வெகு நாளுக்குப் பிறகு உறவினர் ஒருவருடன் அலைபேசியில் உறவாடிக்கொண்டு இருக்கும் போது, சட்டெனெக் கால் தடுக்கி விழுந்த மாதிரி ஒரு தகவலைச் சொன்னார் .உனக்கு, உங்க அம்மா சொந்தத்தில் முத்தூரில் ஒரு பெண் பார்த்தோம் ஞாபகம் இருக்கா ? அந்தப் பெண்ணோட ... என்று அவர் தொடர்ந்து சொன்ன விசயங்கள் எல்லாமே கசப்பாக இருந்தது . ஏன் இவருடன் தொடர்பு கொண்டோம் என்று எங்கோ வலித்தது .
கை விட்ட குல தெய்வங்கள் !
பஞ்சபாண்டவர்கள் போல நாங்கள் ஐந்து சகோதரர்கள் . முதல் அண்ணனுக்குப் பெண் பார்க்கும் முன் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றானத் தந்தை வழிச் சொந்தத்தில் பெண் பார்ப்பதாத் தாய் வழியில் பெண் பார்ப்பதா என்ற கேள்வி எங்கள் வீட்டில் எழவில்லை .காரணம் அப்பா வழியில் நெருங்கிய சொந்தம் என்று சொல்லிக்கொள்ளக் குலதெய்வமும், காவல் தெய்வமும் தவிர யாருமில்லை.எனவே இந்தப் பஞ்சாயத்தை எங்கள் காவல் தெய்வம் முன் ஒரு அமாவஸ்ய நாளில், பூக்கட்டிப் போட்டுக் குழந்தயை விட்டு எடுக்கச் செய்தார்கள் .கடவுள் மிக நல்லவர் .அந்த வாய்ப்பும் மறுத்து விட்டார்.அம்மாவுக்கு மிகவும் வருத்தம் .அம்மாவுக்கு அப்பா மேல் இருக்கும் வருத்ததையும் விட அவர் குலதெய்வம் மேல் இருந்த வருத்தம் நான்கு அண்ணன்கள் திருமணம் நடக்கும் வரை இருந்தது.ஒவ்வொரு அண்ணன்கள் திருமணம் முடிந்தவுடனும் வந்து அழுவார்கள் . என் பக்கம் சொந்தமெல்லாம் தொடைச்சிடும் போல என்ற வார்தையும் கூடவே வரும் .
பிள்ளையாருக்கு பெண் பார்த்த கதை !
இதை மாற்றிக் காட்ட வேண்டும் .அம்மா சொந்தம் துடைத்துப் போய் விடக்கூடாது என்ற வைராக்கியத்தில் எனக்கு கட்டினால் அம்மா சொந்தம் என்று சொல்லி விட்டேன் .தீர்மானம் என்னவோ எடுத்தாகி விட்டது.ஆனால் அது நடைமுறைக்கு வந்து போது பிள்ளையார் பெண் பார்த்தக் கதையாய் ஏகப்பட்ட பிரச்சனைக் காது மூக்கு வைத்துத் தலை விரித்தாடியது .அம்மாவின் சொந்தங்கள் அதிகம் விவசாயத் தொழில் நம்பியவர்கள்.அவர்களுக்கு மாப்பிளைப் பெயரில் ஒரு குழி நிலமாகவாவது இருக்க வேண்டும் என்றார்கள் .நாங்கள் இருக்கும் வீடு இரண்டே கால் செண்ட் அளவு கூடக் கிடையாது அதில் ஐந்தாவதான என் பங்கு ஆகாயத்தில்தான் பிரிக்க வேண்டும் .நிலத்தில் பிரித்தால் பக்கத்து வீட்டுக்காரன் பங்கில்தான் முடியும் .அவர்கள் எருமை மாடுகள் வைத்துப் பால் வியாபாரம் செய்பவர்கள் .இது தெரிந்தால் எனக்கு ரெண்டு மாடு கொடுத்து மேய்க்க அனுப்பி விடுவார்கள் !
அடுத்து அரசு வேலையாவது இருக்க வேண்டும் என்றார்கள் .அப்போது நான் ஐடிஐ முடித்து இருந்தேன் .மேலும் அப்ரண்டீஸ் அரசுப் போக்குவரத்தில் முடித்து இருந்ததால் காத்து இருப்போர்ப் பட்டியலில் இருந்தேன் .அதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் .இப்படிச் சில பெண் வீடுகள் பெண் தர மறுத்தது.இந்த நிலையில் ஒரு ஆறுதலுக்கென்று ஒன்று விட்டச் சகோதரர் மூலமாக ஒரு பச்சைக்கொடிக் காட்டப்பட்டது .
நல்ல சகுனம் !
பெண் வீடு குக்கிராமம்.ஒரு நல்ல திங்கள் கிழமை நல்ல நாள் பார்த்து முதல் நாளே இன்னொரு சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்து காலை 6 - 7 க்குள் ராகு பகவான் பார்ப்பதற்கு ( 7.30 - 9.0 ) முன் போய்ப் பார்க்க இரண்டு இரு சக்கர வாகனங்களில் போய் இறங்கினோம்.நாங்கள் பார்க்க வரும் தகவல் இடைத் தகவலரால் சரியாக அறிவுறுத்தப்படவில்லை .வீடு மொத்தமும் தூங்கிக்கொண்டு இருந்தது .கதவைத் தட்டிய போது . பால்காரர் வந்ததாக நினைத்துக்கொண்டு , பாத்திரத்தோடு ஒரு மத்திய வயது பெண் மணிக் கதவைத் திறந்தார்.விசயம் கேட்டுச் சிரித்த சத்தம் எங்களுக்குக் கேட்டது .தட்டியவர் திரும்பி வந்து சாலை வீட்டில் காத்து இருக்கச் சொன்னார்கள் என்றார் . அண்ணன் , அந்த அம்மாள் பால் சட்டியோடு வந்தது நல்ல சகுனம் என்று ஆருடம் சொன்னார் .சில சமயம் யார் சொன்னாலும் நல்லதாகவே தோணும் !
அந்தச் சாலை வீடு, இளைத்துப்போன எருமை மாட்டின் முதுகு போலத் தென்னைக் கீற்றுக்களால் வேயப்பட்டு இருந்தது .காத்து இருந்தோம் . அண்ணன் மணி 6.50 என்று சொன்னார்.வந்து விட்டார்கள் என்றார் . மூன்று பேர்ப் போகக் கூடாது என்று ஒரு உள்ளூர்க்காரர் ஒருவரைக் கூட்டிக்கொண்டார்கள் .வந்ததிலிருந்தே அந்த ஆள் பார்வை நடமாடும் எடை இயந்திரம் போல என்னை இறுக்கமாகப் அளந்து கொண்டே இருந்தது. ஒருவேளை ராகுவுக்கு முன்னாடி எதுவும் கிரகம் வட்டமடித்து வலம் வருகிறதோ ? அண்ணனிடம் கண் ஜாடைச் செய்தேன் .அவருக்கும் தெரியவில்லை.லூசுல விடு என்பது போலச் சைகை செய்தார்.நாழாவதாகச் சேர்த்த ஆள் கட்டுச்சோறுக்குள் எதையோ வைத்துக் கட்டியதாகத் தோணியது .சே ! என்ன இது காலை நேரத்துலக் கட்டுச் சோறு ஞாபகமெல்லாம் வருது ?
எங்காவது ஒரு பஸ்ல,கோவில்ல, கூட்டத்துல உட்கார்ந்து இந்தப் பெண் அழகா அந்தப் பெண் அழகான்னு மதிப்பெண் போடலாம் .உங்களுக்குன்னு ஒரு பொண்ணைக்காட்டி இது எப்படி இருக்குன்னு கேட்டா எந்த ஆணும் அவ்வளவு தூரம் எதுவும் சொல்லும் நிலையில் இருக்க மாட்டான்.அப்படித்தான் இருந்தேன் நானும் அப்போது !
பெண்ணின் அப்பா அவசர வேலையா எங்கோ வெளியூர்ப் போய் விட்டாராம் .அதனால் பெண்ணுடைய அம்மாவும் , அந்தப் பெண்ணும் மட்டுமே வந்தார்கள் .வந்தவர்கள் அந்தச் சாலை வீட்டில் உள்ள விறகு அடுப்பைப் பற்றவைத்து .பால் இல்லாமல் ( இன்னும் உண்மையான பால்காரர் வரவில்லை ) டீப் போட்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டார்கள் .என்னைத்தவிர அங்கு வந்த அனைவருக்கும் அந்தப் பெண் தெரிந்தவர் என்பதால் பேசிக்கொண்டார்கள் .நான் மட்டும் எங்குப் பார்ப்பது என்று தவித்துக்கொண்டு இருந்தேன் .இதற்கு முன்னால் இதே போல என் அண்ணன்கள் மற்றும் நண்பர்கள் உட்பட யாரையெல்லாம் பெண் பார்க்கப் போன போது கிண்டலும் கேளியும் செய்து பறக்க விட்டேனோ அந்தப் பாவமெல்லாம் மொத்தமாக என் முன் வந்து தவணைக் கொடுக்காமல் பழி வாங்கியது போல இருந்தது .டீ எடுத்தக்கங்க என்று தட்டு முகத்திற்கு முன் வந்தது . எல்லா பலமும் திரட்டி நிமிர்ந்து அந்தப்பெண் முகம் பார்த்து டம்ளரை எடுத்துகொண்டேன் .இந்தப்பக்கம் அஸ்கா என்ற ஜீனிக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரையில் டீப் போட்டு இருந்தார்கள் .அந்த இனிப்பு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டு போக மறுத்தது .
மெல்ல டீக் குடித்தவர்கள் , தவிர்க்க முடியாத பீடிப் பற்ற வைக்கும் பழக்கத்திற்கு இரைப் போட வெளியே நகர , நானும் அண்ணனும் அந்தப்பெண்ணின் அம்மாவும் மட்டுமே எஞ்சினோம். டீக் குடித்து முடித்த டம்ளர்களைச் சேகரித்த அந்தப் பெண், என்னிடம் கையில் வாங்கிகொண்டு சில அடித் தூரத்தில் உள்ள வரப்பில் அடுப்புச் சாம்பல் கொண்டு தேங்காய் நாரில் கழுவத் தொடங்கியது .என்னால் இப்போதுதான் இப்போது சரியாகப் பார்க்க முடிந்தது.என்னைப் போன்ற நிறம் . மெல்லிய உடம்பு ,தாவணியா சேலையா என்று தெரியாத அவசர உடை உடுத்தியிருந்தாள் .
இவளா என் மனைவி ?
எனக்குள் எதாவது பட்டாம் பூச்சிப் பறக்கிறதா என்று சோதித்துக்கொண்டேன் .ம்…..தூரத்தில் சில தும்பைசெடிகளில் மட்டும்தான் பட்டாம் பூச்சிகள் தேன் சோதித்துக் கொண்டு இருந்தது .இப்படித்தான் இருக்குமா எல்லாருக்கும் ? ஒன்னுமே தோணாதா ? ஒரு பயலும் இதைப் பற்றி நம்மிடம் சொல்லவே இல்லையே என்று நொந்து கொண்டேன்.
அந்தப் பெண் அங்கிருந்து என்னை முகம் திருப்பிப் பார்த்தாள் .அந்தப் பார்வையில் மெல்லிய சிரிப்புப் படர்ந்து இருந்தது.ஒரு வேளை எனக்கு அப்படித்தோணியதா ?
அண்ணனிடம் அந்தப் பெண்ணின் அம்மா பேசினார்கள் .பேசினார்கள் என்பதைவிட எனக்குச் சொன்னார்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் .இரண்டு பிள்ளைக எங்களுக்கு .இவப் பத்தாவது படிச்சிறுக்கா .முடிச்சு நாழு வருசமாச்சு .சின்னது ஏழாவது படிக்குது .எங்களால முடிஞ்சதைச் செய்யுறோம் .வருசம் பூராவும் நம்மக் கலனியில் நெல்லுதான் .கொடுத்து அனுப்பி விடுவோம் .அப்புறம் உனக்குத்தான் தெரியுமே சண்முகம் ( அண்ணன் பெயர் ) என்றார் .
நாங்கள் இவ்வளவுதான் என்று இதை விடவும் மரியாதையாகச் சொல்ல முடியுமா ? தெரியவில்லை.அதற்கு அண்ணன் ,அதுனால என்ன அக்கா நம்மப் பிள்ளைக்கு நீங்க செய்யுறீங்க என்று இழுத்துக்கொண்டே ... ஏற்றுக்கொண்டது போல என்னைப் பார்த்துக்கொண்டே தலையாட்டிப் பேசினார். ( அதென்ன நம்மப் பிள்ளைக்கு நீங்க செய்றீங்க ? என்ன அர்த்தம் ? ஒரு மண்ணும் புரியல ) நான் சும்மா அதை ஆமோதிப்பது போலப் பூம் பூம் மாடுகணக்காத் ஒப்புக்குத் தலையாட்டி வைத்தேன் .
கலைந்து போன கனவுகள் !
அடுத்தச் சிலவாரங்கள் அவர்களிடமிருந்து இது சம்பந்தமாக எந்தச் செய்தியும் வரவில்லை என்பதால் அண்ணன் நேரில் போய் விசாரித்த போது , அவர்களுக்கு நெருங்கிய சொந்தம் ஒன்று வந்து நிர்பந்தித்து, நிச்சயத்தட்டு மாற்றி விட்டார்களாம் .நம்மல அந்தப்பிள்ளைக்கும் அவங்க அம்மாவுக்கும் ரொம்பப் பிடிச்சு இருந்திருக்கு .அவங்க அப்பா வழியில் அழுத்திக்கேட்டதாலே வேறு வழியில்லாம ஒத்துக்கிட்டார்களாம் என்றவர் ,பாரு ஒரு மனுசங்கப் போய்க் கேட்டதற்கு அப்புறம் இதைச் சொல்றாங்க .ஒரு வார்த்தைச் சொல்லியிருக்கலாமில்ல ? என்று அங்கலாய்த்தார்.
எனக்கு அதைக் கேட்டதும்,மிக பதுகாப்பாக யோசித்து கடல் கரையை வீட்டு வெகுதூரம் நான் கட்டி வைத்த மணல் கோட்டையைக் திடீரென்று வந்தக் காற்று கலைத்துக் குவித்தது போலவும், மனசுக்குள் கல்யாணக் கனவென்ற மெல்லிய நீரோடைத் துவங்கிய இடத்திலேயே தொலைந்தது போனது போலவும் இருந்தது .
அடுத்தப் பல வாரங்கள் கம்பெனிக்குள் எதிர்பட்டப் பெண் முகமெல்லாம் அவள் முகமாய்த் தெரிந்தது .எப்படியோ அந்தப் பெண்ணுக்கு என்னைப் பிடித்து இருந்தது என்ற செய்தி மட்டும் பல சமயம் சந்தோசமாக வந்து போனது .செத்துப்போனாலும் சுவர்க்கம் போய் விட்டோம் என்ற ஆறுதல் தவிர வேறு என்ன சொல்வது இதை ? Accept As it is !
சேராத நதிகளா ?
அடுத்தச் சில வருடங்களிலும் அம்மாவும் எனக்குத் தன் சொந்தத்தில் பெண் தேடிக் களைத்துப் போனார்கள் .ஒரு கட்டத்தில் குலதெய்வ முடிவுக்கு ஒத்துப்போய்விடலாம் என்ற இடத்துக்கும் விட்டார்கள் .எனக்குப் பெரிய ஏமாற்றம் .அம்மா சொந்தங்கள் அதிகபட்சம் விவசாயத்தில் இருப்பதே எனக்கு அவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் .பதிமூன்று வயது வரை கண்ணுக்கெட்டிய தூரம் விவசாயப் பூமியில் வளர்ந்த என்னை , நகரத்துக் கோரைப் பாயில் சுருண்டுப் படுத்துக் கொள்ளுமாறான இப்போதைய வாழ்க்கை எப்போதுமே தொடர்ந்து இருக்கப் பிடிக்கவில்லை .என் எதிர்காலத் வாழ்விற்கான திட்டம் கிராமத்தில்தான் இருந்தது.
இப்படியே ஐந்து வருடம் ஓடிப்போனது . குலதெய்வ உத்தரவுப்படி , அம்மா சொந்தமில்லாத பெண் எனக்குக் கிடைத்துத் திருமணம் நடந்தது.எனக்கென்று ஒரு பெண் ,சகத் தர்மினி ஏமாறக் காத்து இருக்கும் போது நான் வேறெங்கோ தேடுவது எப்படிச் சரியாக இருக்கும் ?
எப்படியும் இது நடந்து பதினான்கு வருடம் ஓடி மறைந்து போன ஒரு நாளுக்குப்பிறகுதான் இன்று அந்த அலைபேசிச் செய்தி அப்படி ஒரு அதிர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியது .சென்ற வாரம் அந்தப் பெண்ணின் கணவன் புற்று நோயால் இறந்து போய் விட்டாராம்.பதிமூன்று வயதில் ஒரு பெண் இருக்கிறதாம் . மேலும் அவர் சொல்லச் சொல்ல அந்தப் பெண் முகத்தை நினைவுகளில் புதைந்து மனம் தேடியது . எனக்குச் சில நிமிடம் பேச முடியவில்லை .
எதிர்முனையில் ஹலோ ,ஹலோ என்று குரல் கெட்டது .தொடர்பு அறுந்து விட்டது என்று நினைத்து அவரே தொடர்பைத் துண்டித்து இருக்கக் கூடும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக