சனி, 3 டிசம்பர், 2016

மாவீரன் கிட்டு - திரைச்சிந்தனை


              இயக்குனர் சுசீந்தரன் தன்னுடைய திரைக்கதையின் மேலுள்ள அசாத்திய நம்பிக்கையை, மாவீரன் கிட்டு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.இந்தப்படத்தின் மூலம் வெகுநாள் தான் சுமந்து வந்த தன்னுடைய சொந்த ஊரின் வலியை இங்கு நம் முன் செல்லுலாயிடு வடிவில் இறக்கி வைத்து இருக்கிறார் .இயல்பான ஒரு கற்பனைக் கதையையைச் சொல்வதற்கும் 29 வருடம் பின்னோக்கிச் சென்று ஒரு பீரியட் ஃபிலிம் மூலம் அந்தத் தளத்தின் கதாப்பாத்திரங்களின் தோற்றத்தில் , உடைகள் ,பொருட்கள் மூலம் கொண்டு வருவது மிகச் சவாலான வேலை .அதில் சுசீந்தரன் மெனெக்கெட்டு இருக்கிறார்.சாதிய வலியை அந்தத் திண்டுக்கல் மாவட்டத்தில் முப்பது வருடம் பிறந்து வாழ்ந்திருந்த எனக்குத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார் இயக்குனர். 

   
        காலத்தின் களத்தில் உள்ள பாத்திரங்களின் உணர்வைச் சொல்லுவதில்தான் மூலம் நம்மைப் பின்னோக்கி இழுத்துச்சென்று சுசீந்தரன் பாத்திரங்களுக்கு உயிர்கொடுக்கும் வேலையைப் பாடலாசிரியர் தோழர் யுகபாரதி அற்புதமாகச் செய்திருக்கிறார் .'உயிரெல்லாம் ஒண்ணு.' பாடல் வரிகள் அரங்கைச் சிலிர்க்க வைத்தன ! அதே போல வசனங்களில் பாத்திரங்களின் வயதுக்குத் தகுந்த வட்டாரப் பேச்சு வழக்கு மொழியையும் உயர்த்திப் பிடித்து இருக்கிறார்.இன்னும் கூட இங்கிட்டு அங்கிட்டு போன்ற என்ற அந்த வட்டார வார்த்தைச் சுருதிகள் சேர்ந்திருக்கலாம் ! 

         இவர்கள் இருவரின் உணர்வுகளும் இணைக்கும் வேலையைத் தனது
பின்னனி இசை மூலம் இசையமைப்பாளார் இமான் ஒரு யுத்தமே நடத்தியிருக்கிறார் . நடாப் புயல் மழைத் திரையரங்குக்கு வெளியே என்றால் இமான் இசை முழக்கம் திரையரங்கு முழுதும் பேக்கிரவுண்ட் ஸ்கோரில் முதல் காட்சியில் தொடங்கிப் படம் முழுதும் நிரம்பி வழிகிறது. பாடல்களுக்கான இசையமைப்பில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு தனிக் கச்சேரியே செய்துவிட்டார் இந்தப்படத்தில் இமான். அற்புதமான பாடல்களைக் கதையமைப்பின் போக்கில் இல்லாமல் சில இடங்களில் நெருடினாலும் ,காட்சியமைப்பில் பாடல்கள் இன்னும் வெகுகாலம் பேசப்படும் . 

         
ஒளிப்பதிவாளார் ஏஆர் சூர்யா, ஒரு வரலாற்று நிகழ்வைப் படமாக்கும் ஒளிப்பதிவின் கோணத்தில் நவீனத்தின் சாயலைத் தவிர்க்க மிகக் கவனமாக நிதானமாக நின்று இருக்கிறார்.சில இடத்தேர்வில் இந்த இடத்தில் என்ன நடக்கப் போகிறது ஏன் இந்தக் கோணம் என்று நம்முள் கேள்விகள் குறுகுறுக்கச் செய்கிறார்.மிக இயல்பாகக் காட்சி அமைய நிச்சயம் இயக்குனரோடு போராடியிருப்பார் என்பதைக் காட்சிகள் சொல்கிறது . பல இடங்களில் கதையைப் பேச விட்டுக் கேமிராவைக் கைகட்டி நிற்கும் கலையை ஒளிப்பதிவாளர் செய்திருக்கிறார்.உதாரணம் ஸ்ரீதிவ்யாவின் தந்தை கொல்லப்படும் பொழுது ! 

                 சுசீந்தரன் இந்தக்கதையைக் கமர்சியலாகச் சொல்ல 200 சதவிகிதம்
முயன்று இருப்பதாகத் தன்னுடைய பேட்டியில் ஒருமுறை சொல்லியிருந்தார் .அது அவரின் பாத்திரங்களின் தேர்வில் வெகு நேர்த்தியாகச் செய்து இருக்கிறார்.ஆனால் திரைக்கதையில் அவருக்கே உரிய வேகத்தின் பொருந்தா இணைப்புகள் சில முன் நிற்கின்றன .உதாரணம் 1987 ம் ஆண்டு 24 டிசம்பர் மாதம் அதிகாலை 3.30க்கு இறந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறந்த செய்தியை அப்போது 17 வயதான எனக்குக் காலை ஏழுமணிக்குள் தெரிந்து விட்டது .அது கல்லூரித் தொடங்கிய பின்னர்த் தெரிந்து அறிவிப்பது போல இருப்பது கொஞ்சம் முரண் .அப்புறம் விஷ்ணுவிஷாலைத் தேடி வரும் திரண்டு வருல் காவல்துறை மிகச்சுலபமாக அதுவும் ஸ்ரீதிவ்யாவோடு தப்பிச்சென்று கண்ணில் மண் தூவுவது , கதையின் போக்குக் கருதி சூரியின் காட்சிகள் நீக்கப்பட்ட உணர்வுப் பல இடங்களில் எழுகிறது. ஒருவேளை படத்தில் நகைச்சுவை இருக்கிறது என்ற அடையாளம் காட்டவே சூரி வந்து ,வந்து செல்வதாகத் தெரிகிறது . 

                  ஆனால் இவையெல்லாம் புறம் தள்ளித் தன்னுடைய கதையின், ஆதிக்கச் சாதித்தன்மைக் கருவை அதன் வீர்யமும் குறையாமல் அதன் போக்கில் சொல்ல வெகு பிரயர்த்தனப்பட்டு இருக்கிறார் இயக்குனர் .படத்தின் வில்லனாகச் சாதிய ரத்தத்தின் வேட்கைதான் என்பதை மிக நுட்பமாகவும் சொல்லியிருக்கிறார் .சாதிதான் தன் வாழ்க்கை என்று தந்தையே தன் மகளைக் கொல்லும் காட்சிகள் நம்மை அதன் கோர முகத்தின் முன் நிறுத்துகிறது . வெகு காலத்திற்குப் பிறகு கதாநாயகன் தியாகத்தில் ஒரு கதைத் துணிவாகப் பேசப்பட்டு இருக்கிறது . 


              சுசீந்தரன் தன்னுடைய அப்பாவின் நண்பரான இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர் சந்திரசாமி அவர்களை மட்டுமல்ல, திரைப்படத்தைப் பார்க்க வந்த யாரையும் ஏமாற்றாமல் ஒரு அற்புதமான படைப்பைத் தந்து இருக்கிறார் .அதே சமயம் 2016 ஆம் ஆண்டின் சிறந்த விருதுகளைப் பெறும் வரிசையில் முன் நிற்கும் படமாக மாவீரன் கிட்டுப் பலம் பொருந்தியவர் என்பதையும் நம்பலாம்.