சாலை விபத்துத் திருப்பூர் வாசிகளுக்கு மிகச்சாதாரணம். எல்லா வேலைக்கும் முக்கியச் சில சாலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.குறுகிய ஆக்கிரமிப்புச் சாலைகள். பலருக்கும் இங்குச் சாலை விதிகள் மேல் நம்பிக்கை இல்லை. தங்கள் அவசரத்தைச் சாலைகள் மேல் வந்து காட்டுவது சாதனை என்றே நம்புகிறார்கள் .இதெல்லாம் போகத்தான் ’டாஸ்மாக் டார்கெட்டுக்கு’ உதவிச் செய்யப்போய் உயிர் விட்டவர்கள் கணக்கு !
பத்து வருடத்திற்கு முன் சாயஆலைகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் எமனின் தூதர்களான லாரிகளின் இடத்தை இப்போது ”மினிபஸ்கள்” நிரப்பிக்கொண்டு விட்டன.நிறைய மினிபஸ் பூதங்களின் பின்னால் அரசியல் சாயம் மிளிர்வதால் காவல்துறை இவர்கள் விசயத்தில் கண்டுகொள்ளாத துறையாக நடந்து கொள்கிறது .இங்கு விபத்துக்கள் நடக்காத ,ரத்தமும், மரணமும் பார்க்காத ,சாலைகள் மிகக் குறைவு .
திருப்பூர் வந்த புதிதில் இப்படித்தான் இந்த ஊர்காரருடன் வீரபாண்டி அருகே ஒரு பல்பொருள் அங்காடிக்கு வந்து விட்டுத் திரும்பும் போது, அப்போதுதான் நடந்த ஒரு விபத்தில் , சடலம் ஒன்று சாலையின் ஓரத்தில் கிடத்தி வைக்கப்பட்டுச் சாக்குப் போர்த்தி வைத்து இருந்தார்கள் .அந்தச் சடலத்தின் கால்களில் உள்ள செருப்பு இன்னும் முற்றிலுமாகக் கழன்று விழாமல் பிரிந்து கொண்டு இருக்கும் உயிர் போலக் காலில் கவ்வியிருந்தது.அன்றுத் தொடங்கி இன்று வரை எண்ணிலடங்கா விபத்துக்களைப் பார்த்தும் ,பார்க்காமலும் கடந்து வந்து இருக்கிறேன்.
ஒரு முறைப் பி.என்.சாலையில் ரேணுகாக் கட்பீஸ் எதிரே காலை ஒன்பது மணிக்கு வரும்போது , யாருமில்லாத சாலையில் யாரோ குடித்து விட்டுக் கிடக்கிறார் என்று நினைத்துக் கடந்து போய்கொண்டே சைடுமிர்ரர்ப் பார்க்கிறேன், அவர் தலையிலிருந்து ரத்தம் கோடாய் வெளியேறிச் சாலையை நனைத்துக்கொண்டு இருந்தது.அப்போதுதான் நடந்து இருக்கிறது இன்னொரு சமயம் ’டவுன்ஹால்’பேருந்து நிறுத்தம் கடக்கும் போது எதேச்சையாகக் கவனிக்கிறேன் அங்கு அடிபட்ட ஒரு மனிதனின், வெளியே வந்த உள்ளுறுப்புகளைச் சாக்கில் அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள் ! அதே போல இங்குள்ள 15 வேளம்பாளையம் சாலையில் எப்போதும் கூட்டமிருக்காது. அன்று ஒரு சனிக்கிழமைச் சாலையின் அலுவலகம் போகும் போது குறுக்கே ஒரு நகரப்பேருந்துச் சற்றுக் கோணலாக நின்று கொண்டு இருந்தது பார்த்தேன். பேருந்தின் உட்புறம் யாருமில்லை.டயர்ப் பஞ்சரும் இல்லை .மெல்லச் சாலை ஓரத்து இடைவெளியில் என் வாகனத்தைச் செலுத்திக்கொண்டே பேருந்து முன் பக்கம் பார்க்கிறேன்,அங்கு ஒரு இரண்டு சக்கர வாகனம் கோணல்மாணலாகப் பரப்பிக்கொண்டு கிடந்தது.அதை ஓட்டி வந்த பெண்ணின் பின் மண்டை அடிபட்டு உயிரற்று கிடந்தாள்.பள்ளிக்குத் தன் குழந்தையை விட்டு விட்டு திரும்பியிருக்கிறாள்.விபத்து நடந்து விட்டது.விபத்து நடந்த சில நூறு அடி தூரத்தில் ஒரு மர நிழலில் அந்தப் பேருந்தின் நடத்துனர் தன்னுடைய இன்வாய்சைக் கூட்டல் போட்டுக்கொண்டு இருந்தார் எதுவுமே நடக்காதது போல!
திண்டுக்கல்,கோவை,புதுவை,மதுரை,எனப் பல இடங்களில் சுற்றியிருக்கிற எனக்கு அங்கு நடக்காத கவனிக்க முடியாத முரண்பட்ட இரண்டு குணாதியசங்கள் இந்த மக்களிடம் வெகு ஆண்டுகளாய் உறுத்திக்கொண்டே இருந்தது இன்று வரை...
முதல் விசயம்..
இங்கு நீங்கள் சாலையில் உங்கள் வண்டியின் ”சைடு ஸ்டாண்ட்”எடுத்து விடாமல் ஒரு நிமிடம் கூட நீங்கள் பயணிக்க முடியாது அதற்குள் அந்தச் சாலையின் எதிரே வருபவர்களாகட்டும் நம்மைக் கடந்து போவோர்களாகட்டும் ஆண், பெண் பேதமில்லாமல் எச்சரித்து விட்டுச்செல்வார்கள் . அதே போலத் தவறி விழுந்தாலோ உங்கள் தோள் பையின் ’வார்கள்’சாலையில் உரசிக்கொண்டு வந்தாலோ உடனடி எச்சரிக்கை உங்களுக்கு ராக்கெட் வேகத்தில் வந்தடையும்.விபத்து நடந்து விட்டால் தன்னுடைய வண்டியைக்கூடச் சைடு ஸ்டாண்ட் சரியாகப் போடாமல் நழுவ விட்டு விட்டு ஓடி வந்து காப்பாற்றுபவர்கள் இங்கு அதிகம் .ஒரு சமயம் ஒரு விபத்தில் லாரிக்கு அடியில் சிக்கி உயிர் இழந்த ஒருவரின் சிதறிக்கிடந்த சுமார் 12 லட்சம் பணம் மக்களால் சேகரித்துப் பத்திரமாகக் கொடுக்கப்பட்டது.நானே பலமுறை இப்படி உதவி செய்யும் நல்ல மனிதர்களால் உதவி பெற்று இருக்கிறேன் .விபத்தில் அவ்வளவு கரிசனமா இந்த மக்களுக்கு ?
இரண்டாவதாக முற்றிலும் புரியாத விசயம் ..
இன்று திருப்பூர், மங்கலம் சாலையிலிருந்து நடராஜ் திரையரங்கு வழியே மதிய உணவுக்கு இரண்டு மணிச் சுமாருக்குப் போய்க்கொண்டு இருக்கும் போது, அந்தச் சாலையின் ரோட்டரி மஹால் தாண்டியவுடன் சாலை ஸ்தம்பித்து இருந்தது . அது ஒருவழிச்சாலை . சாலையின் இரண்டு பக்கத்திலும் ஆங்காங்கே போட்டது போட்டபடி இரு சக்கர வாகனங்களும் சில கார்களும் நின்று இருந்தன.இப்போதும் சில முன் செல்லும் வாகனங்கள் போகப் போக நிறுத்திக்கொண்டே இருந்தார்கள். நடுவில் கொஞ்சம் இடமிருந்தது. நுழைந்துக் கடக்கும் போதுதான் எல்லோரின் வெறித்த பார்வைக் குவியும் இடத்தில் பார்த்தால் மூன்று பேர்ச் சூழ்ந்து கொண்டு ஒருவரை அடித்துக்கொண்டு இருந்தார்கள் .என்ன பிரச்சனை என்பதில் என் கவனம் இல்லை. ஆனால் அத்தனை பேரின் முகத்தின் வெளியே குதிக்கக் காத்து இருக்கும் ஒரு வித ஆர்வத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டேன்.அங்கு நின்று கொண்டிருக்கும் வண்டிகளில் போட்டது போட்டப் படி விட்டு விட்டு வந்து தனக்கே நடப்பது போல உணர்ச்சியலைகள் ததும்பி நின்றார்கள் .. சிலருக்கு அங்கே அடிப்பவரைப்போலவே கையசைவுகள் கூட இருந்தது என்றால் எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள் !
கடந்த 15 வருடமாகத் திருப்பூரின் சாலைகளில் நடக்கும் பல நிகழ்வுகள் இப்படிப்பட்ட ஒரே மாதிரிச் செய்தியைத்தான் எனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.சின்னதாய் ஒரு வண்டிக்கும் வண்டிக்கும் இடித்துக்கொண்டு நடக்கும் வாக்கு வாதமாகட்டும் ,மிகப்பெரிய உயிர் பறிபோன விபத்தாகட்டும் எல்லாத்துக்கும் ஒரே ’ரியாக்சன்தான்’.கூடியிருப்பவர்களின் அதே வெறித்த பார்வைகள், என்ன பார்க்கிறோம் எதற்குப் பார்க்கிறோம் ஏன் பார்க்கிறோம் நமக்கு அடுத்த வேலை என்ன என்பதைப்பற்றி எந்தக் கேள்வி இல்லாமல்,அங்கு நடப்பது முழுவதும் உள்வாங்கும் ஒரே விதப்பார்வை ! அப்படிக் கூடி இருப்பவர்களைக் கவனித்துக்கொண்டே பல முறை அலுவலகம் வந்த பின், மற்றவர்கள் (மிகச் சுவாரசியமாக) பேசும் போதுதான் அங்கு என்ன விபத்து என்றே தெரியும்.ஏன் இது என்ற தீராத நிழலாடும் சந்தேகத்துடன் வீட்டுக்குள் போனேன் , சமையல் தாமதமாகும் என்றார்கள் இல்லத்தரசி .
சரி, வெகு நாள் ஆகிவிட்டதே சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் (1999 ) வாசிக்க எடுத்தால் அதன் 5ஆவது பகுதியில் வில்லியம் ஹாஸ்லியின் (William Hazlitt), On the pleasure of hating என்ற கட்டுரையில் ”நாம் வெளிப்படையாகச் செய்யும் காரியங்களில் மனிதாபமானம் கலந்து விட்டோம்.ஆனால் மனதில் உள்ள இச்சைகளையும் கற்பனைகளயும் கட்டுப்படுத்த இன்னும் கொஞ்சம் நாளாகும்.”
இது படிக்கும் போது கூட என் சந்தேகம் பெரிதாய்ப் பொருந்திப் போகவில்லை.ஆனால் அடுத்துச் சொன்ன,
"We give up the external demonstration, the Brut violence but cannot part of the essence or principle of hostility" - மூர்க்கத்தனமான வன்முறையின் வெளிவடிவங்களை நாம் கைவிட்டு விடுகிறோம் ஆனால் விரோதத்தின் சாரத்தை நம்மல் கைவிட முடியாது ”என்ற வாக்கியம் இன்னும் சில சந்தேக வலுவை முறித்தது.
ஆனால் அடுத்து வந்த சில வரிகள் நொறுக்கிப் புதைத்தன என்னை .அவை ”without something to hate we should lose the very spring of thought and action - நம் எண்ணங்களில் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் வெறுப்புதான் ”
திருப்பூரின் அதிகபட்ச மக்கள் என்னைப்போலச் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்தவர்கள்.அப்படிச் சொந்த மண்ணை விட்டு இங்கு வந்ததற்குச் சம்பாதிப்பு மட்டுமே நோக்கம் அல்ல .இன்னப் பிற நிம்மதியற்றப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன .ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சனிஸ்வரப் பகவானின் காலடிச் சுவடுகள் கட்டாயம் எங்காவது ஓரத்தில் தென்படும் . தொலைந்து போன தூக்கங்களை நிச்சயமாய் எந்தக் குளிர்காற்றும் திருப்தியளிக்க முடியாது இந்த ஊருக்கு வந்த பலரின் வாழ்விலும் பல கொண்டை ஊசி வளைவுகள் எழுதப்படாதச் சட்டமாயிருக்கிறது .ஒரு பக்கம் வெகு சில அடித்தட்டு மக்களுக்கும் பணியிடத்துக்குள் நுழைந்து அன்றைய வேலைப் பொறுத்து வீட்டுக்குத் திரும்பினால்தான் உண்டு இல்லாவிட்டால் தூக்கம் உத்திரவாதம் இல்லை. நடுத்தர வாதிகளுக்கு இன்னும் இன்னும் என்று யாருக்கோ பதில் சொல்லும் சம்பாதிப்பு வெறி ,உள்ளூர்க்கார மேல் தட்டு வாதிகளுக்கு இன்று வந்தவனெல்லாம் கொடி நாட்டுகிறான் நாம் இப்படியாப் பிழைப்பது என்ற ஆதங்க உளைச்சல் ! மொத்தத்தில் இங்குள்ள பாதிக்கும் மேல் உள்ள மக்களின் மன நிலையை வில்லியம் ஹாஸ்லியின் 1928ன் சிந்தனையோடு ஒத்துப்போகிறது.
இப்போது முடிந்தால் இன்னொரு முறை முதலிருந்து வாசித்துப் பாருங்கள் முரண்பாடுகளுக்கான காரணங்கள் எல்லாமே புரிகிறது. ( இந்த பதிவை அடுத்து அடுத்து என (சிறு) வசிகரிப்பில் வாசித்த உங்கள் மனஅலை வரிசையும் ஹாஸ்லியின் சிந்தனையோடு ஒத்துப்போகிறதா ?
தொலைந்து போன தூக்கங்களை நிச்சயமாய் எந்தக் குளிர்காற்றும் திருப்தியளிக்க முடியாது இந்த ஊருக்கு வந்த பலரின் வாழ்விலும் பல கொண்டை ஊசி வளைவுகள் எழுதப்படாதச் சட்டமாயிருக்கிறது .ஒரு பக்கம் வெகு சில அடித்தட்டு மக்களுக்கும் பணியிடத்துக்குள் நுழைந்து அன்றைய வேலைப் பொறுத்து வீட்டுக்குத் திரும்பினால்தான் உண்டு இல்லாவிட்டால் தூக்கம் உத்திரவாதம் இல்லை. நடுத்தர வாதிகளுக்கு இன்னும் இன்னும் என்று யாருக்கோ பதில் சொல்லும் சம்பாதிப்பு வெறி ,உள்ளூர்க்கார மேல் தட்டு வாதிகளுக்கு இன்று வந்தவனெல்லாம் கொடி நாட்டுகிறான் நாம் இப்படியாப் பிழைப்பது என்ற ஆதங்க உளைச்சல் ! மொத்தத்தில் இங்குள்ள பாதிக்கும் மேல் உள்ள மக்களின் மன நிலை
பதிலளிநீக்குபடித்துக் கொண்டே வந்த போது மிகவும் வியந்து போனேன். அடித்தள எண்ணங்களை எழுத்தாக்கும் வித்தை உங்களுக்கு இயல்பாகவே வந்து விட்டது. தொடரவும்.
நீங்கள் வாசித்தாலே கூட சந்தோசம் என நினைப்பேன் .சமீபத்தில் உங்கள் பார்வை என பதிவுகள் மீது படவில்லை என்ற ஏக்கத்தை போக்கி விட்டீர்கள் உங்கள் விமர்சனம் எப்போதும் உற்சாகமாக இருக்கிறது உங்களின் நேரத்தை எனக்காக ஒதுக்கியமைக்கு நன்றி .
பதிலளிநீக்கு