வேட்டைக்குப் போகும் காலத்திலிருந்து ஆண்களுக்கு ,பெண்களை விடச் சில பாதுக்காப்புப் புலனறிவுக் கொஞ்சம் தூக்கலாக இருப்பதாக இருப்பதாகச் சொன்னாலும் சொன்னார்கள் தான் மட்டுமே ஒட்டுமொத்தப் பெண்களின் பாதுகாப்புப் பிரதிநிதி என்பது போலச் சில பேர்க் களத்தில் இறங்கும் புத்தி மேலோங்கி விட்டதைத் தவிர்க்க முடியவில்லை.இப்படிப் பட்டப் பிரதிநிதிகளில் ஒருவராய் என் சின்ன அண்னன் ஒரு முறைக் கிளம்பி விட்டார் .அவர் திருமணம் செய்யப் போகும் பெண் ( வருங்கால அண்ணி ) ணின் சகோதரித் திண்டுக்கல் ஐடிஐ யில் ரேடியோ மெக்கானிக் கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்தார் .அவர்கள் தினமும் நத்தம் அரசு ஐ.டி.ஐ க்குப் பஸ்ஸில் போகும் வழியில்தான் இண்டஸ்டிரியல் எஸ்டேட்டுக்குள் டூல் & டை டிப்ளமோ இன்ஸ்ட்யூட்டும் இருக்கிறது . இந்தப் பஸ்ஸில் இரண்டு மாணாவர்களும் ஏறக்குறைய ஆரம்ப ஒரே நேரம் என்பதால் ஒரே பஸ் பயணம்தான்.சிக்கல் இங்குதான் .யாரோ அண்ணியின் சகோதரியைத் தொடர்ந்து கேளி செய்கிறார்களாம் என்பதுதான் குற்றத்தாக்கல் .வழக்கமாகவே அண்ணன் கோபக்காரர் .சட்டெனெக் கை நீட்டுவதில் தேர்ந்தவர் .அதிகம் படிப்பு இல்லாததால் அந்தத் தாழ்வு மனபான்மையும்,சமூகத்தின் மீது ஏதோ ஒரு கோபமுமே சேர்ந்த குணமானவர் .
அதனால் காலையில் எட்டரை மணிக்குக் அந்தப் பஸ் கிளம்பும் என்பதால் நான் அண்ணனிடம் சொல்லாமல் எட்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டில் ஆஜரானேன்.வழக்கமாக அந்தப் பெண் நிற்கும் இடம் ,கிளம்பும் இடம் .பஸ் எண் எல்லாம் எனக்கு முன்னமே தெரியும் ,அந்தப் பெண் அழகாய் இருந்ததால் இதற்கு முன்னரே மட்டும் இந்த விசயத்தைத் தெரிந்துக் கொள்ளவில்லை நானும் அதே ஐ.டி.ஐ யில் இரண்டு வருடத்திற்கு முன்தான் வெல்டர் ட்ரேடு படிக்கப் போய் ஒரு வருட குப்பைக் கொட்டி இருக்கிறேன். மன்னிக்கவும் . படித்து இருக்கிறேன் அதனால் அந்தப் பஸ்ஸில் சில சமயம் போன அனுபவமும் இருக்கிறது.
நீண்டக் காம்பஸ் ஸ்கேலுடனும் மற்றும் சோல்டர்ப் பேக் வைத்திக் கொண்டு நிற்கும் பசங்கள் டூல் & டை பாய்ஸ் எனவும் நீண்டப் பெரிய லாங் சைஸ் நோட்டும் ஒரு டிஃபன் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் ஐ.டி.ஐ எனவும் இனம் பிரிப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் பெண்கள் பசங்கள் வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள் . .நானும் ஓர் ஓரமான இடத்தைத் தேர்வு செய்து காத்து இருந்தேன்.எப்படி ஆரம்பிப்பது என்பதாக என்னிடம் எந்த ப்ளானும் இல்லை .இந்த மாதிரி விசயம் எனக்கு ஏற்கனவே பல சந்தர்ப்பத்தில் சந்தித்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவம்தான்.இது எல்.ஐ. சி போல வரும் முன் காப்போம் இல்லை வந்த பின் பார்ப்போம் என்ற கதைதான் . மணி 8.20 .டூல் & டை பாய்ஸ் கூட்டம் அதிகரித்தது .அதில் யாரையாவது ஒருவனைத் தேர்வு செய்து பேச்சை ஆரம்பிக்க வேண்டும் .
மெல்ல கூட்டத்தில் ஒதுங்கிச் சென்று நெருங்கிய போதுதான் ஒரு விசயத்தைக் கவனித்தேன் அவர்கள் ஏதோ ஒரு பதஷ்டமாக இருந்த மாதிரித் தெரிந்தது .அவர்களுக்கு இந்த மாதத்தில் எக்ஸாம் இருக்க வாய்ப்பில்லை. நான் மெல்ல அந்தக் கூட்டத்தில் அதிகம் பேசும் ஒரு பையனைத் தேர்வு செய்து மெல்ல ஏன் பசங்கள்லாம் ஒரு டென்சனா இருக்கீங்க என்றேன் .அதுவரை அவனுடன் அருகில் பேசிக் கொண்டு இருந்த சிலர் பேச்சை நிறுத்தி என்னைக் கூர்மையாகப் பார்த்தார்கள்.அவர்கள் வேறு எதற்கோ காத்து இருப்பது தெரிந்தது .
ஆமா சார். எங்களுக்கும் இன்னொரு இன்ஸ்டியூட் பசங்களுக்கும் ஒரு
பிரச்னை.நீங்க சார் என்றான் .எனக்கு அவன் மரியாதை என் தேர்வை உறுதிப்படுத்தியது .இல்லை ஒரு சின்ன விசயம் பாஸ் நம்ம பிள்ள ஒன்னு உங்க பஸ்ல வருது , ஏதோ ஒரு சின்னப் பிரச்சனைன்னது .அதான் நம்ம பசங்க நீங்களே இருக்கும் போது நாங்க எதுக்குன்னு கேட்டா பயப்படுது அதான் உங்க கிட்ட சொல்லி பார்துக்கச் சொல்லலாம்ன்னு வந்தேன் லேசய்க் கொஞ்சம் இழுத்த மாதிரிச் சொன்னேன் .அவன் புருவம் லேசாய் உயர்ந்தது. வேட்டைப் புத்தி அவனுக்குள் வெளி வரத்தொடங்கியது.யாரு அவங்க ? என்றான் அந்தப் பையன் .சட்டெனெ அவன் பக்கத்தில் எங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டு இருந்தவன் கை குலுக்க நீட்டினான் .அண்ணா என் பெயர் சுரேஸ் .நானும் சொன்னேன் .இன்னும் சில பேர் கை கொடுத்தார்கள் .எனக்குச் சரியான திசையில் என் கப்பல் போய்க் கொண்டு இருக்கும் தைரியம் வந்தது .ஆனால் யாரோ பின்னாளிருந்துத் தோளைத் தொட்டார்கள் .திரும்பினால் அண்ணன் .அடப்பாவிகளா என் கப்பல் தண்ணீரில் மூழ்கிடும்போல ?
என்னடாப் பண்ற யாரு என்றார் .நான் மெல்ல இங்க வா ஒரு நிமிசம் என்று கையைப் பிடித்துக் கொண்டு ஏறக்குறைய இழுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் நிற்கும் பகுதிக்கு வந்து விட்டேன் .அதற்குள் அந்த என் வருங்கால அண்ணியின் சகோதரியும் வந்தாகி விட்டது . அந்தப் பெண் சிரித்தது . இங்கு நடப்பதற்கும் \எனக்கும் சத்தியமாய் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல இருந்தது. அந்த அவசரத்திலும் அந்தப் பெண் சில வாரங்களுக்கு முன்னால் பார்த்தை விட அழகாகத் தெரிந்தாள் .ஒருவேளை எனக்கு அப்போது அப்படித் தோணியதா என்பது தெரியவில்லை..
என்னடாச் சொல்றாய்ங்க ? அண்ணன் .
ஏகமாய்க் கேட்டார்.
பேசிக்கிட்டு இருந்தேன் அதற்குள் நீ வந்துட்டே நீ இங்கே இரு பேசிட்டு வந்தறேன் .அவர் பதில் சொல்வதற்குள் நகர்ந்து விட்டேன்
மீண்டும் பசங்களிடம் . வந்தேன்.நான் பேசிய பசங்களுடன் இன்னும் சிலர் சேர்ந்து ஆறேழுப் பேர்க் கூடி விட்டனர் .நல்ல வேளை அவர்கள் போகும் பஸ் இன்னும் வரவில்லை .
முதலில் சுரேஸ் என்ற பையன் பேசினான் ,யாருண்ணே அது ? உங்க பிரதரா ? ஏதோ கோபமா இருப்பார் போல ? அவன் கேள்வியின் முடிவில் ஒரு கேளி இருந்தது .அது கூட்டமாய் இருக்கும் போது வரும் முட்டாள்தனமான வீரம் .ஆனால் அவன் பேச்சு மூலம் இவர்களுக்குள் ஏதோ நடந்த அடையாளம் இருப்பதை உணர்ந்தேன் .என் வந்த வேலை சுலமானது போலத் தெரிந்தது .இனி சுற்றி வளைத்துப் பேச வேண்டியது இல்லை ஆமாம் சுரேஸ் .அவருகிட்டத் தப்பாச் சொல்லியிருக்காங்க .அதெப்படி எல்லோரும் நம்மப் பசங்க மாதிரி இருக்கிறீங்க நீங்க எப்படி ..இதை முடிப்பதற்குள் சுரேஷ் , நீங்க என் வருங்கால் அண்ணியின் சகோதரியின் பெயரைச் சொல்லி நீங்க அவங்களுக்கு என்ன (உறவு ) வேணும் ? என்றான் மாமா .என்றேன் .அண்ணே ஒன்னுமில்லாத விசயம் உங்க அவங்கதான் பெரிசு படுத்தறாங்க .என்றான் சுரேஷ் .அவங்க ஃபிரண்ட் பேர் சொல்லி இவன் கூப்பிட்டானாம் இது ஒரு பிரச்சனைன்னு அவங்க ரெண்டு நாள் பேசலை ஏன் பேசலைன்னு இதா இங்க இருக்கானே ராம்ஜிதான் கேட்டான் .அதுக்குப் போய் உங்கள் கூட்டீட்டு வந்துட்டாங்கப் பாருங்க என்றான் .அவன் காட்டிய ராம்ஜி சிவப்பாய் ஒல்லியாய் அமராவதிப் படத்தின் அஜீத் முகத்தை லேசாய் ஞாபகப் படுத்தினான் .ஆனல் கலையாத முடியை அடிக்கடிச் சரி செய்து கொண்டே இருந்தான்
எனக்குப் புரிந்து விட்டது .இது சுண்டைக்காய் விசயம் .இந்தப் பெண் விவரம் புரியாமல் தன் தோழிக்கு உதவி செய்யத் தன் மாமாக்களைத் தாயம் விளையாட்டுக் கட்டைப் போல உருட்டுகிறது .இனி நாம் பரமபதத்தில் பாம்பிடம் கொத்துப்பட்டது போல இறங்கிவிட வேண்டியது தான் எனத் தீர்மானித்தேன் .சட்டெனெத் திரும்பி அண்ணனைக் கைக் காட்டி வரச்சொன்னேன் .வந்தார் .நான் சொன்னேனில்லை .நம்ம பசங்க இதுக எதாவது பண்ணிட்டுக் கையைக் காமிச்சுருச்சுப் பாரு என்றேன் மேலும் கொஞ்சம் விளக்கினேன் .அவர் முகம் மாறியது .
பஸ் வந்து விட்டது .எல்லோரும் சொல்லி விட்டுக் கிளம்பும் போது ராம்ஜி மட்டும் (அதான் அமராவதி அஜித் ) இன்னொருவனைப் பார்த்து மாப்ளச் சீட் போடு வரேன் என்று சொல்லிவிட்டு அவர் போகட்டும் நீங்க வாங்க என்று சைகைச் செய்தான் .பஸ்ஸை நோக்கி அவன் போக நான் அண்னனிடம் இரு வரேன் என்று சொல்லிவிட்டு அவனுடன் நகரும் போது திரும்பி அண்ணன் விலகிப் போனதை உறுதிப்படுத்தி விட்டுச் சொன்னான் .சொல்லவில்லை அது ஒரு அசம்பாவிதத்திலிருந்து தப்பித்தது போல இருந்தது .அவன் சொன்னது இதுதான் .
இருந்தார்ன்னா பிரச்னைதான்.எங்களுக்கும் _______ பால்டெக்னிக்கும் நேற்று ஓர் ஈவெண்ட்லச் சண்டை வந்துருச்சு .சமாதானப் படுத்னாங்க நாங்க வந்துட்டம் .ஆனாச் சில பசங்கள அடித்து இருக்காணுக .இன்னைக்கு அவனுகள அடிக்கனும்ன்னுதான் பெரிய காண்ட்ல இருந்தோம் .விசயம் தெரிஞ்சு எஸ்கேப் ஆயிட்டானுக .பஸ் ஸ்டாண்டே. வரல அவனுக .ஆனா ஒரு நாள் சிக்குவானுக அன்னைக்கு இருக்கு . உங்ககிட்டப் பேசினான்லச் சுரேஸ் அவன் பேக்ல அவங்க அப்பாவோட நகைக் கடைல இருக்கிற சல்ஃப்யூரிக் ஆசிட் வச்சுருக்கான் இன்னைக்குக் கிடைச்சுருந்தானுக ?
அவன் சொல்லி முடிப்பதற்குள் பஸ் கிளம்பிவிட்டது .
ஓடி ஏறிக்கொண்டு கையைக் காட்டினான் . நான் திரும்பி வரும்வரை காத்து இருந்த அண்ணன் ,என்ன சொல்றான் ? என்று கேட்டார் .நான் அவர் முகத்தைப் பார்த்து .
நாங்களே பார்த்துக்கிறேன்னு சொல்லிடானுக என்றேன் .
பார்த்தியா நான் சொல்லல சின்னப் பசங்கப் பயந்துருவானுகன்னு என்றார் !