வியாழன், 7 மே, 2015

இயற்கையின் அழகிய விதிகள் .


சில பேருக்கு நயன் தாராவைப் பிடிக்கவே இல்லை .நித்யா மேனனைப் பிடிக்கிறது. எனக்கு இருபத்தி ஐந்து வயது இருக்கும் போது ஒரு தனியார் Switch and Gear பயிற்சி வகுப்பில் ஒரு பயிற்சி அளிப்பவர் சும்மா எல்லோரையும் அவர் மேல் கவனம் வர வைப்பதற்கு எந்த நடிகை நடிகர் பிடிக்கும் என்றார்  .( அனேகமாக அவர் அப்போதுதான் டேல் கார்னகியின் The Art of Public Speaking வாசித்து இருப்பார் போல ! ) நான் சாவித்ரியும் ,கமலஹாசனும் பிடிக்கும் என்றேன் .அதற்குப் பிறகு அவர் என்னைப் பார்த்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை . இது பரவாயில்லை இன்னும்  சில பேருக்கு எல்லா நடிகையும் பிடிக்கும்  அதில் குறிப்பாய்ச் சில அம்சங்களை மட்டும் மிகவும் பிடிக்கலாம் !

சரி இதற்கு மேல் வீட்டில் இதைப் படிக்கும் அபாயம் இருப்பதால் ….

உங்களுக்கு ராஜா ரவி வர்மா ஓவியம் பிடிக்கலாம் நம் நண்பருக்கு எம்.எஃப்
ஹூசைன் ஓவியம் மட்டுமே பிடிக்கும் இன்னும் சில பேருக்கு ஓவியம் வரையும் Lady Gaga போன்ற ஓவியரையே பிடிக்கலாம் . 

   எனக்கு இளைய ராஜாவை விட ஏ.ஆர் ரகுமானைப் பிடிக்கும் .என்பார்கள் 
கவிதைகளில் நா.முத்துக்குமாரையும் பா.விஜையை ஏன் தனுஷின் கவிதைகள் கூடப் பிடிக்கத் தொடங்கி இருக்கலாம்.. 

   சுகி சிவம் பேச்சுக்களை நூலகமாகத் தொகுத்து வைத்து இருப்பவர்களும்
தமிழருவி மணியனையும் ஆர்வமாகப் பேசும் இடமெல்லாம் தேடி விரும்பிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள் .

எனக்கு இந்தக் கலர் பிடிக்கும். இந்தப் பிராண்ட் பிடிக்கும் .
இந்த வண்டியைப் பிடிக்கும் ஓட்டவில்லையென்றாலும் வாழ் நாளில் ஒரு நாளாவது ரோல்ஸ் ராய்சும் , ஃபார்முலா 1 ஃபெராரி SF15 –T தொட்டாவது பார்த்து விட வேண்டும் என  ஆசை இருக்கலாம் !
சில பேருக்கு மல்லிகைப் பூ பிடிக்கும். சிலர் ரோஜா பைத்தியம் ..
ஐஸ் க்ரீமில் வெண்ணிலா .ஸ்ட்ராபெர்ரி  சென்னைக்காரர்களுக்கு  இரவில் அதிகம் குல்ஃபி பிடிக்கிறது ! 
இன்னும் பல ( பிடிக்க ) லாம்.. ஏன் இதெல்லாம் பிடிக்கும் என்பதை உங்களுக்கு தெரிந்து கொள்ளப் பிடித்து இருந்தால் நாம் தொடர்ந்து போகலாம் ..

     ஆனால் அவ்வளவு பெரிய கடலில் குதிக்கும் முன், ஏன் நமக்கும் கலைக்கும் இயற்கைக்கும் உள்ள ஒரு வித உடன்பாட்டு கணிதம் மட்டுமே இருக்கிறது என்பதைத்தான் இங்கு புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம் ... நாம் இதை புரிந்து கொள்ள வடிகட்டிய அறிவியலை மட்டுமே துணைக்கு அழைத்துக் கொள்ளப் போகிறோம் .(பதஞ்சலி யோகச் சூத்திரங்களும்  அறிவியல் பாதைதான்) .

” படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்துக்கும் ஒருவித ’கணித’ அடிப்படைதான் காரணம்” .        

              மனம் ஏன் ஒன்றை அழகாக கற்பித்து கொள்கிறது ? இதற்கு டக்கென்று போட்டுடைக்கும் என் பதில், இயற்கைக்கும் மனிதனுக்கும் அல்லது அவன் மனதுக்கும் எப்போதும் ஒரு கணிதவியல் சமன்பாட்டியல் இருக்கிறது .அதனோடு இயற்கையோடு ஒத்துப்போகும் எல்லாச் சமாச்சாரமும் அழகாக நாம் உணர்கிறோம். நாம் இப்போதும் பேசிக் கொள்ளும் இயற்கை விஞ்ஞானம் , இ. மருத்துவம் ,இ.உணவு ,இ.சிரிப்பு இ.அழகு இ.சாயங்கள் இன்ன பிற ....

                   இந்த ( விஞ்ஞானத்தின் ) அணு எண் 1 (ஹைட்ரஜன் ) முதல் 118 (அன்அன்ஆக்டியம் - Ununoctium ) வரை தொடங்கி அதன் மூலம் உருவான சூரியன்கள் அண்ட வெளி அத்தனையும் , இயற்கையின் கடைசிக் கைவண்ணத்தில் உருவான மனிதப் பிறப்பு வரை எல்லாமே சில கணித விதிகளுக்கு உட்பட்ட இயக்கமே.இதை ஒத்துக் கொள்ள யாரும் தயங்க மாட்டோம் .கோள்கள் இந்தத் தூரத்தில் இவ்வளவு வேகத்தில் இந்தப் பாதையில் இப்படித்தான் சுற்ற வேண்டும் என்ற எந்த விதி சொல்கிறதோ அந்த விதியே மனிதனையும் ஆள்கிறது.

இங்கு இயற்கை என்பதைக் கடவுள் என்று ஒருபோதும்  குழப்பிக் கொள்ளக் கூடாது.இயற்கையுடன் மனிதன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவே கடவுள்.இரண்டாவது கடவுள் கோட்பாட்டில் இதைப் புரிந்து கொள்ள முயன்றால் விதிகள் அடிபட்டுப் போய்விடும் ( அந்த விதிகளுக்குக் கர்த்தா கடவுள் எனக் கொள்வது கூட ஒரு நியாயம் ) ஆமாம் விதிகளே இல்லாமல் கடவுள் கோட்பாடு மட்டுமே இருந்தால் நயன்தாராவைச் சிம்புவிடம் இருந்து (மீண்டும்) பிரித்து உங்களைக் கூட விரும்பச் செய்யலாம் எனென்றால் கடவுள் கோட்பாட்டில் மனம் என்ற மாபெரும் கருவி இருக்கிறது . அங்குக் கணித விதிகள் அதனால்தான் அதே சகலத்துக்கும் காரணமானக் கணிதவியல் கோட்பாட்டில் மனம் இயற்கையின் தூதுவனாக மனிதனுக்குப் பரிசளிக்கப்பட்டு இருக்கிறது .மனிதன் தனது மனதின் மூலம் இயற்கையை அணுகலாம் என்பதுவும் ( சில கணித ) விதியே .( மேற்கொண்டு இன்னும் உள்ளே போனால் மனதை பற்றிய அறிவியல் அணுகு முறை கொண்ட பதஞ்சலி யோகச் சூத்திரங்கள் விளக்குகிறது.)


அந்தக் கடைசி வரிதான் இங்கு எல்லா நமக்கு ’பிடிக்கலாமையும்’ இங்கு என்னைப் பேசச் சொல்கிறது .நம்மோடு பல மனதின் - எண்ண வேர்கள் எப்போதும் நாம் காணும் காட்சிகளை அர்த்தப்படுத்திகொண்டே இருக்கிறது .ஏற்கனவே பதியப்பட்ட இயற்கை - மனச் சமன்பாட்டு உத்திகளே ஆளுமை செய்கிறது . இங்கு எனக்கு, அழகுக்கும், கணிதத்துக்கும் வலுவான தொடர்பு இருப்பதாகச் சிந்தனையாளர்கள் பித்தாகரஸ் ,ப்ளேடோ நம்பியதோடு “நல்லது எப்போதும் அழகாகத் தான் இருக்கும். அழகானதோ ஒரு போதும் விகிதத்தில் குறைவுப் படாது”என்றுச் சொல்லி என்னோடு ஒத்துப் போகிறார்கள் .இங்கு ஒரு மனம் இதமாக (மன + இதம் ) வாழவே மனிதன் படைக்கப்பட்டதாகவும் அழகுணர்வின் சந்தோசமே கணிதக் கோட்பாடே தவிர உங்களுக்கும் அதர்க்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் பார்வையாளன் என்பது கொஞ்சம் ஒத்துக் கொள்ளக் கஷ்டம்தான் .

                அது எப்படி எனக்குள் ஏற்படும் ஒரு  நடிகையின் அழகு கிளர்ச்சியும் ரசயான   மாற்றமும், வெறும் கணித விதிக்கு கட்டுப்பட்டதாகும் ? எல்லாம்  ஹம்ப்பக் ,பேத்தல் என சொல்லிக் கொண்டுதான் இருந்தேன் இப்படி யோசிக்கும் முன் நானும்  . ஆனால் இதிலும் ஒரு சௌகரியம் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்.அடுத்த முறைக் ஓ.கே கண்மனி  போன்ற பாடல்களில் வரும் நித்யா மேனனை வீட்டில் உட்கார்ந்து  ரசித்துப் பார்க்கும் போது நமது சொந்த நித்திய மேனன் ( மனைவி  ) ஏதாவது கேட்டால்  எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நம்முடைய மார் தட்டியல்ல அவர்கள் மண்டையில் தட்டிக் கூடச் சொல்லிக் கொள்ளலாம்.! (அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு எங்காவது வாய்ப்பு இருந்தால் )

1 கருத்து:

  1. காஞ்சனா 2 படத்தில் நடித்தது இதே இந்த நித்யா மேனன் தான் அப்பா என்று குழந்தைகள் சொன்ன பிறகே என் மறமண்டைக்கு ஏறியது.

    பதிலளிநீக்கு