வெகு நாளைக்குப் பிறகு காதலித்த பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது ஆனந்த விகடனை நான் மீண்டும் வாசிக்க நேர்ந்தது .என்னப்பா ஊர்ல ஆயிரம் விசயம் இருக்கறப்ப இது ஒரு விசயமா ? இல்லைதான் .ஆனால் 90 வருடங்களாக வெளிவந்து கொண்டு இருக்கும் ஒரு மூத்த பத்ரிக்கையில் உங்களுக்கு வெகு நாளாகப் பழகித் தெரிந்தவர் வேலைக்கு அங்குப் பணி புரிய நேர்ந்தால் நீங்கள் காதலித்த பத்ரிக்கை மேல் ஒரு மறு ஈர்ப்பு நிகழத்தானே செய்யும் அதுதான் நடந்தது இங்கு !
திருப்பூருக்குள் முதன் முதலாகப் பணிக்குச் சேர நுழைந்த போது ஆயத்த ஆடைப் பற்றிய எந்த முன் அபிப்ராயமும் எனக்கு இல்லை .எனது ஒன்று விட்ட சகோதரர் இங்கு இருந்தார் .அவருக்கு எனக்குப் பெண் பார்த்து எனக்குத் திருமணம் செய்து, ஆயிரம் காலத்துப் பயிரை என் மூலம் நட்டு வைத்து வளர்க்க மிகுந்த அக்கறை காட்டினார். அதனால் சொந்த ஊரில் டெக்ஸ்மோ ஷோரூமில் பார்த்துக்கொண்டு இருந்த கணக்காளர்ப் பணியை உதறி விட்டு அவர் ஆசையை நிறைவேற்ற வந்திருந்தேன்.சகோரரின் நண்பர் மூலம் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலைக் கிடைத்து அதன் கிளைப் பிரிவில் பணிபுரிய ஒரு காலை அருள்புரத்தில் உள்ள அந்தக் கம்பெனிக்குள் நுழைந்தபோது எதிர்பட்ட ஒருவரைப் பார்த்து, நான் ரசீது பாயைப் பார்க்க வேண்டும் என்றேன்.அவர் ஏற இறங்கப் என்னைப் பார்த்தவிதமே சரியில்லை ! ஆனால் பதில் உடனே வந்தது .ஒன்பது மணிக்கு வந்திடுவார் .
அப்புறம் பணிக்குச் சேர்ந்த சில நாளுக்குப்பிறகுதான் தெரிந்தது நான் ரசீதுபாய் என்ற குற்ப்பிட்ட நபர் அந்த யூனிட்டில் எல்லோரும் பயப்படும் மேலாளரின் பெயரை .சரி அவரை விடுங்கள். நான் கேட்ட போது பார்த்தவிதமே சரியில்லாத அவர்தான் இப்போது இங்குப் பதிவிற்குக் காரணம் .அவர்தான் K.B.கிருஷ்ணகுமார்.இப்போது ஆனந்த விகடனில் பரிசல்(காரன்) கிருஷ்ணா(குமார்) என்ற பெயரில்- சப் எடிட்டர் அவதாரம் எடுத்து இருக்கிறார் .இதில் என்ன பெருமை இருக்கிறது ? இருக்கிறது .
கால நேரமில்லாமல் சக்கரமாய்ச் சுழலும் இந்த ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்த ஒருவர் சுவாரசியமான ஒரு பத்ரிக்கைக்குப் போவது அவ்வளவு சுலபமில்லை .எழுத்து என்பது ஒரு சூட்சுமமாய் ஓயாது உள்ளே ஓடிக்கொண்டு இருக்கும் நதி போல! .தன்னில் ஓடும் நதியை விட்டுவிட்டு அடுத்த நாள் கப்பலேறவிருக்கும் ’ஷிப்மெண்ட்’ என்று சதா மண்டையைப் போட்டுப் பிறாண்டிக்கொண்டு இருக்கும் வேலை பார்ப்பவர் தன்னுள் அந்த நதியைக் கவனிக்க முடியாது. அப்படியே பாயும் நதியெல்லாம் பாலைவனத்தின் அடியில் மறைந்து போன சரஸ்வதி நதி போலாகி விட்டது.
ஆனால் அதற்கும் தீனி போட்டுக்கொண்டு தன்னையும் அதே யூனிட்டில் மேலாளராக வளர்த்துக்கொண்டு உயர்ந்தவர்தான் இந்தப் பரிசல்காரர்.அது மட்டுமல்ல அந்த நிறுவனத்தில் அவர் வகிக்காத பதவிகளே இல்லை என்ற அளவுக்கு முக்கியமான A to Z பதவிகளிலும் முத்திரைப் பதித்தவர் என்பது வேறு விசயம்.
அவருடைய மேற்பார்வையில்தான் என் பணித் துவங்கியது .சில வாரத்திற்குப் பிறகு ஒரு காண்டிராக்டர்தான் அவர் ஆனந்த விகடனுக்கெல்லாம் எழுதுபவர் என்று சொன்னார்.அன்றிலிருந்துதான் ,அவரோடு நெருக்கமாகப் பின்பற்றி நடந்தேன்.எழுதுபவர்களோடு பயணிக்கும் சுகமே தனிதான்.அது நம்மை இயற்கையோடு கைகோர்த்துக்கொள்வதற்குச் சமம்.
அவரோடு சுமார் ஐந்து வருடம் இருந்து இருக்கிறேன் .அவர் கம்பெனியின் எல்லாத் தளங்களில் உள்ள பணியாளார்களோடும் நெருங்கிப் பழகுவார்.சாதாரண லைன் பீஸ் கணக்கு எழுத பணியில் அமர்த்தப்பட்ட என்னை, ஆயத்த ஆடைத் தயாரிப்பின் பல்முகங்களிலும் நனைத்து எடுத்தவர்.அவர் எப்போதும் எனக்குச் சொல்லித்தரும் ஒரு வாக்கியம் - இங்குத் திருப்பூரில் நிர்வாகத்திற்குக் கடினமான வேலைகளை விடக் கவனம் மிகுந்த முக்கியமான வேலைகளைச் செய்தால்தான் நமக்கான சம்பள உயர்வு பொறுப்பும் பதவியும் தேடி வரும் என்பதுதான் அது .அப்படித்தான் கடைசிவரை என்னை வழி நடத்தினார்.எதிலும் ஒரு தெளிவானப் பார்வை வைத்து இருப்பார். அதைவிடவும் பணிபுரிந்த நிர்வாகத்தின் எந்தப் புதிய திட்டமிடலில் இவர் கைதான் ஓங்கியிருக்கும் .இதனால் பல பேரின் பகையையும் பெறுவதில் தப்பவில்லை .
வேலை நேரம் போக வெளியில் அவர் முகம் வேறு .மிக எளிமையாகப் பழகுவார் .அற்புதமாகப் பைக் ரைடிங் பண்ணுவார்.சாலையில் யாராவது இண்டிக்கேட்டர்ப் போடாமல் திரும்பி விட்டால் போச்சு . அவனைத் துரத்திப் போய் அந்நியன் பட அம்பியாக மாறி வம்பு செய்வார் . செஸ் விளையாட்டில் பட்டையைக் கிளப்புவார் .கிரிக்கெட் அதைவிட அபாரம் .அவர் ஒரு ஆல்ரவுண்டர்.
இது வேறு யாருக்காவது நடந்து இருக்கா என்று எனக்குத் தெரியாது.ஒருக் கம்பெனியில் நீங்கள் பணியில் சேரச் சிபாரிசுத் தேடுவீர்கள் .ஆனால் ஏழு வருடம் வேலைப் பார்த்த இடத்தை விட்டு வெளியேறச் சிபாரிசுத் தேடியிருக்கிறீகளா ? நான் தேடியிருக்கிறேன் .அதையும் செய்து தந்தவர்களில் இருவரில் பரிசல்காரரும் மிக முக்கியமானவர்.
பணி புரிந்த இடத்தில் சில இடமாற்றம் நடந்தது.கிருஷ்ணகுமார் சார் அப்போது முதலாளிக்குப் பி.ஏ அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டுத் தலமை அலுவலகம் போய் விட்டார்.நான் பணிபுரிந்த யூனிட்டின் ஆரசியல் மூச்சுத்திணறலில் முங்கித்தவித்தேன் .இதிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்க அவரிடம் உதவி தேடிக் கம்பெனிக் குடியிருப்பில் இருந்த அவர் இல்லத்தில் சந்தித்து, நிலைமையைச் சொன்னேன் .புரிந்துகொண்டு ஒரு நல்ல சமயத்தில் வெளியேற உதவினார் .அவர் அப்போது எங்கள் சென்று எப்படி என் முதல் பணியில் சேர்ந்த போது அவரிடம்தான் முதல் வார்த்தைப் பேசினேன் .அதே போல என்னை அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறும் போதும் அவரோடு பேசி நன்றி சொல்லிவிட்டுத்தான் வந்தேன். சில வருடங்களில் அவரும் வேறு நிறுவனம் போய் விட்டார்.
பிறகு அவரோடு தொடர்பு குறைந்து போனது .அடுத்து அவர் எழுதிய ’டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்’ கதைத்தொகுப்புக் கூட இப்போதுதான் அறிந்துகொண்டேன் . மீண்டும் சில முகநூலில் அவரைச் சந்தித்தேன் .அவர் வாழ்வில் மாறாத தழும்பாய் ஒரு அசம்பாவிதம் நடந்தபோது அவர் வீடு எங்கு இருக்கிறது என்று கூடத்தெரியாது .மிகத்தாமதமாகத் தெரிந்துத் தேடிப்போனபோது பெருமாநல்லூர்ப் போய் அங்கிருந்து வீட்டு முகவரிக்காக அலைபேசியில் அவரைத் தொடர்புக் கொண்டபோது , வீட்டில் இருக்க வேதனையாக இருக்கிறது ,அதனால் கோவை வரை போகிறோம் என்ற மனம் உடைந்து போன பதில் வந்தது.ஆனாலும் வீடு போனேன் அவர் சகோதரர் அம்மாவைச் சந்தித்து விட்டு வந்தோம் ....
அதற்குப் பிறகு ஒரு நாள் அவர் விகடனில் சப் எடிட்டராக இணைந்து விட்டதாக அறிந்தவுடன் மிகவும் சந்தோசப்பட்டேன்.நதிகளின் தேடல் கடல்தானே ? இப்போது விகடனின் 90 ஆவது இதழில் அவரின் பங்கு இருப்பதால் அவரோடு நான் பணிபுரிந்தப் போது உடன் இருந்தவர்களைத் தொடர்புகொண்டு படிக்கச்சொன்னேன்.சந்தோசப்பட்டார்கள். உடனே அலைபேசி எண் கேட்டார்கள் கொடுத்தேன். இன்னும் நிறையப் பேர்க் கேட்பார்கள் ....அன்புத் தொல்லைகள் தொடரும் !
இனி தலைப்புக்கு வரலாம் ..
விகடனுக்கு வயது 90.
வெகு நாள் கழித்துக் காதலித்த பெண்ணைச் சந்தித்தால்,முதலில் பரவச மேலிட பேசிக்கொள்வோம் அது சில மணி நேரத்தில் ஊடலாய் மாறுவது வியப்பேதுமில்லை .காரணம் முடிந்த இடத்தில் மீண்டும் தொடங்குவது போல இருவரின் பிரிவுக்கு யார் காரணம் என்று விவாத பந்தயம் வைப்போம் .அது போல .ஆ.வித் தன்னுடைய அழகான இமேஜைத் தொலைத்ததோடு அதன் என்னைப்போல வாசகர்களைத் தொலைத்தற்கு முக்கியக் காரணம் சில இருந்தது .அதன் வடிவம் மாறி அதன் விலையேற்றம் கட்டாயமான போது என்னைப்போலப் பல வாசகர்கள் சுனாமியின் சிக்கியக் கரையோரத்துக் குடிசை வீடுகள் போலக் காணாமல் போனோம் .இரண்டாவது இவ்வளவு விலைக் கொடுத்து வாங்கும் ஒரு இதழில் இளமை ,புதுமை,நடப்பு , ஆன்மீகம் என எல்லாமும் இருப்பதையே விரும்புவோம் .ஆனால் ஆ.வி அதைத் தனக்குள் பிரித்துக்கொண்டது .இன்னும் பிரித்துக்கொண்டேயும் போகிறது .
இது வாசிப்பு உலகின் வியாபார வெற்றியா ,தந்திரமா ? இல்லை ஆழமாக ஒரு விசயத்தைச் சொல்ல எடுத்துக்கொள்ளும் முயற்சியா ? தெரியாது. ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதழ் வாங்குமளவிற்கு இன்னும் என்னைப்போல வாசகன் முன்னேறவில்லை . சரி. இது ஒரு வாசிப்பவனின் ஆதங்கமாக இருக்கட்டும் .
பொக்கிஷத்தில் விடுபட்ட முத்துக்கள் !
விகடன் 90 வயதுக்காரர் .மூத்தவர்கள் தன் வாழ்வின் இளமை எப்படி இருந்து இருந்தாலும் அதை மறைத்துச் சொல்ல மாட்டார்கள்.
# பொக்கிஷம் ஆனந்த விகடனின் (பக்.197-212) பகுதியில் 50 நிகழ்வுகள் அழியாத சுவடுகளாக , மாறாத அழகோடு பதிவுச் செய்யப்பட்டு .ஆனால் அதில் ஒரு முக்கியமான வரலாற்று விசயம் இருந்து இருந்தால் நன்றியாக இருந்து இருக்கும் .1926-ல் பூதூர் வைத்தியநாத ஐயர் என்பவர் நடத்திவந்த ‘ஆனந்த விகடன்’ இதழைத்தான் எஸ்.எஸ்.வாசன் ரூ. 200 விலைக் கொடுத்து வாங்கி அந்த இதழைத் தானே நடத்த ஆரம்பித்தார். அப்படியே பெயரைக்கூட மாற்றாமல் அதை நடத்திக்கொண்டு இருக்கும் போது அதைச் சொல்லியிருக்கலாம்! அந்த இதழ்களும் 1835-ல் தொடங்கி ஞானாலயா’ பி.கிருஷ்ண மூர்த்தி (வயது 75). அரிய புத்தகங்களைச் சேகரிப்பில் பத்திரமாக இருக்கிறது.வரலாறு கவனிக்கப்படும்போது நதிமூலமும் ரிசிமூலமும் பேசியினால் தவறேதும் இல்லை .(ஆனால் விகடன் விக்கிப் பக்கம் https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_விகடன் - ஆனந்த விகடன் என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழ். எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது என்ற பதிவு செய்கிறது.)
இரண்டாவது விட்டுப்போன ஒரு முக்கிய நிகழ்வு .
எனக்கு அப்போது பதினேழு வயது நன்றாக ஞாபகம் இருக்கிறது .அந்த நிகழ்விற்குப் பிறகுதான் தமிழ் வாசகர்களிடம் மிகவும் முக்கியமாகக் கவனிப்பட்டப் புத்தகமாக ஆனந்த விகடன் மாறியது என்றால் தவறில்லை.அது எதுவும் ஆனந்த விகடன் பொக்கிஷத்தில் குறிப்பிடப்படவில்லை .
1987ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர் அரசு எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களைக் கைதுசெய்துச் சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்குத் தொடுத்து வெற்றிபெற்று, 1001 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார். வழக்கில் வென்ற இவருக்கு ரூ.1000 நஷ்டஈடு வழங்கப்பட்டது.சிறையில் இருந்து இவர் கம்பீரமாக நடைபோட்டு வருவதுபோல ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கார்ட்டூன் வரைந்தார் ஆர்.கே.லஷ்மண். அது இவருக்கு மிகவும் பிடித்துவிடவே ஒரிஜினல் கார்ட்டூன் ஓவியத்தைக் கேட்டு வாங்கினார். ஆர்.கே.லஷ்மண் கையெழுத்துடன் கூடிய அந்தக் கார்ட்டூனையும், நஷ்டஈடாகக் கிடைத்த 1000 ரூபாயையும் ப்ரேம் போட்டு தன் அலுவலகத்தில் மாட்டினார்.( https://ta.wikipedia.org/wiki/எஸ்._பாலசுப்பிரமணியன் .)
இதைப்பற்றி எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் தனது கடைசிப் பேட்டியில் பதில் சொல்லியிருக்கிறார் .
விகடன் அட்டைப் பட ஜோக்குக்காக அதிமுக அரசுச் சிறைத் தண்டனை விதித்தபோது, எம்ஜிஆரிடம் நீங்கள் பேசுவீர்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எது உங்களை எதிர்த்துப் போராட வைத்தது?
விகடன் ஒரு புரட்சிப் பத்திரிகைக் கிடையாது. எல்லோரும் வாசிக்கக் கூடிய, ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகைதான் அது. ஆனா, அன்னைக்கு எம்ஜிஆர் அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை என் மீதானத் தாக்குதலாகவோ, விகடன் மீதானத் தாக்குதலாகவோ பார்க்கலை. ஒட்டுமொத்தப் பத்திரிகைச் சுதந்திரத்து மேலேயும் நடத்தப்பட்ட தாக்குதல். அதைத் தனிப்பட்ட வகையில, குறுக்குவழியில அணுகினா, இந்தப் பத்திரிகைத் தொழிலுக்கே நான் வந்திருக்க வேண்டியதில்லை.
முடிவாக....
எல்லாம் சரிதான் .இதற்குப்பிறகும் நீ விகடன் வாசிப்பாயா மாட்டாயா ? என்ற கேள்வி உங்களிடமிருந்து வருகிறது .சரிதானே ? பழைய காதல் அப்படி விட்டு விட முடியுமா ? அதுவும் பரிசல் கிருஷ்ணா சார் அங்கு இருக்கும் போது !....