எங்கள் வீட்டுக்கும் செல்லப் பிராணிக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை .ஏன் என்பது இதுவரை தெரியவில்லை .முதன் முதலில் அப்பாதான் எங்கோ ஒரு நாட்டு நாய் ( லோக்கல் ) குட்டியைத் தூக்கி வந்தார் .வெள்ளை வெளேரென்று மிகப் பெரிய வெள்ளைத் தேவனாய் எங்கள் ஐவரின் ( சகோதர்கள் ) அன்பையும் அள்ளிக்கொண்டது .என்ன பெயர் வைக்கலாம் என்ற போது அதையும் அப்பாதான் முடிவு செய்தார் - சீஸர் .
எங்களைப் போல அம்மாவின் கட்டளைக்குக் கீழ் படிந்துதான் வளர்ந்தது சீஸர் .எங்குப் படுக்க வேண்டும் ,எங்கு ’கக்கா’ போக வேண்டும்,வீட்டுக்குள் வராந்தாத் தாண்டி வரக்கூடாது,தட்டில் உணவு வைத்துச் சாப்பிடு என்ற பிறகுதான் சாப்பிட வேண்டும் .மண்ணில் விளையாடக் கூடாது இன்னும் பல கட்டுபாடுகளைச் சீஸர் வளர ,வளர மீறாமல் எங்களை விடச் சமர்த்தாய் எல்லோரின் அன்புக்குறியதாய் ஆகிவிட்டது .
மொத்தம் ஐம்பது குடும்பங்களே வாழும் அந்தச் சிறு கிராமத்தில் மின்சார இணைப்பு இருந்த சில வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று .சுற்றி ஒரு கிலோ..மீட்டருக்கும் மேல் வயல் வெளி மட்டுமே .வீட்டைச் சுற்றி முள்வேலிகள் இருந்தாலும் முன் பக்கம் கம்பி வேலியும் மூங்கில் கதவும் போட்டு இருந்தோம் .அந்த எல்லை இந்தியப் பாகிஸ்தான் எல்லை விடச் சீஸருக்கு முக்கியம் அதற்குள் எந்த ஒரு கோழி ,ஆடு ,மாடு ,பாம்பு ,தேள் அணில்,எலி , நாய் , அன்னிய மனிதர்கள் யாருக்கும் அனுமதி சீஸர் எப்போது தராது .அப்படி வந்தால் அவர்கள் வீடுவரைத் துரத்திச் சென்று வழியனுப்பி விட்டு உள்ளே சென்று விட்டதை ஊர்ஜிதம் செய்தப் பிறகே திரும்பும் .. .எங்கள் வீட்டுக் கோழிகள் கூடவே அலையும் .பல முறைப் பாம்புத் தொல்லைகள் வரும்போது அதை வழி மறித்துப் போராடிக் கோழிக் குஞ்சுகளைக் காப்பாற்றித் தந்துள்ளது ..எங்கள் பகுதியில் சுருட்டைப் பாம்பு மிகச் சாதரணமாகத் திரியும்.அதோடு ரசித்து விளையாடும் சீஸர் . கிணறுகளில் தண்ணீர் எடுக்க எப்போது போனாலும் கிளம்பிவிடும் .சில ஆண்டுகளுக்கு முன்வரை ,தண்ணீர்ப் பஞ்சத்துக்குத் திண்டுக்கல் பெயர் ’போன’ ஊர்.இந்த ஒரு காரணத்தினாலேயே பல ஊர்களிலிருந்து திண்டுக்கல்லுக்குப் பெண்ணே கொடுக்கமாட்டார்கள் அப்போதெல்லாம்.,
சீஸர் ஐந்து அல்லது ஆறு வயது ஆன போது , அந்தப் பயங்கர அத்தியாத்தின் முதல் பக்கம் வாசிக்கப்பட்டது.ஆம் ஆது ஒரு மழைக்காலம் நாங்கள் சகோதரர்கள் ஐவரும் செழித்து வளர்ந்துத் தொங்கும் செவப்புக் கொடிக்காப்புளிப் பறித்துக் கொண்டு இருந்தோம் வழக்கம் போல எங்களுடன் சீஸரும் இருந்தது .அப்போது கீழே விழுந்த கொடிக்காப்புளியை அந்த ஊர்ப் பையன் எடுத்தான் ,என்ன நினைத்துச் சீஸர் என்று எங்களுக்குப் புரியும் முன்னே அந்தப் பையன் இடது காலின் ஆடு சதையைக் கவ்வி பிடித்தது அவன் கத்திக் கதறியும் விடவில்லை .அண்ணன்கள் ஓடிச்சென்று சீஸரிடமிருந்து அவனைப் பிரித்தார்கள் அது கடித்த இடத்திலிருந்து ரத்தமும் வெள்ளையாய்ச் சதைப்பகுதியும் பொத்துக் கொண்டு வந்தது .அவ்வளவு ஆழமாய்க் கடித்து வைத்து விட்டது .எல்லோரும் வயல் வெளியில் இருந்ததால் நாங்களே அந்தப் பையனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைப் போனோம்.அப்போது தினமும் ஒன்றாய் பதினாறு ஊசிகள் தொப்புளில் போட வேண்டும் .அந்த நிகழ்வு நடந்து சில மாதங்கள் ஆன பின் மறந்துப் போனோம் .
அன்று வழக்கத்திற்கு மாறாகச் சீஸர்க் கொஞ்சம் அமைதியற்றுக் காணப்பட்டது.ஞாயிறு மட்டுமே அதைக் குளிக்க வைக்கும் அண்ணன் அன்று அது இருந்த நிலையைப் பார்த்துக் குளிக்க வைத்தார் ஏதோ பொருமல் மாதிரிச் சத்தம் அதனிடமிருந்து வந்து கொண்டே இருந்தது.மதியம் அதன் வழக்கமான உணவை எடுத்துக் கொள்ளவில்லை அண்ணனின் நண்பர் ஒருவர் வழக்கமாக வீட்டுக்கு வருபவர் நாயுடன் கொஞ்சி விளையாடுவார் .அன்றும் அது மாதிரி ஏதோ முயற்சிக்க மூக்கைக் கடித்து விட்டது லேசானக் காயம்தான் ஆனால் இது மெல்ல எல்லோருக்கும் அதிர்ச்சி தந்தது .பழக்கம் உள்ள ஆள் .இதனால் அம்மா கோபத்தில் அடித்து விட்டார்கள் .சீஸர் அன்றைய இரவும் உணவு எடுத்துக் கொள்ளவில்லை .கட்டப்பட்டு இருந்தது .காலை அவிழ்த்து விடப்பட்டவுடன் எங்கோ ஓடியது .மீண்டும் மதியம் ஒரு அதிர்ச்சி .ஊருக்குள் ஒருவரைத் துரத்தி இருக்கிறது அவர் புதிதாய் நெல் நடவு செய்யப்பட்ட வயலுக்குள் விழுந்து ஓடி நின்றுக் கொண்டதால் .தப்பி இருக்கிறார் .நிரந்தரமாகச் சீஸர்க் கட்டப்பட்டது ..எங்களிடமே அதன் பார்வை இப்போதெல்லாம் சற்று விரோதமாக மாறியிருந்தது. எங்கள் கவலை அதிகரித்து
அப்போது ,அப்பா தெரிந்தவகளிடம் கேட்டு முனிசிபால்ட்டியில் நாய்கள், கருத்தடை ஆபரேஷன் செய்யும் போது மட்டுமே, வெறிப் பிடிக்காமல் இருக்கத் தடுப்பூசிப் போடப்படுகிறது என்பதை அறிந்து அது எடுத்துச் சென்று போட்டு வந்தார் .சில நாள் ஆனது மீண்டும் ஒருவர் ஊருக்குள் கடிபட்டார் இந்த முறை அப்பா கவலைப் மிகவும் பட ஆரம்பித்தார் .அருகே செல்ல நாங்களே பயப்படத் தொடங்கினோம்.மீண்டும் ஏதோ ஒரு தனியார் நாய்ப் பராமரிப்பு நிலையத்தில் ஊசிப் போடப்பட்டது.வீட்டில் தனித்து விடப்பட்ட மன நோயாளி மாதிரிச் சீசர் ஆனது .அப்பா வீட்டில் மிகவும் சீசர் மேல் பாச வைத்ததை யாரிடமும் காட்டாமல் உள்ளே புழுங்கினார் .யாரிடமும் சொல்லாமல் அண்ணனிடம் சொல்லி வெகுதூரம் கொண்டு போய் விடச் சொன்னார்.காலையில் நண்பரின் பைக்கில் கொண்டு போய் விட்டு,விட்டு வந்தார் அண்ணன் .மாலை இருட்டும் போது வீட்டுக்குத் திரும்பித் தானே வந்த வந்த சீஸர் உடலெல்லாம் காயம் எங்கெங்கோ போராடித் தப்பி வந்து இருக்கிறது .அம்மா கட்டிக் கொண்டு அழுதார்கள்.ஏன் இப்படிப் பண்ற ? உன்னை நான் ஆறாவது பிள்ளை மாதிரிதானே பார்த்துக்கிறேன்.இப்படிப் பண்ணாதே என்று புலம்பினார்கள் வாலை மட்டுமே பதிலுக்கு ஆட்டியது சீஸர்.
அடுத்து இன்னொரு பிரச்சனை சீஸர் இரவில் ஊளையிடத் தொடங்கியது இது, ஊரின் அதன் மேல் மறைமுக உள்ளே இருந்த கோபம் மேலே வரத் தொடங்கியது.ஆளாளுக்கு அப்பாவின் வெந்த புண் மனநிலையில் இருப்பதை அறியாமல் - தன்னையும் கடித்து விடும் என்ற பயத்தில் முதிர்ச்சியற்ற யோசனைகளை வாரி இறைத்தனர்.இது ஊருக்கு அபசகுணம்,கெட்ட விசயத்தை வர வழைக்கும் அறிகுறி என்றார்கள் .கடவுள் குற்றம் என அடுக்கினர். அப்பா யோசித்து கொண்டே இருந்தார் .மதியம் வெளியில் போனவர் மாலை இருட்டும் போது சில தடியான ஆட்களோடு வந்தார் .எங்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னார் அம்மாவுக்கு விசயம் தெரிந்து விட்டது .உப்புத் தண்ணி போரிங் அருகே நின்று முகம் பொத்தி அழுது கொண்டு இருந்தார் .வந்தவர்கள் விட்டுக்குள் போனார்கள் .ஒரு பயங்கரமான குரல் கேட்டது.அதுதான் சீஸரின் கடைசிக் குரல் எங்களை நம்பி வாழ்ந்த ஒரு ஜீவன் எங்கள் முன்னாடியே யாரோ பறித்துக் கொள்கிறார்கள் .எல்லோரும் அழுதோம் .
வீட்டுக்குப் பின்னால் சுமார் அரைக் கிலோமீட்டர்த் தூரத்தில் ரயிவே லைன்.அது வரை மூட்டையாய்க் கொண்டு செல்லப் பட்ட சீசர், இறக்கி வைக்கப்பட்டது .அதுவரை எல்லோரும் கண்ணில் நீர் மட்டுமே வந்து கொண்டு இருந்தது.அங்கு அவர்கள் மிக மோசமான ஒரு கொலையை அங்கு செய்தார்கள் .ஆம் அப்பாவிடம் ஊசி மூலம் கொல்வோம் என்று சொல்லி விட்டு, பாவிகள் சீஸரைக் கொண்டு சென்ற மூட்டை மேல் கல்லைக் கொண்டு , ஓங்கி ஓங்கி மேலே போட்டார்கள் .அழுது கொண்டு இருந்த அம்மா , இதைப் பார்த்த மாத்திரத்தில் , கத்தியே விட்டார் . என்ன சொன்னீங்க ? என் பிள்ளைய இப்படியாக் கொல்லுவீங்க ? என்று கதறினார் .அப்பாவும் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என்பதால் பலவீனமாய் உளறியபடியே ,இல்லை ,இல்லை அவர்கள் அப்படிச் சொல்லவில்லை,இப்படிப் பண்ணிவிட்டானுக என்றார் .
அன்று, அந்தச் சீஸருக்கு எதிராக எங்கள் வீட்டில் ஏழு ப்ரூட்டஸ் இருந்தோம் என்பது இன்னும் எங்கோ வலிக்கிறது !
அன்று, அந்தச் சீஸருக்கு எதிராக எங்கள் வீட்டில் ஏழு ப்ரூட்டஸ் இருந்தோம் என்பது இன்னும் எங்கோ வலிக்கிறது !
அன்று, அந்தச் சீஸருக்கு எதிராக எங்கள் வீட்டில் ஏழு ப்ரூட்டஸ் இருந்தோம் என்பது இன்னும் எங்கோ வலிக்கிறது !
பதிலளிநீக்குஇதைப் படிக்கும் போது நெஞ்சம் வலித்தது
நீங்கள் படம் தேர்ந்தெடுத்து வலைபதிவில் ஏற்றும் போது இன்னும் கவனம் தேவை. இன்னும் கொஞ்சம் சுவராசியமான படங்களை தேர்ந்தெடுக்கலாமே?
பதிலளிநீக்கு