முருகனின் அறுபடை வீடுகளில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமி மலை காவிரியும், அரசலாறும் பாய்ந்து குளுமையும் வளமும் உள்ள நான்காவது வீடு என்பது எல்லோருக்கும் தெரியும் . கோவில் அறுபது அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோவிலின் அறுபது படிகளும் - தமிழ் ஆண்டுகள் அறுபதைப் குறிப்பிடுகிறது என்பதை அங்கு போய் கவனித்து வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.அதில் 28 படிக்கு ஒரு சிறப்பு அம்சம் இருப்பதை ஞாபகம் வைத்து இருக்கிறீர்களா ? இல்லையென்றால் நீங்கள் இந்தக் கதை படிக்கவேண்டும் !
அது வேறு ஒன்றுமில்லை. கைலாசத்தின் வாசல் முன் விளையாடிக் கொண்டிருந்த நம் முருகப்பெருமானை அங்கு சிவபெருமானை தரிசிக்கவந்த பிரம்மன் கண்டு கொள்ளாமல் சென்று, கோபத்தை சம்பாதித்தால் முருகன் பிரம்மனை அழைத்து வேதங்களை ஒப்பிக்கச் சொல்லி இம்போசிசன் கொடுக்க , பிரம்மன் ஓம் என ஆரம்பிக்கவும் முருகன் நிறுத்தி ஓம் என்பதன் பொருளைக் கேட்க, பிரம்மனுக்குத் தெரியாமல் போக இது கூட தெரியாமல் எப்படி படைப்புத் தொழில் எவ்வாறு செய்ய முடியும் என கேட்டு பிரம்மனை சிறையில் அடைத்து படைப்புத் தொழிலைதானே செய்தாராம் .( சிவ பெருமான் முருகன் என்று இங்கு நான் சொல்வது எதாவது ஓரு அரசியல் கட்சியின் சொந்த விசயத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்தினால் மன்னிக்கவும் .அதுவல்ல ! )
உடனே ஓடி வந்த சிவபெருமான் பிரம்மாவை விடுவிக்குமாறு முருகனை சொன்னாராம்.சரி பிரம்மன் பிரணவம் சொல்லவில்லை ஃபெயிலாகி விட்டார் எங்கே நீ பிரணவத்தின் பொருளை சொல்லு பார்க்கலாம் என்று சிவன் கேட்கவும், முருகன் தந்தைக்கே ஆசானாகி பிரணவத்தின் பொருளை இந்த சுவாமி மலையின் 28 ஆவது வதுபடியில் நடுச்சுற்றில் சிவ பெருமானுக்கு முருகன் உபதேசித்தாராம்.அதாவது தகப்பனுக்கே முருகன் உபதேசித்ததால் அவர் தகப்பன் சுவாமி ஆனார் என்கிறது புராணம் .அங்கு மட்டுமா நடந்தது தினமும் நம் வீடுகளிலும் நடக்கத்தான் செய்கிறது அவசரமான இந்த உலகத்தில் சம்பாதிப்பு மட்டும்தான் வாழ்க்கை என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டு இருக்கும் நம்மைப் போன்ற பெற்றோர்களுக்கு வீட்டுகுழந்தைகள் தினமும் எதாவது ஒரு பாடம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் .குழந்தைகள் தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் வேண்டுமானால் நூற்றுக்கு குறைவாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கையில் அவர்களிடமிருந்து நாம் தவறவிடும் பாடத்தால் வாழ்க்கையையே தொலைத்து விட்டு கடந்து போய்கொண்டு இருக்கிறோம் பல சமயங்களில். அது மாதிரி ஒரு சம்பவத்தில் உங்களோடு நானும் ...
மூன்று மாதம் முன்பு ஒரு நாள் ,அலுவலகம் விட்டுக்குள் நுழைந்தவுடன் , அப்பா ஸ்கூல்ல உங்கள வரச்சொன்னாங்க என்றான் பையன் . கடந்த இரண்டு வருடம் போராடி இப்போதுதான் ஐந்தாவது வகுப்புக்கு இடம் கிடைத்து அப்பாடா என்று மூச்சு விடுவதற்குள் நான்காவது முறையாகக் கூப்பிட்டு விட்டார்கள் .
முதல் முறையாகப் போன போது உங்கள் பையனின் நான்காவது படித்த ஸ்கூல்ல இறுதியாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் வாங்கி வர வேண்டும் என்றார்கள் .பழைய பள்ளிக்குப் போனேன் .பொதுவாகவே இந்தப்பள்ளி வேண்டாம் என்று வெளியேறிய பிறகு திரும்பிப் போனால் என்ன மரியாதை இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் .ஆனால் பரவாயில்லை .ஒரே ஒரு முறை அலையவிட்டு மதிப்பெண் பட்டியலுக்குப் பதிலாக இப்போதெல்லாம் க்ரேடு சிஸ்டம்தான் என்று குறித்துக் கொடுத்தனுப்பினார்கள் .அதைப் புதிய பள்ளி ஒத்துக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியது .எங்களுக்குப் பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று அடம் பிடித்தது .
மீண்டும் பழைய பள்ளிக்குப் போன போது ,அலுவலகத்தில் பணிபுரியும் பெண் சாவகாசமாகத் தின்று கொண்டிருந்த பருப்பு வடையைக் கீழே வைத்து விட்டு அதெல்லாம் தேடி எடுத்துத்தான் தரவேண்டும் என்று சலித்துக்கொண்டு, இரண்டு நாள் கழித்து வரச்சொன்னது.அதையும் வாங்கிக் கொடுத்த வார இறுதியில் , மூன்றாவது முறை EMIS - Educational Management Information System எண் வேண்டும் என்பதைக் கேட்டு அனுப்பினார்கள் .அது நாம் பள்ளியில் சேர்க்கும் போதே மாற்றுச் சான்றிதழ் மேல் குறிப்பிட்டு இருக்கும் 16 எண்கள் கொண்டது .தாங்கள் வாங்கி வைத்துக் கொண்டதை மீண்டும் எடுத்துப் பார்க்கக் கை வலிக்கும் போல ! என்ன செய்வது ? அதையும் கொடுத்துத் தொலைத்து விட்டு வந்தேன் .இப்போது நான்காவது முறையாக ...
எதற்காக இருக்கும் ? எனக்குச் சற்று லேசாய் உதறல் .ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் எதுக்குடா என்றதற்குப் பையன் மீண்டும் அதே வார்த்தை சொன்னான்.அடுத்த நாள் மாலை பள்ளியிலிருந்து அழைத்துப் வரப் போன போது ,உங்க பையனுக்கு அபாக்கஸ் , ஹேண்ட் ரைட்டிங்,ஹிந்தி எக்ஸாம் வைத்துப் பார்த்தோம் .எங்களுக்கு ஒரு ஸ்டாண்டர் இருக்கு நாங்க எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. அபாக்கஸ் மட்டும் பள்ளியிலேயே டூயூசன் எடுக்கிறோம் .பணம் ஆஃபிசில் கட்டி விடுங்கள் என்றார்கள் . ஹேண்ட் ரைட்டிங் சனிக்கிழமை மட்டும் .அதாவது அது கட்டாயம் என்று சொல்லாமல் சொன்னார்கள் .ஹிந்தி எங்காவது வெளியே சேர்த்து விட்டுக்கொள்ளுங்கள் என்றார்கள் .எனக்கு ஒன்றுமே புரியவில்லை . மூன்றாவது வகுப்பு வரை அழகாக எழுதிக்கொண்டு பிறகு இப்போதெல்லாம எழுத்து சுமாராய்த்தான் எழுதுகிறான்.ஹிந்திச் சுமாராய்த்தான் வரும் . ஆனால் கடைசி வரை பழைய பள்ளியில் அபாக்கஸ் எக்ஸாமில் நூற்றுக்கு நூறு வாங்கிவிடுவான் .இது இல்லாமல் பழைய பள்ளி நடந்த பல போட்டியில் நிறையச் சான்றிதழ் வாங்கியிருக்கிறான் .அப்புறம் எப்படி இங்கு இது போதாது என்று புறக்கணிக்கிறார்கள் ? காசு பண்ணும் வேலையா ? நமக்குத்தான் இப்படிப் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டது என்ற சாமான்யப் பெற்றோர்கள் போலத் தகுதிக்கு மீறிய ஆசையில் அதிக டொனேசன் கொடுத்துச் சேர்த்து விட்டு ,ஏமாந்து விட்டோமா ?
பையன் படித்த பழைய பள்ளியின் மிஸ் ஒருவர் வீடு போனேன் .அவர்கள் சொன்ன விசயம் அதிர்ச்சியாக இருந்தது .ஆறாவது வகுப்பு வரை எல்லாத் தனியார் பள்ளிகளிலும் கேட்கிற தொகைக் கொடுக்கவும் , பக்கத்து வீடு எதிர் வீட்டில் என் பையன் ஒன்பது பாடத்திலும் முதல் க்ரேடு என்று ஜம்பம் பேசும் பெற்றோர்களின் அபிமானத்தை அள்ளிக்கொள்ளவும் , தேர்வுக்கு வரப்போகும் வினாக்களைக் குறித்து அனுப்புவது ,தேர்வு நடக்கும் ஹாலில் விடையைச் எழுதச் சொல்லித்தருவது ,எதாவது ஒரு போட்டி நடத்திச் சான்றிதழ் ,மெடல்கள் கொடுத்து நம்ம பிள்ளையும் பக்கா என்று மார்த் தட்டிக்கொள்ளத் தூண்டுகிறார்கள் .இதை நாம் மற்றவர்களிடம் சொல்லி நமக்குத் தெரியாமல் அந்தப் பள்ளிக்குக் குழந்தைகளைச் சேர்க்கையை அதிகரிக்கவும் நம்மை ஏஜெண்டுகளாக்கி விடுகிறார்கள் என்ற தந்திரம் அப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்தது .இது தெரியாமல் விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் என்று அள்ளிக் கொடுக்கும் அளவுக்கு நம் பிள்ளை நல்லாப் படிக்கிறான் என்ற பெற்றொர்களின் மனப்பான்மையைக் காசாக்கிக் கொள்கிறார்கள் .பிள்ளைகளின் திறமை அடுத்தப் பள்ளிக்கு மாற்றும் போது கைப் பிள்ளை வடிவேல் சட்டை போல எல்லாப் பக்கமும் கிழிந்து தொங்குகிறது !
இந்தப் புதிய பள்ளியில் முதல் காலாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியலை வகுப்பில் பெற்றொர்களை அழைத்துவரச்சொல்லிக் கொடுக்கிறார்கள் .எந்தப் பாடத்தில் ஏன் குறைவாக இருக்கிறான் என்று நம் முன்னே அவனிடம் விசாரணை நடக்கிறது .அதற்குப் போதிய ஆலோசனை வழங்குகிறார்கள் .பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு தொடர்பை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள் . இதுவரை பழைய பள்ளிக்கு ஒருமுறை கூட வாய்ப்புத் தந்தது இல்லை .அங்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெற்றொர்களுக்குக் கூட்டம் போடுவார்கள் .யாராவது புகழ்ந்து பேசினால் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற ஏ.ஆர். ரகுமான் அளவுக்கு உயர்ந்து நிற்பார்கள் .கொஞ்சம் அது இப்படி இது அப்படி என்று ஆரம்பிப்பவர்களைத் தனியே வந்து அலுவலகத்தில் சந்திக்கச் சொல்லி ஆஸ்கருக்குப் போன தமிழ் படத்தைப்போலத் திருப்பி அனுப்பி விடுவார்கள் .
போன வாரம் புதிய பள்ளியில் அம்மாமார்களுக்குச் சமையல் போட்டியும் , கோளப்போட்டியும் வைத்து இருந்தார்கள் .அப்பாமார்களுக்குக் கட்டுரைப் போட்டி வைத்து மூன்றுவிதமான தலைப்புக் கொடுத்தார்கள் .நான் மிகச் சிரத்தையாக நிறையக் குறிப்புகளைத் தேற்றிக்கொண்டு ஒரு மணி நேரத்தில் ஏழுபக்கம் எழுதி, வழக்கம் போலக் கையில் இருக்கும் பேப்பரைப் புடுங்கும்வரை எழுதித் தள்ளித்தான் வந்து இருக்கிறேன் .அடுத்த வரம் முடிவு சொல்வார்களாம். எப்படி எழுதினீங்கன்னு பையன் விலா வரியாகக் கேட்டான் .சொன்னேன் .பராவாயில்லை இரண்டாவது இடமாவது கிடைக்கும் என்று பெஸ்ட் ஆஃப் லக் சொன்னான் .எனக்கு மார்க் போட அவனுக்கும் காலம் ஒரு வாய்ப்பைக் கொடுக்கத்தான் செய்து இருக்கிறது .நல்ல வேளை இரண்டாவது இடமாவது சொன்னானே?
நேற்று இரண்டாவது இடைத்தேர்வு மதிப்பெண் போட்டுப் பேப்பர்கள் கொடுத்து அனுப்பியிருந்தார்கள் .ஒன்பது பேப்பரில் ஏழுப்பாடத்தில் தொன்னூறுக்கு மேலேயும் ,வழக்கம் போல ஹிந்தியில் 72ம் சமூக அறிவியலில் மட்டும் 100 என்று போட்டு அதன் மேல் சிவப்பு மையில் திருத்தப்பட்டு 98 என்று போட்டு இருந்தது . என்ன ஆச்சுடா என்றதற்கு , ஒரு மிஸ்டேக் இருந்தது போய்க் காட்டி என் மார்க்கைக் குறைத்துக்கொண்டேன் என்றான் .ஏண்டா 100 போட்டதற்கு அப்புறம் சந்தோசப்படாம 98 ஆக்கிட்டே என்றேன் நான் விடாபிடியாக ...
தப்பா எழுதினதிற்கு மார்க் வாங்கக் கூடாதுப்பா என்றான் ப்ரணவ் .
ஹாட்ஸ் ஆப் பிரணவ்...
பதிலளிநீக்குலவ்லி