வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

சாமியே சைக்கிள்ள போக , பூசாரி புல்லட் கேட்டானாம் !



வெகு நாளாய் இந்தப் பழகிய மொழிக்கு அர்த்தமாய்ச் சில கற்பனைகள் எனக்குள் இருந்தது.ஆனால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது இன்றுதான் .அலுவலக ஓய்வு அறை ஒன்று புதியதாய்க் கட்டப்பட்டு அதற்குக் கணபதி ஹோமம் நடத்த வழக்கமான ஆஸ்தானக் கோவில் அர்ச்சகரைத் தொடர்புகொண்டல் அவரின் இரண்டு அலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டதாகத் தானியங்கிக்குரல் செப்பியது .அவர் மிகவும் பிரபலமானவர் அப்படி அனைத்து வைக்க வாய்ப்பில்லை.இரண்டு நாளாய் நேரில் வருவதாகச் சொல்லி அனுப்பிக்கொண்டு இருந்தார் மனுசன் .ஆனால் இன்னும் ஒரு நாள் இருக்கும்போது தாமதித்தால் நிர்வாகத்தின் கத்தி நடுமண்டையை பதம் பார்த்து விடும் என்று அவரை எப்படியாவது பார்த்து விட அவர் பணிபுரியும் கோவிலுக்குத் தேடிக் கண்டுபிடித்துப் போனேன் . 

அங்கு மனிதர் மிகச் சாவகாசமாக ஒரு குடும்பத்தை உட்காரவைத்து ஜாதகம் பார்த்துக் கொண்டு இருந்தார் . அவருக்கு எதிர் புறத்தில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்கார்ந்து இருக்க அவர்களிடம் அவர் ராவணன் நவக்கிரகங்களைஅடக்கித் தன் வீட்டில் படிக்கட்டுகளாகக் குப்புறப் போட்டு வைத்திருந்தது போலக் கிரகங்களை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார் .கேது புத்தி உனக்கு விரயச்செலவு அதிகமிருக்கும் .சனிப் பார்வை இருப்பதால் சில உடல் உபாதைத் தோன்றி நீங்கும்.ஆயிரம் ரூபாச் சம்பாதிச்சா ஆயிரோத்தோரு ரூபாச் செலவு வரும் .சொந்தமா வரத்தகம் வேண்டாம் அடிமைத்தொழில்தான் சிறப்பு .யாரையும் நம்பி வாக்குக் கொடுக்கவேண்டாம் .... 
அவர் சொல்லும் பலனெல்லாம் ஏறக்குறைய அந்த ஜாதருக்குப் பொருந்துச்சோ இல்லையோ ஒரு தமிழ் நாட்டு பிரபலக்கட்சிக்கு அச்சு அசலாய்ப் பொருந்திப்போவது போல எனக்கு ஒரு பிரம்மை! (தொலைக்காட்சி விவாத அரங்கம் அதிகம் நான் ஏன் அதிகம் பார்க்கக் கூடாது என்று என் மனைவி சொல்லும் ஆய்வுரைக்கு அர்த்தம் இப்போதுதான் புரிந்தது.) 

ஜோதிசம் என்ற வார்த்தையை விட எனக்குச் சாதகம் என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும் .வாழ்வதற்கு உரியச் சாதகமான எளிய வழியைச் சொல்லிக்கொடுப்பதே ஜோதிடமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் ஜோதிடம் தவறு என நிரூபிக்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே அதை அதை ஒரு விஞ்ஞானப் பார்வையில் பார்க்க விடாமல் தடுக்கப்பட்டு ஏதோ ஒரு தவறிழைத்து விட்டார்கள்.நானும் திருவருள் ஜோதிட மையத்தில் ஆசான் சாந்தலிங்கனாரிடம் முதல் ஆறு மாத அடிப்படை ஜோதிடம் எழுதும் அடிப்படைக் கணக்குகள் பயின்று இருக்கிறேன் அது மட்டுமல்ல என்னைச்சுற்றியுள்ள என் நண்பர்கள் சுகுமார் உட்படப் பலரும் இயல்பிலேயே ஜோதிடம் அறிந்தவர்கள் ( சமீபத்தில் சுகுமார்த் தந்த ‘டிப்ஸ்’ – யாருக்காவது சனிப் புத்தியோ, சனித் திசையோ நடந்து கொண்டு இருந்தால் அவர்களை நாய்கள் துரத்தாதாம் !) 


எல்லா உயிரும் சமம்.சகல உடல்களும் இந்தச் சூரியக்குயவன் படைத்த மட்பாண்டங்கள்தான் என்பதை ஒத்துக்கொள்ளாத ’பக்கிகள்’, தான் மட்டுமே கோலோச்ச வேண்டும் என்று பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு விடும் கற்பனையில் செய்த உச்சப் பட்ச மேஜிக் தமாசுகள்கள்தான் - மறைக்கப்பட்ட ஜோதிடவிஞ்ஞானம்.சரித் தலைவலிக்குச் சாப்பிடும் அனாசின் மாத்திரையில் எந்த ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியாத நாம் சூரியனிலிருந்து வரும் கதிர்கள் நம் (வளர்ந்த) உடலின் 206 எழும்போடும் அது எப்படித்தொடர்புடையது என்பதைக் கவனம் செலுத்த நேரமா இருக்கிறது ?.எல்லாத்தையும் லூசில் விட்டு விட்டோம். 

சரி இது கூடப்பராவாயில்லை.ஒருச் செய்திச் சானலில் அன்றாட ஜோதிடப் பலன்கள் சொன்ன ஒரு வேடிக்கையைப் பாருங்கள் அவர் ஒரு 'எண்கலைவித்தகர்', 'ஜோதிடக்கலைமணி' ஆவார். அவர் ஒரு சமயம் ஒரு வசதியான திருமணமாகாதப் பெண்ணுக்குப் பரிகாரம் சொல்லும் போது, ஒவ்வொரு வியாழன் தோறும் குருபகனுக்கு அர்ச்சனைச் செய்யச் சொன்னாராம் அவள் இறைநம்பிக்கை இல்லாதவள் என்பதால் மறுத்து விட்டளாம்.அவளுக்குப் பதிலாக அவள் வீட்டுப் பணிப்பெண்ணை அர்ச்சனைச் செய்யச் சொன்னாராம் அவள் வாரா வாரம் (முதலாளி மேல் உள்ள ) பயப் பக்தியுடன் தனது முதலாளியின் மகளுக்காக அர்ச்சனைச் செய்துவந்தாளாம்.குருப் பார்வை அவள் மேல் பட்டு வீட்டுப்பணிப் பெண்ணுக்குத் திருமணம் நடந்து விட்டதாம் ! இது எப்படிக் குரு என்ன அவ்வளவு ”ஜொள் ஜக்கா “ இப்படி எதாவது சொல்லப்போயிதான், வேண்டாம் உன் பழைய பஞ்சாங்கம் பரணில் வை என்று சொல்லப் பகுத்ததறிவாளார்கள் படையெடுக்கிறார்கள் 

சரி, நான் பார்க்கப்போன விசயத்திற்கு வருகிறேன் ...

ஒரு வழியாய் அவர்களின் ஏழு கிரகங்களையும் துவைத்துத் தொங்கவிட்ட பிறகே அவரின் பார்வை என் மேல் படிந்தது. வணக்கம் சொன்னேன்.சிரமப்படுத்திட்டேனோ ? என்றார். (ஆமாம் என்றாச் சொல்லவா முடியும்? நாழு இடத்தில் வழிக் கேட்டு ஆறு கிலோ மீட்டரல்லவாச் சுற்றியிருக்கிறேன் கடனைத் திருப்பிக் கேட்கும் போது வாய்தாக் கேட்க்கும் போது அணிச்சையாயாய் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரிப்போமே அப்படி ) சிரித்துக்கொண்டேன் .அவரிடம் தயாராய் வைத்து இருந்த பூஜைப் பொருள் பட்டியலை இந்த வருட வாசன் பாஞ்சாங்கப் புத்தகத்திற்குள்ளிருந்து ஆதிசேசன் வாலைபோல உருவித்தந்தார். பவ்வியமாகப் பெற்றுக்கொண்டேன்.இரவு ஒன்பது மணிக்கு நம்ம உதவியாளர்கள் வருவார்கள் சகல ஏற்பாடும் செய்து விடுமாறும் சொல்லியனுப்பினார்.அதோடு அவரின் பூஜைக்கான தொகை எவ்வளவு என்பதையும் வரவாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்ற ரகசியத்தையும் சொன்னார் குரல் தாழ்த்தி சொன்னார் .(பேஷ் பேஷ் நன்னாருக்கு ! ) 

அதிகாலைப் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் துவங்குவதால் இரவே எல்லா வேலைகளும் முடித்து விடவேண்டும் என ஆரம்பித்தோம் . ஒரு வழியாய் எல்லாம் முடித்து விட்டோம் என்பதாய்ப் பெருமூச்சு விடும் போது இரவு ஒன்பது மணி .அப்போதுதான் மாவிலையும் ,பசுமாட்டின் கோமியமும் இல்லை என்பதை மிகச் சாதரணமாக அலுவலக உதவியாளன் சொல்ல,மீண்டும் ஓட்டம்.. ஒரு இடத்தில் ஒரே ஒரு மாடு இருந்தது.அந்த வீட்டு வாசலில் ஒரு நாய்க் கட்டியிருந்தர்கள் அது எங்களைப்பார்த்து  விரோதமாகக் குலைத்துக்கொண்டே இருந்தது.அடுத்த இடத்தில் ஒரு பசுமாட்டுப் பண்ணையே இருந்தது.ஆனால் நாயிற்குப் பதிலாக அதைப் பராமரிக்கும் ஆளின் குரல் அதை விட விரோதமாக இருந்தது ! பாதிப் போதையில் உளற்ற்ற்றினார்... எப்படியோ பாத்திரமும் பணமும் கொடுத்துவிட்டுத் தப்பித்தோம். அதே போல ஒரு வீட்டில் தன்மையாய்ப் பேசி மாவிலைப் பறித்துக்கொண்டோம் இப்படியாகப் பரப்பரப்பு ஓய இரவு பதினொன்றும் ஆகிவிட்டது. 


அதற்குள் வந்து இருந்த சுவாமிகளின் (சம்பளம் எவ்வளவு என்று தெரியாத ) உதவியாளார்கள் ஹோமத்திற்கு ,ஈசான்யத்தில் பேப்பர் விரித்து அதன் மேல் தேவையான செங்கல் அடுக்கி மணல் பரப்பிக் கிரகங்களைக் கட்டிப்போட்டு முடிக்கவும் சரியாய் இருந்தது .அவர்கள் விடைபெறும் போது இரவு உணவுக்குப் பணம் கொடுத்து விட்டு,அவர்களிடம் ஏன் சாமி அலைபேசியில் தொடர்புகொள்ள மாட்டேன்கிறார் ? என கேட்டதற்கு வந்த இருவரில் ஒருவர் இன்னொரு உதவியாளாரைத் தவித்து விட்டு மெல்ல என் அருகே வந்து  சன்னமான குரலில் ,நோக்குத் தெரியாதா ? போன வாரம் சாமி வீட்டில் பட்டப் பகல்ல மதியம் மூணு மணிக்கு மாமியும், சாமியும் தூக்கிண்டு இருந்த அறைக்குள் யாரோ ஒரு விசமிப் புகுந்துச் இரண்டு செல்ஃபோன், நகை,பணம் அத்தனையும் வாரிண்டுப் போயிட்டான் சாமி பாவம் என்று முடித்தார்.
பாவம் என்று சொல்லும்போது அவர் அதை ஒரு கரிசனத்தில் சொல்ல முயற்சி செய்தார் .ஆனால் அதை மீறி அவர் கண்களில் அந்த நிகழ்வின் மூலம் அதீத ஒரு திருப்தி அடைந்து விட்டதற்கான ஒளி மின்னி மறைந்ததைக் கண்டேன் ! 

 எனக்குள் இன்னொரு முறைப் பதிவின் தலைப்பச் சொல்லிக்கொண்டேன்.

புதன், 17 பிப்ரவரி, 2016

திருப்பூரில் , சுஜாதாவும் - வில்லியம் ஹாஸ்லியும் (William Hazlitt).



   சாலை விபத்துத் திருப்பூர் வாசிகளுக்கு மிகச்சாதாரணம். எல்லா வேலைக்கும் முக்கியச் சில சாலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.குறுகிய ஆக்கிரமிப்புச் சாலைகள். பலருக்கும் இங்குச் சாலை விதிகள் மேல் நம்பிக்கை இல்லை. தங்கள் அவசரத்தைச் சாலைகள் மேல் வந்து காட்டுவது சாதனை என்றே நம்புகிறார்கள் .இதெல்லாம் போகத்தான் ’டாஸ்மாக் டார்கெட்டுக்கு’ உதவிச் செய்யப்போய் உயிர் விட்டவர்கள் கணக்கு ! 
              பத்து வருடத்திற்கு முன் சாயஆலைகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் எமனின் தூதர்களான லாரிகளின் இடத்தை இப்போது ”மினிபஸ்கள்” நிரப்பிக்கொண்டு விட்டன.நிறைய மினிபஸ் பூதங்களின் பின்னால் அரசியல் சாயம் மிளிர்வதால் காவல்துறை இவர்கள் விசயத்தில் கண்டுகொள்ளாத துறையாக நடந்து கொள்கிறது .இங்கு விபத்துக்கள் நடக்காத ,ரத்தமும், மரணமும் பார்க்காத ,சாலைகள் மிகக் குறைவு . 

     திருப்பூர் வந்த புதிதில் இப்படித்தான் இந்த ஊர்காரருடன் வீரபாண்டி அருகே ஒரு பல்பொருள் அங்காடிக்கு வந்து விட்டுத் திரும்பும் போது, அப்போதுதான் நடந்த ஒரு விபத்தில் , சடலம் ஒன்று சாலையின் ஓரத்தில் கிடத்தி வைக்கப்பட்டுச் சாக்குப் போர்த்தி வைத்து இருந்தார்கள் .அந்தச் சடலத்தின் கால்களில் உள்ள செருப்பு இன்னும் முற்றிலுமாகக் கழன்று விழாமல் பிரிந்து கொண்டு இருக்கும் உயிர் போலக் காலில் கவ்வியிருந்தது.அன்றுத் தொடங்கி இன்று வரை எண்ணிலடங்கா விபத்துக்களைப் பார்த்தும் ,பார்க்காமலும் கடந்து வந்து இருக்கிறேன். 

 ஒரு முறைப் பி.என்.சாலையில் ரேணுகாக் கட்பீஸ் எதிரே காலை ஒன்பது மணிக்கு வரும்போது , யாருமில்லாத சாலையில் யாரோ குடித்து விட்டுக் கிடக்கிறார் என்று நினைத்துக் கடந்து போய்கொண்டே சைடுமிர்ரர்ப் பார்க்கிறேன், அவர் தலையிலிருந்து ரத்தம் கோடாய் வெளியேறிச் சாலையை நனைத்துக்கொண்டு இருந்தது.அப்போதுதான் நடந்து இருக்கிறது இன்னொரு சமயம் ’டவுன்ஹால்’பேருந்து நிறுத்தம் கடக்கும் போது எதேச்சையாகக் கவனிக்கிறேன் அங்கு அடிபட்ட ஒரு மனிதனின், வெளியே வந்த உள்ளுறுப்புகளைச் சாக்கில் அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள் ! அதே போல இங்குள்ள 15 வேளம்பாளையம் சாலையில் எப்போதும் கூட்டமிருக்காது. அன்று ஒரு சனிக்கிழமைச் சாலையின் அலுவலகம் போகும் போது குறுக்கே ஒரு நகரப்பேருந்துச் சற்றுக் கோணலாக நின்று கொண்டு இருந்தது பார்த்தேன். பேருந்தின் உட்புறம் யாருமில்லை.டயர்ப் பஞ்சரும் இல்லை .மெல்லச் சாலை ஓரத்து இடைவெளியில் என் வாகனத்தைச் செலுத்திக்கொண்டே பேருந்து முன் பக்கம் பார்க்கிறேன்,அங்கு ஒரு இரண்டு சக்கர வாகனம் கோணல்மாணலாகப் பரப்பிக்கொண்டு கிடந்தது.அதை ஓட்டி வந்த பெண்ணின் பின் மண்டை அடிபட்டு உயிரற்று கிடந்தாள்.பள்ளிக்குத் தன் குழந்தையை விட்டு விட்டு திரும்பியிருக்கிறாள்.விபத்து நடந்து விட்டது.விபத்து நடந்த சில நூறு அடி தூரத்தில் ஒரு மர நிழலில் அந்தப் பேருந்தின் நடத்துனர் தன்னுடைய இன்வாய்சைக் கூட்டல் போட்டுக்கொண்டு இருந்தார் எதுவுமே நடக்காதது போல!


  திண்டுக்கல்,கோவை,புதுவை,மதுரை,எனப் பல இடங்களில் சுற்றியிருக்கிற எனக்கு அங்கு நடக்காத கவனிக்க முடியாத முரண்பட்ட இரண்டு குணாதியசங்கள் இந்த மக்களிடம் வெகு ஆண்டுகளாய் உறுத்திக்கொண்டே இருந்தது இன்று வரை... 

முதல் விசயம்..

இங்கு நீங்கள் சாலையில் உங்கள் வண்டியின் ”சைடு ஸ்டாண்ட்”எடுத்து விடாமல் ஒரு நிமிடம் கூட நீங்கள் பயணிக்க முடியாது அதற்குள் அந்தச் சாலையின் எதிரே வருபவர்களாகட்டும் நம்மைக் கடந்து போவோர்களாகட்டும் ஆண், பெண் பேதமில்லாமல் எச்சரித்து விட்டுச்செல்வார்கள் . அதே போலத் தவறி விழுந்தாலோ உங்கள் தோள் பையின் ’வார்கள்’சாலையில் உரசிக்கொண்டு வந்தாலோ உடனடி எச்சரிக்கை உங்களுக்கு ராக்கெட் வேகத்தில் வந்தடையும்.விபத்து நடந்து விட்டால் தன்னுடைய வண்டியைக்கூடச் சைடு ஸ்டாண்ட் சரியாகப் போடாமல் நழுவ விட்டு விட்டு ஓடி வந்து காப்பாற்றுபவர்கள் இங்கு அதிகம் .ஒரு சமயம் ஒரு விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கி உயிர் இழந்த ஒருவரின் சிதறிக்கிடந்த சுமார் 12 லட்சம் பணம் மக்களால் சேகரித்துப் பத்திரமாகக் கொடுக்கப்பட்டது.நானே பலமுறை இப்படி உதவி செய்யும் நல்ல மனிதர்களால் உதவி பெற்று இருக்கிறேன் .விபத்தில் அவ்வளவு கரிசனமா இந்த மக்களுக்கு ? 

இரண்டாவதாக முற்றிலும் புரியாத விசயம் .. 

இன்று திருப்பூர், மங்கலம் சாலையிலிருந்து நடராஜ் திரையரங்கு வழியே மதிய உணவுக்கு இரண்டு மணிச் சுமாருக்குப் போய்க்கொண்டு இருக்கும் போது, அந்தச் சாலையின் ரோட்டரி மஹால் தாண்டியவுடன் சாலை ஸ்தம்பித்து இருந்தது . அது ஒருவழிச்சாலை . சாலையின் இரண்டு பக்கத்திலும் ஆங்காங்கே போட்டது போட்டபடி இரு சக்கர வாகனங்களும் சில கார்களும் நின்று இருந்தன.இப்போதும் சில முன் செல்லும் வாகனங்கள் போகப் போக நிறுத்திக்கொண்டே இருந்தார்கள். நடுவில் கொஞ்சம் இடமிருந்தது. நுழைந்துக் கடக்கும் போதுதான் எல்லோரின் வெறித்த பார்வைக் குவியும் இடத்தில் பார்த்தால் மூன்று பேர்ச் சூழ்ந்து கொண்டு ஒருவரை அடித்துக்கொண்டு இருந்தார்கள் .என்ன பிரச்சனை என்பதில் என் கவனம் இல்லை. ஆனால் அத்தனை பேரின் முகத்தின் வெளியே குதிக்கக் காத்து இருக்கும் ஒரு வித ஆர்வத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டேன்.அங்கு நின்று கொண்டிருக்கும் வண்டிகளில் போட்டது போட்டப் படி விட்டு விட்டு வந்து தனக்கே நடப்பது போல உணர்ச்சியலைகள் ததும்பி நின்றார்கள் .. சிலருக்கு அங்கே அடிப்பவரைப்போலவே கையசைவுகள் கூட இருந்தது என்றால் எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள் ! 

கடந்த 15 வருடமாகத் திருப்பூரின் சாலைகளில் நடக்கும் பல நிகழ்வுகள் இப்படிப்பட்ட ஒரே மாதிரிச் செய்தியைத்தான் எனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.சின்னதாய் ஒரு வண்டிக்கும் வண்டிக்கும் இடித்துக்கொண்டு நடக்கும் வாக்கு வாதமாகட்டும் ,மிகப்பெரிய உயிர் பறிபோன விபத்தாகட்டும் எல்லாத்துக்கும் ஒரே ’ரியாக்சன்தான்’.கூடியிருப்பவர்களின் அதே வெறித்த பார்வைகள், என்ன பார்க்கிறோம் எதற்குப் பார்க்கிறோம் ஏன் பார்க்கிறோம் நமக்கு அடுத்த வேலை என்ன என்பதைப்பற்றி எந்தக் கேள்வி இல்லாமல்,அங்கு நடப்பது முழுவதும் உள்வாங்கும் ஒரே விதப்பார்வை ! அப்படிக் கூடி இருப்பவர்களைக் கவனித்துக்கொண்டே பல முறை அலுவலகம் வந்த பின், மற்றவர்கள் (மிகச் சுவாரசியமாக) பேசும் போதுதான் அங்கு என்ன விபத்து என்றே தெரியும்.ஏன் இது என்ற தீராத நிழலாடும் சந்தேகத்துடன் வீட்டுக்குள் போனேன் , சமையல் தாமதமாகும் என்றார்கள் இல்லத்தரசி .


சரி, வெகு நாள் ஆகிவிட்டதே சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (1999 ) வாசிக்க எடுத்தால் அதன் 5ஆவது பகுதியில் வில்லியம் ஹாஸ்லியின் (William Hazlitt), On the pleasure of hating என்ற கட்டுரையில் ”நாம் வெளிப்படையாகச் செய்யும் காரியங்களில் மனிதாபமானம் கலந்து விட்டோம்.ஆனால் மனதில் உள்ள இச்சைகளையும் கற்பனைகளயும் கட்டுப்படுத்த இன்னும் கொஞ்சம் நாளாகும்.” 
இது படிக்கும் போது கூட என் சந்தேகம் பெரிதாய்ப் பொருந்திப் போகவில்லை.ஆனால் அடுத்துச் சொன்ன,

"We give up the external demonstration, the Brut violence but cannot part of the essence or principle of hostility" - மூர்க்கத்தனமான வன்முறையின் வெளிவடிவங்களை நாம் கைவிட்டு விடுகிறோம் ஆனால் விரோதத்தின் சாரத்தை நம்மல் கைவிட முடியாது ”என்ற வாக்கியம் இன்னும் சில சந்தேக வலுவை முறித்தது.

ஆனால் அடுத்து வந்த சில வரிகள் நொறுக்கிப் புதைத்தன என்னை .அவை ”without something to hate we should lose the very spring of thought and action - நம் எண்ணங்களில் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் வெறுப்புதான் ” 

திருப்பூரின் அதிகபட்ச மக்கள் என்னைப்போலச் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்தவர்கள்.அப்படிச் சொந்த மண்ணை விட்டு இங்கு வந்ததற்குச் சம்பாதிப்பு மட்டுமே நோக்கம் அல்ல .இன்னப் பிற நிம்மதியற்றப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன .ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சனிஸ்வரப் பகவானின் காலடிச் சுவடுகள் கட்டாயம் எங்காவது ஓரத்தில் தென்படும் . தொலைந்து போன தூக்கங்களை நிச்சயமாய் எந்தக் குளிர்காற்றும் திருப்தியளிக்க முடியாது இந்த ஊருக்கு வந்த பலரின் வாழ்விலும் பல கொண்டை ஊசி வளைவுகள் எழுதப்படாதச் சட்டமாயிருக்கிறது .ஒரு பக்கம் வெகு சில அடித்தட்டு மக்களுக்கும் பணியிடத்துக்குள் நுழைந்து அன்றைய வேலைப் பொறுத்து வீட்டுக்குத் திரும்பினால்தான் உண்டு இல்லாவிட்டால் தூக்கம் உத்திரவாதம் இல்லை. நடுத்தர வாதிகளுக்கு இன்னும் இன்னும் என்று யாருக்கோ பதில் சொல்லும் சம்பாதிப்பு வெறி ,உள்ளூர்க்கார மேல் தட்டு வாதிகளுக்கு இன்று வந்தவனெல்லாம் கொடி நாட்டுகிறான் நாம் இப்படியாப் பிழைப்பது என்ற ஆதங்க உளைச்சல் ! மொத்தத்தில் இங்குள்ள பாதிக்கும் மேல் உள்ள மக்களின் மன நிலையை வில்லியம் ஹாஸ்லியின் 1928ன் சிந்தனையோடு ஒத்துப்போகிறது. 


                இப்போது முடிந்தால் இன்னொரு முறை முதலிருந்து வாசித்துப் பாருங்கள் முரண்பாடுகளுக்கான காரணங்கள் எல்லாமே புரிகிறது. ( இந்த பதிவை அடுத்து அடுத்து என (சிறு) வசிகரிப்பில் வாசித்த உங்கள் மனஅலை வரிசையும் ஹாஸ்லியின்  சிந்தனையோடு ஒத்துப்போகிறதா ? 

வியாழன், 11 பிப்ரவரி, 2016

7.83 ஹெர்ட்ஸ் - நிழல் உலக நிஜங்களின் தரிசனம் !


நாவலின் தன்மை !

இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள் ( பெப்ரவரி 11, 1847 ) இன்று இது போன்ற அற்புதமான அறிவியல் புனைக்கதையைப் பற்றி உங்களோடுபேசுவதில் மிகவும் சந்தோசம் .



அட்டைப்படத்தை பார்த்து விட்டு எதுவுமே கணிக்க முடியாத நாவல் இது ! வெகு நாளாய்க் காத்து இருந்து ஓர் அற்புதமான வரலாற்றுத் தளத்தில் அறிவியல் தன்மையுடன் ஒரு கதையை வாசிப்பவர்களுக்குத் திரு சுதாகரனின்7.83 ஹெர்ட்ஸ் மிகப்பெரிய வரவேற்பைத்தரும் நாவல் . மிகப்பிரபலமான அறிவியல் கதைப் புனைவாளார்கள் கூட எழுதத் தயங்கும் மிக நுட்பமானமனதைக் கட்டுப்படுத்தும் அதிர்வலைகளைப் பற்றிய கட்டுரை வேசமில்லாத கதையுணர்வுடன் வெகு நேர்த்தியான அற்புதமான நடையில் தமிழுக்குப்படைத்து இருக்கிறார். தமிழில் அறிவியல் கதை என்பது தனியாகவும் அறிவியல் கட்டுரைத் தனியாகவும் வளர்ந்து வரும் நேரத்தில் இரண்டையும் சமீபவருடங்களில் இணைத்துத் தரும் இன்னொரு சிறந்த முயற்சி இது.

நாவலின் பெயர். 

”7.83 ஹெர்ட்ஸ்”மிகத் துணிவானப் பெயர்த் தேர்ந்தெடுப்பு . நாவலுக்குத் தமிழில் பெயர்த் தர முடியாவிட்டாலும் நாவலின் அறிவியல் புனைவுகள்அனைத்தையும் மிகச் சுலபாமாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெனெக்கெட்டுத் தமிழ் படுத்தித் தந்து இருக்கிறார் ஆசிரியர். 

ஆனால் எனக்குச் சிறு வருத்தம் மனதுள் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை .எல்லா நாவல்களும் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமேஎழுதப்படுகிறது.இரண்டாவது, எழுதிய ஆசிரியர், வெளியீட்டாளர் உட்பட அனைவரின் உழைப்பின் பயனை, அதன் அதிக விற்பனையின்விளைவில்தான் அனுபவிக்க முடியும் . அப்படி அது வாசிக்கப்பட வேண்டுமென்றால் அது 1. மிகப்பிரபலமாக, நாவலின் தன்மைக் குறித்துவிளம்பரப்படுத்தவேண்டும்.2.நாவலின் பெயர்த் தவறி விழப்போகும் காதலியைத் தாங்கிப் பிடிக்கும் கைப் போலச் சிக்கெனெப் பற்றிக்கொள்ளவேண்டும்.(பெயர் வைக்கும் விசயத்தில் எழுத்துலக ஜாம்பாவான்கள் கூடக் கவனமாக இருந்தை நாம் மறக்கக் கூடாது ) 3.மிகப்பெரிய விமர்சனத் தாக்கத்தைவலைதளங்களில், பத்திரிக்கைகளில் எழுப்ப வேண்டும் .4.புத்தக விழாக்களில் ஃப்ளக்ஸ் பேனர் வைத்துப் பேசப்படவேண்டும் .என்பது என் தாழ்மையானகருத்து ! 



கதைக்கரு .

இந்த நாவல் வாசிக்கும் முன் வரை எனக்கு ஒநாய்கள் பற்றி எனக்கு ஒரு துளியும் தெரியாது .சில சேனல்களில் அவை கூட்டமாக ஓட,ஓடவிலங்குகளைப் பிய்த்துத் தின்னுவதையும்.சிங்கத்தின் இரையைக் கூட வெறுப்பேத்திப் பிடுங்கிக் கொள்வது மட்டுமே தெரியும். அவ்வளவுதான் !ஆனால் அவை 800 ஆயிரம் வருடங்களுக்கு முன் இதே பூமியை ஆண்ட ஓர் இனமாக ஓநாய் எனும் ஊனுண்ணிப் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒருகாட்டு விலங்கு என்பதுவும் அதன் ஆரம்பப் பிறப்பான பழுப்பு நிற ஓநாயிற்குத் தாயகம் இந்தியா என்பதும் எனக்கு மிகப்புதிய விசயம். அதை விடவும்புதிய விசயம் ஓநாயைத் தனது மூதாதையராக நம்பி, புனிதச் சின்னமாக வழிபட்டுக் கொண்டாடும் உலகில் பல்வேறு இனமக்களை அறிந்து கொள்ளும்போது ஆச்சர்யமாக இருக்கிறது .

கதையாக்கத்தின் நோக்கம் ! 

அந்த ஓநாய்களைக் காக்கும் முயற்சிதான் இந்தக் கதைக்கரு.இந்த நாவலை உருவாக்கிய ஆசிரியரின் உண்மையான நோக்கமாகவும் அதுவேஇருக்கிறது ! நம் தமிழ் திரைப்படக் கதைக்கரு போலப் பழிவாங்கும் படலம் போலத் தன்மைதான் நாவல் . ஆனால் இயற்கையின் உயிர் சூழலில் உணவுச்சங்கிலியின் அக்கறை கொண்ட நாவல்.இந்த நாவலில் எது கற்பனை எது கோட்டைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகச்சாதுர்யமாகப் புனையப்பட்ட நாவல் . 

இந்தியாவுக்குள் நுழைந்த செச்சன்யப் போராளிகள் !. 

சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள (சின்சியாங்கு) (Xinjiang) மாகாணத்தில், உய்கூர் (Uyghur) என்ற பகுதி மணிக்கெயிசம் என்ற மதத்தைச் சார்ந்தமக்களுக்கு இந்த இனமக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள் .அப்படி வாழ்பவர்களில் செச்சன்யாவை (Chechnya ) சேர்ந்த போர்ஜ் மக்கள்குழு உலகில் உள்ள ஓநாயை அழிக்கத்திட்டமிடும் அரசுகளை மற்றும் அமைப்புகளைக் கொடுங்கோளர்களார்களாக நினைத்து அழிக்க நினைக்கிறது.இந்தியாவில் இரண்டு செச்சன்யர்கள் தலைமையில் ஒரு செயல் திட்டத்துடன் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். 

அதில் ஒருவன் ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பில் முக்கியமாக ’தெர்மடைட்’ என்கிற ஒரு விதமான கந்தகக் கலவையில் ஆயுதம் தயாரிக்கும்மூளைக்காரன் .அவன் கொஞ்சம் நல்லவன் கூட ! என்னது ? தீவிரவாதியில் நல்லவன் எப்படி இருக்க முடியும் ? என்ற கேள்விக்கு – அவன் தனது ஆசனவாயில் தான் இறந்துப் போன பிறகும் நமது ராணுவ அதிகாரி விக்ரம் பத்ராவுக்குக் கிடைக்குமாறு விட்டுப்போன ஓர் எச்சரிக்கைச் செய்தி. இந்தநாவலின் முக்கியமான திருப்பத்திற்கும் மிகப்பெரிய அழிவிலிருந்து தப்பிக்க உதவியது . 


        அது, ஒரு மண்டை ஓட்டுப்படம் ,ஒரு ஃபோர்ஜ் துப்பாக்கி (Forge Gun) ஒரு பெர்சியன் ஸ்வார்ட் (Persian sword) அதோடு ’அந்திம ஆயுதம் அமைதி ‘என்றவாசகம் கொண்ட ஒரு துண்டுச்சீட்டு அந்தத் தாக்குதலில் முடிவில் அதை நடத்திய ஒரு ராணுவ அதிகாரிக்கு விட்டுச் செல்கிறான் . நாவலின் இந்தமுடிச்சு , 31 ஆம் பக்கம் துவங்கிய இந்த ரகசிய முடிச்சிற்கான தேடல் 194 ஆம் பக்கம் வரை வாசிப்பவர்களை, வியர்க்க வைக்கும் அளவுக்குத் துரத்துகிறது. 

     இதில் இன்னொரு தீவிரவாதியை ’சாவுக்களி ஆடும் பிசாசு ‘என்று வர்ணிக்கும் அளவுக்குக் கொடுரமானவன் ஆனால் அவன் மரபியல் மற்றும்தொலைத்தொடர்பியலில் கில்லாடி.இவர்களுக்கு வெளியிலிருந்து உலகி பல இடங்களில் துறைகளில் பரவி வசிக்கும் மக்களின் துணையோடுமிகப்பெரிய ’நெட்வொர்க்’போலச் செயல்படுகிறார்கள் .இவர்களுடன் நம் நாட்டு அரசின் மேலும் அறிவியல் துறையினால் பாதிப்பட்ட ஓநாய் அறிவியல்விஞ்ஞானி எதிரிக்கு எதிரி நண்பன் போலத் துரதிருஷ்ட வசமாகக் கைகோர்த்துக் கொள்கிறார்.அவர்களின் விஞ்ஞானப் பூர்வமான சதி வலையைஅறுத்து எறிவதே நம் சுதாகர் அவர்களின் 7.83 ஹெர்ட்ஸ் நாவல் பேசுகிறது .


ஓநாய்பற்றிய வரலாற்றுத் தகவல்கள். 

ஓநாய்களைப் பற்றி நாம் கேள்விப்பட்ட விசயங்கள் மிகச் சொற்பமே என்பது இந்தக்கதையின் பல இடங்கள் வலியுறுத்துகின்றன. அதிலும் வேத நாயகம்என்ற ஒரு பாத்திரம் மூலம் ஆசிரியர் சுதாகரின் ஓநாய்கள் பற்றிய ஆராய்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.(அந்த மனிதன் நம்மைப் பொறுத்தவரை நம்வீட்டு நாய்கள் ஓநாய் வம்சத்தின் உப பிரிவாக ( Subspecies of Canis lupus familiaris or Canis familiaris ) அறிகிறோம் . ஆனால் ஆதி ஓநாயான பழுப்பு நிற ஓநாய்(lupus familiaris) இந்தியாவில் பிறந்து உலகெங்கும் பரவி வளர்ந்து இருப்பது தொடங்கிக் கிழக்கே சிக்கிம் தொடங்கி மேற்கே பாமிர் முடிச்சு வரை பூமியைஆண்ட இனம் (பக் -172) என்பதாகவும் ,

இன்றைய செர்பியா,துருக்கி ஆகிய நாடுகளின் தேசிய விலங்குகள் பட்டியலில் ஓநாய்கள் இருக்கிறது. துருக்கியில் சுமார் 10,000 வருடத்திற்கு முன் Anatolia - Gobekli Tepe இடத்தில் கட்டப்பட்ட உலகின் முதல் கோவிலாகத் தொல்லியல் துறை (http://archive.archaeology.org/0811/abstracts/turkey.html ) சொல்லும் கோவில் கற்படிவங்களில் ஓநாய்த் தலை வடிவம் செதுக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்துஉலகின் பார்வைக்குத் தந்தவர் ஜெர்மானியத் தொல்லியல் துறைப் பேராசிரியர் Professor Klaus Schmidt ( இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம்நாள்தான் நீச்சல் செய்துகொண்டு இருக்கும் போது மாரடைப்பில் காலமானார் ) நீல நிற ஓநாய் தெய்வத்தின் வழித்தோன்றலாக அவர்கள் தங்களைக்கருதிக்கொள்கிறார்கள் ! 

இதற்கும் ஒரு படி மேலாய்ச் செச்சன்யார்கள் தங்களுடைய மூதாதையர்கள் ஓநாய் முகம் இருக்குமாம் ! போராளிகளின் புரட்சிக் கொடி அதை இன்றும்பிரதிபலிக்கிறது ! 


ஓநாய்கள் இன அழிப்பு ! 

ஓநாய்கள் இனம் அழிக்கப்பட முதல் காரணமாய் இங்கிலாந்தின் மன்னர் (Edward the Confessor 1042 to 1066 இருக்கலாம் !) 1500 ஆம் ஆண்டில் ஒருதீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.இது உலகில் ஆங்கில ஆட்சிப்பரவல் போல விரிந்துப் பரவி ஓநாய் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது .காரணம் மனித இனத்தின் மாமிச உணவின் மேல் கொண்ட பேராவல் . அதற்குத் தடையாக இந்த ஓநாய்களின் வளர்ச்சித் தடையாக இருப்பதாகக்கருதிக்கொள்கிறது .ஓநாய்கள் மனிதனுக்குத் தடையாக நினைக்கத் தொடங்கிய காலமே அதன் வாழ்க்கைச் சுதந்திரத்தை மனித இனம் அறுவடைச்செய்யத்தொடங்கியது.இப்போது நாம் புலிகள் இனத்தைக் காப்பதற்கு இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ”ஆடு பகைக் குட்டி உறவு”என்பது போலஓநாயின் இனத்தின் உட்பிரிவான நாய்களை (சாம்பல் ஓநாய்க் கேனிசு லூப்பஸ் Canis Lupus Familiaris ) நம் வீட்டுச் செல்லமாக மனித இனமாக வளர்கிறது. 


நாம் ஒரு படி மேலே போய்ப் பைரவர் ( சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் ) வாகனமாகக் கோவிலுக்குள்வைத்துக் கும்பிடுகிறோம் என்பதும் மகாபாரதத்தில் போரின் போது ”அஞ்சுதற்குரியச் செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம்(பௌண்ட்ரம் என்பது “புடி கண்டநே” என்கிற தாதுவிலிருந்து உருவாக்கப்பட்டது இது எதிரிகள் மனதைப் பிளப்பது என்று பொருள் கொள்ளப்படுகிறது ) என்ற பெருஞ்சங்கை ஊதினான்”என்று பேசப்படுகிறது என்பது வேறு விசயம்.அதாவது நமது சமயத்தில் கூட ஒநாயின் இனமான நாய்கள்ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது .அப்படிபட்ட இந்தியாவும் அந்த இனதிற்கு எதிராகச் செயல்பட (கதைப்படி) எட்டு வருடங்களுக்கு முன் துருக்கியின் எர்ஜரம் எனும் நகரத்தில் அட்டாடர்க் பல்கழைகலகத்தில் (Ataturk University) உலகளாவிய ”மூன்றாம் உலக நாடுகளில் வேளாண்மை ,கால்நடைவளர்ப்பில் உயிரியல் சவால்கள்” என்ற கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது .இதில் இந்திய இந்திய விஞ்ஞானிகளின் நிலைத் தவறாகச் செச்சன்யார்களால் புரிந்து கொள்ளப்படுகிறது இதன் விளைவாகப் போராளிப் பிரிவு ஒன்று இந்தியாவுக்கு எதிராக ஒரு திட்டம் வகுக்கிறது . 


அந்தத் திட்டம் இருவகையில் வகுக்கப்படுகிறது .ஒன்று நேரடிக் குண்டு வெடிப்புகள் மூலம் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவது . இதுதான் இந்தநாவலின் 21 ஆம் துவங்கும் ஒரு போராளி ( கொஞ்சம் நல்லவன் என்று முன்னரே சொல்லியிருந்தேனே அவர்(ன்) ) செய்ய வந்த வேலை. இன்னொருவகை நாம் இதுவரை எந்தப் புத்தக்கங்களிலும் வாசிக்கப்படாதப் பகுதி இதை மிகக் கவனமாகப் பக்கம் 105 முதல் 112 சொல்லப்படுகிறது .



மனிதக் குலத்திற்கு எதிரான நுண்மின் அலைப் பேரழிவு !. 

மூளையோட இயக்கம் நுண்மின் அலைகளால் ஆனது.நம் அனைத்து உணர்ச்சிகளையும் மின் அதிர்வுகளால்தான் மூளை உணர்கிறது .ஒவ்வொருஉணர்ச்சிக்கும் உணர்வுக்கும் இந்த மின்அலைதான் எனத் தோராயமாக மூளைமின்னலை வரைவு Electroencephalography, (EEG) என்ற கருவி மூலம்பெருமூளைப் புறணியில் உள்ள பெருமளவிலான நியூரான்கள் அடங்கிய உறுப்புகளுக்கிடையே காணப்படும் சீரான மின்னோட்ட அலைவுகளைஎலக்ட்ரோடுகளின் உதவியுடன் பதிவு செய்து Electroencephalography Functional magnetic resonance imaging மூலம் கண்டறிந்து அதை ஒரு ‘டேட்டாப்பேஸ்ல”சேகரித்து வைத்து அதே மாதிரிச் செயற்கை மின் அலைகளை உற்பத்திச் செய்யும் எஞ்சினை உருவாக்கி,அதைக் கம்யூட்டர் மூலமாக்கண்ட்ரோல் செய்து எந்த மனித உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டுமோ அதை உருவாக்கி அதை ஓர் ஏற்பு அலை என்று சொல்லும் கேரியர் அலைமூலமா ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொழியச் செய்து அங்குள்ள மனிதன் அல்லது மீன்கள், எலி,யானை ,ஓநாய் போன்ற எந்த உயிரையும் தூண்டிச்செயல்பட வைக்கலாம்.உதாரணமாக மனிதனுக்கு இந்த உணர்ச்சியின் போது இந்த அலை மூளையில் ஏற்படும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தப்பட்டுஇருக்கிறது.


ஒரு ஹெர்ட்ஸ் அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும். Hertz என்பதை Hz என்று சுருக்கிக் குறிப்பிடுவர் .மூளையின் செரிப்ரல்கார்டெக்ஸ் என்று அழைக்கப்படும் மேலுறைப் போன்ற பகுதிப் பல மடிப்புகளைக் கொண்ட வெளி அடுக்காக உள்ளது. இதில் கோடிக்கணக்கில்நியூரான்கள் உள்ளன. ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் சுமார்ப் பத்து லட்சம் நியூரான்கள் உள்ளன என்றால் எத்தனை கோடானுக் கோடி நியூரான்கள்மூளை இணைப்பில் உள்ளன என்பதைக் கற்பனைச் செய்து கொள்ளலாம் ! இந்த நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. மற்ற மூளைப்பகுதிகளிலிருந்து தகவல் முதலியவற்றின் உள்ளீடுகளைப் பெறுகின்றன. நரம்பு தூண்டுதலினால் மின் செயல் பாட்டைப் பெறுகின்றன. புலன்கள்அனுப்பும் அனைத்தையும் பெற்று நியூரான்கள் மூளை மேலுறையில் செய்யும் செயல்பாட்டை அளப்பதை ஒரு EEG ன் எலக்ட்ரோடை மண்டையில்இணைத்து விட்டால் போதும், அதன் அடியில் உள்ள மூளையின் செயல்பாட்டை அது துல்லியமாகக் காட்டி விடும். EEG, சீரான இடைவெளியில்வருகின்ற ஆல்பா, பீட்டா டெல்டா , தீட்டா,காமா மற்றும் பல வகை மின்னலைகளைப் பதிவுச் செய்கிறது.இவற்றை அலைவரிசை அல்லது அலைஎண்என்று இனம் கண்டு ஹெர்ட்ஸ் அல்லது வினாடிக்கு இத்தனை சைக்கிள் (Hz or cycles/sec) என்றும் ஆம்ப்ளிட்யூட் எனவும் அளக்கிறோம்.உதாரணம்..

Delta wave – (0.1 – 3 Hz) 
Theta wave – (4 – 7 Hz) 
Alpha wave – (8 – 15 Hz) 
Mu wave – (7.5 – 12.5 Hz) 
SMR wave – (12.5 – 15.5 Hz) 
Beta wave – (16 – 31 Hz) 
Gamma wave – (32 – 100 Hz) 

இப்போது இன்னும் பல மடங்கு முன்னேறியுள்ளது .அதாவது 0.1  நுண்ணிய ஹெர்ட்ஸ் மின்அலையில் மூளைச் செயல்படும்போது என்ன உணர்வு ஏற்படுகிறது என்று கூட EEG கருவியின் மூலம் கண்டறியும் அளவுக்கு நுட்பம் முன்னேறியுள்ளது . 


1957 இராக் போரில் அமெரிக்காவின் CIA - Central Intelligence Agency இவ்வாறு ஒரு குறிப்பிட்டக் கோப உணர்ச்சிகளைத் தூண்டிச் செயல்படுத்தி இராக் மக்கள் தங்களுக்குள்ளே தாக்கிக் கொல்லுமாறு செயல்படுத்தப்பட்டார்கள். இது மாதிரித் தெரிந்தும் தெரியாமலும் உலக நாயகன் அமெரிக்க அண்ணன்செயல்படுத்தி இருப்பார் யாருக்குத் தெரியப் போகிறது ? கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து பிக்சலேட் செய்யப்பட்டோ அல்லது முழுமையாகஅழிக்கப்பட்டோ காட்சியளிக்கும் மறைக்கப்பட்ட உலகின் 10 ரகசியப் பகுதிகளில் இந்த அமெரிக்காவின் அரசு ஆய்வு மையம் (HAARP government researchfacility) : அலாஸ்காப் பகுதியில் உள்ள 'ஹார்ப்' எனப்படும் அமெரிக்க ஆராய்ச்சி மையமும் (HAARP - High Frequency Active Auroral Research Program) ஒன்று !அப்படி இந்த ஆராய்ச்சி மையம் உலகுக்கு என்ன செய்கிறது ? இதற்கு இன்னும் பல பெயர் உண்டு அதில் ஒன்று Secret Weapon Used For Weather Modification .இதன் செயல்பாடுகளில் ஒன்றைக் கடந்த 04.12.2016 தினமலர்ச் செய்தி (http://www.dinamalar.com/user_comments.asp?uid=221584&name=wellington)உறுதிப்படுத்துகிறது.வாசித்துப் பாருங்கள் இதன் வலிமைப் புரியும். 

சென்னையில் மேலும் பல பகுதிகளைச் சூழ்ந்தது வெள்ளம் 50 லட்சம் பேர்ப் பாதிப்புத் தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்புப் படைத் திணறல்இந்தப் பேய்மழைச் செயற்கையாக உருவாக்கப்பட்டது... 

உலகப் பருவ நிலை மாற்றம் குறித்ததான மாநாடுப் பாரிஸில் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு ஆதரவுப் பெறும் நோக்கில் இவ்வாறுநிகழ்த்தப்படுகிறது. இதைபோல் பல நாடுகளில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் ஹார்ப் [ HAARP: Secret Weapon Used For Weather Modification ] இந்தமாநாட்டின் நோக்கமே, தொழில்சாலைகளில் இருந்து வரும் கரியாமிலவாயுக்களால் பருவ நிலை மாறுபட்டுவிட்டதாகக் கூறித் தொழில்சாலைகளைமூட வைக்க வேண்டும் என்பதாகும். 


ஒருவேளை இம்மாதிரி மறைமுக விஞ்ஞான ஆயுதங்கள்தான் எல்லா நாடுகளையும் அமெரிக்காவிற்குப் பணியவைக்கும் முயற்சியா ?தெரியவில்லை.இது அமெரிக்கா அண்ணன் மட்டுமல்ல ரஷ்யச் சகோதரரும் Sura Ionospheric Heating Facility என்ற பெயரிலும் நியுஜிலாந்து ( military in aprogramme code named ) Project Sea என்ற திட்டத்தின் கீழும் இம்மாதிரி இன்னும் உலக நாடுகள் பல விஞ்ஞான முன்னேற்றங்களை அழிவின் விளிம்பிற்குஉலகை அழைத்துச் செய்யும் முயற்சியாகத் திட்டமிடுகிறார்கள் .இந்த நாவல் படிக்கும் போது நம் உலகம் எவ்வளவு பெரிய அபத்து வலைப்பின்னலில்சிக்கித்தவிக்கிறது என்பது மிரட்டும் உண்மையாகச் சுடுகிறது.இந்த நாடுகளின் முன் மனிதாபிமானம் என்பது நூறு டன் இரும்புக் குண்டை எச்சில்தொட்டுக் கட்டிடக் கூரையில் ஒட்டும் முயற்சி என்பது மிகத்தெளிவாக உணர முடிகிறது . 
இன்னும் சில பயங்கர உண்மைகளை இந்தச் சதிவலைகளால் எவ்வளவு சாத்தியம் என்பதை உங்களால் முடிந்தால்http://www.maruthamunaionline.com/V3/index.php/articles/205-human-action படித்துப்பாருங்கள் .அது மட்டுமல்லாது நாவலின் பின் பகுதியில் (பக் 229 -231) வரைஆசிரியர் கொடுத்த Reference பகுதிகளுக்குக் கட்டாயம் ஒரு விசிட் அடியுங்கள் .

ஆனால் இந்தக் கதையில் இந்தத் தொழில் நுட்பம் எப்படி யாரிடம் பயன்படுத்தப்படுகிறது ? இந்தப் பாதிப்பை மரபியல் ரீதியாக MAO ( Mono Amine Oxide )Type 2 Allele பாதிக்கப்பட்டவர்களை எப்படித் தாக்குகிறது அதற்கு உபகருவியாக என்ன என்ன தேவைப்படுகிறது ? ( பக். 108) 

இவ்வளவு சிரமமானக் கதை நகர்த்தலில் ஊடே திவாகர் – வித்யாக் காதல் இழைப் பின்னப்படுவதுவும், (பக் 132 – 133) 
இந்த அராய்ச்சியில் ஈடுபட்ட ஜெயா என்ற பெண்ணுக்கு ஹோலிஸ்டிக் சென்சிங் (Holistic sensing) மூலம் நினவுகளைத் திரும்பவும் மின்காந்தஅலைத்தூண்டல்கள் மூலம் செய்தியாகப் பெற MANAS - Mind and neural activity stimulator செயற்கை நுண்ணறிவு மென் பொருள் உருவாக்கப்படுவது இந்தியாவின் சூப்பர்க் கம்ப்யூட்டர் உதவியால் PARAM is a series of supercomputers designed and assembled by the Centre for Development of Advanced Computing (C-DAC) inPune, India (பக் 117 ) 

இதை எப்படி நம் ராணுவம் ”மன ஆளுமைத் தன் வசம் இல்லாத மனிதர்களால் பெரிய தாக்குதல் வரும் என்பதை அறிந்து அதை முறியடிக்கும் இந்தியMAPRREC Mind And Psychical Resource REmote control என்ற திட்டத்தில் யாரெல்லாம் சேர்க்கப்படுகிறார்கள் ?(பக் 111) 

நாவலின் போக்கில் இடச்செருகலாக விக்ரம் பத்ராவின் கனவின் ESP காட்சிகளும் சில்கா ஏரி நிகழ்வுகளும் மீன்களின் தாக்குதல் எலி, யானை, மனிதர்கள்மனிதனைச் சாப்பிடும்  விசயங்கள் (பக் 77) 

நாவல் மூலம் கற்றதும் பெற்றதும் .. 



1.மனித இனத் தோற்றத்துக்குக் காரணமான ‘யாளி’என்றக் கலப்பின உயிரினத்தின் உடலும் ஆதி ஓநாய் இனத்தின் உடலின் அமைப்பும், முதலை அல்லது சிங்கம் போன்ற அமைப்பு Anatolia - Gobekli Tepe பழங்காலக் கோவில் சிற்பம் மூலம் ஒத்துப்போகிறது .இது என் தனிப்பட்ட தேடலுக்கு இன்னொரு பலம்சேர்க்கிறது. 

2. நான் கற்றுக்கொண்டும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கும் அகத்தாய்வு Introspection ( empathy, and psychoanalysis: An examination of the relationshipbetween mode of observation and theory.) என்ற HLA – Human Lucosite Antigen Allele பற்றிய செய்திகளும் அதன் தீர்வும் பற்றிய பயணமும் வலுப்பெற்று இருக்கிறது !  

3. தியானத்தின் போது குறையும் EEG அலைகளின் தன்மைக் குறித்த 
பின் பகுதி (பக் 229 -231) வரை ஆசிரியர் கொடுத்த Reference பகுதி அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்கிறது . 
     
        4.The Day After Tomorrow ஆங்கிலப்படமும் ,அமெரிக்காவிடம் தப்பித்த Edward Snowden - http://www.secretsofthefed.com/snowden-reveals-haarps-clobal-assassination-agenda-w-video/ பகுதிக்கும் இன்றைய நவீன HAARP சதிகளை http://www.pearltrees.com/tierracast/haarp/id9718285#l614 பாருங்கள். 

5 .மிகப்பல அறிவியல் நூல்களை ஆராய்ந்து வாசித்துக் கதைகள் புனையப்படுவதன் சாத்தியத்தை நீங்கள் அறியலாம் .ஆனால் ஒரு நாவலைப் படித்துவிட்டு நீங்கள் மிக்கப்பல ஆராய்சிக் கட்டுரைகளைத் தேடிப்போவது நிகழப் போகிறது என்றால் அது 7.83 ஹெர்ட்ஸ் நாவலைப் படித்தவர்களுக்கு நிகழப்போவது உறுதி !.


கடைசியாக … 

                 இரண்டு முறை இந்த நாவலை நான் வாசித்து ஒரு தரமான விமர்சனத்தைத் தர விரும்பினேன் காரணம் இன்னும் பலரால் இந்த நாவல் வாசிக்கப்படவேண்டும் என்ற ஒருவித ஆதங்கமே காரணம் .

                        ஆனால் இன்னொரு சிறு நாவல் அளவுக்கு என் விமர்சனம் விரிந்து விட்டதது ! காரணம் இந்த நாவல் என்னை மிகத்தொலைவு வரை இழுத்துச்சென்றுவிட்டது.அப்படித்தேடல்களில் சேகரித்த சில விசயங்களையும் சேர்த்து இங்குக் குறிப்பிட்டதால் விமர்சனத்தின் நாகரீக எல்லைகளை மீறிப்பயணித்துவிட்டேனோ என்று கூடத்தோன்றுகிறது ! ஓர் ஆர்வத்தில் பதிவுச் செய்ததால் தவிர்க்க முடியவில்லை .நாவலாசிரியர் திரு சுதாகர் அவர்களும் மற்றும்  சிறந்த விமர்சனப் பிதாமகர்களும் ,மகள்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களாக ! 
 




(பி.கு)
திரு.சுதாகர் அவர்களின்  முதல் நாவல் 6174, வம்சி புக்ஸ் வெளியீடு. வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றதோடு, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தினால் '2012ம் வருடத்தின் சிறந்த நாவல்' விருதினையும், கலகம் அமைப்பின் 'சிறந்த நாவல்-2012' விருதினையும் பெற்றது.