுவை , இயேசுவையும் ,புத்தரையும் விட அபூர்வமானவர் என்கிறார் .காரணம் அவர்கள் அதைச் செய் இதைச் செய் என்று செயலின் மேல் கவனம் செலுத்தினார்கள் .ஆனால் ஷீவாங் ட்சுவோ செயலின்மையை வலியுறுத்துகிறார்.மெய்ஞானத்தின் திறவுகோலாகச் செயலின்மை ஒரு தீர்க்கமான வழி என்கிறார். உங்களுக்குள் இயல்பாக இருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் நீங்கள் மெய்ஞான மலர்ச்சி அடைவீர்கள் .இதற்கு அவர் புத்தரின் வாழ்வையே உதாரணமாகச் சொல்கிறார். 

                              சித்தார்த்தராக இருந்த புத்தர் சுயஞானம் பெற ஆறு ஆண்டுகள் முயற்சி செய்து ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட வெறுப்பிலிருந்தார் .தன் நம்பிக்கையை முற்றிலும் இழந்தார்.அந்த நிலையில் எல்ல முயற்சிகளையும் கைவிட்டார்.மெய்ஞான மலர்ச்சிப் பெறும் நாளுக்கு முந்திய நிலையில் சித்தார்த்தர் எல்லா முயற்சிகளையும் கை விட்டார்.முழுச் சூன்ய நிலையில், அன்று இரவு செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற செயலின்மையை உணர்ந்து, கனவுகளே இல்லாத எந்த இயக்கத்தினாலும் தூண்டுதலே இல்லாத அன்றைய இரவு தூக்கம் அமைந்தது.அதை ஜென் தத்துவம் சடோரி நிலை என்கிறது .                                                                                                                                                                   மனமற்ற  நிலை என்பதன் முதல் அனுபவம் – சடோரி என்று இதைக் கூறுவார் ஓஷோ இதையே சமாதி நிலை என்று நமது ஞானமார்க்கம் சொல்கிறது .அன்றைய இரவில்தான் சித்தார்த்தர்ப் புத்தராக மலர்ந்தர்.மறுநாள் காலை ஞானம் பெற்றார் .ஆதலினால் செயலின்மைதான் புத்தரின் ஞானத்தின் விளைவு என்று தீர்காமாகப் பேசுகிறார் லாவோ ட்சு. 

இதயம் சரியாக இருந்தல் நேர் - எதிர் 
வாதங்களை மறந்து விடுவோம் . 

                    உந்துதல் இல்லை .வற்புறுத்தல் இல்லை .தேவைகள் இல்லை. ஈர்ப்புகள் இல்லை.இவைகள் யாவும் இல்லாத இடத்தில் உங்கள் விவகாரங்கள் உங்கள் அதிகாரத்தில் நீங்கள் சுதந்திர மனிதர் என்கிறார் லாவோ ட்சு. 

                         இதை வாசிக்கும் நமக்கு ஒரு நெருடல் மோதுகிறது .அதெப்படி சித்தார்த்தர் என்ற பெயரின் பொறுளே லட்சியத்தை அடைந்தவர் என்பதாக இருக்கும் போது செயலின்மையை எப்படி நம்புவது ? சித்தார்த்தர் தான் ஞானம் பெற வேண்டும் என்ற அக மனத்தூண்டுதலினால்தான் ஞானம் பெற்றார் என்று நம்புகிறோம் .ஆனால் லாவோ ட்சு நம் ஞானம் என்பது செயலின் விளைவு அல்ல. நம் உள்ளே உறைந்து கிடக்கும் இயல்பை வெளியே இறைந்து கிடக்கும் இறைத்தனமையுடன் இணைத்துக்கொள்ளும் தன்மை என்று உணர்த்த முயற்சிக்கிறார். 

                           லாவோ ட்சு பற்றிய ஓஷோவின் பார்வயில் இன்னொரு அழகான அதே சமயம் வித்தியாசமான விசயம் ,”உங்களிடம் எது அழகாக இருக்கிறதோ அதை மறைத்து வையுங்கள் ”என்று சொல்லும் லாவோ ட்சுவின் போதனை .மேலும் அவர் சொல்லும் போது நாம் அதற்கு மாறான செயலில்தான் பெரும்பாலும் ஈடுபடுகிறோம் .நம்மிடம் உள்ள தவறுகளை மறைக்கிறோம் .எப்போதும் உள்ளே இருப்பது யாருக்கும் தெரியாமல் இருப்பதால் இன்னும் அதிகமாக வளர்கிறது .உங்கள் அசிங்கம் ,அவலம் ,தவறுகளை வெளிப்படுத்தினால் ஒத்துக்கொண்டால் அது நீர்த்துப் போய் விடும்.இது ஒரு ஆச்சர்யமான போதனையாக் உணரவேண்டியதிருக்கிறது.

Gurdjieff 

                   இந்த நமது ஆச்சர்யத்தின் முடிச்சுகளை ஓஷோ ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப் மூலம் அவிழ்க்கிறார்.”நீங்கள் குரங்காக இருப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மனிதனாக வாழ முடியாது .காரணம் குரங்கின் குணம் அடுத்தவர் செய்வதை அப்படியே செய்வது -Aping .

மூன்றாவது காது.

                           ஒரு குருவின் வேலை உங்களைத் தியானத்தின் மூலம் உங்கள் இருப்பைக் கவனிக்க வைப்பது மட்டுமல்ல உங்களுக்கு உள்ளே வைத்து இருக்கும் அப்பா சொன்னார் ,அம்மா சொன்னார் குரு சொன்னார் இன்னும் யார் யாரோ சொன்னக் குரல்களின் பதிவைத் தாண்டி ஒரு வெற்றிடம் இருக்கிறது .அந்த வெற்றிடத்தை உங்களுக்குள் உருவாக்கச் செய்கிறார் குரு.அந்த வெற்றிடத்தை இயற்கைத் தன்னைக்கொண்டு நிலை நிறுத்தும் .அப்போது உங்கள் மூன்றாவது காது உருவாகும் அதன் மூலம் இயற்கையின் குரல் கேட்கும் .இவர் சொன்னார் அவர் சொன்னார் என்ற குரல்களை விரட்டி விட்டு அந்தக்குரல் மூலம் உங்கள் வாழ்வின் முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள் .அதை நம் வேதங்கள் அசரீரி என்கிறது .

            இந்த மூன்றாவது குரலைக் கேடுக்கும் காதுடன் இயற்கையாகப் பிறப்பதால்தான் தாவரங்கள், பறவைகள் ,மிருகங்கள் ,புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் இவர்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ்கின்றன என்கின்றார் லாவோ ட்சு.ஆண்டவன் சொல்கிறான் அருணாச்சலம் செய்கிறான் என்ற வசனம் இப்படித்தான் பிறந்தது என்று சொல்லலாம்!

தேவைகள் - ஆசைகள்

                      அடுத்து ஒரு அற்புதமான நடைமுறை சிக்கலுக்கு வழி காண்பதில் லாவோ ட்சு முயல்கிறார்.சுவாசிப்பது ,உணவு ,நீர்,இவைகள் உலக உயிர்களபொதுவானவை எளிமையானவை .தேவையை இயற்கை ஏற்படுத்துகிறது .தேவைப் பூர்த்திச் செய்யப்படுகிறது .ஆனால் அதே தேவை வெறியாகும் போது ஆசையாகிறது. ஆசை வருங்காலத்தின் பொருட்டு மனம் ஏற்படுத்தும் சிக்கலான தந்திரம்.இந்தக் குணம் இருப்பதால்தான் மனிதன் தனது ஆசைகளைக் கூட்டிக்கொண்டே போய் ஒரு நாள் அதற்குள் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டு பிறவி யின் நீட்சியைத் தொடர வேண்டியதாக இருக்கிறது.

                     இதைத் தெளிவு படுத்த ஓஷோ, கன்ஃபூசியசுக்குப் பின் வந்தவருள் மிகவும் முக்கியமானவர் சீனத் தத்துவஞானியான மென்சியஸ் அவர்களின் இறக்கும் தருவாயில் அவரிடம் ஒரு கேள்விக் கேட்கப்பட்டதை நினைவுப் படுத்துகிறார் .மென்சியஸ் அவர்களே உங்கள் வாழ்க்கையினை முதலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்புக் கிடைத்த்தால் என்ன செய்வீர்கள் ? .அதற்கு மென்சியஸ், என் தேவைகள் மெல் கவனம் செலுத்துவேன் என் ஆசைகள் மேல் இல்லை என்றாராம் .

Mencius

         ஆனால் ஓஷோ சொல்லும் போது நம் தேவைகளைக் கண்டிப்பதே மதங்களின் நோக்கமாக இருக்கிறது .இயற்கை உடலின் செயல்பாடுகளுக்குத் தேவைகளை உருவாக்குகிறது.ஆனால் மதங்கள் நீங்கள் உண்பதையும் ,உறங்குவதையும் கண்டிப்பதோடு வரப்போகும் சுவர்க்கம் ,நரகம் ,முக்தி,மோட்சம்,பேரின்பம் என்ற ஆசைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறது .அதனால்தான் இந்த உலகம் அசிங்கமாக்கப்பட்டு விட்டதாக ஓஷோ ஆதங்கப்படுகிறார்.

குருவுக்கு - சிஷ்யர்களின் தேவை

                                    ஒரு அபூர்வமான உண்மை இங்கு லாவோ ட்சு மூலம் ஒஷோவால் பேசப்படுகிறது .போதிதர்மர்த் தனது சீடன் வருகைக்காக ஒன்பது வருடம் சுவற்றைப் பார்த்துத் தீவிரமாக அமர்ந்து இருந்தவரலாறு நமக்குத்தெரியும் .அதோடு புத்தர் ,இயேசு தங்கள் வாழ்வில் சீடர்களைப் பெறுவதில் பெறுமதிப்புக் காட்டியதாகச் சொல்கிறார்.காரணம் அவர்கள் பெற்ற அந்த மெய்ஞானம் என்பது ஏற்கனவே புதைத்து வைத்து இருக்கும் புதையல் அல்ல.ஒவ்வொருவரும் தனக்குள் கண்டுபிடித்துக்கொள்ளும் ரகசியம் என்கிறார் அதாவது புத்தரோ , போதி தர்மரோ ,இயேசுவோ ,நபிகளோ தான் பெற்ற ஞானத்தை , மலர்ச்சியை என்ற உணர்வை ஒரு சீடன் மூலம் அறியப்பட வேண்டும் என்பதாலேயே சீடர்களைத் தேடுவதில் அவர்கள் அனைவரும் அக்கறை காட்டினார்கள் என்கிறார் .ஞானம் என்ற பூட்டின் சாவி நம் ஓவ்வொருவருக்குள்ளும் இயல்பிலேயே படைக்கப்பட்டு இருப்பதாகவும் அதை அவரவர் உணர வைக்கும் போதனைதான் ஞானிகளின் சீடர்களைத் தேடுவதில் இருந்து இருக்கிறது .

              சமரச சன்மார்க்கம் பேசியவர் வள்ளலார் , கடை விரித்தேன்.. கொள்வாரில்லை, இதனால் கடையைக் கட்டிவிட்டேன் என்று வேதனைப்பட்டது கூட இந்த வெளிப்படுதான் என்ற வார்த்தைகள் மூலம் அறியலாம்.இன்றும் கூட நாம் உலத்தில் பல மெய்ஞானிகளின் வார்த்தைகளை விட அவர்கள் உருவச் சிலைக்கும் ,அவர்களின் போதனைகளடங்கிய புத்தக்கங்களுக்கும் அவர்கள் பெயரில் பின்பற்றபடும் வழிமுறைக்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.புத்தர் கூடத் தனக்குப் பின் தன்னை வழி படக்கூடாது என்பதைக் கட்டளையாகச் சொல்லியிருந்தார் .நாம் கேட்கவில்லை.எனவே ஞானமடைந்தவர்களுக்குக் கோவில் கட்டுவதும் ,யாத்திரைப் போவதும் ,வழிபாடு நடத்துவதும்,புனித நூல்களில் தேடுவதும் , பூசாரிகள் ,மேதைகள் இவர்களிடம் தேங்கியிருப்பதாக நம்புவது , கடலுடன் கலந்த ஒரு ஆற்றை வழிபடுவதை விட்டு விட்டு அந்த ஆறு பாய்ந்து சென்ற வற்றிப்போன ஆற்றுப்படுகையை வழிபடுவதற்குச் சமம் என்று நெற்றிப் பொட்டுக்குள் தீ மூட்டுகிறார் ஓஷோ.


பாதை சரியாக இருந்தால் - நூல் வாசிப்பு , ஒரு பாய்ந்து கொண்டு இருக்கும் நதியின் தரிசனமாக உணர முடிகிறது.