வெள்ளி, 11 நவம்பர், 2016

கடவுளின் கையெழுத்து - மாயங்களின் சங்கமம் The Walled Garden of Truth




                  நம் புத்தகச் செஃல்பில் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இரண்டு புத்தகங்களைப் பற்றிப் பேசும் ஒஷோ முதலில் ஜப்பானிய ஜென் மாஸ்டரின் Kamahi Sosa வுடைய Mind Inscription’ :Hsin-hsin Ming விழிப்புணர்வுப் பாதை’ என்னும் புத்தகமும் ,


                  இரண்டாவதாக ஆஃப்கன் சூஃபி ஞானி Hakim Sanai யின் The Walled Garden of Truth: The Hadiqa ஹடிகாத் தோட்டம்’ என்னும் தத்துவக் கவிதைப் புத்தகமும் இடம் பெறுகிறது . ஓஷோவின் சொற்பொழிவுகள் Unio Mystica என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்தது அதை மாயங்களின் சங்கமம் - தொகுதி -1 ஐ தமிழாக்கம் செய்து தந்து இருக்கிறார் சுவாமி சியாமானந்த். அதைப்பற்றிய நம் பார்வைதான் இந்தப்பதிவு . 

கவி மூலம்... 

யார் இந்த ஹக்கிம்சனாய் ? 

                     தெற்கு ஆஃப்கானித்தின் கசானாவின் Ghazni சுல்தானாகிய Bahram Shah வின் அரசவைக் கவிஞர். ஹக்கிம்சனாய் சுல்தானோடு இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்து கொண்டு இருந்தபோது வழியில், சுற்றிலும் சுவர் சூழ்ந்த ஹடிகாத் தோட்டத்தைக் கடக்கும் போது ஒரு அற்புதமான இசையும் ஒலியும் கலந்து வருகிறது .போர்புரியும் உணர்வில் விரைந்து கொண்டிருந்த சுல்தான் பஹ்ரம் ஷாவின் மனநிலையை இது கவர்ந்து இழுத்தது.ஏற்கனவே சுல்தான் இசைப்பிரியர் ஆனால் அந்த ஒலியும் இசையும் இதுவரை அவர் கேட்டு உணராத , அறியாத ஒன்றிலிருந்து அறியாத ஒன்றுக்கு தொடர்பு கொள்ள முயற்சிப்பது போன்றதாக அந்த இசை வடிவம் இருப்பதாக உணர்ந்தார் .ஒரு கணம் தன்னையயும் அறியாமல் ஸ்தம்பிக்கச் செய்த அந்த இசைக்கும் பாட்டுக்கும் சொந்தக்காரர் யாரெனெ அறிய அந்த ஹடிகாத் தோட்டத்திற்குள் நுழைந்தார் சுல்தான்.அவரோடு நுழைந்தவர்களுல் இந்தப் புத்தகத்துக்குச் சொந்தமான ஹக்கிம்சனாயும் ஒருவர். 


                     உள்ளே லை-குர் என்ற சூஃபி ஞானி வரவேற்றார் .அவர்தான் அந்த ஹடிகாத் தோட்டதின் இசை,நடனம்,பாடல் அனைத்துக்கும் சொந்தக்காரர்.ஆனால் அவர் மக்களால் குடிகாரர் என்று அழைக்கப்பட்டார் . இஸ்லாத்தில் மதுரசம் குடிப்பது பாவம் குர்‍ஆன் 114 சூராக்களில் 5:90 ஆவது வசனம் பேசுகிறது .அப்படி இருந்தும் லை-குர் அதை மீறினாரா ? இல்லை என்கிறார் ஓஷோ.இது உலகத்தின் மொத்த ஞானிகள் அனைவரின் நடத்தைச் சார்ந்த விசயம் என்கிறார்.உண்மையாகவே ஆன்மீகம் தேடுபவர்களைத் தவிர மற்றவர்கள் கண்ணில் தன்னை அணுகவிடாமல் செய்யவே தன்னைப் பைத்தியமாகவோ ,அசிங்கமாகவோ , குடிகாரர்களாகவோ காட்டிக்கொள்கிறார்கள் .ஆனால் உண்மையில் லை-குர் போன்ற ஞானிகள் 24 மணி நேரமும் தெய்வீகத்தைக் குடித்துக்கொண்டு உலகை மறந்து வாழ்கிறார்கள் .அவர்கள் பேச்சு மற்றவர்களுக்கு வேண்டுமானால் உளறல்களாக இருக்கும் ஆனால் அவர்களைப்போலப் பரவசநிலையை அடைந்தவர்கள் இனம் கண்டுகொள்வார்கள் என்கிறார் ஓஷோ. 




 ஹடிகாத் தோட்டம் என்ற புத்தகம் பிறந்தது . 

                  லை-குர் சுல்தானையும் , ஹக்கிம்சனாயும் இந்தியா மீது படையெடுத்துச் செல்லும் செயலை, உங்கள் குருட்டுத்தனத்திற்கு வாழ்த்து என்று வார்த்தைப் பிரயோகம் செய்கிறார்.இது நாட்டையாளும் சுல்தானைக் கோபமூட்டுகிறது .ஆனால் சுல்தானின் அரசவைக் கவிஞர் ஹக்கிம்சனாயிற்குள் இதைக் கேட்டவுடன் அவருக்குள் ஏதோ ஒன்று மரணமடைந்து ஏதோ ஒன்று பிறந்தது போன்ற பேரின்ப அனுபவத்தைப் பொழிந்தது .லை-குர் என்ற ஞானியின் அகப்பார்வையால் ஆட்கொண்ட சனாய் சிரம் தாழ்த்திப் பாதம் தொட்டு வணங்கி மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் விட்டார் .ஹக்கிம்சனாய் அப்போதே மெக்காவிற்குப் புனிதப்பயணம் செய்யச் சுல்தானிடம் அனுமதிக் கேட்டார்.ஆனால் சுல்தான் அவரைத் தடுத்ததோடு நிற்காமல் தனது ராஜ்ஜியத்தில் பாதியை அளித்துத் தன் சகோதரியையும் திருமணம் செய்விக்கிறேன் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறார் .அதை மறுத்து சனாய் மெக்காவிற்குப் புனிதப்பயணம் செய்து விட்டு வரும்போது இந்த ஹடிகாத் தோட்டம் என்ற புத்தகம் பிறந்தது .மேலும் இந்தப்புத்தகம் எழுதப்படவில்லை. பிரபஞ்சத்திலிருந்து வந்த ஒரு பரிசுப்பொருள். ஹக்கின்சனாய் மூலம் லை-குர் என்ற பைத்தியக்கார மனிதருக்குத் தந்த நன்றி கடன்தான் இந்தThe Walled Garden of Truth: The Hadiqa ஹடிகாத் தோட்டம்’ என்கிறார் ஓஷோ . 



சூஃபிக்கள் இஸ்லாமியர்கள்தானே ? 



                 பொதுவாக ஞானிகள் எல்லா மதங்களில் இருந்தாலும் அவர்கள் தங்கள் மதங்களின் தன்மையை வலியுறுத்துவதில்லை .இன்னும் சொல்லப்போனால் எல்லா மதத்தின் ஞானிகளும் இறைக்கொள்கையில் ஒரு பொதுப்புள்ளியில் இணைந்தவர்களாகவே உணர முடிகிறது .தங்கள் மதங்களின் கொள்கைகளை விட்டுச் சற்றே விலகி நடக்கும் தோற்றம் கூட இருப்பதை அந்தந்த மதக்கொள்கையாளர்கள்  சொல்கிறார்கள் .சூஃபி ஞானிகளை இஸ்லாமியர்களா என்பது கேள்வியாக்குவதன் காரணம் இஸ்லாத்தில் இருப்பவர்கள் ஒன்று குர்ஆனைப் பின்பற்றவேண்டும் அல்லது முகமது நபி காட்டித்தந்த வழியில் நடக்க வேண்டும். ஆனால் சூஃபிக்கள் துறவு மேற்கொள்வது ,இறைவனை நெருங்குவதற்குக் கூட்டமாக அமர்ந்து கொண்டு இறைவனின் புகழைப் பாடுதல், இசையாலேயே இறைவனை நெருங்குகிறோம் என்று குர்ஆனுக்கு முகமது நபி கொடுக்காத பல பொறுள் விளக்கம் கொடுப்பது, இறந்த பெரியார்களைத் தர்ஹா கட்டி அங்கு இஸ்லாம் சொல்லாத சில செயல்கள் செய்வது ,மேலும் சாதாரண நிலையிலிருந்து தங்களை மேம்பட்டப் பக்குவப்பட்ட மக்களாக அவர்களைப் பாவித்துக் கொண்டு புதிதாகச் சில வணக்கங்களையும் கடைப் பிடிக்கின்றனர் என்ற இஸ்லாத்தின் மதக்கொள்கைகளுடன் கருத்து முரண்களும் இருக்கிறது ! 

ஞானிகளின் பாதைகள் எல்லோருக்கும் புரிய வேண்டும் அவசியம் இருப்பதை நிச்சயப்படுத்த முடியவில்லை . 


உன்னை நீயே கரைத்து விடு ! 

                 ஹக்கிம் சனாயின் ஆன்மீகக்கவிதைகளுக்கான விளக்கம் கொடுக்கும் வழியில் தனது லாவகமான ஆன்மீகப் பாதையை இயல்பான ஒன்றாக விளக்க முயல்கிறார் ஓஷோ.நாம் பொதுவாக நமக்கு வெளியே நடக்கும் செயல்களுக்கான முரண்பாடுகளை ,கஷ்டங்களை ,தொந்திரவுகளைத்தான் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதாகப் புரிந்து வைத்து இருக்கிறோம் .அதாவது வெளியே உள்ள நிகழ்வை மட்டுமே ஏற்றுக்கொள்வதைச் சாதாரணமாகப் பேசிவிடுகிறோம் .ஆனால் நீங்கள் யாராவது ஒரு நபரினால் நிராகரிக்கப்படும் போது ,அவர்கள் அன்பு கிடைக்காத போது ,அழகான பெண் திரும்பியே பார்க்காத போது வெளியில் உள்ள வலிகளை விட உள்ளே ஏற்படும் வலிகள்தான் அதிகம் .அதைப்பற்றிச் சனாயின் கவிதைகள் பேசுகின்றன. 



         உங்களுக்கு ஏற்படும் கோபம் ,சோகம், காமம் எதையும் வெறுத்து ஒதுக்காதீர்கள் அப்படிச் செய்தால் உங்களது சக்தியிலிருந்து வெளியேறி ,நீங்கள் உங்களுக்குள்ளேயே இரு பிரிவாகிப் பலவீனப்பட்டு விடுவீர்கள் என்கிறார் சனாய்.அந்தச் சோகம் ,கோபம், கவலை,எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொள்ளுங்கள் அதனால் அவையெல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள் .அது உங்களது சக்தி .உங்களுக்கு உங்களைக் காட்டும் பிரபஞ்சத்தின் சக்தி . அதனால் எதிலிருந்தும் வெளியேறாதீர்கள் .நல்லது ,கெட்டது ,கண்டனம்,மதிப்பீடுகள் ,தீர்ப்புகள் இல்லாமல் அப்படியே வெறுமெனெ ஏற்றுக்கொள்ளும்போது உங்களுக்குள் ’அறிதல்’நிகழ்கிறது அந்த அறிதலே கடவுள் என்கிறார் தீர்க்கமாகச் சனாய்.சுருக்கமாக உன்னோடு எதற்கும் சண்டையிடாதே சூஃபிக்கள் மொழியில் ஃபானா "to die before one dies" என்ற நிலைக்கு உன்னைக் கரைத்து விடு.எப்போது நிபந்தனையின்றி உன்னை ஏற்றுக்கொள்கிறாயோ அப்போது நீ கடவுளுக்கு நெருக்கமாகி விடுவாய் என்று ஆசீர்வதிக்கிறார்..இதே ஃபானா நிலையில்தான் முகமது நஃபி அவர்களுக்குக் குர்ஆன் இறங்கி வந்ததாகக் கூறப்படுகிறது . 



மௌனத்தின் ஓசை . 


        ஹக்கிம் சனாய் மிக அதிக மௌனத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.மௌனம் ஒரு விதைப் போன்றது .அப்படிப்பட்ட விதையிலிருந்து வரும் வார்த்தைகள் மலர்கள் போன்றவை.அதன் அமைதி அழகானவை .அந்தப்பாடல்கள் நறுமணத்தைச் சுமந்து வருகிறது என்கிறார்.புத்தர் பாகாவுதீன்,கபீர்,கிறிஸ்து,மகாவீரர்,சோசன் மற்றும் சனாய் இவர்களின் தாங்களாகப் பேசுவது கிடையாது .அவர்கள் வெற்று மூங்கில்கள் ,புல்லாங்குழல்கள் அவர்கள் மூலமாக வருகிற ஒரு பாடலைப் பாடுகிறார்கள்.ஆனால் அது அவர்களுக்குச் சொந்தமானது அல்ல.அந்தப்பாடலின் கீழே உள்ளக் கையெழுத்தானது கடவுளைடையதாக இருக்கிறது என்கிறார் இந்தக் கவிதைகளின் தெய்வீகத்தன்மை பற்றி ஓஷோ. 




ஓஷோவின் தனித்தன்மை

                 பொதுவாகவே ஓஷோ தன்னுடையை எல்லச் சொற்பொழிகளிலும் ஆன்மீகத்தன்மைக்குக் கொடுக்கும் முக்கியத்தோடு அன்றைய உலகின் நாட்டின் நிகழ்வுகளையும் ,அவருக்கே உரிய நகைச்சுவைக் கதைகளையும் ,சம்பவங்களையும் விட்டுக்கொடுக்கமாட்டார்.அதைவிட ஆன்மீகம் சார்ந்த விஞ்ஞான வளர்ச்சியினைக் குறிப்பிடத் தவறமாட்டார்.உதாரணமாக அவரின் கம்யூனின் சந்நியாசிக்குக் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது மனிதனின் மனதின் ஐந்து நிலைகளை அற்புதமாக எடுத்து விளக்குகிறார். 



              இந்த உலகில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளப்பயன்படும் முதலாவது மனம் ,அறிதல்,நினைத்தல்,விளக்கம் கொடுத்தல் ,பகுத்தறிவு ,கொஞ்சம் விழிப்புணர்வு போன்ற நிர்வாகம் செய்வது உணர்வு மனம் - Conscious Mind.இதன் மூலம்தான் நாம் நம் உலகத்தைப் பார்க்கிறோம். 



            அடுத்து அதற்குப் பின்னால் உணர்வு மனதை விட ஒன்பது மடங்கும பெரியதான மற்றும் ஒன்பது மடங்கு அதிகச் சக்தியுள்ளதுமான இரண்டாவது மனம், உணர்விழந்த மனம் Unconcious Mind நமது எல்லா உள்ளுணர்வுகள் ,அகச்செயல்கள் ,உடல் இயந்திரநுட்பங்கள் ,உணர்வுகள் ,உணர்ச்சிகள் முக்கியமாகப் பிறவிக்குணத்தைக் கொண்டுள்ளது .இந்த மனதின் Hypnosis ஆராய்ச்சியில்தான் சிக்மண்ட் ஃப்ராய்டு Sigmund Freud தன் வாழ்வையே அற்பணித்தார். 




           இதற்கும் பின்னால் உள்ள மிக முக்கியமான நவீன மனவியல் ஆராய்ச்சி நிபுணர்க் கார்ல் குஸ்டவ் ஜூங் karl kustav joonk அவர்களின் கண்டுபிடிப்பால் மூன்றாவது மனமான - திரண்ட உணர்விழந்த மனம் Collective unconscious mind மறைந்து இருப்பதாகவும் நம்முடைய ஒட்டுமொத்தக் கடந்த காலத்தையும் பதிவு செய்து வைத்துள்ளது என்கிறார்.கடந்த காலம் என்றால் நீங்கள் பிறந்ததிலிருந்து இன்று இந்தப் பதிவை வாசிக்கும் வரையுள்ள காலப்பதிவு அல்ல .உயிர்களின் ஆரம்பமாகக் சொல்லப்படும் ஓருயிர் தாவரம் முதல் தொடங்கிப் பரிணாம வளர்ச்சிப்பாதையில் இன்றுள்ள மனிதப்பிறவி வரை நாம் எண்பத்து நான்கு மில்லியன் பிறவிகளைக் கடந்து வந்த வரலாறுதான் நம் உண்மையான கடந்த காலம். அதன் ஒட்டுமொத்தப் பிறவிகளின் அனுபவங்களும் இந்த மனதில் அடங்கியுள்ளதாக அதன் பெருமையை எடுத்துச்சொல்கிறார் ஓஷோ. 



         இதுவரை மனதின் கீழேயுள்ள மூன்று அடுக்குகள் பற்றி மேலைநாட்டு விஞ்ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறது.ஆனால் உணர்வு மனதிற்கு இதற்கு மேலே உள்ள நான்காவது மனமான - மேன்மையான உணர்வு மனம் Super conscious Mind பற்றி நமது ஞானிகள் மட்டுமே பேசியிருப்பதாகவும் ,இது உணர்வு மனதை விடவும் ஒன்பது மடங்குப் பெரிதெனெப் பேசுகிறார் ஓஷோ. 



     இதற்கும் மேலேயுள்ள ஐந்தாவது மனமான - பிரபஞ்ச மனம் Universal conscious Mind இது தெய்வீக மனம் அல்லது கடவுள் மனம் அல்லது தாவோ என்று அழைக்கப்படுகிறது.இதுதான் தண்ணுணர்வின் இறுதி நிலை . 



விடைபெறும் போது .. 



                   ஓஷோ எந்த ஒரு நூலின் வாசிப்பிலும் இதுபோன்ற  அரிதான , அற்புதமான கருத்துக்களை நிறைந்து கிடப்பது தவிர்க்கவே முடியாது .இந்த நூலில் எழுத்துப்பிழை  இருப்பதைத் கவனித்து இருக்கலாம் . இன்னொன்று சொல்லியே ஆகவேண்டும் - மொழிபெயர்ப்பாளர் சுவாமி சியாமானந்த் பற்றி.. அவர் ஓஷோவின் நகைச்சுவைக் கதைகளை மொழிபெயர்க்கும்போது ஆபாசம் என்று சில வார்த்தைகளைத் தணிக்கைச் செய்துள்ளார் . அது அவர்ஓஷோ தணிக்கைக்கு அப்பாற்பட்டவர் என்பதை எப்படி மறந்து போனார் ?. 



 ஹக்கிம்சனாயின் கவிதை தரிசனம் . 


ஞானிக்கு நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் மிக உயர்ந்த நன்மையாகும் 
எந்த ஒரு தீமையும் கடவுளிடமிருந்து வருவதில்லை. 
அவரிடமிருந்து தீமை வருகிறது என்று நீ நினைத்தால், 
நீ அதை நன்மையாகப் பார்ப்பது நல்லது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக